யார் வானத்தை கிழித்துப் போட்டது ?

Posted by அகத்தீ Labels:

 



யார் வானத்தை  கிழித்துப் போட்டது ?

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

[ காக்கைச் சிறகினிலே”   ஜனவரி 2025 தை புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழ்  ஆழமான சமூகப் பண்பாட்டுப் பார்வையுடன் கூடிய கட்டுரைகள் நிறைந்து பொலிகின்றது . இதில் என்னுடைய ஓர் கட்டுரையும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி .உங்கள் வாசிப்புக்காக இத்துடன் அக்கட்டுரை]

 

  யார் வானத்தை  கிழித்துப் போட்டது ?

நாம் நாமேதான்.

 

யார்  பூமியை  நெருப்பில் வாட்டியது ?

நாம் நாமே தான்.

 

யார்  கடலை  கழிவுக் கிடங்கு ஆக்கியது ?

நாம் நாமே தான்.

 

யார் கால நிலையை குலைத்துப் போட்டது ?

நாம் நாமேதான்.”

 

 இங்கேநாம்என நான்  குறிப்பிடுவது உலக மாந்தரை .

இந்த கவிதையை நான் எழுதி நான்கைந்து  வருடங்கள் இருக்கும் .என்று நினைக்கிறேன். இன்று நிலைமை மிகமிக மோசம் . வருங்காலம் இதைவிடக் கொடுமையாகவே இருக்கும் .

 

 அண்மையில் பெருமழை தமிழ்நாட்டை புரட்டிப் போட்டபோது அதிமேதமையோடு பழியை ஒவ்வொருவரும் யார் மீதோ - எதன் மீதோ எளிதாகச் சுமத்திவிட்டு தன் வரலாற்றுக் கடமையை முடித்துக் கொண்டனர் .எப்போதும் இதுதான் நடக்கிறது .

 

 வெயில் அடித்தாலும் தாங்க முடியாத அளவு அடிக்கிறது . மழை பெய்தாலும் அப்படித்தான் .ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிடுகிறது . புயல் வேகம் என்பது பொய்யாகி புயல் ஆமையாகி நகர்ந்த போதும் மழை தாண்டவமாடி தீர்த்துவிட்டது . ஊத்தங்கரையில் 50 செமீ மழை என்பதெல்லாம் கேள்விப்படாதது . கடல் வெப்பமாகி மழை நீரை உள்வாங்காமல் திருப்பி அனுப்பும் கோரத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .

 

 பக்கத்தில் உள்ள பெட்டிச் செய்தியில் [ இங்கு கட்டுரையின் நிறைவுப் பகுதியில் உள்ளது ] கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள் மிரட்ட அல்ல . கடுமையை உணர்த்தவே .

 

 ஐயப்பன் பழிவாங்கி விட்டார் ;சிவன் பழி தீர்த்துவிட்டார் ; காளிக்கு கோபம் வந்துவிட்டது ; அல்லா தண்டித்துவிட்டார் ; பிதா சபித்துவிட்டார் என மூடநம்பிக்கைகளை பதியம் போடுகிறது ஒரு திருக்கூட்டம் . அவர்களிடம் அறிவு பூர்வமான உரையாடலை நடத்தவே முடியாத அளவு மதவாதம் போதை ஏற்றுகிறது .

 

 இன்னொரு புறம் எல்லா பிரச்சனையையும் தங்கள் குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக மடை மாற்றம் செய்துகொண்டே இருக்கிறார்கள் சுயநல அரசியல்வாதிகள்.

 

 கதாநாயகன் /வில்லன் ,  கதாநாயகி /வில்லி ,தேவர்கள்/அசுரர்கள் ,பாவம் /புண்ணியம் , தீட்டு/புனிதம்  என எதிரெதிர் நிலைகளை கட்டமைத்து பேசுவதும் எழுதுவதும் சுலபம் . சுற்றுச்சூழல்  ,காலநிலை மாற்றம் சார்ந்தும்  அப்படி பேசிவிடவும் முடியாது . எழுதிவிடவும் கூடாது . சட்டென்று ஒரு எதிரியைச் சுட்டிக்காட்டி கணக்கை முடித்துவிட முடியாது .

 

 ஏனெனில் காலநிலை மாற்றம் எனப் பேசத்துவங்கினால் அது புவி வெப்பமாதல் பக்கம் பார்க்கச் சொல்லும் ; புவி வெப்பமாதல் பக்கம் பார்க்கச் சொன்னால் கார்பன் உமிழ்வு [Carbon Emissions] பற்றி பேச வேண்டும் ; கார்பன் உமிழ்வு பற்றி பேசினால் ; நவீன வாழ்வின் நுகர்வோரியம் அல்லது நுகர்வென்னும் பெரும்பசி பற்றி பேச வேண்டி வரும் ; நுகர்வோரியம் பற்றி பேசும் போது சமூகத்தின் ஏற்றதாழ்வையும் ,  அழுகிநாறும் கார்ப்பரேட் [ crony capital ] லாபவெறி பேராசையும் பற்றி பேசவேண்டிவரும் ; அது பற்றி பேசினால் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க வளர்ந்த நாடுகள் தன் பங்களிப்பை மறுப்பது குறித்து பேசவேண்டிவரும் ; அதுமட்டுமல்ல அறிவியல் விரோத சூழலியல் அடிப்படை வாதிகள் பற்றி பேச வேண்டி வரும்இப்படியே அரசியல் சமூக பொருளாதார பண்பாடு என எல்லா கோணங்களிலும் ஒருங்கிணைந்த பார்வையை இறுதியில் கோரி நிற்கும் .

 

 புவி வெப்பமாதலில் குறியீடாக ஓசோன் படலத்தில் ஓட்டை என்கிற பிரச்சனை ஓங்கி இருந்த 2000 ஆம் ஆண்டு நான் ஒரு பத்திரிகையாளர் குழுவில் சீனா சென்றிருந்தேன் அங்கு உரையாடும் போது சீனர்கள் சொன்னார்கள்ஓசோன் படலம் ஓட்டைவிழுவது உண்மைதான் ;ஆயினும் மீள முடியும் . இயற்கை தீர்வையும் தன்னுள் கொண்டுள்ளது.நாம் கொஞ்சம் திருந்தினால் போதும்நாங்கள் நம்பவில்லை . சீனா அதீதமாகப் பேசுகிறது என்றே கருதினோம். அறிவியல் அறிஞர்  .வி.வெங்கடேஸ்வரன்  அண்மையில் ஒரு கட்டுரையில் கட்டுரையில் ஓசோன் ஓட்டை பிரச்சனையை அறிவியல் ரீதியாக நாம் எதிர்கொண்டு முன் நகர்ந்துவிட்டோம் என்பதை விளக்கி இருக்கிறார்.

 

 புவி வெப்பமயமாவதில் இருந்து மீள மரம் நடும் விழாக்கள் ,சூரிய ஆற்றல் மின்சார பரப்புரை என பொதுவாய் நாம் பேசும் எளிய தீர்வுகள் மட்டுமே முழுமையானதுமல்ல சிக்கலில்லாததுமல்ல . சோலார் பேனல்களை உற்பத்தி செய்யும்போது பல்வேறு வகையான ரசாயனங்கள் மற்றும் பூமியில் இருந்து கிடைக்கும் அரிய உலோகங்கள் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும். இதனால் பூமியின் வளம் குறைந்து மாசுபாட்டை உண்டாக்கும் என்கிற கவலையை அண்மை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இக்கவலையையும் புறந்தள்ள இயலாது.

 

சட்டைகளை இஸ்த்திரி செய்ய கரி பயன்படுத்துகிறோம் .இது சுற்றுச் சூழலை பாதிக்கும் .எனவே இஸ்த்திரி செய்யாதீர் என்கிறது ஒரு கூட்டம். இஸ்திரி செய்யாத கசங்கிய ஆடையை அணிவது குற்றம் அல்ல ;தவறும் அல்ல. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுப்பதில் நாமும் பங்கு வகிப்போம் எனச் சில சுற்றுச்சூழலியலாலார்கள் வேடிக்கை காட்டுகிறார்கள்.அவ்வளவே !

 

 மீண்டும் பழமைக்குச் செல்வோம் , கோவணம் உடுப்போம் போன்ற வாதங்கள் சிக்கலின் இறுக்கத்தை முடிச்சை அறியாமல் மேம்போக்காகப் பேசுகிறவையே . அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உண்டான பிரச்சனைகளுக்கு தீர்வை , கற்பனையாகவோ பழமையான முறையிலோ கட்டமைத்துவிட முடியாது , மாறாக அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் சுற்றுச்சூழல் பார்வையை இணைத்தே தீர்வு காண முடியும்.

 

 பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு ,உடை ,வாழ்விடம் ,கல்வி ,வேலைவாய்ப்பு ,குடிநீர் போன்றவற்றை அளிக்கத் திட்டமிடும் போது நாம் இயற்கையை பகைத்துக் கொண்டு இதனை செய்துவிட முடியாது . அதே நேரம் மக்களின் தேவைகளை நிறைவு செய்யாமலும் இருக்க முடியாது . ஒருபக்கமே நின்று முரட்டு வாதம் செய்யலாம் .பயனில்லை .இருபக்கமும் சீர்தூக்கிப் பார்த்து அறிவியல் துணையோடு ஒருங்கிணைந்த தீர்வைத்தான் தேட வேண்டும் .

 

 அறிவியல் விரோத சூழல் அடிப்படைவாதிகளையும்,ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளையும் அம்பலப்படுத்தாமல் மேலே நாம் சொன்னதை செய்துவிடவும் முடியாது .

 

 இன்னும் சொல்லப் போனால் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு போன்றவை சூற்றுச்சூழல் மாசுகேட்டை துல்லியமாய் அறியவும் அளக்கவும் விடை காணவும்  உதவுகின்றன. அவற்றை பகுத்தாய்ந்து மாற்றுவழி காண அதே அறிவியலே துணையாகும்.

 

 ஆர்க்கானிக் என்ற சொல் ஓர் வியாபார மந்திரம் ஆகிவிட்டது . ஆர்கானிக் காய்கறிகள் ,இதர உணவுப் பொருட்கள் இப்போது மேல் மத்தியதர அந்தஸ்த்தின் அடையாளமாக ஆகிவிட்டது .ஆர்கானிக் ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் போகிறது .

பொதுவாய் மரபணு தொழில் நுட்பம் ஆபத்தானது என்பது பொதுபுத்தியில் உறைந்துள்ளது .ஆயின் அதே மரபணு மாற்ற தொழில் நுட்பம் அதீத வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் தாவரங்களை உருவாக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்

 

 வருங்காலத்தை நேர்மறை எண்ணங் கொண்டு நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு எதிர்கொள்வோம்.புவி சூட்டைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.சாத்தியமானதும் கூட.

 

 சிள் வண்டுகள் ,பறவைகள்  இவற்றுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் புவி வெப்பமாதலுக்கும் உள்ள தொடர்புகள் நாம் அறிய வேண்டிய செய்தி .சாலை நடுவிலுள்ள டிவைடர்களில் புதர் வளர்க்க சொல்லும் போது . பொதுவாய் என்ன தோன்றும் , புளு பூச்சி அதிகரிக்கும் என்றே தோன்றும் . ஆயின் அவை செய்யும் நன்மைகள்  அறிவோமா ? காடு வளர்ப்போம் எனச் சொல்லும் போதே அயல் படர் உயிரினங்களின் ஆபத்தை உணர்ந்தோமா ? சுற்றுச் சூழலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறவர் யார் ஆனல் அதன் சுமை யார் மீது சுமத்தப் படுகிறது என்பதை கவனிக்காமல் நகர்ந்துவிட முடியுமா ? வளர்ந்த நாடுகளும் பெருமுதலாளிகளும்தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முதன்மைக் குற்றவாளி என்பதை கணமும் மறக்கலாமா ? “பழங்குடிகள்வனம்சுற்றுச்சூழல்இம்முன்றினையும் இணைத்துப் பேசாமல் தீர்வு கிடைக்குமா ?

 

 ஒரு முறை மட்டுமே பயன்படுத்தமுடியும் ; மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கின் உற்பத்தி இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது .2060 ல் மும்மடங்காகும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . ஆண்டுக்கு 1.2 பில்லியன் டன்கள் உற்பத்தி அதிகரித்து பெரும் சவாலாகும் என்கின்றனர் .

 

 ஞெகிழி சவால்கள் ,வேளாண் சவால்கள் , கடல் சார் சவால்கள் , நிலத்தடி நீர் சவால்கள் ,நகர்மய சவால்கள் ,போக்குவரத்து சவால்கள் ,ஒளி மாசு  என பல்வகையில் சூற்றுச்சூழல் நெருக்கடிகளை நாம் பேச வேண்டும். .

 

 நீலம் இல்லாவிட்டால் பச்சை இல்லைஎன்கிறார் அறிவியலாளர் சில்வியா எர்ல் . கடலைப் பாதுகாக்காமல் புவியின் சூழலை மேம்படுத்த முடியுமா ? ஞெகிழிகள் மூலம் அதுவும் மக்கா ஞெகிழிகள் மூலம் சூழ்ந்துள்ள பேரபாயம் இன்னும் இந்திய சமூகத்தின் பொது புத்தியில் உறைக்கவே இல்லையே எப்படி சரி செய்வது ?

 

 பொதுவாய் சூற்றுச்சூழல் தூய்மைவாதிகள் மார்க்சியத்தை எதிராக நிறுத்துவார்கள் .ஆனால் மார்க்சியம்தான் சுற்றுச்சூழல் குறித்த மெய்யான அக்கறை கொண்டிருக்கிறது . அதனால்தான் ஒருதலைப் பார்வை பயன் தராது ; ஒருங்கிணைந்த பார்வையை வேண்டும் என்கிறது .அதனை உள்வாங்க பெரும் விவாதம் தேவைப்படுகிறது .

 

 பிரச்சனைகளும் எளிதல்ல .தீர்வுகளும் எளிதல்ல .பிரச்சனைகள் ஒரே நாளில் வெடித்ததல்ல காலவெளியில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்தவற்றின் எதிர்வினைகளாகும் .தீர்வு ஒரே நாளில் ஒரே கஷாயத்தில் கிடைத்துவிடாது . நெடிய போராட்டம் .அறிவியல் பார்வையுடன்தான் போராடியாக வேண்டும்

 

பெருகும் மக்கள் தொகைக்கு வாழ்வளித்துக் கொண்டே புவியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கையளிக்க நாம் நேற்கொள்ள வேண்டிய  ஒருங்கிணைந்த போராட்டத்தில் நமக்கு நிறைய தகல்களும் உண்மைகளும் தேவை .

 

 ஆங்கிலத்தில் கொட்டிக்கிடக்கும் நூல்களும் ஆய்வு கட்டுரைகளும் தமிழுக்கு வந்து சேரவே மாமாங்கம் ஆகும் போல் இருக்கே . முதலில் அதற்கு முயற்சிப்போம்.

 

 இனி வருங்காலம் மழை என்பது வானத்தை கிழித்துக் கொண்டு  மேக வெடிப்பு [Cloudburst ] மழையாக சில மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் வெயில் என்பது தோலை எரிக்கும் நீர் சத்தை சுண்ட வைத்து மயங்க வைக்கும் பெரு வெப்ப அலையாகவே இருக்கும் . பனி என்பது எலும்பைத் துளைக்கும் பனியாகவே இருக்கும் .

 

 அதனை எதிர் கொள்ள எளிய வழி இல்லை ; குறுக்கு வழி இல்லை ; அறிவியலே துணை .ஒருங்கிணைந்த பார்வையே வழி . கொள்ளைலாப வெறியோடு எல்லா நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கும் கார்ப்பரேட் வெறிக்கும் அதனை சுமக்கும் முதலாளித்துவ அரசியலுக்கும் எதிரான போராட்டத்துடன் இணைந்ததுதான் இந்தப் போராட்டம்.

இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை.

 

 

 

பெட்டிச் செய்தி

 ·    2024 ஆம் ஆண்டு முதல் 274 நாட்களில் 255 நாட்களில் இந்தியா கடும் வெப்பம் அல்லது பெருமழை என மோசமான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தது என்கிறது DOWNTOEARTH.ORG.IN 1-15 DECEMBER 2024 எனும் இணைய ஏடு .

·    இதனால் கடும் வெப்பம் , அதிகக் குளிர் , சூறாவளி, மின்னல்,இடி , கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 3,238 உயிர்கள் பலியாகின .  3.2 மில்லியன் ஹெக்டேர் (எம்.எச்.) பயிர்களை நாசமாயின, 235,862 வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடிந்தன ,புதைந்தன , சுமார் 9,457 கால்நடைகள் உயிர் இழ்ந்தன. இது முதல் ஒண்பது மாதக் கணக்கு மட்டுமே.

·       இதனுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 273 நாட்களில் 235 நாட்களில் தீவிர வானிலை பதிவாகியுள்ளது, இதில் 2,923 இறப்புகள், 1.84 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டன, 80,293 வீடுகள் சேதமடைந்தன மற்றும் 92,519 விலங்குகள் இறந்தன.

·     2024 தென்மேற்கு பருவமழையின் போது (ஜூன்-செப்டம்பர்), இந்தியா அதன் நீண்ட கால சராசரியில் (எல்பிஏ) 108% பெற்றது, இது இயல்பான பருவமழையை விட அதிகமாக இருந்தது . வெவ்வேறு பிராந்தியங்களில் மழைப்பொழிவு வேறுபடுகிறது: வடமேற்கு இந்தியா (107%), மத்திய இந்தியா (119%), தெற்கு தீபகற்பம் (114%), மற்றும் வடகிழக்கு இந்தியா (86%). மழையை நம்பி இருக்கும் விவசாய மண்டலங்களில், நீண்டகால சராசரியில் 122% பதிவாகியுள்ளது. இந்தியாவின் 36 வானிலை துணை மண்டலங்களில், 9% பகுதிகளில் அதிக மழை பெய்தது, 26% பகுதிகளில் கூடுதல் மழை, 54%  பகுதிகளில் சாதாரண மழையைப் பெற்றது, மற்றும் 11% பகுதிகளில்  (அருணாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உட்பட) குறைவான மழையைப் பெற்றது.

·    2024 ஜனவரி மாதத்தின் கடுமையான குளிர் அலை, பருவமழைக்கு முந்தைய பருவத்தில் சுட்டெரிக்கும் வெப்ப அலைகள் மற்றும் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தீவிர மழை மற்றும் நிலச்சரிவுகள் ; ஆண்டின் இறுதியில் மழை வெள்ளம் .

·    ஏப்ரல்-மே மாதங்களில் குறைந்தது 50 நாட்களில் நாடு வெப்ப அலைகளைப் பதிவு செய்தது, இது பருவமழைக்கு முந்தைய பருவத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உயிருக்கு ஆபத்தான அதிக வெப்பநிலையை பதிவு செய்தது. ஒடிசா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஈரப்பதம் அதிகரித்து அசௌகரியத்தை அதிகரித்துள்ளது.

 ·   கடந்த ஒரு வருடத்தில், 6.3 பில்லியன் மக்கள் - உலக மக்கள்தொகையில் சுமார் 78 சதவீதம் பேர் - குறைந்தது 31 நாட்கள் தீவிர வெப்பத்தை அனுபவித்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இது அவர்களின் பிராந்தியத்தில் வரலாற்றில் முந்தைய காலத்தைவிட 90 சதவீதத்திற்கும் அதிகமான வெப்பநிலை என சொல்லப்படுகிறது. (1991-2020 சராசரியின் அடிப்படையில்). தொழில்புரட்சிக்கு  முந்தைய காலநிலையில் உள்ள நிலைமைகளுடன். ஒப்பிடும் போது உலகளவில் சராசரியாக 26 கூடுதல் நாட்கள் தீவிர வெப்ப அலை நாட்களாகியுள்ளன.

·  துபாயில் பாலைவனத்தில் வெள்ளச் சேதம் கேள்விப் பட்டிருக்கிறோமா ? இப்போது கேள்விப்படுகிறோம் . ஸ்பெயின் வெள்ளம் உலகை உலுக்கியது .பாரீஸ் வெள்ளம் பதைபதைக்கச் செய்தது .

·     கலிபோர்னியா ,தாய்லந்து ,வங்கதேசம் ,தென் ஆப்பிரிக்கா ,துருக்கி என எங்கும் பெருமழையின் கோரத்தாண்டவம் பார்த்தோம்.

 

 


0 comments :

Post a Comment