என்ன செய்வது ? சொல் !

Posted by அகத்தீ Labels:என்ன செய்வது ? சொல் !சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !


கையில் தீப்பந்தத்தோடு கள்குடித்த குரங்காய்
மதம்பிடித்த அரசாங்கம் …
சீழ்பிடித்த ரணமாய் தேசத்தை அழுகவைக்கும்
சாதிய புற்றுநோய் …
உன்மணிவயிற்று வளங்களை விழுங்க வட்டமிடும்
பன்னாட்டுக் கழுகுகள்
அங்குலம் அங்குலமாய் தேசத்தை ஏலமிடுவதையே
சாதனையாய் சொல்லும் சதிகாரர் அதிகாரம்

சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !


உழவர் தற்கொலை ; பாதாளச் சாக்கடையில்
தூய்மை பணியாளர் படுகொலை
காதல் கொலை சாதி ஆணவக்கொலை
மாட்டுக்காய் நடக்கும் மனிதவதைக் கொலை
அழுகையும் பற்கடிப்பும் எங்கும் ஓங்காரமாய்
நீதி,நிர்வாகம், ஆட்சி ,காவல் என அனைத்தும்
மநுவையும் சுரண்டலையும் காக்கவே தினம்தினம்
ஒவ்வொரு நொடியும் புதுப்புது அவதாரம் ..

சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !கார்ப்பரேட்டுகளுக்கும் மேட்டுக்குடிக்கும் மட்டுமே
சேவகம் செய்வதோ இங்கு தேசபக்தி ?
ஒடுக்கப்பட்டோரும் உழைப்போரும் ஓயாது
கண்ணீர் சிந்தி ஓய்வதோ சமூகநீதி ? - எங்கள்
வியர்வையில் குருதியில் உதித்தெழுந்த தேசமே !
எமக்குரிய நீதியைப் பங்கைக் கேட்பதென்ன குற்றமோ !
இனிபொறுப்பதில்லை எரிதழல் கொண்டுவா !
எனச் சொல்வதில் பிழையென்ன சொல் தாயே !

சடங்காய் வாழ்த்துச் சொல்ல சம்மதமில்லை !
மன்னித்துவிடு சுதந்திரத் தாயே !
நெஞ்சுக் கூட்டுக்குள் பற்றி எரியும் நெருப்பை
என்ன செய்வது ? சொல் !

- சுபொஅயுத்த எதிர்ப்பில் தன்னை பலிதந்தார்

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி - 41


யுத்த எதிர்ப்பில் தன்னை பலிதந்தார்

சு.பொ.அகத்தியலிங்கம்.
ஜாரெஸ் கொல்லப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின் -
1924இல் அரசு பணிந்து; அவரது உடலை 
புகழ்பெற்ற மனிதர்களின் கல்லறைகள் உள்ள
 பாந்தியனில் வைக்க அனுமதித்து மரியாதை செய்தது.
‘மேகம் எப்படி இடியை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறது; முதலாளித்துவம் போரை தன் வயிற்றில் சுமந்து திரிகிறது ; எந்த நொடியிலும் பிரசவித்துவிடக்கூடும்’இப்படி முழக்கமிடும் ஒருவரை உயிருடன்விடுமோ ஆளும் வர்க்கம் ? ஆகஸ்ட் மேரி ஜோஸப் ஜீன் லியோன் ஜாரெஸ் ஸஹரபரளவந ஆயசநை துடிளநயீh துநயn டுநடிn துயரசநள] 1859இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார்... பாரீஸிலுள்ள வசதிபடைத்த பிள்ளைகள் பயிலும் கல்லூரியில், 1881இல் படிப்பை முடித்தார் .


கல்லூரியில் தத்துவப் பேராசிரியராய்ச் சேர்ந்தார். பிரெஞ்சு மட்டுமல்ல லத்தீன், ஜெர்மன், கிரேக்கம், ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் நல்ல புலமை பெற்றார்.‘டெவிட்-டி-டெளலெளஸ்’ எனும் குடியரசுக் கட்சி ஏட்டில் எழுதலானார். எழுத்து வன்மையும் பேச்சு வன்மையும் 1885இல் இவரை குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக்கியது. தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றக் கோரியபோது குடியரசு கட்சியின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை;


எனினும் ஜாரெஸ் தொழிலாளர்களிடையே பிரபலமானார். ஜாரெஸ் மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார் , டி பெச் டி டெளலெளஸ் ஏட்டில் சமூக மாற்றம் குறித்து எழுதினார் . ஜெர்மனிய சோஷலிசத்தின் வரலாறு, லூபி பிளாங், பிரெளதன், ஜூல்ஸ் கியூஸ்ட், பால் லபார்க், பெர்டினண்ட் லாஸ்ஸல், பெனாயிட் மாலன் எழுத்துகளில் தோய்ந்தார்; மெல்ல மார்க்சை வந்தடைந்தார். 1890இல் எழுதிய ஒரு கட்டுரையில் மார்க்சின் மூலதனத்தைக் குறிப்பிட்டார்; ஆயினும் நன்னெறிப் பார்வையே ஓங்கி இருந்தது.1890இல் நகர்மன்ற உறுப்பினராக, துணை மேயராக தொடர்ச்சியாக சோஷலிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பனாமா கால்வாய் கம்பெனி பங்கு விற்பனையில் நடைபெற்ற மோசடியை அம்பலப்படுத்தினார்.


முதலாளித்துவமும் ஊழலும் ஒட்டிப் பிறந்ததென சுட்டிக்காட்டினார்.1890 களில் அராஜகவாதிகளின் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மிகவும் பிற்போக்கான காசிமிர் பெரியர் குடியரசு தலைவரானார். ஜனநாயக உரிமைகளை அவர் நசுக்க ஆரம்பித்தார். எதிர்த்து ஜாரெஸ் முழக்கமிட்டார். குடியரசு தலைவரை இழிவுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெரால்டு ரிச்சர்டுக்கு ஆதரவாக ஜாரெஸ் வாதிட்டார். நாடாளுமன்றம் அதிர்ந்தது . காசிமிர் பதவி விலக நேர்ந்தது.ஜாரெஸ் முன்மொழிந்த பொருளாதார நடவடிக்கைகள் பலவகையில் அப்பாவித்தனமாக இருப்பினும்; தொழிலாளர் நலமே அவர் நோக்கமாய் இருந்தது.1898இல் சோஷலிஸ்ட் வேட்பாளராய் போட்டியிட்டு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார். நான்காண்டுகள் மட்டுமே அவர் நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை .‘லாபெட்டிக் ரிபப்ளிக்’ ஏட்டின் ஆசிரியரானார் .நாடு முழுவதும் பயணித்தார் .தன் கருத்தை பிரச்சாரம் செய்தார்.இக்காலக்கட்டத்தில் வால்டெக் ரூசோ அரசமைத்தார். பாரீஸ் கம்யூனை வேட்டையாடிய காலிபெட் யுத்த அமைச்சரானார். சோஷலிஸ்டான மில்ரண்ட்டும் அரசில் இடம் பெற்றார். மில்ரண்ட்டுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பங்கு பெறுவதில் தப்பில்லை என ஜாரெஸ் வாதிட்டார். இதனை விமர்சித்த லெனின்கூட; ஜாரெஸ்ஸின் தொழிலாளிவர்க்க சேவையை பாராட்டவும் செய்தார் .இவர் எழுதிய கட்டுரைகள் ‘ஹிஸ்டயர் சோஷலிஸ்ட் கலெக்டிவ்’ என வெளிவந்தது. மார்க்ஸ், ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கையை பிரெஞ்சுச் சூழலுக்கு பொருத்துவது குறித்தும் - பிரெஞ்சு நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்தும் எழுதினார் .


பிரெஞ்சுப் புரட்சி குறித்து ஜாரெஸ் எழுதியவை பயனுள்ளவை என்றார் லெனின்.1901இல் வரலாற்றுப் போக்கில் அங்கு உருவான இரு சோஷலிஸ்ட் கட்சிகளும் இணைந்து - பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியானது; ஜாரெஸ் படிப்படியாய் அதில் முன்னிலை பெற்றார்.1902இல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார். மதவாதத்தை எதிர்த்து சங்கநாதமிட்டார். மதபீடங்கள் மிரண்டன. எல்.ஹ்யூமானைட் எனும் ஏட்டைத் துவக்கினார்.ரஷ்யப் புரட்சிக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் ஜாரெஸ் எழுதினார். ‘ருஷ்ய நாடு அதன் தொழிலாளி வர்க்கத்தின் வெல்லற்கரிய வலிமையால் – நேர்மையும் நாகரீகமுமிக்க அரசமைக்க தயாரித்துக் கொண்டிருக்கிறது. ‘அவரின் தீர்க்க தரிசனம் 1917இல் கைக்கூடும் போது பார்த்து மகிழ ஜாரெஸ் உயிரோடு இல்லை.1907இல் இரண்டாவது அகிலத்தின் மாநாடு ஸ்டாட்கர்ட்டில் நடைபெற்றபோது லெனினை சந்தித்தார். சீர்திருத்தவாதத்தையும் வர்க்க சமரசத்தையும் ஜாரெஸ் பிரச்சாரம் செய்துவந்த போதிலும் லெனினோடு ஏற்பட்ட தொடர்பும் விவாதமும் அவரை உறுதியான சோஷலிஸ்ட் ஆக்கியது. சித்தாந்தப் பிழைகள் இருப்பினும் தன்னலமற்ற முறையில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடினார் .1895இல் டெபுடிகளின் சேம்பரில் உரையாற்றும் போது போருக்கு எதிராய் முழக்கமிட்டார்; அதன் ஒரு சில வரிகளையே துவக்கத்தில் பார்த்தோம்.1913இல் கட்டாய ராணுவ சேவையை இரண்டாண்டிலிருந்து மூன்றாண்டாக உயர்த்தும் முயற்சிக்கு எதிராய் வலுகொண்ட மட்டும் அனைவரையும் திரட்டிப் போராடினார். மசோதா எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.ஜெர்மனியின் உளவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை வழங்கவும் அரசு முயன்றது .


முதல் உலகப்போர் கருக்கொள்ளும் சூழலில் 1912இல் பாஸ்ஸில் நடைபெற்ற சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸில் உரையாற்றும் போது, ‘யுத்தத்தைத் தடுக்க சமாதானத்தை வலியுறுத்தி அனைத்து நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்’ என்றார். யுத்தத்திற்கு எதிராக 1914 ஜூலையில் வேலை நிறுத்தம் செய்ய இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டது .ஜூலை 25இல் வெய்ஸில் ஜாரெஸ் ஆற்றிய உரையே இவரின் இறுதி உரையானது அதில், ‘சமாதானத்தைப் பாதுகாக்க ஒரே வழிதான் எஞ்சி நிற்கிறது; யுத்தத்தை எதிர்த்த போராட்டத்தில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ருஷ்ய நாட்டுப் பாட்டாளிகள் ஒன்றுபடுவதே அவ்வழி’ என்றார்.


இதனை ஏகாதிபத்திய யுத்தம் என்று கூறி ; தொழிலாளிவர்க்கம் இதற்கு எதிராக அந்தந்த நாட்டில் திரள வேண்டுமெனச் சொன்னதில் லெனினும் ஜாரெஸ்சும் ஒரே குரலில் பேசினர்.ஜாரெஸுக்கு பதவி, பணம் எனஆசை காட்டினர். மிரட்டினர். ஆயினும் எதற்கும் அஞ்சாமல் யுத்த எதிர்ப்பில் முன்நின்றார். 


1914 ஜூலை 31இல் ஜாரெஸ் ஒரு உணவு விடுதியில் கொலை செய்யப்பட்டார்.நாடே கொந்தளித்தது. ஒப்புக்காக கொலைகாரர் கைது செய்யப்படினும் பின்னர் விடுதலையாகிவிட்டார்.மக்களின் தொடர் போராட்டத்துக்கு பிறகே - ஜாரெஸ் கொல்லப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின் -1924இல் அரசு பணிந்து; அவரது உடலை புகழ்பெற்ற மனிதர்களின் கல்லறைகள் உள்ள பாந்தியனில் வைக்க அனுமதித்து மரியாதை செய்தது.


புரட்சி தொடரும் ..


நன்றி : தீக்கதிர் , 14/08/2017.நாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க…

Posted by அகத்தீ Labels:
நாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க…சு .பொ . அகத்தியலிங்கம்.
 

“மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக்கூடியவை .அதுபோல் அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும்காலத்திற்குத் தகுந்தாற் போல மாறிக்கொண்டே வரும்.ஆனால் கேமராமூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண்முன் நிறுத்தும் .இப்போது நாம்`ஹிரோஷிமா ,நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடு இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலம் அந்த கொடூரங்களைப் பார்க்க முடியும் .”யோசுக்கோ யம்ஹட்டா சொன்னவையே மேலே உள்ளவை . இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் அதாவது - நாகசாகியில் அணுகுண்டு வெடித்த இரண்டாம் நாள் படங்கள் எடுத்தவர் .


அப்போது அவர் உடலின் மீது தாக்கிய கதிர்வீச்சால் புற்று நோய்ஏற்பட்டு 1965 ல் 48 வயதில் மரணமடைந்தார் .இந்த நூல் நெடுக அவர் எடுத்த படங்கள் நம் மனச்சாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கின்றன .‘ஹிபாகுஷா’ என்போர் அணுகுண்டு வீச்சில் உயிர்தப்பிய ஆனால் கதிர்வீச்சின்கொடூரதாக்குதலுக்கு ஆளாகி கடும்நோயையும் சொல்லொணா வேதனையையும் தாங்கித் திரியும் நடமாடும் சாட்சிகள்.இப்படி உயிர்தப்பிய ‘ஹிபாகுஷா’வான ஒரு பெண் அண்மையில் ஸ்கைப் மூலம் தன் துயர நினைவுகளை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டார் . இன்னும் சில `ஹிபாகுஷா’க்கள் ஜப்பான் தொண்டு நிறுவனக் கப்பலான பீஸ் போட்டில் 24 நாடுகளுக்கு அமைதிப் பயணம் மேற்கொண்டனர். `ஹிரோகோ ஹடாகேயமாவுக்கு அணுகுண்டு வீச்சின் போது வயது ஆறு.அவர் சொல்லுகிறார் , “நான் போராட்டத்தைத் தொடர என்னிடம் சக்தியில்லை .சாவுக்குப் பயப்படவில்லை . ஆனால் , அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் என்கிற முறையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றிய நினைவுகளை முன்னெடுத்துச் செல்வது என் கடமை.”அப்படி என்ன ? அதையும் பார்ப்போம்...அணுகுண்டு விழுந்த 1000 அடி ஆரத்தினுள் இருந்த அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்; வலியை அறியும் முன்னே உயிர் போய்விடும். 2000 அடி ஆரத்தினுள் இருந்தவரோ துள்ளத்துடிக்க கருகி இறப்பர் . 2000 அடி ஆரத்திற்கு அப்பால் இருப்போர் 80 முதல் 95 சதம் வரை தீக்காயங்களோடு குத்துயிரும் குலையுயிருமாய் துடிதுடிப்பர் ; மருத்துவ உதவியும் உடனே நெருங்க வாய்ப்பு இருக்காது ;பெரும்பாலோர் இறந்து போவர் ; மீதமிருப்போர் `ஹிபாகுஷா எனப்படுவோர் - கதிரியிக்க பாதிப்பு , புற்று நோய் உட்பட நடமாடும் நோய்க்கிடங்காய் வதைபடுவர் .


இந்த அணுகுண்டு தேவையா ? அணுகுண்டு வல்லரசு பெருமையா ?சென்னை சென்ட்ரலில் ஒரு அணுகுண்டு வெடித்தால் அதன் பாதிப்பு பக்கத்து எழும்பூரோடு நிற்காது வியாசர்பாடி வண்ணாரப்பேட்டை ,கே கே நகர் வரை மட்டுமா இருக்கும் திருவான்மியூர் தாம்பரம் என புறநகர் வரை அதாவது சென்னை பெருநகருக்கு அப்பாலும் அதன் கொடுங்கரம் நீளும்.யோசிக்கவே நெஞ்சு பதறும்


இந்த அணுகுண்டு எப்போது யாரால் எப்படி உருவாக்கப்பட்டது ? எப்படிச் செயல்படுகிறது என்கிற கேள்விகளுக்கு இந்நூலில் விடையுண்டு . வரலாறும் விஞ்ஞானமுமாய் இந்நூல் நம்முள் அதிர்வுகளை ஏற்படுத்தும் .


கிட்டத்தட்ட இரண்டாம் உலகயுத்தம் முடிந்துவிட்டது; ஜெர்மன் வீழ்ந்துவிட்டது .`ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான் . அப்படியிருக்க அமெரிக்கா திடீரென ஜப்பானின் `ஹிரோஷிமா ,நாகசாகியில் அணுகுண்டு வீசவேண்டிய அவசியம் என்ன ? பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதற்கு பதிலடி என்று சொன்னால் சரியாகிவிடுமா ?


போரில் இரண்டு கோடி மனிதஉயிர்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களையும் முற்றாய் பறிகொடுத்தே ரஷ்யா பாசிஸ்ட்டுகளை முறியடித்தது. அதற்குப் பழிவாங்குவதென ரஷ்யா புறப்பட்டிருந்தால் ஜெர்மன் தாங்கியிருக்குமா ? ஏனெனில் முதல் அத்தியாயத்திலும் சரி ஆங்காங்கு ஊடுபாவாய் சொல்லும் அரசியல் செய்திகளிலும் பார்வையிலும் ஏதோ போதாமையும் குறைபாடும் இருப்பதை இந்நூல் படித்தபோது எனக்குப் பட்டது . எனினும் அதற்கும் மேல் அணுயுத்தத்துக்கு எதிரான கோபத்தை ஊட்டுவதில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது .


அதுவும் மூன்றாம் உலக யுத்தம் மூளுமோ எனும் அச்சம் சூழும் சூழலில் ;இங்கே சங்பரிவார் அணுகுண்டு யுத்தத்தை ஏதோ சோளப்பொரி சாப்பிடுவதுபோல் சொல்லித் திரியும் சூழலில் உரக்கப் பேசவேண்டிய செய்தியே இந்நூல்.


நாமும் ஷிபாகுஷா ஆகாமலிருக்க ….. படிப்போம் . தெளிவோம்.

விழிப்போம்.அணுவுலைக்கு எதிராகவும் இந்நூலில் ஒரு அத்தியாயம் சேர்க்கப் பட்டிருக்கலாமோ ?


ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்னதை நினைவுகூர்வோம், “ அணுசக்தியை அதன் சமுதாயப் பாதிப்புகளைப் பற்றிய புரிதலை நம்சக குடிமக்களுக்கு எடுத்துச் சொல்லும் தவிர்க்க முடியாத பொறுப்பை விஞ்ஞானிகளாகிய நாம் உணர்ந்திருக்கிறோம். நம் பாதுகாப்பும் நம்பிக்கையும் இது ஒன்றில்தான் அடங்கியுள்ளது. விவரம் அறிந்த குடிமக்கள் வாழ்வுக் காகச் செயல்படுவார்களே அன்றி சாவுக் காக அல்ல என்று நம்புகிறோம்.”

ஹிபாகுஷா : அணுகுண்டு - மரணம் -கதிர்வீச்சு

ஆசிரியர் : . ஜெகதீஸ்வரன் .

வெளியீடு : ஜெ எஸ் ஆர் பதிப்பகம் ,
கியூ 191 ,தொல்காப்பியர் தெரு , எம் எம் டி ஏ காலனி ,
அரும்பாக்கம் , சென்னை - 600 106.

பக் : 216 , விலை : ரூ.180 / 

நன்றி : தீக்கதிர் , 06/08/2017 . புத்தகமேசை


தொழிலாளர் பத்திரிகைக்கு ஒரு கோபெக்

Posted by அகத்தீ Labels:
புரட்சிப் பெருநதி - 40


புரட்சிப் பெருநதி -40


தொழிலாளர் பத்திரிகைக்கு ஒரு கோபெக்

ரகசியமாக போல்ஷ்விக் தலைவர்கள் கூடி 
நிறைவேற்றிய தீர்மானம் 
‘‘இதனை ஏகாதிபத்திய யுத்தம்’’ எனக்கணித்தது.
- சு.பொ.அகத்தியலிங்கம்


1910இல் டால்ஸ்டாய் காலமானார் . மரண தண்டனையை எதிர்த்து ‘‘என்னால் மெளனமாக இருக்க முடியாது’’ என எழுதிய கட்டுரை; ரஷ்ய கிராமங்களின் மனச்சாட்சியை படம்பிடித்த அன்னா கரினா’’ நாவல் என அவரின் பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன. ஜார் 2 ஆம் நிக்கோலஸ் முடிசூட்டு விழாவின் போது அவன் பரிசாக வழங்கிய இனிப்புக் குடுவையைப் பெற முண்டியடித்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோயினர்; சம்பவம் நடந்த ‘‘கொடியிங்கா’’ பெயரிலேயே எழுதிய கதை பெரிதும் பேசப்பட்டது. டால்ஸ்டாய்க்கு புகழஞ்சலி செலுத்தி லெனின் எழுதிய கட்டுரைகள் இலக்கிய உலகில் இன்றும் பேசப்படுகின்றன . 


1912 ஜனவரியில் செக்கோஸ்லேவேகியாவில் பிராக் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி ஸபோல்ஷ்விக்] என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.மென்ஷ்விக்குகள் தனிக்கட்சியாகிவிட்டனர். 


அதேவருடம் ஏப்ரலில் சைபீரியா லேனா தங்க வயலில் நடந்த வேலைநிறுத்தத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதில் 270 பேர் பலியாகினார்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் ரஷ்யா முழுவதும் கோப அலையை எழுப்பியது.‘‘ஸ்வெஸ்தா’’ [ விண்மீன்] ஏட்டில் ஸ்டாலின் எழுதினார், ‘‘லேனா துப்பாக்கிப் பிரயோகம் , அமைதி என்ற பனிக்கட்டியை உடைத்துவிட்டது . ஆட்சியிலுள்ள தீமைகளெல்லாம் , நயவஞ்சகமெல்லாம் –ரஷ்யாவின் கொடுமைகளெல்லாம் – இன்றைக்கு லேனா நிகழ்ச்சியில் ஒளிக்கிரணங்களைப் போல் குவிக்கப்பட்டிருக்கின்றன .இதனால்தான் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடங்குவதற்கு லேனா துப்பாக்கிப் பிரயோகம் அடையாளமாக இருக்கிறது’’.ஜனநாயகக் குடியரசு வேண்டும் ! – எட்டு மணிநேர வேலை – பண்ணை நிலங்களை பறிமுதல் செய்ய வேண்டும்!’’ என்கிற முழக்கங்களோடு மே தின வேலை நிறுத்தத்தில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.‘‘ரஷ்யாவெங்கும் மேதினத்தன்று பாட்டாளிவர்க்கம் நடத்திய வேலைநிறுத்தங்கள், தெரு ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர் கூட்டங்களில் புரட்சிப் பிரகடனங்கள்.புரட்சிகரமான பிரசங்கங்கள் யாவும் புரட்சிப் பேரலை மீண்டும் ஓங்கிக் கிளம்பக்கூடிய கட்டத்தில் ரஷ்யா நுழைந்துவிட்டதை காட்டின’’ என்று லெனின் சுட்டிக்காட்டினார்.


1912 மே 5 அன்று ‘‘பிராவ்தா’’ ஸஉண்மை] வெளிவந்தது . சீக்கிரம் இவ்வேடு.விற்பனை அறுபதாயிரத்தைத் தாண்டியது .504 குழுக்கள் நிதிதிரட்டி பத்திரிகை வர உதவின . சட்டப்பூர்வ ஏடெனினும் 41 முறை பறிமுதல் செய்யப்பட்டது . 36 முறை ஆசிரியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 47 மாதங்களுக்கு மேல் சிறையில் வாடினர் . இரண்டரை வருடத்தில் எட்டுமுறை தடை செய்யப்பட்டது . ‘‘பிராவ்தா’’ தடை செய்யப்பட்டால், ‘‘ரபோச்செயா பிராவ்தா’’, ‘‘செவெர்ன்யா பிராவ்தா’’ என எட்டு அவதாரங்கள் எடுத்தன. ‘‘உண்மையை’’ அவ்வளவு எளிதில் சாகடிக்க முடியுமா என்ன? லெனின் வேண்டுகோள் விடுத்தார், ‘‘தங்கள் செய்திப் பத்திரிகைக்காக ஒவ்வொரு சம்பள தினத்தன்றும் ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு கோபெக் தருவதை வழக்கமாக்கிவிட வேண்டும் . 


வழக்கம்போல் பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதும் நடக்கட்டும்.அதிகம் கொடுக்க முடியாதவர் கடந்த காலத்தைப் போல தொடர்ந்து கொடுக்கட்டும் . அதே நேரத்தில் ‘ தொழிலாளர் பத்திரிகைக்கு ஒரு கோபெக்’ எனும் வழக்கம் நிரந்தரமாகட்டும். ‘‘லெனின் பத்திரிகையை புரட்சியின் ஸ்தாபகராய் பார்த்ததோடு அதைப் பாதுகாக்கவும் பெருமுயற்சி மேற்கொண்டார்,


ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியை, வெற்றியைப் பற்றி பிராவ்தாவுக்கு கடிதங்கள் எழுதியோ, வாழ்த்துகள் அனுப்பியோ, கண்டனங்கள் தெரிவித்தோ, ஏதோ ஒருவகையில் தொழிலாளர்கள் பிராவ்தாவில் உயிரோட்டமாய் பங்கேற்றனர். ‘‘உழவன் வாழ்க்கை’’ பகுதியில் தொடர்ந்து வெளியிட்ட கடிதங்கள் மூலம் பிராவ்தா கிராமங்களுக்குச் சென்று புரட்சியைத் தட்டி எழுப்பியது; ஒரு வருடத்தில் மட்டும் பதினோராயிரம் தொழிலாளர் கடிதங்களை பிரசுரித்தது .‘


‘1912இல் பிராவ்தா உதயமானது, 1917 ஆம் ஆண்டு போல்ஷ்விசம் வெற்றிபெற அஸ்த்திவாரக்காலாய்த் திகழ்ந்தது’’ என்பார் ஸ்டாலின்.


இக்காலகட்டத்தில் டூமாவுக்கு நடந்த தேர்தலில் 9 இடங்கள் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டன .இதில் படயேவ்,பீட்ரோவ்ஸ்கி, முரணோவ், சமோய்லாவ், ஷகோவ், மாலினோவ்ஸ்கி ஆகிய 6 பேர் போல்ஷ்விக் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .இதில் மாலினோவ்ஸ்கி பின்னர் ஆட்சியாளர் கைக்கூலியாகிப்போனார் .


இந்த காலகட்டத்தில் மீண்டும் காலாட்படையிலும் , கப்பற்படையிலும் ஆங்காங்கே கலகங்கள் வெடித்தன .65 மாலுமிகள் மீது விசாரணை நடைபெற்று 10 பேர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை பெற்றனர். இதனை ‘‘தொழிலாளர் கெசட்டில்’’ லெனின் எழுதினார்.


1913இல் ‘‘மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்’’ என்ற தலைப்பில் ‘‘விழிப்பு’’ ஏட்டில் லெனின் எழுதிய கட்டுரை தத்துவ வெளிச்சம் பாய்ச்சியது. மொழிக்கொள்கை குறித்தும் இக்காலத்தில் விளக்கம் அளித்தார் . அக்டோபரில் பொரொன் கிராமத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது வழிகாட்டியானது.1914 ஜூலை 27 ஜார் அரசாங்கம் படைதிரட்ட அறைகூவல் விடுத்தது. கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஒருபுறமும் ஜெர்மன், ஹங்கேரி, ஆஸ்திரியா, இத்தாலி மறுபுறமும் என நாடிபிடிக்கும் ஆசையோடு முதல் உலக யுத்தத்தில் குதித்தன.லெனின் தங்கியிருந்த பொரோன் ஆஸ்திரேலிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது . ரஷ்ய உளவாளி என்கிற சந்தேகத்தின் பேரில் லெனின் கைது செய்யப்பட்டார். உடல் நலிவுற்றிருந்த குரூப்ஸ்காயா தன்னையும் கவனித்துக் கொண்டு லெனினையும் சிறையில் சென்று சந்தித்து வந்தார் . 12 நாள் சிறைவாசத்துக்கு பின் ; ஜாரின் கையாளல்ல லெனின் என்பதால் ஆகஸ்ட் 19இல் விடுதலை செய்யப்பட்டார் . 

பொரோன் காட்டில் ரகசியமாக போல்ஷ்விக் தலைவர்கள் கூடி நிறைவேற்றிய தீர்மானம் ‘‘இதனை ஏகாதிபத்திய யுத்தம்’’ எனக் கணித்தது.‘‘இந்த ஐரோப்பிய மற்றும் உலக யுத்தமானது ஒரு முதலாளித்துவ, ஏகாதிபத்திய,வம்சாவளி யுத்தத்தின் தெளிவான குணத்தைக் கொண்டுள்ளது .
சந்தைகளுக்கான போராட்டம், அந்நிய நாடுகளைக் கொள்ளையடிக்கச் சுதந்திரம்,தத்தம் நாடுகளின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கத்தையும் ஜனநாயகத்தையும் ஒடுக்குகிற முயற்சி .முதலாளிகளுக்கு ஆதாயம் தரும்வகையில் ஒரு நாட்டின் கூலியடிமைகளை இன்னொரு நாட்டின் கூலியடிமைகளுக்கு எதிராக நிறுத்தி அனைத்து பாட்டாளிகளையும் ஏமாற்ற- துண்டாட –கபளீகரம் செய்கிற ஆசை. இதுவே இந்த யுத்தத்தின் ஒரே உள்ளடக்கமும் முக்கியத்துவமும் ஆகும்’’


யுத்தத்தில் போல்ஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் எதிரெதிர் நிலை எடுத்தனர் . கம்யூனிஸ்ட் மற்றும் சமூக ஜனநாயக வாதிகளிடையேயும் கருத்துமாறுபாடு வெடித்தன. ரஷ்யத் தொழிலாளர்கள் லெனின் குரலுக்கு செவிசாய்த்தனர்.


புரட்சி தொடரும்...

நன்றி : தீக்கதிர் , 6/08/2017.