விழியை திறக்கும் ஞானப்புனைவு

Posted by அகத்தீ Labels:






 விழியை திறக்கும் ஞானப்புனைவு


 “ கண்ணிருந்தும் குருடர்களாய்” என்ற சொற்றொடரொன்று நம்மிடையே புழக்கத்தில் உண்டு . சினிமா பாணியில் சொல்வதானால் இதையே  “ஓண் லைன் ஸ்டோரியாக” எடுத்துக் கொண்டு ; கதை பண்ணினால் எப்படியிருக்கும் ? பழைய இந்தி சினிமா ஒன்று இப்படி வந்ததாக ஞாபகம் .ஆனால் இந்த நாவல் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும் .ஆம்.அனுபவித்தே சொல்லுகிறேன் . உலுக்கும் நாவல் இது.

காரோட்டிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு பார்வை திடீரென பறிபோய்விடும் . எல்லாம் ஒரே இருட்டாக அல்ல வெண்மையாகத் தெரியும் . அவன் வண்டியை நிறுத்திவிட போக்குவரத்து நெரிசலில் சாலையே அல்லோகலப்படும் . ஒருவன் உதவிக்கு வருவான் . அந்தக் காரிலேயே பார்வையைப் பறிகொடுத்தவனை அவன் வீட்டில் சேர்ப்பான் . பார்வை இழந்தவன் மனைவி அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வாள் . இந்த விசித்திர நோய் இதற்குமுன் எங்கும் கேள்விப்படாத ஒன்று .மருத்துவர் திணறுவார் .ஆனால் நோய் பரவத் தொடங்கியது. அவனின் மனைவி ,உதவிக்கு வந்து காரை திருடிக்கொண்டு போனவன் ; அவன் உறவுகொண்ட பாலியியல் தொழிலாளி ; அந்த டாகடர் என ஓவ்வொருவராய் நோய் தொற்ற பார்வை இழந்தனர் . குருடு ஒரு தொற்று நோயல்லதான் ஆனால் இங்கு இந்த விசித்திரக் குருட்டு நோய் தொற்றி பரவத் தொடங்குகிறது .

டாக்டர் உயரதிகாரிகளை – அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள ; முதல்கட்ட தடுப்பு நடவடிக்கையாய் இந்நோய் தொற்றியவர்களை தனி குவாரண்டைன்களில் அடைக்கப்படுகிறார்கள் . புதினம் சூடுபிடிக்கிறது .டாகடரின் மனைவியும் பார்வை இழந்து அங்கு அடைபடுபவராக முதலில் காட்டப்படுவார் ; பின்னர் அவர் மட்டும் பார்வை இழக்கவில்லை – இழந்ததாக நடித்து அங்கு தொண்டு செய்பவராக சமூக விழிப்பை விதைப்பவராக செயல்படுகிறார் என கதைப் போக்கில் தெளிவாகிறது .

ஒவ்வொரு நாளும் நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது .சாலையின் வண்டி ஓட்டிகள் அப்படி அப்படியே வண்டியை நிறுத்துகிறார்கள் .செய்தி வாசிக்கும் போதே செய்திவாசிப்பாளர் பார்வை போகிறது . முதலில் குவாரண்டைனைவிட்டு வெளியேற முயற்சித்த கார் திருடிய குருடனை  ராணுவத்தின் துப்பாக்கிக்கி பலிகொள்கிறது . குவாரண்டைனில் அடைக்கப்பட்டோர் உணவைப் பெறுவது பெரும் போராட்டம் ஆகிறது .

விரைவில் மேலும் கூட்டமாக இரு நூறுபேர் அங்கு அடைக்கப்பட நெரிசலும் உதவியின்மையும் பசியும் அங்கே அவர்களை பாடாய்படுத்துகிறது .உணவுக்காக பெரும் தள்ளுமுள்ளு – கழிவறை சுத்தம் செய்ய ஆளில்லை . நிரம்பி வழிய வழியெங்கும் மலஜலம்  - என்ன நடக்கிறது – யாருக்கும் தெரியவில்லை .

மேலும் மேலும் பிர்ச்சனைகள் பூதாகரமாகின்றன . வந்தவர்களில் ஒரு பகுதியினர் ரெளடிகளாக அவதாரம் எடுக்கின்றனர் . அதில் ஒருவர் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டுகின்றார் . எல்லோரிடமும் இருப்பதை மிரட்டிப் பறிக்கின்றனர் . அதன் பின் பெண்களை தங்களுக்கு விருந்தாகுமாறு வற்புறுத்துகின்றனர் .பார்வை தொலைந்தாலும் வக்கிரமும் கொடூரமும் தொலையவில்லை .இக்கட்டத்தில் பெண்கள் முதலில் சற்று இணங்கியும் பின்னர் டாக்டரின் மனைவியின் திட்டப்படி ஒரு ரெளடியின் கழுத்தில் கத்திரியால் குத்தி கொலைசெய்ய ; ரெளடிக் கூட்டம் பயந்து பின் வாங்குகிறது .

இதற்கிடையில் அரசு வெற்று நம்பிக்கைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது – அந்நிய சதி என்று பேசுகிறது – ராணுவத்தையும் நோய் தாக்க அவர்களும் பின் வாங்க நாடெங்கும் ஒரே குழப்பம் .இந்தச் சூழலில் டாக்டரின் மனைவி தலைமையில் ஒரு குழுவினர் ஒருவருக்கொருவர் புரிந்து ஒத்துழைத்து குவாரண்டைனை விட்டு வெளியேறி டாகடரின் வீட்டுக்குவருகின்றனர் .ஊரே குலைந்து கிடக்கிறது .உணவுக்கான வேட்டை தொடர்கிறது .

நாவல் எங்கு நடக்கிறது குறிப்பு இல்லை .பாத்திரங்களுக்கு பெயரில்லை .சர்ச் பைபிள் என இரண்டொரு இடத்தில் வருவதைத் தவிர வேறெந்த மதத் தடயமும் இல்லை . புத்தகத்தின் அட்டையை , எழுதியவர் பெயரை நீக்கிவிட்டால் உங்கள் ஊரில் – எங்கள் ஊரில்  உங்கள் ஊரில் நடக்கிற சம்பவமாகிவிடும் !

மனித மனம் எப்படியெல்லாம் அலைபாய்கிறது – ஒவ்வொருவரின் சுயநலமும் சிக்கலும் எப்படி எல்லாம் இருக்கிறது – குப்பை,கூளம்,வறுமை,அடக்குமுறை ,நபிக்கைத் துரோகம் , மோசடி , எதிர்பார்ப்பு ,குற்றவாளியாக்கப்படும் சூழல் ,ஏமாற்று , செயலற்ற வேறும்பேச்சாக இருக்கும் அரசு இவை எதையும் கண்டும் காணாமல் இருக்கிற மக்களை பகடி செய்கிறது இந்நாவல் .  “கொடுமையைக் கண்டும் காணாத குருட்டு உலகமாகிவிட்ட” சமூகத்தை குருடாகிப் போன மனிதர்கள் மூலம் சவுக்கடியாய் தாக்குகிறது இந்நாவல்.

யதார்த்தத்தை எழுதுகிறேன் பேர்வழி என செப்பிக் கொண்டு “ நம்பிக்கை வறட்சியை” விதைக்கிற நாவல்களுக்கு மத்தியில் ; எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் – இருண்ட பொழுதுகளிலும் கூட சூழலைப் புரிந்து மனிதர்களைத் திரட்ட முடியும் – கொடுமையைப் பின்னுக்குத் தள்ள முடியும் என இந்நாவல் நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

இந்நாவல் முழுக்க முழுக்க புனைவு ,கற்பனை . ஆனால் ஊடும் பாவுமாய் இருக்கும் சமூகச் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க சமூக யதார்த்தம் .யதார்த்த இலக்கியமெனில் அங்கு கற்பனைக்கு இடமிருக்காது என்கிற வறட்டு வாதத்தை இந்நாவல் நொறுக்கிவிட்டது .

இந்நூலாசிரியர் சரமாகோ போர்ச்சுகீசியர் ,கவிஞர் .நாவலாசிரியர் . பத்திரிகையாளர் .இவர் எழுதிய “ இயேசு வழியிலான வேதாகமம்” நூலுக்காக பெரிதும் சங்கடங்களை எதிர் கொண்டவர் . ஐரோப்பிய நாவலுக்கான பரிசிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் . மனம் நொந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர் . இறுதிக்காலத்தை ஸ்பெயினில் கழித்தவர் . அங்கேயே மரணமடைந்தவர் .வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவே இருந்தவர் . அடக்குமுறைகளால் தடம் மாறவில்லை . அவரின் இந்த நாவல் நோபல் பரிசு பெற்றது.அதன் மூலம் நோபல் பரிசு தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது .

இந்நாவல் குராடாகிப் போனவர்களை சுற்றிச் சுழலும் நாவல் ; ஆனால் மாபெரும் விழிப்புணர்வை உங்களுக்குள் விதைக்கும் . அவசியம் படியுங்கள் .இந்த நாவலைப் படித்து உணர்வதை அப்படியே வார்த்தையில் வடித்திடல் இயலாது .படியுங்கள் . மொழிபெயர்ப்பு என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு துள்ளோட்டமான நடையில் தமிழில் தந்துள்ள எஸ்.சங்கரநாராயணனுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் .

குறிப்பு :

பொதுவாக குருடன் ,குருடு போன்ற சொற்களை இப்போது பொதுவெளியில் பயன்படுத்துவதில்லை . பார்வை இழப்பு ,பார்வை இழந்தவன் என்ற சொற்களே பயன்படுத்தும் போக்கு ஓங்கி வரும் காலம் இது . எனினும் இந்நாவலிலும் ,இந்த நூல் அறிமுகத்திலும் குருடு ,குருடன் என்ற சொற்கள் தாராளமாய் புழங்கவேண்டியதாகிவிட்டது.அது இந்நாவலின் உள்ளடக்கம் சார்ந்து தேவையாகிவிட்டது . இந்நாவல் ஊட்டும் விழிப்புணர்வைக் கருதி அதற்காக மன்னித்துவிடலாம் அல்லவா ?


பார்வை தொலைத்தவர்கள் [ நாவல்],

ஆசிரியர் : யோசே சரமாகோ,தமிழில்: எஸ்.சங்கரநாராயணன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
7,இளங்கோ தெரு ,தேனாம் பேட்டை,சென்னை – 600 018.

பக் : 384 , விலை : ரூ .295.




­- சு.பொ.அகத்தியலிங்கம்.