வீடுகள் தோறும் இருக்கும் தமிழர்கள் அறியவேண்டாமா?

Posted by அகத்தீ Labels:




வீடுதோறும் இருக்கும்
தமிழர்கள் அறிய வேண்டாமா?


[சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையும்சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்   -அறக்கட்டளையும் இணைந்து நடத்தும்ம. சிங்காரவேலர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு ஐந்தாம் ஆண்டு பொழிவு 18-02-2013, பகல் 2 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக பவள விழா அரங்ககில் நடைபெற்றது.

 பேராசிரியர் முனைவர் ய. மணிகண்டன் தலைமை ஏற்கஅறிவியல்பார்வையில் சிங்காரவேலர்எனும் பொருளில்  சு.பொ. அகத்தியலிங்கம்  நிகழ்த்திய ஆய்வுரை “வீடுதோறும் இருக்கும்தமிழர்கள் அறிய வேண்டாமா?" என்ற தலைப்பில் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.}


சிந்தனைச் சிற்பி - `போர்க்குணம் மிகுந்த செயல் முன்னோடி ம. சிங்காரவேலர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவிற்குத் தலைமையேற்றுள்ள பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்களே! தமிழ் இலக்கியத்துறை தலைவர் பேரா. வீ. அரசு அவர்களே! பேரண்புமிக்க ப. வீரமணி அவர்களே! வீ. கலியப்பெருமாள் அவர்களே! சான்றோர்களே! அவையோர்களே! மாணவ நண்பர்களே! அனைவருக்கும் எமது அன்பு வணக்கங்கள்.

அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற எனக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்புக்கு மிகுந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
சிங்காரவேலர் யார் என்ற அறிமுகம் இந்த அறிவுசார் சபைக்கு தேவை இல்லை என்று கருதுகிறேன். ஏனெனில் அவரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டோரின் சபை இது. உலகில் பொதுவுடைமைச் சமுதாயம் அமையும் வரையிலும் இவர் பெயர் நிலைத்திருக்கும். அமைந்த பின்னரும் நிலைத்திருக்கும். அத்தகைய மாபெரும் சிந்தனையாளரை நினைவு கூர்வது என்பது நமது சமூகச் சிந்தனையைப் புணரமைத்துக்கொள்வதாகும், புத்துயிர் ஊட்டிக்கொள்வதாகும்.
ஈரோடு தமிழன்பன் தனது கவிதாஞ்சலியில் கேட்பார்:

 "பகுத்தறிவுப் பாதையைத்
தந்தை பெரியார் போட்டார்
சிங்காரவேலர்
வெளிச்சம் அடிக்க அதில்
விளக்குகள் போட்டார்.

ஆயிரம் ஆயிரம்
அறிவியல் கருத்துகளை
முத்துமுத்தாக
ஓயாமல் கொட்டிய சிங்காரவேலரை
விடுமுறை போடாத
காலம் அறியும்...
வீடுதோறும் இருக்கும்
தமிழர்கள் அறிய வேண்டாமா?"

நியாயந்தானே! தமிழர்கள் அனைவரும் அறிந்துள்ளனரா? அறியச் செய்துள்ளோமா? இது ஒரு வரிக்கேள்வி மட்டுமா? அல்ல. நமது செயல் ஊனத்தின் மீதான விமர்சனச் சாட்டை அடி அல்லவா?

சிங்காரவேலரின் சிந்தனைப்பரப்பை எப்படி அளப்பது? எதனோடு ஒப்பிடுவது?
கவிஞர் இன்குலாப் பாடுகிறார்:

 "வங்கக் கடல், இந்துமாக்கடல் அரபிக் கடல் என்றெல்லாம்
நிலத்தை ஒட்டி கடல்களைப் பகுத்தாலும்
துருவம் தொடங்கி துருவம் வரைக்கும்
வெளிப்படையாகவும் இரகசியமாகவும்
அலையும் நீரின் தொடர்ச்சிதான் கடல்.

அந்தச் சிந்தனைக் கடலும்
உலகளாவியதுதான்
வெண்ணுரை புரளும் அலைகளுக்கடியில்
புயலின் சின்னங்கள்
ஆழத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்
செம்பவளக் கொடிகள்
எப்போதும் கரைகடக்கத் துடித்த
கடல் அது.

அந்த வீட்டில் அலைமோதின
அனைத்து நாட்டுச் சிந்தனைகளும்
புத்தகங்களாய்..."
.
அந்த அறிவுக் கடலை எண்ணி எண்ணி வியப்பதும் போற்றிப்பாடுவதும் மட்டுமே நினைவு கூர்வது ஆகாது. திவசம் செய்வதற்கும் நினைவுகூர்வதற்கும் வேறுபாடு உள்ளது.

அன்றொரு நாள் மட்டும் நினைப்பதும் பூஜிப்பதும் திவசம் செய்பவர் இயல்பு. ஆனால் நினைவு கூர்வது அத்தகையதாக மாறிவிடக் கூடாது. இது ஒரு அறிவியல் நடவடிக்கையாகும். சமூகத் தொடர் ஓட்டமாகும்.

 “விடைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல, வினாக்களை எழுப்புவதும் அறிவியலின் பணியே” என்பார் ஐன்ஸ்டீன்.

அறிவியல் பார்வையில் சிங்காரவேலரை இன்று பரிசீலிப்பதும், சிங்காரவேலரின் அறிவியல் பார்வையை இன்றைய தேவைக்கு வளர்த்தெடுக்கத் தூண்டுவதுமே என் உரையின் இலக்காகக் கொண்டு அரைகுறை பயிற்சியோடு அந்த ஆழ்கடலுக்குள் முத்துக்குளிக்கத் துணிகிறேன். மன்னிக்கவும்.

 "உலகில் மனிதன் அறியாமையில் நிறைந்திருந்த காலை கல்லிலும் தூணிலும்,  துரும்பிலும்,  செடியிலும், நிலத்திலும், நீரிலும், பாழ்வீட்டிலும், குட்டிச் சுவர்களிலும், பருத்தியிலும், பட்சியிலும், நோயாளியிடத்திலும், வைத்தியம் கொண்டவர்களிடத்திலும் பேயோ? பிசாசோ? காற்றோ? கருப்பனோ? அண்ணன்மாரோ? கன்னிமாரோ? சாத்தானோ? சனியனோ? வசிப்பதாக கற்பனை செய்துவந்தான். விஞ்ஞானம் பரவப்பரவ இந்த பேய், பூத கோஷ்டியெல்லாம் பறந்தோடிப் போகின்றன. ஆனால் அந்தகார இருளடைந்த இந்த நாட்டிலோ ஒவ்வொரு வீட்டிலும் இந்த பொய் தேவதைகள் வாசம் செய்யும் இடமாகத் துர்ப்பாக்கிய வசமாகிவிட்டது. இந்த இருளைப் போக்கி மெஞ்ஞானத்தை நாட்டில் அறிந்து நடக்கும் காலம் எக்காலமோ?"

என சிங்காரவேலர் வேதனைப்பட்டதன் விளைவு. தள்ளாத வயதில்-76 வயதில் அறிவியல் ஞானத்தைப் பரப்ப புதிய உலகம் என்ற ஏட்டைத் துவக்கினார்.

சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்னர் வேதனைப்பட்டாரே, அதே நிலையா இன்று. இல்லையே!. இன்று விஞ்ஞான ஒளி எளிதில் கிடைக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் கடைசி கால்ப்பகுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் இதுவரையிலும் அறிவியல் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் உலகை விரல் நுனியில் அடக்கிவிட்டது. பட்டனைத் தட்டினால் அறிவியல் தகவல்கள் கொட்டுகின்றன. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அறிவியல் கண்டுபிடிப்புகளும் கருவிகளும் இல்லாமல் நம் வாழ்வில் ஒரு நொடிகூட நகரவில்லை. ஆனால் அந்தகார இருள்போய்விட்டதா? மூடநம்பிக்கை முடை நாற்றம் அகன்றுவிட்டதா? இல்லை பெருகியுள்ளது. ஏன்? ஏன்? ஏன்?

 "மெய்ஞ்ஞான முறையைப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிவிக்காமல் அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும் தினசரி பழக்க வழக்க ஒழுக்கங்களிலும் அறிவுடையோரும் தங்கள் பகுத்தறிவை உபயோகப்படுத்தாமல் மூடப்பழக்கங்களுக்கும் மூட எண்ணங்களுக்கும் ஆளாகின்றனர். தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு இந்த அறியாமையே முதற் காரணம்."

இவ்வாறு அடித்துக் கூறும்போது அவர் `தினசரி பழக்க வழக்க ஒழுக்கங்களிலும்' எனக் கூறுவதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். ஏனெனில் அவர் மெஞ்ஞானம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறபோது, அது, ஏதோ அறிவு ஜீவியாக எல்லோரும் பின்னால் ஒளிவட்டத்தோடு திரிய வேண்டும் என்கிற கற்பனை மயக்கத்தினால் அல்ல. மேலும்; எந்த ஞானம் எல்லா ஞானத்தையும் விட சிறந்தது என்ற கேள்விக்க," சயன்ஸ் (அறிவியல்) ஒன்றே என்று மாபெரும் ஞானியாகிய ஹெர்பர்ட்ஸ் பென்ஸர் தெரிவித்ததை நாம் நம் தமிழ் மக்களிடம்  அறிமுகம் செய்கிறோம்" என்கிறபோதும் அன்றாட வாழ்வோடு உரசிப்பார்க்கும் பார்வையையே முன்வைக்கிறார். அதை நாம் பயின்றோமா? தொடர்கிறோமா?

அவர் இந்தப் பார்வையை எங்கிருந்து பெற்றார்? அவர் வைணவ நம்பிக்கை மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும் இளமையில் பௌத்த சிந்தனையால் கவரப்பட்டு படிப்படியாக மார்க்சிய சிந்தனைக்கு உயர்ந்தவர். அதனையே தன் வாழ்நாள் முழுக்க பிரச்சாரம் செய்தவர். அவர் பௌத்த மரபின் தொடர்ச்சியாக நாத்திக சிந்தனைக்குத் தாவினார் என்பதையே பொதுவாக பலரும் வழிமொழிகின்றனர். ஆனால் பேராசிரியர் வீ. அரசு வேறொரு கோணத்தை முன்வைக்கிறார்.

 "பௌத்த மதச் சார்புடையவராக அவர் செயல்பட்டதற்கான நேரடித் தாவுகளை நாம் பெற முடியவில்லை" என்று வாதிடுகிற வீ. அரசு,  "ஐரோப்பிய புத்தொளி மரபுகளை கற்றுணர்ந்து அதிலிருந்து வளமாக உருப்பெற்ற மார்க்சிய தத்துவ மரபைத் தமது வாழ்க்கைக் கண்ணோட்டமாகக் கொண்டு வாழ்ந்த வரலாறு நமக்கு எழுச்சியூட்டக்கூடியது" என்கிறார்.

 "தோழர் சிங்காரவேலர் ஐரோப்பிய புத்தொளி மரபை உள்வாங்கித் தமிழ் மண்ணில் செயல்பட்டவர். இங்கிருந்து பகுத்தறிவுக்கு முரணான அனைத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தவர்" என்று வீ. அரசு மிகச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறார்.

அதன் தொடர்ச்சியாக அவர் நாத்திகம் மற்றும் பகுத்தறிவை முன்வைக்கும்போது அன்றைக்கு தமிழகத்தில் வலுவாக இருந்த சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவை எள்ளி நகையாடவில்லை. மாறாக அதனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தினார்.

பெரியார் சாதி இழிவை துடைத்தெறிய வெறியோடு செயல்பட்டார். சாதி இழிவை ஒழிக்க அதனை நியாயப்படுத்திய சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள், வேதங்கள், பிராமணியம், மனுநீதி என அனைத்தையும் தர்க்க வாதங்கள் மூலம் தகர்த்தெறிந்தார். அதன் மூல ஆதாரமாக மதத்தை - அந்த மதத்தின் இருப்புக்கு ஆதாரமான கடவுளை நிராகரித்தார். ஆக சமூக அடித்தளத்திலிருந்து கடவுள் மறுப்பைக் கைக்கொண்டார். பின்னர் பரிணாமக்கோட்பாட்டையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். ஆயினும் புராண சாஸ்திர எதிர்ப்பே கூர்முனையாக இருந்தது. ஆனால் சிங்காரவேலர் சமூக அடிமைத்தனத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வேரறுக்க சிந்தித்தார், செயல்பட்டார். எனவே அறிவியலை ஆயுதமாக்கினார். மததத்துவங்கள் மீது அறிவியல்பூர்வமான கேள்வி எழுப்பினார். பரிணாம-கோட்பாட்டை-படிமலர்ச்சிதத்துவத்தை -அறிவியலை அடிப்படையாகக் கொண்டு கடவுள் - மத மறுப்பில் ஈடுபட்டார்.
வரலாற்று ஆய்வாளர் செந்தில்பாபு, சிங்காரவேலரின் அறிவியல் பார்வையையும் சுயமரியாதை இயக்கத்தினரின் பகுத்தறிவுப் பாதையையும் தன் கட்டுரையில் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

 "அறிவியலோடு இணைந்துள்ள முற்போக்கான குறிப்பீடுகளால் மட்டுமல்ல அதனுடைய அறிவியல் ரீதியான விசாரணை முறையின் சிறப்பாலும்தான் சிங்காரவேலருக்கு அறிவியல் மேன்மையாக இருந்தது என்பதைப் பார்த்துள்ளோம். இதனால்தான் மதம் குறித்தும் மூட நம்பிக்கைகள் குறித்தும் அவருடைய சமகாலத்திய நாத்திக ஆய்வுகள் முக்கியமாக அப்போது வலுவாக இருந்த சுயமரியாதை இயக்கத்தினரால் முன்வைக்கப்பட்டவை; அவை சாதாரணமானவையாகவும் தெளிவற்றவையாகவும் இருந்ததை அவர் கண்டார். அவர்களுடைய ஆய்வு பகுத்தறிவுச் சமூக இயலை மட்டும் சாந்திருந்ததால் அறிவியல் முறையில் வலுப்படுத்த வேண்டியதாயிருந்தது".... என்று கூறும் செந்தில்பாபு,  “மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தான் அதே மனிதன் இப்போது அறிவியல் சாதனைகள் அடிப்படையில் கடவுளை மறுக்கிறான். இந்தச் சிதைக்க முடியாத அடித்தளப் பாறையின் மீதே நாத்திகபோராட்டத்திற்கான கோட்டையைகட்ட வேண்டும்" என்று சிங்காரவேலர் சொன்னதை மேற்கோள்காட்டி இறுதியில் முடிவுக்கு வருகிறார்;

 "அறிவியல் வெளிப்பாட்டுப் பணியை ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் எவ்வாறு அரசியல் நடவடிக்கை ஆக்கியுள்ளார் என்பதை நாம் காண முடியும். அவரது பிந்திய ஆண்டுகள் அன்றைய கொந்தளிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அரசியலினூடே அறிவியலைப் பரப்பும் பணிக்காகவே செலவழிக்கப்பட்டது. அறிவியலைப் பரப்புவது அரசியல் செயல்பாட்டின் பகுதியாகும்பொழுது புதிய அறிவின் வெளிச்சத்தில் மக்களின் உறுதிப்பாடு வெளிப்படும். இது புரட்சிகர சக்தியை உருவாக்கிடும் புதிய அறிவு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இந்த அறிவும் மக்களும் ஒருவரையொருவர் விடுதலை செய்யும் நிலை வரவேண்டும். இந்த மார்க்சிய அறிஞருக்கு விஞ்ஞானமும் அரசியலும் மானிட நடவடிக்கைகளின் விளைவாகும். ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்தி புதிய உலகுபற்றி கருத்துக்களை நனவாக்கும் போராட்டச் செய்தியாகும்"
.
ஆம், சிங்காரவேலர் பாதையும் பயணமும் அப்படிப்பட்டதே. உலகை மாற்ற மனிதனை மேம்படுத்த அறிவியலைக் கைக்கருவியாகக் கொண்டதுதான் சிங்காரவேலர் சிந்தனையின் மணிமுடியாகும். அதற்காக மார்க்சிய இயக்க இயலை சரியெனக் கண்டறிந்து பிரச்சாரம் செய்ததே அவரது ஆகச்சிறந்த அறிவியல் பணியாகும். அதை பின்னர் பார்ப்போம்.

சிங்காரவேலர் ஆதியில் பௌத்த சிந்தனைகளால் கவரப்பட்டாலும் பின்னர் அந்த பௌத்தம் உட்பட எந்த மதத்தையும் விமர்சிக்கத் தயங்கவில்லை. நீங்கள் இந்து மதத்தைத்தான் விமர்ச்சிக்கிறீர்கள். பிற மதங்களை விமர்சிக்கவில்லை என்ற மதவாதிகளின் அபத்தமான குற்றச்சாட்டை சிங்காரவேலர் மீது சுமத்த முடியாது. அவர் எல்லா மதங்களையும் விமர்சித்தார்.  மதநம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாக அவர் மீது குற்றப் பத்திரிகை வாசிக்க முடியாது. மத ஆபாசங்களை பெரியாரைப்போல பச்சையாக பேசியவரல்ல சிங்காரவேலர். பெரியார் பாணி அன்றைய தேவைகளில் உருவானது என்பது வேறு சங்கதி.  இதே காலகட்டத்தில் சிறையிலிருந்த பகத்சிங் “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற புத்தகத்தை ஜீவா மொழிபெயர்க்க பெரியார் வெளியிட்டார்.  அந்தப் புத்தகம் தர்க்க ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கடவுளை மறுத்தது. பெரியார் தன் பாணியில் கடவுளை மறுக்கிறபோதும் சிங்காரவேலர், பகத்சிங் போன்றோரின் அறிவியல்பூர்வமான ஆக்கங்களையும் துணைக்கொண்டார். சிங்காரவேலர் அறிவியல் ரீதியாக மதத்தையும் கடவுளையும் விமர்சித்த பாங்கே தனி.

 "சென்ற 25 வருடங்களாகச் செய்துவரும் ஆராய்ச்சியில் அணுக்களும் அணுத்திரள்களாகிய நாமும் இழுக்கும்(ஈர்க்கும்) சக்தியால் (அட்ராக்ஷன்) கட்டுண்டு தனிப்பொருளாக இருந்து வருகின்றோம். ஆதலின் தமது தேகமும் அதற்கு கீழே உள்ள அணுக்களும் அணுத்திரள்களும் இவைகளுக்கு மேலே உள்ள சூரிய சந்திர நட்சத்திரக் கூட்டங்களும் கவர்ச்சியால் கட்டுண்டு பிரபஞ்சத்தில் உலவுகின்றன. இதைத்தவிர, வேறெந்த அறிவோ, மனசோ, சைதன்யமோ, சத்தோ சித்தோ? ஆன்மாவோ? கடவுளோ? தெய்வமோ? நம்மையும் நமக்கு மேலும் கீழுமுள்ள பொருட்களை நடத்துவதை மனிதர்களாகிய நாம் அறியோம்." ஆம், அறியவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியை அவர் உட்கிரகித்து சொன்னார். ஆனால்  தொடர்ந்து வளரும் அறிவியலோடு அவரது அறிவியல் பார்வையை வளர்த்தெடுத்தோமா? என்பதே இன்று நான் எழுப்ப விரும்பும் முக்கியக் கேள்வியாகும்.
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் அறிவியல் பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்துள்ளது நம வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த அறிவியல் பயன்பாடு இல்லாமல் மனிதகுலம் ஒரு நொடிகூட அசைய இயலாது என்கிற அளவுக்கு அறிவியல் நம்மை ஆட்கொண்டுவிட்டது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் `அறிவியல் தகவலறிவு என்றுமில்லாத அளவு நம்மிடம் பெருத்துள்ளது. இந்த `அறிவியல் தகவலறிவும்  `அறிவியல் கருவிகளின் பயன்பாடும் ஊதிப்பெருத்துள்ளபோதிலும் `அறிவியல் பார்வை மேலும் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என்பதுதான் நமக்கு கவலை அளிக்கும் விஷயமாகும். மெத்தப்படித்தவர்கள் அறிவியல் கருவிகளின் துணையோடு பெண் சிசுவை கருவிலேயே கண்டறிந்து அழிப்பதை எந்த வகையில் சேர்ப்பது?

கற்சிலையோ உலோகச் சிலையோ பால் குடிக்கும் என்று பத்தாம் நூற்றாண்டில் நம்பினால் புரிந்துகொள்ள முடியும். 21ஆம் நூற்றாண்டிலுமா? நடந்ததே. பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற செய்தி இணையதளம் மூலம் தேசத்தை ஏன் உலகத்தை ஒரு கலக்கு கலக்கியதே. ஏன்? படித்தவர்கள் மெத்தப்படித்தவர்கள் அறிவியலில் இயற்பியலில் பட்டம் படித்தவர்கள் நம்பினார்களே! பேராசிரியர்கள், டாக்டர்கள் கூட பால் செம்புடன் காத்து நின்றார்களே! அது ஏன்?

மதங்களைப் பற்றிய விமர்சனம்தானே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் அடித்தளம். ஆனால் மதங்களை அறிவியல்பூர்வமாகக் கூட விமர்சிக்க முடியாத ஒரு பாசிச சமூகச் சூழல் இன்று நிலவுகிறதே ஏன்?

 "அறிவியல் தகவல் அறிவு" வேறு, "அறிவியல் பார்வை" வேறு. அறிவியல் பார்வையைத்தான் சிங்காரவேலர் வலியுறுத்தினார்.

சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் எப்படி உருவாகிறது. பள்ளியில் படித்தோம். ஆனாலும் ராகு, கேது பாம்புகள் சந்திர சூரியரை விழுங்கும் கதையும் அது சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களையும் விட்டோமா? ராகு, கேது பெயர்ச்சி பலன், சனிப் பெயர்ச்சி பலன்.குரு பெயர்ச்சி பலன் பார்க்கிறோமே ஏன்? சோதிடம், ஆவி உலகம், வாஸ்து குறித்து டஜன் கணக்கான பத்திரிகைகளும் பலநூறு புத்தகங்களும் இன்று விற்பனை ஆவது எப்படி? நவீன அறிவியல் கண்டுபிடிப்பான கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உட்பட அனைத்தும் மூடநம்பிக்கைகளை பிரச்சாரம் செய்வதில் முன்னிற்பது எப்படி? நமது அறிவியல் தகவல் ஞானமும் பயன்பாடும். அறிவியல் பார்வையாக அன்றாட வாழ்வை ஊடுருவிப் பார்க்க உதவவில்லையே ஏன்?

ஓடும் குருதியில் வழித்தொழுகும் கண்ணீரில் சாதியின் எந்த அடையாளமும் கிடையாது. எலும்பு தோல் சதையில் சாதி இலக்கமிடவில்லை, இதனை மருத்துவ விஞ்ஞானம் பயில்கிற ஒவ்வொருவரும் நன்கு அறிவர். ஆனால் மருத்துவம் படித்தவர்களே சாதிப் பெருமையில் கட்டுண்டு கிடக்கிறார்களே, மருத்துவக் கல்லூரி மாணவர்களே சாதி ரீதியாக பிளவுண்டு கிடக்கிறார்களே?  இது எப்படி?  அறிவியல் தகவலறிவு - ஒரு துறை அறிவு அவர்களிடம் உள்ள போதும் அறிவியல் பார்வையாக - சமூக ஆக்கம்பெற்று அது விரிவாக்கம் பெறவில்லையே ஏன்? சாதி-தீண்டாமை எனும் நச்சுக் கருத்துகள் மூளையில் உறைந்து ஆண்டாண்டு காலமாக புரையோடிக் கிடப்பது எப்படி?  மருத்துவ அறிஞர்களும் அதில் விலக்கு இல்லையே ஏன்?

சிங்காரவேலர் காலத்திலும் இதுபோல் கண்டார். விமர்சித்தார்.

சிங்காரவேலர் காலத்தில் மின்சாரத்தில் சர் அம்புரோஜ் பிளெமிங் விற்பன்னர். ஆனால் அதற்காக டார்வின் பற்றி அவர் அவதூறாகக் கூறுவது அறிவியலுக்குப் பொருந்தும்படியாக இல்லை என்பதை ஆர்தர் என்ற அறிஞர் துணையோடு  சாட்டையடியாகப் பதில் கூறினார்.

அறிவியல் பார்வை என்பது சாதாரண வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கிற ஒவ்வொன்றையும் அறிவியல் பூர்வமாக கேள்விக்கு உட்படுத்தி பரிட்சித்துப்பார்ப்பதும் அப்படிப் பார்ப்பதன் மூலம் உண்மையை அறிய முயற்சி செய்வது என்பதே சிங்காரவேலரின் திடமான நம்பிக்கை.

பொதுவாக சிங்காரவேலர் நம்பிக்கையை இரண்டு வகைப்படுத்துவார். ஒன்று சரியான நம்பிக்கை மற்றொன்று சரியற்ற நம்பிக்கை.

 "காற்றால் புயலடிக்கின்றது என்பது முதல் நம்பிக்கைக்கு திருஷ்டாந்தம். வாயு தேவனால் புயலடிக்கின்றது என்பது சரியற்ற நம்பிக்கை" என அறிவியல் பூர்வமாக சிங்காரவேலர் எடுத்துரைத்தார்.

 "விசுவாசி," "ஐயுறாதே" என்பது மதங்களின்பாதையாகவும் "கேள்வி கேள்," "சந்தேகி" என்பது அறிவியல் பாதையாக, பார்வையாகவும் உள்ளது.

ஆனால் இன்றைக்கு மத நம்பிக்கைகள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றப்பட்டு வருகிறது மட்டுமல்ல கேள்வி கேட்பதே குற்றம் என்கிற நிலை உருவாக்கப்படுகிறது. வெறும் கதையாடலாக இருந்த இராமர் சேது பாலம், நம்பிக்கை என்ற முத்திரை குத்தப்பட்டபோது அது சேது சமுத்திர திட்டம் என்ற வளர்ச்சி திட்டத்தையே முடக்கிப் போட்டுவிட்டதே!

அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ராமர் சேதுக்கு வரலாற்றாதாரம் இருக்கிறதா? அறிவியலுக்கு பொருந்துமா? என்றெல்லாம் கேள்விகேட்கும் தமிழக அரசியல்வாதிகள் - அறிஞர் குழாத்தினர் குமரிக் கண்டம் லெமூரியாக் கண்டம் குறித்த புவியியல் ஆதாரம் உள்ளதா? அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினால் சகித்துக்கொள்ளாமல் சீறிப்பாய்கின்றனரே! ஏன்?

 ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் என்கிற மேலைதேச மரபணு விஞ்ஞானியும் பகுத்தறிவாளரும் தன் பத்து வயது மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் கூறுவார்: "துப்பறியும் நிபுணர்கள் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி உண்மைகளை கண்டறிவதுபோல் எல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்" கடவுள், புனிதநூல், பழம்பெருமை எல்லாம் இத்தகு விமர்சனத்துக்கு உட்பட்டதே என்பதே பகுத்தறிவாளர் வாதம். இது ஒரு பாதை.இப்படி புனித நூல்களை ஆராயக்கூடாது என்பது மத நம்பிக்கையாளர்வாதம். "திருடனைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் சோதனை செய்ய நுழையும் போலீஸ்காரர் மனோபாவத்துடன் கீதையையோ பிற மதத்தவர் கௌரவிக்கும் மார்க்க தரிசன நூல்களையாவது படிப்பதில் பயனில்லை. படிப்பது கூடாது" என்றார் ராஜாஜி. இன்று அதற்கும் ஒருபடி மேலே போய் அவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை கருத்துக்களைக் கொண்டு மதவாத கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆபத்தான போக்கும் தலைதூக்கியுள்ளது.

 "அறிவியல் பார்வை" எனில் எதையும் யாரையும் கேள்வி கேட்கவும் விமர்சன ரீதியாக அணுகவும் தயங்கக்கூடாது. இன்று அப்படிப்பட்ட சூழல் உள்ளதா? இல்லையே! இல்லையே!

கடவுள் மதம் மட்டுமல்ல பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும், சிங்காரவேலரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. இந்த பார்வை இன்று இல்லையே! சகிப்புத்தன்மை செத்துவிட்டது. அந்த இடத்தில் குரூரமான வெஞ்சினமும் பழமையும் மடமையும் கூடுகட்டி வாழுகிறதே! அப்படியானால் சிங்காரவேலர் தன் வாழ்வின் இறுதிப்பகுதி முழுமையும் அர்ப்பணித்த அறிவார்ந்த சமூகம் வெறும் கனவாகிவிடுமா? எங்கே தவறு நடந்தது? யார் கோட்டை விட்டது?

சிங்காரவேலர் சுயமரியாதை இயக்க மாநாடுகள் குறித்து எழுதிய கட்டுரைகளில் அம்மாநாடுகளின் பகுத்தறிவு அம்சத்தை சமூக சீர்திருத்த அம்சத்தை வெகுவாக பாராட்டினாலும் இறுதியில் பொருளாதார மாற்றம் சமூக மாற்றம் இவற்றில் அவர்கள் காட்டும் அலட்சியத்தை வெகுவாக விமர்சித்தார். இக்கட்டுரைகளை குடியரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டார்.

"ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டும். ஆங்கிலேயர்களை இகழக்கூடாது. பிராமணீயத்தை எதிர்க்க வேண்டும். பிராமணர்களை இகழக்கூடாது. ஆனால் பிராமண துவேஷத்தில் ஈடுபட்டதால் சிகரத்தில் ஏறவேண்டிய சுயமரியாதை இயக்கம் தரையில் இறங்க நேரிட்டது" என்றார்.

 'சாதி மத வித்தியாசங்கள் சில பிராணிகளுக்கு கொடுக்கு விஷம் உண்டானதுபோல் மனிதகுலத்தில் உண்டாகின. இவற்றைப் போக்க வேண்டியது அவசியமே. ஆனால் பசியும், பிணியும் மக்களைவிட்டு தொலைய வேண்டியது எல்லாவித சீர்திருத்தங்களைக் காட்டிலும் சிறந்ததாகையால் அதன் பொருட்டு சமதர்ம அரசை ஆதரிக்க வேண்டும்" என்றார்.

பகுத்தறிவிலும் உண்மை - போலி உண்டு. இது சிங்காரவேலர் வாதம். உண்மைப் பகுத்தறிவு எது? அவர் கூறுகிறார்: "பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்துகின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும். இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையாளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவே" என்றார். இதனை தமிழ் சமூகம் உணர்ந்ததா? பின்பற்றுகிறதா?

இப்போதும் பொற்கால மாயைகளும் கனவுகளும் தொலையவில்லையே! துரத்துகின்றனவே!

 "சிங்காரவேலர் கேட்டார்: இந்திய நாடு எந்தப் பொற்காலத்தில் தற்காலத்தை விட சிறப்புற்றிருந்தார்கள் என்று சொல்லக்கூடும், கேட்கின்றோம். வேதகாலத்திலா? பிராமண காலத்திலா? சூத்திர காலத்திலா? ஸ்மிருதிகள் காலத்திலா? எனக் கேட்கின்றோம். லங்கேஸ்வரனாகிய  ராவணனைக் கொன்ற காலமா? அல்லது குருசேத்திர காலமா என்று கேட்கின்றோம். அல்லது சேர, சோழ, பாண்டிய ராஜ்ய காலத்திலா என்று கேட்கின்றோம்? எந்தக் காலத்தில் 16 ஆயிரம் சமணர்களை கழுவலேற்றிய காலத்திலா எனக் கேட்கின்றோம். எந்தக் காலத்தில் எங்கள் சிவன் உங்கள் பெருமாள் என சண்டை நடந்தனவென்று கேட்கின்றோம். பண்டைக் கால ஜனசமூக வாழ்க்கையை உணராமல் வேதராஜ்யமென்றும், ராமராஜ்யமென்றும், தர்மராஜ்யமென்றும் பிதற்றுவதில் யாது பிரயோசனம் என்று கேட்கின்றோம்."

இப்படி அறிவியல் பூர்வமாக சிங்காரவேலர் கேள்வி எழுப்பிய மரபு தமிழகத்தில் தொடராமல் போனது எப்படி?
ந. முத்துமோகன் கூறுவது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

 "வைதீகப் பழமைக்கு எதிராக தமிழ் மொழியும் இலக்கியமும் முன்னிறுத்தப்பட்ட அதே வேளையில் தமிழ் பழமையும் பெருமிதங்களும் விமர்சனமின்றி பாராட்டப்பட்டன. இது பகுத்தறிவு வகைப்பட்ட அரசியல் அன்று - அறிவின் சமூக மாற்றப் பண்பு நீர்த்துப்போயிற்று. திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையினர் வளர்த்தெடுத்த தமிழ்ப் பழமையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமிதங்களுக்கிடையில் அரசு எனும் அடக்குமுறை இயந்திரம்  குறித்த விமர்சனம் அடியோடு இல்லாமல் போயிற்று. கண்ணகியின் கற்பு பற்றிய மலைப்புகளுக்கிடையில் பெண் விடுதலை என்பதே அரவமில்லாமல் மறைந்துபோயிற்று. இவையெல்லாம் சமூக மாற்றத்திற்கான பகுத்தறிவுப் பாதை அல்ல."

தமிழகத்தில் காலணியமும் வேளாண்குடிகளும் என்ற புத்தகத்தில் பேராசிரியர் சி.கே.காளிமுத்து மன்னர் ஆட்சிகாலம் முழுவதும் வேளாண்மையை மேம்படுத்த நிர்நிலைகளை பலப்படுத்தியதைச் சுட்டிக்காட்டுவதுடன் ; கடின உழைப்புக்காக ஒடுக்கப்பட்ட சாதியமைப்பை திரட்டி காட்டிக்காத்தனர் என்பதையும், அவர்களை கண்காணிக்க அடக்க இடைசாதிகள் பயன்படுத்தப்பட்டதையும் பிராமணியமும் மேலசாதியும் நிலப்பிரபுக்களாகத் திகழ்ந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். ஆக சாதிய படிநிலையை ஒடுக்குமுறையைக் கட்டிக்காத்ததுதான் மன்ன்ர்களாட்சி காலப்பொற்காலம்.அதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம்.

தேசவிடுதலைப் போரில் கிட்டத்தட்ட  ஓரணி  திரண்ட இந்திய மக்கள் சமூக சீர்திருத்தப் போரில் அப்படித் திரளவில்லை. இந்திய தேசியத்தின் ஆரம்ப வேர்களில் மதத்தின் பிடிப்பு அதிகம். தமிழகம், வங்கம் என திட்டுதிட்டாகவே சமூக சீர்திருத்த களம் உருவானது. ஒருங்கிணைந்த இந்தியாவில் சமூக சீர்திருத்த பரப்பைவிட மதவாத பரப்பு பெரிதாகிக்கொண்டே போவதற்கான சமூக அரசியல் பின்புலம் இருந்தது, பெருகிக்கொண்டிருக்கிறது. இது ஆபத்தானதும் கூட.

இன்றைய உலகமயச் சூழல் அடையாள அரசியல் என்கிற மிக நுட்பமான சொல்லாடலில் மனிதர்களை சிறு சிறு கூறுகளாக உடைத்து மோதவிட்டு தங்கள் சுரண்டல் கோட்டைக்கு எதிரான கோபத்தை மடைமாற்றி விடுகின்றனர். அதற்கு மதம், இனம், சாதி, மூடநம்பிக்கை, பழமை என சகலதும் கூர்தீட்டப்படுகிறது.  (அடையாள அரசியலில் சில காலத்தின் தேவையாக இருக்கக்கூடும். ஆனால் பொதுவில் அவ்வாறு அல்ல.) அதிலும் அறிவியல் சாணைக்கல்லில் மெருகேற்றி பளபளப்பூட்டி பரவலாகவும் வலுவாகவும் செய்கிறது. சுரண்டும் வர்க்க நலன் பேண மதக் கருத்துகளுக்கு மாயாவாதத்துக்கு அறிவியல் முலாம் பூசுவது கூட நடந்து வருகிறது. குவாண்டம் என்கிற அறிவியல் தத்துவமாயினும் அல்லது சமீபத்தில் ஹிக்ஸ்போஸன் கண்டுபிடிப்பான `கடவுள் துகள்கள் வரை அதன் நீட்சியைக் காணமுடிகிறது. கடவுள் துகள்கள் என்ற பெயரே தற்செயலானது. ஹிகஸ் புலத்தை கண்டறிய எழுதிய நூலுக்கு சனியன் துகள்கள் என்ற பெயர் சூட்டியிருந்தார். ஆனால் புத்தகப் பதிப்பாளர் விற்பனை நோக்கோடு `கடவுள் துகள்கள் என பெயர் சூட்ட அதுவே நிலைத்துவிட்டது. இப்போது கடவுள் இருப்புக்கு அது ஆதாரம் என்பதுபோல் இணையத்தின் கட்டுரைகள் வருகின்றதை என் சொல்ல? எங்குபோய் முட்ட?

ஃபிரிஜோ காப்ரா என்ற இயற்பியல் அறிஞர் எழுதிய  இயற்பியலின் தாவோ நூல் ஆன்மீகத்தை நவீன அறிவியலுடன் குழைத்துத்தரும் கைங்கரியத்தை தொடங்கி முன்னத்தி ஏர் நடத்தியது எனலாம். இந்நூலின் முன்னுரையில் தனது புத்தகம் கடவுளின் சொந்த புத்தகம், தான் கடவுளின் சொந்த இயற்பியல் வல்லுநர் (ழுடின டீற க்ஷடிடிம லெழுடின டீற ஞாலளஉளைவ) என்று கூறினார். இதுவே அவரது முகவிலாசத்தைக் காட்டும். கடந்த 25 ஆண்டுகளில் 25 மொழிகளிலும் பல பதிப்புகள்  கண்ட இந்நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இது ஒரு உதாரணமே!

இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சிகள் `சிந்து சமவெளி நாகரீகம் என மொகஞ்சதரோ-ஹரப்பா ஆய்வுகளைக் கூறுகின்றன. திராவிட நாகரீகக் கூறுகள் அதில் தென்படுவதாகவும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால் அது `சரஸ்வதி நாகரீகம் என்றும் `வேதநாகரிகம் என்றும் கூறி மெய் போல் பொய் ஆய்வுகள் புனைவு நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. அதை நம்பவும் சிலர் உள்ளனரே!

இதுபோக பெரும்பாலான சுயமுன்னேற்ற நூல்கள் என்ற போர்வையில் மதவாத சிந்தனைகள் மிகநுட்பமாக இளைஞர்கள் ரத்தத்தில் வலுவாக ஊட்டச்சத்து என்ற மாயமுகமூடியோடு செலுத்தப்படுகிறதே!

ஆக உலகச் சூழலும், தேசச் சூழலும் தமிழகச் சூழலும் மிகவும் கவலை அளிப்பதாகவும், கடினமாகவும் மாறிப்போயுள்ளன.

தனிமனித வாழ்வின் வெற்றி, தோல்வி, பிரச்சனைகள், ஒழுக்கம் எதுவாயினும் சமூகம் அரசியல் எதுவாயினும், வரலாறு, தத்துவம், அறக்கோட்பாடு எதுவாயினும் எல்லா இடத்திலும் அறிவியல் பார்வை புறந்தள்ளப்பட்டு வெறும் குருட்டு நம்பிக்கையும் சுயலாபமும் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. சமூகச் சூழலில் நாம் இன்று சிங்காரவேலரை புதிய அறிவியல் கோணத்தில் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

 அரசு என்பதைப் பற்றி பொதுவான கருத்தில் உள்ள அம்சங்களை சிவில் சமுதாயம் என்ற பொதுவான கருத்துடன் பொருத்திப்பார்க்க வேண்டும். (இந்தப் பொருளில் சொல்லப்போனால் அரசு = அரசியல் சமுதாயம் + சிவில் சமுதாயம். பலவந்தத்தால் பாதுகாக்கப்படுகிற மேலாண்மைதான்) என்ற அந்தோனியோ கிராம்ஷியின் கூற்றை இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும்.

சிவில் சமூகத்தைக் கைப்பற்றுவதே எமது இறுதி இலக்கு என இந்துத்துவ தலைவர்கள் அடிக்கடி பிரகடனம் செய்வதையும், இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மதவாதிகள் சிவில் சமூகத்தின் மீது தங்களின் பழமைவாத நுகத்தடியை வலுவாக பிணைக்க முயலுவதையும் இங்கே நினைத்துப்பார்த்தால் நாம் பயணம் செய்ய வேண்டிய தூரமும் பரப்பும் தேவையும் அவசர அவசியமும் புலப்படும்.

 அரசியல் நடத்தவும் குடும்பம் நடத்தவும் அறிவியல் பார்வை தேவை என சிங்காரவேலர் சொன்னதின் ஆழமும் விரிவும் இப்போது துலக்கமாகிறது.
அந்த அறிவியல் பார்வையைப் பெற எது வழி என்பது இருக்கட்டும். முதலில் எவை எவை தடை என்பதை அறிந்தாக வேண்டும்.
நாம் முன்னரே குறிப்பிட்ட ரிச்சர்ட் டாக்ஃகின்ஸ் அதே கடிதத்தில் கூறுகிறார்:
ஏதாவது ஒன்றை நம்புவதற்கு மூன்று தவறான காரணங்களை ஏற்கக்கூடாது என்பதை எச்சரிக்க விரும்புகிறேன். அவை:
கூசயனவைடி - பாரம்பரியம்
ஹரவாடிசவைல - அதிகாரபீடம்
சுநஎநடயவடி -  அருள்வாக்கு என்றார்.

ஆம். பாரம்பரியமாகத் தொடர்வது என்பதாலோ - நம் முன்னோர்கள் சொன்னது என்பதற்காகவோ - எதையும் நம்பி விடுவதுதான் அறிவியல் பார்வையின் முதல் எதிரி. முதல் தடை.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண முயலுவதுதான் அறிவின் முதல்வாசல்.

இது பேசுவதற்கு சுலபமும். செவி தைக்கும் வார்த்தைகளால் துளைக்கப்படினும் கருத்துப்போருக்கு தயாரில்லாத சமூகம் அறிவின் மெய்யான தரிசனத்தை ஒருபோதும் காணமுடியாது. ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக நம்பப்படுகின்ற ஒரு கருத்தை மறுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆயினும் மாற்று இல்லை.

அறிவியல் கூட கேள்விகேட்கப்படாமல் விமர்சிக்கப்படாமல் வளரவே இல்லை. அணு என்பது பிரிக்க முடியாதது என்ற கருத்தை மறுத்ததின் பலன்தான் மின்னணுயுகம், குவாண்டம் தியரி இன்று கடவுள் துகள்கள். அது விளைவிக்கப்போகும் மாற்றம் எவ்வளவோ! யாமறியோம்..

அடுத்ததாக அதிகாரபீடம் சொல்வது என்பதால் ஏற்பதே பெரும் தடை. அரசகட்டளை, ஆண்டவன் கட்டளை, உயர் பொறுப்பில் இருப்பவர் சொல்லி விட்டார் என்பதாலேயே அது உண்மையாகிவிடாது. அதனைக் கேள்விகேட்க வேண்டும். `அணு உலை பாதுகாப்பானது என அரசு சொல்கிறது. அப்துல்கலாம் சொல்கிறார் என்பதால் அப்படியே ஏற்க வேண்டுமா? கேள்வி கேட்கக் கூடாதா? கலிலியோ, புருனோ, கோப்பர்நிகஸ், டார்வின் என பலரும் மத அதிகார பீடத்தின் கருத்துகளை எதிர்த்துத்தான் புதிய கருத்துகளை முன்வைத்தனர். அறிவியல் வளர்ச்சியின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் சரி, சமூக சீர்திருத்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் சரி, ஜனநாயக வரலாற்றை ஆராயினும் சரி அதிகார பீடத்தை கேள்விக்குள்ளாக்காமல் புதியன பிறக்கவில்லை.

மூன்றாவதாக அருள்வாக்கு, ஞானதிருஷ்டியில் உணர்ந்தது. உள்ளுணர்வால் அறிந்தேன் என்றெல்லாம் சொல்லுவதை மீற வேண்டும். கேள்வி கேட்க வேண்டும்.இதற்கு விளக்கம் தேவையில்லை. தினசரி சாமியார்களிடம் ஏமாறுபவர்களே சாட்சி. இன்று இணையத்தில் கண்டெடுத்த செய்தி என்பதாலேயே ஒரு செய்தி உண்மையாகிவிடாது. உதாரணமாக தாஜ்மகால் வரலாற்றை கூகுளில் தேடினால் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் குவியும். ஆனால் ஒன்றிரண்டைத் தவிர பெரும்பான்மை இந்துத்துவ வரலாற்று புனைவாளர்களால் இட்டுக்கட்டப்பட்ட கதையாகவே இருக்கும். 98 கட்டுரைகள் ஒரே மாதிரி சொல்வதால் அதை உண்மை என ஏற்க முடியுமா?

ஆக அறிவியல் பார்வை என்பதை சமூகத்துக்கு ஊட்ட இன்றைக்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. அதிலும் ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் விரிக்கும் மாய வலைகளில் சிக்காமல் அறிவியல் பார்வையை பெறுவது சவாலான பணியே.

இப்போது மீண்டும் அந்தோணியா கிராம்சி கூறியதை மீண்டும் கூறல் தவறல்ல. அரசியல் சமுதாயமும் சிவில் சமுதாயமும் எப்படி உள்ளது என்கிற பார்வை தேவை.

தெளிவான அரசியல் இல்லாத சமூக சீர்திருத்தத்தால் பிற்போக்குத் தனங்களின் கை வலுப்படுவதை தடுக்கவே இயலாது. எனவே முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் உள்ளடக்கிய அரசியல் தேவை. அதுவே அறிவியல் பார்வையை மேம்படுத்தும் - சமூகத்தை மீட்டெடுக்கும்.

எப்போதும் ஆளும் வர்க்கம் தன் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் பாதுகாக்க மக்களை அறியாமையிலும் போதையிலும் அர்த்தமற்ற கனவுகளிலும் திழைக்கச் செய்திடும். அதற்கொப்பவே அதன் கருத்துப் பிரச்சாரம் இருக்கும். கல்வி தொடங்கி ஊடகம் வரை அதன் கைக்கருவிதான்.அறிவியலை அதற்குப் பயன்படுத்தவே செய்யும். உலகமயயுகத்தில் மிகநுட்பமாகச் செய்கிறது. ஆனால் பாட்டாளி மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் அறிவியலைத் தங்கள் ஆயுதமாகக் கொள்ளவேண்டாமா?

இச்சூழலில் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்திட அறிவியல் பார்வையை ஊட்டும் பணி என்பதை அரசியல் போராட்டத்தில் இருந்து தனித்து பிரித்துப் பார்க்க இயலாது, கூடாது. அறிவியலைப் பரப்புவது அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதிதான் என செந்தில் பாபு முன் மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்.

இதையே வேறுவார்த்தைகளில் சொல்வதானால் மார்க்சிய தத்துவ ரீதியில் சமூகத்தையும் அரசியலையும் அணுகும்போதே சமூகத்தில் அறிவியல் பார்வை ஓங்கி உயரும்.

 மார்க்சியம் கூறும் பொருள்முதல்வாதமும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் அருளிச் சென்றதல்ல. மார்க்சும், ஏங்கெல்சும் துவக்கிவைத்ததுதான். அது முழுமையும் நிறைவும் அடைந்துவிட்ட அறுதிப்பொருள் (குளைநன ஞசடினரஉவ) அல்ல. இதில் ஏங்கல்ஸ் மிகத் தெளிவாக இருந்தார். ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கொப்ப முரணியியக்கப் பொருளியலும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்தத் திசைவழியில் முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. ஆனால் இந்தப் புலத்தின் முக்கியத்துவத்திற்கும் தேவைக்கும் ஈடுகொடுக்கும் அளவுகளில் நடைபெறவில்லை என்றுதான் கூறவேண்டும் என `புரட்சியில் பகுத்தறிவு நூலில் ப.கு. ராஜன் கூறுவதை மனதில் பதிப்பது அவசியம்.

இன்றைய சூழலில் - உலகமயச் சூழலில் செய்ய வேண்டியது என்ன? செய்யத் தவறினால் என்ன நேரும்? இதுதான் உடனடிக் கேள்வியும் கடமையுமாகும்.

 சோசலிசத்திற்கான பயணத்தில் நொடிப்பொழுது கண்ணயர்ந்தாலும் பாசிசம் எனும் கொடுந்தண்டனை நமக்கு வந்து சேரும் என்றார் பிரெஞ்சு வரலாற்றாசிரியரும் சோசலிஸ்டுமான டேனியல் தெரின். இதன் பொருள் பாசிசம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயல்பு. எப்போதெல்லாம் சமூக ஜனநாயக சக்திகள் பலவீனமடைகின்றனவோ அல்லது பின்தங்குகின்றனவோ அப்போதெல்லாம் பாசிசம் வெறியோடு தலைதூக்கும் என்று விளக்கமளித்த அயஜஸ் அஹமத் மேலும் தொடர்கிறார்.

 முதலாளித்துவம் அடுத்தகட்டமான சோசலிசத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை, காட்டுமிராண்டித்தனத்திற்கும் இட்டுச்செல்லலாம் என்ற மார்க்சின் புகழ்மிக்க போதனையைத்தான் தெரின் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆம். இது வெறும் அபாயச் சங்கொலி அல்ல, முற்போக்காளர்கள் மீது வரலாறு சுமத்தும் அவசரக் கட்டளையுமாகும். சிங்காரவேலரை அறிவியல் பூர்வமாக அணுகுகிற யாரும் இந்த எச்சரிக்கையைப் புறந்தள்ள இயலாது. என்ன செய்ய வேண்டும்?

 இன்றைக்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் களச் சூழலை ஆய்வு செய்து முதலாளித்துவத்தை கடந்து செல்வதற்கான முடிவை சிந்தித்து எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயல்படாவிட்டால் அதிகரித்துவரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் பயங்கரவாதம், மதத்தீவிரவாதம், இனக்குழுவாதம் பிற அடிப்படை வாதங்கள் போன்ற அழிவுத்தன்மையுடன் கூடிய வீண்வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். நாம் எட்ட வேண்டிய இறுதி லட்சியத்தைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அது புரட்சிகரத்தன்மை கொண்டதாகவும் சமூகக் கட்டுமானத்தை மறு உருவாக்கம் செய்வதாகவும் இருக்கும். மக்கள் தங்கள் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சுதந்திரம் அளிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். அந்த லட்சியத்தை நாம் எட்டவில்லை என்றால் பொருளற்ற, குறிக்கோளற்ற, முடிவற்ற வன்முறைச் சுழற்சியே நம் கண்முன் மற்றொரு இறுதிக்கட்டமாக இருக்கும். அது மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாகக் குறிப்பிட்ட நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான ஒரே நம்பிக்கை (வேறு எதனையும் தவிர) மார்க்சியம்தான் என்று குறிப்பிடலாம். இது இன்றைய மார்க்சிய சிந்தனையாளர் சீத்தாராம் யெச்சூரியின் எச்சரிக்கையும் வழிகாட்டலுமாகும்.

இப்போது மீண்டும் ஒரு கேள்வியை முன்வைத்து அமைகிறேன்.

சிங்காரவேலர் சிந்தனைகளை அனைத்து தமிழர்களிடமும் கொண்டு சேர்த்துவிட்டோமா? சிங்காரவேலர் சிந்தனைகளை இன்றைய தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப மேம்படுத்தி முன்னெடுத்து செல்ல நாம் என்ன செய்துள்ளோம்?

 ஆயிரம் ஆயிரம் அறிவியல் கருத்துகளை
முத்து முத்தாக
ஓயாமல் கொட்டிய சிங்காரவேலரை
விடுமுறை போடாத
காலம் அறியும்
வீடுதோறும் இருக்கும்
தமிழர்கள் அறிய வேண்டாமா?


வாய்ப்பளித்தவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி! நன்றி! நன்றி!
சு.பொ. அகத்தியலிங்கம்