கள்ளிப்பாலுக்குத் தப்பிய சோவியத் சிசு

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி 48

இக்கட்டுரை 48 வது கட்டுரையாகக் கொள்க




கள்ளிப்பாலுக்குத் தப்பிய சோவியத் சிசு

சு.பொ.அகத்தியலிங்கம் .






தேசிய இனங்களின் சிறைச்சாலை எனும் முந்தைய நிலை மாறி தேசிய இனங்களுக்கு பிரிந்துபோகும் உரிமை வழங்கப்பட்டது ;பின்லந்து பிரிந்து போனது



பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன ? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன ? இவற்றை புரிந்து கொள்ள ; நடந்த முக்கியமான நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி விவரிக்கிறது .”

ஆமாம் , தவாரிஷ் ! [தோழனே] உனக்கு தேவையானவை எல்லாவற்றையும் புரட்சி உனக்கு உரிய காலத்தில் அளிக்கும்.ஆனால் இன்று இரவல்ல . இங்கிருந்து அதாவது மாரிக்கால அரன்மனையிலிருந்து ஏதேனும் வெளியே போனால் , நாம் சமூகவிரோதிகள் ,கொள்ளைக்காரர்கள் என்றே அழைக்கப்படுவோம் ; உண்மையான சோஷலிஸ்ட்டுகள் என்கிற பெயரை எடுக்கமாட்டோம். நாம் புரட்சி செய்ய வரவில்லை ; கொள்ளையிடவே வந்தோம் என பகைவர்கள் எள்ளி நகையாடுவார்கள் . ஆகவே ஒரு துரும்பைக் கூட நாம் எடுத்துச் செல்லக்கூடாது . இனி இது மக்களின் சொத்து ; புரட்சியின் கெளரவத்தை உயர்த்திப் பிடிக்க இவற்றைப் பாதுகாப்போம்.” என்றார் காவலுக்கு நின்ற தொழிலாளி ; இது 1917 நவம்பர் 6 இரவு நடந்தது .

புரட்சிகர ஒழுக்கத்தை அங்கே நிலைநாட்டியது தொழிலாளி வர்க்கம்.


நகரத்தில் மட்டுமல்ல சைபீரிய சுரங்கங்களிலும் புரட்சியின் வீச்சைக் காண முடிந்தது . கொடும் குற்றங்கள் காரணமாக ச்செர்ம் நகர் கடும் உழைப்புத் தண்டனை முகாமிலிருந்த தொழிலாளர்களிடையே புரட்சியின் உயிர்துடிப்பு அப்படியே இருந்தது .


. ரைம்ஸ் வில்லியம்ஸ் சொல்லுகிறார் , “ ஒரு கை எங்கள் தோள்களைத் தொட்டது . திரும்பினோம் . இரண்டு முரட்டுச் சுரங்கத் தொழிலாளர் முகங்களை எதிர்கொண்டோம் . நாங்கள் ச்செர்ம் நகரின் கமிஸார்கள் என்றனர்.”

அங்கு சுரங்கத் தொழிலாளர்களோடு உரையாடிய ரைம்ஸ் அவர்கள் கூறியவற்றை தொக்குக்கிறார் ;


நாங்கள் விரும்புவது எங்களுடைய விடுதலையை மட்டுமல்ல ;உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர் விடுதலையையும்கூட . அவர்கள் விடுதலை அடையாவிட்டால் ; சுரங்கங்களுக்குச் சொந்தக்காரர் ஆகவும் - அவற்றை நாங்களே நடத்தவும் உள்ள சுதந்திரத்தை எங்களால் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள முடியாது . உலக ஏகாதிபத்தியவாதிகளின் பேராசை பிடித்த கைகள் கடல்களுக்கு அப்பாலிருந்து ஏற்கெனவே நம்மை நோக்கி நீட்டப்படுகிறது . உலகத் தொழிலாளர்களின் கரங்கள்தாம் அந்தப் பிடிகளை நமது குரல்வளையிலிருந்து அகற்ற முடியும்.”


புரட்சி நடந்து ஆறு மாதம் கூட நிறைவு பெறவில்லை ; ஆனால் கடைக்கோடிவரை வேர்விட்டு ஓங்கி எழுந்த சர்வதேச உணர்வு புரட்சியின் கொடையன்றி வேறென்ன ?

சோவியத் புரட்சியை உலகிலுள்ள பலர் எழுதினர் .ஐந்து அமெரிக்க பத்திரிகையாளர்கள் நேரில் கண்டு செய்தி தந்தனர் . .ரைமஸ் எழுதிய நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி , ஜான் ரீடு எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என இவ்விரண்டு நூல்களும் முக்கியமானவை .இது குறித்து லெனின் சொன்ன வரிகளையே ஆரம்பத்தில் பார்த்தோம். இவற்றை அவசியம் படியுங்கள் .

நாற்பது கோடி ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் விவசாயிகள் கைக்கு மாறின . உரிமைகள் வழங்கப்பட்டன . அதே சமயம் ரொட்டிக்கும் இறச்சிக்கும் தற்காலிகத் தட்டுப்பாட்டை தோற்றோடிய நிலப்பிரபுக்களும் , பிற்போக்காளர்களும் உருவாக்கினர் .மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள் .

தேசிய இனங்களின் சிறைச்சாலை எனும் முந்தைய நிலை மாறி - தேசிய இனங்களுக்கு பிரிந்துபோகும் உரிமை வழங்கப்பட்டது ;பின்லந்து பிரிந்து போனது யுத்தத்தை தவிர்க்க ஜெர்மனியின் மோசமான நிபந்தனைகளை ஏற்று சமரசம் செய்யவேண்டிய நிலையிலும் லெனின் சமாதானத்துக்காக ஏற்றார் . அதே சமயம் லெனின் எச்சரித்தார் ;


ஏகாதிபத்திய அரசுகள் மீண்டும் சோவியத் குடியரசு மீது தாக்குதல்களைத் தொடுக்கும் . இது தவிர்க்க முடியாது .ஆகவே தொழிலாளிகள் விவசாயிகள் கட்டுப்பாட்டைப் பலப்படுத்த வேண்டும். சோஷலிச நாட்டைத் தனலங் கருதாது பாதுகாப்பதற்குப் பொதுமக்களைத் தயார்படுத்த வேண்டும். செஞ்சேனையை வலுவாக உருவாக்க வேண்டும் .சகலருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் .” என்றார்.


உணவுக்காக நடத்தப்படும் போராட்டம் சோஷலிசத்திற்காக நடத்தப்படும் போராட்டமே .” என்றார் . புரட்சியைக் காப்பாற்ற தொழிலாளி வர்க்கத்தால்தான் முடியும் என லெனின் நம்பினார் . எடுத்துச் சொன்னார் . அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென வரையறுத்தார் .

சோஷலிசத்திற்கு விசுவாசமாக நடந்துகொள்கிற ஆயிரக் கணக்கான தொழிலாளர்களே நமக்குத் தேவை . அவர்கள் லஞ்சத்திற்குப் பல்லைக்காட்டிச் சரண்டையாதவர்களாக இருக்க வேண்டும் ;குலாக்குகள் ,கொள்ளைலாபக்காரர்கள் ,கொள்ளைக்காரர்கள் ,சீர்குலைப்பவர்கள் முதலியவர்களை எதிர்த்து இரும்பு போன்ற சக்தியைக் காட்டும் ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும் .” என்றார்.





உலகைத் திருப்பிப் பார்க்கவைத்த – முற்றிலும் மாறுபட்ட புதிய
சகாப்தத்தை வார்த்தெடுத்த சோவியத் புரட்சி பலரின் கோபப்பார்வைக்கும் இலக்காகியது . மகுடம் இழந்த மன்னர் , சொத்தை இழந்த பெருமுதலாளிகள் ,நிலத்தை இழந்த நிலப்பிரபுக்கள் , இவர்களோடு இராணுவத் தளபதிகள் ,மென்ஷ்விக்குகள் , சீர்குலைவாளர்கள் அனைவரும் ஆயுதம் தாங்கி தெருவில் இறங்கினார்கள் .பிரட்டன் ,பிரான்ஸ் ,அமெரிக்கா போன்ற நாடுகள் உதவின .1918 கோடைமாதம் 18 நாடுகள் முற்றுகையிட்டன.லெனின் எச்சரித்தது நடந்தது .

இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி வெற்றியா ,சாவா என்பதுதான் .இளம் சோவியத் அரசைக் காக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் துணியுங்கள் .” என லெனின் விடுத்த அறைகூவல் மக்களைக் கவ்விப் பிடித்தது .பேராற்றலோடு எழுந்தனர் . மக்களைத் திரட்ட ஆலைவாயில் தோறும் லெனின் சென்றார் . அப்போதுதான் அவர் சுடப்பட்டார் . உயிர் தப்பினார் ஆயினும் அவர் மரணத்தை இது விரைவுபடுத்தியது .

சோவியத் யூனியன் மீது கைவைக்காதே என உலகம் முழுவதும் தொழிலாளிவர்க்கம் போராடியது .பிரட்டனில் ஆயுதங்களைக் கப்பலில் ஏற்ற மறுத்து தொழிலாளர் போராடினர் . எல்லாமும் சேர்ந்து 1922 முற்றுகை முறியடிக்கப்பட்டது .


இதற்கிடையில் கூடிய கட்சி மாநாடு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி என்பதை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி [ போல்ஷ்விக்] என மாற்றிக்கொண்டது .

ஜார் மன்னரையும் அவர் குடும்பத்தையும் யூரல் பகுதியில் எகடிரின்பர்க் எனுமிடத்தில் சிறைவைத்திருந்தார் லெனின் . ஆனால் பாதுகாப்பு ஆபத்து கருதி யூரல் பகுதி தொழிலாளர் ,விவசாயி செஞ்சேனைப் பிரிவு வேறு முடிவு எடுத்தது . விபரம் வருமாறு :

யூரலின் சிவப்புத் தலைநகரான எகடரின்பர்க்கை செக்கோஸ்லாவால் வெறிக்கும்பல் மிரட்டி வருகிறது . மகுடம் தரித்த இக்கொலைகாரன் தலைமறவானால் மக்கள்நீதிமன்றத்திற்கு வராமல் ஒழிந்துவிடக்கூடும் ;இவற்றை மனதிற்கொண்டு மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதென்று நிர்வாகக்குழு முடிவெடுத்தது .ஏராளமான கொலைக் குற்றங்களைச் செய்த முன்னாள் மன்னர் ஜார் நிக்கோலாய் ரோமோனோவை சுட்டுத் தள்ளுவது என்கிற முடிவு 1918 ஜூலை 16 இரவு நிறைவேற்றப்பட்டது .ரோமோமோவ் குடும்பம் பாதுகாப்பான வேரொரு இடத்திற்கு மாற்றப்பட்டது.” ஜாரைக் கொன்றது .குடும்பத்தைப் பழிவாங்கவில்லை .


மகத்தான ரஷ்யப் புரட்சியின் தளநாயகர் லெனின் 1924 ஜனவரி 21 ஆம் நாள் மறைந்தார் . சோவியத் சிசுவை கள்ளிப்பாலில் சாகடிக்க முயன்ற அனைத்து சதிகளையும் முறியடித்து சோஷலிச சோவியத்தை ஓர் முன்னுதாரணமாய் அவர் படைத்து அழியாப் புகழ் சூட்டிக்கொண்டார் .

புரட்சி தொடரும் …



தேசிய இனங்களின் சிறைச்சாலை எனும் முந்தைய நிலை மாறி - தேசிய இனங்களுக்கு பிரிந்துபோகும் உரிமை வழங்கப்பட்டது ;பின்லந்து பிரிந்து போனது




ஒடுக்குமுறைக்கு இடமில்லா புத்துலகம் காண.....

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி - 52









ஒடுக்குமுறைக்கு இடமில்லா 

 புத்துலகம் காண.....


சு.பொ.அகத்தியலிங்கம்




“ நீங்கள் பூக்களை வெட்டி எறிந்து விடலாம் ஆனால் வசந்தத்தை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது”.”என்கிற நம்பிக்கையோடு போராட்ட அலைகள் மீண்டும் மீண்டும் எழும் .




என்னதான் நடந்தாலும் தன்னைச் சூழந்திருக்கும் இசை ஒரு போதும் நிற்பதில்லை என வாழ்வெனும் மரம் அறிந்தே இருக்கிறது .
உயிர் எவ்வளவு பலியாயினும் ; இரத்தம் எவ்வளவு கொட்டப்படுவதாயினும் ; காற்று அவர்களுக்கு உயிரூட்டிக்கொண்டிருக்கும் வரை ; நிலம் அவர்களை பண்படுத்தி நேசிக்கும் வரை; அந்த இசை ஆணையும் பெண்ணையும் ஆடச் செய்துகொண்டே இருக்கும் .”


இருபதாம் நூற்றாண்டும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கமும் மாபெரும் நிகழ்வுகளின் தொடர்ச்சியால் மானுட சரித்திரத்தை மாற்றி எழுதிக்கொண்டிருக்கின்றன ; cஒன்றிரண்டை பார்ப்போமா ?



எங்களைச் சுற்றிலும் பயங்கரமான பனிமூட்டம் .காற்று சுழன்றடித்தது .மலைமேல் நாங்கள் பாதித்தூரம் சென்றவுடன் மழை பெய்யத் தொடங்கியது . நாங்கள் உயரேசெல்லச் செல்ல புயற் காற்றோடு பயங்கரமான ஆலங்கட்டி மழையில் சிக்கிக்கொண்டோம் .காற்றழுத்தம் குறைந்து கொண்டே வந்ததால் எங்களால் மூச்சுவிடக்கூட முடியவில்லை .பேசுவது முற்றிலும் சாத்தியமற்றதாக இருந்தது ; எங்கள் மூச்சுக்காற்றும்கூட உறைந்து போகிற அளவுக்கு குளிர் அதிகமாக இருந்தால், எங்கள் கைகளும் உதடுகளும் நீலம்பாரித்துப் போயின .ஓய்வெடுப்பதற்காகவோ மலம் கழிப்பதற்காகவோ கீழே உட்கார்ந்தவர்கள் அப்படியே உறைந்துபோய் அப்படியே இறந்து போனார்கள் . …. நள்ளிரவில் நாங்கள் மற்றொரு சிகரத்தின் மீது ஏறத்தொடங்கினோம் . தொடர்ந்து மழை ,பனி ,சூறைக்காற்று நூற்றுக்கணக்கான எங்கள் தோழர்கள் அங்கேயே இறந்து போனார்கள் . அந்தப் பாதை நெடுக எங்கள் தோழர்களை எழுந்து நிற்கச் செய்வதற்காக நாங்கள் குனிந்த வண்ணம் இருந்தோம் . ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்து போய்விட்டார்கள் என்பது அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது .”
நெடும்பயணம் என வரலாற்றில் சிகப்பு எழுத்துகளால் பொறிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹூபேய் மாகாணத்தனைவர் டுங் பிவூ எழுதிய குறிப்புதான் மேலே உள்ளவை.


இப்படி நிரந்தரமாகப் பனி மூடியிருந்த 5 மலைத் தொடர்கள் உள்ளிட்ட 18 மலைத் தொடர்களையும், 24 ஆறுகளையும், 62 மாநகரங்கள் மற்றும் நகரங்களையும், ஆயிரக்கணக்கான கிராமங்களையும் அவர்கள் கடந்து சென்றனர்.1934 அக்டோபர் 16 தொடங்கினர் ; 1935 அக்டோபர் 21 வரை ஓராண்டுக்கு மேலாக நெடும்பயணம் மேற்கொண்டனர் . சீனத்தில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காக்கிய இப்பயணம் மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மேற்கொள்ளப்பட்டது . தெற்கே ஜியாங்க்ஸியிலிருந்து மூன்று படைப் பிரிவுகளாக 2,30,000 செஞ்சேனை வீரர்களுடன் தொடங்கிய இந்த நெடும்பயணம் மேற்கு வழியாக வடக்கே ஷென்ஸியை அடைந்தது .துயரம் நிரம்பிய ஒன்றாக இருந்தது. படைவீரர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்த பயணத்தின்போதே உயிரிழந்தனர். பயண தூரம் 9000 கி.மீ . சீனப்பெருஞ்சுவரைப் போல் நெடும்பயணமும் சீனாவின் பேராற்றலின் சாட்சியானது .1911 ல் தொடங்கியது சீனப் புரட்சி ; இந்த நெடும் பயணம் உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து 1949 அக்டோபர் முதல் தேதி சீன வானில் சிவப்பு நட்சத்திரமாய் எழுந்தது.


வியட்நாம் வரலாற்றில் இன்னொரு காவியம் எனில் மிகை அல்ல . ஹோசிமின் தலைமையில்1945 செப்டம்பர் 2 ல் வடக்கு வியட்நாம் விடுதலையானது .ஆனால் தெற்கிலுள்ள சொந்த சகோதரர்களுடன் இணைய1976 வரை நடத்திய நெடும் போராட்டம் சொல்லில் அடங்காது. அங்குலம் அங்குலாமாய் விஷகுண்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் துளைத்தபோதும்; வெறுங்காலுடன் வியட்நாமிய விவசாயி சாதாரண துப்பாக்கியுடன் நின்று போராடி அமெரிக்கவை பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கவைத்ததை உலகம் கண்டது . “உன் பெயரும் என் பெயரும் வியட்நாம் வியட்நாம்.” என உலகெங்கும் உரக்க ஒலித்தது. ஒருமைப்பாடு கீதம் . அமெரிக்க ஏகாதிபத்தியம் அம்மணமாய் உலக அரங்கில் நின்றது இன்னும் பல நூற்றாண்டாயினும் இக்காட்சி வரலாற்றில் நிலைக்கும் . . 1976 ஜூலையில் இரு வியட்நாமும் இணைந்தது .




சுதந்திரத்தின் விலை அதிகம் .அது இல்லாமல் வாழ்வதற்கு நாம் உடன்பட வேண்டும் அல்லது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றார் ஹொஸே மார்த்தி . மேலும் சொன்னார் ,” ஏகாதிபத்தியங்கள் லத்தின் அமெரிக்க நாடுகளைச் சூறையாடியும் ; அங்குள்ள பழங்குடியினரை கொன்றுகுவித்தும் ; அடிமையாக்கியும் ; அவர்கள் இரத்தத்திலும் வியர்வையிலும் செல்வம் குவித்தது . இந்த ஏகாதிபத்தியத்தை முறியடிக்காமல் கியூபா சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது”””.”


புரட்சியாளர் ஹொஸே மார்த்தி மற்றும் சைமன் பொலிவார் அடிச்சுவட்டில் காஸ்ட்ரோ, சே குவேரா பயணம் தொடர்ந்தனர் . அமெரிக்காவின் மூக்கின் அருகிலுள்ள ஒரு குட்டித் தீவான கியூபா 1959 ஜனவரி 1 அன்று சர்வாதிகாரி பாடிஸ்டா. ஆட்சிக்கு இறுதி மரண அடி கொடுத்தது. ஆனால் அதற்கு 2340 நாட்கள் முன்னரே 1953 ஜூலை 26 அன்றே புரட்சி தொடங்கிவிட்டது .அன்றுதான் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா தலைமையில் மன்கடா ராணுவ நிலையத்தை புயலாகத் தாக்கினார்கள் . கியூபா இன்னும் அமெரிக்காவின் அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டே இருக்கிறது .

வெட்டுண்ட ரத்த நாளங்களாய்த் துடிக்கும் லத்தின் அமெரிக்க சோகம்; ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற கொடூரச் சுரண்டலின் அடக்குமுறையின் ஜீவனுள்ள சாட்சியாகும்

லத்தின் அமெரிக்காவை ஆக்கிரமித்துச் சூறையாடுவதில் வாளும் சிலுவையும் இணைந்தே செயல்பட்டன என்பார் எடுவர்டோ காலியானோ . இக்கட்டுரையின் முதல் பத்தியும் அவரது வரிகளே !

லத்தின் அமெரிக்ககவிஞர் எர்னெஸ்ட்டோ கார்டெனல் மார்ட்டினென் கவிதைகள் துயர வரலாற்றின் உயிர்முடிச்சை சொல்லும் .


{வலையில் கண்டெடுதத்படி }


என் முனகல்களைக் கேளும்என் ஆட்சேபத்தைக் கேளும்ஏனெனில் நீர் சர்வாதிகாரிகளுடன் சினேகமான கடவுளோஅவர்களது அரசியலை ஆதரிப்பவரோஅவர்களது பிரசாராத்தாற் பாதிக்கப்பட்டவரோ அல்ல,நீர் சண்டியர்களுடன் இணங்குபவரும் அல்லபத்திரிகை அறிக்கைகளிலோ நேர்மை இல்லையுத்த உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டேதம் உரைகளிற் சமாதானம் பற்றிப் பேசுகின்றனர்சமாதான மாநாடுகளிற் பேசிக்கொண்டேஇரகசியமாகப் போருக்கு ஆயத்தமாகின்றனர்இரவிரவாக அவர்களது பொய் சொல்லும் வானொலி இரையும்அவர்களது மேசைகள் மீது பாதகத் திட்டங்களும்கொடிய நடவடிக்கைகளும் அடுக்கப்பட்டுள்ளனஆயினும் நீர் என்னை அவர்களின் திட்டங்களினின்று காப்பீர்அவர்கள் துப்பாக்கி வாய்களாற் பேசுவர்அவர்களது ஒளிரும் நாக்குகள் துப்பாக்கிச் சனியன்கள்அவர்களது அரசியலை முறியடியும்அவர்களது அறிக்கைகளைக் குழப்பும்அவர்களது வேலைத்திட்டத்தை கவிழும்எச்சரிக்கைச் சங்கின் வேளையில் நீர் என்னுடனிருப்பீர்குண்டு விழும் நாளில் நீர் என் புகலிடமாயிருப்பீர்அவர்களது பொய்யான விளம்பரங்களையும்அரசியற் பிரச்சாரத்தையும் நம்பாதவர்களை ஆசீர்வதிப்பீர்கவச வாகனங்கள் போன்றுஉம் அன்பினாற் சூழுவீர். “



5வது தோத்திரம்” எனத் தலைப்பிட்ட கவிதை
! தேவனே என் சொற்களைக் கேளும்
அவர்களது பேச்சுக்களிலோ
ஓ தேவனே அவர்களை அழியும்

ஆம் லத்தின் அமெரிக்கா நம்பிக்கை தளராமல் மீண்டும் மீண்டும் போராடி எழுந்து கொண்டே இருக்கிறது . ஒரு கையில் பைபிளும் மறுகையில் துப்பாக்கியுமாய் போராடுவதும் சில இடங்களில் நிகழ்கிறது .

செனகல் நாட்டுக் கவிஞன் லியோபோல்டு சிடார் செங்கோர் கவிதையில் சீறுவான் ,

நமது கருத்த இரத்தத்தின்
பாடலை உற்றுக்கேள்
இழந்துபோன கிராமங்களின்
இடையிலுள்ள ஆப்பிரிக்காவின்
கருத்த உயிர்
துடிப்பை உற்றுக் கேள்


இன ஒடுக்கலுக்கெதிரான கறுப்பர்களின் குரல் நெல்சன் மாண்டேலா உருவில் சிலிர்த்தெழுந்தது ; 27 ஆண்டுகாலம் கடுஞ்சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டும் அக்குரலை அடக்க முடியவில்லை .இருப்புச் சிறையை உடைத்து வெளிப்பட்டது அக்கறுப்புச் சூரியன் . ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாய் தங்களின் விடுதலையை எழுத முனைந்தது ; ஆதே சமயம் ஏகாதிபத்தியம் பின்னிய சதிவலையில் சொந்த சகோதரச் சண்டையிலும் இனக்குழு மோதலிலும் இரத்தம் இன்னும் கசிந்து கொண்டே இருக்கிறது ; ஏகாதிபத்திய ஓநாய்கள் நக்கிச் சுவைத்துக் கொண்டிருக்கின்றன .


உலகின் ஏதேனும் ஒரு மூலையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணமே உள்ளது . 35 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப்படியே அதுவரை மனிதகுலம் பதினாலாயிரம் சிறிய ,பெரிய யுத்தங்களை கண்டுவிட்டது , நானூறு கோடி மக்களை இழந்துவிட்டது . இன்னும் யுத்தப் பிசாசின் பேய்ப்பசி அடங்கவில்லை . அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் யுத்தவியாபாரம் சூடுகுறையாமல் தொடர்கிறது .


சோவியத் தகர்வை - லெனின் சிலை வீழ்த்தப்பட்டதை ; பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை ஏகாதிபத்திய ஊடகங்கள் திருவிழாக் கொண்டாட்டமாய் திரும்பத்திரும்பக் காட்டிக் கூத்தாடின . கம்யூனிசம் புதைக்கப்பட்டுவிட்டதாய் முதலாளித்துவம் சாகாவரம் பெற்றுவிட்டதாய் தத்துவ பூசாரிகள் உடுக்கை அடித்தனர் .ஆனால் அவர்களின் கொண்டாட்டம் அற்ப ஆயுளில் முடிந்தது .மீள முடியாத பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் உண்மையான குரூர முகத்தைக் காட்டிவிட்டது .


2011 தொடங்கியது போராட்ட அலை .உலகின் பல நாடுகளில் பலவடிவம் எடுத்தது . வறுமை ,வேலையின்மை ,கடன் சுமை , ஒடுக்குமுறை ,போதை , பருவகால மாற்றங்கள் ,சுற்றுச் சூழல் சீரழிவு .என படையெடுக்கும் பிரச்சனைகளால் உலகம் மூச்சுத் திணறுகிறது . இதன் ஒரு வெடிப்பாய் வால்ஸ்ட்ரீட் எனப்படும் அமெரிக்க பங்குச் சந்தை கொள்ளையர் தெருவைக் கைப்பற்றும் போராட்டம் புதுவீச்சானது . “ நீங்கள் ஒரு சதம் ; நாங்கள் 99 சதம்.” என்கிற முழக்கம் பொருள்செறிவுடன் ஓங்கி ஒலித்தது .ஒரு சதம் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்காக 99 சதம் மக்கள் தண்டிக்கப்பட வேண்டுமா எனும் கேள்வி உலகெங்கும் விவாதத்துக்குள்ளாயின . போராட்டம் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கலாம் ஆனால் எழுப்பிய கேள்வியோ அடங்கவில்லை . அடங்கவும் செய்யாது .

நீங்கள் பூக்களை வெட்டி எறிந்து விடலாம் ஆனால் வசந்தத்தை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது”.”என்கிற நம்பிக்கையோடு போராட்ட அலைகள் மீண்டும் மீண்டும் எழும் .

முதலாளித்துவத்தின் நோய் முற்றிக்கொண்டே இருக்கிறது ; அது தன் லாபவெறியில் இயற்கையை ,மானுடத்தை கண்மூடித்தனமாகச் சூறையாட பைத்தியம் பிடித்தநிலையில் அலைகிறது .இதிலிருந்து தப்பிக்கும் மருந்து மார்க்ஸ் என்கிற சமூகவிஞ்ஞான மருத்துவனிடமே இருக்கிறது . ஆகவேதான் மீண்டும் மீண்டும் உலகமவனை கல்லறையிலிருந்து எழுப்பி கேட்டுக்கொண்டிருக்கிறது . 99 சதத்தின் வெற்றியும் 1 சதத்தின் வீழ்ச்சியும் வரலாற்றில் தவிர்க்க முடியாதது . தாமதமாகலாம் . ஆனால் தடுக்கவே இயலாது .

வரலாறு நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் . கிராஷியின் சிந்தனைகளை சுட்டி தோழர்கள் இ எம் எஸ்சும் கோவிந்தப்பிள்ளையும் எழுதுகின்றனர் ,

நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து ஐரோப்பியா முழுக்க எதிர்புரட்சிச் சூறாவளி ,அதை எதிர்கொண்டு 1830 களிலும் வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள் . அவற்றைத் தொடர்ந்து 1871ல் பாரிசில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கப் புரட்சி , அதன் கூடுதல் வடிவமாக 1917 ரஷ்யப் புரட்சி ,அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் வீசிய புரட்சிச் சூறாவளியும் நாலைய்ந்து ஆண்டுகளில் அதற்கு ஏற்பட்ட்த் தோல்வியும் ; உள்ளிட்ட இவைகளைத்தான் [இத்தாலிய கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் முசோலினி சிறையில் வாடிய] அண்டோனியா கிராம்ஷி ஆராய்ந்தார். இவை ஒவ்வொன்றும் உலகளாவிய புரட்சியின் பிரிக்க முடியாத பகுதிகளாகும் என்பது கிராம்ஷியின் மதிப்பீடு .புரட்சி - எதிர்புரட்சி -மீண்டும் ஒரு புரட்சி - முன்னேற்றம் என்ற நிகழ்ச்சிப்போக்கில் வரலாறு முன்னேறுவதாக கிராம்ஷி சுட்டிக்காட்டுகிறார்.”



மனித சமூகம் எந்த அளவு அதிக அளவுக்குச் சுரண்டப்படுகிறதோ - எந்த அளவு அசமத்துவமும் ,வேலையிமையும் பஞ்சமும் பட்டினியும் வாட்டி வதைக்கிறதோ - எந்த அளவு இயற்கை சூறையாடப்படுகிறதோ , பசுமை பலியிடப்படுகிறதோ - சுற்றுச் சூழல் நாசமாக்கப்படுகிறதோ- எந்த அளவு ஒடுக்குமுறை தாண்டவமாடுகிறதோ - மனித உரிமை மீறப்பட்டுகிறதோ அதன் எதிர்வினையாய் எழும் ஒவ்வொரு போராட்டத்திலும் மார்க்ஸும் எங்கெல்சும் லெனினும் புன்னகைக்கின்றனர் . சே குவேரா கண்சிமிட்டுகிறார் . அவர் சொல்லுவாரே …


வாழ்வுக்கும் மரணத்துக்கும் எதிரான போராட்டத்தில் எல்லைகளே கிடையாது . உலகின் ஒரு மூலையில் நடப்பது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது . ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு தேசத்தில் ஏதாவது ஒரு பகுதியில் கிடைத்த சிறுவெற்றியானாலும் அது நம் அனைவரின் வெற்றியே . அது போல் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போரில் யாருடைய தோல்வியாயினும் நம் அனைவரின் தோல்வியே ...”


மாசேதுங் எப்போதோ சொன்ன வார்த்தைகள் இப்போதும் தேவைப்படுகிறது …
நமது பழைய மனப்பாண்மைகளை எல்லாம் இன்று நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் . கேள்வி கேட்க முடியாதவற்றையும் கேள்வி கேட்க வேண்டும் . சிந்திக்க முடியாதவற்றையும் செய்யத் துணிய வேண்டும் .மத ஒடுக்குமுறை ,கல்வி சார்ந்த ஒடுக்குமுறை , அரசியல் ரீதியான ஒடுக்குமுறை , சமூக ஒடுக்குமுறை ,இலக்கிய ஒடுக்குமுறை , பொருளாதார ஒடுக்குமுறை ,பண்பாட்டு ஒடுக்குமுறை , அறிவுத்துறை சார்ந்த ஒடுக்குமுறை ,சர்வதேச ஒடுக்குமுறை ஆகிய எந்த ஒடுக்குமுறைக்கும் இனி உலகில் இடமில்லை [ மக்கள் ] ஜனநாயகம் எனும் மாபெரும் முழக்கத்தின் கீழ் இவை அனைத்தும் செய்யப்பட வேண்டும் “.” என்று அறைகூவி எழுவோம் .

புதியதோர் உலகம் செய்வோம்


புரட்சி தொடரும் ..
புரட்சி தொடர்கிறது
புரட்சி தொடர்ந்துகொண்டேயிருக்கும்


[ இத்தொடர் இத்துடன் முடிகிறது. எல்லாவற்றையும் சொல்லிவிடவில்லை . புரட்சிப் பெருந்தியின் போக்கில் அங்கும் இங்குமாய் சில வாய் மொண்டு குடித்திருகிறோம் . ஆயினும் வரலாற்றின் போக்கை சுட்டிய நிறைவோடு இத்தொடரை இப்போதைக்கு நிறைவு செய்கிறோம்]

நன்றி ; தீக்கதிர் ,30/10/2017. வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்