சொல் .25

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .25 [ 20/09/2018 ]  

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் எங்கேயும் இருப்பார்கள் .தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது அவர்கள் நினைப்பு .அவர்கள் மூக்கை நுழைக்காத விவகாரம் எதுவும் இருக்காது .

நீங்கள் கூப்பிடவே வேண்டாம் .அவகளாகவே வந்து ஆலோசனைகளை அள்ளிவீசுவார்கள் .ஒரு சிலர் மேலே ஒருபடி போய் தேரை இழுத்து தெருவில் விட்டதுபோல் சிக்கலில் மாட்டிவிடுவார்கள் .

இவர்களைச் சமாளிப்பது பெரும் கலை .முக தாட்ச்சண்யம் பார்க்காமல் கறாராக சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை .

உங்கள் ஆலோசனைக்கு நன்றி ! நாங்கள் என்ன செய்வது என விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.உங்கள் உதவி தேவைப்படும் போது நிச்சயம் கூப்பிடுவோம் .இப்படி உடைத்துச் சொல்லப்பழக வேண்டும் .

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் தெரிந்ததுபோல் நடப்பதே சிக்கல் என உணர்வோம்.உணர்த்துவோம்.

 .

சொல்.24

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .24 [ 19/09/2018 ]

அவர் ரொம்ப தங்கமானவர் . இருக்கிற இடம் தெரியாது .யார் வம்பு தும்பிற்கும் போகமாட்டார் . இப்படி சிலரைப் பற்றி சொல்லுவார்கள் .

அவர் வீடடங்கி இருக்கமாட்டார் . ஊரு வேலையெல்லாம் இவர் தலைமேல்தான் .இப்படி சிலரைப் பற்றி கூறுவர் .

பின்னதாக இருக்க விருப்பமில்லையா பரவாயில்லை . நிச்சயம் முன்னதாக இருக்காதீர்கள். !

பெருநகரில் பெரும்பாலான அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெறும் இயந்திரமாகிக்கொண்டிருக்கிறது.

வீட்டுக்கும் வெறும்கூட்டுக்கும் வித்தியாசம் உண்டு .குடியிருப்பென்பது வெறுமே உண்டு உறங்கும் மடமல்ல .உயிரும் உணர்வும் உலாவும் வாழிடம். இதனை மனதில் நிறுத்துங்கள் !

அண்டை அயலாரோடு பழகுங்கள் !நட்பாய் இருங்கள் ! சுற்றி நடப்பதென்ன என என்று உற்று நோக்குங்கள் ! அநீதிக்கு எதிராய் முணுமுணுக்கவாவது செய்யுங்கள் !நீங்கள் ஒரு மனிதர் இயந்திரமல்ல …

 .

சொல்.23.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .23 [ 18/09/2018 ]

நண்பர் ஒருவர் சொன்னார் , “ நாங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை இரவு உணவின் போது தொலைகாட்சியை ,அலை பேசியை நிறுத்திவிட்டு ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிடப் போகிறோம் .”

வேடிக்கைக்காகச் சொன்னாரோ , மெய்யாகச் சொன்னாரோ நான் அறியேன் . உரையாடல் இல்லாமல் குடும்பத்தில் வாழ்க்கை இயந்திரமாகிவிட்டது என்பது உண்மையே .

ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் ஏதேனும் அவசியத் தேவையைக் கேட்பதைத் தவிர வேறு என்ன உரையாடல் நிகழ்கிறது ? பார்த்த சினிமா ,கேட்ட பாடல் , சுற்றி  நிகழ்பவை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் உரையாடல் வீட்டில் நடக்கிறதா ?

தொலைகாட்சியும் ,அலைபேசியும் இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாததுதான் .ஆயினும் மனம்விட்டு உரையாடுவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை ,புரிதலை இழக்கலாமா ?

சாப்பிடும் போது பேசக்கூடாது என்கிற பழைய பழக்கத்தை துடைத் தெறியுங்கள் ! பேசிக்கொண்டே உற்சாகமாக கூடிச்சாப்பிடப் பழகுங்கள் !

வீட்டுக்குள் உரையாடல் உற்சாகமாக நடக்கட்டும் அது பல சிக்கலின் முடிச்சுகளை அறுத்துவிடும் .சரிதானே !

                                  

 .

சொல் .22

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .22 [ 17/09/2018 ]

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் முக்கியமான நிகழ்வே ! ஆனால் திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை .

திருமணம் வேண்டுமா .வேண்டாமா என் முடிவெடுக்கிற உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு .

குழந்தை பேறு குடும்ப வாழ்வில் மிக காத்திரமானதே ஐயமில்லை . ஆனால் குழந்தை இல்லை எனில் அது பிழையோ முழுமையற்ற வாழ்வோ அல்ல .

திருமணமோ ,குழந்தை பேறோ  அதற்குரிய வயதை எட்டிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை . அதில் தேவையற்று மூக்கை நுழைக்க மூன்றாம் நபருக்கு உரிமை இல்லை .

பெற்றோரே ஆயினும் பிள்ளைகளின் விருப்பம் ,உரிமை உணர்ந்து வினையாற்றல் காலத்தின் தேவை .இதில் தேவைக்கு அதிகமாய் வருத்திக்கொள்ளல் விரும்பத்தக்கதல்ல .

நம்மைவிட நம் பிள்ளைகள் நிச்சயம் மிகச் சரியான முடிவெடுப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்களின் விருப்பம் ,தேவை ,உரிமை இவற்றுக்கு மதிப்புக் கொடுக்க பழகுவதே பெற்றோருக்கு அழகு !

தோளுக்கு மிஞ்சிய மகனோ / மகளோ தோழரே என உணர்வீர் ! உறவில் புதிய பார்வை வளர்ப்பீர் !

                                  

 .

சொல் ,21

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .21 [ 15/09/2018 ]  

நேற்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்பது என்னிடம் என்றைக்கும் இல்லை என நெஞ்சை நிமிர்த்துவது பலரின் வாடிக்கை .

பொதுவாய் அது சரிதான் ,ஆனால் எப்போதும் அதுவே சரியல்ல .மாறாதது எதுவும் இல்லை . நேற்றுச் சொன்ன எல்லாம் இன்றைக்கு அப்படியே சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை .

நேற்றோ இன்றோ என்பதல்ல முக்கியம். பேசியதில் எது சரி எது நியாயம் என்பதே கேள்வி .

நேற்று சொன்னது பிழை எனில் வம்படியாய் அதனை தூக்கிச் சுமக்க வேண்டாம் . எப்போதும் உண்மையைத் தேடுவதாய் இருக்கட்டும் நம் பேச்சு . .

சொல். 20

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .20 [ 14/09/2018 ]  

அழகு படுத்திக் கொள்ள பெண்கள் அதிகம் மெனக்கிடுகிறார்கள் .காசும் செலவு செய்கிறார்கள் என்பது பொதுவாக வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை .

ஆண் தன் முகத்தை மழிப்பது ,மீசை தாடியை ஒழுங்கு செய்வது எல்லாம் அழகின் ஒரு கூறுதானே . இன்றைய நுகர்வு உலகில் அழகு சாதனப் பொருட்களில் ஆண்களுக்கானதும் நிறைய வந்துவிட்டதே !

ஆணோ ,பெண்ணோ தன்னை ஒப்பனை செய்து கொள்வது குற்றமல்ல .தேவையும்கூட .நம்பிக்கையையும் மிடுக்கையும் அது கொடுக்கக்கூடும் .

ஒருவரின் தோற்றப் பொலிவு அவருக்கான அடையாளமாய் இருக்கும் விதத்தில் தன்னை அழகுபடுத்திக் கொள்வதின் தேவையை யாரும் மறுதலிக்கவே முடியாது .

ஆயின் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் சிக்கல்தான் . விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும் . அந்த அளவை யார் தீர்மானிப்பது ?

ஆணோ ,பெண்ணோ அவரவரே தீர்மானிக்க முடியும் . அடுத்தவர் இதில் மூக்கை நுழைப்பது அநாகரீகமே!

அழகாய் இருக்க முயலுங்கள் ! புற அழகு மட்டுமே ஈர்ப்பாகாது என்பதையும் உணருங்கள் !

சொல். 19.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .19 [ 13/09/2018 ]
[ நான்கு நாள் விடுப்புக்கு பிறகு மீண்டும் தினம் ஒரு சொல் ]

அன்றாட வாழ்வில் அடுத்தவர்களை மதிப்பது என்பதன் பொருள் அவர் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டுவதல்ல .

நமக்கு உடன்பாடில்லாத அல்லது பிடிக்காத ஒன்றை ஏற்க வேண்டியதில்லை . ஆனால் அதை அவர்களுக்குத் தெரிவிப்பதிலும் அதனை அவர்கள் புரிந்து கொள்வதிலும்தான் மனித நாகரீகம் குடிகொண்டுள்ளது .

குடும்ப வாழ்வில் பொதுவாய் இது அமலாகவில்லை .குடும்பத் தலைவர் எனில் அது சர்வாதிகாரம் கொண்ட பொறுப்பென நினைக்கின்றனர் .

எதிர்த்துப் பேசுவதோ ,ஏன் எதிர்த்து கேள்வி கேட்பதோகூட ஒழுக்கக்குறைவாக அடங்காபிடாரித்தனமாகப் பார்க்கப்படுகிறது .

குடும்பத்தில் ஜனநாயம் பேணப்படுவதில் மிகுந்த குறைபாடு உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும் .

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ,பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு  மனம் திறந்த உரையாடல் கிட்டத்தட்ட இல்லை .

சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தில் புறக்கணிக்கப்படும் ஜனநாயகத்தன்மை ஒட்டு மொத்த சமூகவாழ்விலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்வினை ஆற்றுகிறது .

சர்வாதிகாரத்தின் ஊற்றுக்கண் உங்கள் வீட்டுக்குள்ளும் இருக்கிறது .ஜனநாயகத்துக்கான போராட்டமும் அங்கிருந்துதானே தொடங்க வேண்டும்!


சொல் .18.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .18 [ 8/09/2018 ]

ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் பிடிக்கும் ; இன்னொரு நிறம் பிடிக்காது .இதற்கு என்ன காரணம் ?

மகிழ்ச்சியான மற்றும் சவாலான தருணங்களின் போது குறிப்பிட்ட நிற உடை அணிவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர் .ஏன் ?

ஒரு குறிப்பிட்ட இசை அல்லது ஒரு குறிப்பிட்ட பாடல் தனக்கு உற்சாகம் தருவதாய் சிலர் நினைக்கிறார்கள் . ஏன்?

இப்படி ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவருக்கும் பிடித்த ,பிடிக்காத ,உற்சாகம் ஊட்டுகிற ,சோர்வூட்டுகிற ஏதேனும் ஒன்று இருக்கக்கூடும் .ஏன் ?

இதற்கெல்லாம் ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை . பழக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம் . தனிநபர் விருப்பம் சார்ந்ததாகவும் இருக்கலாம் .

இது முழுக்க முழுக்க தனிநபர்  மனவோட்டம் சார்ந்தது என்பதால் குறை சொல்ல ஏதுமில்லை . மாறாக அது அவரின் சுதந்திரம்கூட.

ஆனால் , ராசி ,தோஷபரிகாரம் , என ஏதேனும் கற்பிதங்களை முன்வைத்து ஒவ்வொன்றுக்கும் புனிதம் கற்பிப்பதையோ நிராகரிப்பதையோ ஏற்பது சரியா ? யோசியுங்கள் !அவ்வளவுதான்….     


சொல். 17

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .17 [ 7/09/2018 ]   

பெய்ர்த்தி மேகாவை எப்போது  கையில் எடுத்தாலும் என் மீசையைப் பிடித்து உலுக்குவதிலேயே குறியாய் இருக்கிறாள் . என்ன கேட்க நினைக்கிறாள் ?

 “ தாத்தா ! பெண் உரிமை ,சமத்துவம் நிறையப் பேசுகிறாய் ,  வாழ்க்கையில் வீட்டில் எப்படி ?”

 “ மேகா! சரியாகக் கேட்டாய் . சொல்லுவது மிகவும் எளிது ;சொன்னபடி நடப்பதுதான் அரிது .நான் வாழ்க்கையில்,வீட்டில் பாலின சமத்துவம் பேண முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன் .

பல முறை தோற்றிருக்கிறேன் ,சறுக்கி இருக்கிறேன் .மீண்டும் மீண்டும் விடாது முயன்றுகொண்டே இருக்கிறேன் . மேகா! உங்கள் காலத்தில் பெரு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்!”

நரம்போடும் ரத்த அணுக்களோடும் உறைந்து போயுள்ள ஆணாதிக்கம் அவ்வளவு சீக்கிரம் உதிர்ந்துவிடாது ; தொடர்ந்து உள்ளும் புறமும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் . சரிதானே!

அதிலும் தோற்றுவிட்டார்

Posted by அகத்தீ Labels:அதிலும் தோற்றுவிட்டார் …. !!!!

முதலில் பொய் சொன்னார்கள்
அப்புறம் அந்தப் பொய்யை
சீவி சிங்காரித்து ஜோடித்துச் சொன்னார்கள்

அப்புறம்
வளர்ச்சி எனும் வர்ணம் பூசிச் சொன்னார்கள்

அப்புறம்
துல்லியத் தாக்குதல் என்று
அதிரச் சொன்னார்கள்

அப்புறம்
தேசபக்த முலாம் பூசி
உணர்ச்சி கொப்பளிக்கச் சொன்னார்கள்

அப்புறம்
பாகிஸ்தான் சதி என்று
பச்சையாய் புழுகினார்கள்
இந்து இந்து என ஜெபித்துகொண்டே
கட்டியுள்ள இடுப்பு வேட்டியை உருவிச் சொன்னார்கள்

விதவிதமாய் வேஷங்கட்டி
வார்த்தை ஜாலங்காட்டி
சொன்னதெல்லாம்
பொய் பொய் பொய்
பொய்யைத் தவிர வேறில்லை .

தப்பித் தவறி எங்கேயாவது எப்போதாவது
ஒரு உண்மையையாவது
உளறியிருக்கமாட்டாரே !
தேடித் தேடி சலித்துப் பார்த்தால்……

அதிலும் தோற்றுவிட்டார் மோடி !!!!

-சு.பொ.அ.


சொல் .16

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் … 16 [ 6 /9/2018 ]

உறவினரோ வேண்டியவரோ உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் போது கட்டாயம் போய் பார்க்கத்தான் வேண்டுமா ? அலைபேசியில் விசாரித்தால் போதாதா ?

பொதுவாக மருத்துவமனையில் நோயாளியும் மருத்துவ ஊழியர்களும் மட்டுமே இருப்பதே நன்று . பல நாடுகளில் இதுவே நடைமுறை.

மிக அவசியத் தேவையின் பொருட்டு மருத்துவமனை அனுமதிக்குமானால் ஒரே ஒரு நபர் உடன் இருக்கலாம் .பார்வையாளர்கள் ,தீடீர் அலோசகர்கள் என கூட்டம் சேர்வது மருத்துவச் சூழலுக்கும் கேடு .தேவையற்ற மனச் சங்கடமும் வந்து சேரும் .

அதிலும் நோயாளியைப் பார்க்க வரும் ஒவ்வொருவரும் அள்ளிவீசும் இலவச மருத்துவ ஆலோசனைகள் பெரிதும் நண்மைக்குப் பதில் சிக்கலையே உருவாக்குகிறது .

மருத்துவமுறை எதுவாயினும் சில ஒழுங்குகளை கறாராக அமுலாக்கிய தீர வேண்டும் .எல்லோரும் அதற்கு ஒத்துழைத்தே ஆகவேண்டும் .

மருத்துவமனைக்கு கூட்டமாகப் போவதும் , தேவையற்றதை வாங்கிச் செல்வதும் , எந்தவித புரிதலுமின்றி பொருத்தமே இல்லாமல் ஆலோசனை என்கிற பெயரில் அபத்தமாய் ஏதேனும் உளறுவதுமே பாசத்தையும் நெருக்கத்தையும் மரியாதையும் காட்டும் வழியா ? இந்தத் தப்பான பார்வையிலிருந்து எப்போது விடுபடப் போகிறோம் ?

                                                                                      
 

சொல் .15

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் … 15 [ 5 /9/2018 ]

நான் சொன்னதை நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டீர்கள் …. நான் சொல்ல வந்தது அதுவல்ல … இப்படி நாம் பல சந்தர்ப்பங்களில் பேசியிருப்போம் .

தப்பு யாரிடம் ? நாமும் அவசரப்பட்டு பேசும் போது சொல்ல வந்த செய்தி சரியாக பதிவாகமல் போயிருக்கக் கூடும் . உணர்ச்சிக் கொந்தளிப்பில் தாறுமாறாக வார்த்தைகளைக் கொட்டி இருக்கக்கூடும் .நமக்கே தெளிவு இன்மை இருக்கக்கூடும் .

அதேபோல் கேட்டவரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்வாங்குவதில் தவறியிருக்கக்கூடும் – சரியாக காது கொடுக்காமல் இருந்திருக்கக்கூடும் – தெளிவின்மை அவருக்கும் இருக்கக்கூடும்

அப்போதைக்கு அதனை மேலும் பேசாமல் அமைதி காப்பதும் ,ஒத்திவைப்பதும் ,பின்னர் தனியாக இருவரும் அசை போடுவதும். மீண்டும் பேசுவதும் பயன் தரலாம் .முந்தைய புரிதல் குறைபாடு சற்று தணியலாம் .

ஒருவர் அடுத்தவர் கோணத்தில் நின்று கொஞ்சம் யோசிப்பின் இருபக்கமும் புரிதல் மேம்படும் .
ஒவ்வொருவரும் அடுத்தவரைப் புரிந்து கொள்வதும் ,புரியவைப்பதும் ஓர் கலை .அதை மெல்லக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் கடைசிவரை ….அதுவே வாழ்க்கை விதி.


                                                                                      
 

சொல் .14.

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் … 14 [ 4 /9/2018 ]

எளிமை ,ஆடம்பரம் என்பதற்கு நிரந்தர அளவுகோல் ஒன்றுமில்லை .காலந்தோறும் மாறும் . ஊருக்கு ஊர் ,நபருக்கு நபர் மாறும் .

காந்தி ,காமராஜ் வாழ்ந்த காலம் வேறு ; இன்றையக் காலம் வேறு .

ஒரு முறை ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது தோழர் இஎம்எஸ் சொன்னார் . “நாங்கள் கம்யூனிஸ்டுகள் ,ஆனால் எங்கள் தலைமுறை காந்தியிடமிருந்தே எளிமையைக் கற்றுக்கொண்டது . இன்றையத் தலைமுறை அதனை அப்படியே பின்பற்றுவது இயலாது ; தேவையுமில்லை .”

கதர் ஒரு காலத்தில் எளிமை ;இன்று ஆடம்பரம் . ரெடிமேட் ஒரு காலத்தில் ஆடம்பரம் இன்று அதுவே எளிமை .வானொலிப் பெட்டியே ஒரு காலத்தில் ஆடம்பரம் ; இன்று டிவியே ஆடம்பரமல்ல தேவையாகிவிட்டது .

தேவைக்கும் ஆடம்பரத்திற்குமான கோடு கூட மாறிக்கொண்டே  இருக்கிறது .

ஒவ்வொருவரும் அவரவர் உழைப்பில் அவரவர் சக்திக்கு உட்பட்டு நன்கு உடுப்பதோ ; உண்பதோ ; பொருட்கள் வாங்குவதோ ஆடம்பரம் ஆகாது .

ஊரார் உழைப்பில் – ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தில் – தேவைக்கு சம்மந்தமே இன்றி வாங்கிக் குவிப்பதும் ; மினிக்கித் திரிவதுமே ஆடம்பரம் .

அட, “ ஊரன் வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே” என்பதுதானப்பா ஆடம்பரம் .அநீதி.அராஜகம்.                                                                                      
 

சொல் 13

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் … 13 [ 3 /9/2018 ]

பாலின சமத்துவம் பற்றிய எந்த ஒரு விவாதமும் ஏதோ ஒரு வகையில் பெண்களே பெண்களுக்கு எதிரியாய் இருப்பதாகக் கேலியோடு முன் வைக்கத் தவறுவதே இல்லை .

வரதட்சணை கேட்பது யார் ? மாமியார் என்ற பெண் தானே ! பெண் குழந்தைதான் வேண்டும் , ஆணெனில் கருவிலே கொல் என்பதிலும் பெண்ணுக்கு ஓர் பங்குண்டே!

இப்படி அடிக்கடுக்காய் கேட்பது இப்போது வழக்கமாகவே ஆகிவிட்டது.

ஆணாதிக்கம் என்பது ஆணிடம் மட்டுமே உள்ள ஓர் தீய குணம் என யார் சொன்னது ?

ஆணை மையப்படுத்தியே அனைத்தையும் பார்ப்பதே அளப்பதே ஆணாதிக்கம் எனப்படும் .இது ஆணிடம் மட்டுமல்ல ; பெண்ணிடமும் நிரம்பி இருக்கிறது .ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

ஆணிடம் இருப்பினும் பெண்ணிடம் இருப்பினும் அதன் பாதிப்பு பெண்களுக்கு என்பதே உண்மை .

 ஆணாதிக்க எதிர்ப்பு என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல ; ஆணிடமும் பெண்ணிடமும் குடிகொண்டுள்ள ஆண் மையச் சிந்தனையைத் துடைத்துவிட்டு ; பாலின சமத்துவப் பார்வையை அனைத்திலும் முன்னெடுப்பதே ஆகும் .
இது எளிதானதல்ல ; பெரும் கருத்துப் போராட்டம் நடத்த வேண்டிய களமே !

                                                                
 

சொல் 12

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் … 12 [ 2 /9/2018 ]

இவன் என் முதல் தாரத்தின் மகன் ; இவள் எனது இளைய தாரத்தின் மகள் . இப்படி பொது வெளியில் ஒரு ஆணால் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது .சமூகமும் முகத்தைச் சுழிக்காமல் தலையை ஆட்டி ஏற்கிறது .

ஆனால் விவாகரத்து அல்லது முதல் கணவரை இழந்ததால் மறுமணம் செய்துகொண்ட ஒரு பெண் ; இவன் என் முதல் கணவரின் மகள் .இவன் எனது இரண்டாவது கணவரின் மகன் என பொது வெளியில் அறிமுகம் செய்து கொள்ள முடியுமா ? அப்படியே சொன்னாலும் அவளை பழித்துப் பேசாமல் சமூகம் இருக்குமா ?

கணவனைத் தவிர வேறு எந்த ஆணாயினும் அண்ணன் ,தம்பி , என ஏதேனும் உறவை வலியத் திணித்தே பெண் பழக முடியும் ; மாறாக இவன் என் நண்பன் என அவள் சொல்லிப் பழகின் அவளை ஏற இறங்கப் பார்க்கும் சமூகமல்லவா இது .ஆணையும் பெண்ணையும் ஒரே போல் சமூகம் நடத்துவதே இல்லையே!

ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு அளவுகோல்களை நம் மூளைக்குள் திணித்தது எது ? யார் ?

மதம் ,சாதி,சடங்கு ,சம்பிரதாயம் ,பண்பாடு என காரணம் எதுவாயினும் அது மண்ணாய்ப் போக ! மண்ணாய்ப் போக ! பாலின சமத்துவ சிந்தனை ஓங்குக!


 “
சொல் 11

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 11 [ 1 /9/2018 ]

இளைஞர்களுக்கு உபதேசமும் பிடிக்காது ; உபதேசிப்பவரையும் பிடிக்காது  என அடிக்கடி  இளைஞர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிப்பது உண்டு .

யாருக்குமே , எங்குமே , எப்போதுமே உபதேசம் பிடிக்காது என்பதே முழு உண்மை.

ஆனால் எல்லோருக்கும் அடுத்தவருக்கு உபதேசிப்பது எனில் லட்டு அல்லது விருப்பமான ஏதேனும் தின்பண்டம் சாப்பிடுவதுபோல் அவ்வளவு பிடிக்கும் .

 உபதேசங்கள் ஏன் பிடிப்பதில்லை ?

அவை ஒரு வழிப்பாதையாய் இருப்பதாலும் ; உரையாடலுக்கு  இடம் தருவதாய் இல்லாததாலும் உபதேசங்கள் முகத்தைச் சுழிக்க வைக்கும் . .

எங்கள் அனுபவத்திலிருந்து என்றே  பெரும்பாலும் தொடங்குவதாலும் ; சுட்டுக்கொண்ட அனுபவத்தையும் .காயங்களையும் தடவி ; புதிய மற்றும் ,பரிசோதனை முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாலும் உபதேசங்கள் விரும்பப்படுவதில்லை .

செக்குமாடு போல் ஒரே தடத்தில் பயணிக்கவே உபதேசங்கள் உந்தித்தள்ளுவதாலும் வெறுப்பு மேலோங்குகிறது .

உபதேசங்களை நிறுத்துவோம் ! உரையாடலைத் தொடங்குவோம் !

சுயமாய் ஒவ்வொருவரும் முடிவெடுக்க ; சோதனைகளை செய்து பார்க்க  உரையாடல் உந்துவிசையானால் யாருக்கு கசக்கும் ?
 “
சொல் 10

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 10 [ 31 /8/2018 ]

ஒரு கவிதை ,ஒரு கதை ,ஒரு திரைப்படம் ,ஒரு புதினம் , ஒரு ஓவியம் ,ஒரு நாடகம் ,ஏதேனும் ஒரு கலைப் படைப்பு முற்போக்கா , பிற்போக்கா என்பதை  துல்லியமாக அளக்கும் அளவுகோல் எங்கேனும் இருக்கிறதா ?

ஒவ்வொருவருக்கு ஒரு புரிதல் ;ஒரு பார்வை ; ஒரு முழக்கோல் இருக்கக்கூடும் .ஆனாலும் விவாதம் ஓயாது .

ஒரு முற்போக்காளர் படைத்தார் என்பதாலேயோ அல்லது சீரியஸ் சினிமா ,சீரியஸ் படைப்பு என முத்திரை குத்துவதாலோ அது முற்போக்குப் படைப்பு ஆகிவிடாது .

படைப்பாளி வெகுஜன தளத்தில் இயங்குவதாலோ .  புரிதலில் பிழை உள்ளவர் என்பதாலோ அப்படைப்பு பிற்போக்கு படைப்பு என ஒதுக்கிவிட முடியாது . .

அந்தப் படைப்பு எந்த அளவு மக்களைச் சென்றடைகிறது ; மேலும் அப்படைப்பு வாசகர் .ரசிகர் உள்ளத்தில் எந்தவித உணர்ச்சியை கொம்பு சீவி விடுகிறது என்பதே ஆகப்பெரும் அளவுகோல் !

அப்படைப்பு ஒடுக்கப்பட்ட மக்கள்பால் ஒரு சொட்டுக் கண்ணீரை ; சமூக அவலங்களுக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பை ; சமூக கோபத்தின் சிறு பொறியை உருவாக்குமாயின் ஆயிரம் குறை இருப்பினும் அப்படைப்பைக் கொண்டாடுக !

தத்துவ முலாம் பூசப்பட்டு – அதேநேரம் செத்தவன் கை வெற்றிலை பாக்காய் அசைவற்று கிடக்கும் நூறு படைப்பைவிட மேலே சொன்ன படைப்பு நூறுமடங்கு மேலானது அல்லவா ?


 “
சொல் 9

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 9 [ 30 /8/2018 ]

நான்கு பேர் இருக்குமிடத்தில் ஐந்தாவதாக ஒருவரை எல்லோரும் கழுவி ஊற்றிக் கொண்டிருப்பர் . அதில் ஒருவர் தனியாக அந்த ஐந்தாவது நபரிடம் எல்லாவற்றையும் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார் .

நான் அப்படி இல்லை என்று நாம் சொல்லிக் கொண்டாலும் ;இதில் விதிவிலக்கு அபூர்வமே !

முகத்துக்கு நேரே , நீ செய்வது சரி அல்லது தப்பு ; இது எனக்கு பிடிக்கவில்லை ; இதில் எனக்கு உடன்பாடில்லை ; நான் இப்படித்தான் செய்யப்போகிறேன் என பேசும் இயல்பு நம்மிடையே மிகக்குறைவு .

கேட்டால் முகத்திலடித்தால் போல் எப்படிச் சொல்வது ? அது நாகரீகமாக இருக்குமா ? என்றெல்லாம் சமாதனம் சொல்லி நழுவுவது நம் பழக்கம் .

கணவன் மனைவியிடம் மறைப்பது ;மனைவி கணவனிடம் மறைப்பது ;தந்தை மகனிடம் மறைப்பது ;மகன் தந்தையிடம் மறைப்பது என எல்லாமே திரைமறைவு செயல்பாடுதான் நம்முடையது .

மூடுண்ட சமூகம் இது .ஐரோப்பியரைப் போல் திறந்த சமூகம் அல்ல இது .

நாம் எப்போது வெடிப்புற பேசப் போகிறோம் ? எப்போது திறந்த புத்தகமாய் செயல்படப் போகிறோம் ?

நட்போ ,உறவோ யாராயினும் குறை நிறைகளோடு ஏற்கப் பழகுவதே இதற்கு முதற் பயிற்சி .முதல் படி.
 “
சொல் 8

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 8  [ 29 /8/2018 ]

விட்டுக்கொடுத்தல் ,சமரசம் ,சரணாகதி மூன்றும் வெவ்வேறு ; மூண்றையும் போட்டுக் குழப்பிக் கொள்வதால் தலைவலி திருகுவலி ஆகிவிடும் .

ஒரு காதல் திருமணம் .சாதி மறுப்பு திருமணம் .வரதடசணை இல்லா திருமணம் .பெற்றோர் ஒப்புதலுடன் நடப்பதே பெரிய வெற்றி . அதற்காக கொள்கையை சற்று தளர்த்தி சில சடங்குகளை  ஏற்றுக்கொள்வது விட்டுக்கொடுத்தல் .இது பிழை அல்ல .தேவை .

குடும்ப வாழ்வு இனிதாக சில விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கவே முடியாது .

முதலாளியை எதிர்த்து தொழிலாளி சில கோரிக்கைகளுக்காக போராடும் போது ஒரு கட்டத்தில் சமரசம் தேவைப்படும் .போராட்டமும் சமரசமும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு வகையில் இணைந்ததே . சமரசம் இல்லா போராட்டமோ ,போராட்டமே இன்றி சமரசமோ ஒரு போதும் இல்லை.

கேள்விமுறையின்றி ஆதிக்கத்துக்கு அடிபணிதலே சரணாகதி . ஆபத்தானது இதுவே !

விட்டுக் கொடுத்தல் வாழ்வின் ஒரு விதி  .

விட்டுக்கொடுத்தலை சரணாகதிகாகச் சித்தரித்து பகடி செய்வதும் ; சரணாகதியை விடுக்கொடுத்தலாக நியாயப்படுத்துவதும் நட்பு முரணை பகை முரணாக்கிவிடும் .
இன்றைய விவாதக் களத்தில் இந்த பேராபத்து மேலோங்கி உள்ளது .

விட்டுக்கொடுத்தல்,சமரசம் ,சரணாகதி இவற்றை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளுதல் ; போராட்ட குணத்திற்கு வலுவும் . தொலை நோக்கும் கொடுக்கும் .


 “
சொல் 7

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 7 [ 28 /8/2018 ]

முதியோர் இல்லங்கள் என்பது சமூகச் சீரழிவின் அடையாளமாய் பலரால் சுட்டப்படுகிறது . உணர்வுபூர்வமாய் அணுகும் யாரும் அப்படித்தான் கருதுவர்.

நேற்று இருந்தது போன்றா இன்று சமூகம் இருக்கிறது ? கூட்டுக் குடும்பம் அதன் இருப்பை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வருகிறது . வலி இருப்பினும் வாழ்க்கை நெருக்கடிகளின் திசை அதுதான் .

”பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம்” என்பது ஒரு காலத்தில் சோகமாய் பார்க்கப்பட்டது .இன்று வாழ்க்கையாகிவிட்டது .

ஒருவர் வாழ வேண்டுமெனில் அவர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாய சமூகச் சூழல் ;அந்த ஓட்டத்திற்கு பாசம் சுமையாகவோ , தடையாகவோ மாறிவிடக் கூடாதல்லவா ?

எல்லோரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்லவில்லை ; தேவையும் இல்லை .

ஆனால் ஒருவர் வாழ்க்கைச் சூழலில் பெற்றோரை கைவிடாமல் பாதுகாப்பாய் முதியோர் இல்லம் அனுப்புதல் பிழையல்ல ;தவிர்க்க முடியாத யதார்த்தம் .

 “முதியோர் இல்லம் என்பது ஆதரவற்றவர்களின் மடம்” என்ற நிலை மாறி ;  “மூத்த குடிமக்களின் நந்தவனமாய்” ஊருக்கு ஊர் தேவையே !


 “
சொல் 6

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 6 [ 27 /8/2018 ]

கணவனுக்கும் மனைவிக்கும் பிடித்த பாடல் .பிடித்த இசை ,பிடித்த நிறம் ,பிடித்த சுவை , பிடித்த வாழ்க்கைக் கூறுகள் என எதுவும் ஒரேப் போல் இருப்பதில்லை .இருக்க வேண்டிய அவசியமும் இல்லை .

அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே ரசனை, ஒரே தேர்வும் இருப்பது அபூர்வம் .

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே போல் ஆர்வமும் .ஈடுபாடும் இருப்பதில்லை . வீட்டிலுள்ள இதர உறவுகளும் அப்படியே !

குடும்பம் என்பது ஒரே வண்ணமல்ல ;பல வண்ணங்களின் சேர்க்கை. வானவில்லாய் எல்லா வண்ணமும் இணைந்தும் ; தன் சுயம் இழக்காமலும் காட்சி அளிப்பதே நல்ல குடும்பம் .

ஒற்றை வண்ணமாய் ஆக்க முனையும் போதே விரிசல் வேர்விடத் தொடங்கிவிடும் .

வானவில் ரசிப்பதற்கு மட்டுமல்ல ;வாழ்க்கையும்தான் .
 “
சொல் 5

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 5 [ 26 /8/2018 ]

ஒரு நாத்திகர் / பகுத்தறிவாளர் எவ்வளவு பிடிவாதமாய் கொள்கை உறுதியோடு இருப்பினும் வாழும் சமூகத்தில் சில சமரசங்களுக்கு ஆட்படுவது தவிர்க்கவே இயலாது .

இது சறுக்கல் அல்ல ; அது குடும்ப ஜனநாயகம் ,சபை நாகரீகம் , சமூக நல்லிணக்கம் என எதுவாகவும் இருக்கலாம்

ஆனால் ,அதனைச் சுட்டி அவர் பகுத்தறிவு போலியானது என முரட்டு ஆத்திகர் ஒரு புறமும் ;  கொள்கை நழுவிவிட்டார் என வறட்டு நாத்திகர் மறுபுறமும் அவரை வறுத்தெடுப்பர் .

சாராம்சத்தில் இருவரும் அவரை ஆத்திக சகதியில் தள்ளிவிடும் கைங்கர்யத்தையே செய்கின்றனர் .

எந்த ஆத்திகனாவது தலைவலி எனில் தைலம் தேடாமல் இருக்கிறானா ? பிரச்சனை எனில் போராடாமல் இருக்கிறானா ?

எல்லாம் அவன் செயல் என துரும்பையும் அசைக்காமல் இருக்கும் ஆத்திகர் எவரேனும் உண்டா ?

இதனால் எல்லாம் அவர் ஆத்திகத்தை கைவிட்டுவிட்டார் என எந்த நாத்திகரும் சொல்வதில்லை ; ஏனெனில் சமூக யதார்த்தம் அறிந்தவர் நாத்திகர் .
ஆத்திகரிடம் அந்த அணுகுமுறையை , நேர்மையை எதிர்பார்க்க இயலுமோ ?
சொல் 4

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 4 [ 25 /8/2018 ]

கணவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ மனைவிக்கு பலவித நோண்புகளை வழிபாடுகளை கட்டமைத்திருக்கிறது மதமும் பண்பாடும் .

மனைவியர் நலம் வாழ ஏதேனும் ஒரே ஒரு நோண்பையேனும் கணவர்களுக்கு கட்டமைத்திருக்கிறதா அதே மதமும் பண்பாடும் .

முளையடித்து மாட்டைக் கட்டிப் போடுவதுபோல் ஒரே வட்டத்தில் சுற்றிசுற்றி வரும் இயந்திரமாக பெண்களை மாற்றிடத்தான் அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் . 

ஆனால், புனித முலாம் பூசப்பட்டிருக்கும் .

பாலின சமத்துவமும் பொதுவாய் சடங்கு ,சம்பிரதாயங்களும் எதிர் எதிராகவே இருக்கும் ; இதை உணராமலே பெண்கள் அந்த செக்குமாட்டுத் தடத்தில் உழல்வதுதான் விநோதம் .

உணர்ந்தோரும் குடும்ப நிர்ப்பந்தத்தால் அதனோடு வாழும்படியான நிர்ப்பந்தச் சூழல் .என் செய்ய ?


சொல் 3

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 3 [ 24/8/2018 ]

ஒருவர் தான் சார்ந்த மதத்தை விமர்சிப்பது அவரது உரிமை ; அதன் நிறை ,குறைகளை அனுபவித்து உணர்ந்தவர் என்கிற முறையில்  சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டுதானே ?

பிறர் மதத்தை ஒருவர் விமர்சிக்க புகின் அது எல்லை மீறல் ; மதவெறி எனப் பொருள் கொள்ள வழி ஏற்பட்டுவிடுமே .

முன்னதைப் பின்பற்றுவோர் மதநல்லிணக்கம் , அமைதி விரும்புவோர் ;

பின்னதை பின்பற்றுவோரும் உபதேசிப்போரும் மதமோதலுக்கு துணை போவோர் ஆவர் . மூளையுள்ளோர் யோசிக்கக் கடவர் !

சொல் 2

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 2 [ 23/8/2018 ]

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என பயந்து பயந்து ஒடுங்குதல் சரியா ?

 எந்தச் சிப்பியில் எந்த முத்து இருக்குமோ என தேடித் தேடி அலைந்து ஓயுதல் சரியா ?

ஒரு பக்கப் பார்வை எப்போதும் ஆபத்து .

எல்லா கோணங்களிலும் யோசித்து நம்பிக்கையோடு முன்கை எடுப்பதும் ; எச்சரிக்கையோடு ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதுமே புத்திசாலித்தனம் .

சொல் 1

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 1 [ 22/8/2012 ]

கணவன் பகுத்தறிவாளராகவும் மனைவி சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடப்பவராகவும் இருப்பின் மனைவி அப்படியே செய்ய தடை இருப்பதில்லை .

ஆனால் ,

கணவன் ஆத்திகராகவும் மனைவி பகுத்தறிவாளராகவும் இருப்பின் மனைவி அப்படி தொடர கணவன் அனுமதிப்பதில்லை .

[ விதிவிலக்கை இங்கு குறிப்பிடவில்லை.]

ஏன் ?

ஆத்திகம் கருத்து சுதந்திரத்தின் பகை ;
பகுத்தறிவு கருத்துசுதந்திரத்தின் உயிர் .

மானுடம் சாகவில்லை

Posted by அகத்தீ Labels:மானுடம் சாகவில்லை…மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !

மதவெறியால் குதறப்படும்
இனவெறியால் காயப்படும்
குறுகிய அரசியலால் மிரட்டப்படும்
கொடுங்கோலரால் கழுத்து நெரிக்கப்படும்

ஆனாலும்,

மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !

கேரளம் உயிர் சாட்சி
மானுடத்தின் மனச்சாட்சி
குறுமதியாளர் வஞ்சகம் வீழ்த்தி
மானுடம் எழுந்ததின் பெருங்காட்சி !

மீட்புப் படையாய் மீனவர் தோழமை
முகம் தெரியாதோரும் உதவும் கரமாய்
நாடெங்கிலும் ஊற்றெடுத்த மனிதக் கருணை
சதிவலை கிழித்தது மானுட மேன்மை !!!

மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !
லேகியம்

Posted by அகத்தீ Labels:
லேகியம்


இந்த லேகியம்
நூற்றாண்டுப் பழமையானது
தின்ற நொடியிலேயே
பின்னோக்கி பயணம் துவங்கிவிடும்

அதிலும் முன்னோரின்
நல்லவைகளை அல்ல
அழுகிப் புழு நெளியும்
கெட்டவைகளின் வாரிசாய்
தன்னை வரித்துகொள்ளும்

துர்நாற்றமெடுக்கும்
பழம்பஞ்சாங்கத்தை
மணக்கும் சந்தணமாய்
மார்மீது பூசித்திரியும் …

அறியாமை ,அநீதி
அராஜகம் ,அயோக்கியத்தனம்
பொய் ,பித்தலாட்டம்
பாலியல் , வன்முறை ,
கும்பல் கொலை வெறி
அத்தனை நஞ்சையும்
நாடி நரம்பெல்லாம்
பீறிட்டுக் கொப்பளிக்கச் செய்யும்

மத வெறி ,இனவெறி
பெயர் எதுவாயினும்
லேகியம் ஒன்றுதான்

பாசிசம் ,நாசிசம் ,இந்துத்துவம்
தாலிபானிசம் . ஆண்டசாதி ,
வந்தேறி வாதம் ,இனவாதம்
எதுவாயினும்
லேகியம் ஒன்றுதான்

வெறுப்பு
வெறுப்பு
வெறுப்பு

-    சு.பொ.அகத்தியலிங்கம்

விசாலப் பார்வையால் விழுங்கும் ‘புரட்சி

Posted by அகத்தீ Labels:

விசாலப் பார்வையால் விழுங்கும்புரட்சி நதிரஷ்யப் புரட்சியின் பிந்தையகாலத்தையும், முந்தைய காலத்தையும் அறிந்து கொள்வதற்கும், புரட்சிக்கு திறவுகோலாக இருந்தவைகளை பற்றி அறிந்து கொள்வதற்கும் இளத்தலை முறைக்கு இது சிறந்த நூல் எனலாம். ஒரு நூலை வாசிக்கிற போது பல நூல்களைப் படிக்க தூண்டும் நூல்கள் குறைவே அந்த குறைவான நூல்களில் ஒன்று தான் இந்நூல். என்றும் ஊளைச்சதையற்ற வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ள் நூல் என்றும் “ புரட்சிப் பெருநதி” குறித்து தாமு எழுதிய நூல் மதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார் .

இன்று [ 30/07/2018] தீக்கதிர் புத்தகமேசை பகுதியில் வந்துள்ள நூல் மதிப்புரை வருமாறு

1917 ல் நடந்தேறிய ரஷ்யப் புரட்சி மனிதகுல வரலாற்றில் நடந்திராத மாபெரும் புரட்சியாகும். ரஷ்யப் புரட்சியால் மனித குலம்பெற்ற நன்மைகள் ஏராளம். பல நூற்றாண்டுகாலமாக அறியாமை இருளில் மூழ்கடிக்கப்பட்டு எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு புதிய வாழ்வை அது வழங்கியது.

40 கோடி ஏக்கர் நிலத்தை நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது. அமெரிக்க தலைமையிலான ஒரு துருவ உலகமாக இருந்ததை இருதுருவ உலகமாக மாற்றி காலனி நாடுகளில் அடிமைச் சங்கிலியை அறுத்தெறியக் காரணியாக இருந்தது. விடுதலை வேண்டி போராடியவர்களுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்தது. சிறைபிடிக்கப்பட்ட தேசிய இனங்களுக்குசுதந்திரத்தை வழங்கியது.

முசோலினியின் பாசிசமும், ஹிட்லரின் நாசிசமும் உலகை விழுங்க முயன்றபோது இரண்டு கோடி மக்களை பலி கொடுத்து உலகைக் காத்தது.இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவின் சரிபாதிப் பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. போருக்குப் பின் இனி சோவியத் யூனியன்எழ வாய்ப்பில்லை என எள்ளி நகையாடியது அமெரிக்காவும், பிரிட்டனும்.

10 ஆண்டுகளில் பீனிக்ஸ் பறவையைப் போல் அமெரிக்காவிற்கு நிகராக எழுந்து நின்றது ரஷ்யா. உலகமே வியந்தது. எவ்வாறு முடிந்தது என்று ஸ்டாலினை பார்த்து கேட்ட போது, “சோவியத் யூனியன் முதலாளித்துவ உற்பத்தி முறை பாணி கொண்டதல்ல. சோசலிச பாணியிலான உற்பத்தி முறை கொண்டது. எனவே எங்களால் இழந்ததை மீட்டெடுக்க முடிந்ததுஎன்றார். ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ்,கம்பூச்சியா என பல நாடுகள் சோசலிசப் புரட்சியை நடத்தி வெற்றி பெற்றன. உலக வரைப்படத்தில் சரி பாதி சிவப்பு நிறத்தால் நிரப்பப்பட்டது.

இவ்வாறு உலகின் திசை வழி மாற்றிஅமைத்த ரஷ்யப் புரட்சி மனித குலத்திற்கு செய்திட்ட நன்மைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் தீர்ந்தே போகும், அத்தகைய மகத்தான புரட்சியின் நூற்றாண்டை கடந்தஆண்டு உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். கொண்டாட்டங்களோடு நிற்காமல் ரஷ்ய புரட்சியின் வரலாற்றை புதிய தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் சு.பொ. அகத்தியலிங்கம் தீக்கதிரில் எழுதிய தொடர் கட்டுரைகளைபுரட்சி பெரு நதிஎன்கிற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்.

ரஷ்யப் புரட்சி கருக்கொண்ட நாள் துவங்கி வெற்றி பெற்ற நாள் வரை நடந்த நிகழ்வுகளை, லெனினுக்குப் முந்தைய புரட்சியாளர்களை, இயக்கங்களைப் பற்றி மிகச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் வாசகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

1896 நடந்தேறிய வேலை நிறுத்தங்கள், அவை எவ்வாறு 1905ல் நிகழ்ந்த முதல் புரட்சிக்கு இட்டுச் சென்றது என்பதைப் பற்றியும், முதல் புரட்சியின் தோல்வியில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு லெனின் எவ்வாறு 1917 ல் புரட்சியை சாத்தியமாக்கினார் என்கிற நீண்ட வரலாற்றைப் பற்றியும், முதல் உலகப் போரில் லெனின் நிலையும், இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் திறனும், புரட்சிக்குப்பங்களிப்பு செய்தவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஊளைச்சதையற்ற வார்த்தைகளின் மூலம் 178 பக்கங்களுக்குள் திறம்படத் தொகுத்து வாசகர்களுக்குவழங்கியுள்ளார்

ஆசிரியர். மார்க்ஸை பற்றி ஏராளமான நூல்கள் இருந்தாலும், மார்க்ஸ்க்கு திறவுகோலாக இருந்தவர்களைப் பற்றியான பதிவுகொண்ட நூல்கள் குறைவே. குறிப்பாக மார்க்ஸ்க்கு திறவுகோலாக இருந்தவர்களான, கோபர்நிகஸ், கலிலியோ, நியூட்டன்,டார்வின், ஹெகல், ஃபாயர்பாக், பிரதௌன்,தாமஸ்மூர், தொம்மாசோ கம்பானெல்லா, ஜீன்மெல்லியத் என அறிவியல், தத்துவம்,அரசியல் என கோட்பாடுகளை உருவாக்கியவர்களை பற்றியும், மார்க்ஸ்க்குப் பிந்தைய புரட்சியாளர்கள் பற்றியான பதிவுகளையும் நிறைவாக புரிந்து கொள்ளும் வகையில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.

கற்பனாவாத சோசலிசம் குறித்து ஏராளமாக நூல்கள் இருந்தாலும், கற்பனாவாத சோசலிசத்தை முன் வைத்தவர்களின் கருத்துகளை புதியவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் சுருங்கக் கூறியுள்ளார்.

ஆக மொத்தம் ரஷ்யப் புரட்சியின் பிந்தையகாலத்தையும், முந்தைய காலத்தையும் அறிந்து கொள்வதற்கும், புரட்சிக்கு திறவுகோலாக இருந்தவைகளை பற்றி அறிந்து கொள்வதற்கும் இளத்தலை முறைக்கு இது சிறந்த நூல் எனலாம். ஒரு நூலை வாசிக்கிற போது பல நூல்களைப் படிக்க தூண்டும் நூல்கள் குறைவே அந்த குறைவான நூல்களில் ஒன்று தான் இந்நூல்.

புரட்சிப் பெருநதி ,ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை,
பக்கங்கள் 176 ,விலை : ரூ 150 /