அடங்க மறுக்கும் காசநோய் - ஆராய்ச்சி மறந்த ஆட்சியாளர்கள்

Posted by அகத்தீ Labels:


அடங்க மறுக்கும் காசநோய் - 
ஆராய்ச்சி மறந்த ஆட்சியாளர்கள்
சு. பொ. அகத்தியலிங்கம்

‘ப ட்டினிச்சாவு’ என்ற வார்த்தை ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காது. “சத்துணவுக் குறைவால் மரணம்” என வித்தாரம் பேசுவார்கள். ஒரிசா காளகந்தியில் அதுதான் நடந்தது.அதுபோல் “கடன் தொல்லை தாளாமல் விவசாயி தற்கொலை” என்ற வார்த்தை ஆட்சியாளர்களை மிரட்டும்; “வயிற்று வலி தாங்கா மல் தற்கொலை” என பூசி மெழுகப் பார்க்கும்.தொற்றுநோய்கள் மீண்டும் படையெடுக்கும்போதும் புள்ளி விபரங்களை சாதுரியமாய் மாற்றி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக சத்தியம் செய்வார்கள் ஆட்சியாளர்கள்.

காசநோய், சயரோகம், எலும் புருக்கி நோய் என பல பெயர்களில் அழைக்கப்படுகிற டி.பி.நோய் இன்னும் கொடூர உயிர்க்கொல் லியாகவே மூன்றாம் உலக நாடு களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
 (டோட்டலி டிரக் ரெசிஸ்டன்ட் டிபி) எனப்படு கிற “மருந்துக்கு முழுமையாக கட் டுப்பட மறுக்கிற காசநோய்” பெருகிவிட்டது என பொது சுகா தார நிபுணர்கள் கவலை தெரிவிக் கின்றனர். ஆனால் அரசு அந்த வார்த்தையையே சொல்லக் கூடாது. உலக சுகாதார நிறுவன மும் இந்த சொல்லை ஏற்கவில்லை. வேண்டுமானால் டிபி(எக்ஸ்டென்ஸ்சிவ்லி டிரக் ரெசிஸ்டன்ட் டிபி) அதாவது “மருந்துக்கு பெருமளவு கட்டுப் படாத டிபி” என்று மட்டுமே கூற வேண்டும் என்கிறார்கள் ஆட்சி யாளர்கள்.விதவிதமான கொசுவர்த்திச் சுருள்கள், மருந்துகளோடு வாழப் பழகிக் கொண்ட கொசுக்கள் போல; ஏற்கெனவே கொடுத்த மருந்துகளுக்கு காசநோய் கிருமி கள் கட்டுப்பட மறுக்கின்றன என பாமரர் நோக்கில் புரிந்து கொள் வதில் தப்பில்லை.
ஆனால் இந்த உண்மையை அரசு ஏன் ஏற்க மறுக் கிறது என்பதுதான் அரசியல் கேள் வியாகும்.

மும்பை பி.டி.ஹிந்துஜா மருத்து வமனையில் 12 நோயாளிகள் இவ்வாறு கண்டறியப்பட்டதாகவும் அதில் 4 பேர் இறந்துவிட்டதாகவும் ஏனையோர் நிலையும் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும் ‘பிரண்ட் லைன்’ ஏடு (ஜூலை 27) தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவில் பின் பற்றப்பட்டு வரும் பல்மருந்து சிகிச் சை (மல்டி டிரக் ரெசிஸ்டண்ட்) பயன் இழந்து வருவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆயினும் ஆட்சியா ளர்கள் விழிக்க மறுப்பது ஏன்?“ஒவ்வொரு இரண்டு நிமிடத் திலும் இரண்டு காசநோய் நோயா ளிகள் உயிரிழக்கின்றனர்” என்ற பழைய புள்ளிவிபரம் பெருமளவு மாற்றமின்றி இன்றும் தொடர்வது தான் வேதனை.உலக காசநோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். ஏறத்தாழ 40 விழுக்காடு இந்தியர்கள் காச நோய் பாதிப்புக்கு ஏதோ ஒரு வகை யில் ஆளாகியே உள்ளனர்.

 உலகம் முழுவதும் காசநோயால் பலியாகும் 94 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். காசநோய் சாவில் உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதுதான் வேதனை.பெரும்பாலும் காசநோய் பாதிப்பு என்பது வறுமையும் சத்து ணவு இன்மையும் சுகாதார வசதி இன்மையும் மிகுந்த மூன்றாம் உலக நாடுகளில் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில் லை. பீடி, சிகரெட், பஞ்சாலை, சுரங் கம் போன்ற, காசநோய் நோய்த் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள தொழில்கள் பெரும்பாலும் மிகவும் பின்தங்கிய நாடுகளில்தான் தொடங்கப்படும் என்பதும்; தொடர் கிறது என்பதும் கசப்பான உண்மை.

மூலதனம் என்பது இரத்தம் குடிக்கும் காட்டேரி என்று மார்க்ஸ் சொன்னது மெய்யன்றோ? இந்த தொழிற்சாலையை ஒட்டி காசநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டு வெகுநாளாயிற்று.மேலும் மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் கடந்த 50 ஆண்டு களாக காசநோய்க்கு புதிய மருந்து எதையும் கண்டுபிடிக்கவே இல்லை. அந்த திசை வழியில் கூட எட்டிப் பார்க்கவில்லை என்பது கவலை அளிக்கும் செய்தியாகும்.செக்ஸ் மாத்திரைகள், டானிக்குகள் என விதவிதமாக ஆராய்ச்சி செய்து குவிக்கும் இந்த பன்னாட்டுக் கொள்ளைக்காரர்கள் இந்த உயிர்க்கொல்லி நோய் குறித்து ஏன் கவலைப்படவில்லை. 

முதற்காரணம், மூன்றாம் உலக பஞ்சைப் பராரிகள்தானே இதில் பெருமளவு பலியாகிறார்கள். ஆகவே செத்துத் தொலையட்டும் என்கிற ‘விசால மனசு’ பன்னாட்டு நிறுவனங்களின் பிறவிக்குண மாகும்.

அடுத்து, புதிய மருந்து ஆராய்ச்சிக்கு பல கோடி செல வழித்த பின் ஒன்றுக்கு பத்தாய் அதை லாபமாக மீட்க அதிக விலை வைக்கணும்; அவ்வளவு விலை வைத்து அடித்தட்டு மக்களிடம் விற்பது சிரமம். அரசும் இதில் பெருமளவு பணமுதலீடு செய்யாது. பொது சுகாதாரத்திற்கு அரசு முதலீட்டை குறைக்க வேண்டும் என்பது உலக வங்கிக் கட்டளை வேறு. காசுள்ளவனுக்கே இனி வைத்திய வசதி என்கிற போது, காச நோயால் பாதிக்கப்படும் கஞ் சிக்கு இல்லாதவன் பற்றிய கவலை எதற்கு என்று பன்னாட்டு நிறு வனங்கள் கேள்வி கேட்கவில்லை, செயலில் காட்டுகிறார்கள்.

பஞ்சத்தில் நோயில் பாரதர் புழுக் களாய் சாதல் கண்டும் தடுக்க முயற்சி செய்யாமல் வாயைத் திறந்து சும்மா வந்தே மாதரம் என்று முழங்கும் நடிப்பு சுதேசிகள் குறித்து பாரதி சாடினான். ஆனால் ஆட்சியாளர்கள் கொள்கையே அதுவாகிப் போனது.இல்லை யென்றால் அணுகுண்டுக்கும் அர்த்தமற்ற யுத்தவெறி முஸ்தீபு களுக்கும் பணமுதலைகள் கொழுக்கவும் கோடிகோடியாய் கொட்டி அழும் இந்திய அரசும், மாநில அரசுகளும் தொற்று நோயை குணப்படுத்த புதிய ஆய்வு களுக்கு நிதி ஒதுக்கி இருக்க லாமே!

சிறந்த மூளைவளம் மிக்க இந்திய ஆய்வாளர்களுக்கு அரசு ஊக்கம் கொடுத்து காசநோய் தடுப்பில் புதிய மருந்துகளைக் கண் டறியச் செய்து, உலகுக்கே வழங்கி இருக்கலாமே! இதற்கெல்லாம் அரசியல் உறுதி வேண்டும். வல் லரசுக் கனவு பயன்தராது. மக்கள் நலன் பேணும் அரசாக மாற வேண் டும். மாறுமா? “தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்றான் பட்டுக்கோட்டை. காச நோய்க்கு எதிரான மருத்துவ விழிப்புணர்வு ஒருபுறத்தேவை. காசநோயை அடியோடு ஒழிக்க உறுதிமிக்க அரசியல் போராட்டம் பெருமளவு தேவை.













ஓசோன் படலத்தில் மட்டுமா ஓட்டை?

Posted by அகத்தீ Labels:



 http://volunteerinternational.files.wordpress.com/2012/07/rio-20-logo-2.jpeg
ரியோ + 20 மாநாடு - 
ஓசோன் படலத்தில் மட்டுமா ஓட்டை?
சு.பொ.அகத்தியலிங்கம்


“உங்கள் தத்துவக் கண்ணோட்டம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இனியும் இயற்கையைச் சூறையாடுவதை சகித்துக் கொள்ள முடியாது”-இப்படித்தான் உலகைக் காக்க விரும்பும் சுற்றுச்சூழலியலாளர்களும் முற்போக்காளர் களும் முழங்குகின்றனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ரியோவில் ஜார்ஜ் புஷ், காஸ்ட்ரோ உட்பட உலகத் தலைவர்கள் கூடி, புவிச் சமநிலை யையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பிர கடனம் வெளியிட்டனர். சற்று நம்பிக்கை அளித்தது. அந்த உச்சி மாநாட்டில் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையானது பிரகடனத்தைவிட வலுவாய், உலக மனசாட்சியை நோக்கி கேள்வி எழுப்பியது?

சுற்றுச்சூழல் பெருமளவு சீர்கெடுவதற்கும், புவிவெப்பமயமாவதற்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கும் யார் காரணம்? உலகில் மொத்த நுகர்வில் பெரும்பகுதி மேற்கத்திய வளர்நாடுகளுடையது அல்லவா? அவர்களின் நுகர்வுவெறிக் கலாச்சாரம்தானே இந்த இயற்கைச் சமநிலை குலைவுக்கு பெரும் காரணம்! எனவே அதைச் சீர்செய்ய பெரும்பங்கு செலுத்த வேண்டியவர்கள் அவர்களே! நிதி ஒதுக்க வேண்டியது அவர் கள் பொறுப்பே!இத்தகைய கருத்துக்களை தனது தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் காஸ்ட்ரோ உலகின் மனசாட்சியில் விதைத்தார்.

ஆனால் மனசாட்சியை லாபவெறிக்கு பலியிட்டு விட்ட வல்லரசுகள் மற்றும் சுரண்டும் கூட்டத்தின் நெஞ்சில் மட்டும் அந்த பசுமை விதை முளைக்கவே இல்லை. ஏனெனில் அந்த முதலாளித்துவ ஜென்மங்களின் நெஞ்சில் ஈரமே இல்லை. 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஜோகன்னஸ்பர்க்கில் கூடிய உச்சிமாநாட்டின் முடிவுகள் அதைத்தான் பிரகடனப்படுத்துகின்றன

.உலகிலுள்ள பெரும் நகரங்கள் கூட்டாக இயற்கை வளங்களில் 75 விழுக்காட்டை நுகர் கின்றன. 50 விழுக்காடு குப்பைகளை வெளி யேற்றுகின்றன. 70 விழுக்காடு பசுமை வாயுவை உமிழ்கின்றன. இந்த நுகர்வுவெறி குறைவதற்கான அறிகுறியே காணோம். இதற்கு கடிவாளம் போடும் எந்த முயற்சியும் வெற்றிபெறவே இல்லை.உலகில் 30 விழுக்காடு பல்லுயிர்கள் அழிவதற்கு சர்வதேச நுகர்வுச் சங்கிலியே காரணம் என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. உலக மக்களின் நுகர்வுக் கலாச்சாரம் இப் படியே போனால் என்ன ஆகும்?

இருபது ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை மேலும் 200 கோடி அதிகரித்திருக்கும்; நகர்மயமாதல் இரட்டிப்பாயிருக்கும்; விளை நிலங்கள் மிக மிக குறைந்திருக்கும்; கடல்வளம் வற்றியி ருக்கும்; இயற்கை வளங்கள் வற்றி வறண்டு மலட்டுத்தன்மை நோக்கி நகரத் தொடங்கி யிருக்கும் என இயற்கையை - உலகை நேசிப்போர் பதறுகின்றனர். ஆனால் ஜோகன் னஸ்பர்க் மாநாடு இப்பிரச்சனைகள் குறித்து ஆக்கப்பூர்வமான எந்தச் செயல்திட்டமும் இன்றி கூடிக் கலைந்திருக்கிறது. வெற்றுப் பிர கடனத்தைத் தவிர வேறெதுவும் விளையவில்லை.

‘மக்கள் தொகை அணுகுண்டு’ என ஒரு புத்தகம் எழுதி அறுபதுகளில் பெரும் பரபரப்பு ஊட்டியவர் பவுன் ஆர் எரிச்.அவரது மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்கள் பொய் யாகி இருக்கலாம்; அதன் காரணமாக அவர் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கலாம்; ஆயினும் அவர் கடும் வார்த்தைகளில் எச்சரித்த உணர்வுகள், இன்றும் பொருத்தவே செய்கின்றன.

அவர் இன்றைய சூழல் குறித்த ஒரு பேட்டியில், எதிர்காலம் ஆறு விதமான பேரழிவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார்.ஒன்று, பருவநிலை மாற்றம் விவசாயத்தைச் சீரழிக்கும்; கொள்ளை நோய்களைப் பரப்பும்.இரண்டு, கடல்நீர்மட்டம் உயர்வதால் நாடு நகரங்களுக்குள் புகுந்து, உலகெங்கும் பெரு மளவு மக்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாவர். மூன்று, நச்சு வேதியியல் கழிவுகளால் வடதுருவம் முதல் தென் துருவம் வரை என் னென்ன விளைவுகள் ஏற்படுமென்று இன் னும் ஊகிக்க முடியவில்லை; அதைக் கட் டுப்படுத்த திட்டமும் இல்லை; ஏழு வயதி லேயே புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயம் நேரி டலாம்.நான்கு, பல்லுயிர்கள் வேகமாக அழிக்கப் படுவதால் சுற்றுச்சூழலும் புவிச் சமநிலையும் பாதிக்கப்படும். இதன் விளைவுகள் கடுமை யாக இருக்கும்.ஐந்து, நெடுங்காலமாய் கட்டுப்படுத்தி வைத்திருந்த தொற்றுநோய்கள் மீண்டும் விஸ்வரூபமெடுத்து உலகை மிரட்டலாம். ஆறு, உலகில் சகிப்புத்தன்மை அற்றுப் போய் அணுயுத்தம் மூளலாம். அது உலகையே இதுவரை பூமிக்கோளம் அறியாப் பேரழிவு களைக் கொண்டு வரலாம்.இவ்வாறு அவர் எச்சரிப்பது மிகை அல்ல.

காத்திருக்கும் ஆபத்தே.அதுமட்டுமா, தண்ணீர் பற்றாக்குறை உலகை புரட்டிப் போடலாம். தண்ணீருக் காகத்தான் இனி மூன்றாம் உலகப்போர் நடக் கலாம் என்று கூட கூறப்படுகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதால் - புவிவெப் பமாவதால் - ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்தாலே வயிற்றைக் கலக்குகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வழியில்லாமல் போகலாம். “இனி, காசு உள்ளவருக்கு மட்டுமே காற்றும் தண்ணீரும்” என்பது சுரண்டும் கூட்டத்தின் நெறிமுறை ஆகலாம்.இந்த புவியைக் காப்பாற்ற வேண்டாமா? முயன்றால் முடியும்.

ஜோகன்னஸ்பர்க் நகரம் குப்பைகளையும் கழிவுகளையும் மறுசுழற்சி செய்வதன் மூலம் வெறுமே மூன்று விழுக்காடு கழிவையே நிலத்தில் கொட்டி உலகிற்கு வழி காட்டுகிறது. உகாண்டா நாடு கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த வழிகண்டு, வழி காட்டுகிறது. மால்டா மின் உபயோகத்தை கட் டுப்படுத்த மாதிரி அமைக்கிறது.பெய்ஜிங் நகரில் இன்னும் சைக்கிள் பெரு மளவு உபயோகிக்கப்படுவதும்; அதற்கென சாலைத்திட்டமிடலில் பாதை அமைப்பதும் தொடர்கிறது.

இந்தியாவோ கண்ணை மூடிக்கொண்டு, பன்னாட்டு ஆட்டோமொபைல் முதலாளி களின் வலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. நகரங்களில் சைக்கிள்கள் ஓரங்கட்டப்பட்டு பெருமளவு மோட்டர் சைக்கிளும் கார்களும் ஆக்கிரமிக்கின்றன.பெட்ரோல் புகை காற்றை மாசுபடுத்துகிறது. அதீதமான பெட்ரோல் பயன்பாடு இயற்கையை கண்மூடி உறிஞ்சச் செய்கிறது. சாலையின் தன்மைக்கும் அளவுக்கும் சம்பந்தமே இல்லாமல் பெருகும் இந்த மோட்டார் வாகனங்கள் விபத்துகளில் மனித உயிர்களை ஏகமாக பலிவாங்குகிறது. ஆயி னும் உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங் களின் சொல்படி நாட்டுப் பொருளாதாரத் தையும் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழ லையும் ஒருசேர அழிக்கும் பாதையில்தான் இந்தியப் பொருளாதாரமும் திட்டமிடலும் விரைகிறது.

“நவீனத் தொழிற்துறையும் விவசாயமும் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை மீண்டும் அரங்கத்துக்கு கொண்டு வருகின்றது” என மாமேதை மார்க்ஸ் சித் தரித்தது மெய்யாகிவிட்டது.“உற்பத்தி நிகழ்முறைகள் புதிரானதாக இருந்த பழைய காலத்துக்கு மீண்டும் திரும்ப முடியாது” என்பதையும்; “விஞ்ஞானம், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” என்பதையும் மார்க்ஸ் கூறினார்.

தற்போது எழுந்துள்ள சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து டேவிட் ஹார்ஷி என்கிற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் - (காரல்மார்க்ஸின் மூலதனத்துக்கு வழிகாட்டி எனும் நூலை எழுதியவர் கூறிய கருத்துக் களை நெடிய மேற்கோளாக கீழே தருவது தவிர்க்க முடியாதது.)

“சில மார்க்சிஸ்டுகள் - குறிப்பாக ‘முத லாளித்துவம் - இயற்கை - சோசலிசம்’ என்ற தலைப்பில் ஒரு இதழை நிறுவியுள்ள ஜிம் ஓ கோன்னோர் என்பவர் தலைமையிலான மார்க்சிஸ்டுகள், இயற்கையில் காணப்படும் தடைகளை இரண்டாவது முரண்பாடாகக் குறிப்பிடுகின்றனர். மூலதனம் - தொழிலாளர் உறவே முதல் முரண்பாடு. இந்த இரண்டாவது முரண்பாடு தொழிலாளர் பிரச்சனையைப் போலவே அதே அளவு அரசியல் கவனத்தை (அதைவிடக் கூடுதலான அளவில் இல்லாவி ட்டாலும்) ஈர்க்கிறது என்பது உண்மையே. முத லாளித்துவம் மேலும் வளர்ச்சி அடைய சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத விதத்தில் - கச்சாப் பொருட் களையும் மூல ஆதாரங்களையும், நிலத் தையும் வழங்கும் விதத்தில் இயற்கை இருக்க வேண்டும். அத்துடன் கழிவுகளை இழுத்துக் கொள்ளும் தொட்டியாகவும் அது விளங்க வேண்டும். இந்த விதத்தில் இயற்கையு டனான உறவில் நெருக்கடி ஏற்படுத்தல் என்ற கருத்துக் குறித்து கவலை, அரசியல் ஆர்வம் மற்றும் முயற்சிக்கான விரிவான தளம் இருக்கிறது என்பது உறுதி. 1970களில் தொழிலாளர் இயக் கங்களும் சோஷலிச இயக்கங்களும் தோல் வியடைந்த பிறகு முதல் முரண்பாட்டின் இடத்தில் - முதலா ளித்துவ எதிர்ப்பு இயக்கத் தின் முக்கிய அம் சமாக - முதலாளித்துவத் தின் இரண்டாவது முரண்பாடு முன்னுக்கு வருகிறது என்ற கருத்தை ஜிம்.ஓ.கோன் னோர் தெரிவித் துள்ளார். இந்த வித அரசியலை எவ்வளவு தூரத்துக்குத் தொடர வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வதை உங்க ளிடமே விட்டுவிடுகிறேன்.

‘மூலதனம்’ முதல் தொகுதியில் மார்க்ஸ் அளித்துள்ள வரைபடத் தைக் கருத்தில் கொண்டோ மெனில், இயற் கையுடன் உறவு குறித்த பிரச் சனையை மிகச் சிறியதாகவோ எளிதான தாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு. நம் முடைய காலங்களில் இயற்கை யுடனான உறவில் உள்ள தடைகள் பெரிய அள வில் அச்சமூட்டும் வகையில் நம்மைச் சூழ்ந்து வருகின்றன. இயற்கையுடனான நமது உறவில் நெருக்கடிகள் நம்மை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவு.”

அவர் கூறியது மெய்யே! முதலாளித்துவச் சுரண்டல் வெறியால் ஓசோன் படலம் மட்டும் ஓட்டை விழவில்லை. ஒட்டுமொத்த பூமிக் கோளமும் நெருக்கடியை நோக்கி மரண வேகத்தில் நகர்கிறது. முதலாளித்துவ அமைப்பே ஓட்டையாகிவிட்டது. பொருளா தார நெருக்கடி தீவிரமடைவதும்; இருப்போ ருக்கும் இல்லாதோருக்குமான இடைவெளி பன்மடங்கு பெருகுவதும்; சுற்றுச்சூழலும் புவிச் சமநிலையும் சீர்கெடுவது ஒன்றோடொன்று இணைந்தது. இதற்கு எதிரான போராட்டமும் பன்முகத்தன்மை கொண்டதாகவே இருக்க முடியும்.










தீக்கதிரே பதிலாகும்

Posted by அகத்தீ Labels:

















ஊடக பூதமும் நம் கை ஆயுதமும்

Posted by அகத்தீ Labels:


ஊடக பூதமும் நம் கை ஆயுதமும்
சு.பொ.அகத்தியலிங்கம்


“உலகம் உயர்ந்தோர்கள் மாட்டே” என்பார்கள் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். “உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பதுதான் உண்மை. ஆகவே தான் நான் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பெரியார்.வெறும் பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடப்போகிறது? நடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமா? வேண்டும். அவரிடம் அமைப்பும் இருந் தது. பிரச்சாரமும் இருந்தது. இரண்டும் இணைந்தபோது அது ஒரு மாபெரும் சக்தியாக எழுந்தது

சுயமரியாதைத் தோழர்களின் பிரச் சார வலிமை என்னை வியக்க வைக் கிறது. இப்படியே போனால் அவர்கள் ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அடுத்து கூறினார்- அவர்கள் சமூகசீர்திருத்தத்தோடு சமத்து வப் பொருளாதாரப் பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்துவதும் அவசியம் என வலியுறுத்தினார்.

இந்த பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் ஏடுகளே! ஏடுகள் இல்லாமல் விடு தலைப் போராட்டமும் இல்லை.ஏடுகள் இல்லாமல் திராவிட இயக்கமும் இல் லை. ஏடுகள் இல்லாமல் கம்யூனிஸ்ட் இயக்கமும் இல்லை. தமிழகத்தைப் போல் அரசியல் சார்பு ஏடுகள் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்றே சொல்லலாம்.* தேசிய இயக்க ஏடுகள்* திராவிட இயக்க ஏடுகள்* பொதுவுடைமை இயக்க ஏடுகள் என சில வருடங்கள் முன்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக் கம் அறக்கட்டளையும் இணைந்து தொடர் கருத்தரங்குகளை சில வாரங்கள் நடத்தின. ஆம் அவ்வளவு விரிவும் ஆழமும் கொண்ட வரலாறு இந்த ஏடு களுக்கு உண்டு.

அந்த வரலாற்று நெடுஞ்சாலையில் ‘தீக்கதிர்’ என்கிற அக்னிக்குஞ்சு பயணம் புறப்பட்டு ஐம்பதாவது ஆண்டில் நுழைவது சாதாரணச் செய்தியா?சமுதாய வரலாற்றில் வேண்டு மானால் ஐம்பதாண்டு, நூறாண்டு என்ப தெல்லாம் சிறிய காலகட்டமாக இருக்க லாம்.தனிமனித வாழ்வில் 75 ஆண்டே பெரிது எனலாம்.

ஐம்பதாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளன. இன்று ஏடுகள் நடத்துவது சுலபமல்ல. மிகப் பெரிய செலவு கொண்ட நடவடிக்கை. மறு புறம் ஊடகங்கள் ஆதிக்கம் ஊதிப் பெருத்துவிட்டது. பொய்யை மெய் யென்றும் மெய்யை பொய்யென்றும் நம்பவைக்கும் பேராற்றல் கொண்ட பூதமாக அவை எழுந்துள்ளன. ஆகவே இப்போது “ஏடுகள் நடத்துவதும்” “பிரச்சாரம் செய்வதும்” மிக நுட்பமான சவாலான பணி.இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதயத்தை முன்னறி வித்து, போர்க்களத்தில் ‘பைலட் ஸ்குவாடு’ செல்வதுபோல் முன்சென்ற “தீக்கதிர்” ஐம்பதாண்டில் அடியெடுத்து வைக்கும் அரிய தருணத்தில் இன்றைய சவால்களை சற்று ஆழ்ந்து கவனிப்பது அவசியமாகும்.

மேற்குவங்கத்தில் நிலச்சீர் திருத்தத்தை அமல்நடத்தியதில் மார்க் சிஸ்ட் கட்சி அரசு மகத்தான சாதனை புரிந்தது; ஆனால் அதி அற்புதமான அந்தச் செயலை எந்த ஊடகமும் பாராட்டவும் இல்லை; மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இல்லை.ஆனால் நந்திகிராமம், சிங்கூர் பிரச்சனையை பூதாகரமாக்கி கம்யூனிஸ்டுகள் விவ சாயிகளின் எதிரி; நிலத்தை பறிப்பவர்கள் என்ற திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விட்டனவே!

இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுக்கான போரில் - மக்கள் ஒற்றுமைக்கான போரில் கம்யூ னிஸ்டுகளை விட அதிகம் உயிர்த் தியாகம் செய்த கட்சி எது? கம் யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட போது தமுக்கடிக்காத ஊடகங்கள், தனி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி அதில் கட்சியினரை மாட்டி வைத்து, கம்யூனிஸ்டுகளின் அரசியல் கொலைவெறி என கேரளா முழுவதும் ஆளும் வர்க்கமும் ஊடகமும் செய்யும் விஷமப் பிரச்சாரத்தை என்னென்பது?

பத்தாயிரம் மலைவாழ் மக்கள் சென்னையில் பிருந்தா காரத் தலைமை யில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வென்றதை செய்தியாக வெளியிடாத ஊடகங்களே அதிகம்.

மேற்குவங்கமாயினும், கேரளமாயினும், கம்யூனிஸ்டுகள் வலிமையாக இருப்பது பன்னாட்டு சுரண்டல் கூட்டத்துக்கும் உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்துக்கும் மதவெறியர் களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்தியா முழுவதும் இடதுசாரிக் கருத் துக்களை, அவர்களது செயல்பாட்டுக்கு தடையாகப் பார்க்கிறார்கள். இடதுசாரி களை ஒழித்துவிட்டால் அவர்களின் ஆதிக்கமும் கொள்கையும் தங்கு தடையின்றி நடக்கும் அல்லவா?

ஆம், இடதுசாரிகளுக்கு எதிராக அவதூறு களை அள்ளிவீச ஊடகங்களை கைப் பிள்ளை ஆக்குகிறார்கள். குறிப்பாக இடது சாரிக் கருத்துக்களின் மையப்புள்ளியாக செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கொச்சைப்படுத்துவதும்; இதுவும் ஊழல் கட்சி, இதுவும் பதவி வெறியர் கூடாரம்; இதுவும் சமூக விரோதிகள் மேடை; இவர்கள் இப்போது கொள்கையை இழந்துவிட்டார்கள். காலத்துக்கு ஒவ்வாத வறட்டுக் கோ ஷங்கள் மட்டுமே மிச்சமிருக்கிறது என மக்களின் பொதுப்புத்தியில் விதைக்க ஊடகங்கள் படாதபாடுபடு கின்றன.

நீண்ட கட்டுரைகள் ஒரு சாராருக்குப் போதும்; ஆனால் செய்திகளூடே தன் விஷமக் கருத்தையும் கலந்து விதைத் தால் எளிதாக கருத்துகள் மக்களின் பொதுப்புத்தியைத் தொட்டுவிடும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்படியே செயல்படுகிறார்கள். இந்த ஊடகங்கள் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டிருப்பதால், தவறான கருத்து களும் திசை திருப்பும் தகவல்களும் மிக எளிதில் மக்களின் மனதில் பதி யவைக்கப்பட்டு விடுகின்றன. இதனை அழித்து சரியான சித்திரத்தைத் தீட்டு வது அவ்வளவு எளிதல்ல.

ஆம், அந்த சவால்மிக்கப் பணியில் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் எது? நமது சொந்த ஏடு மட்டும்தானே!ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது இயற்பியல் சக்தி யாகும் என்று மார்க்ஸ் கூறியது இப்போதுசாலப்பொருந்தும்;அந்த கருத்துப்போரில் ஆளும் வர்க்க ஊடகங்களை நம்பி இறங்க முடியுமா?

உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் அவர்கள்; நெருக்கடியான நேரத்தில் - முக்கியமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்துவிடுவார்கள் அல்ல வா? இதை நாம் உணர்ந்தாக வேண் டாமா?

ஒரு கட்சிக்கு கொள்கையை, கருத் தை பிரச்சாரம் செய்வதைவிட முதன் மைப் பணி வேறென்ன இருக்க முடியும்?பத்திரிகை, பிரசுரங்கள் படிப்பதையும் விற்பதையும் தவிர வேறு எது தலையாயப் பணியாக இருக்க முடியும்?

தீக்கதிரை பாதுகாப்போம்...
தீக்கதிரை பலப்படுத்துவோம்...
தீக்கதிரை செழுமைப்படுத்துவோம்...

தீக்கதிர் பொன்விழாவை ஊரெங்கும் கொண்டாடுவோம். 
 தீக்கதிரை வீடு தோறும் கொண்டு செல்வோம்!

இது பொன்விழா சபதமல்ல; 
பொன் னுலகம் காணப் பூணும் புரட்சிகர சபத மாகும்.








மூலதனத்தைப் படிக்க - புரிய எளிதான வரைபடம்

Posted by அகத்தீ


மூலதனத்தைப் படிக்க - புரிய எளிதான வரைபடம்

சு.பொ.அகத்தியலிங்கம்

மார்க்ஸின் மூலதனத்திற்குள்
பயணிக்க ஒரு வழிகாட்டி
ஆசிரியர்: டேவிட் ஹார்வி
தமிழில்: இலக்குவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
பக்: 496, விலை: ரூ. 300/-

மூலதனம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட் டது. முன்பு அதை படிக்காமல் இருந்ததற்கு தமிழில் மூலதனம் இல் லையே என்று கூறி தப்பித்துவிடலாம். ஆனால் தமிழில் மொழி பெயர்க் கப்பட்ட பின்பு அதை முழுமையாகப் படித்தவர் எத்தனைபேர்? புத்தக அலமாரியில் தூசு படிந்து கம்பீரமாய் மூலதனத் தொகுப்புகள் இருப்பது பெருமை அல்ல, அதைப் படிப்பது எப்போது? படித்தால் புரியவில்லை என்று பொதுவாக கூறும் காரணம். அதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது, ஆயினும் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு அது மூடுதிரையாக அமைந்தது! இனி அப்படியும் தப்பிக்க முடியாது. ஆம், நம் கையைப் பிடித்து மூலதனத்திற்குள் அத்தியாயம் அத்தி யாயமாய் அழைத்துச் சென்று படிக்கவைக்க ஒரு வழிகாட்டி கிடைத்துவிட்டது. இது வரை மேற்கத்திய உலகில் மட்டும் பல நூற்றுக்கணக்கானோரை மூலதனம் எனும் அறிவுப் பொக்கிஷத்திற்கு அழைத்துச் சென்ற அந்த வழிகாட்டி நூலை தமிழில் வெளியிட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளது பாரதி புத்தகாலயம் . இலக்குவன் மொழி பெயர்ப்பு வாசிப்பை மேலும் எளிதாக்குகிறது.இந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இனியும் வாய்ச்சவடால் பேசித் திரிவது சரியாகுமோ?

டேவிட் ஹார்வி மூன்று வகையில் வழிகாட்டுகிறார். முதலாவதாக மார்க்சின் வழி முறைப்படியே மூலதனத்தை எப்படி வாசிக்க வேண்டுமென அங்குல அங்குல மாக பாடம் நடத்துகிறார்.இரண்டாவதாக, இன்றைய உலகமயச் சூழல், மார்க்ஸ் காலாவதியாகிவிட்டார் என் கிற வாதத்தை தவிடுபொடியாக்கி மார்க்ஸின் மூலத்தத்துவத்தை உரக்க ஒலிக்கிறார். அதே சமயம் ஆங்காங்கு பொருத்தமான விமர்சனங்களையும் மறுப்புகளையும் முன் வைக்கிறார். இது மார்க்ஸை இன்றைய சூழலில் சரியாக புரிந்து கொள்ள வழி செய்கிறது. மூன்றாவதாக, மூலதனம் பயிலும் செயல்பாடே ஒரு சமூகமாற்றச் செயல் பாடுதான். களப்போராட்டத்தை மேலும் கூர்மையாக நடத்திட வழிகாட்டும் என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியவைக்கிறார்.

மார்க்ஸ் ஏன் வர்க்கப் போராட்ட வரலாற்றுடன் மூலதனத்தைத் தொடங்க வில்லை? பணம் பற்றிய கோட்பாட்டுடன் தொடங்கவில்லை? அறிமுகப்பகுதியில் இந்த கேள்விகளை எழுப்பி ஒரு மர்மக்கதை படிக்கும் பரபரப்பை விதைக்கிறார். இந்த அத்தியாயம் நீளமானது, வாசிக்க சலிப்பூட்டுகிறது. இந்த அத்தியாயம் இலக் கியச்சுவை ஊட்டுவதாக உள்ளது என ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் ஒரு முன் னோட்டத்தை நம் முன் இந்நூல் வைத்துவிடுகிறது. இந்த மலையை ஏறிக்கடந்தால் தான் அந்த ஆற்றை கடக்கும் படகு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் வழிகாட்டலும் நிச்சயம் மூலதனத்தை முழுதாய் படிக்கச் செய்திடும் சீரிய முயற்சியே. இதற்காக ஹார்வியை பாராட்டித் தான் ஆகவேண்டும் பலரும் மூன்றாவது அத்தியாயத்துடன் மூலதனம் படிப்பதை நிறுத்திவிடுவார்கள் என முதலிலேயே பீடிகைபோடும் ஹார்வி அதிலிருந்து வாசகர்களை மீட்டு தொடர்ந்து படிக்க ஆசையைக் கிளறி விட்டுள்ளார். இந்நூலின் முதல் வெற்றியே அது தான்.

படித்தவற்றை எளிதாக மனதில் பதிய வைத்து அடுத்துச் செல்ல உதவும் வகை யில் சில வரைபடங்களைப் பயன்படுத்தியுள்ளார். நான்காவது அத்தியாயம் தொடங் கும் போது முந்தைய அத்தியாயச் சுருக்கங்களை வரைபடமாகத் தந்து விட்டு ஹார்வி எழுதுகிறார்., மார்க்சின் வாதங்கள் இதுவரை பயணித்துள்ள திசை வழியின் மீது எனது பார்வையைச் செலுத்த விரும்புகிறேன். ஒரு சங்கிலி இணைப்பு போல அமைத்து அவர் முன்வைத்துள்ள அடிப்படை வாதங்களை ஒரு வரைபடச் சித் தரிப்புடன் விளக்கி உள்ளேன். மார்க்சின் வாதங்களை இத்தகைய வடிவத்தில் சுருக்குவது அவரது வளமான சிந்தனைக்கு தவிர்க்க முடியாதபடி அநீதி இழைப்ப தாகவே இருக்கும். ஆனால் அவரது வாதங்களை ஏதோ ஒரு விதத்தில் உய்த்துணரக் கூடிய ஒரு வரைபடமாகத் தயாரிப்பதன் மூலம் சுழித்தோடும் நீரோட்டத்தில் எளிதாக நீங்கள் உங்களுடைய கலத்தைச் செலுத்த முடியும்.
இந்த வரிகள் ஹார்வியின் நேர்மையையும், தாம் எடுத்துக் கொண்ட பணியை நிறைவேற்ற வேண்டும் என்கிற அக்கறையையும் ஒருங்கே புலப்படுத்துகின்றது.

 தனது முந்தைய பொருளாதார நிபுணர்களிடமிருந்து மார்க்ஸ் எதனை எடுத்துக் கொண்டார்? எதனை விமர்சித்தார்? எதனை மாற்றி அமைத்தார்? அதன் தேவை என்ன? சூழ்நிலை என்ன? என்பதை இந்நூல் நெடுக ஹார்வி சுட்டிச் செல்கிறார். டார்வினைக் கூட விமர்சனம் இன்றி மார்க்ஸ் ஏற்கவில்லை என்பதையும் அதே சமயம் அவரது பரிணாம ஆய்வைப் பாராட்ட வேண்டிய அளவு பாராட்டியிருக்கிறார், பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் ஹார்வி பதிவு செய்கிறார்.

எட்டாவது அத்தியாயத்தைப் பற்றி வழிகாட்டும் போது கூறுகிறார், இந்த மிகப் பெரிய அத்தியாயத்தை வாசிக்கும் போது (அதிலேயே மூழ்கப்போவதும் கூட நடை பெறலாம்) அதில் இடம்பெற்றுள்ள ஒட்டு மொத்த வாதத்தின் ஆற்றலைப்பற்றி உணர் வைப் பெறுவதற்கு அதன் பிரிவுத் தலைப்புகளின் மீது கவனம் செலுத்துவது உதவி யாக இருக்கும் என்று கூறுவதுடன் அவ்வாறு நினைவூட்டவும் செய்கிறார். மூலதன நூலை வாசிக்க இப்படி ஒவ்வொரு கூறாக பயிற்சி யளித்திருப்பது மிக முக்கியமானது.

16- ஆம்அத்தியாயத்தில் காணப்படும் புதிய பார்வை சர்ச்சைக்கிடமானது என்பதையும் விட சற்றுக் கூடுதலானது. எனவே அதனைக் கவனமுடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது என ஹார்வி பீடிகைபோட்டே தொடங்குகிறார். மார்க்ஸை ஆராதிப் பவராக தொண்டரடிப்பொடியாக நின்று விதந்தோதாமல், மார்க்ஸ்சை சரியாக புரிந்து கொள்ளவும் விமர்சனப் பார்வையோடு அணுகவும் ஹார்வி முயற்சித்துள்ளார். மார்க் சின் முடிவுகள் எல்லாம் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய கூற்றுகள் அல்ல. அவரது அனுமானங்களின் அடிப்படையிலும் அவற்றின் வரம்புக்குள்ளும் அமைந்த நிச்சயமற்ற ஆய்வு முடிவுகள். இதனை மறந்தோம் எனில் அது நமக்கு பாதகமாக முடியும். என்கிறார் ஹார்வி ஓரிடத்தில். இதன் பொருள் ஹார்வி மார்க்ஸ்சை நிராகரிக்கிறார் என்பதல்ல.

 மார்க்சின் சில அனுமானங்கள் மாறியுள்ளதை மறுக்கக் கூடாது: என்கிறார் அவ்வளவே. பிறிதொரு இடத்தில் ஹார்வி கூறுகிறார். நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் அளவில் அமைந்த தொழில் நுட்ப மற்ற வடிவங்கள் குறித்த அவரது (மார்க்சின்) உள்ளுணர்வு சரியானதே என்பதும் என் (ஹார்வி) கருத்து. (ஆனால் பலரும் என் கருத்துடன் உடன்பட மாட்டார்கள்) இப்படி பகிரங்கமாக சில விமர்சனங்களையும் மாறுபாடுகளையும் சுட்டிச்செல்கிற ஹார்வி ஒட்டு மொத்தத்தில் மார்க்ஸ் வழியே இன்றும் சரியானது என்பதில் அசைக்க முடியா பற்றுறுதியை வெறும் வறட்டு நம்பிக்கையாக அல்ல அறிவியல் பூர்வமான தெளிவோடு பிரகடனம் செய்கிறார்.

கடந்த கால் நூற்றாண்டுகாலமாக நம்மில் பலர் ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வர்க்கம் என்பது முக்கியமானதல்ல, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தே பத்தாம் பசலித்தனமானது, நடைமுறை உலகுடன் ஒட்டாத அறிவார்ந்த டைனோசர்களின் தீவனம் அது என்றெல்லாம் நம்மிடம் மீண்டும் மீண்டும் கூறப் படுகிறது. ஆனால் வர்க்கப்போராட்டம் என்பதை நமது அரசியல் பதாகையில் பொறிக் காமல் அதன் பேரிகை முழக்கங்களுக்கு ஏற்ப அணிவகுக்காமல் நாம் முன்னேற முடியாது என்பதைத் தான் மூலதனம் நூலின் வாசிப்பு மறுக்க முடியாத வகையில் நமக்கு உணர்த்துகிறது.

மேலும் ஹார்வி அவரே கூறுவது போல உரையாடல் மற்றும் விவாதத்துக்கான பரப்பைத் திறந்துவிட்டு அதன் மூலம் உலகத்தைப் பற்றிய மார்க்சின் மனக் காட்சியை அறிவுத்தளத்தில் அரசியல் ரீதியிலும் மீண்டும் அரங்கின் மையப் பகுதிக்கு கொண்டுவருவது என்கிற தனது கடமையை இந்நூல் மூலம் மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்.

இந்த நூலை படித்து முடித்த போது (படிப்பதற்கு மொத்தமாக 9 மணி நேரம் ஆனது எனக்கு) எனக்குள் மூலதனம் படிக்கும் ஆவல் பீறிட்டது. அதை எப்படிப் படிக்க வேண்டும் என்கிற திட்டமும் உருவானது.
முதலில் ஹார்வியின் இந்த வழிகாட்டும் நூலை தோழர்களுடன் கூட்டாக அமர்ந்து வாசிக்க வேண்டும். அதனையே ஹார்வியும் வலியுறுத்துகிறார்.
இரண்டாவதாக, அந்த வெளிச்சத்தில் சிரமம்பாராமல் புரிந்தாலும் புரியாவிட்டா லும் மூலதனத்தை முதலில் முழுதாக மொத்தமாக ஒரு முறை வாசித்துவிட வேண்டும்.
மூன்றாவதாக, மீண்டும் முதல் அத்தியாயத்திலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் புதியவெளிச்சத்தில் மூலதனத்தைப் புரிய முடியும் என் கிறார் ஹார்வி. மெய்தான்.. ஆம் அப்போதுதான் அவர் விரும்பியது போல் நாம் சொந்தமாகப்படித்து சொந்த மான கருத்துக்கு வர இயலும். அதற்கு வழிகாட்டுவது தான் இந்நூல்.

உலகம் இடைவிடாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்ப தால் அறுதியான, முழுநிறைவான, துல்லியமான புரிதல் என்பது இருக்கவே முடியாது. எனவே மீண்டும் மீண்டும் மூலதனம் நூலை வாசிப்பதன் மூலமே புத்தொளி பெற முடியும்.

குறிப்பு: அருஞ்சொல் பொருள் விளக்கத்தை - ஆங்கில மூலத்துடன் பின் இணைப்பாக அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். அது புரிதலை மேலும் எளிதாக் கும். வருங்காலத்தில் மொழிபெயர்ப் பாளர்கள் ஒரே மாதிரி சொற்களைப் பயன்படுத்த வசதி ஏற்படுத்தித்தரும்.

வாசகர்கள் கருத்துக்கள்

உங்கள் கருத்துகளை பதிவு செய்ய

பெயர்
மின் அஞ்சல்
கைப்பேசி எண்
உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யவும்

 
 

அசோகனின்காதலி தமிழச்சி

Posted by அகத்தீ


அசோகனின்காதலி தமிழச்சி
- சு.பொ. அகத்தியலிங்கம்
 
காருவகி
ஆசிரியர்: இளவேனில்,
வெளியீடு : கொற்றவை, 4, சுந்தரம் தெரு, நடேசன் பூங்கா அருகில், தியாகராய நகர், சென்னை - 600 017,
பக்: 256, விலை: ரூ. 140/

நெடுநாட்களுக்குப் பிறகு இள வேனிலின் கவிதை கொஞ்சும் எழுத் தோவியத்தை “காருவகி” வரலாற் றுப் புதினத்தில் சுவைக்க இனிக் கிறது.“அசோகனோடு கலிங்கப் போரில் போரிட்டது யார்?” தோற் றத்தில் மிக எளிமையாகக் காட்சி அளிக்கும் இக்கேள்வி மிகப் பெரும் வரலாற்றுச் சிக்கலை உள்ளடக்கி உள்ளது. அதை அவிழ்க்க இளவே னிலுக்கு துணைவருகிறார் பன் மொழிப்புலவர் அப்பாதுரையார். “செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி” “பாழிக்கோட்டை” “வம்ப மோரியர்” என்ற சொற்களை பகுத் தாய்ந்து கலிங்கப்போரில் அசோக ரோடு பொருதியது இளஞ்சேட் சென்னியே என்கிற முடிவுக்கு வருகிறார்.
அத்துடன் அசோகனின் காதலி காருவகி தமிழ்ப்பெயரே என தமிழண்ணல் கொடுத்த விளக்கமும் தோள்கொடுக்க, இளவேனிலின் தத்துவ, அரசியல் பார்வை உடன் சேர; கற்பனையில் மலர்ந்துள்ளது இந்த வரலாற்றுப் புதினம்.

இந்த நாவல் நெடுக புத்தனின் பெருமைகளும் சனாதன பிராமணி யத்தின் சிறுமதிகளும் சூழ்ச்சிகளும் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கௌடில்யரின் குரூர வர்ணாஸ்ரம வெறியை - சனாதன சாம்ராஜ்யம் சமைக்க மேற்கொள்ளும் யுத்தியை வலுவாக தோலுரிக்கிறார் இளவே னில். அதேசமயம் கௌடில்யரின் மறுபக்கமாக - அவருக்கு தாழ்வு மனப்பான்மையில் தோன்றிய குரூர வெறி என நியாயம் கற்பிக்கும் ஒரு கிளைக் கதை விரிக்கிறார்.

மருத்துவர் நெல்லியங்கோடு, திரையன், அன்னிமிஞிலி, உலும் பினி, உபகுப்தர், பசுங்குடையார் என நம் நெஞ்சைக் கொள்ளை கொள் ளும் பாத்திரங்களை உயிரோடு உலவவிட்டுள்ளார். தமிழச்சி அன்னி மிஞிலி அசோகன் காதலியாக வந்து வரலாற்றையே தடமாற்றம் செய்வ தும் ருசிக்கத் தகுந்த பகுதிகள்.

“இன் றைய உலகில் ஒருவன் உயிரை விட்டு விடலாம். அரசியலை விட்டு ஒதுங்கி விட முடியாது. எனக்கு அரசியலே இல்லை என்பது கூட ஒரு வித அரசி யல் தான்” என உரையாடல்கள் ஒவ் வொன்றிலும் இளவேனில் முகம் காட்டுகிறார்.“தவறான மனிதன் கூட தன்னல மற்றவனாய், பணத்தாசையற்றவ னாய் இருந்தால், தலைவனாக மதிக் கப்படுவான்”.
“எத்தனை அறிவாற்றல் மிக்க தலைவனாக இருந்தாலும் சுகங்க ளில் சொக்கிப் போனால், தன் பிள்ளை, தன் குடும்பம் என்று சுருங் கிப் போனால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து போவான்.”“கொலுமண்டபத்திற்கு வந்தா லும், வாழ்க! கொலைக் களத்திற்கு வந்தாலும் வாழ்க! சாமி கும்பிட வந்தாலும் வாழ்க! தாசியுடன் புரளப் போனாலும் வாழ்க! உங்களை வாழ்த் தியே மொழிகளெல்லாம் நாறிப் போச்சு!இப்படி நாவலில் சுழலும் உரை யாடல் சவுக்குகள் பல நிகழ்கால அரசியலுக்குக் கச்சிதமாகப் பொருந் துகின்றன. அங்கே தான் இளவேனில் நிற்கிறார்.

அசோகனின் தாய் என்பதும்? அவள் நாவிதச்சி என்பதும்? கௌ டில்யரின் தந்தையார் என்பதும்? அவர் சூத்திரன் என்பதும் நாவலின் முக்கியச் செய்தி. சாதிவெறியும் சிம்மாசன வெறியும் சூழ்ச்சிவலை யும் மிக்க மகத சாம்ராஜ்யமும், அதற்கு நேர் எதிராக அருங்குணங்க ளின் ரோல்மாடலாய் தமிழ் மன்னர் களையும் எதிர் எதிரே நிறுத்தி இள வேனில் நாவலை நகர்த்துகிறார்.


இதற் கான வரலாற்று ஆதாரங்களைக் காட்டிலும் இலக்கிய ஆதாரங்கள் சார்ந்தே நாவல் பின்னப்பட்டுள்ள தால் இந்நாவல் புதிய விவாதத்தை முன்னெடுக்கிறது.வரலாற்றின் இருண்ட தாழ்வாரங் களில் கைவிளக்கேற்றி அலைந்து உண்மையை வெளிக்கொணர பெரு முயற்சி தேவை. அவற்றில் பிழை நேரலாம். விவாதம் சூடு பறக்கலாம். புதிய ஆய்வுக்கு வித்திடலாம். ஆனால் உண்மையைக் கண்டடைய வேறு ராஜபாட்டை இல்லையே - படிக்க விவாதிக்க வேண்டிய நாவல்.









 
 

வீழ்ச்சியை எழுச்சியை விளங்கிக் கொள்ள...

Posted by அகத்தீ


 
 
 
வீழ்ச்சியை எழுச்சியை விளங்கிக் கொள்ள...
சோஷலிசம்மார்க்ஸ், எங்கெல்ஸ்,லெனின், ஸ்டாலின், மாசேதுங்
தொகுப்பு: இர்ஃபான் ஹபீப்
தமிழில்: இலக்குவன்வெளீயிடு: பாரதி புத்தகாலயம் 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018
பக்: 302 விலை: ரூ. 170/-

‘‘சோஷலிசம் என்றால் என்ன? கம்யூனிசம் என்றால் என்ன? இரண் டுக்கும் என்ன வித்தியாசம்? இவற்றை அறிந்து குழப்பி அல்லது தப்பும், தவறுமாய் புரிந்து கொண்டு விமர்சனம் செய்பவர்களே அதிகம். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட கட்சியினரிடையே கூட இது பற்றிய புரிதல் குழப்பம் உண்டு. அதன் விளைவு எதிரிகள் விமர்ச னங்களாலும் எதிர்பாரா திருப்பங்களாலும் நிலை குலைந்து எதிர்நிலை எடுக் கிற அபாயம் கூட நேரிடுகிறது. ஆகவே ‘சோஷலிசம்’குறித்த மிகச் சரியான புரிதல் முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது. இந்த காலத்தேவையை ஈடுசெய்ய இப்புத்தகம் பெரும் வழிகாட்டியாகும் என்பதில் ஐயமில்லை.

சோஷலிசம் குறித்து மார்க்சும் எங்கெல்சும் சில அடிப்படையான கருத்துகளை மட்டுமே அளித்துள்ளனர். லெனின் சோஷலிச அமலாக்கத்தில் சில பிரச்ச னைகளை கையாண்டுள்ளார். ஸ்டாலின், மாசேதுங் அன்றைய தேவைக்கு மேலும் விளக்கங்களை அளித்துள்ளனர். இவற்றை தொகுத்துப் படிக்கும் போது சோஷலிசம் பற்றிய புரிதல் மேலும் கூர்மையாகும். அதற்கு இத்தொ குப்பை வாசித்தல் அவசியம்.

“மார்க்சிய மரபு வழி வந்துள்ள முக்கிய தலைவர்களின் படைப்புகளின் தேர்ந் தெடுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த நூலானது சோஷலிசம், லட்சியம் மற்றும் அதுவிடுக்கும் சமூக விடுதலைச் செய்தி மற்றும் அது எதிர் கொண்ட பிரச்சனைகள் குறித்த ஒரு எளிய அறிமுகமாக நம்பிக்கையுடன் கருதப்பட வேண்டும்” என முன்னுரையில் இர்ஃபான் ஹபீப் விடுத்துள்ள வேண்டுகோள் பொருட் செறிவுள்ளது.

 "..வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியம் நமது நாட்டின் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதனை விமர்சனம் செய்யலாமா ? நிச்சயமாக அதனை விமர்சனம்  செய்யலாம். மார்க்சியம் என்பது விஞ்ஞான உண்மை-அது எந்த விமர்சனத்துக்கும் அஞ்சாது. அது விமர்சனத்தைக் கண்டு அச்சமடையுமானால் -விமர்சனத்தின் மூலம் அதனை முறியடிக்க
 முடியும் என்றால் அது பயனற்றதாக இருக்கும்"  என்றார் மாசேதுங்.ஆம் விமர்சனங்களோடு வளர்ந்த்ததுதானே மார்க்சியம்.இந்த நுல்

 “பொரு ளாதார ஆதாரங்களின் பற்றாக்குறையை ஒரு சீதனம் போலப் பெற்று உருவா கும் முதலாளித்துவத்துக்குப் பிந்தைய சமுதாயமானது எத்தகையப் பிரச்ச னைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த மார்க்சின் மனக்காட்சி இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது”.இர்ஃபான் ஹபீபின் குறிப்போடு மார்க்சின் எழுத்துகளை வாசிக்கும் போது புதிய வெளிச்சம் நிச்சயம் கிடைக்கும். அதுபோல் “ சமுதாயம், தத்துவம் மற்றும் சோஷலிசம் பற்றிய டூரிங்கின் முற்போக்கான அனல் கருத்துகளை எதிர்த்து நடத்தியக் கருத்துப் போராட்டத்தின் விளைவாக டூரிங்குக்கு மறுப்பு எனும் நூல் எழுதப்பட்டது.டூரிங்கின் கருத்துகளை நிராகரிக்கும் விதத்தில் எழுதும்போது எதிர்கால சோஷலிச சமுதாயம் உள்ள விரிவான பரப்பின் மீது அவர் கவனம் செலுத்திஇருக்கிறார்” என்று கூறும் இர்ஃபான் ஹபீப், அவற்றை தேர்வு செய்து நம்முன் படைத்துள்ளார்.

சோஷலிசம், கம்யூனிசம் ஆகிய இரு தொடர்ச்சியான கட்டங்களில் அரசு குறித்து லெனின் கூறிய கருத்துக்கள் அரசும் புரட்சியும் என்ற நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் தேவை குறித்து லெனின் கருத்துகள் இந்த அத்தியாயத்தில் விரிவாக இடம்பெற்றுள் ளது. அதே நேரத்தில் கடைசி அத்தியாயத்தில் “ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதன் பொருள் ஆம் ஒரு கட்சி சர்வாதிகாரம்’ என்று துரதிர்ஷ்ட வசமாக லெனின் அவர்களே ஒரு முறைக்கு மேலாகக் குறிப்பிட்டுள்ளார்” என்று சுட்டிக்காட்டும் இர்ஃபான் ஹபீப் அதனை விமர்சனப்பூர்வமாக அணுகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சோவியத் யூனியனில் சோஷலிசக் கட்டுமானத்தின்போது ஏற்பட்ட பிரச்சனைகளை ஸ்டாலின் அலசி தீர்வு சொல்லி இருப்பது போதுமான அளவு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் அத்தியாயங் களில் மாசேதுங்கும், இர்ஃபான் ஹபீபும் முன்வைக்கும் விமர்சனங்களை இணைத்து பார்க்கும் போது நமது பார்வை விசாலப்படுவது திண்ணம்.
“சோஷலிசம் என்பது வெகுதொலைவிலான எதிர்காலம் தொடர்பான ஒரு நிகழ்வோ அல்லது ஒரு கருத்தளவிலான சித்திரமோ அல்லது வழிபாட்டுச் சின்னமோ அல்ல. அத்தகைய வழிபாட்டுச் சின்னங்கள் குறித்த நமது பழைய காலத்தை மட்டமான கருத்தையே நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சோஷலிசத்தை நாம் அன்றாட வாழ்க்கைக்குள் இழுத்து வந்துள்ளோம்” என்று ஸ்டாலின் கூறும்போது நடைமுறையும் உரசிப்பார்க்கும் ஆர்வமும் அவசியம் புலனாகும்.

மாசேதுங் 1956ல் எழுதிய ‘பத்து முக்கிய உறவுகள் மக்களிடையே நிலவும் முரண்பாடுகளை சரியாகக் கையாளுவதே, அவற்றோடு சோவியத் யூனிய னில் சோஷலிச கட்டுமானத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து குறிப்பாக ஸ்டாலின் காலம் குறித்து எழுதிய விமர்சனம் ஆகியவற்றை இர்ஃபான் ஹபீப் தேர்வு செய்து தொகுத்திருப்பது ஒரு ஆழமான பகுப்பாய்வுக்கு நம்மை உந்தித்தள்ளும் முயற்சியாகும்.இந்த புத்தகத்தை படிக்கிற ஆர்வம் இருப்பினும் முதல் சில அத்தியாயங்க ளில் நம்மால் முழுமையாக ஈடுபடுவது சற்று சிரமமே. ஆனால் மாசேதுங் சிந்தனைகளிலிருந்து தொகுக்கப்பட்டவைகளை குறிப்பாக முரண்பாடு களை கையாளுவது குறித்த அத்தியாயத்தை முதலில் படித்துவிட்டு, மாசேதுங்கின் இதர அத்தியாயங்களையும் படித்துவிட்டு மீண்டும் முதல் அத்தியாயம் தொடங்கி முழுவதும் வாசிக்க முயற்சித்தால் ஆர்வத்தை கிளர்ந்துவிடும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.

“டைபாய்டு காய்ச்சல் வந்தவர்களுக்கு அந்த நோய்க்கு எதிரான பாது காப்பு சக்தி வந்துவிடுகிறது, இதேபோல் தவறிழைத்தவர்கள் படிப்பினை பெறும் திறன் கொண்டவர்களாக இருந்தால் முன்பை விட குறைவான எண் ணிக்கையில் தான் தவறிழைப்பார்கள். மறுபுறத்தில் தவறிழைக்காதவர்க ளுக்கு எளிதாகத் தலைக்கனம் வந்துவிடும். ஆதலால் அவர்கள் தவறிழைப் பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. நாம் கவனமாகச் செயல்படுவோம்.
மற்றவர்கள் தவறிழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டுபவர்கள் பல நேரங்க ளில் தாங்களே சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்” என மாசேதுங் அனுபவச் செறிவோடு சுட்டுவது நம்மை உலுக்குகிறது .“நூறுபூக்கள் மலரட்டும்” என்ற மாசேதுங்கின் முழக்கத்தின் தேவையும் அதன் கருத்தாழமும் ஊன்றி கவனித்து உள்வாங்கத்தக்கன.

இறுதியாக ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்தில் “சோஷலிசம் குறித்த மார்க் சிய சித்தாந்தமும் சோஷலிச சமுதாயங்களின் அனுபவங்களும்” குறித்து இர்ஃபான்ஹபீப் கட்டுரை முத்திரை பதிக்கிறது. “சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பியாவிலும் சோஷலிசம் வீழ்ச்சி அடைந்தது ஒரு பின்ன டைவுதான் என்பதில் சந்தேகமில்லை. அந்த வீழ்ச்சி நமது கண்களுக்கு புலப்படுத்தியவற்றின் மூலம் நம்முடைய பிரம்மைகள் பலவும் அகற்றப்பட் டன” என்று கூறும் இர்ஃபான் ஹபீப், அதைத் தொடர்ந்து கூறுகிறார், “ஆனால், அவை பல இன்றியமையாத உண்மைகளையும் கூட நமக்கு மீண்டும் தெரிவித்துள்ளன. இவை உலக முதலாளித்துவத்துக்கு எதிராகவும் சோஷலிசத்துக்கு ஆதரவானதுமான போராட்டத்தை உறுதிப்படுத்தவும் மக்கள் சக்திகளை உறுதியான முறையில் அணிதிரட்டுவதற்கும் நமக்கு உதவி புரிய வேண்டும். ஏனெனில் சுதந்திர ராஜ்யமானது முன்னெப்போதும் இல்லாத பிரகாசத்துடன் கையசைத்து நம்மை அழைக்கிறது”ஆம்“இன்றியமையாமையின் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரத்தின் சாம்ராஜ்யத்தை நோக்கி மேலே செல்வதற்காக மனிதகுலம் எடுத்து வைக்கும் முதலடிதான் சோஷலிசம் என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவரும் குறிப்பிட்டுள்ளனர்” அல்லவா?

இந்தத் தொகுப்பு நூலை மூன்று காரணங்களுக்காக அனைவரும் வாசித்திட வேண்டும்.1. சோஷலிசம், கம்யூனிசம் பற்றிய புரிதலை வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அறிந்துகொள்ள இந்நூல் உதவும்.2. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் மூல நூல்களை படித்திடாத அல்லது படிக்க வாய்ப்புகிடைக்காத இன்றைய தலைமுறையினர் அந்த மூவர்களின் முக்கியப் படைப்புகளை அறிந்திட இந்நூல் வழிகாட்டு கிறது.3. சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பின்ன டைவுக்குப் பிறகும் சோஷலிசம் எப்படிச் சரியானது, தேவையானது என்பதை விமர்சன பூர்வமாக அறிந்திட உதவும் நூல். படிக்க - பாதுகாக்க வேண்டிய நூல், கி. இலக்குவனின் மொழிபெயர்ப்பு நன்று. பாராட்டுக்கள்.









 
 

உள்ளத்தின் உள்ளறைகளை ஊடுருவி...

Posted by அகத்தீ


உள்ளத்தின் உள்ளறைகளை ஊடுருவி...
சு.பொ.அகத்தியலிங்கம்


கரமசோவ் சகோதரர்கள்ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி,தமிழில்: கவிஞர் புவியரசுவெளியீடு : நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்(பி)லிட், 41,பி சிட்கோஇண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை - 600 098பக்: 1560 விலை: ரூ. 1300/-

‘‘மனித உள்ளங்களின் ஆழ்ந்த உள்ளறைகளைத் திறந்து பார்த்து அகப்பார்வை பெற்றிருந்த அவர்” - இவ்வரிகள் இந்நாவலில் இடம் பெற்றுள்ள ஜொசீமா என்ற துறவியைப் பற்றி ஆசிரியர் கணிப்பு. இதே வரிகள் நூலாசிரியருக்கும் கச்சி தமாகப் பொருந்திப் போவதை இந்நாவல் நெடுகக் காணலாம்.வழிப்பறிக் கொள்ளைக்காரராய் திரிந்த வியாசர் பின்னர் மாபெரும் ரிஷியானதும், மகாபாரதம் எனும் மாபெரும் இதிகாசம் படைத்ததும் நம் இந்திய அனுபவம்.

ரஷ்ய சக் கரவர்த்திக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு , மரணதண்டனை விதிக் கப்பட்டு - சுட்டுக்கொல்லப்பட வரிசையாக நிற்கவைக்கப்பட்டனர் 21 இளைஞர்கள். தூரத்தி லிருந்து குதிரைவீரன் பாய்ந்து வருகிறான். வாழ்வின் செய்தி இருந்தது அவனது கையில். மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்த யேவ்ஸ்கி அவர்களுள் ஒருவர். நூலிழையில் மரணதண்டனையிலிருந்து தப்பியவர் மாபெரும் இலக்கிய கர்த்தாவானார். மரணதண்டனையை வலுவாக எதிர்க்கும் ஜீவசாட்சி இந்நூலாசிரியரும் இந்த நாவலும் எனில் மிகைஅல்ல. ஆம் இந்நாவலைப் படித்து முடிக்கும் போது ஒருவேளை தஸ்தயேவ்ஸ்கி தூக்கிலிடப்பட்டிருந்தால் நாம் எவ்வளவு பெரிய இலக்கியப் பொக்கிஷத்தை இழந்திருப்போம் என ஒரு நிமிட மாவது நம்மை யோசிக்க வைக்கும்.

பொறுப்பற்ற தந்தை, அவரது மூன்று பிள்ளைகள் இவர்களைச் சுற்றியே நாவல் பின்னப்பட்டுள்ளது. தந்தை கரமசோவ் பொறுப்பற்றவர் என்பது மட்டுமல்ல பணத் தாசையும் , பெண்ணாசையும் கொண்டு அலைகிற ஒரு கேடுகெட்டப் பிறவி. தன் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் ஒருவர். பெற்ற பிள்ளைகளையே வஞ்சிக்கத் துணிந்தவர். அவரின் மூத்த மகன் திமித்ரி, அடுத்த மகன் இவான், மூன்றாவது மகன் அல்யோஷா மூன்றுவித குணநலன்களோடும் அதே நேரத்தில் கரமசோவ் குடும்ப குணநலன்களைச் சார்ந்தும் மிக நுட்பமாக கட்டமைக்கப்பட்டுள்ளனர்.மூத்தவன் திமித்ரி கற்றவன். ஆனால் முரடன், நெறிகெட்ட வாழ்க்கை கொண்ட வன். அடுத்தவன் இவான் பல இன்னல்களை அனுபவித்தவன், அறிவு பூர்வமாக செயல்பட எண்ணுபவன். மூன்றாமவன் அல்யோஷா புத்திசாலி, துறவு மனப்பான்மை கொண்டவன், ஜொசீமாவை குருவாக ஏற்றவன். அவரே“உலகச் சேவைக்கு செல்ல வேண்டும். திருமணம் புரிந்து இல்லற அனுபவம் பெற வேண்டும். கர்த்தர் உன்னுடன் உள்ளார்” என வாழ்த்தி அனுப்பினார்.

லிசா, கோக்லகோவ், லிசவேத்தா, குரூசென்கா, கத்ரினா போன்ற பெண்பாத்திரங் கள் சித்தரிப்பு நம்மை பிரமிக்க வைக்கின்றன. கத்ரினா, குரூசென்கா இவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்கிற கோணமும் அதே சமயம் அவர்களின் அப்பழுக்கற்ற உள்ள உணர்வுகளும் நம்முன் ஆழமாய் ஊடுருவிவிடும். அத்தகைய சித்தரிப்பு.வித்தியாசமான எழுத்து நடை, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குணஇயல்பு களோடு நாவலாசிரியர் நமக்கு அறிமுகம் செய்யும்போது, ஒரு முதியவர் நம் எதிரே உட் கார்ந்து நம் கண்களையும், நெஞ்சையும் ஊடுருவி கதைசொல்லுவதாகவே உள்ளது.நாவல் நெடுக வாழ்க்கை குறித்தும், மனிதர்களின் போக்குகள் குறித்தும், கடவுள் குறித்தும், நாத்திகம் குறித்தும் ஆழமான நுட்பமான விவாதங்கள், அவை நம்மை கிறங்க வைக்கின்றன. சில நேரங்களில் மதப் பிரசங்கம் போல் தோன்றுவதும் அடுத்த சில அத்தியாயங்களில் நிலைமை தலைகீழாவதும் சமூகத்தின் ஞானத்தேடலை பிரதிபலிக்கிறது.

தந்தையை மகன் திமித்ரி கொலை செய்து விட்டதாக ஊரே நம்புகிறது. சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் அப்படியே நிறுவுகின்றன. தீர்ப்பும் அதனையே உறுதி செய் கிறது. ஆனாலும் நாவலைப் படிக்கிறவர்கள் திமித்ரி கொலைகாரன் அல்ல என்ற உண்மையை உணர்வுப்பூர்வமாக ஏற்பார்கள்.
தண்டிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடுவரோ? இந்நாவல் இக்கேள்வியை நம் மூளையில் அலையடிக்க வைத்துவிடுகிறது.“

"மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு பொது வழிபாட்டிற்கான பொருள் ஒன்று வேண்டும் என்பதே, அதன் நீங்காத தவிப்பாக இருந்து வந்திருக்கிறது. அந்தப் பொதுக் கடவுளை நிலை நாட்டுவதற்காகவே மக்கள் காலங்காலமாகத் தம் வாட்களை உருவி எண்ணற்ற படுகொலைகள் புரிந்தார்கள்! உன் கடவுளை தூக்கி எறி! என் கடவுளை ஏற்றுக் கொள்! இல்லாவிட்டால் உன்னையும் உன் கடவுளையும் ஒழித்துக் கட்டு வோம்! என்று அறைகூவல் விட்டுக் கொ க்கரித்தார்கள். இது தான் காலமுள்ளளவும் நடக்கப்போகிறது” என்று நாவலில் வரும் வரிகள் இன்றும் பொருந்திப் போகின்ற னவே. ‘மாபெரும் விசாரணை அதிகாரி’ என்ற அதிகாரம் முழுவதும் ஆழமான ஆன் மிக விவாதம். இயேசு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையும் பிரச்சாரமும் இன்றும் வலுவாக உள்ளது. இந்த விவாத முடிவில் “போய்விடு! இனி திருப்பி வராதே! எப் போதும் ,எப்போதும் ,எப்போதும் திரும்பி வந்துவிடாதே” என வாசலைத்திறந்து வெளி யேற்றுவது யாரை? மத பீடங்களின் அதிகார வன்மம் எவ்வளவு கொடூரமானது. அதை நாத்திக மொழியில் அல்லாமல் ஆன்மீக மொழியில் தஸ்தயேவ்ஸ்கி மிக அழுத்தமாய் நூல்நெடுக ஊரும் பாவுமாய் கொண்டு வருகிறார்.“கடவுள் மீது எனக்கு வெறுப்பெல்லாம் இல்லை. ஆனால் கடவுள் ஒரு கற் பனைதான்!... ஆனால் ஒழுங்கு முறை நிலவுவதற்காகக் கடவுள் தேவைப்படுகிறது. ஒரு வேலை கடவுளே இல்லை என்றாலும் கூட ஒன்றைக் கண்டு பிடித்துக் கொள் வது நல்லது தான்” என்று ஓரிடத்தில் வாதிடுவதும்.“சாத்தான் என்று எதுவும் கிடையாது என்பதால், மனிதன் தன் சாயலாக சாத் தானை உ ருவாக்கிக் கொண்டு விட்டான்” “அவன் கடவுளை உருவாக்கிக் கொண் டது போல” என விவாதத்தினூடே நெற்றியடியாக உண்மைகளை போட்டுடைப்பது தஸ்தயேவ்ஸ்கியின் நுட்பமான உத்தி.

மனச்சாட்சி என்பது எது? ஒழுக்கம் என்பது எது? எதைக் கொண்டு இதை நிர்ணயிப்பது? யார் நல்லவர்? யார் கெட்டவர்? கெட்ட வனுக்குள் நல்லிதயமும், நல்லவனுக்குள் கெட்ட சிந்தனையும் காலங்காலமாய் தொடர்கிறதே? இதுபோன்ற சிக்கலான அதே சமயம் மிகவும் பொருள் பொதிந்த பார்வைகளால் மனிதர்களையும் சம்பவங்களையும் போக்குகளையும் தஸ்தயேவ்ஸ்கி அலசி எடுத்துவிடுகிறார்.

ஒருவரின் அகத்தையும், புறத்தையும் நல்லதையும், கெட்டதையும் அவர் இல்லாத போது பொரணிபேசும் இயல்பு நம்மிடையே ஊறிவிட்ட இயல்பு. அதையே கதை சொல்லி கையாளும்போது அது ஆக்கபூர்வமான ஆயுதமாகிவிடுகிறது. இந்நாவலாசி ரியரின் உத்தி அதுதான் என்று நான் சொன்னால் அது சிறுமைப்படுத்துவதாகி விடுமோ? எனினும் எனக்கு அப்படித் தோன்றுகிறதே! அது என்தவறோ! ஆக நூலா சிரியர் என்னோடு பேசிக்கொண்டே இருக்கிறார்.

இந்த நாவல் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாக்கப் பட்டுள்ளது. இருத்தியலிய தத்துவத்திற்கு அடித் தளமிட்ட நாவல் என்ற பெருமையும் இதற்குண்டு. இந்த நாவல் நம் உள்ளுணர்வு களை ஊடுருவி காண்பிக்கும் அதே வேளையில் நம்பிக்கையையும் நம்பிக்கை இன் மையையும் ஒரு சேர கலந்தே தருகிறது. ஒரு வேளை அதுவே வாழ்க்கை யதார்த்தம் என்பதாலா?

“வாழ்க்கை அதன் இயல்பான போக்கில் தான் சென்று முடியும். தகுதிபடைத் தவன் சரியான இடத்தை அடைவான். தகுதியற்றவன் ஏதோ ஒரு இருண்ட சந்தில் சென்று காணாமல் போய்விடுவான். அப்புறம் அவனை எல்லோரும் மறந்துவிடு வார்கள்” இது ஓரிடத்தில் பேசப்படினும் இந்நூலின் செய்தியே இது தானோ என்று சொல்லத் தோன்றுகிறது.

குழந்தைகளின் மனஉலகம், வஞ்சிக்கப்பட்டவர்களின் பழிவாங்கும் வெறி, அநீதிகளை எதிர்கொண்டு வாழும் பெண்களின் உள்மன ஓட்டங் கள், துறவிகளுக்குள்ளும் ததும்பும் பொறாமை, யதார்த்தங்களை ஏற்க மறுப்பவர் களுக்கும் ஏற்ப வர்களுக்கும் இடையான உரசல்கள், அடுத்தவர் வலியில் இன்பம் தேடும் இயல்பு, இப்படி மனிதமனங்களின் சகல கூறுகளினூடே இந்நாவல் பயணப்பட்டுள்ளது.


மிகநெடிய வழக்கு மன்ற விசாரணை வெறும் சட்ட நுணுக்கங்களோடு பின் னப்படாமல் மனிதபலம், பலவீனம் இவற்றை விவாதப் பொருளாக்கி இருப்பதும், உன் அதீத வாயும் செயல்பாடுகளும் நீ செய்யாத குற்றத்திற்கு உன்னை பழிவாங்கிவிடும் என்பதன் சாட்சியாய் திமித்ரியும், அவனுக்காக அந்த இரண்டு பெண்களும் செய்கிற முயற்சிகளும் அடேயப்பா மனிதம் என்பது எது என நம்மை யோசிக்க வைக்கிறது. பல கதாபாத்திரங்கள் மனப்பிறழ்வுடன் சித்தரிக்கப்படுவதும், உண்மையான கொலை காரன் ஸ்மெர்டியாகோ தற்கொலை செய்து கொள்வதும் நாவலை யதார்த்த இலக்கிய பாணியிலிருந்து நகர்த்தி வேறுதளத்துக்கு கொண்டு சேர்க்கிறது.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில்

இந்தநாவல்தடைசெய்யப்பட்டது.சோஷலிசத்தின் மீது நம்பிக்கை எதையும் இந்நாவல் பிரகடனம் செய்யவில்லை. மாறாக ஐயம் எழுப் பியது என்பதால் இருக்கலாம். ஆயினும் ரஷ்ய சமூகத்தின் இருண்ட தாழ்வாரங்களில் இந்நாவல் ஒளிப்பாய்ச்சியது எனில் அதுமிகை ஆகாது. டால்ஸ்ட்டாயும் இவரும் சமகாலத்தவர். எனினும் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததும் இல்லை. தொடர்பு வைத்துக் கொண்டதும் இல்லை. இது இரண்டு இலக்கிய மேதைகளின் தனிப்பட்ட இயல்பா? அல்லது அன்றைய சூழலா தெரியவில்லை.

கடைசியாக சில வார்த்தைகள் இயந்திர வேகத்தில் ஒடிக்கொண்டிருக்கும் இன் றைய வாழ்க்கையில் 1500 பக்க நாவலை படிக்க பொறுமையும் நேரமும் கிடைக்குமா? மருத்துவமனை எனக்கு அந்த வாய்ப்பை வழங்கிவிட்டது. நெடிய பயணம், நெடிய ஓய்வு எல்லோருக்கும் எப்போதாவது வாய்த்தே தீரும். அப்போது உங்கள் ஆத்ம தரிசனத்துக்கு அந்நாவல் கருவியாகும். கட்டாயம் படியுங்கள். கவிஞர் புவியரசின் கவித் துவமிக்க மொழிபெயர்ப்பு இந்த நாவலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. படைப்பாளிகள் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள் . உள்ளத்தை ஊடுருவும் கலையை இவரிட மிருந்து கற்றுக் கொள்ள முயற்சிக்கலாமே!










தண்டனை ஆட்சியாளர்களுக்கா? மக்களுக்கா?

Posted by அகத்தீ

தண்டனை ஆட்சியாளர்களுக்கா? மக்களுக்கா?
சு.பொ.அகத்தியலிங்கம்

வெளிநாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் கணினி வாங்க கடைக்குப் போனால் கணினி வழங்க கடைக்காரர் மறுக்கிறார் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ஈரானிய மாணவர் நிலை அதுதான். வங்கிக் கணக்கு தொடங் கவோ அல்லது பணப் பரிமாற்றம் செய்ய வோ ஈரானிய மாணவர்களுக்கு ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலும் மறுக்கப் படும்போது நாம் மவுனம் காக்க முடியுமா?ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் முதலில் பாதிக்கப்பட்டுள் ளது அங்குள்ள மாணவர்களின் கல்வி என்பதை பல நிகழ்வுகள் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.இந்தப் பொருளாதாரத் தடையால் ஈரான் நாளொன்றுக்கு 300 கோடி டாலர் இழப்பைச் சந்திக்கிறது. இந்தப் பொருளா தாரத் தடையின் சுமையை ஆட்சியாளர் கள் யார் தலையில் ஏற்றுவார்கள்? ஈரான் அனுபவமும் அதுதான்.மக்கள்தான் இறுதியில் பலியாடாகிறார்கள்.

இது குறித்து சயீத் கமாலி டெஹான் என்பவர் ‘கார்டியன்’ ஏட்டில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் பொருளாதாரத் தடை களின் சமூகப் பாதிப்புகளை விரிவாக விவரித்திருக்கிறார்.இந்தப் பொருளாதாரத் தடை ஆட்சி யாளர்களை கிஞ்சிற்றும் பாதிக்கவில்லை; அவர்கள் தங்கள் அணு ஆயுத சோதனை யில் ஒரு மில்லி மீட்டர் கூட பின்வாங்க வில்லை. ஆனால் மக்கள் தான் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் அக்கட்டுரையில் விமர்சனம் செய்துள் ளார். அதுதான் உண்மை.

இராக்கின் மீதும் இதுபோல் பொருளா தாரத் தடை விதிக்கப்பட்டபோது சுமார் 10 லட்சம் குழந்தைகள் பாலின்றி உயிர்விட் டனர். உயிர் காக்கும் மருந்துகள் இல்லா மல் பெருமளவு மக்கள் அவதிப்பட்டனர். சதாம் உசேன் அணு ஆயுதம் வைத்திருப் பதாகக் கூறி அமெரிக்கப் படைகளை ஏவி தாக்கியதில் மருத்துவமனைகளும், கல்விக் கூடங்களும் நொறுங்கின. வழி பாட்டுத் தலங்கள் பொடியாயின. மக்கள் உயிரிழந்தனர். பெரும் இழப்புக்கு ஆளா யினர். அமெரிக்காவால் ஒரு சிவகாசி வெங்காய வெடியைக்கூட அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. சதாம் உசேனும் தூக்கிலிடப்பட்டார்.
இப்போது ஈரான் மீது பொருளாதாரத் தடை. இது மனிதநேயமற்ற செயல் அல்லவா? ஆப்கன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது அதனால் பின்லேடன் பாதிக்கப்படவில்லை.ஆப் கானியர்கள் வாழ்க்கை பெரும் நெருக் கடிக்கு ஆளானதுதான் மிச்சம்.

கியூபா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை எனும் கொலைவாளை வீசியது. ஆனால், அங்குள்ள அரசு மக்கள் அரசாக இருப்பதால் அரசும் மக்களும் சேர்ந்தே அதனை எதிர்கொண்டனர். அங்கு குழந் தைகளுக்கு சிலேட்டு, பலப்பம், நோட் டுப் புத்தகம் போன்ற சாதாரண பொருட் களுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் ஆதரவாகத் திரண்டன. இந்தி யாவிலிருந்துகூட உதவிப் பொருட்கள் கப்பலில் அனுப்பப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியினரும், இடதுசாரி சிந்தனையாளர் களும் தெரிவித்த சர்வதேச ஒருமைப் பாடு, அமெரிக்கப் பொருளாதாரத் தடையை தாங்கிநிற்க கியூபாவிற்கு தார்மீக பலமானது.

ஆனால் ஈரான், இராக், ஆப்கானிஸ் தானில் ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதால் மக்கள் இரட்டை நுகத்தடியை சுமக்க நேரிடு கிறது. ஒன்று, ஆட்சியாளர்களின் கொடுங் கோலால் விளையும் கடும் சுமைகள். இரண்டு, பொருளாதாரத் தடையின் பெரும் சுமைகள். ஆம், உள்நாட்டு சுரண்டல் வர்க் கமும் வெளிநாட்டு சுரண்டல் கூட்டமும் அம்மக்களை சூறையாடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய வலி?

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதால் அங்கிருந்து பிறநாடுகள் பெட்ரோல் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்க டாலருக் கல்ல, அந்தந்த நாட்டு கரன்சிக்கே பெட் ரோலை விற்க ஈரான் முன்வந்தது. இந் தியா போன்ற நாடுகள் அந்நியச் செலா வணி சிக்கலில் இருந்து மீள இது பேருத வியாக அமையுமே? ஆனால் நடந்தது என்ன? ஈரானில் இருந்து பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்துக்கொண்டதற் காக இந்தியாவை அமெரிக்க வெளியு றவுத்துறைஅமைச்சர் ஹிலாரி கிளிண் டன் பாராட்டினார்.இது நமக்கு பெரு மையா? உலகுக்கு அன்பையும், சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் வாரி வழங்கும் இந்தியா என்று பெருமை பீற்றிக்கொள்வோம். ஆனால், இராக்கானாலும் ஈரான் ஆனாலும்அங்குள்ள மக்களுக்கு அதை மறுக்கும் இந்திய அரசின் பாதை சரிதானா? நியா யந்தானா?

அணுகுண்டு வேண்டாம், அணுயுத் தம் வேண்டாம். இது எல்லோருக்கும் பொருந்தவேண்டும். ஒரு நாடு செய்யலாம், ஒரு நாடு செய்யக்கூடாது என்பது அபத்தமான வாதம். தீவிரவாதிகள் கைக்கு அது போய்விடும் என்பது அரசியல் காய் நகர்த்தும் வாதமே தவிர வேறல்ல. அமெரிக்காவைவிட பெரிய தீவிரவாதி யார்? உலகில் மக்கள் மீது அணுகுண்டை வீசியது அமெரிக்கா தானே? ஹிரோ ஷிமா, நாகசாகி அதன் சாட்சி அல்லவா? வியட்நாமை அங்குலம் அங்குலமாய் நபாம் விஷவாயுக் குண்டுகளால் பாழ் படுத்தியது அமெரிக்காதானே! இவர்கள் ஈரானில் அணு அயுதம் தயாரிப்பதாகக் கூறி பொருளாதாரத் தடை விதிப்பது ஏற்கத்தக்கதா, இல்லவே இல்லை.

எந்த நாட்டுக்கு எதிராக இருப்பினும், ஆட்சியாளர்களின் கொள்கைகளோடு மோதுவதற்கு மக்களைத் தண்டிக்கும் பொருளாதாரத் தடை எனும் ஆயுதத்தை கையிலெடுப்பதை மனிதகுலம் இனியும் அனுமதிக்கலாமா? கூடாது! கூடாது! ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், கியூபா என எங்கும் சரித்திரம் சுட்டும் உண்மை இதுதான்.