புள்ளிவுவரங்கள்

Posted by அகத்தீ Labels:


புள்ளிவுவரங்கள்


புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை
 
வளர்ச்சி வந்து விட்டதாய் ஒரு புள்ளிவிவரம்
வறுமை இன்னும் நீடிக்கிறதென இன்னொரு புள்ளிவிவரம் 

ஆளும்கட்சியாய் இருக்கையில் ஒரு புள்ளிவிவரம்
எதிர்கட்சியாய் இருப்பின் இன்னொரு புள்ளிவிவரம்

தேர்தல் நேர வாய்ப்பறையில் ஒரு புள்ளிவிவரம்
சிம்மாசனம் ஏறியதும் திருவாய் மலரும் இன்னொரு புள்ளிவிவரம் 

புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை

சராசரி வளர்ச்சி விகிதம் கூடியதென ஒரு புள்ளிவிவரம்
சராசரி மனிதன் வாழ்க்கை வீழ்வதை மறந்த புள்ளிவிவரம்

அவரவர் வசதிக்கு ஏற்ப வியாக்கியானம் செய்ய புள்ளிவிவரம்
அடிவயிற்று பசியை ஒரு போதும் போக்காத புள்ளிவிவரம் 

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு பதறுகிற ஊடகம்
அழியும் விவசாயியின் வாழ்வு குறித்து அலட்டிக் கொள்வதில்லை 

புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை

அம்பானி அதானி வகையறாக்களின் கால்குலேட்டர்கள் போடும் கணக்கு
அடித்தட்டு மக்களை மறந்த தப்புக்கணக்கு ..

சிதம்பரமோ ஜெட்லியோ  வார்த்தை ஜாலத்தின் அடிநாதம் ஒன்றுதான்
பெருமுதலைக்கு ஊட்டிவிடு ! இல்லாதவன் வாயிலிருப்பதையும் பிடுங்கு !

மோடியோ மன்மோகனோ வரைந்த திட்டங்களால்
சாண் ஏறாமலே முழம் சறுக்கும் ஏழைக்கு !

இனியேனும்
எங்கள் வயிற்றின் சுருக்கங்களிலிருந்து
உங்கள் கணக்கீட்டைத் துவங்குங்கள் !

பங்குச்சந்தை எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும்
பசிவயிறு நிரம்ப வழி காணுங்கள்

மேட்டுக்குடியினரின் பாராட்டுப் பத்திரத்தை கசக்கி எறியுங்கள் !
வீட்டுக்கு வீடு வெம்பியழும் குரலைக் கேளுங்கள் ..

புள்ளிவிவரங்களை கேட்டுக் கேட்டு சலித்துவிட்டோம்
உங்கள்
புள்ளிவிவரங்கள் ஒருபோதும் உண்மையைப் பேசியதில்லை


சு.பொ.அகத்தியலிங்கம்.

எது உங்களுக்கு சவுகரியம் ?

Posted by அகத்தீ Labels:



எது உங்களுக்கு சவுகரியம் ?

=============================


சு.பொ.அகத்தியலிங்கம்
================================

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?

மாறி மாறி ஒரே வசனத்தை
அவர்கள் உமிழ்ந்து கொண்டிருக்க ..

அதுவே அரசியலென 
ஊடகப் புலிகள் அளந்து கொண்டிருக்க ..

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?


சந்தடி சாக்கில் அம்பானி அதானி
மூட்டை கட்டிக்கொண்டிருக்க ..

உள்ளூர் முதலைகள் போதாதென
உலக முதலைகள் உதிரம் குடித்துக் கொண்டிருக்க ..

சில்லறையாகவும் மொத்தமாகவும் 
நீதி விற்பனை களைகட்டிக்கொண்டிருக்க …

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?


போலீஸ் லத்திகள் நியாயம் கேட்பவனை 
பொளந்து கட்டிக்கொண்டிருக்க ..

சோற்றுக்கிலாதவன் கோவணத்தையும்
“0” ஐ அமுக்கி தானம் செய்துகொண்டிருக்க ..

வயிறு பசித்தழும் போதும் ராமா என்பதா 
அல்லா என்பதா பிதாவே என்பதா 

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?


சோற்றுக்கில்லாவிடிலும் சாதி கவுரவத்தை
தலை முழுகாமல் புதைகுழியில் தடுமாற 

இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது
தமிழகம் முதன்மை மாநிலம் ஆகிக்கொண்டிருக்கிறது
நம்புவது உங்கள் தலை எழுத்து
நம்பாவிடில் என்கவுண்டர் , அவதூறு வழக்கு

எது உங்களுக்கு சவுகரியம் ?
சட்டுன்னு சொல்லுங்க !

நீ யோக்கியமா ?
நீ திருடவில்லையா ?

நீ செஞ்சி கிழிச்சிட்டியா ?
உன் ஒழுக்க லட்சணம் ஊருக்கே தெரியுமே ?

தலைப்பு நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள்

Posted by அகத்தீ Labels:



தலைப்பு நீங்களே
சூட்டிக் கொள்ளுங்கள்
----------------------------------------
சு.பொ.அகத்தியலிங்கம் .
----------------------------------------------

இப்போதெல்லாம்
பொய் எனக்கும் உனக்கும்
ரொம்பவே பிடித்துப் போகிறது ..

பொய்யில்லாமல்
வாழ்க்கை நகர மறுக்கிறது ..

பொய் சூழ் உலகில்
மெய்சொல்லி பிழைத்தவரில்லை
பொய் சொல்லாது
பிழைப்பு நடப்பதில்லை ..


அரசியல் , சரித்திரம் , ஆன்மீகம்
எங்கும் பொய் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது ..

வர்த்தகத்தின் அடிநாதமே
பொய்யென பொழிப்புரை எழுதியாயிற்று ..

பொய்யைக் கேட்டுக்கொண்டிருக்கவே
தொலைகாட்சியும் , கணினியும்
அலைபேசியும் , ஊடகங்களும்
இப்போதெல்லாம்
24 X 7 மணி நேரமும் நம்மோடு ….


கடன்காரனிடம் சொல்லும் பொய்களும்
விடுப்பெடுக்கச் சொல்லும் பொய்களும்
ஒருபோதும்
பொய்யென கொள்ளப்பட மாட்டாது ..


செத்தவருக்கு அஞ்சலி செலுத்த
சொல்லும் பொய்களை
எந்தக் கணக்கில் வைப்பதென
இதுவரை எந்த முடிவுமில்லை …

பாராட்டிப்பேச பொய்யே துணை
பதவியும் பணமும்
பொய்யின்றி வந்து சேராது ..



வீட்டில் சொல்லும் பொய்
அலுவகத்தில் சொல்லும் பொய்
நண்பர்களிடம் சொல்லும் பொய்
இவற்றில் வேறுபாடுகளுண்டு
ஆயினும்
சொல்லுவது பொய்யென்பதில்
எல்லோரும் அறிவோம்

மெய்யே பேசுவதாய் சத்தியம் செய்து
பொய்யே பேசிக்கொண்டிருக்கிறோம்

கொஞ்சம் மெய்யை பேசத்துவங்கினால்
வீட்டில் தொடங்கி வீதிவரை
முட்டலும் மோதலும்
தொடர்கதையாகும்..

மெய் ஒரு போதும்
யாருக்கும் எப்போதும்
ஜீரணமாவதே இல்லை .

ஆனாலும்
மெய்யே பேசவேண்டுமென
பொய்யே பேசிக்கொண்டிருகிறோம்.

அது சரி !
எது மெய் ?
எது பொய்?

புரைதீர்ந்த நன்மை
பயப்பதைச் சார்ந்தது விடை ..



கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்

Posted by அகத்தீ Labels:



கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்

சு.பொ.அகத்தியலிங்கம் .



வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் ஏன் ?
கஜினி முகமது சோமநாதர் ஆலயத்தைக் கொள்ளையடித்தது மெய்யா ?இல்லையா ?
எல்லா முஸ்லிம் மன்னர்களும் கோவில்களை இடித்தார்களா ?
இந்து மன்னர்கள் மசூதியை இடித்ததுண்டா?
வேறுமத வழிபாட்டுத் தலங்களை இந்து மன்னர்கள்அழித்ததுண்டா ?
இடிப்பு பற்றி பேசுகிறவர்கள் அக்பரையும் பாபரையும் பேசுவதில்லை ஏன் ?
மசூதிக்கும் கோயிலுக்கும் என்னவேறுபாடு ?

இப்படி இயல்பாய் எழும் கேள்விகளுக்கு விடைதேடி -ஆதாரங்கள் தேடிச் சேகரித்து இந்நூலை ஆக்கியுள்ள அன்வருக்கும் பத்மனாபனுக்கும் பாராட்டுகள் .

முதல் அத்தியாயமே சூடாகவும் சுவையாக வும் துவங்குகிறது . கி.பி.835ல் பாண்டிய மன்னன் படையெடுத்து அனுராதபுரம் புத்த மடத்தைக் கொள்ளையடித்து புத்தர் சிலை யை மதுரைக்குக் கொண்டுவந்தான்; காலம் திரும்பியது சிங்கள அரசன் படையெடுத்துவந்து. புத்தர் சிலை யை மீட்டுச் சென்றான். ஏன்? புத்தர் சிலை அரசு அதிகாரத்தின் சின்னமாகக் கருதப்பட்டது என்பதை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளனர் .

தோற்ற மன்னனின் ஆடம்பரப் பொருட்கள் மட்டுமல்ல; மன்னனின் மனைவிகள், இதரப் பெண்கள் மட்டுமல்ல; தோற்ற மன்னனின் கடவுள்கள் கூட வெற்றிபெற்ற மன்னனால் கொள்ளை அடிக்கப்பட்டனஎன நூலாசிரியர்கள் சொல்வதுடன் ; அதற்கு ஆதாரமாக சோழர் , சாளுக்கியர் உட்பட பல இந்து அரசர்கள் அவ்வாறு செய்ததை எடுத்துக்காட்டி மநுஸ்மிருதி அதனை நியாயப்படுத்தியுள்ளதையும் பொருத்தமாகக் கூறியுள்ளனர் . இவையெல்லாம் கஜினி முகமது படையெடுத்து வரும்முன்பே இந்தியாவில் வழக்கமாக நடந்து வந்தது என்கிறார்கள்.

கஜினி முகமது செய்த கொடுமைகளை யும் அவனுக்கு இருந்த மதவெறியையும் நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை ; அதே சமயம் கஜினி முகமது இந்துக்களை மட்டுமல்ல தனது சன்னி இனத்தைச் சாராத ஷியா மற்றும் இஸ்மாயிலி பிரிவினரையும் கொன்றதையும் பதிவு செய்துள்ளதோடு, வரலாற்றில் எப்படி மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளன என்பதையும் பிரிட்டிஷ் ஆட்சி பின்னிய வஞ்சக வலை மதமோதலுக்கு வழிவகுத்ததையும் கே. எம் முன்ஷி போன்றோர் பகையை விசிறிவிட்டதையும் விவரமாகக் குறிப்பிடுகிறார் .

கஜினி, ஒளரங்கசீப் தவிர ஏனைய முஸ்லிம் அரசர்கள் கோயில் இடிப்பில் ஈடுபடவில்லை என்பதையும் அவர்களும் கூட மன்னரின் பெருமைக்குரிய கோயிலைத்தவிர வேறெதிலும் கைவைக்கவில்லை என்பதையும் மாறாக கோயில்களுக்கு மானியம் அளித்து உதவியதை யும் விவரிக்கின்றது .

கோயில்கள் இடிக்கப்பட்டது போல் மசூதிகளும் இடிக்கப்பட்டதுண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் கோயில் இடிப்பு அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள் . புத்த, சமண வழிபாட்டுத் தலங்களை இந்துக்கோயில்களாக மாற்றியதையும் சொல்லிச் செல்கிறார்கள் .

கோயில்கள் கஜானாக்களாக இருந்ததாலும் அரசின் அதிகாரச் சின்னமாக இருந்ததாலும் இடிக்கப்பட்டன . அதே சமயம் மசூதிகள் அரசு அதிகாரச் சின்னங்களாக மாற்றப்படவில்லை. ஆன்மீகக் குறியீடாகவே கருதப்பட்டது என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார்கள் .

அரசன் இந்துவோ, முஸ்லீமோ அதிகாரத்தை நிலைநாட்ட தோற்றவர்கள் மீதும் அடிபணிந்தவர்கள் மீதும் பண்பாட்டு ஆதிக்கம் செய்ய மதத்தைப் பயன்படுத்தினர். .கஜினி முகமதுக்கு இருந்ததுபோல் மதமாற்ற வெறி இதரர்களுக்கு இருக்கவில்லை ; இதன் அரசியல் பொருளாதார ,சமூகக் காரணங்களையும் நூலாசிரியர்கள் பட்டியலிடுகின்றனர் .

வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல் உலகின் இதர பகுதிகளில் இருந்ததையும் கோடிட்டுக்காட்டி ; அரசர்களின் ஆதிக்க வெறியே அடிப்படைக் காரணம் என நிறுவுகிறார்கள். அதே சமயம் கடந்த கால சரித்திர நிகழ்வுகளுக்குப் பழிவாங்க எனக் கிளம்பினால் அதற்கு முடிவேது ? சங்பரிவாரின் நோக்கம் எவ்வளவு கொடு மையானது ; அவர்களின் வாதம் எவ்வளவு பிழையானது என்பதை தக்க சான்றுகளோடு நிறுவுகின்றனர் நூலாசிரியர்கள் .

கனகவிஜயன் தலையில் கல்லை ஏற்றி ஒரியக்கடற்கரை முதல் தஞ்சாவூர் வரை நடத்தியே கூட்டிவந்தான் சோழ அரசன் என தமிழ்நாட்டில் பெருமைப்படுவதுண்டு ; யோசிப்பவர்கள் நம்புவது சிரமம் . இது போலவே எழுதப்பட்ட வரலாறுகள் வென்றவரின் பெருமையைப் பீற்ற எழுதி வைத்திருப்பர் ;அதில் மெய்யைவிட கற்பனையும் கைச்சரக்கும் அதிகம் கலந்திருக்கும் ; அதனை அலசி உண்மையை மட்டும் செய்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்தப்பாடம் இந்நூலில் உள்ளது .

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில் மதுரா , காசி என அடுத்து குறிவைக்கும் சூழலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு வரலாற்றை, பண்பாட்டை சிதைத்து குறுகிய மதவெறி மோதலை சங்பரிவார் உசுப்பிவிடும் காலத்தில் இந்நூல் ஒரு காத்திரமான வரவு . இந்நூல் இன்றைய காலத்தின் தேவை . அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் . மதவெறியருக்கு பதிலடி கொடுக்க இதுபோன்ற நூல்கள் இன்னும் அதிகம் தேவை . இந்நூலை வாங்குங்கள் ! படியுங்கள்! உண்மையை ஊரறிய உரக்கச் சொல்லுங்கள் !

கோவில்கள், மசூதிகள் அழிப்பு : உண்மையும் புரட்டும்.
ஆசிரியர்:.அன்வர்உசேன்,வெ.பத்மனாபன்,
வெளியீடு :பாரதி புத்தகாலயம்.7,இளங்கோ தெரு, தேனாம் பேட்டை ,சென்னை - 600 018 .
பக்:96 , விலை : ரூ. 70/-