தொலைநோக்கு கனவுகளும் துரத்தும் நிஜங்களும்

Posted by அகத்தீ Labels:

காதுல பூ சுற்றுறதுன்ணு கேள்விப்பட்டிருக்கோம் பூந்தோட்டத்தையே நடுறதைப் பார்த்திருக்கிறீங்களா?

ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்குத் திட்டம் 2023ஐப் புரட்டுங்கள் ..வெறுங்கையில முழம்போட கற்றுக்கலாம்

இப்போ நாம எங்கே இருக்கோம் என்பதைச் சொல்லாமலே காற்றுல படம் போட்டுக்காட்டினா எப்படி இருக்கும்?இப்படித்தான் இருக்கும்

இந்தியா2020அப்படின்னு பலநூறு பக்கத்தில்  அப்துல் கலாம் ஒரு கனவுபுத்தம் வெளியிட்டார்..அதைப் படிக்காமலே பாராட்டினார்கள் பலபேர்.உலகவங்கி ரீலை அச்சரம் பிசகாமல் அதே அமெரிக்க இங்கிலீஸில் தந்துவிட்டு கனவு காணச்சொன்னார்.அதை அப்போதே விமர்சித்த ஒரே ஏடு தீக்கதிர் மட்டுமே.எழுதியது அடியேன்தான்.இப்போது படியுங்கள் உலகமய சறுக்குப்பாதையில் விளகெண்ணை கொட்டிக் கொண்டு நூறுகிலோமீட்டர் வேகத்தில் வெறுங்காலோடு ஏற்றிவிட்ட கொடுமை புரியும்.அதற்குத்தான் அந்த கனவு என்பது விளங்கும்

முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படியுங்கள்.மூன்றாம் உலக நாடுகளை ஏமாற்றும் கனவு திட்டங்களை வரைந்து காட்டுவதின் பின்னால் உள்ள வல்லரசுகளின் சதிபுரியும்.அப்துல் கலாம் கனவும்-அம்மா கனவும் ஏன் என்பதும் விளங்கும்.ஆசியவளர்ச்சி வங்கியின் ஜிகினாதிட்டமே அம்மா வெளியிட்டுள்ள கனவுத்திட்டம்

சராசரி தனிநபர் வருமானத்தை ஆறுமடங்கு உயர்த்துவார்களாம்.குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்னகிடைக்கும் சொல்லவில்லையே.. பன்னாட்டு திமிங்கலங்கள் கொழுக்க தமிழக நிலத்தை,நீரை,இயற்கை வளங்களை தாரைவார்த்துவிட்டு ஏமாந்து நிற்கச் சொல்லும் மோசடியே இந்த கனவுத்திட்டம்.இந்த சராசரி என்ற வார்த்தை நம்மை மயக்கவைத்துவிடுகிறது.அதன் மோசடியை புரிய ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.அந்தத் தெருவில் நாலு பணக்காரர்களின் வருமானம் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள் மீதமுள்ள 30 பேருக்கு வருமானம் ஒவ்வொருவருக்கும் ரூ.2000 என்று வைத்துக் கொள்ளுங்கள் ஆகமொத்தம் 34 பேரின் மொத்த வருமானம் ரூ.40,60.000 இதை 34 பேரின் சராசரியாக்கினால் ஆளுக்கு ரூ.1,19,411 வரும்.இது கணக்குத்தான்.சர்க்கரைன்னு எழுதி நாக்கில தடவுற கதைதான்.

சாதாரண பாமரனை அசரவைக்கும் வகையில் பலலட்சம் கோடிகளின் புள்ளிவிபரமாய் வரைந்து காட்டப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?அதில்தான் சதி நிலைகொண்டுள்ளது.தமிழக அரசின் மொத்தபட்ஜெட்ட ஒருலட்சம் கோடிதான் என்கிறபோது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய  அரசு என்ன செய்யப்போகிறது?தனியாரிடம் திட்டங்களை தாரை வார்ப்பதும்-உலக வங்கியிடம் சரணடைவதும் தான் முன்மொழியப்படும் யோசனை.சமூகநலன் சார்ந்து தனியார் முதலாளிகள் யோசிப்பார்களா?லாபவெறி தலைக்கேறி மாநிலத்தை சூறையாடுவார்களா?

விவசாயத்தைப் பொறுத்தவரை தொலைநோக்கு திட்டத்தில் அது தொலைந்தே போனது.சிலலட்சம் கோடிகள் ஒதுக்கீடு என்கிற வெற்று அறிவிப்பைத் தவிர வேறெதுவும் இல்லை.சுற்றுச்சூழலை-விவசாயத்தை கெடுத்த எறால் பண்ணைகள் குறித்தே மீண்டும் இத்திட்டமும் பேசுகிறது.

சரி இந்த கனவுத்திட்டம் ஏழை-பணக்காரன் இடைவெளியை குறைக்குமா? அதற்கான வாய்ப்பே இல்லை.பத்து பெருநகரங்கள் என்பதும்கூட பன்னாட்டு முதலாளிகள் தேவைக்குத்தான்.பெரும் பகுதி மக்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிவதுதான் நோக்கம்.பளபளப்பான தேசிய நாற்கர-அறுகர சாலைகளும் அதன் அருகிலேயே பள்ளமும் மேடுமாய் பல்லிளிக்கிற உள்ளூர் சாலைகளும்தான் நாம் காண்பது.இதன் நீட்சியாக பெரும் ஏற்ற தாழ்வுடன் சமுதாயத்தை சிறுபகுதியினருக்கு ஒளிரும் தமிழகம், பெரும்பகுதி தமிழருக்கு காய்ந்து தீய்ந்த தமிழகம் என்பதுதான் இந்த கனவுத் திட்டம்

இந்த கனவு திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியா?இல்லை.மனிதவள மேம்பாட்டில் இப்போது நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?சத்தான உணவு எத்தனை பேருக்கு கிடைக்கிறது?குடிதண்ணீர்,கழிப்பிடவசதி.வீட்டுவசதி ,கல்வி.மருத்துவம்.வேலைவாய்ப்பு,வேளாண்மை...இப்படி ஒவ்வொன்றிலும் இப்போதுள்ள நிலை-எய்த வேண்டிய நிலை-அதற்குத்தேவையான நிதி-அரசு முதலீடு செய்யும் வழி-இலக்கை எட்டும் காலவரையறை இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியது திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி.ஐந்தாண்டுதிட்டங்கள் முதலில் இப்படித் தீட்டப்பட்டன.சற்று பலனும் கிடைத்தது.இப்போது உலகமயச் சூழலில்-சந்தையின் இழுபறிக்கு அதாவது லாபவெறிகொண்ட சூதாட்டக்காரர்களின் இழுபறிக்கு மககள் நலம் பலியிடப்பட்டுள்ளது.இந்த கனவுத் திட்டமும் அதன் ஒருகூறே.

அடிப்படை கட்டுமான மேம்பாடு என்கிற கூப்பாடும் யதார்த்தமும் நேரெதிரில் உள்ளன.இதனை ஆய்வுசெய்து நிருபிக்க விரும்புவோர் நான் குடியிருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை எடுத்துக் கொள்ளலாம்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் உலகவங்கியின் கனவுத்திட்டமாய் இது உருவாக்கப்பட்டது.சாலை.பாதாளச் சாக்கடை,குடிநீர் இணைப்புகள் அதற்கான ராட்சச மேல்நிலைத்தொட்டி,கல்யாண மண்டபம்,வணிக வளாகம்,கல்வி நிறுவனக் கட்டிடங்கள்,என எல்லாம் உருவாக்கப்பட்டது.3000 வீட்டுமனைகள் பல்வேறு பொருளாதாரப் பிரிவினருக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டன.பக்கத்திலே எந்த அடிப்படை வளர்ச்சியும் இல்லாத கருப்பு கிராமமாய் திரூர், தொழுவூர் குப்பம்,செவ்வாப்பேட்டை என அமைந்தது.வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை அம்மக்கள் ஆச்சரியமாப் பார்த்தனர்.இப்போது என்ன நிலை?சுமார் முன்னூறு வீடுகளே கட்டப்பட்டுள்ளன.சாலைகள் சீர்கெட்டு மேடுபள்ளமாய்-புழுதிக்காடாய்-புதர்மண்டிக் கிடக்கிறது.தண்ணீர் தொட்டி வெறும் நினைவுச் சின்னமாய் நிற்கிறது.பாதாளச் சாக்கடை தூர்ந்து ஆங்காங்கு சாக்கடை ஆறு ஓடுகிறது.கல்யாண மண்டபம்.வணிகவளாகம்,கல்விநிலையக் கட்டிடங்கள் சீண்டுவாரற்றுக் கிடக்கின்றன.அதன் யானை விலையால் யாரும் நெருங்குவதில்லை.கொட்டப்பட்ட பலகோடி ரூபாய் பாழாகிவிட்டது.ஏன்?

உலக வங்கிக்கு வட்டிகட்டியே வீட்டுவசதி வாரியமும் நொடிந்தது.இவர்கள் நிர்ணயித்த வருமான பிரிவின் அடிப்படையில் மிகக்குறைந்த வருவாய் பிரிவின் கீழ்-மானியத்தோடு மனை பெற்றவர்கள் யாரும் வீடு கட்டவில்லை.அன்றாடச் சோற்றுக்கே திண்டாடும் அவர்களால் எப்படி வீடுகட்ட முடியும்?மனையை வீடுகட்டிபின்தான் விற்கமுடியும். .சில ஆண்டுகளுக்கு முன் விதி தளர்த்தப்பட்டது.மனைகள் ரியல் எஸ்டேட் தரகர்களிடம் சிக்கி விலை தாறுமாறாக எகிறியது.வேறெந்த வளர்ச்சியும் கானோம்.இதற்கு மாறாக மிகக்குறைந்த வருவாய்ப் பிரிவினருக்காவது வீடுகளை அரசே தவணை முறையில் கட்டிக் கொடுத்திருந்தால் ஆயிரம் குடும்பமாவது குடியேறியிருக்கும்.அதையொட்டி பிறபிரிவிலும் வீடுகள் எழுந்திருக்கும்.வணிக வளாகம்.மண்டபம்,குடிநீர் எல்லாம் பயன்பட்டிருக்கும்.இப்போது திறந்தவெளிக் கழிப்பிடமாக உள்ளது.இதற்கு யார் காரணம் களயதார்த்தம் அறியாது உலக வங்கி சொன்னதை அப்படியே ஏற்று திட்டமிட்டதுதான் காரணம்.

அதுபோல் மதுரவாயல் தொகுதியை ஒருவர் சுற்றிவந்தால் கட்டுமான வளர்ச்சிக்கும்-சீரழிந்த உள்ளூர் நிலைக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியைக் காணலாம்.இப்படி தமிழகம் முழுவதும் நிறைய உதாரணங்கள் உண்டு.இதையெல்லாம் உள்வாங்காமல்-தமிழக நிலையை ஸ்கேன் செய்து நோயை சரியாக உணராமல் -மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்த கனவுத்திட்டத்திற்கு உதட்டை அசைப்பதால் என்ன பயன்?இது சினிமா அல்ல நாட்டு நலம் என்பதை உணர வேண்டாமா?

ஒரு திட்டம் சரியானதா தவறானாத என்பதை அளக்க மகாத்மா காந்தியின் அளவுகோலே இன்றைக்கும் பொருந்தும்.அவர் சொன்னார், “நீங்கள் செய்கிற எந்தச் செயலாயினும் அது கடையனுக்கும் கடையனாய் தெருக்கோடியில் கிடக்கும் தரித்திர நாராயணனை ஒரு படி கைதூக்கி விடுமானால் அப்போதே அது சரியான செயலாகும்”இதன் பொருள் அதிவேக வளர்ச்சியே வேண்டாம் என்பதல்ல;மாறாக இந்திய தமிழக சூழலுக்கு ஏற்ற திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்பதே.ஏற்ற தாழவை பெருமளவில் குறைக்கும் வகையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையே இன்றையத் தேவை.அதனை உலகமயம் தராது.தாராளமயம் தராது.தனியார்மயம் தராது.உலக வங்கி,ஆசிய வங்கி,சர்வதேச நிதி நிறுவனம் தரும் திட்டங்கள் எதுவும் நம்மை விரும்பிய ஊர்கொண்டுபோய்ச் சேர்க்காது.
ஆம், முதல்வர் ஜெயலலிதா வழங்கும் தொலைநோக்கு கனவுத் திட்டம் அந்த மாயகண்ணாடியில் காட்டப்படும் வெறும் கனவே தவிர வேறலல..

ஒளவையார் விருது குறித்த விவாதம்

Posted by அகத்தீ Labels:



 "ஒள
வையார் பெயரில் விருது வழங்குவது சரியா?" என்ற தலைப்பில் மார்ச் 11 ஆம் தேதி இலக்கியச் சோலையில் எழுதிய கட்டுரை ஒரு ஆக்கபூர்வமான விவாதத்தை துண்டி உள்ளது.அதற்காக எமது பெரு மகிழ்ச்சியை முதலில் பதிவு செய்கிறோம்.மிகப் பெரும்பாலோர் ஒளவையார் பெயரில் பெண்கள் விருது வழங்கப்படுவது பொருத்தமில்லை என்ற எமது கருத்தோடு உடன்படுகின்றனர்.ஒரு சிலர் மாற்றுக் கருத்துகளை பதிவுசெய்துள்ளனர்.அவற்றை இங்கு பரிசீலிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

 "கால வர்த்தமானம் என்று ஒன்று உள்ளது. அவரவர் காலத்திற்கேற்ற தர்மம் நியாயம் உண்டு. கடந்த கால நிகழ்வுகளுக்கு இன்றைய நீதி வழங்க முற்படுவது போற்றத்தக்கதல்ல. குணம்நாடி குற்றமும் நாடி மிகை நாடி மிகக் கொளல் வேண்டும். இளைய தலைமுறைக்கு தவறான சிந்தனையை போதிக்காதீர்கள் ஔவையின் புகழ் அவரின் கவிதைதிறன்.ஒரு வேளை உங்களுக்கு யாப்பிலக்கணம் பற்றி சரியாகத்தெரியாது என நினைக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா தன் வாழ்நாளில் ஒரு வெண்பா எழுத வேண்டும் என்று நினைத்தாராம். எழுதினரா என்பது கேள்விக்குறி?"இவ்வாறு சந்துரு என்பவர் சுட்டிக்காட்டுகிறார்

இவரைப்போல சு.பட்டாபிராமன் எழுதிய கடிதத்தில் கல்வியைப் பற்றி ஒளவை பாடியது உட்பட பல நல்ல கூறுகளை சுட்டிக்காட்டிவிட்டு தையல் எனும் சொல் பதின்  பருவத்து தடுமாறும் இளமைப் பருவத்தையே குறிக்கும் எனவும்;மைவிழியார் என்பது வேசியைக் குறிக்கும் சொல் எனவும் விளக்கம் கூறி ஒளவையின் பார்வையில் குற்றம் காணக்கூடாது என்கிறார்.

 “மக்களுக்கு இப்போது தேவைப்படுவது உண்மை மட்டுமேவா இல்லை,பற்றிக் கொள்ள ஒரு நல்ல நம்பிக்கை’என்று சிவகுமாரும்;”தன் கணவனுக்காக மதுரையை எரித்த கண்ணகியைவிட ஒளவை எவ்வளவோ மேல்”என்றுசென்னை வண்ணனும்;”குறுந்தொகையில் ஒரு பாடலில் ஒளவை பெண் தன் பாலியல் உணர்வை வெளிப்படுத்தி முன்னுதாரணம் படைத்துள்ளதை மறக்கலாமா?”என்று பட்டம்மாளும் தங்கள் விமர்சனங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

 "பொதுவாக நீதி போதனைகளே ஒளவையார்கள் பாடல்களின் உள்ளடக்கம். ஆளும் வர்க்க சிந்தனைகளே அந்தந்த காலகட்டத்தின் நீதிபோதனைகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.அவற்றுள் சில, காலம் கடந்தும் நிற்கும்.எடுத்துக்காட்டு:ஊக்கமது கைவிடேல்,நன்றி மறவேல்,பருவத்தே பயிர்செய்,தந்தைதாய்ப் பேண்,சூது விரும்பேல்...இப்படி பல.மேலும் ஆட்சியாளர்களை இடித்துரைத்தல்,வாழ்க்கை அனுபவப்பாடங்களைச் சுட்டுதல் என இன்றும் ஏற்கத்தக்க பல அறிவுரைகளைக் கூர்மையாகப் பாடியுள்ளார்.அதே சமயம் புலவரும் காலத்தின் படைப்பே. காலத்தை மீறி அவர் வெகுதூரம் சென்றுவிட முடியாது.ஆணாதிக்க சமூகத்தில் பிறந்த ஒளவையின் பாடல்களில் பெண்களைப் பற்றி உயர்வாக எதிர்பார்க்க முடியுமா?" எனஎமது கட்டுரையில் எழுதிவிட்டுத்தான் வாதம் செய்தேன்.ஒளவையின் பெயரால் தமிழறிஞர் விருது வழங்குவதே பொருத்தம். மகளிர் விருது வழங்க வேறு பொருத்தமானவர்கள் உண்டு என்பதே என் வாதம்.ஒளவையின் பெருமையை  குலைக்கவில்லை.குறைத்தும் மதிப்பிடவில்லை.விருது பொருத்தப்பாடு மட்டுமே கேள்விகுள்ளாக்கப்பட்டது.
மேலும் கல்வியைப் பற்றி ஒளவை பாடினார்.அதில் பெண்கல்வி அடக்கமா?இல்லையே.நாலடியாரில் ஒரு பாடலிலும்,ஏலாதியில் ஒரு பாடலிலும் மட்டுமே பெண்கல்வி பற்றிய செய்தி உண்டு.உலகப் பொதுமறை திருக்குறள் கூட இவ்விஷயத்தில் மவுனமே.இது அவர்கள் வாழ்ந்த காலத்தின் குற்றமே.

 “தையலை உயர்வு செய்”என பாரதி பாடியபிறகும் “தையல் சொல் கேளேல்”என்று ஒளவை சொன்னது நியாயம் என்று வாதிடல் சரியா?பாரதியும் தமிழறிந்தவர் தானே.மை விழியார் என்பது வேசியைக் குறிக்கும் சொல் எனினும் அதுகுறித்த பார்வையும் பழுதுடையதே.ஆணாதிக்க கருத்தே.பாலியல் தொழிலாளி என்று பேசுகிற இந்தகாலச் சூழலுக்கும் பொருந்தாததே.

கண்ணகியோ,சீதையோ,ஒளவையோ இன்றைய பெண்களுக்கு ரோல்மாடல்-முன்னோடி ஆகமாட்டார்கள்.இவர்கள் மீது எமக்கு மரியாதை உண்டு.ஆனால் அது கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் மூடநம்பிக்கை அல்ல.கண்ணகியைப் போன்ற வாழ்வு தன் மகளுக்கோ,தங்கைக்கோ வாய்க்க யார்கொல் விரும்புவர்?சமீபத்தில் பொதிகை தொலைகாட்சியில் கவிஞர். வாலி பேசியபோது சிலப்பதிகாரத்தை இன்றைக்கு எழுதநேர்ந்தால், “காவலனைக் கேட்கும் முன் கோவலன் சட்டையைப் பிடித்து கண்ணகி கேட்பதாகத்தான் எழுதியிருப்பேன்.”என்றார்.வைரமுத்துவும் தன் ஆரம்ப கவிதைத் தொகுப்பில் “கருப்புநிலா” என்ற கவிதையில் இதுபோல் கேள்வி எழுப்பியிருப்பார்.அதே சமயம் அரசனை எதிர்த்து நின்ற கண்ணகியின் அறச் சீற்றம் நல்லது.கண்ணகிபெயரால் மனித உரிமைப் போராளி விருது வழங்கலாம்.பெண்ணுரிமை விருது வழங்கினால் ஏற்கமுடியாது.சீதை நெருப்பில் இறங்கியதை எம் பெண்களுக்கு முன்மாதிரி ஆக்கமுடியாது,அவர் பெயரால் ஆன்மிக விருது வழங்கட்டும்.அவ்வளவுதான்.ஒளவையாரின் கல்வியை-புலமையை-திறமையை பாராட்டுவோம்.அவர் பெயரால் இலக்கிய விருது வழங்கலாம்.அட்டியில்லை.சர்வதேச பெண்கள் தின விருது என்பது பொருந்தவில்லை என்பதே எமது வாதம்.

மூத்த இலக்கிய விமர்சகர் தி.க.சி.எழுதிய கடிதத்தில் கூறுகிறார், “சு.பொ.அகத்தியலிங்கம் கட்டுரை சுவையான அறிவுபூர்வமான சர்ச்சையைத் தொடங்கிவைக்கிறது.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,மணலூர் மணியம்மா,மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,தில்லையாடி வள்ளியம்மை என சான்றோர்கள் பெயரில் விருதுவழங்கலாமே என்று சு.பொ. கூறுவது ஏற்கத்தக்கது.தில்லையாடி வள்ளியம்மை பெயரில் தமிழக அரசு இவ்விருதை வழங்கினால்,மிகப் பொருத்தமாகவும்,சிறப்பாகவும் இருக்கும்”

தி.க.சி யின் பொருள் பொதிந்த கடிதத்தோடு இவ்விவாதத்தை நிறைவு செய்கிறோம்.

சு.பொ.அகத்தியலிங்கம்.

கவிதையாக இல்லை

Posted by அகத்தீ


 நானும்  எழுதி எழுதிப் பார்க்கிறேன்
கவிதை போல் இருக்கிறது
ஆனால்
கவிதையாக இல்லை

அட இந்தப் பொடியன்
அதிராமல்
நெஞ்சுக்குள்
குடியேறிவிட்டான்
அவன் கவிதைக்கு மட்டும்
அந்த வல்லமை எப்படி வந்தது?

தன் தவறென
உள் மனது குத்திக்காட்டினாலும்
அவள் தவறென
மனைவியிடம் வாதிட்டுப் பழகிய
ஆணாதிக்கமனம் போல்
என் கவிதை
தோற்ற இடத்தை
வார்த்தைகளால்
இட்டு நிரப்புகிறேன்

அறிவால் உரச உரச
தீப்பொறி வந்தது
கவிதை வரவில்லை

அனுபவத்தில் அலச அலச
சுயம் பளிச்சிட்டது
கவிதை பல்லிளித்தது

அந்த பொடியனின்
கவிதை
வென்றது எப்படி?

இதயம் எழுதியதால்
கவிதையானது.


-சு.பொ.அகத்தியலிங்கம்

அகத்தேடல்-10

Posted by அகத்தீ Labels:


எதிரிகள்
மார்பில் குத்தினர்
செத்துவிட்டதாக சொன்னார்கள்
செத்தபின்பும் வாழ்ந்தான்

நண்பர்கள்
முதுகில் குத்தினர்
உயிருக்கு ஆபத்தில்லை என்றார்கள்
உள்ளத்தால் நடைபிணமானான்

என்ன ஆனது?
ஏன் அப்படியானான்?
யோசிக்க யோசிக்க
நெஞ்சு ரணமானது

ஒருவேளை
எண்ணித்துணியாத நட்பா?
துணிந்தபின் எண்ணுவது
பிழையா?

இவன் அவனாகவும்
அவன் இவனாகவும்
கூடுவிட்டு கூடுபாய்ந்து
குறுக்கு விசாரணை செய்தநொடியில்
குறுகுறுத்தது
குற்றமுள்ள நெஞ்சு

வினையிண்றி
எதிர்வினை ஏது?
வினைப்பயன் என்பது
இதுதாமோ?
விதைத்ததை அறுக்கிறாய்
பதைப்பது ஏனோ?

நாள்பட்ட ரணத்துக்கு
அறுவை சிகிட்சை
இது உடலுக்குத்தான்
உள்ளத்துக்கு அல்ல

சமாதானங்களை
மூளை சொல்கிறது
நெஞ்சு ஏற்பதில்லை

காயங்களை
ஆற்றும் வல்லமை
காலத்துக்கே உண்டு
காத்திருக்கும் பொறுமை
யாருக்குமே இல்லை

கூடுவிட்டுகூடு பாய்ந்துநின்று
கோணங்களை மாற்றிமாற்றி
நியாயங்களை உரசிப்பார்த்தால்
ரணங்கள் ஆறிப்போகும்
காயங்கள் கரைந்துபோகும்

வினையின்றி
எதிர்வினை ஏது?
உனக்குள் நீயே
யோசித்துப் பாரு......


செய்திக்குப் பின்னால்... மக்கள் கருத்தும் உருவாக்கப்படுகிறது

Posted by அகத்தீ Labels:




“சமீபகாலமாக பொதுமக்களின் செயல் பாடுகள் கதிகலங்க வைக்கின்றன. ‘பேங்க்ல கொள்ளையடிச்ச அஞ்சு பேரை போலீஸ் காரங்க என்கவுன்ட்டர்ல போட்டு தள்ளினது சூப்பர்’ என டி.வி. பேட்டியில் குதூகலிக் கிறார்கள். இப்படியே போனால்...”இப்படி வலுவான பீடிகை போட்டு மக் களிடம் வெளிப்படும் பொறுப்பற்ற போக்கு களை கிண்டலடித்து இருக்கிறது குமுதம் (21.3.2012) வாரஏடு. அதில் கூறுகிறது, “குடி தண்ணீர் கேட்டு, சாலை மறியல் செய்த பெண்கள் மீது துப் பாக்கிச் சூடு. (பப்ளிக் வாய்ஸ்): நல்லா வேணும்ங்க! சின்னச் சின்ன விஷயத்துக் குக்கூட சாலை மறியல்னு ரோட்டுல உட் கார்ந்திர்றாங்க. சரியான டிராபிக் ஜாம். வேலைக்கு ஒரு மணிநேரம் லேட்”.
இப்படி பல செய்திகளை மிகவும் நையாண் டியாகக் குறிப்பிட்டு மனித உரிமை மீறல் களை பொதுமக்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என குமுதம் ஏடு உணர்த்துகிறது. சரியான சாட்டையடி. சபாஷ் மக்கள் கருத் தாக ஊடகங்கள் - குறிப்பாக காட்சி ஊட கங்கள் சொல்வதெல்லாம் உண்மையல்ல. தாங்கள் விரும்புகிற கருத்தை சிலர் மூலம் சொல்லவைக்கிற வித்தை ஊடகங்களுக்குக் கைவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால் இன்றைய ஊடகங்கள் ஆளும் வர்க்கத்துக்கு சாதகமான கருத்துகளை மக்கள் கருத்துகள் என்பதுபோல் பிரச்சாரம் செய்வதில் நுட்பமாக செயல்படுகிறது என் பதே உண்மை. “மனித உரிமை” இந்த வார்த்தையைப் போல் அரசியலாக்கப்பட்ட இன்னொரு வார்த்தை காண்பது அரிது. ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகளை பாலில்லாமல் பட்டினியால் சாகவிட்ட அமெரிக்காவின் கொடூரக் கல் நெஞ்சம் மனித உரிமை மீறலாக ஊடகங் களில் இடம் பிடிப்பதில்லை.
அதேசமயம் அமெரிக்காவை எதிர்க்கிற நாடுகளில் நடக் கிற சின்னச் சின்ன விவகாரங்களும் மிகப் பெரிதாய் ஊதி காட்டப்படுவதும் நடக்கும். ஏன்? இலங்கையில் 40 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது வாய்மூடி இருந்த அமெரிக்கா இன்று ஜெனிவாவில் மிகப்பெரிய மனித உரிமைக் காவலராய் வேடம் போடுகிறது. அதே சமயம் பற்றியெரியும் தீயை அணைக்க ஊற்றுகிற தண்ணீர் சாக்கடையாக இருந்தால் என்ன? பன்னீராக இருந்தால் என்ன? நிச்சயம் பெட்ரோலாக மட்டும் இருக்கக்கூடாது. சரி. மனித உரிமை என்று ஆரம்பித்த உட னேயே சர்வதேச பிரச்சனைகள் நினைவுக்கு வந்து விடுகிறது. நம் நாட்டுக்கு வருவோம். சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் சட்ட விரோத சுரங்கக் கொள்ளையைத் தடுத்த நரேந்திர குமார் சிங் கொடூரமான முறையில் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டார். இது பலத்த அதிர்ச்சியை உருவாக்கியது. இதை யொட்டி “இது மனித உரிமையில் வராதா?” என்ற தலைப்பில் தினத்தந்தி(12.3.2012) ஒரு தலையங்கம் தீட்டியது. இந்தக் கொலைக்கு எதிரான கோபம் நியாயமானது.
அதை எதி ரொலிப்பதில் தவறே இல்லை. அதேசமயம் அந்தத் தலையங்கத்தில் ஒரு இடத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட் டுள்ளது, “இது மனித உரிமை மீறலில் வராதா? கிரிமினலைக் கொன்றால் மனித உரிமை மீறல். போலீஸ் அதிகாரிகளைக் கொன்றால் அதற்கு என்ன பெயர்? என்று நரேந்திரகுமாருக்காக அனுதாபப்படும் சில பெண் அரசு ஊழியர்கள் ஆவேசமாகக் கேட்கிறார்கள்.” இவ்வாறு அந்தத் தலையங் கத்தில் வாதிட்டிருப்பது மேற்பார்வைக்கு நியாயம்போல் தோன்றும். அதுவும் பொது மக்கள் கருத்துபோல் வெளிப்படுத்தப்பட் டுள்ளது. கிரிமினலானாலும் அதிகாரியானாலும் அவர்களை தண்டிக்கிற அதிகாரம் நீதித் துறையைத் தவிர யாருக்கும் இருக்கக்கூடாது. அதிகார பலத்தை கையிலே கொண்டிருக்கிற காவல்துறை அத்துமீறலையும் சமூக விரோதி களின் அட்டூழியங்களையும் சமப்படுத்து வதே பிழையாகும். சமூக விரோதிகள் தனித்தி யங்க முடியாது. சுயநல அரசியல்வாதிகள், ஊழல் அதிகார வர்க்கம் இவர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் உள்ள முக்கூட்டணி ஊரறிந்த உண்மை. ஏன் தமிழ் திரைப்படங் களில் கூட இந்த தகாத உறவுகள் குறித்து நிறைய வந்துள்ளன. நேர்மையான அதிகாரி கள் கொல்லப்படுவதற்கு கறுப்பு ஆடுகளாய் செயல்படும் சில அதிகாரிகளே காரணமாக ஆகிறார்கள் என்ற உண்மையும் உறுத்தத்தான் செய்கிறது.
இதை அம்பலப்படுத்துவதன் மூலம்தான் சமூக விரோதிகளுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக நடத்த முடியும். சமீபத்தில் நடந்த வேளச்சேரி, திண்டுக் கல் என இரண்டு என்கவுன்ட்டர் சம்பவங் களிலும் சமூக விரோதிகள் வெளியேற ஒரே வாயிலும், ஒரே குறுகிய பாதையும் மட்டுமே இருக்கிற சூழலில் சம்மந்தப்பட்டவர்களை உயிரோடு பிடிக்க முடியவில்லை என்பதும்; எல்லோருக்குமே நெற்றியிலோ தோளிலோ தான் குண்டு காயம் படுகிறதென்பதும் பல் வேறு ஐயங்களை விதைக்கத்தான் செய்கிறது. சமூக விரோதிகளை உயிரோடு கைது செய்து முறையாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத் தில் நிறுத்தி வலுவாக வாதாடினால் தண்டனை உறுதி என்பது மட்டுமல்ல பல உண்மைகள் வெளிவரும். திரை மறைவிலிருந்து இவற்றை ஆட்டுவிக்கும் பெரிய மனிதர்கள் யாரென்பது அம்பலப்படும். அதை விரும்பாத காவல் துறையும் அதிகாரிகளும் என்கவுன்ட்டர் களை செய்கிறார்கள்.கேப்டன் பிரபாகரன் என்றொரு திரைப் படம் வந்தது. அதை இப்போது பாருங்கள். படத்தின் கலையம்சங்களை திரைப்பட விமர்சகர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
சந்தனக் கட்டை வீரப்பனை (படம் இவரை ஞாபகப் படுத்துகிறது) என்கவுன்ட்டரில் கொல்லாமல் சரணடையச் செய்ய கதாநாயகன் முயல்வார். ஆனால் அதனால் அம்பலப்பட்டுப்போவோம் என்று கலங்கிய சுயநல அரசியல்வாதிகளின் கையாளாக அதிகாரி ஒருவர் வீரப்பனைக் கொன்று விடுவது போல் அமையும். அது தானே தொடர்ந்து நடக்கிறது.எல்லா என்கவுன்ட்டர்களும் தவறா னவை என்று நாம் சொல்லவில்லை. கையில் ஏகே 47 துப்பாக்கியோடு சண்டை போடுகிற பயங்கரவாதிகளோடு மோதும்போது சிலர் கொல்லப்படலாம். அது என்கவுன்ட்டர் டெத் - மோதல் சாவு. ஆனால் இப்போது நடப்பதெல் லாம் ஃபேக் என்கவுன்ட்டரே. அதாவது போலி என்கவுன்ட்டரே. இது மோதல் கொலையே. இதைப்பற்றிய கருத்தை ஊட கங்கள் மக்களுக்குச் சொல்லாவிடில் மக்க ளால் உண்மையை உணர முடியாது. அரை குறையாய் சொல்லி - தங்களுக்கு சாதக மானதை மட்டும் சொல்லி மக்களின் கருத் தைக் கேட்டு ஒலி - ஒளி பரப்புவது என்பது உண் மையில் ஒருவிதமான கருத்துத் திணிப்பே. ஒரு அனுபவத்தை இங்கு சொல்லலாம். பாபர் மசூதி இடிப்புக்கு முன் சென்னையில் செங்கல் ஊர்வலம் வந்தபோது வீடுவீடாக 2 ரூபாய் நன்கொடைச் சீட்டுக் கொடுத்து நிதி சேகரித்தார்கள். நான் குடியிருந்த வீட்டிற்கும் வந்தார்கள்.
என் அம்மா உட்பட அங்குள்ள குடித்தனக்காரர்கள் 12 பேரும் நிதி கொடுத் தார்கள். அந்த நேரத்தில் நான் அங்கு வந்தேன். எதற்கு நிதி என்றேன். ராமர் கோயில் கட்ட என்று அம்மா சொன்னார். நான் மசூதியை இடித்துக் கட்டப்போகிற விவகாரத்தை சொன் னேன். எங்க அம்மா கோபப்பட்டார். என்னிட மல்ல. நிதி கேட்டவரிடம். “ஏன்டா மசூதியை இடிச்சுட்டு கட்டணும். வேற இடம் இல் லையா?” அவர் பதில் சொன்னார். “அது ராமர் பிறந்த இடம்”. எங்க அம்மா திருப்பிக் கேட் டார்,“ஆமா ஆமா கோசலை இடுப்பு வலியில துடிக்கும்போது பக்கத்துல இருந்து நீதான் பாத்தியா? காசைத் திருப்பிக் கொடு” என்று நன்கொடையை திரும்பப் பெற்று விட்டார். எல்லா குடித்தனக்காரர்களும் இதையே செய் தனர். வந்தவர் என்மீது கோபத்தைக் காட்டி னார். நான் யார் என்று தெரிந்ததும் நடையைக் கட்டினார். மக்களிடம் சரியான தகவல்களை சொல்லி சரியான முறையில் கேள்வி எழுப்பினால் மக் கள் கருத்து எப்போதும் சரியாகவே இருக்கும். மாறாக, தனக்கு என்ன பதில் வேண்டுமோ அதற்கேற்ப கேள்வியை சொடுக்கினால் விடை அதற்கேற்பவே வரும்.
அதற்குமேல் விரும்பாத விடைகள் வந்தாலும் எடிட் செய்து மக்கள் கருத்தை தங்கள் விருப்பம்போல் சிதைத்துவிட முடியும். இதைத்தான் ஊடகங் கள் செய்கின்றன.கடைசியாக ஒரு செய்தி. அந்தச் செல்லப் பையன் கொள்ளிக்கட்டையோடு கூரைமேல் ஆட்டம் போடுவது ஆபத்தானது என்கிறோம். இருட்டில் திருடனை விரட்டுவதற்குத்தான் தீப்பந்தம் ஏந்தியிருக்கிறோம் என்கிறார் வீட்டுக் கார அம்மா. ஆனால், என்ன நடக்கும்? யாரா வது உத்தரவாதம் தர முடியுமா? எச்சரிக்க வேண்டியது நம் கடமை.

சு.பொ.அகத்தியலிங்கம்

பெண்களைப் பழித்த ஒளவையின் பெயரால் விருது வழங்கலாமா?

Posted by அகத்தீ Labels:


மிழ் மூதாட்டி ஒளவையின் பெயரால் பெண்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நல்லது. பெண்களைப் பெருமைப் படுத்த எத்தனை விருதுகள் கொடுப்பினும் வரவேற்போம். ஏற்கெனவே நடப்பிலிருந்த மணிமேகலை விருது என்னவாகும்? கல்பனா சாவ்லா விருது தொடருமா? விருதுகளின் அரசியலை இறுதியில் பார்க்கலாம்.ஒளவை யார்?அவரின் பெருமைகள் என்ன? முதலில் அதனை அறிவோம்.

பொதுவாக ஆத்திசூடி எழுதியவர் ஒளவை என்பதை அறிவோம். ஒளவையாக வேடமிட்டு கே.பி.சுந்தராம்பாள் நடித்த திரைப்பட காட்சிகளும்  கணீர்குரலில் அவர் பாடிய பாடல்களும் நம் நினைவில் நிழலாடும்.அறிவுக் களஞ்சியமாக அவர்குறித்து பள்ளிப்பாடப் புத்தகத்தில் நாம் படித்த செய்திகள் மனத்திரையில் ஓடும்.தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் கல்வி, கேள்வியில் ஓங்கி இருந்ததின் சாட்சியாக ஒளவையை தமிழறிஞர்கள் போற்றிப் புகழுவார்கள். அது சரி ஆண்பால் புலவர்கள் அளவுக்கு பெண்பால் புலவர்கள் அன்று இருந்தார்களா என்ற கேள்வியை எழுப்பினால், என்ன பதில் வரும்?ஒளவை என்பது ஒரு புலவரை மட்டும் குறிக்கும் சொல் அல்ல பெண்பால் புலவர்கள் எல்லோரையுமே ஒளவை என்றே குறிப்பிடும் மரபு உண்டு என்பர்.மொத்தம் பதினெட்டு ஒளவையார்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பொதுவாக நீதி போதனைகளே ஒளவையார்கள் பாடல்களின் உள்ளடக்கம். ஆளும் வர்க்க சிந்தனைகளே அந்தந்த காலகட்டத்தின் நீதிபோதனைகள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.அவற்றுள் சில, காலம் கடந்தும் நிற்கும்.எடுத்துக்காட்டு:ஊக்கமது கைவிடேல்,நன்றி மறவேல்,பருவத்தே பயிர்செய்,தந்தைதாய்ப் பேண்,சூது விரும்பேல்...இப்படி பல.மேலும் ஆட்சியாளர்களை இடித்துரைத்தல்,வாழ்க்கை அனுபவப்பாடங்களைச் சுட்டுதல் என இன்றும் ஏற்கத்தக்க பல அறிவுரைகளைக் கூர்மையாகப் பாடியுள்ளார்.அதே சமயம் புலவரும் காலத்தின் படைப்பே. காலத்தை மீறி அவர் வெகுதூரம் சென்றுவிட முடியாது.ஆணாதிக்க சமூகத்தில் பிறந்த ஒளவையின் பாடல்களில் பெண்களைப் பற்றி உயர்வாக எதிர்பார்க்க முடியுமா?

 “தையல் சொல் கேளேல்” "மை விழியார் மனை அகல்". என்பது ஒளவையின் ஆத்திசூடி. பெண்கள் சொல் கேட்கக்கூடாது,கண்ணில் மை தீட்டிய பெண்களை நம்பாதே என்பது எவ்வளவு பிற்போக்குத்தனமானது என்பதை சொல்லவும் வேண்டுமோ?ஆகவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதுமைக்கவி பாரதி இதற்கு மாற்றாய் தனது காலத்தின் குரலாய் “தையலை உயர்வுசெய்”என்றான்.ஒளவையின் பெயரால் பெண்கள் விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் அவரின் பெண்கள் பற்றிய  மேலும் சில பதிவுகளைப் பார்ப்போம்.

    "நிட்டூர மாக நிதிதேடும் மன்னவனும்
    இட்டதனை மெச்சா இரப்போனும் – முட்டவே
    கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
    வேசியும் கெட்டு விடும்." என்கிறார் ஒளவை.கொடுமையாக-நிட்டூரமாக வரியை விலையை உயர்த்திய மன்னன்[மன்னியும் அடக்கம் தானே], கிடைத்த இலவசத்தை-இட்டதனை வியந்து பாராட்டாத பிச்சைக்காரன்[இப்போது குடிமக்கள் நிலையோ],இவர்களை கூச்ச சுவாபமுள்ள வேசியோடு ஒப்பிட்டு கெட்டுவிடும் என்கிறார். சரி போகட்டும். கூச்ச சுவாபம் இல்லாத குடும்பத்துப் பெண்ணை இதனுடன் இணைத்துப் பேசுதல் தகுமோ?நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சா இயல்பும். ஞானச்செருக்கும் புதுமைப் பெண்ணின் இலக்கணம் என்று பாரதி சொன்னது என்கே?ஒளவையின் பார்வை எங்கே?

இன்னொரு பாடலில் "பேசும் மனையாளின் பேய்நன்று" என்கிறார்.உச்சமாக ஒரு பாடலில் கூறுகிறார்,

   "இருந்து முகம்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
    விருந்து வந்ததென்று விளம்ப – வருந்திமிக
    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
    சாடினாள் ஓடினான் தான்"

 "பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
    எக்காலும் கூடி வாழலாம் – சற்றேனும்
    ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
    கூறாமல் சந்நியாசம் கொள்."

விருந்து வந்ததென்று கணவன் சொன்னதும் ஏன் மனைவிக்கு கோபம் வரவேண்டும்?வீட்டில் அரிசி உண்டா? மளிகைச் சாமான்கள் உள்ளதா? எதையும் அறியாமல் விருந்தை கணவன் அழைத்துவந்தால் அவள் என் செய்வாள்?மனைவி சற்று ஏறுமாறாக இருப்பினும் கணவன் கூறாமல் சந்நியாசம் கொள்வது சரியாக இருக்குமோ? இந்த இடத்தில் ஜோதிர்லதா கிரிஜா பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு வார ஏட்டில் “கூறாமல் சந்நியாசம் கொள்”என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை நினைவிற்கு வருகிறது.

இரண்டு குடித்தனங்கள் அருகருகே வாழ்ந்தனர்.முதல் வீட்டில் மனைவி சற்று கொடுமைக்காரி,இரண்டாவது வீட்டில் கணவன் மகாமுரடன் கொடுமைக்காரன்.முதல் வீட்டில் ஒரு நாள் சண்டையின் போது கணவன் கோபித்துக்கொண்டு காவிகட்டி புறப்பட்டுவிட்டான்.சில நாட்களுக்குப் பின் இரண்டாவது வீட்டில் சண்டை அடிதாங்க முடியாமல் மனைவி சொன்னாள் “பதிவிரதைக்கு ஏற்ற பர்த்தா உண்டானால் எக்காலமும் கூடி வாழலாம்.இங்கே ஏறுமாறாக இருப்பதால் கூறாமல் சந்நியாசம் கொள்கிறேன்..”அவள் வீட்டைவிடு வெளியேறுவதோடு கதை முடியும்.

மேலே விவரித்தவை ஒளவையின் பெண்கள் பற்றிய பார்வை பழுதானது.அவர் வாழ்ந்தகாலத்து நிலப்பிரபுத்துவ சிந்தனை சார்ந்தது.எனவே அவர் பெயரால் பெண்கள் விருது பொருத்தம்தானா?டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,மணச்சநல்லூர் மணியம்மா,மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,தில்லையாடி வள்ளியம்மை போன்றோர்கள் பெயரில் வழங்கலாமே,பெண்விடுதலையை உரக்கப் பாடிய பாரதி,போரடிய பெரியார்,சிங்காரவேலர் இவர்கள் பெயரில் வழங்கினாலும் தகுமே.ஏன் கணவன் வாக்களிக்கும் கட்சிக்குத்தான் மனைவியும் வாக்களிக்க வேண்டும் என்ற மரபு பழக்கத்தை உடைத்த எம்.ஜி.ஆர் பெயரில்கூட வழங்கலாம்..ஒளவை பெயரில் வழங்குவது பொருத்தமற்றதே,

அது போகட்டும் இவ்விருது யாருக்கு வழங்கப்படும்? அரசியல் விளையாடுமே.எல்லாவிருதுகளுக்கும் இதுதானே கதி.நக்கீரன் கோபால் கையில் சிகப்புக் கயிறும் நெற்றியில் குங்குமப் பொட்டுமாக பெரியார் விருதை வாங்கிய போதும்,மேல்வருவத்தூர் சாமியார் போகும்பாதையை துடைப்பத்தால் பெருக்கி பக்திபரவசமாக நின்ற விசாலாட்சி நெடுஞ்செழியன் அதேபோல் பெரியார்விருது வாங்கியபோதும் மனது வலிக்கத்தான் செய்தது.விருதுகள் அரசியலாக்கப்பட்டு விட்டதால் விருதாவாகிவிட்டன அதேகதி ஒளவைக்கும் வரலாமா?

சு.பொ.அகத்தியலிங்கம்.