ஆயின்….

Posted by அகத்தீ Labels:





ஆயின்….

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

என் சகோதரனுக்கு  அநீதி இழைக்கப்படும் போது - அதை
நீதியின் வெற்றி எனக் கொண்டாடுவது அமைதியா ?

சகமனிதனை மதம் ,சாதியின் பெயரால் அவமதிப்பதும்
இழிவுசெய்வதும்  அமைதி பூங்காவின் லட்சணமா ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

 நல்லிணக்கத்தை குலைக்க யாரும் விரும்பவில்லை – ஆயின்
வலுத்தவனுக்கு வாலைக் குழைப்பதா நல்லிணக்கம் ?

நீதிக்கு தலைவணங்கவே யாவருக்கும் விருப்பம் – ஆயின்
நெஞ்சார பொய்சொல்வோரிடம் மண்டியிடுவதா நீதி ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

சட்டத்தின் ஆட்சிக்கு உட்படச் சம்மதம்தான் – ஆயின்
கொழுத்தவனைக் காப்பதற்கா சட்டமும் ஆட்சியும் ?

தியாகம் செய்வதற்கு தயக்கம் இல்லை – ஆயின்
குபேரன் கொழுக்க ஏழை கோவணத்தை இழப்பதா தியாகம் ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

மனச்சாட்சியைக் கொன்று புதைப்பின்
மயாண நிசப்தமே எங்கும் சூழும் !
மனட்சாட்சி விழித்து எழுமின் !
மனமும் கண்களும் சினந்து சிவக்கும் !!!!

- சு.பொ.அகத்தியலிங்கம் .
12/11/2019.



“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்! “போர் வியூகம்” சமைப்பீர்!

Posted by அகத்தீ Labels:




கீழ்க்கண்ட பத்தியில் முதல் இரண்டு வரியைத் தவிர மற்றவை இடமின்மையால் தீக்கதிரில் விடுபட்டுள்ளன . இங்கு அதனையும் சேர்த்து வெளியிடுகிறேன் .

 “நூல் இறுதியில்  திணிக்கப்பட்ட என்.குணசேகரனின் கட்டுரை இந்நோக்குக்கு உதவுமா ? அவர் பதிலுரை பொத்தாம் பொதுவாய் சமாதானம் சொல்வதாய் மட்டுமே உள்ளது. தவறியும் பிராமணியம் ,வர்ணாஸ்ரமம் என்ற சொற்களைக்கூட பயன்படுத்தாமல் சாதியத்தை பேசுவது வியப்பாய் உள்ளது . நிறைவாய் சொல்லும் சூத்திரத்திலும் எளிதில் புரியம்படி பளிச்சென்று சொல்ல வில்லை . டெல்டும்டே அம்பேத்கரிஸ்ட் இயக்கங்கள் பற்றி சுயவிமர்சனமாய் சொல்லியிருக்கிறார் ; ஆனால் குணசேகரன் கட்டுரையில் சுயவிமர்சனம் இல்லையே ஏன் ?”


“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்!  போர் வியூகம்” சமைப்பீர்!

சு.பொ.அகத்தியலிங்கம்.


நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிறசாதியின் குடியரசுஎன்கிற ஆனந்த் டெல்டும்டேயின் நூல் ஆழந்த வாசிப்புக்கும் விவாதத்திற்கும் உரியது.  


 பாரதி புத்தகாலய ஆசிரியர் குழு தன் பங்கிற்கு ஏற்பும் மறுப்பும் கொண்டிருந்தாலும் ஒரு கனத்த விவாதத்திற்கான சட்டகத்தையும் இறைச்சிப் பொருளையும் வழங்கும் இந்நூலை தமிழில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.” என பதிப்புரையில் செய்துள்ள அறிவிப்பு இடதுசாரி அறிவுப்புலம் சார்ந்தோருக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் .



எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்கிலி இதழில் தொடர்ந்து அவ்வப்போது நடந்தவற்றுக்கு எதிர்வினையாக எழுதியவற்றை  மீண்டும் செம்மைப்படுத்தி கூர்மையாக்கி 13 கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் டெல்டும்டே .  



அனைத்துக் கட்டுரைகளும், “இந்தியக் குடியரசு சாதி என்கிற அஸ்திவாரத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது.” என்கிற செய்தியை வலியுறுத்துவதாகவும் , “ ஒரு ஜனநாயக் குடியரசாக நாம் உயிர் பிழைப்பதுபற்றி கவலைப்படுவதாகவும் அமைந்துள்ளது .


 “ ஆனந்த் டெல்டும்டேயின் தெளிவான வாதங்கள் யாருக்கும் வசதியாக இருக்காது.” எனமுன்னுரையில் சுனில் கில்னானி சொல்லியிருப்பதின் பொருளை நூலை வாசிக்க வாசிக்க உணரலாம் .

  “சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் புரட்சி வராது . அதே சமயம் ,ஒரு புரட்சி இல்லாமல் சாதியை ஒழிக்க முடியாது.அதனால் இரு தரப்பும் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும்கூட இவ்விரு நிலைப்பாட்டின் ஆச்சாரக் கூட்டங்களோடு நான் மோதத்தான் வேண்டும் என நான் உணர்ந்தேன்.அது உழுவதற்கான ஒரு தனிமையான வயல்.”என அறிமுக அத்தியாயத்தில் ஆசிரியர் நூலின் உள்ளடக்கம் செல்வழியை சொல்லிவிட்டார் .

13 அத்தியாயங்களில் 9 அத்தியாயங்கள் நேரடியாக மேலே சுட்டிய பொருள் சார்ந்தே சுழல்கிறது .மாவோயிஸ்ட் பற்றிய அத்தியாயம் தலித், பழங்குடியினர் உரிமை இவற்றுடன் அரசு பயங்கரவாதத்தையும் பேசுகிறது . கல்வி, சுவச் பாரத், ஆம் ஆத்மி பற்றி பேசும் மற்ற மூன்று கட்டுரைகளும் கூட இறுதியில் குடியரசின் முகலட்சணத்தை, சாதியப் பார்வையைத் தோலுரிப்பதாக அமைந்துள்ளன .  

இடஒதுக்கீட்டின் சுருக்கமான வரலாற்றோடு அமலாக்கத்தையும், அதன் எதிர்வினைகளையும், விளைவுகளையும் மிக கூர்மையாக அலசுகிறார் . 1. “இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவது சாதியல்ல குடும்பம்என்ற அளவுகோலை இணைத்திருந்தால் எனும் வாதம். 2. இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றோர் தனித்தீவாகிவிட்டனர் என்கிற கவலை. 3. புதிதுபுதிதாய் சாதிகள் ஒதுக்கீடு கோருதல், உள் ஒதுக்கீடு கோரிக்கை. 4. தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு என பல முனைகளில் விவாதத்தை முன் வைக்கிறார் .  

47 பக்கங்கள் கொண்ட முதல் கட்டுரையும் , பிற அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகளும் இடஒதுக்கீட்டை  ‘சர்வரோக நிவாரணியாகப் பார்ப்போருக்கும் ,  ‘இடஒதுக்கீடே சர்வரோக காரணிஎன்போருக்கும் கசப்பாக இருக்கும்அதுவும் உயர் சாதியினருக்குதனி வகை ஏழையென10 சதம் இட ஒதுக்கீடு அவசரமாக அமலாக்கப்பட்ட பின்னணியில் , தமிழகப் பார்வையும் பிற மாநிலப் பார்வையும் முரண்படும் சூழலில்,  கட்டாயம் விரிவாகப் பேச பல செய்திகளைச் சொல்லுகிறது .

 “ கிராமம் என்பது பிரதேசவாதம், அறியாமை,குறுகிய மனப்பான்மை, மதவாதம் ஆகிவற்றின் சாக்கடை அன்றி வேறு என்ன ? வரைவு அரசியல் அமைப்பு கிராமத்தை விட்டு தனி நபரை தன் அலகாக எடுத்துக் கொண்டதில் நான் மகிழ்கிறேன்.” எனும் அம்பேத்கரின் மேற்கோளைச் சுட்டும் டெல்டும்டே தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் சொல்லும் செய்திகள் நெஞ்சைப் பதறவைக்கிறது.

இந்தியக் குடியரசு சாதிகளின் அஸ்திவாரத்தில்தான் இன்னும் தன் கோரப்பற்களைக் காட்டிக்கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருக்கிறது.நீதி, நிர்வாகம் ,காவல் ,ஊடகம் என அனைத்தும் சாதியக் கண்ணோட்டத்தோடேயே சகலத்தையும் அணுகுவதை - சாதிய ஒடுக்குமுறைக்கு முட்டுக்கொடுப்பதை அநேக எடுத்துக் காட்டுகளுடன் நிறுவுகிறார்.

நிர்பயா பாலியல் வன்புணர்வு பேசப்பட்டதின் நூற்றில் ஒரு பங்கு கிராமப்புற தலித் பெண் தாக்கப்படும் போது பேசப்படுவதில்லையே .டெல்டும்டே கோபம் நியாயமே! தமிழக அனுபவமும் அதுதானே

தமிழகத்தில் வாச்சாத்தி, சின்னாம்பதி போன்றவை கம்யூனிஸ்ட்டுகள் உறுதியான தலையீட்டால் ஓரளவு வெளிச்சம் பெற்றதும் ;போராடி கொஞ்சம் வெல்ல முடிந்ததும் வரலாறு .அது ஏனோ டெல்டும்டே பார்வையில் படாமல் போய்விட்டது.  

மார்க்சிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் எனப்படும் இரு தரப்பினருமே தங்களது இயக்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்வதற்கும், தங்களது சொந்த அழிவிற்கும் ஏராளமான வேலை செய்துள்ளனர்.” என்பதை விரிவாக ஆய்கிறார்.

அம்பேத்கர் துவங்கிய இயக்கம் எப்படி சிதைவுண்டும், பிளவுண்டும், ஆளும் வர்க்கத்தின் கைக்கருவியாய்ப் போய்விட்டது என்பதை சுயவிமர்சன ரீதியாக ஒளிவு மறைவு இன்றி போட்டு உடைக்கிறார். நிலம் எப்படி தலித் மக்களின் அடிப்படைப் பிரச்சனை என அம்பேத்கரிஸ்ட்டுகள் பார்க்கத் தவறியதை, உனா போராட்டத்தில் அது முன்னுக்கு வருவதை எல்லாம் படம் பிடிக்கிறார் .

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கான்பூர் மாநாட்டில் பேசிய ஒற்றைவரியைச் சுட்டி  “சிங்காரவேலுவே இப்படிப் பேசினால்என ஒரு  ‘க்கன்னாவைத்து பிராமணத் தலைவர்கள் என கம்யூனிஸ்ட்கள் மீது விமர்சனமாக்குகிறார்
சகோதரத்துவம் என்ற பேச்சு சாதி உள்ளவரை வெறும் பேச்சே! மந்திர தந்திரங்களால் நோயைப் போக்க முடியாததுபோல் .நமது சமூகப் பெருநோயாகிய சாதி என்னும் நோயை கள்ள நியாயத்தால் போக்க முடியாது. பூணூலைத் தரித்துக்கொண்டு அதற்குரிய சாதிச் சடங்குகளை செய்து கொண்டே சாதியை விட்டதாகச் சொல்லும் பெரியோர்களின் நியாயம் கள்ள நியாயமே .இந்த கள்ள நியாயம் இந்தியருக்கு வெகுகாலம் இருந்து வருகிறது.” என்று சொன்னவர் சிங்கார வேலர், இன்னும் வலுவாய் சாதிக்கு எதிராய் குரல் கொடுத்தவர். ஆகவே டெல்டும்டே சுட்டியது பொருத்தமல்ல.

நிலம் ,பொருளாதாரம் போன்றவற்றில் அம்பேத்கரிஸ்ட்டுகள் தவறிழைத்தது போலவே, பிராமணியம், வர்ணாஸ்ரமம் போன்றவற்றை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள் போதிய அக்கறை காட்டாமல் தவறிழைத்துவிட்டார்கள் என டெல்டும்டே நூல் நெடுக வாதிப்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக் கூடிய அனுபவமாக இருக்கலாம்.

 “ எனது கருத்தின்படி இந்த நாட்டின் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது . அவை பிராமணியமும் ,முதலாளித்துவமும் . இதில் பிராமணியம் என்பதில் ஒரு சமூகமாக பிராமணர்களிடம் உள்ள அதிகாரம் ,சலுகை ,நலன் ஆகியவற்றைக் குறிக்கவில்லை. நான் அந்த அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை .பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம் போன்றவற்றை மறுப்பதைக் குறிப்பதாகும்.இந்த வகையில் பிராமணர்கள்தான் அதை ஆரம்பித்தவர்கள் என்றாலும் பிராமணர்களிடம் மட்டுமின்றி எல்லா வகுப்பினரிடமும் பரவலாகக் காணப்படுகின்றது .” அம்பேத்கரின் இந்த மேற்கோளை மிகச்சரியாகப் பொருத்தி இதனை உள்வாங்காத கம்யூனிஸ்டுகள்,  அம்பேத்கரிஸ்டுகள், முற்போக்காளர்களை விமர்சிக்கிறார் டெல்டும்டே.

பகுஜன் சமாஜ் கட்சியின் தோற்றம், வெற்றி, அதன் பலவீனம் இவற்றை மிகச்சரியாகவே கணிக்கிறார் .கன்ஷிராமிற்குப் பின் வந்த மாயாவதி சர்வஜனம் என முன்வைத்த வாதம் தேர்தலில் வெற்றி பெற உதவியதையும், அதனால் சாதிய ஆதிக்கம் உள்ள மாநிலத்தில் ஓர் தலித் முதல்வராக முடிந்ததும் ; அதன் மூலம் சில சாதனைகளைச் செய்ததையும் , தலித்துகளிடையே நம்பிக்கை உருவானதையும் கோடிட்டு காட்டுகிற போதே ; இலக்கை மழுங்கடித்துவிட்டதையும் சொல்கிறார் .

பிராமணர், மேல் சாதியினர்பகுஜன் கட்சியில் சேர்ந்து வெற்றி. பெற்றாலும் அதுரோட்டி பேட்டிகாவிவகாரமாக அதாவது உணவை சமத்துவமாக பரிமாறுவதாகவோ ,பெண் கொடுத்து பெண் எடுப்பதாகவோ மாறவில்லை என்கிறார் .

சாதிகள் உள்ளார்ந்த வகையில் பிரிப்பவை , அவை ஒரு போதும் மக்களை ஒன்றிணைக்காது’  “மாயாவதியின் சாதி அடிப்படையிலான கூட்டு எந்த சமூகப் புரட்சிக்கும் நேர் எதிராக சாதியத்தை ஆழப்படுத்துவதில்தான் போய் முடியும்,”என்கிற பாடத்தை பகுஜன் சமாஜ் கட்சி மூலம் வரலாறு மீண்டும் ஒரு முறை சொல்லியிருப்பதையும்; கன்ஷிராமின் ஆரம்ப இலக்கை மாயவதி தவறவிட்டுவிட்டதையும், இடதுசாரிகளோடு சேருவதில் பகுஜனுக்கு எப்போதும் விருப்பம் கிடையாது என்பதையும் ; பாஜக கூட போகத் தயங்கியதில்லை என்பதையும் சுட்டிக்காட்டகிறார்.

பாஜக தலித்தை இழுப்பதில் வெற்றி பெறுவதை, அம்பேத்கரை வெறும் வழிபாட்டு உருவமாக மாற்றுவதை நுட்பமாக ஆய்கிறார். ராகுலின் தலித் பாசம் எப்படி அக்கறையோடு செய்யப்பட்டாலும் அது குறிக்கோளைச் சரியாகக் கொள்ளவில்லை என்கிறார் .

ராகுலை விமர்சிக்கும் போது, “அம்பேத்கர் சொன்னதர்ம சாஸ்திரங்களை வெடிவைத்து தகர்க்க வேண்டும்என்பதை காங்கிரஸ் இன்னும் உள்வாங்கவேவில்லைஎன்கிறார். வேறு வார்த்தைகளில் கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்கிறார்.  
பிரதமரின் சுவச் பாரத் பற்றி பேசும் போது, தூய்மைப் பணிக்கு ஒரு சாதி என்ற கலாச்சாரம் மாற்றப்படாமல் சுத்தம் பற்றிய சமூக பார்வை மாறாதென்கிறார் . மிகமிக சரியே !  

வீட்டில் ஆணாதிக்கம் ஓங்கி சுத்தம் செய்தல் பெண்கள் பணி என்றும் ; வெளியில் ஒரு சாதியின் பணி என்றும் பார்க்கும் பார்வை என ஆணாதிக்கத்தையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம். இன்னும் பேச நிறைய உள்ளது .

ஒட்டு மொத்தமாக சாதியம் என்கிற கொடிய ஒடுக்குமுறை சமூக உளவியலுக்கு எதிராய் , மதவெறி பாசிசத்துக்கு எதிராய் கம்யூனிஸ்ட்டுகளும் அம்பேத்கரிஸ்ட்டுகளும் தமிழக சூழலில் பெரியாரிஸ்ட்டுகளும் இணைந்தும் செயலாற்ற வேண்டிய காலம்.

எல்லொரும் ஒன்றுபடும் புள்ளியும் உண்டு. வேறுபடும் புள்ளியும் உண்டு . முன்னதை முன்னிறுத்துவதே இன்றைய தேவை. பின்னதை பரிசீலிப்பது வேறு; அதையே சாக்காக்கி கூட்டாக இயங்குவது சாத்தியமில்லை எனச் சொல்ல முடியுமா?  

வேறுபடும் புள்ளிகளை மட்டுமே மூச்சைக்கட்டிப் பேசிப் பேசி இடைவெளியை பெரிதாக்கி இந்துத்துவா சக்திகளுக்கு உதவும் வறட்டுவாதிகள் தமிழகத்தில் நிறைய உண்டு. அவர் வலையில் விழாமல் டெல்டும்டே நூலை ஆழ விவாதிப்பதும்; சுயவிமர்சனமாய்ப் பார்ப்பதும் காலத்தின் தேவை.  

நூல் இறுதியில்  திணிக்கப்பட்ட என்.குணசேகரனின் கட்டுரை இந்நோக்குக்கு உதவுமா ? அவர் பதிலுரை பொத்தாம் பொதுவாய் சமாதானம் சொல்வதாய் மட்டுமே உள்ளது.

தவறியும் பிராமணியம் ,வர்ணாஸ்ரமம் என்ற சொற்களைக்கூட பயன்படுத்தாமல் சாதியத்தை பேசுவது வியப்பாய் உள்ளது .

 நிறைவாய் சொல்லும் சூத்திரத்திலும் எளிதில் புரியம்படி பளிச்சென்று சொல்ல வில்லை . டெல்டும்டே அம்பேத்கரிஸ்ட் இயக்கங்கள் பற்றி சுயவிமர்சனமாய் சொல்லியிருக்கிறார் ; ஆனால் குணசேகரன் கட்டுரையில் சுயவிமர்சனம் இல்லையே ஏன் ?

நூல் வெளிவந்த பின் விவாதம் பல முனைகளில் நடக்க அனுமதித்து இறுதியில் ஒரு செறிவான நிறைவான நியாயமான தொகுப்புரை வழங்க வழிவிட்டிருப்பின் நல்லது. இப்போதும் இடமும் காலமும் உள்ளதே


.சுப்பாராவ் மொழியாக்கம் நன்று!


ஆசிரியர் : ஆனந்த் டெல்டும்டே, தமிழில் : ச.சுப்பாராவ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ சாலை ,தேனாம்பேட்டை ,
சென்னை -600 077.

பக்கங்கள் :424 , விலை: ரூ.350/

நன்றி : தீக்கதிர் ,புத்தக மேசை , 11/11/2019.