வெற்றியின் விலை இரண்டு கோடி உயிர்

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி - 50வெற்றியின் விலை 
இரண்டு கோடி உயிர்

 பின்வாங்கும் சூழலிலும் 1523 தொழிற்சாலைகளை அதிலும் 1360 பெரும் தொழிற்சாலைகளை அப்படியே பெயர்த்து பாதுகாப்பான கிழக்குப் பகுதிக்கு 
கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுத்திய சோவியத்தின் 
அசுர சாதனையைக் கண்டு எதிரிகளே மிரண்டனர்.


- சு.பொ.அகத்தியலிங்கம்“அந்த கிராமத்தில் ஒரு புல்புதர் மண்டிய ஒரு மண்மேட்டை அந்தக் குழந்தைகள் கண்டனர்.அங்கு யாரோ புதைக்கப்பட்டிருக்க வேண்டும்? அது ஒரு காட்டுப்பகுதி ; அது ஒரு கட்சி உறுப்பினர்நிலமாகவும் இருக்கக்கூடும் . அது யுத்தத்தில் காணாமல் போனவர் சிலரின் கல்லறையாக இருக்கக்கூடும் ; அடையாளம் காண முடியாதவர்களின் கல்லறை என எதுவுமே தாய் நாட்டில் இருக்கக்கூடாது. ஒவ்வொன்றையும் நினைவு கூர வேண்டும்” என எண்ணினர்.”லெனினுக்கு பிறகு ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தார். தொழில் வளர்ச்சியில் ரஷ்யா முனைந்த போது பகைமை கொண்ட முதலாளித்துவ உலகில் தனியொரு நாடாக சோவியத் யூனியன் முட்டிமோதி முன்னேற வேண்டியிருந்தது . கடனோ , உதவியோ, தொழில்நுட்ப ஆலோசனையோ ,கச்சாப் பொருளோ அளிக்க எந்த நாடும் முன்வரவில்லை .தன் கையே தனக்கு உதவி என போராடவேண்டிய நிலை .
இதன் சுமையையும் வலியையும் தொழிலாளிகளும் விவசாயிகளுமே முழுமையாகத் தாங்க வேண்டியிருந்தது . இதன் இன்னொரு முகமான சில அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் இருக்கத்தான் செய்தன .கிறிஸ் ஹார்மன் கூறுகிறார் ,“ 1930 களில் சோவியத் யூனியனின் பொருளாதார வெற்றியைப் பார்த்து மேற்கத்தியவர்கள் மிரண்டுபோனார்கள் . 1950 களிலும் 1960 களின் ஆரம்பத்திலும் அதன் வேகமான தொழில் முன்னேற்றத்தைப் பார்த்து மூன்றாம் உலகம் மிரண்டு போனது. அதன் குறைபாடுகள் என்னவாக இருந்த போதிலும் உலகின் மற்ற பகுதிகளின் சந்தைப் பொருளாதாரத்தைச் சுற்றி வளைக்கும் சிக்கல்களிலிருந்து மீள ஸ்டாலினிசம் ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாய்த் தோன்றியது . வாழ்நாள் முழுக்க புரட்சியை எதிர்த்து வந்த பிரிட்டிஷ் ஃபேபியர்களான சிட்னியும் ,பீட்ரிஸ் வெப்பும் 1930 களின் மத்தியில் ரஷ்யா சென்றனர் , ரஷ்யாவால் மிகவும் ஈர்க்கப்பட்டனர் , தி சோவியத் யூனியன் - எ நியூ சிவிலிசேஷன் என்று நூல் எழுதினர்.”


வறுமையிலும் அறியாமையிலும் பல நூறு ஆண்டுகள் வதைபட்ட ரஷ்ய மக்கள் நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்றனர்.இல்லந்தோறும் புன்சிரிப்பு காட்டியது இன்பம்.சோவியத்தின் அறிவியல் வளர்ச்சியும் உலகோரை வியக்கவைத்தது. அக்கதாமீஷியன் பாவ்லா உயர்நரம்பு மண்டலம் தொடர்பாகக் கண்டறிந்தது - லேபிதெவும், ஃபவோர்ஸ்கியும் கண்டுபிடித்த செயற்கை உரங்கள், செயற்கை ரப்பர், விண்வெளியியல், இயற்பியல், வேதியியல் சாதனைகள் என இருபதாண்டு காலப்பகுதியில் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தது .


உலகெங்கும் உள்ள ஏகாதிபத்தியக் கழுகுகள் சோவியத் பூமியை அழிக்க வட்டமிட்டபடியே இருந்தன. முதல் உலக யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட அநீதியான சந்தைப் பங்கீடு இன்னொரு யுத்தத்துக்கான விதையை தூவியிருந்தது. ஜெர்மனியில் ஹிட்லரும் இத்தாலியில் முசோலினியும் ஆபத்தான பாசிச, நாசிச சித்தாந்தங்களோடு எழுந்தனர். யுத்தமேகம் மிரட்டியது.1939இல் ஜப்பான் திடீரென சோவியத்தின் நட்பு நாடான மங்கோலியா மீது படை எடுத்தது - அதே ஆண்டு செப்டம்பர்முதல் நாள் போலந்து மீது ஜெர்மானியப் படையைஏவினான் ஹிட்லர்.


ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட அச்சுநாடுகள் ஒருபுறம் திரண்டன; பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா நேசநாடுகளாய்க் கைகோர்க்க ஸ்டாலின் சொன்ன யோசனையை முதலில்ஏற்க மறுத்தன. இதனால் ஜெர்மனியோடு ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஸ்டாலின் செய்து கொண்டார்.இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ரஷ்யாவுக்கு மூச்சுவிட அவகாசம் கிடைத்தது .போலந்து முப்பதைந்தே நாட்களில் வீழ்ந்தது - நாற்பது நாளில் பிரான்ஸ் வீழ்ந்தது - பெல்ஜியமோ ஒரே நாளில் சரணடைந்தது - நார்வே, டென்மார்க், நெதர்லாந்து என அடுத்தடுத்து அடி பணிந்தன.


 ஹிட்லர் கொக்கரித்தான்.1939 ஆகஸ்ட் 22 அன்று ஹிட்லர் திமிரோடு சொன்னான், “போலந்தில் மக்கள் அழிக்கப்படுவார்கள். அங்குஜெர்மானியர்கள் குடியேறுவார்கள் .. ஏனைய நாடுகளைப்பொறுத்தவரையும் ரஷ்யாவின் கதியும் அவ்வாறேதான் இருக்கும்... நாங்கள் சோவியத் யூனியனை முறியடிப் போம் பின்னர் உலகில் ஜெர்மானியர் ஆட்சி உதயமாகும்.”ரஷ்யா அழிந்தால் நல்லது என்றே அமெரிக்காவும் பிரிட்டனும் கணக்குப் போட்டன .


ஹிட்லரும் அவனது கூட்டாளிகளும் 14 நாளில் ரஷ்யாவை வீழ்த்தும் நோக்குடன் 1941 ஜூலை 22 ஆம் நாள் சோவியத் மீது படையை ஏவினர்.ஆனால் எல்லா யுத்தக் கணக்கும் பொய்த்தன. 3000 முதல் 6200 கி.மீ. விரிந்து பரந்த பிரதேசம் முழுவதும் சோவியத் வீரர்கள் வரலாறு முன்னெப்போதும் காணாத வீரத்துடனும் அர்ப்பணிப்புடனும் போராடினர்.


ஒன்றல்ல; பத்தல்ல; நூறல்ல; 1418 நாட்கள் யுத்தநெருப்பு பற்றி எரிந்தது. சோவியத் யூனியன் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒன்பது அல்லது பத்து உயிர்களை இழந்தது - மணிக்கு 587 உயிர்கள் - ஒவ்வொரு நாளும் 14,000 பேர். ஆக மொத்தம் இரண்டு கோடி சோவியத் மக்கள் உயிர்ப் பலியாகினர்.


பல சோவியத் கிராமங்கள் மொத்தமாக அழிக்கப் பட்டன. உதாரணமாக ஓலா என்ற பைலோ ரஷ்யக் கிராமத்தில் 950 குழந்தைகள் உட்பட 1758 பேர்- அதாவது ஒட்டுமொத்த கிராம மக்களும் உயிரோடு சுட்டெரிக்கப்பட்டனர். வி.ஒய் திக்குன் என்கிற ஒருவர் மட்டும் எரியும் நெருப்பிலிருந்து தீக்காயங்களோடு எப்படியோ தப்பினார்.இப்படி சோகக்கதை சொல்லும் கிராமங்கள் அநேகம் .பெர்லினில் செங்கொடியை பறக்கவிடச் சென்ற குழுவில் இடம் பெற்ற வீரர் வாஸ்ஸிலி ஸுப்போட்டின் எழுதிய நினைவுக் குறிப்புகளும் நாவலும் பல செய்தி சொல்லும். “அந்தக் கிராமத்தில்..” என அவர் எழுதிய நாசமாக்கப்பட்ட ஓர் கிராமத்தின் கதையில் வர்ணிக்கப்பட்ட காட்சியே ஆரம்பத்தில் இடம் பெற்றது. 
தியாகத்தில் மூழ்கியதும் தியாகத்தைப் போற்றியதும் அவர்களின் தனித்த உயர் பண்பு . “காலமென்னும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நீதி தேவனே! கொடிய பேராசையினால் மாதர்களையும் பெண்களையும் கொன்று தின்னும் அந்த கொடிய நரமாமிச பட்சிணியை நான் சபிப்பதற்கான வலிமையை எனக்குக் கொடு!” என கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் எழுதினார்.


இரண்டாவது போர்முனையைத் துவக்குக என ஸ்டாலின் தொடர்ந்து கேட்டுக்கொண்டும் பிரிட்டனும் அமெரிக்காவும் காலதாமதம் செய்தது . அமெரிக்க அதிபர் ட்ரூமன் சொன்னார் ,” ஜெர்மன் ஜெயித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும் ; ரஷ்யா ஜெயித்துக் கொண்டிருந்தால் ஜெர்ம னிக்கு உதவ வேண்டும் .


அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேரைக் கொன்று குவிக்க நாம் உதவுவோம்.” இப்படி பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் சொல்லவில்லையே தவிர செயல்பாடு அப்படித்தான் இருந்தது.செஞ்சதுக்கத்தில் வெற்றிப் பேரணி நடத்த நாள் குறித்து அழைப்பிதழும் அடித்துவிட்டான் ஹிட்லர் ; ஆனால் குலையா உறுதியுடன் எதிர்த்து நின்றதோடு 1941 நவம்பர் 7 ஆம் நாள் புரட்சி தின விழா பேரணியை யுத்த இடிபாடுகளுக்கு இடையிலும் நடத்தி சாதித்தார் ஸ்டாலின்.


ஆரம்பத்தில் பெரும் சேதமும் பின்னடைவும் இருந்தது. சோவியத் நிர்மாணத்தின் உயிர் சாட்சியாய்இருந்த மாபெரும் நிப்பர் அணை எதிரிக்கு பயன்படக் கூடாதென தகர்த்தெறிய எவ்வளவு நெஞ்சுரம் வேண்டும்! எவ்வளவு யோசனைக்கும் கண்ணீருக்கும் இடையில் சோவியத் தலைமை அந்த முடிவெடுத்திருக்கும்.இரும்பு மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள் நிரம்பிய பிரதேசங்களைக் கைப்பற்றி சோவியத்துக்கு பெரும் மூச்சுத் திணறலைக் கொடுக்க ஹிட்லர் வியூகம் வகுத்து முன்னேறிக் கொண்டிருந்தான் அப்போது பின்வாங்கும் சூழலிலும் 1523 தொழிற்சாலைகளை அதிலும் 1360 பெரும் தொழிற்சாலைகளை அப்படியே பெயர்த்து பாதுகாப்பான கிழக்குப் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுத்திய சோவியத்தின் அசுர சாதனையைக் கண்டு எதிரிகளே மிரண்டனர்.பிரிட்டிஷ் யுத்த வரலாற்றாசிரியன் எழுதுகிறான், “நீங்கள் நேர்மையானவராக இருந்தால் - நீங்கள் கம்யூனிசத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும் 1942 இல் ஸ்டாலின்கிராடில் ஜெர்மானியர்களை முறியடிப்பதில் ரஷ்யர்களும் அவர்களது ராணுவத் தலைமையும் புலப்படுத்திய துணிவு ,சகிப்புத் தன்மை ,திறமை ஆகியவற்றுக்காக அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது . ஸ்டாலின்கிராடை தனது உந்து தளமாகக் கொண்டு போரின் போக்கையே தனக்குச் சாதகமாகவும் ;மேலை நாடுகளுக்கு அனுகூலமாகவும் மாற்றிவிட்டனர் .”ஹிட்லர், முசோலினி கனவு தவிடுபொடியானது .1945 மே 8 ஆம் நாள் செம்படை ஜெர்மனியின் தலைநகர்பெர்லினில் நுழைந்து. ரிச்ஸ்டாக் எனும் அரசு கோட்டையில்செங்கொடியைப் பறக்கவிட்டது, யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது . அங்கொன்று இங்கொன்றாக சில தாக்குதல்கள் தொடர்ந்தன . எந்தத் தேவையும் இன்றி ஜப்பானில் ஹிரோஷிமா ,நாகசாகியில் அமெரிக்கா ஆகஸ்ட் மாதம் அணுகுண்டை வீசி மனித நாகரீகத்தை தலைகுனிய வைத்தது. 


இரண்டு கோடி ரஷ்யர்கள் உள்ளிட்ட ஐந்து கோடிப்பேரைக் காவு கொண்ட – பல நகரங்களை - கிராமங்களை தீக்கிரையாக்கிய - பேரழிவு தாண்டவமாடிய முழுதாக ஆறுவருடம் ஒரு நாள் - ஆக மொத்தம் 2138 நாட்கள் இரத்தத் தாண்டவமாடிய இரண்டாவது உலகமகா யுத்தம். 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் அதிகாரப் பூர்வமாக முடிவுக்கு வந்தது .


ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள டிரெப்டோ பூங்காவுக்குச் சென்றால் ஜெர்மன் குழந்தையைக் கையிலேந்திய ஒரு ரஷ்ய ராணுவ வீரரின் சிலை கம்பீரமாய் நிற்பதைக் காணலாம் ? ஏன் இப்படி ஒரு சிலை ? பெர்லினில் ரஷ்ய ராணுவம் நுழைந்து ஹிட்லரின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்த போது ரஷ்யத் தளபதி மார்ஷல் ஜூக்கோவ் ஓர் உத்தரவிட்டார்.“எட்டு வயதுவரை உள்ள குழந்தைகளுக்காக பால் விநியோகம் தங்கு தடையின்றி நடக்க வேண்டும். பெர்லினுக்கு பால் கொண்டுவர மத்திய பால்பண்ணைக்கு 25 லாரிகளை ஒதுக்கி வைக்குமாறு மேஷர் ஜெனரல் ஷிஷினுக்கு ஆணையிடப்படுகிறது. இதுகுறித்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ராணுவக் கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.”அந்தச் சிலை சொல்லிக் கொண்டிருப்பது இந்த செய்தியை மட்டுமல்ல; சோசலிசத்தின் உயர்ந்தபட்ச மனித நேயத்தையும்தான்.


உலகப் போரை முன்வைத்து மெய்ச் சம்பவங்களின் பின்புலத்தில் எழுதப்பட்ட சோவியத் கதைகள் , நாவல்கள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், நாடகங்கள்,திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அர்ப்பணிப்பையும் சமா தானத்தையும் ஒருங்கே உயிர்ப்புடன் பேசிக்கொண்டே இருக்கின்றன.


இந்த உலகப் போர் முடிவு வரலாற்றில் மேலும் பல புதிய எழுச்சி அத்தியாயங்களை எழுதிச் சென்றது.புரட்சி 


தொடரும்

நன்றி : தீக்கதி , 16/10/2017.

மார்க்ஸை பயிலுவதன் பொருள் … [2]

Posted by அகத்தீ Labels:மார்க்ஸை 
பயிலுவதன் பொருள் … [2]

 


சு.பொ.அகத்தியலிங்கம் .


இன்றும் ஒரு சதவீதம் பேருக்கா இவ்வுலகம் அல்லது தொண்ணூற்றி ஒன்பது சதம் பேருக்கா உலகம் என வெடித்தெழும் கேள்வி உலகெங்கும் மார்க்சியத்தின் தேவையை பொருத்தத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது .

முன்னே இருக்கும் வழிகாட்டிகள்


இந்த பிரச்சனையிலிருந்து விடுபட எர்னஸ்ட் பிஷர் எழுதிய மார்க்ஸ் உண்மையில் கூறியதென்ன , டேவிட் ரியாஜெனோவ் எழுதிய மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும் , மாரீஸ் கார்ன்ஃபோர்த் எழுதிய மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு ஆகிய மூன்று நூல்களும் [ பாரதி புத்தகாலய வெளியீடு ]ஓரளவு உதவக்கூடும் . வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய மார்க்சிய செவ்வியல் நூல் வாசிப்பு வழிகாட்டி என்ற நூலையும் வாசிப்பது அவசியம்.


மார்க்ஸிடம் மார்க்சியம் துவங்குகிறது ; அவருடன் அது முடிந்துவிடவில்லை.” என்பார் லெனின் . ஆம் சமூக விஞ்ஞானமாக அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகிறது . அதன் வளர்ச்சியோடு நாம் பயணிக்க மூலத்தை சரியான கோணத்தில் பயில மேற்படி மூன்று நூல்களும் வழிகாட்டுகிறது எனில் மிகை அல்ல .


இங்கே நாம் சுட்டுவதன் ஆழத்தையும் அகலத்தையும் அறிய எஸ் .வி .ராஜதுரை தமிழாக்கம் , அறிமுகவுரை ,விளக்கக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ள - 519 பக்க நூல் காரல் மார்கஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் கற்க முயலலாம் . அதில் நிறைய விபரங்கள் உள்ளன . அறிக்கையில் சுட்டப்பட்டுள்ள வரலாறு ,சித்தாந்தம் ஒவ்வொன்று குறித்தும் விளக்கம் கிடைக்கிறது . ஆகவே கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் எங்கெல்ஸ் என்ன நோக்கில் எழுதினாரோ அந்த நோக்கில் புரிந்து கொள்ள முடிகிறது .


உண்மையில் சொன்னது என்ன ?


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் நூலின் பெயரிலேயே கட்சி என்று உள்ளது ; அப்படியாயின் எந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை அது என்கிற கேள்வி இயல்பாகவே எழும் . அது குறித்து இந்நூலில் எஸ் வி ராஜதுரை தந்துள்ள விளக்கத்தை பார்ப்போம் ;


“..... மேற்சொன்ன ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் ,அப்படிப்பட்ட அமைப்பு [ கம்யூனிஸ்ட் கட்சி ] ஏதேனும் இருப்பதாக அறிக்கை கூறுவதில்லை ; மேலும் அரசியலில் நவீன காலக் கட்சிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு ,எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் கட்சி [ party ] எனும் சொல் ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியை அல்ல ,முதன்மையாக ஒரு சிந்தனைப் போக்கையோ [ tendency] கருத்தோட்டத்தையோதான் [ current of opinion ] குறித்தது.”

ஆமாம் நம்ம ஊரிலே கூட எரிந்த கட்சி , எரியாத கட்சி என்ற சொல்வழக்கு உண்டு ; அதற்குக் நவீன கட்சிக்கும் என்ன தொடர்பு ?

இது வெறும் தகவல் சார்ந்த செய்தி மட்டுமல்ல ; அதற்கும் மேல் . முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட போது வெளியிட்ட கம்யூனிஸ்ட் லீக் அல்லது கம்யூனிஸ்ட் கழகத்தின் பெயர் கூட அதில் இடம் பெறவில்லை . ஏனெனில் உழைக்கும் வர்க்க விடுதலைக்கு ஒரு சித்தாந்த அடித்தளமாக அறைகூவலாக வெளிவந்ததே அவ்வறிக்கை .எனவே அது ஒரு குறிப்பிட்ட அமைப்பின் குரலாக வெளிப்படவில்லை . அதே சமயம் உழைப்பாளி மக்களுக்கென ஒரு அமைப்பு மிகமிகத் தேவை ; அது புரட்சிகர சித்தாந்தத்தால் வழிகாட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என மார்க்ஸ் கருதினார் . அதன் ஒரு கூறுதான் அவரால் வழிநடத்தப்பட்ட முதலாம் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் கழகமாகும் . இந்த அமைப்பை மார்க்ஸின் மகத்தான சாதனைகளில் ஒன்றென்பார் எங்கெல்ஸ்.


நாம் புரிந்து கொள்ளவேண்டிய இன்னொரு செய்தி உண்டு . “ உலகத் தொழிலார்களே ஒன்றுபடுங்கள் !” என்ற முழக்கம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம் பெற்றதும் ; இன்றும் அது உலகை ஈர்க்கும் முழக்கமாகவே உள்ளதும் மறுக்க இயலாது . ஆனால் மார்க்ஸ் உண்மையில் அப்படி எழுதவே இல்லை . ஜெர்மன் மூலத்தில் PROLETARIANS OF ALL COUNTRIRS ,UNITE என்றே உள்ளது அதாவது அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்றே இதன் பொருள் . பின்னர் மொழி பெயர்த்தவர்கள் WORKING MEN OF ALL COUNTRIES ,UNITE அதாவது அனைத்து நாட்டு உழைக்கும் மனிதர்களே ஒன்றுபடுங்கள் என்றே உள்ளது ; இது மொழி பெயர்ப்பில் நிகழந்த மாற்றம் . இதனைப் பிடித்துக் கொண்டு உழைக்கும் ஆண்களைத்தான் மார்க்ஸ் சொன்னார் பெண்களை கண்டு கொள்ளவில்லை எனக் குறுக்குசால் ஓட்டுவோர் உண்டு . உலகம் முழுவதையும் ஒற்றை அலகாக மார்க்ஸ் கருதவில்லை . வெவ்வேறு நாடு ,வெவ்வேறு மொழி , வெவ்வேறு இனம் என்கிற சமூக யதார்த்தத்தை மார்க்ஸ் ஒப்புக் கொண்டு ; அந்த யதார்த்தத்தினூடே அனைத்து நாட்டுப் பாட்டாளிகளும் ஒன்றுபடுங்கள் என்று நுட்பமாகப் பதிந்தார் . அதனை சரியாக உள்வாங்கினோமா ?


பாடுபடும் தொழிலாளிக்கு சாதி இல்லை ,மதம் இல்லை எனச் சொல்லி வர்க்க ஒற்றுமைக்கு குரல் கொடுத்தது சரியாயினும் ; அதைத் தொடர்ந்து பாடுபடும் தொழிலாளிக்கு நாடு இல்லை - மொழி இல்லை - இனம் இல்லை என கோஷமிட்டதும் ; அது சார்ந்து எழுகிற பல கோரிக்கைகளை நியாயமான வெளிப்பாடுகளை இனம் காணுவதில் சிக்கல்களை சில நேரம் எதிர்கொண்டதும் உண்டு . ஆயினும் இங்கு நாம் மொழிவழி மாநிலக் கோரிக்கைக்கு முன்நின்று போராடியதும் ; தொடர்ந்து இத்திக்கில் உரிய கவனம் செலுத்துவதும் நல்ல கூறு .


இதன் பொருள் குறுகிய தேசபக்திக்கு / பிரிவினை வெறிக்கு துணை போவது அல்ல . முதலாம் உலகப்போரில் குறுகிய தேசபக்தியோடு யுத்தத்தை ஆதரிக்கக் கூடாது என வாதிட்டதும் ; இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தை எதிர்க்க தேசபதியைத் தூண்டிவிட்டதும் ரஷ்ய அனுபவம் . ஆக , எது தொழிலாளி வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு உதவும் என்கிற அனுபவக் கல்லிலே உரசியே எந்த முடிவையும் மேற்கொள்ள முடியும் . நம் அனுபவமும் அதுதானே !இவ்வாறு மார்க்ஸை மிகச்சரியான வரலாற்று பின்புலத்தோடும் சித்தாந்தச் சார்ப்போடும் புரிந்து கொள்ள ஆங்கிலத்தில் நூல்கள் பல வந்தவண்ணம் உள்ளன .தமிழில் மொழிபெயர்ப்பாக அவை வரத்துவங்கி இருப்பது ஆரோக்கியமானது . அந்தவகையில் முன் குறிப்பிட்ட மூன்று நூல்களும் மார்க்ஸை சரியாக உள்வாங்க நம் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை .


மார்க்ஸிய சித்தாந்தத்தைச். சரியாக உள்வாங்க...


அறிவியலில் ஒவ்வொரு செயற்களத்திலும் - அறிவு குறித்த கோட்பாட்டிலும் நாம் இயக்கவியல் ரீதியாகவே சிந்திக்க வேண்டும் . அதாவது நம்முடைய அறிவானது ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டதாகவோ மாற்ற முடியாததாகவோ கருதிவிடக்கூடாது . ஆனால் அறிவு எப்படி அறியாமையிலிருந்து உதயமாகிறது , எப்படி அறைகுறையான துல்லியமற்ற அறிவு முன்னிலும் முழுமையானதாகவும் முன்னிலும் துல்லியமானதாகவும் ஆகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .” என்பார் லெனின் . மார்க்ஸியமும் அப்படியே . அதன் இயங்கியல் பொருள் முதல்வாதம் மற்றும் வரலாற்றும் பொருள் முதல் வாதம் பற்றிய ஞானம் எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவையாகும் ,

அதனை துல்லியமாக பயில - மார்க்சிய சித்தாந்தத்தை படிக்க ஜார்ஜ் பொலிட்ஸர் எழுதிய மார்க்ஸிய மெஞ்ஞானம் - ஓர் அரிச்சுவடி [ நியூ செஞ்சுரி புக்ஸ் ] தொடக்க பாடமாகும் . விக்டர் ஆஃபேன் ஸீவ் எழுதிய மார்க்சிய லெனினிய தத்துவம் [ பாரதி புத்தகாலயம் ] எனும் நூல் பாடக் குறிப்பு போல் விளங்க எளிதாய் அமைந்துள்ளது . இயக்கவியல் பொருள் முதல்வாதம் , வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் கிடைக்கிறது . தோழர் எஸ் ஏ பெருமாள் எழுதிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நூலும் உரிய பயன் தரும் .


"மார்க்சியத் சித்தாந்தத்தை முழுமையடைந்த மீறக்கூடாத ஒன்றாக நாம் கருதவில்லை; மாறாக அது அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே இட்டுள்ளது என்று தெளிவாகவே உள்ளோம் ; சோஷலிஸ்டுகள் , வாழ்க்கையின் வேகத்துடன் இணைந்து செல்ல விரும்பினால் , அவர்கள் அந்த அறிவியலை அனைத்து திசைகளிலிருந்தும் வளர்க்க வேண்டும் . இந்த சித்தாந்தம் பொதுவான வழிகாட்டும் கொள்கையை மட்டும் அளிக்கிறது ; அக்கொள்கைகள் இங்கிலாந்தில் பிரான்ஸிலிருந்து வேறுவிதமாகாவும், பிரான்சில் ஜெர்மனியிலிருந்து வேறுவிதமாகவும் , ஜெர்மனியில் ரஷ்யாவிலிருந்து வேறுவிதமாகவும் பொருத்திப் பார்க்கப்பட்டனஎன்கிறார் லெனின்.


ஆகவே , இந்திய தத்துவ மரபோடு இணைத்தும் - தமிழர் தத்துவ மரபோடு பிசைந்தும் உள்வாங்கும் போதுதான் மார்க்ஸிய தத்துவம் நம் நெஞ்சில் வேர்பிடிக்கும் . அதற்கு தேவிப் பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய மூன்று புத்தகங்கள் உதவும் . இந்திய தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் [பாரதி புத்தகாலயம் ] உலகாயதம் [ நியூ செஞ்சுரி புக்ஸ் ] இந்திய நாத்திகம் [ பாரதி புத்தகாலயம் ] ஆகியன ஆழ்ந்த வாசிப்புக்குரியது . .அருணன் எழுதிய தமிழர் தத்துவ மரபு - இரண்டு பாகங்கள் [ வசந்தம் வெளியீடு ] ,தேவபேரின்பன் எழுதிய தமிழர் வளர்த்த தத்துவங்கள் [ பாரதி புத்தகாலயம் ] இரு நூல்களும் விழிதிறக்கும் . அருணன் எழுதிய யுகங்களின் தத்துவம் [ வசந்தம் வெளியீடு ]சுருக்கமாக - சுண்டக் காய்ச்சிய பாலாக - ஒரு ஒட்டுமொத்த அறிமுகமாய் அமையும் . ப கு .ராஜன் எழுதிய புரட்சியில் பகுத்தறிவு [ பாரதி புத்தகாலயம் ] எனும் நூல் அறிவியல் வளர்ச்சியையும் மார்க்ஸிய தத்துவ ஞானத்தையும் ஒருங்கே குழைத்த்து பரிமாறி இருக்கிற - 872 பக்கங்கள் கொண்ட நூல் அறிவை விசாலமாக்க உதவும் . என்.குணசேகரன் எழுதிய விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் நூல் பன்முகம் காட்டும்.


இப்படி புத்தக் நதியில் நீந்தி மார்க்ஸியத்தை உள்வாங்கும் போது மார்க்ஸின் மூலதனம் படிக்கும் பேராவல் முகிழ்க்கும் . மூலதனத்தை வாசிக்க வழிகாட்டலும் விவாதமும் தேவை . ஏனெனில் அது வெறும் பொருளாதார ஞானமல்ல ; பெரும் சமூக மாறுதலுக்கான செயலுக்கு உந்திதள்ளும் நெம்புகோலும் ஆகும் . டேவிட் ஹார்வி எழுதிய மார்க்ஸ் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி எனும் நூலையும் ,ஜூலியன் போர்ச்சார்ட் எழுதிய மக்களின் மார்க்ஸ் நூலையும் வாசிப்பது மார்க்ஸின் மூலதன வாசிப்புக்கு முன்னோட்டமாகும் . வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ள மார்க்ஸிய அரசியல் பொருளாதாரம் எனும் நூல் நல்ல அறிமுகமாக அமையும் .
சோவியத் யூனியன் மறைவுக்குப் பின்


இப்படி கற்கும் போது இப்போது ஒரு கேள்வி எழும் .இன்றைக்கும் மார்க்ஸியம் பொருந்துமா ? மார்க்சின் இரு நூறாண்டைக் கொண்டாடுகிறோம் ..கம்யூனிஸ் கட்சி அறிக்கை வெளியாகியே இன்று 169 ஆண்டுகளாகிவிட்டன . இன்றும் அவை அப்படியே பொருந்துமா ? கம்யூனிஸ்ட் அறிக்கையின் 150 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் அறிஞர் பெருமக்கள் வாசித்தளித்த ஆய்வுரைகள் வெளிச்சம் காட்டும் . அவை வெல்லவதற்கு ஒரு பொன்னுலகம் எனும் தலைப்பில் [பாரதி புத்தகாலயம் ] நூலாகவும் வந்துள்ளது . தேடி வாசிப்பது நல்லது .


சோவியத் யூனியன் மறைவு மற்றும் உலக சமூகத்தின் மேல்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் சூழலில் மார்க்சியப் பார்வையின் முக்கியத்துவம் மேலும் விரிவடைந்திருக்கிறது .மார்க்சினுடைய விமர்சன ஆய்வின் பிரதான இலக்காக எப்போதுமே முதலாளித்துவம்தான் இருந்து வந்திருக்கிறது . முதலாளித்துவம் நீடிக்கும் வரையிலும் மார்க்ஸின் சிந்தனைகள் - பூவுலகின் துயர மாந்தர்கள் மத்தியில் அதிர்ந்து எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.” என்பார் எர்னஸ்ட் ஃபிஷர் ,

மேலும் சொல்வார் , “ மார்க்ஸின் சிந்தனைகளுடைய உலகம் ஒரு மூடுண்ட கட்டமைப்பு அல்ல .அதில் மேம்பாடு ,அதிகரிப்பு ,விரிவாக்கம் ஆகியவை உள்ளார்ந்து உறைந்திருக்கின்றன . மார்க்சின் சொந்த உணர்வுபூர்வத்துடன் அதனுடைய வரலாறு ,கடந்தகாலம் ,நடப்புக்காலம் ,வருங்காலம் அவற்றைப் பற்றிப் பேசுவதாகும் . அது ஏற்கெனவே தொடங்கிவிட்டது.”

ஆம் , லெனின் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்கிற கருத்தியலை மார்க்சியத்தில் சேர்த்தார் ; முதலாளித்துவன் ஓங்கி வளர்ந்த பிரிட்டன் ,ஜெர்மனி நாடுகளில் புரட்சி வரும் என்கிற எதிர்பார்ப்பை மீறி ரஷ்யாவில் புரட்சியை லெனின் வெற்றியடையச் செய்தார் ; இரண்டாம் உலகயுத்தச் சூழலில் ஐக்கிய முன்னணித் தந்திரம் என்கிற வியூகத்தை ஜார்ஜ் டிமிட்டிரோவ் வடித்தெடுத்தார் ; அன்டொனியா கிராம்ஷி பண்பாட்டு போரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துச் சென்றார் ; மாசே துங்கும் , ஹோசிமின்னும் , பிடல் காஸ்டிரோவும் , செகுவேராவும் அவரவர் காலத் தேவையிலிருந்து பொருத்தமானவற்றை வகுத்து வழிகாட்டினர் . இன்றும் ஒரு சதவீதம் பேருக்கா இவ்வுலகம் அல்லது தொண்ணூற்றி ஒன்பது சதம் பேருக்கா உலகம் என வெடித்தெழும் கேள்வி உலகெங்கும் மார்க்சியத்தின் தேவையை பொருத்தத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது .


ஆக , முதலாளித்துவம் முன்னிலும் கொடூரமாய் ,நுட்பமாய் சுரண்டுகிறது ; ஒடுக்குகிறது .சோவியத் யூனியன் உதயமானதைத் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் உழைப்பாளி மக்களுக்கு வழங்கிய பல்வேறு சலுகைகளும் சமூகநலத் திட்டங்களும் ; சோவியத் தகர்வுக்கு பிறகு கைகழுவப்படுகிறது . அதுவும் உலகமயம் ,தாராள மயம் அனைத்து மாண்புகளையும் அறுத்து வீசுகிறது . வறுமை , வேலையின்மை ,பண்பாட்டுச் சீரழிவு , அறப்பிறழ்வு என சகல நோய்களயும் முற்றி சீழ்பிடிக்க வைத்துள்ளது இந்த லாபவெறி முதலாளித்துவம் . இதிலிருந்து மனித குலம் மீண்டெழ மார்க்சையே இன்றைய உலகம் இறுதியில் வந்தடைகிறது . ஆனால் என்ன வேறுபாடெனில் வறட்டுச் சூத்திரமாகவோ அல்லது ஈயடிச்சான் காப்பியாகவோ இதை செய்ய இயலாது ; மார்க்ஸும் அவ்வாறு போதிக்கவும் இல்லை .பழைய அதே பாணியில் அல்ல ; முன்னிலும் உயர்ந்த வடிவத்தில் மார்க்சியம் ; முன்னிலும் மேம்பட்ட மனிநேயப் பார்வையோடு ; மேம்பட்ட புரட்சிகர சிந்தனையோடு எழுகிறது .


புதிய மாணுடத்தைப் படைக்க ...
மைக்கேல் எ லெபோவிச் எழுதிய இப்போதே நிர்மானிப்போம் 21 ஆம் நூற்றாண்டு சோஷலிசம் , மார்த்தா ஹர்னேக்கர் எழுதிய இடதுசாரிகளும் புதிய உலகமும் உள்ளிட்ட பல நூல்கள் [பாரதி புத்தகாலய வெளியீடாக ] வந்துள்ளன . இன்னும் பல நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன . உலகமயம் எனும் பெருங்கொள்ளையும் சூறையாடலும் நிகழ்கிறதே இதற்கு நேர் எதிராக பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உலகெங்கும் வெடித்தெழுகிற போராட்டங்களுக்கு அந்தந்த நாட்டின் சூழலோடு இணைந்து ஒருமைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்துகிறது .

புரட்சிகர மாற்றத்தை நோக்கியே ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கம் நடை போட்டாக வேண்டும் . அதன் மூலமே பட்டினிக் கொடுஞ்சிறையைத் தகர்த்து - ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து புதிய மானுடத்தைப் படைக்க முடியும் .

மார்க்ஸைப் பொறுத்தவரையிலும் புரட்சிகள் என்பது சரியான முன்நிபந்தனைகளையும் பெருந்திரள் இயக்கத்தையும் கோருகின்ற நீண்ட நெடிய நிகழ்முறைகளாகும் .சதிகார அமைப்புகளில் இடம் பெற்றிருக்கும் வெற்று முழக்கத்துடன் இதற்குப் பொதுவானது என்று ஏதுமில்லை .”


ஆக , அதைச் சாதிக்க மார்க்ஸ் இன்றும் தேவைப்படுகிறார் ; புத்தெழுச்சி ஊட்டுகிறார் . அவரைப் பயில்வதென்பது சும்மா ஒப்பிக்க அல்ல ; செயலில் இறங்க .இந்த நூல்ப் பட்டியலைப் பார்த்து பயந்துவிட வேண்டாம் ; இதையெல்லாம் படித்தவர்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமென்றோ ; போராட தகுதியானவரென்றோ நாம் கூறவில்லை . வர்க்க – வர்ண சமூகத்தில் வாழ்க்கைப் போராட்டமே உங்களை இடதுசாரி பக்கம் தள்ளிவிடும் . அந்த ஆரம்ப நிலையோடு நின்றுவிடாமல் விடாது வாசித்து மேலும் மேலும் முன் செல்ல - தகுதியான தலைமையாய் தன்னை வளர்த்துக் கொள்ள மார்க்ஸியத்தை இடைவிடாது கற்பதும் ; மீண்டும் மீண்டும் கற்பதும் ; புரிதலை கூர்மையாக்கும் ; போராட்ட உறுதியைக் கெட்டியாக்கும் . வழிகாட்டும் தலைவர்கள் , முன்னணித் தோழர்கள் எந்த அளவு சித்தாந்தத் தெளிவோடு இருக்கிறார்களோ அந்த அளவுக்கே போர்க்களம் சரியான திக்கில் அமையும் . ஆகவே அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை .

அரசியல் போராட்டங்கள் இல்லாமல்....


நான்காவதாக செய்ய வேண்டியது என்ன என்பதே ஆக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ; இந்திய ஒன்றியத்தின் தேவை சூழல் - தமிழகத்தின் தேவை சூழல் இவற்றை மார்க்சிய நோக்கில் அலசி காத்திரமான சூழலில் காத்திரமான முடிவுகளை மேற்கொள்ளுவதொன்றே வழியாகும் . இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அந்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு ஒரு திசைவழியை உருவாக்கி இருக்கிறது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் திட்டம் முக்கிய மைல் கல்லாகும் . அவ்வழியில் இலட்சிய உறுதியோடு வலுவான அமைப்பை கட்டி புரட்சிகர திசைவழியில் முன்னேற மேலும் மேலும் மார்க்சியத்தை பயில்வதொன்றே மார்க்சின் 200 ஆம் ஆண்டைக் கொண்டாடுவதன் மெய்யான பொருளாகும். இறுதியாக ஒரு வார்த்தை ; லெனின் சொன்னதையே நினைவூட்டுகிறோம் ; அரசியல் போராட்டங்கள் , அரசியல் நடவடிக்கைகள் மூலம் அல்லாமல் வேறு எதன் மூலமும் அரசியல் கல்வி இருக்க முடியாது .”

நன்றி : தீக்கதிர் ,15/10/2017. + தீக்கதிரில் விடுபட்ட சில பகுதிகளும் ..

மார்க்ஸை பயில்வதன் பொருள் [1]

Posted by அகத்தீ Labels:

மார்க்ஸை 

பயில்வதன் பொருள் [1]


சு.பொ.அகத்தியலிங்கம் .


மார்க்ஸிய சித்தாந்தம் சமுதாயச் சிந்தனையின் பொது ஓட்டத்திற்கு 

அப்பாலோ, உலக நாகரிக வளர்ச்சிக்கு அப்பாலோ தோன்றி வரவில்லை. 

இயற்கையையும் சமுதாய வாழ்க்கையையும் படித்து 

ஆராய்வதில் மனித குலம் 

இதுவரை செய்துள்ள ஆகப்பெரிய கண்டு பிடிப்புகளின் 

சரியான தார்மீக வாரிசாகவே வந்திருக்கிறது.

காரல் மார்க்ஸ் பிறந்து இரு நூறாண்டுஆகிறது. உலகெங்கும் அவரைநினைவு கூர்கின்றனர். கொண்டாட்டமாகவோ வெறும் சடங்காகவோ அல்லாமல், மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார் என்பதால் அவரை வாசிக்கவும் - வழிகாட்டியாகக் கொள்ளவுமான முயற்சியாகவே நினைவுகூரப்படுகிறார்

.மார்க்ஸை புரிந்து கொள்வதென்பது கதைகேட்பதல்ல. ‘சூத்திரமாய் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதல்ல. சமகால உலகைப் புரிந்து கொள்வதும், அதை மாற்றத் தோள் கொடுப்பதும், அதற்கு மார்க்சியத்தைக் கருவியாகக் கொள்வதும்தான்.


மார்க்ஸை நூறு பரிணாமங்களில் வாசிக்கலாம் எனினும் குறைந்தபட்சம் நான்கு பரிணாமங்கள் தவிர்க்க இயலாததாகும். 


முதலாவதாக, மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு.இரண்டாவதாக, மார்க்ஸ் விட்டுச்சென்ற சித்தாந்தம், மூன்றாவதாக மார்க்ஸியத்தின் இன்றைய பொருத்தப்பாடு, நான்காவதாக நாம் இப்போது செய்யவேண்டியது என்ன என்பதாகும்?இதனை சற்று விரிவாகப் பார்ப்போம். 


அதற்கு முன் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். “ மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும்பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை வளமாக்கிக் கொள்ளும்போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட் ஆக முடியும்,” இது லெனின் வகுத்த அளவுகோலாகும். 


ஆகவே கம்யூனிஸ்ட் ஆக விரும்புகிற ஒவ்வொருவரும் அதற்கு முயற்சித்தே ஆகவேண்டும், “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் வழுக்கக்கூடிய செங்குத்தானப் பாதைகளில் தளராமன உறுதியோடு ஏறிச்செல்வதற்குத் தயங்காதார்களுக்கு மட்டுமே அதன் ஒளிமிகுந்த சிகரங்களை எட்டும் வாய்ப்புக்கிடைக்கும்.”


மார்க்ஸ் எப்படி மார்க்சிஸ்ட் ஆனார்?முதலில், காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சி கொப்பளிக்கும் கதையாக எளிமைப்படுத்தி சொல்லுவது மிகமிக ஆரம்ப நிலைத் தேவையாகும். சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஇதற்கு உதவலாம். வேறு பல மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்று நூல்களும் உள்ளன. தேடிப் பயிலலாம். இப்போது ஒலி வடிவிலும் கிடைக்கிறது.


மார்க்ஸைப் போல் அவமதிப்புக்கும் இன்னலுக்கும் ஆளான இன்னொருவரை சொல்ல முடியாது. துன்ப துயரங்களை இழப்புகளைத் தாங்கி மானுட மேன்மைக்கு உழைத்தவர் இன்னொருவரில்லை எனச் சொல்லலாம். அனைத்து நாடுகளின் உழைப்பாளருக்காகப் போராடிய அவர், தான் எந்த நாட்டுக் குடிமகனும் அல்ல என அறிவிக்க வேண்டிய அளவுக்கு வேட்டையாடப்பட்டார். கடன், வறுமை என வதைப் பட்டார். மார்க்ஸ் - ஜென்னி - ஏங்கெல்ஸ் மூவரின் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்த அர்ப்பணிப்பின் முன்னுதாரணம்..


சென்டிமெண்ட் அட்டாச்மெண்ட் என்பார்களே அத்தகு உணர்வுப்பூர்வமான பிணைப்புக்கு இந்த வாழ்க்கை வரலாற்றை அறிவது இன்றியமையாததாகும். சிகரத்தில் ஏற முதல் படிக்கட்டு அதுவே.அது மட்டும் போதாது ஏனெனில் மார்க்ஸ் தீர்க்கதரிசியோ தேவதூதனோ அல்ல; அவர் செயலுக்கு வழிகாட்டியாக சித்தாந்தம் தந்த சமூக விஞ்ஞானி. எனவே, “மார்க்ஸ் எப்படி மார்க்சிஸ்ட் ஆனார்?” என்கிற கேள்வியை நாம் கேட்டு விடை தேடியாக வேண்டும். வேடிக்கையாகத் தோன்றலாம், ஆயினும் ஆழந்த பொருள்மிகு கேள்வி இது. 


ஹென்ரி வோல்கோவ் எழுதிய மார்க்ஸ்பிறந்தார் எனும் அரிய நூல் ஸமாஸ்கோ வெளீயீடு] மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தின் வளர்ச்சியின் வரலாற்றை நமக்கு ஓரளவு சொல்லும். மார்க்ஸ் வெறும் கற்பனையிலோ கனவிலோ தன் சித்தாந்தத்தை வடித்தெடுக்கவில்லை. அதற்காக அவர் படித்து குவித்த நூல்கள் கணக்கில் அடங்கா.


முன்னோர்களின் அறிவுச் செல்வம் முழுவதும்...இந்நூலில் ஓரிடத்தில் பொருத்தமாக ஹென்ரி சொல்வார், “இருபத்தாறு வயதில் மார்க்ஸ் உலகத்தைப்பற்றிப் புதுக்கண்ணோட்டத்தின் சிகரங்களை அடைந்துவிட்டார். ஒப்புவமையில்லாத தத்துவச் சிந்தனைக்குப் பிறகு இது சாத்தியமாயிற்று. தத்துவஞானம், சமூகச்சிந்தனை ஆகிய துறைகளில் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மொத்த பாரம்பரியத்தையும் அவர் தன் வயப்படுத்திக்கொண்டு விமர்சன ரீதியில் திருத்தி வளர்த்தி அமைத்தார். ஃபாலேஸ் முதல் ஃபாயர்பாஹ்மற்றும் மோஸஸ் ஹேஸ் முடிய ஒரு சுதந்திரமான தத்துவக்ஞானியைக்கூட - அவர் எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும் மார்க்ஸ் ஒதுக்கவில்லை.
ஹொரடோடஸ் மற்றும் ப்ளூடார்க் முதல் கிஸோ மற்றும் தியேர் முடியஎல்லா வரலாற்றாசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்கள்அனைத்தையும் படித்தார் . பிளாட்டோ முதல் லெரூ மற்றும் வைட்லிங் முடிய எல்லா சமூகக் கற்பனாவாதிகள் எழுதிய புத்தகங்களையும் படித்தார். ஆடம் ஸ்மித் முதல் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் வரை முக்கியமான அரசியல் பொருளாதார நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்தார். இறுதியாக மார்க்ஸ் இலக்கியச் செல்வத்தின் எல்லாத் துறைகளையும் - லுக்ரெத்சியஸ் காருசின் கவிதையிலிருந்து ஹென்ரிக் ஹெய்ன் கவிதைமுடிய, எஸ்கிலசின் சோகநாடகங்களிலிருந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முடிய, பிளாட்டோவின் உரையாடல் தொடங்கி பால்ஸாக்கின் வசனம் முடிய ஆழ்ந்து படித்தார். ஆக தம் முன்னோர்களின் அறிவுச் செல்வம்எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் உள்வாங்கினார். விமர்சனம் செய்தார்.’


அதன் அடித்தளத்தில் அவர் கண்டு சொன்ன உண்மைகள் இன்றும் காலத்தை விஞ்சிநிற்கின்றன.
நம் காலத்துக்கு முந்தைய அறிவுச் செல்வம்எதையும் அவர் நிராகரிக்கச் சொல்லவில்லை, அவரும் நிராகரிக்கவில்லை. மாறாக விமர்சனப்பூர்வமாய் உள்வாங்கினார். நமக்கும் அவ்வாறே வழிகாட்டியுள்ளார்.


மார்க்ஸ் வரலாற்றை இன்னும் ஆழமாக அறிய பி.என்.பெதோசியோவ், இரீன்பாக், எ.ஐ.கோல்மான், என்.ஒய்.கோல்பிஸ்கி, பி.ஏ.கிரிலோவ், ஐ.ஐ.குச்மினோவ், ஏ.ஐ.மாலீஷ், வி.ஜி. மோஸோலோவ், யெவ்கீனியா, ஸ்தெப்பனோவா ஆகிய ஒன்பது பேர் கூட்டாக ஆராய்ந்து எழுதிய 1308 பக்கங்கள் கொண்ட நூல் காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு [அலைகள் வெளியீடு] உதவும். வாய்ப்புள்ளோர் வாசித்தறிக. ஆங்கிலம் தெரிந்தோருக்கு மேலும் பலப்பல நூல்களோடு இன்னும் பெரிய வாசல் திறந்திருக்கிறது; உள்ளே நுழைந்தால் மூழ்கி முத்தெடுக்கலாம்.


மார்க்ஸ் கண்டுபிடித்தது என்ன?இரண்டாவதாக மார்க்சியம் என்று எதைச் சொல்கிறோம் என்பதை அறிவதாகும். இதற்கு எளிமையான விடைசொல்வதெனில் இதற்கு முந்தைய தத்துவ ஆசிரியர்கள் உலகை அதன் துன்பதுயரங்களைக் குறித்து வியாக்கியானம் செய்தார்கள்; ஆனால் அதை மாற்றுவதற்கு வழி சொன்னதுதான் மார்க்சியம்.


ஏங்கெல்ஸ் சொல்லுவார், “இயற்கையின் உயிரியல் வளர்ச்சி விதியை டார்வின்கண்டு பிடித்ததைப் போல், மனித வரலாற்றின் வளர்ச்சியின் விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.’’ “மார்க்ஸிய சித்தாந்தம் சமுதாயச் சிந்தனையின் பொது ஓட்டத்திற்கு அப்பாலோ, உலக நாகரிக வளர்ச்சிக்கு அப்பாலோ தோன்றி வரவில்லை. இயற்கையையும் சமுதாய வாழ்க்கையையும் படித்து ஆராய்வதில்மனித குலம் இதுவரை செய்துள்ள ஆகப்பெரிய கண்டுபிடிப்புகளின் சரியான தார்மீக வாரிசாகவே வந்திருக்கிறது. அது சமுதாயச் சிந்தனையில், குறிப்பாக ஜெர்மனியதத்துவஞானம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் ஆகிய சமுதாயச் சிந்தனையின் ஆகச் சிறப்புமிக்க முன்னேற்றம் அனைத்திலும் ஆதாரமாக அமைந்திருக்கிறது” என்கின்றனர் பெதோசியோவும் ஏனையோரும்.


“மனித சிந்தனை தோற்றுவித்திருந்தவை யாவற்றையும் மார்க்ஸ் மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்துக்கு உட்படுத்தினார், தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டு சரிபார்த்தார். முதலாளித்துவ வரம்பால்கட்டுப்படுத்தப்பட்டோரால் அல்லது தப்பெண்ணங்களால் கட்டுண்டோரால் வந்தடைய முடியாத முடிவுகளை இவ்வழியில் வந்தடைந்து அவர் ஸமார்க்சியத்தை] வரையறுத்துக் கொடுத்தார்” என்பார் லெனின்.

அந்த மார்க்சின் படைப்புகளை முழுமையாக வாசித்துவிட வேண்டும் என்பது ஆசையாய் எழுவது இயல்பு ஆயின் எளிதல்ல. அதற்கு பெரு முயற்சி தேவை. முயன்றால் முடியாததுண்டோ. தற்போது 3500 பக்கங்களில் 12 பெரும் தொகுதிகளாக மார்க்சின் அறிவுச் செல்வத்தை பாரதி புத்தகாலயம் கொண்டு வந்துள்ளது. அதை எப்படி வாசிப்பது? எங்கிருந்து தொடங்குவது என்பது முக்கியக் கேள்வியே!


தேவை : பொறுமை, தேடல், உழைப்புமார்க்ஸைப் பற்றி குறைந்த பட்ச அறிவுடன் மட்டுமேசமூக - அறிவியலாளர்கள் மனநிறைவு கொண்டிருப்பதாகவும் தோன்றுகிறது. தங்களுடைய அறியாமை மிக்கஅறிக்கைகள் குறித்து சமூக - ஆய்வு சாம்ராஜ்யத்திலிருக்கும் அதிகாரமும் தகுதியும் வாய்ந்த எவரும் சவால்விடாமல் இருந்துவிடுவதன் காரணமாகத்தான் இத்துறையில் நிபுணர்களாக நடிப்பது பாதுகாப்பானது என்றுஅவர்கள் கருதிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்பார் எரிக் ஃபிரோம்.


ஆக, மார்க்ஸை பிழையற பயிலுவதென்பதும் சற்றுபொறுமையையும் தேடலையும் உழைப்பையும் கோருவதாகவே அமையும். ஏனெனில் மார்க்ஸை பயில இரண்டு இடையூறுகளை எதிர்கொண்டாக வேண்டும்.முதலாவதாக, இன்று சமூகத்தில் பழகிப்போன சிந்தனைத் தடத்துக்கு மாறாக மார்க்சிய சிந்தனை இருப்பதும், மார்க்ஸ் எழுத்துகளில் விரவியிருக்கும் வரலாற்றுத் தகவல்கள் பல இன்றைய வாசகர்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருப்பதுமாகும். இரண்டாவதாக, மார்க்ஸ் எழுத்துகள் ஊடேயிருக்கும் விவரங்கள் குறித்துவிளக்கம் தேட வேண்டியிருக்கும்; அப்போது கிடைக்கும்பெரும்பாலான விளக்கங்களோ திரிபு வாதங்களுக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன.


(தொடரும்)


நன்றி : தீக்கதிர் , 14/10/2017.

அபாயகரமான எதிரியாம் அந்த எழுத்தாளர்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி - 49


அபாயகரமான எதிரியாம் அந்த எழுத்தாளர்

- சு.பொ.அகத்தியலிங்கம்
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மிக்கோலாவைஸ்கி உடன் லெனின் வலுவான தத்துவச் சண்டை நடத்திய போதிலும்.......புரட்சிக்கு பின்னர் நிறுவிய நினைவுத் தூணில் பதினெட்டாவது பெயராய் இவர் பெயரைப் பொறிக்கச் செய்தார் .


“ அந்த ஊளையிடும் ரஷ்யக் கழுகுக்கு இரண்டு தலைகள். பேராசையுடன் கூடிய இரண்டு அலகுகள். ஒன்று பாரம்பரிய போலீஸ்; இன்னொன்று முதலாளித்துவம். இரத்தம் குடிக்கும் பறவையின் இரண்டு தலைகளிலும் அடியுங்கள்.”


நிக்கோலாய் கான்ஸ்டாண்டினோவிச் மிக்கோலாவிஸ்கி 1842இல் ரஷ்யாவில் மெச்சோவ்ஸ்க்காலுகா எனுமிடத்தில் பிறந்தார். இளமையிலேயே தாய், தந்தையரை இழந்தார். சுரங்க பொறியியல் கல்விக்கூடத்தில் படிக்கும்போது ஸோலார் மென்னிக் அதாவது சமகாலம் பத்திரிகை வாசகரானார். லெனினை ஈர்த்த என்ன செய்ய வேண்டும் நாவலாசிரியர் செர்னிசெவ்ஸ்கி, கவிஞர் நெக்ரஸோவ் மற்றும் டோப்ரோலியூபோவ் ஆகியோரின் கட்டுரைகளைத் தாங்கி வந்தது. ஜார் அரசை எதிர்த்து சங்கநாதம் முழங்கிய ஏடு அது.


நிக்கோலாய் அரசுக்கு எதிரான அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டதால் கல்விக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.பலத்த அடக்குமுறைக்கு இடையே 1860இல் மீண்டும் முற்போக்கு இயக்கங்கள் செயல்படத் துவங்கின. விடியல், நங்கூரம், சமகாலத்து உலகம் போன்ற ஏடுகளில் மிக்கோலாவிஸ்கி எழுதலானார். இதற்கிடையில் சுயதொழிலில் முனைந்து தோல்வி கண்டார் . 1869 ல் நெக்ரஸோவ் அழைப்பை ஏற்று தந்தையர் நாட்டிலிருந்து எனும் ஏட்டில் வேலைக்குச் சேர்ந்தார். இவரின் இலக்கிய, அரசியல் கட்டுரைகள் இளைஞர்களை ஈர்த்தது. முன்னேற்றம் என்றால் என்ன? டார்வின் சித்தாந்தமும் சமூக விஞ்ஞானமும், வீரர்களும் கட்டுப்பாடற்ற கூட்டத்தினரும், சுதந்திர மனிதர்களும் வெறிபிடித்தவர்களும் போன்ற பல முத்திரைக் கட்டுரைகளை தீட்டினார்.


அவரின் எழுத்து எத்தகைய உணர்வை மூட்டும் என்பதற்கு; இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட அவரது வரிகளே சாட்சியாகும்.இவர் குறித்து லெனின் சரியாகச் சொன்னார்,” மிக்கோலாவிஸ்கி விவசாயிகளின் துயர் கண்டு நெஞ்சம் பதறி கண்ணீர்விட்டார்- நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையின் அனைத்து வெளிப்பாடுகளையும் எதிர்த்து உறுதியோடு போராடினார் - முதலாளித்துவ ஜனநாயக வழியில் ரஷ்ய நாட்டை விடுவிக்க பெரும்பங்காற்றினார். சட்டப்பூர்வமான ஏடுகளில் வெறும் குறிப்புகள் எழுதுவதன் மூலமே அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார். தலைமறைவு ஜனநாயகப் போராளிகளுக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவித்தார் - தலைமறைவுப் போராளிகளுக்கு அவரே நேரடியாக உதவவும் செய்தார்.”நரோத்நயா வோல்யாஸமக்கள் பாதை ] புரட்சிக் குழுவுடன் மேலும் மேலும் தொடர்பை வலுப்படுத்திய மிக்கோலாவிஸ்கி ஒரு கட்டத்தில் அவர்கள் வெளியிட்ட லிஸ்ட்டோக் ஏட்டின் ஆசிரியர் ஆனார்.


கிரோக்னார்ட் எனும் புனைப் பெயரில் ஜாரின் கொடுங்கோன்மையை கடுமையாகச் சாடினார் . ஆசிரியர் குழு கூட்டங்களைத் தன் வீட்டிலேயே நடத்தினார். ஜாராட்சிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி ஆசிரியர் குழுவுக்கு அளித்து விழிப்பூட்டினார்.ஒரு கட்டத்தில் மக்கள் பாதைக் குழுவுக்கும் அவருக்கும் கொள்கை மோதல் தலைதூக்கியது. அவ்வப்போது மேற்கொள்ளும் அரசியல் போராட்டம் தேவையா இல்லையா என்பதுதான் பிரச்சனை. வேண்டாம் என்றது தலைமை. வேண்டும் என்றார் மிக்கோலாவிஸ்கி.ஒரு சோஷலிஸ்டின் அரசியல் கடிதங்கள் எனும் சிறு நூலில் , “ ஜார் மன்னனையும் அவனது தொங்கு சதைகளையும் எதிர்த்த தனித்தனியான பயங்கரவாதச் செயல்கள் பயனற்றவை. அரசியல் போராட்டமே எதேச் சதிகாரத்தை ஒழித்துக்கட்டும் சரியான வழி.’” என்றார்.ஆனால் ஜார் அரசாங்கமோ மிக்கோலாவிஸ்கியை அபாயகரமான எதிரியாய்க் கருதி நாட்டைவிட்டு வெளியேற்றியது.


இக்காலகட்டத்தில் இவர் எழுதிய வெளியாளின் கடிதங்கள் எனும் தொடர் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியது. 1885 வரை மிக்கோலாவிஸ்கி தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.இக்காலகட்டத்தில் தந்தையர் நாட்டிலிருந்து ஏடு நிறுத்தப்பட்டுவிட்டது. ஸோவர்னி வெஸ்டனிக், ரஷ்யன் கெஜட், ரஷ்யன் சிந்தனை போன்ற பல ஏடுகளில் எழுதிவந்தார். எதிலும் ஆசிரியர் பொறுப்பு ஏற்கவில்லை. சுமார் ஏழாண்டுகள் இப்படியே கழித்தார்.1892இல் ருஷ்கோவி போகட்ஸ்ட்வோ ஸரஷ்யச் செல்வர்கள்] எனும் ஏட்டில் பணிக்கு சேர்ந்தார். 1894இல் இதன் தலைமை ஆசிரியர் ஆனார். நாற்பதாண்டுகளுக்கு மேலாக வெளிவந்த இந்த ஏடு ரஷ்ய சமுதாயத்தின் சமுதாயச் சிந்தனையின் சிக்கலான முரண்பாட்டையும் வளர்ச்சியையும் பிரதிபலித்தது. இந்த ஏட்டில் தான் சாகும் வரை பத்தாண்டுகள் தலைமை ஆசிரியராக மிக்கோலாவிஸ்கி செயல்பட்டார் என்பது முக்கியமான செய்தியாகும்.


இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் மார்க்சியத்தை எதிர்த்து இதில் மிக்கோலாவிஸ்கி கட்டுரைகள் எழுதினார். சமூகத்தை மொத்தமாகப் பார்க்காமல் ஒரு பகுதியாக மட்டுமே மார்க்சியர்கள் பார்ப்பதாக குற்றம் சாட்டினார். லெனின் இந்த விவாதத்தை மறுத்து மார்க்சியமே சமூகத்தை ஒருங்கிணைந்து பார்க்கிறது என ஆதாரங்களுடன் நிறுவினார்.கற்பனாவாத சோஷலிஸ்ட்டான செர்னிசெவ்ஸ்கியை பின்பற்றுபவரே மிக்கோலாவிஸ்கி. ஆனால் செர்னிசெவ்ஸ்கியைவிட ஓரடி பின்னாலேதான் இருந்தார். ஏனெனில் செர்னி கருத்து முதல் வாதத்தை எதிர்த்தார்; பொருள் முதல் வாதத்தை சார்ந்து நின்றார். மாறாக 


மிக்கோலாவிஸ்கி கருத்துமுதல்வாதிகள் பக்கமே நின்றார்.முன்னேற்றம் குறித்தும் தனிநபர் பாத்திரம் குறித்தும் இவரது பார்வை பிழையானதாக இருந்தது. தனிநபர் பாத்திரத்தை மிகை மதிப்பீடு செய்தார்.
இதன்காரணமாக இவரது எழுத்துகள் மக்கள் பாதைக் குழுவுக்குசித்தாந்த ஆயுதமானது. தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்த்த போதிலும் தனிநபர்களின் அரசியல் தலைமை உள்ளிட்டவற்றில் இவருக்கு மயக்கம் இருந்தது . அன்றைக்கு தொழிலாளி வர்க்க முக்கியத்துவம் அதிகம் உணரப்படாத சூழலில் இவரது பார்வையிலும் அது பிரதிபலித்தது.வீரர்களும் கட்டுப்பாடற்ற கூட்டத்தினரும் எனும் கட்டுரை தொடங்கி மக்கள் திரள் மீது நம்பிக்கை இழக்கலானார். 1860 புரட்சியின் தோல்வியால் ஏற்பட்ட சிந்தனைப் போக்கு அது. கட்டுப்பாடற்ற கூட்டத்துக்கு உணர்ச்சிகரமான பாத்திரத்தை அளித்தாலும் தனியொரு வீரனின் பங்கை மிகை மதிப்பீடு செய்தார். தத்துவத்தின் பங்கை சரியாக இனங்காணத் தவறினார். லெனினும் பிளக்கனோவும் இதனை எதிர்த்து தத்துவச் சமர் புரிந்தனர்.


முதலாளித்துவ வளர்ச்சி சாத்தியமா இல்லையா என மக்கள் பாதை விவாதித்தது. மிக்கோலாவிஸ்கியின் முதலாளித்துவ கருவில் இருப்பினும் சோஷலிஸ்ட் செல்வாக்குக்கு உட்படுத்தலாம் என கற்பனையாய் எழுதினார்.1894இல் லெனின் எழுதிய மக்களின் மெய்யான நண்பர்கள் யார் எனும் நூலில் மிக்கோலாவிஸ்கியின் வாதங்களில் உள்ள பலவீனத்தை சுட்டி மார்க்சியமே உலகு தழுவிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சித்தாந்தம் என நிரூபித்தார் .1904 ஆம் ஆண்டு மாரடைப்பால் மிக்கோலாவிஸ்கி மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் அன்றைக்கே ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் உணர்ச்சி கொப்பளிக்கப் பங்கேற்றனர் என்பது சாதாரணச் செய்தியா?


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மிக்கோலாவிஸ்கி உடன் லெனின் வலுவான தத்துவச் சண்டை நடத்திய போதிலும்;ஜார் மன்னரையும் நிலப்பிரபுத்துவக் கொடுமையையும் எதிர்த்து மிக்கோலாவிஸ்கி நடத்திய போராட்ட த்தின் வீச்சையும் வலுவையும் சரியான வரலாற்றுக் கோணத்தில் மதிப்பிட்டார். உரிய இடம் அளித்தார்.புரட்சிக்கு பின்னர் நிறுவிய நினைவுத் தூணில் பதினெட்டாவது பெயராய் இவர் பெயரைப் பொறிக்கச் செய்தார். கட்சி பாடதிட்டத்தில் இவரையும் சேர்த்தார். 


ரோசா லக்சம்பர்க் ஜெர்மன் வலதுசாரிகளால் கொல்லப்பட்டார் . அவர் தன் எழுத்துகளில் மார்க்ஸோடும் லெனினோடும் முரண்பட்ட போதும் அவரின் பங்களிப்பை லெனின்போற்றி எடுத்து இயம்பினார். இப்படி பட்டியல் நீளும் . கிளாரஜெட்கின் உள்ளிட்ட பெரும் பெண்கள் படை மார்க்சியத் திற்கும் நவம்பர் புரட்சிக்கும் அளித்த பெருங்கொடை சொல்லில் அடங்காது. எழுத இடமின்மையால் விடுபடுகிறது.

ரஷ்யப் புரட்சி எனும் பெரு நெருப்பு மார்க்சியர்களால் மட்டுமே மூட்டி வளர்க்கப்பட்டதல்ல. பலதரப்பட்டவரின் பங்கு உண்டு. ஆனால் சரியான திசையில் புரட்சி பீரங்கியைச் செலுத்தியவர் மார்க்சியர்களே. இதனை லெனின் உணர்ந்தார். அடுத்த தலைமுறைக்கும் உணர்த்த விரும்பினார்.


புரட்சி தொடரும் …

நன்றி : தீக்கதிர் , 9/10/2017.

சந்தேகம் இருக்கா... ?

Posted by அகத்தீ Labels:

சந்தேகம் இருக்கா... ?சட்டை எடுக்கக் கடைக்குப் போனேன்
சட்டை இந்து கலாச்சாராமா ? ராமர் சட்டை போட்டாரா?
சந்தேகம் வந்தது திரும்பி வந்தேன் !


அரிசி மூடையை சைக்கிளில் வைத்தேன்
சைக்கிள் இந்து ரத்தம் ஜனித்ததா ?
சந்தேகம் ஓங்க ! தலையில் சுமந்து நடக்கலானேன் !


அவசரச் செய்தி சொல்ல அலைபேசி எடுத்தேன்
அலைபேசி பற்றி வேதத்தில் ஏதும் இல்லையே !
தூக்கி எறிந்து ஓட்டம் பிடித்தேன் !


பைத்தியம் என மனைவி பழித்தாள்
கோபம் தலைக்கேற அவளை நெருப்பில் எரித்தேன்
ராமர் வழியில் செல்பவன் நானே ! சந்தேகம் இருக்கா ?

- சு.பொ.அகத்தியலிங்கம்.