நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 2 .

Posted by அகத்தீ Labels:

 


கூட்டத்தில் முன்னால் இருக்கிற நாலு பேருக்காகப் பேசக்கூடாது . தூரத்தில் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டே கூட்டம் கேட்பவன் ,தொடர்ந்து கேட்கிறானா நகர்கிறானா என்று பார் !



நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 2 .
ஒருவர் கம்யூனிஸ்டாக வேண்டுமெனில் வெறுமே உறுப்பினராவது மட்டும் போதாது ; தன்னை கம்யூனிஸ்டாக வார்த்தெடுக்க தனக்குள்ளேயே பெரும் தத்துவப் போராட்டம் ,பண்பாட்டுப் போராட்டம் நடத்தியாக வேண்டும்.
எந்த வர்க்கத்தில் ,எந்த வர்ணத்தில் பிறக்க வேண்டுமென ஒருவர் தனக்குத்தானே தீர்மானிக்க முடியாது . ஆனால் கம்யூனிஸ்டாக மாற பாட்டாளி வர்க்க நலன் ,பாட்டாளி வர்க்க குணத்துக்கு தன்னைத்தானே மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டும் . டீ கிளாசிபிகேஷன் எனப்படும் வர்க்க மறுகட்டமைப்பு அவ்வளவு சுலபமல்ல.
இப்படி எல்லாம் எழுதுவது சுலபம். வாழ்வது சவால் .அந்த சவாலில் வென்று நின்றவர் தோழர் ஏபி என அழைக்கப்படும் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம். அவரின் வாழ்க்கை வரலாற்றை தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் . வாய்ப்புள்ளோர் வாசியுங்கள் !
தோழர் ஏபி அவர்களை சங்கரன் என்கிற பெயரில் கதாபாத்திரமாக்கி ; அவர் கம்யூனிஸ்டாக வார்க்கப்பட்ட திண்டுக்கல் தோல்பதனிடும் தொழிலாளர் போராட்டம் ,நகரசுத்தி தொழிலாளர் போராட்டம் இவற்றை களமாக்கி , கம்யூனிஸ்டுகளின் போராட்ட தியாக வாழ்வை “ தோல்” எனும் நாவலாக வார்த்திருக்கிறார் டி.செல்வராஜ் . இளம் தோழர்கள் இந்நாவலை மிக மிக அவசியம் படிக்கவேண்டும் . [ நூல் அறிமுகம் இணைப்பில் உள்ளது ]
சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பார்ப்பண இளைஞன் , வசதியான குடும்பத்தில் பிறந்தவன் , தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் ஓர் அங்கமாக மாற்ற தயிர் சாதத்திலிருந்து மாட்டுக்கறிக்கு மாறுவதென்பது பெரும் பண்பாட்டுப் போராட்டமாகும்.தோல்பதனிடும் தொழிலாளர் போராட்ட களத்தில் அது நிகழ்ந்தது . தோழர் ஏபியின் வாழ்க்கை அது .
ஒரு நாள் சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் தோழர் ஏபி சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறார் . நான் உள்ளே நுழைகிறேன் .நிமிர்ந்து உட்கார்ந்தவர் . அருகிலுள்ள நாற்காலியில் என்னை அமரச் சொல்கிறார் . என் வாலிபர் சங்கப் பணிகள் ,என் குடும்பச் சூழல் ,கடைசியாகப் பார்த்த திரைப்படம் எல்லாம் உரையாடலில் இடம்பெறுகிறது .அவர் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் .இச்சூழலில் என் ஐயத்தைக் கேட்டுவிடுவதென தீர்மானிக்கிறேன்.
தோழர் .ஏபியின் விரலில் உள்ள மோதிரத்தை சுட்டிக்காட்டி , “கம்யூனிஸ்டுகளுக்கு தங்க நகை தேவையா?” எனக் கேட்டேன் .
எனக்கு தங்க நகை பிடிக்காது .நான் கட்சிக்கு வருவதற்கு முன்பே மோதிரத்தை தவிர்த்தவன் . திருமணத்தன்றும் மோதிரம் அணிய மறுத்தவன் .இன்றுவரை அப்படித்தான் . என் உணர்விலிருந்தே அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
அவர் சொன்னார் , [ நினைவில் பதிந்தபடி ] “ காம்ரேட் ! ஒரு வகையில் தங்க நகை மோகம் கம்யூனிஸ்டுகளுக்குக் கூடாது . ஆயின் திருமண மோதிரம் போன்ற சில ஆபரணங்களை பழகிப்போன சமூகத்தில் முற்றாகத் தவிர்க்க முடியுமா ? சாத்தியமில்லை . முடிந்தவரை தவிர்க்கலாம். அது போகட்டும் , என் மோதிரம் திருமண மோதிரமல்ல . இதை மோந்து பார் “ என என் மூக்கில் வைத்தார் .
பின் தொடர்ந்தார் ,” இதில் மாட்டுக்கறி வாசம் வரும் , நகரசுத்தித் தொழிலாளர் வியர்வை வாசம் வரும் … [ நாற்றம் எனச் சொல்லவில்லை வாசம் என்றே சொன்னார் ] ஆம் திண்டுக்கல் தோல்பதனிடும் தொழிலாளர்களும் ,நகரசுத்தித் தொழிலாளர்களும் எனக்கு ஆசையாய் அணிவித்த மோதிரம் , நான் மாநிலக் கட்சிப்பணிக்காக திண்டுக்கல்லில் இருந்து விடுவிக்கப்பட்டபோது அன்பளிப்பாய்த் தந்தது . பணமாய்க் கொடுத்ததை கட்சிக்கு கொடுத்துவிட்டேன் .இதை கட்சி அனுமதிபெற்று அணிந்துகொண்டேன் .உயிர்பிரியும் வரை இது என்னோடு பேசிக்கொண்டே இருக்கும்.” என்றார். இது ஆயிரம் பொருள்சொல்லும் வார்த்தை அல்லவா ?
மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் முன் ஓர் பொதுக்கூட்டம் . நான் என் பாணியில் பேசினேன். மேடையைவிட்டு இறங்கியதும் ஓரிரு தோழர்கள் சர்வதேசிய அரசியல் போதுமான அளவு பேசவில்லை என கருத்துச் சொன்னார்கள் .அந்த நேரத்தில் ஒரு தோழர் வந்து காம்ரேட் ஏபி அழைக்கிறார் என சங்க அலுவலகத்துக்கு கூட்டிப்போனார் .
சரி ! சரி ! சரியாக மாட்டிக்கொண்டோம் என எண்ணியபடி அங்கு சென்றேன் . “ வாடா ! சிங்கக் குட்டி ! சபாஷ் ! நல்லா பேசினாய் … சொன்ன குட்டிக்கதை ரொம்ப பொருத்தமானது .அப்படித்தான் பேசணும் … பேசி முடிஞ்சதும் சில பேரு அதப் பேசலை ,இதப் பேசலைன்னு சொல்லியிருப்பாங்களே ?” என்றபடி என்னை ஒரு பார்வை பார்த்தார் .
“ ஆமாம் !” என தலையை ஆட்டினேன் . அவர் தொடர்ந்தார் , “ கூட்டத்தில் முன்னால் இருக்கிற நாலு பேருக்காகப் பேசக்கூடாது . தூரத்தில் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டே கூட்டம் கேட்பவன் ,தொடர்ந்து கேட்கிறானா நகர்கிறானா என்று பார் ! நாம் நம்மை நெருங்கத் தயங்குகிறவனை நோக்கித்தான் பேசவேண்டும்…. வீட்டில் இருந்தபடி நம் பேச்சைக் கேட்பவருக்காவும் பேச வேண்டும் ” என உற்சாகமூட்டி அனுப்பினார் .
நான் இன்றுவரை பேசினாலும் எழுதினாலும் வகுப்பெடுத்தாலும் கடைக்கோடியில் இருப்பவரை மனதில் நிறுத்தியே பேசுகிறேன் எழுதுகிறேன். அறிவுஜீவி ஒளிவட்டம் எனக்குத் தேவை இல்லை .எல்லாம் அன்று தோழர் ஏபி கொடுத்த உற்சாகம்.
அவர் சாகும்வரை எனக்கு ஊக்கமும் நம்பிக்கையுமாக இருந்தார் ….
இன்னும் பேசுவோம் …….
சு.பொ.அகத்தியலிங்கம்.
30 ஜூலை 2021.

நானும் முருகனும்” அல்லது ”ஞானம் பெற்ற கதை

Posted by அகத்தீ Labels:

 

நானும் முருகனும்”
அல்லது
”ஞானம் பெற்ற கதை”
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உள்ள முருகப் பெருமான் சன்னதியில்தான் எனக்கு குழந்தையாய் இருந்த போது முதன்முதல் சோறூட்டப்பட்டது . என் வீட்டிலும் மாமா ,பெரியம்மா ,சித்தி எல்லோர் வீட்டிலும் குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி அங்குதான் . ஆக , சோற்றோடு முருகன் எனக்கு அறிமுகமாகிவிட்டார் . என் அம்மா வீட்டார் வழக்கப்படியே எல்லாம் நடந்தன.
தெற்குத் தெருவில் ஒரு காவடி மடம் உண்டு . ஊரிலுள்ள ஒவ்வொரு காவடி மடமும் ஒவ்வொரு சாதிக்கானது . நான் குறிப்பிடும் காவடி மடம் என் அம்மா குடும்பத்தாரோடு தொடர்புடையது . ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூருக்கும் , மருங்கூருக்கும் காவடி எடுக்கும் இரு விழாக்கள் நடை பெறும் . காவடிக்கு முன் வேல் தூக்கி ஆடுவதில் சின்ன பிள்ளைகளுக்குள் போட்டியே இருக்கும் . அட்டையில் வேல் செய்து ஆடுவோரும் உண்டு .அப்படி வேல்தூக்கி ஆடுவதில் ஆர்வமுள்ள சிறுவனாகவே அகத்தியலிங்கமாகிய நான் இருந்தேன்.
தினசரி தாணுமாலயன் கோவிலில் நடக்கும் தேவாரப் பாடசாலைக்கு அவர்கள் தினசரி தரும் அரவணை ருசிக்கே செல்லும் சிறுவர்களில் நானும் ஒருவன் . மிகச் சிறு தொகை பணமும் மாதா மாதம் கிடைக்கும் . அப்போதெல்லாம் இடையில் பட்டுத் துண்டு , கழுத்தில் சிவப்பு கயிற்றில் உத்திராட்சம் ,காதில் கடுக்கன் , நெற்றி ,கை ,வயிறு எங்கும் விபூதிப்பட்டை இவற்றோடு ‘ மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு…..” வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்…” என வாய் தேவாரம் உச்சரிக்கும் .
தாணுமாலயன் கோயிலின் உள்ளே சுற்றி சுற்றி வருவதும் அதன் கலை அழகில் சொக்கி நிற்பதும் எனக்குப் பிடிக்கும் . இப்போது போல் அன்று அக்கோயில் வியாபார ஸ்தலம்போல் ஆகவில்லை . அமைதியும் சுவர் நெடுக எழுதப்பட்ட பதிகங்களும் ஈர்ப்பானவை .
ஒரு முறை எங்க காவடி மடத்தில் 41நாள் அதுதான் ஒரு மண்டலம் பூஜை நடந்தது . அப்போது மதிய சாப்பாடு காவடி மடத்தில் . வீட்டில் சோறு ஆக்க மாட்டார்கள். அந்த 41 நாட்களும் பள்ளி மதிய வேளை உணவுக்கு விடும் போது காவடி மடத்தில் சாப்பாடு பரிமாறுவர் . நானும் தினசரி அங்கு சாப்பிடச் செல்வேன் . என் அண்ணன் , அக்கா உட்பட மொத்த குடும்பமும் அங்குதான் சாப்பிடும் . தம்பிக்கு அந்த அனுபவம் கிடைத்திருக்காது .அவன் குழந்தை .
இப்படி ஒரு நாள் சாப்பாட்டுக்கு போகும் போது என் பள்ளித் தோழன் பாலசுந்தரத்தை அழைத்துப் போய் பந்தியில் உட்கார்ந்துவிட்டேன் . ஒரு வாய் வைக்கும் முன் “ எவண்டா ! சாதி கெட்டப் பயலை எல்லாம் பந்தியில உட்கார வச்சது ?” என்கிற உறுமலோடு என் மாமா முறையிலான ஒருவர் என் அருகிருந்த பாலசுந்தரத்தை தூக்கி வெளியேற்றினர் .
எனக்கு ஒன்றும் புரியவில்லை . கோவித்துக் கொண்டு நானும் வெளியேறினேன் . சாப்பிடவில்லை .மதியம் பள்ளிக்கூடமும் போகவில்லை . மறுநாள் அங்கு சாப்பிடப்போக மறுத்துவிட்டேன் .என் அம்மா வீட்டில் தோசை தந்த ஞாபகம் .அதன் பிறகு அந்த காவடி மடமே பிடிக்கவில்லை ,காவடி ஆட்டத்தில் வேல் எடுத்து ஆடலும் நின்று போனது .
பின்பொரு நாள் அதே பாலசுந்தரமும் நானும் சேமியா ஐஸ் வாங்கி தின்றதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து மாமா உதைத்ததும் மாறாத வடுவாய் நினைவில் உள்ளது . அவன் தலித் என்பதே பிரச்சனை . அவன் வீட்டிற்குப் போனதும் குற்றச்சாட்டில் அடங்கும். அவன் நட்பு காரணமாக டிரில் வாத்தியார் என்னையும் அவர் பீரியடில் சேர்க்கமாட்டார் .நான் பள்ளி நூலகத்தை சரணடையும் நேரமாக அது மாறிப்போனது . விளையாட்டு ஆர்வத்திற்குப் பதில் புத்தக ஆர்வம் என்னை ஆட்கொண்ட கதை இதுவே . அந்த பாலசுந்தரம் சின்ன வயசில் இறந்தும் போனான் .
இவை எல்லாம் என்னுள் ஒரு தேடலை உசுப்பியது. குழிச்சப்பத்து மூலையில் அன்று சாணார் என்று அழைக்கப்பட்ட நாடார் மற்றும் இதர அடிநிலை சாதிகள் ரதவீதிக்கு வராமல் தடுக்கும் ’தெருமறிச்சான்’ அங்குதான் இருந்தது . இந்த தெருமறிச்சானைப் பற்றி கதைகதையாய் சொலுவார்கள் . பெரும்பாலான கட்சிக் கூட்டங்கள் அந்த தெற்குத் தெரு மூலையில்தான் நடக்கும் . குறிப்பாக கம்யூனிஸ்ட் ,திமுக ,திக கூட்டங்கள் நடக்கும் இவற்றைக் கேட்பதற்கு எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் .
கோயிலுக்குள் நடக்கும் பல பாகுபாடான செயல்கள் , அங்கு நேரில் கண்ட அக்கிரமங்கள் என்னை மேலும் மேலும் குடையத் தொடங்கின . எனக்கு அமைந்த சில ஆசிரியர்கள் வேறு கேள்விகளை விதைத்தனர் . சாதி அமைப்பின் மீது முதல் கோவம் நெஞ்சில் கனல்விடத் தொடங்கியது .அதுவே மெல்ல பெரிதானது.
நான் பத்தாவது வகுப்பு முடித்து பதினோராம் வகுப்புக்கு [எஸ் எஸ் எல் சி ] சென்னை வந்து விட்டேன் .என் குடும்பமும் அதற்கு சில மாதங்கள் முன்பே பிழைக்க சென்னை வந்து விட்டது .
நான் சென்னை வந்ததும் முதன் முதலாக பெரியார் திடல் போய் பெரியாரைச் சந்தித்தேன் .அவர் என் குடும்ப நிலவரத்தைக் கேட்டுவிட்டு ஒழுங்காகப் படி என புத்தி சொல்லி அனுப்பி வைத்தார் .
இப்படி சமூக ஞானமும் அரசியல் ஞானமும் மெல்ல என்னுள் மொட்டவிழத் தொடங்கியது ……
சுபொஅ.

இந்நூற்றாண்டு பயன்படட்டும் .

Posted by அகத்தீ Labels:

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்கசிஸ்ட் ] பெருமை மிகு முன்னோடிகளாகவும் , தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆற்றமிக்க வழிகாட்டிகளாகவும் திகழ்ந்தவர்கள் : நூற்றாண்டு விழாக் காணும் மகத்தான தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம் , ஏ.நல்லசிவன் , ஆர் .உமாநாத் , கே .முத்தையா மற்றும் நூற்றாண்டில் நம்மோடு வாழும் என் .சங்கரய்யா ஆகியோர் ஆவர் .
நான் இந்தத் தலைவர்களின் சீரிய வழிகாட்டலில் கட்சிப் பணியாற்றியவன் என்கிற பெருமிதத்தோடு மகிழ்கிறேன். ஒவ்வொருவரிடமும் நான் கற்றுக்கொண்டவை அதிகம் . அவற்றையெல்லாம் அசைபோடவும் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றவும் இந்நூற்றாண்டு பயன்படட்டும் .
தொடர்ந்து பேசுவோம் … சரிதானே ?
சுபொஅ.

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 1 .

Posted by அகத்தீ Labels:

 சிகப்பு அட்டை , .முகப்பில் தீக்கதிர் என பொறிக்கப்பட்டிருக்கும் .நிருபர் , சென்னை செங்கை மாவட்டம் என்கிற விபரமும் என் பெயரும் உள்ளே இருக்கும் .ஆசிரியர் எனும் இடத்தில் கே.முத்தையா கையொப்பம் இட்டிருப்பார் .

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 1 .
மறுவாசிப்பு புராணங்களுக்கும் வரலாற்றுக்கும் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல தனிநபர்களுக்கும் வேண்டும்.
ஒருவரைப் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் மிகை மதிப்பீடோ ,குறை மதிப்பீடோ செய்வது இயல்பு ; ஏனெனில் நிகழ்காலத் தேவையின் நிர்ப்பந்தமும் புரிதல் இடைவெளியும் அப்போது அதிகம் .
வெகுதூரம் வந்தபின் திரும்பிப் பார்க்கும்போது குறை நிறைகளைப் பகுத்துப் பார்க்க வாய்ப்பாகிறது .
தோழர் கே .முத்தையா அவர் வாழும் காலத்தில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் என்னுள் பதிவானவர் . இப்போது எண்ணிப் பார்த்தால் பல மதிப்பீடுகள் தலைகீழாகின்றன . அவர் மிகுந்த உயரத்தில் காட்சி அளிக்கிறார் . அடுத்தடுத்த பதிவுகளில் அதனைப் பகிர முயல்கிறேன்.
அவசரகாலத்தில் நாமக்கல்லில் நடந்த பயிற்சி த மு எ ச முகாமில் பங்கேற்று பின் சென்னை திரும்புகையில் , இலக்கியம் அரசியல் எல்லாம் பேசிக்கொண்டே வரலாம் என்றுதான் அவரோடு சென்னை திரும்ப செந்தில்நாதன் சொன்னபோது சம்மதித்தேன் . ஆனால் பெரும் ஏமாற்றம் . ரயிலில் பொதுப்பெட்டியில் முட்டிமோதும் நெரிசலில் பயணித்த போது அவர் பேசவே இல்லை . ஒரு துண்டால் கண்ணை மூடிக்கொண்டு கூட்டத்தோடு படுத்துக் கொண்டார் .
சென்னை வந்த பிறகு ஓர் நாள் தோழர் செந்தில்நாதன் சொன்னார் , “ அவருக்கு காது சரியாகக் கேட்காது ,காது மிஷினை கழற்றி வைத்துவிட்டுத்தான் படுக்க முடியும் ; இன்னொன்று அரசியல் ,இலக்கியம் என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தால் அது அவசரநிலை காலத்தில் நம்மை நாமே காட்டிக்கொடுப்பதாகாதா ?” நான் யோசிக்காத விஷயம் அது .என் பக்குவம் அவ்வளவுதான்.
நான் கட்சியின் முழுநேர ஊழியராவதற்கு அவரும் ஓர் காரணம். 1977 மே மாதம் தீக்கதிர் மே மலரில் முதல் பக்கத்தில் என்னுடைய கவிதையை வெளியிட்டு என்னை ஊக்குவித்தார் ; ஆயின் அக்கவிதை என் வேலையைப் பறித்து கட்சி முழுநேர ஊழியராக்க உதவியது . [ மேலும் விவரங்களுக்கும் அக்கவிதைக்கும் கீழே உள்ள சுட்டியை அமுக்கவும்.]
நான் அதிகாரபூர்வமாக 1978ல் நிருபர் என அடையாள அட்டை பெற்றது என் நினைவில் பசுமையாக உள்ளது . சிகப்பு அட்டை , .முகப்பில் தீக்கதிர் என பொறிக்கப்பட்டிருக்கும் .நிருபர் , சென்னை செங்கை மாவட்டம் என்கிற விபரமும் என் பெயரும் உள்ளே இருக்கும் .ஆசிரியர் எனும் இடத்தில் கே.முத்தையா கையொப்பம் இட்டிருப்பார் . அந்த அடையாள அட்டையை என் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்தேன் .சென்னையிலிருந்து பெங்களுக்கு 2013 ல் குடிபெயர்ந்தபோது தொலைந்துவிட்டது .
அப்போது கணினி , அலைபேசி ,பேக்ஸ் எதுவும் கிடையாது . தந்தி மட்டுமே ஒரே வழி .அதுவும் தமிழில் கிடையாது . ஆர்ப்பாட்டம் எனில் ARPPAATTAM என தங்கிளீஸில் அடித்து அனுப்ப வேண்டும் .பத்திரிகைக்கு சலுகைக் கட்டணம் உண்டு . அதற்கான அடையாள அட்டையைக் காட்டினால் போதும் .அப்போது பணம் கட்ட வேண்டாம். அந்தந்த பத்திரிகை நிர்வாகத்திடம் வசூலித்துக் கொள்வார்கள் .அந்த வசதி எனக்கும் தரப்பட்டிருந்தது . .கட்டுரைகள் ,படங்கள் எனில் தபாலில்தான் அனுப்ப வேண்டும். வாலிபர் சங்க நிர்வாகியாக பணியாற்றிய போதே இதுவும் என் இணை வேலையானது
தீக்கதிரோடு என் தொடர்பு அவசரகாலத்திலேயே தொடங்கிவிட்டது .என் அண்ணன் சு.பொ.நாராயணன் பழவந்தங்கலில் தீக்கதிர் விநியோகிப்பவர் .நான் தீக்கதிரில் அவ்வப்போது எழுதத் தொடங்கிவிட்டேன். ஆனாலும் தீக்கதிர் மீது கடும் விமர்சனங்கள் எனக்கு உண்டு .அன்று சென்னைத் தோழர்கள் பலரிடம் மிகுந்திருந்த ஒருதலைப்பார்வை என்னிடமும் தூக்கலாய் இருந்தது ..
1984 ல் சேலத்தில் நடந்த கட்சி மாநாட்டில் தீக்கதிரை கடுமையாக விமர்சித்துப் பேசினேன் . தோழர் .கே .முத்தையாவும் என் விமர்சனத்தில் தப்பவில்லை .சென்னைத் தோழர்கள் என் பேச்சை மெச்சினர் .அந்த மாநாட்டில்தான் நான் மாநிலக்குழு உறுப்பினர் ஆனேன்.
1994 ல் தீக்கதிரில் பொறுப்பாசிரியரான பிறகு என் அனுபவம் தோழர் கே.முத்தையாவை என்னுள் விஸ்வரூபமெடுக்க வைத்தது . அதை இன்னொரு நாள் எழுதுவேன்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
29 ஜூலை 2021.
May be an image of 1 person and text that says 'வாழ்வும் பணியும் கே. முத்தையா MarinaBook தொகுப்பு ஜனநேசன்'
Chinniah Kasi, Ramesh Bhat and 44 others
6 Comments
2 Shares
Like
Comment
Share

அன்று போல் இன்று நாம் இல்லையே ?

Posted by அகத்தீ Labels:

 அன்று போல் இன்று நாம் இல்லையே ?

ஏன் ? ஏன் ?

இன்று போல் நாளை நாம் இருப்போமா ?
சொல் ! சொல் !
மாறாத நாளோ பொழுதோ ஏதிங்கு ?
நில் ! நில் !
மாறதவை காலச்சூறாவளியை தாங்கி நிற்குமோ ?
கல் ! கல் !
முன்செல்லும் காலத்தை பின்னிழுக்கலாமோ ?
மூடனே முனைந்து பார் !
முப்பாட்டன் காலத்தில் தானுறைந்து வாழ்தல்!
முடியாது போடா !
சுபொஅ.
10 ஜூலை 2021.

என் மவுனம் என்பது

Posted by அகத்தீ Labels:

 என் மவுனம் என்பது

ஆற்றாமையின் வெளிப்பாடு!


என் மவுனம் என்பது
ஆழந்த கவலையில் உறைதல்!
என் மவுனம் என்பது
இதயக் குமுறலின் தற்காலிக முகமூடி !
என் மவுனம் என்பது
கொதிநிலை எட்டக் காத்திருப்பு !
என் மவுனம் என்பது
பேச்சைவிட வலிமையான எதிர்ப்பு!
என் மவுனம் என்பது
உள்ளுக்குள் புகையும் பெருநெருப்பு !
என் மவுனம் என்பது
மனசுக்குள் போடும் பெரும் கணக்கு !
என் மவுனத்தை சம்மதமென்று
தப்புக்கண்க்குப் போடாதீர் !
சுபொஅ.