ஆளுக்கு ஆள் அபாயச் சங்கு

Posted by அகத்தீ

 ஆளுக்கு ஆள் அபாயச் சங்கு 


 “ பாவங்கள் அதிகரி்த்துவிட்டன 

பாவங்கள் அதிகரித்துவிட்டன

உலகம் அழியப்போகிறது- விரைவில்

உலகம் அழியப்போகிறது..”

பிரசங்கித்தான் மதபோதகன்.


 “புவிமண்டலம் சூடாகிவிட்டது 

புவிமண்டலம் சூடாகிவிட்டது

பேரழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது – ஆம்

பேரழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது”

எச்சரித்தான் சுற்றுச்சூழலியாளன்.


 “ உலகப் போர் வருகிறது – மூன்றாம்

உலகப்போர் வருகிறது 

மானுடம் பூண்டற்று போகும்- இனி

மானுடம் பூண்டற்றுப் போகும்.”

அரசியல் விமர்சகன் அலறினான்.


 “ கொள்ளை நோய்களின் காலம் தொடங்கிவிட்டது

கொள்ளை நோய்களின் காலம் தொடங்கிவிட்டது

காப்பாற்ற எந்த இரட்சகனும் இல்லை- எங்கும்

காப்பாற்ற எந்த இரட்சகனும் இல்லை.”

சாமக் கோடாங்கியின் உடுக்கை சத்தம் உலகம் முழுவதும் .


 “சகிப்புதன்மை செத்துவிட்டது 

வெறுப்பின் நெருப்பு பரவுகிறது

பேரழிவு பேரழிவு பேரழிவு –உலகம்

பேரழிவின் விழிம்பை நோக்கி மரண வேகத்தில்”

சமூக ஆர்வலர் அபாயச் சங்கு ஊதினார்.


ஆளுக்கு ஆள் அபாயச் சங்கு ஊதினர்

நம்பிக்கையின் சுவடு மருந்துக்கும் இல்லை

‘ மானுடம் தோற்காது’ என நான் 

மெல்ல வாய்திறந்தேன் – என்னை

எல்லோரும் ‘பைத்தியக்காரன்’ என்றனர்.


அங்கே கனத்த அமைதி சூழ்ந்தது  

ஒரு குழந்தையின் அழுகுரல் 

அமைதியைக் குலைத்தது

குழந்தையைத் தாலாட்டியவாறே

தாய் உறுதியாகச் சொன்னாள்

இது புதுயுகத்தின் பிரசவ வலி 


‘ மானுடம் தோற்காது’ 

‘மானுடம் தோற்காது’


சு.பொ.அகத்தியலிங்கம்.

29/4/2022.

உரைச் சித்திரம் : 8.

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் : 8.

 

அழும் குழந்தைக்கு ஆந்தை பாடிய தாலாட்டு !

 

 

 ‘குய்யோ முறையோ’ என்ற அலறலும் இல்லை ; வெற்றி ஆரவாரமும் இல்லை ஊர் அமைதியாய் இருந்தது .

 

பகல் பொழுது விடை பெற்று இரவின் ஆட்சி தொடங்குகிற நேரம். நம் கதாநாயகியும் அவள் தோழியும் வயல் வரப்புகளில் உற்சாகமாக பாடி ஆடி வருகின்றனர் .

 

தமிழ் சினிமா காட்சி போல் அசை போட்டுப் பாருங்கள் !

 

மெல்ல இருள் கவிய  நம் கதாநாயகி கவலையின்றி நடக்கிறாள் . ஆனால் தோழியோ இருட்டுகிறது நாம் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டுமே எனப் பதறுகிறாள் .

 

நம் கதாநாயகி கேட்கிறாள் , “ ஏன் அஞ்சுகிறாய் ? நம் மன்னர் கோதையின் ஆட்சியில் எந்தக் கூச்சலும் கவலையும் இல்லை . மன்னரிடம் நஞ்சூட்டிய வேல் இருக்கிறது .பகைவர்கள் அஞ்சி நடுங்குவார்கள் .

 

மற்ற நாடுகளில் போர் நடப்பதாகவும் , எதிரிகள் ஊரையே தீவைத்து எரிப்பதாகவும் , அதனைக் கண்டு அஞ்சி மக்கள் அலறுவதாகவும் கேள்விப்படுகிறோம் . நாம் நம் நாட்டில் அப்படிக் கேள்விப்பட்டது உண்டா ? நீதான் கில்லாடி ஆயிற்றே ! ஏதேனும் குற்றம் கண்டுபிடி பார்க்கலாம் ?”

 

 

தலைவி சவால் விட்ட பிறகு தோழி சும்மா இருப்பாளா ? சுற்றுமுற்றும் நோட்டம்விட்டபடி நடக்கிறாள் .இவர்கள் சகதி நிறைந்த ஓர் நீர்ப் பொய்கை அருகே வந்து விட்டனர் .

 

 

அந்த பொய்கையில் சிவப்பு ஆம்பல் பூத்து குலுங்குகின்றன . இக்காட்சியைப் பார்த்த பறவையினங்கள் நீரில் தீப்பிடித்து விட்டது போல் மிரண்டு புதர்களுக்குள் ஓடி ஒடுங்குகின்றன .தம் குஞ்சுகளை சிறகுகளுக்கு அடியில் வைத்து பொத்துகின்றன . இந்தபரபரப்பையும் கூச்சலையும் அலறலையும் சுட்டிக்காட்டி !  “ என்னமோ சேர நாட்டில் கோதை ஆட்சியில் கவ்வையே [அலறலே] இல்லை என்கிறாய் ! இதோ பார்.. ! ” என்கிறாள்.

 

ஊரில் போர் இல்லை .இயற்கைதான் சிரித்து மகிழ்கிறது என இருவரும் சொல்லாமல் சொல்லுகின்றனர் . முத்தொள்ளாயிரம் இக்காட்சியை நமக்கு இப்படி வரைந்து காட்டி இருக்கிறது .

 

இது சேர நாட்டுக் காட்சி .இனி சோழ நாடு செல்வோம் !

 

நம் கதாநாயகியும் அவள் தோழியும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சோலையில் நடக்கின்றனர் . கதாநாயகி தோழியிடம் போர்ச் செய்தி ஏதேனும் உண்டா எனக் கேட்கிறாள் .

 

 “ தோழி ! அதை எப்படிச் சொல்லுவேன் ? நம் சோழ மாமன்னனின் படைகள் எதிரி நாட்டில் புகுந்தது தாக்கத் தொடங்கிவிட்டதாம். பெண்களெல்லாம் சோலை , வனம் எனத் தேடித் தேடி ஒளிந்து கொண்டனராம் .இவர்களில் சூலுற்ற பெண்களும் உண்டாம். .அவர்கள் அங்கேயே குழைதையைப் பெற்றெடுக்கின்றனராம்…

 

 

அந்தக் குழந்தைகள் இலைகள் ,சருகுகள் மேல் கிடக்கின்றனவாம் . தாலாட்டுப் பாடினால் அந்த ஒலி அவர்கள் தங்கி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் .எனவே பயந்து தாலாட்டாமல் இருக்கின்றனராம் தாய்மார்கள் . நள்ளிரவில் கூகைகள் அதாவது ஆந்தைகள்  அலறுகின்றனவாம் . அதையே தாலாட்டாகக் கேட்டோ ,பயந்தோ குழந்தைகள் தூங்கி விடுகின்றனவாம் .”

 

 

இப்படி தன் மன்னன் புகழைப் பாடுவதுபோல் போரின் அவலத்தை சொல்லிவிடுகிறாள் .இதுவும் முத்தொள்ளாயிரம் பாடலே .

 

சரி ! பாண்டிய நாட்டுக் காட்சி ஒன்றைப் பார்ப்போமா ?

 

இரண்டு தோழிகள் பக்கத்து ஊருக்கு செல்லலாம் என நடக்கலாயினர் .வெயில் கொளுத்துகிறது . வெக்கை தாள முடியவில்லை .சற்று அருகில் இருக்கும் கடற்கரையை ஒட்டிய சோலையில் போய் இளைப்பாறுகின்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது .

 

எங்கே பார்த்தாலும் சிதறிக் கிடக்கும் முத்துகள் கண்ணைப் பறிக்கின்றன ? அது வெறும் காட்சியா ? தோற்ற மயக்கமா ?

 

அதோ பார்! நந்தி அதாவது சங்கு ஈன்ற இன்னும்முதிராத வெண்முத்துகள் வெயிலொளியில் மின்னுகின்றன …

 

கூடவே கமுகு எனும் பாக்கு மரத்திலிருந்து உதிர்ந்த மணிகளும் முத்துகள் போல் ஜொலிக்கின்றன …

 

புன்னை மரத்தில் இருந்து வெண் நிறத்தில் உருண்டையான மொட்டுகள் அதாவது அரும்புகள் கொட்டி கிடக்கின்றன … அதுவும் வெயிலில் முத்துகளைப் போல் மின்னுகின்றன ..

 

இவற்றையெல்லாம் பார்த்து பாண்டிய நாட்டில் முத்துகள் கொட்டிக் கிடப்பதாய் தோழிகள் சுட்டி மகிழ்கின்றனர் .

 

கொஞ்சம் இளைப்பாறிய பின் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்குச் செல்கின்றனர் .

 

அங்கே போய் , “ நாங்கள் முத்துகள் கொட்டிக் கிடக்கும் பாண்டிய நாட்டில் இருந்து வருகின்றோம்” என பெருமை பீற்றுகின்றனர் .

 

சேர ,சோழ ,பாண்டிய நாடுகள் சார்ந்து சுமார் ஒவ்வொருவருக்கும் ஒண்பதினாயிரம் வீதம் மூவருக்குமாய் 27,000 ஆயிரம் பாடல்கள் முத்தொள்ளாயிரத்தில் பாடப்பட்டதாக கூறப்பட்டாலும் இன்று நமக்கு கிடைத்திருப்பவை 105 மட்டுமே . ஆசிரியர் யாரென்றும் உறுதி செய்யப்படவில்லை.

 

சங்கப் பாடல்களுக்கு மிகவும் பிந்தைய  முத்தொள்ளாயிரத்தில் நிறைய காணாமல் போனது எப்படி ? சந்த நயமும் அழகில் நயமும் கொஞ்சும் பாடல்களை எப்படித் தொலைத்தோம் ?

 

காமச்சுவை அதிகம் மிகுந்த பாடல்கள் என்பதால் சென்ஷார் ஆகி இருக்குமோ ? அல்லது வஞ்சகப் புகழ்ச்சியாக அரசர்களைச் சாடியவைகளை ஒழித்துக் கட்டியிருப்பார்களோ ?

 

நான் ஆய்வாளனல்ல . முத்தொள்ளாயிரம் வாசிப்போம்! ரசிப்போம் !

 

[ நாம் இங்கே சுட்டிய  மூன்று பாடல்களும் பொதுவானவை மட்டுமே ! ]

 

போர்களை எப்போதும்

பெண்கள் விரும்புவதில்லை .

காதலர்கள் விரும்புவதில்லை .

மனிதர்கள் விரும்புவதில்லை .

 

காதல் செய்வீர் ! போர் எங்கும் எப்போதும் வேண்டாம் !

 

 

 

சேரன்…

 

 “அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் - புள்ளினந்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு”

 

சோழன்…

 

 “இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற

வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில்

ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன்

நாமம்பா ராட்டாதார் நாடு.”

 

 

பாண்டியன்….

 

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகை முத்த வெண்குடையான் நாடு.” 

 

காதல் செய்வீர் ! போர் எங்கும் எப்போதும் வேண்டாம் !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/4/2022.



ஏப்ரல் : 23 - இன்று , “உலக புத்தக நாள்.”

Posted by அகத்தீ Labels:

 

ஏப்ரல் : 23 - இன்று , “உலக புத்தக நாள்.”



 

புத்தகங்களின் பெருமையைப் பேசிப்பேசி ஓய்வதற்கான நாளல்ல ; மாறாக புத்தகங்களை ஆயுதங்களாக்க வேண்டிய நாள் .

அந்த ஆயுதங்கள் யார் கையில் ,யாரை நோக்கி என்பது மிகவும் அடிப்படையான கேள்வி .

 

v  உங்கள் புத்தகம் மதம் பிடிக்கத் தூண்டுகிறதா ? மனிதனாக்க உந்துகிறதா ?

 

v  உங்கள் புத்தகம் சாதி அழுக்கை சுமக்கிறதா ? சமத்துவத்தை பேசுகிறதா ?

 

v  உங்கள் புத்தகம் சுயநலக் கூட்டுக்குள் அடைக்கிறதா ? பிறருக்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தச் சொல்கிறதா ?

 

v  உங்கள் புத்தகம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பச் சொல்கிறதா ? கேள்வி கேட்கத் தூண்டுகிறதா ?

 

v  உங்கள் புத்தகம் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதா ? பூபாளம் இசைத்துப் புரட்டிப் போடுகிறதா ?

 

v  உங்கள் புத்தகம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டச் செய்கிறதா ? விசாலப்பார்வையால் மானுடசமுத்திரம் நாமென கூவச் சொல்கிறதா ?

 

v  உங்கள் மன நிம்மதிக்காகப் படிக்கிறீர்களா ? மனதைக் குடையும் கேள்விகளுக்கு விடைதேடிப் படிக்கிறீர்களா ?

 

v  உங்கள் கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை நியாப்படுத்தப் படிக்கிறீர்களா ? அநீதிகளுக்கு எதிராய் வெகுண்டெழப் படிக்கிறீர்களா ?

 

 

நீங்கள் எவ்வளவு பக்கம் படித்தீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ ? அதைவிட கற்றபின் அதற்கொப்ப நின்றீர்களா என்பதும் மிகமிக முக்கியம்.

 

நான் எல்லோரையும் போல முதலில் ரசிகனாக – வாசகனாகவே இருந்தேன் .என் தொடர் வாசிப்பு என்னை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது .நான் களப் போராளி ஆனேன் .

 

அதன் பின் என் வாசிப்பும் ,பேச்சும் ,எழுத்தும் எப்போதும் என் களப் போராட்டத்தின் இன்னொரு பக்கமாகவே மாறிப்போனது .

 

இதனாலேயே , என்னை  எழுத்தாளனாகவே கருதாத எழுத்துலக பிரம்மாக்கள் இங்கு உண்டு .எனக்கு கவலை இல்லை .

 

கடைக்கோடியில் இருக்கும் ஒரு இளைஞன் அல்லது இளைஞி என் எழுத்தைப் பார்த்து பேச்சைக் கேட்டு சிவப்பின் பக்கம் திரும்பிப் பார்த்தாலே போதும் .

 

அதுவே என் வெற்றி. அந்தத் திருப்தி எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது .இனியும் என் பயணம் அத்திக்கில்தான்…

 

நான் எழுதியவற்றில் கைவசம் உள்ளவற்றை [ சில கைவசம் இல்லை ] கூட்டிக் கணக்குப் பார்த்தாலே சுமார் மூவாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இதுவரை சிறுதும் பெரிதுமாய் நூல் வடிவம் பெற்றுள்ளன . மகிழ்ச்சி . இன்னும் வாய்ப்பு பெறாத எழுத்துகளும் நிறைய உண்டு .

 

நான் இதுவரை எத்தனை பக்கங்கள் வாசித்தேன் எத்தனை நூல்கள் வாசித்தேன் என கணக்கு வைக்கவில்லை ; அது தேவையும் இல்லை .

 

நான் வாசித்த நூல்கள் என்னுள் விளைவித்த தாக்கங்களை என் எழுத்து நெடுகக் காணலாம். என் ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாலும் ஏராளமான புத்தகங்கள் உண்டு .

 

 

நேற்றும் வாசித்தேன்

இன்றும் வாசிக்கிறேன்

சாகும் வரை வாசித்துக் கொண்டே இருப்பேன் .

 

ஏப்ரல் : 23 உலக புத்தக நாள் வாழ்த்துகள் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

23/4/2022.

 

 


இடி முழக்கமாய் எழும் இளைஞர்களுக்கு

Posted by அகத்தீ Labels:

 

இடி முழக்கமாய் எழும் இளைஞர்களுக்கு

தோழமை ஆதரவாய் உரக்கப் பேசுவீர் !

 

 


வேலை கேட்பவர்களாக அல்ல கொடுப்பவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என்கிறார் ஆளுநரி ரவி .

 

இளைஞர்கள் மீது ஏன் இவருக்கு திடீர் அக்கறை ?எப்போதும் இல்லாத அக்கறை . நீட் நீக்கத்தில் இல்லாத அக்கறை , தமிழ்நாட்டில் வாழ்வோருக்கே தமிழ்நாட்டில் வேலையில் முன்னுரிமை என்கிற சட்ட முன்வரைவில் கையெழுத்துப் போடாத அக்கறை….????

 

வேலையின்மை விஷச் சூறாவளியாய் இளைஞர்கள் கனவுகளைப் பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறது . இரண்டு கோடிப் பேருக்கு வேலைதருவதாய் சொன்ன மோடி ஏமாற்றிவிட்டார் . வீட்டுக்கு இரண்டு பேர் வேலையின்றி தவிக்கும் பேரவலம்.

 

சிறுதொழிலும் சில்லறை வியாபாரமும்தான் நிறைய பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தது .மோடியின் சீரழிந்த கொள்கைகளால் அவை நசிந்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன .

 

ஒன்றிய அரசு - கார்ப்பரேட் களவாணி கூட்டுசதியால் வேலைவாய்ப்பின் ஊற்றுக்கண் தூர்க்கப்படுகிறது .

 

வேலையில்லா இளைஞர்களைத் தூண்டிவிட்டு சாதி மத கலவரத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்து குளிர்காய மோடி அரசும் மதவெறி சக்திகளும் திட்டமிடுகிறது.

 

வேலைதர வக்கில்லை என ஒப்புக் கொள்ளும் நேர்மையின்றி நீங்களே வேலைகொடுப்பவராக மாறுங்கள் என நரி ஊளையிடுவது செய்தியை திசை திருப்பவே !

 

நாளை தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து புறப்பட்டு 3000 கி.மீ பயணித்து 11 வது நாள் மே 1 அன்று திருச்சியை அடையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பேரணிக்கு முன்னாள் வாலிபர் சங்க ஊழியன் என்கிற முறையில் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அன்பான தோழர்களே ! நண்பர்களே ! ஊடகங்கள் இதை எல்லாம் பரபரப்பு செய்தி ஆக்காது ; தலைப்புச் செய்தி ஆக்காது ; ஆடு அண்ணாமலை கக்கும் நச்சுப் பொய்களையே மாவரைத்துக் கொண்டிருக்கும் !!

 

ஆகவே ! முகநூலில்,டுவிட்டரில் , வாட்ஸ் அப்பில் ,யூ டியூப்பில் , டெலிகிராமில் , இன்ஸ்டாகிராமில் இன்ன பிற சமூக ஊடகங்களில் செயல்படும் ,தலைநீட்டும் ,முகங்காட்டும் நண்பர்களே ! தோழர்களே !நான் அன்போடு வேண்டுகிறேன். அருள்கூர்ந்து செவிமடுங்கள் ! செய்யுங்கள் !   

“ ஆம் .. ஆம்…வாலிபர் சங்க சைக்கிள் பேரணிச் செய்தியை சுமப்பதே அடுத்த பன்னீரெண்டு நாட்களும் உங்கள் பணியாகட்டும் !கடமையாகட்டும் !”

 

எல்லா மதம் சார்ந்தவர்களுக்கும்

அனைத்து சாதியினருக்கும்

எந்த மொழி பேசுபவராயினும்

எந்த பாலினமாக இருப்பினும்

எந்தக் கட்சியை அமைப்பைச் சார்ந்தவராயினும்

எதிலும் சம்மந்தப்படாமல் ஒதுங்கி நின்று புலம்புவோராயினும்

அனைவருக்கும் வேலைவாய்ப்பின் வாசல் திறக்கப்பட வேண்டும்

இடி முழக்கமாய் எழட்டும் நம் குரல் !

இந்தியாவின் விடியலுக்கு இந்த முழக்கமே சங்கொலியாகட்டும் !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

20/4/2022.

 

குறிப்பு :

 

DYFI Tamil Nadu

@DyfiTamilNadu  · Political Organization முகநூல் தளத்தில் நிறைய சுவரொட்டிகள் /வீடியோக்கள் இருக்கின்றன . உடனே அவற்றைப் பகிர்ந்து இப்போதே உங்கள் தோழமை ஆதரவைத் தொடங்கலாமே !

 

நமக்கு ஒண்ணுன்னா தெய்வத்திட்ட முறையிடலாம் தெய்வமே கலங்கி நிண்ணா…. ??? !!!!

Posted by அகத்தீ Labels:

 

நமக்கு ஒண்ணுன்னா தெய்வத்திட்ட முறையிடலாம்

தெய்வமே கலங்கி நிண்ணா…. ??? !!!!

 

எங்கே தலைதெறிக்க கூட்டமாக ஓடுகிறீர்கள் ?” – என ஓடிக்கொண்டிருந்த ஆண் பெண் கடவுள்களைப் பார்த்துக் கேட்டேன்.

 

 “ மறிக்காதே ! பேச இதுவா நேரம் ? வழியைவிடு ! மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தால் அவரிடம் போய் கேள்வி கேள் ! உம் பத்திரிகையாளர் புத்தியை எங்களிடம் காட்டாதே !” - என ஓடிக்கொண்டே சொன்னார்கள் கடவுள்கள் !

 

 “ முருகா ! தமிழ்க் கடவுளே ! நீயாவது சொல்லப்பா ?” என் இறைஞ்சினேன்.

 

 “ என் வேலையும் பிடுங்கிக் கொண்ட கூட்டம் வருது ….” என மூச்சிரைக்க சொன்னபடி முருகனும் ஓட்டம் பிடித்தார் .

 

“ என்னடா கடவுள்களுக்கு வந்த சோதனை ?” என புலம்பியபடி ஓரமாக நின்றேன் .

 

அப்போது என் காலை யாரோ செல்லக்கடி கடிப்பதுபோல் உணர்ந்தேன் . குனிந்து பார்த்தால் எலியார் . “ என்ன?” எனக் கேட்டேன். “குனி” என சைகை காட்டியது .

 

குனிந்தால் காதைக் கடித்துவிடுமோ எனப் பயந்தபடி குனிந்தேன் .காதில் ரகசியம் சொல்லிவிட்டு ஓடிச் சென்றது .

 

“ பிள்ளையாரை  ‘கலவர பிள்ளையாராக்’கிவிட்டனர் , ராம நாமத்தை  ‘கொலை கோஷ’மாக்கிவிட்டனர் , அனுமன் பஜனையை  ‘இடிப்பு முழக்க’மாக்கிவிட்டனர் , முருகன் வேலையும் களவாட முயற்சித்தனர் ,துர்க்காவையும் விட்டுவைக்கவில்லை .. ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு திருவிழாவையும் வெறுப்பை விதைக்கும் ஆட்டமாக்கிவிட்டனர் … கடவுள்கள் என்ன செய்வர் ? செய்வதறியாது ஓடிக்கொண்டிருக்கின்றனர் மீட்பரைத் தேடி …. !!!!”

 

– இதுதான் எலி காதில் சொன்ன ரகசியம் .  “உரக்க வெளியே சொல்லாதே!” என உத்தரவிட்டதால் .ரகசியமாக இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

 

 “ டேய் ! ஓடு ! ஓடு !” – என பழையபடி கூச்சல் கேட்டுத் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.

 

சுடலை மாடன் ,கருப்பசாமி , எசக்கியம்மா , மாடத்தி என ஆணும் பெண்ணுமான நாட்டுப்புற தெய்வங்கள் ஓடிக்கொண்டிருந்தன .

 

எம் தெய்வமாயிற்றே  , நான் உற்றுப் பார்த்ததும் சற்று நின்று என்னிடம் பேசிவிட்டு ஓடின …. என்ன பேசியது ?

 

“ ‘பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி’  ‘சாமி பிடிக்கிறவன்’ வறான் . எங்க வாயிலிருந்த கறி சோற புடுங்கிட்டு பொங்கலோ புண்ணாக்கோ எதையோ திணிக்க வறான் … எங்களுக்கு புரிஞ்ச மொழியில நீங்களும் பேசுவீங்க நாங்களும் பேசுவோம் … இப்ப என்னடான்னா யாருக்குமே எதுவும் புரியாத ஒரு செத்த மொழி பேசுறான் …. சாமி பிடிக்கிறவண்ட்ட ஜாக்கிரத…” என்று சொல்லியவாறே ஓட்டம் பிடித்தன .

 

சாமி பிடிக்கிறவன் ஜாக்கிரத

சாமி பிடிக்கிறவன் ஜாக்கிரத

சாமி பிடிக்கிறவன் ஜாக்கிரத…

 

சுபொஅ. 19/4/2022.

 

 

நூலாம்படை என அதற்கு பெயர் வைத்தது யாரோ ?

Posted by அகத்தீ Labels:

 

நூலாம்படை என அதற்கு பெயர் வைத்தது யாரோ ?

 

 


கடந்த சில நாட்களாக என் எல்லா புத்தகங்களையும் பரணில் இருந்தும் ஷெல்பிலிருந்தும் இறக்கி - அடைந்து கிடந்த தூசிகளை ஒட்டடைகளை அல்லது நூலாம்படைகளைத் தட்டித் துடைத்து - வகை ,தேவை வாரியாக அடுக்கி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது .

 

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் , அவில் மாத்திரை போட்டுக்கொண்டும் தும்மலும் சளியும் . என்ன செய்வது ? தவிர்க்க முடியாதுதானே !

 

சுமார் 600 புத்தகங்களுக்கு மேல் மூட்டை கட்டி ஓசூர் ,கிருஷ்ணகிரி கட்சி நூலகங்களுக்கும் வேறு நூலகங்களுக்குமாய் நேற்று [17/4/2022] அனுப்பி ஆயிற்று .அவற்றை தக்க விதத்தில் பிரித்து வழங்கிட அறிவியல் இயக்கத் தோழர்கள் சிவகுமாரும் ,சேதுராமனும் பொறுப்பேற்று பெற்றுச் சென்றுள்ளனர் . மகிழ்ச்சி ! அவர்களுக்கு நன்றி !

 

பல வருடங்களுக்கு முன் வடபழனி பகுதிக்குழு செயலாளர் தோழர் ராமச்சந்திரன் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பெற்றுச் சென்றார் .

 

அதன் பின் ஒரு முறை சுமார் எழுநூறு புத்தகங்களை திருவள்ளூர் கட்சி மாவட்ட நூலகத்துக்காக தோழர் ராஜேந்திரன் பெற்றுச் சென்றார் .

 

மூன்றாவது முறையாக நேற்று சுமார் 600 புத்தகங்களுக்கு மேல் வழங்கிவிட்டேன் .

 

இன்னும் சுமார் இருநூற்றி ஐம்பது புத்தகங்கள் மட்டுமே என் புத்தக அலமாரியில்….

 

இன்னொரு முறை இப்படி புத்தகங்கள் வழங்க காலம் வாய்ப்பு வழங்குமோ ? என் சந்ததியர் மிச்சம் மீதி இருப்பதை அள்ளிக் கொடுப்பார்களோ ? எல்லாம் காலத்தின் கையில்…

 

புத்தகங்களை வாங்குவதைவிட மிகச் சிரமம் அதைத் தொடர்ந்து பராமரிப்பதே ! தூசும் நூலாம்படையும் மிகப்பெரிய சவால் .இடப் பிரச்சனை இன்னொன்று .

 

புத்தகங்களால் செல்லச்சண்டை வராத வீடு ஒன்று உண்டோ ?

 

ஒரே ஒரு சந்தேகம் :

நூலாம்படை என அதற்கு பெயர் வைத்தது யாரோ ? ஏனோ ?

 

 

சுபொஅ. 18/4/2022.

அந்த வரிகள் சிறாருக்கு மட்டுமா ?

Posted by அகத்தீ Labels:

 

அந்த வரிகள் சிறாருக்கு மட்டுமா ?

 


அதுவரை அவை அனைத்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தன .வாத்துகளும் மற்ற சிறு பறவைகளும் நதி நீரில் நீந்தி விளையாடி வயிறு நிறைய உண்டு வசித்தன . விரைவில் வரப்போகும் துன்பத்தைப் பற்றி பெரிய பறவைகளுக்குத் தெரியும் .சீக்கிரமே குளிர் காலம் வந்துவிடும் ; குளிரின் தீவிரத்தால் நதி நீர் முழுவதும் உறைந்து பனிக்கட்டியாகிவிடும் ;உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் வெகுதொலைவுக்குப் பறந்து செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவற்றிற்கு அழுத்தமாய் நினைவிருக்கிறது.”

 

 “ ஒரு விதத்தில் அது சாகசப் பயணம்தான் .நதியிலிருந்து நீண்ட நெடுந்தூரத்தில் மிதமான குளிர் நிலவும் இடம் ஒன்று இருக்கிறது . எல்லா பறவைகளும் கூட்டமாக அங்குதான் பறந்து செல்ல வேண்டும் . அந்தப் பயணத்தின் முக்கியத்துவம் புதிய தலைமுறைப் பறவைகளுக்குத் தெரியாது .ஆனால் பெரிய பறவைகள் மவுனமாக இருந்தன . மகிழ்ச்சியாக இருப்பது போன்று காட்டிக்கொண்டன .சவால்கள் நிறைந்த ஆபத்தான பயணத்தைப் பற்றிச் சொல்லி சிறிய பறவைகளுக்கு அச்சமூட்ட வேண்டாம் என்று அவை நினைத்திருக்க வேண்டும்.”

 

“ சில பறவைகளுக்கு அந்த நெடும்பயணம் அவ்வளவு கஷ்டமாக இருக்காது .வலிமை வாய்ந்த சிறகுகளை வீசி  எவ்வளவு நேரம் வேண்டுமானலும் அவற்றால் சோர்வின்றி பறக்க முடியும் .ஆனால் பலவீனமானப் பறவைகளால் அப்படிச் செய்ய முடியாது . தாள முடியாத வலியில் சிறகுகளும் உடலும் துவண்டு போய் பல பறவைகள் பாதியிலேயே செத்துவிழும் . சிறு பறவைகளைத் தின்னக் காத்திருக்கும் கொடூரமான பெரிய பறவைகளும் உண்டு . அவை கூட்டமாக வந்து சிறிய பறவைகளைக் கொத்திக்கொண்டு போய்விடும். வயதான பறவைகள் ,குஞ்சுப் பறவைகள் , நோயாளிப் பறவைகள் ஆகியவற்றின் நிலைதான் மிகவும் கஷ்டம். குறித்த இடத்திற்கு சென்றுவிடுவோம்  என்ற எந்த உறுதியும் இல்லாமல்தான் அவை பயணைத்தைத் தொடங்கும் .பறந்து பறந்து களைப்படையும் பறவைக்கு எந்தப் பறவையாலும் உதவி செய்ய முடியாது . களைப்படைந்த பறவை கீழே விழுவதைப் பார்த்துக்கொண்டே பறப்பதைத் தவிர வேறு வழியில்லை . பயணத்தின் போது ஓய்வெடுக்கவோ வந்த வழி திரும்பிச் செல்லவோ அனுமதி இல்லை .எந்தப் பறவையாவது அப்படிச் செய்ய முற்பட்டால் மற்ற பறவைகள் அதைக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட்டு சென்றுவிடும். ஒதுக்கப்பட்ட அந்தப் பறவை தனியாகப் பயணத்தைத் தொடர்வது என்பது பேராபத்தான காரியமாகும்.”

 

“ அழகான அம்மா” என்கிற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்து ஐம்பது ரஷ்ய சிறார் கதைகளை யூமாவாசுகி தொகுத்திருக்கிறார் . நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு . 352 பக்கங்கள் .ரூ.290 /விலை .

 

இந்நூலில் “ சிற்கொடிந்த வாத்துக் குஞ்சு” என்கிற திமித்ரி மாமின் சிபிரியாக் எழுதிய கதையின் முதல் மூன்று பத்திகளையே இங்கு தொகுத்துத் தந்துள்ளேன் .

 

அந்த வரிகள் சிறாருக்கு மட்டுமா ? இல்லை .இல்லை . இன்றைய இந்தியாவின் அரசியல் சவாலுக்கும் உருவகமாய்ப் பொருந்திப் போகின்றதே !

 

சு.பொ.அகத்தியலிங்கம். 16/4/2022.

உரைச் சித்திரம் – 7 விலங்குகளிடமும் நாம் கற்க பாடம் உண்டு !

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் – 7

 

விலங்குகளிடமும் நாம் கற்க பாடம் உண்டு !

 


 

 நீ என்ன மனுஷனா ? மிருகமா ? என்னை மிருகமா மாத்திராதே! இப்படி பலவிதமாய் நாம் கடிந்து கொள்வதுண்டு .

 

விலங்குகள் தாழ்ந்தவை என்பது நம் பொது புத்தி . ஆயின் உண்மை நேர் எதிரானது . நமக்கு விலங்குகள் சொல்லும் பாடம் நிறைய இருக்கு , அதைக் கற்போமா ?

 

ஒரு குட்டிக் கதையோடு தொடங்கலாமே !

 

அடர்ந்த ஒரு பெருங்காடு . சிங்கம் ,புலி போன்ற விலங்குகள் அதிகம் உலவும் அடர் வனம் அது .

 

அந்தக் காட்டில் ஒரு பெரிய வேங்கை மரம் . செழித்து ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பி நிற்கிறது . பொதுவாய் காட்டு விலங்குகள் வெயிலுக்கு அம்மர நிழலில் படுத்துறங்கி ஓய்வெடுத்துச் செல்லும்.

 

ஒரு காட்டுப் பசு அங்கே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது . காட்டில் மேய்ந்து நிறைய தின்றிருக்கிறது . அதன் கொம்புகள் வளைந்து பார்ப்பதற்கு முரட்டுத் தோற்றத்தோடு மிரட்டுகிறது .

 

அந்தப் பசு அண்மையில்தான் கன்றுக்குட்டியை ஈன்றிருக்கிறது . அதன் மடி பால்மிகுந்து சுரந்து பொழியத் தயாராய் இருக்கிறது. கன்றுக்குட்டிகள் பல பால்குடிக்கலாம் போலிருக்கிறது .அவ்வளவு பெருத்து பால்பிதுங்கி வழிகிறது .

 

அந்த மரத்தில் ஓர் குரங்குக் கூட்டம் அங்கும் இங்கும் தாவித் தாவி கூச்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது . மந்தி என பெண் குரங்கையும் வானரம் என ஆண் குரங்கையும் அழைப்பது தமிழ் இலக்கிய மரபு.

 

ஓர் தாய் மந்திஉஷ் என்ற சப்தத்துடன் வாயில் விரலை வைத்து சைகை காட்டுகிறது .

 

பசுவின் தூக்கத்தை கெடுக்காதே என்கிற தாய் மந்தியின் நல்லெண்ண சமிக்ஞை புரிந்து கொண்டு எல்லா குரங்குகளும் கட்டுப்பட்டு அமைதி காக்கின்றன .

 

சைகை காட்டிய அந்தத் தாய்க்குரங்கு ,இன்னும் இரைதேடி உண்ணக் கற்றுக்கொள்ளாத தன் பிஞ்சுக் குட்டியைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்குகிறது .

 

பசுவருகே சென்று பசுவின் தூக்கம் கலையாமல் மெல்ல மடியை பற்றி பாலைப் பீச்சுகிறது ; அந்தப் பாலைக் குடிக்க வசதியாக குட்டியின் கையை குவியச் செய்து அதில் பீச்சுகிறது .குட்டி பசியாறுகிறது .

 

பொதும்பில்கிழார் என்னும் சங்கப் புலவர், நற்றிணை [57வது பாடலில்] உயிர் ஓவியம் போல இதனைத் தீட்டிக் காட்டி இருக்கிறார் .

 

பொதுவாய் கர்ப்பமான விலங்குகளையும் குட்டி ஈன்ற விலங்குகளையும் இதர விலங்குகள் தொந்தரவு செய்வதில்லை . கர்ப்பமான பசு எனில் முகர்ந்து பார்த்துவிட்டு காளைகூட நகர்ந்து விடும் .

 

குரங்குக்கூட்டம்கூட ஒரு தாய்க் குரங்கின் சொல்லுக்கு கட்டுப்படுகிறது .

 

விலங்குகளிடையே காணப்படும் இவ்வுயரிய பண்பாட்டை வியந்துரைத்த புலவர் சொல்லும் செய்தி என்ன ?

 

சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் உடைய திணைப் பயிர்கள் பருவப் பெண்போல் தயாராய் குதிர்ந்து நிற்கிறது .

 

தலைவா ! எம் தோழியின் நிலையும் அந்த திணைப் பயிர் போன்றதுதான் .அந்த பருவ தாகம் அழியும் முன் நீ வந்து அவளை மணமுடித்துச் செல் ! அந்த மந்தியானது பசுவின் தூக்கம் கலைக்காமல் தன் குட்டியின் பசியைப் போக்கியது போல ,நீயும் பக்குவமாய் வந்து என் தோழியை மண முடித்து - பருவ தாகம் தீர்த்து காப்பாத்து ! .

 

ஓர் பருவ தாகத்தை பாடும் பாடலில் விலங்குகளின் மேன்மைப் பண்பை வரைந்து காட்டியிருக்கும் புலவர் பொதும்பில்கிழாரை நமக்கு அறிமுகம் செய்கிறது நற்றிணை .

 

இன்னொரு கதைக்குச் செல்வோம் !

 

துணியை சர்ரென கிழிப்பது போல இருண்ட வானத்தைக் கிழித்து மின்னல் வெட்டுகிறது . இரவு வேளை ,மழை கொட்டித் தீர்க்கிறது .குளிரில் உடல் வெடவெடவென நடுங்குகிறது .

 

கரடி ஒன்று பசி தாங்காமல் கறையான் புற்றைத் தோண்டுகிறது .கொல்லன் பட்டறையில் தீப்பொறி பறப்பதுபோல் ஈசல்கள் பறக்கின்றன .

 

நம் கதாநாயகன் அவ்வழியே வருகிறான் .வழியோ மிகக் கொடூரமானது . நம் கதாநாயகன் ஆற்றைக் கடந்தாக வேண்டும் .

ஆற்றிலோ கொடும் முதலைகள்  நிறைய உண்டு . மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது .படகையும் வெள்ளம் அலைக்கழிக்கிறது .மூங்கிலைத் துடுப்பாக போட முயன்றால் ,மூங்கிலும் வெள்ளத்தில் தடுமாறுகிறது . அத்தனையும் எதிர்கொண்டு அவன் வருகிறான்.

 

அந்த கடும் இருட்டில் அந்த அடர் வனத்தில் நிறைமாதக் கர்ப்பமாய் இருக்கும் தன் இணையான பெண்புலிக்காக ஆண்புலி இரை தேடிச் சென்றது .

 

யானையை பின்னாலிருந்து தாக்கிக் கொன்ற புலி, அதனை தன் இணைக்கு இரையாக இழுத்து வருகிறது . இதனை நம் நாயகன் பார்க்கிறான் .

 

எப்படித் தெரியுமா ? நாகப்பாம்பு உமிழ்ந்த மாணிக்கக் கற்களின் பேரொளியில் காண்கிறான் .

 

காட்டில் ஓர் மலையில் பிளவு உண்டாகி இருக்கிறது ; அந்த இடுக்கலானவாளின் கூர்மை போன்ற கற்கள் நிரம்பிய கடுமையான வழியில் வருகிறான். எதற்காக வருகிறான் ?

 

தலைவிக்கு அருள் புரியும் எண்ணத்தோடு வந்தானாம் அவன் .

 

 அவனும் கெட்டவனில்லை ; அவனுக்கு உன்னை முழுமையாகத் தந்த நீயும் கெட்டவளில்லை ; இடையில் மாட்டிக்கொண்ட நான் தான் பிழை செய்கிறோனோ ?” என தோழி அரற்றுவதாய் சங்கப் புலவர் எருமை வெளியனார் மகனார் கடலனார் அகநானூற்றில் பாடுகிறார் .

 

இதில் கொஞ்சம் மிகைக் கற்பனை உண்டு . நாகப்பாம்பு உமிழ்வதே மாணிக்கக் கல் என்கிற ஓர் கட்டுக்கதையும் செருகப்பட்டிருக்கும் . ஆயினும் கர்ப்பிணி புலிக்கு இணைப்புலி இரைதேடி கொடுப்பது விலங்கின் உயர் பண்பாகும்.

 

இந்த இரண்டு பாடலுமே காதல் வாழ்வு தொடர்புடையதே . இதில் விலங்கின் மேன்மையைச் சுட்டி மனிதனுக்கு அறிவுறுத்தி இருப்பது அற்புதம் .

 

 விலங்கிடமிருந்து பாடம் கற்பது இழிந்தன்று ; நன்றே . தேவையே ! விலங்கென ஒதுக்காதே அங்கும் உனக்கொரு பாடம் இருக்கும் !!!!

 

 

 “தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்

5

கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! “

 

                    (நற்றிணை- 57)

 

 

 

 இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை

இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
'
அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,

10ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்

 

வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின

 

ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.”

 

 [ அகநானூறு : 72. ] 

 

 

விலங்குகளிடமும் நாம் கற்க பாடம் உண்டு !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

9/4/2022.