உரைச் சித்திரம் : 8.

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் : 8.

 

அழும் குழந்தைக்கு ஆந்தை பாடிய தாலாட்டு !

 

 

 ‘குய்யோ முறையோ’ என்ற அலறலும் இல்லை ; வெற்றி ஆரவாரமும் இல்லை ஊர் அமைதியாய் இருந்தது .

 

பகல் பொழுது விடை பெற்று இரவின் ஆட்சி தொடங்குகிற நேரம். நம் கதாநாயகியும் அவள் தோழியும் வயல் வரப்புகளில் உற்சாகமாக பாடி ஆடி வருகின்றனர் .

 

தமிழ் சினிமா காட்சி போல் அசை போட்டுப் பாருங்கள் !

 

மெல்ல இருள் கவிய  நம் கதாநாயகி கவலையின்றி நடக்கிறாள் . ஆனால் தோழியோ இருட்டுகிறது நாம் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டுமே எனப் பதறுகிறாள் .

 

நம் கதாநாயகி கேட்கிறாள் , “ ஏன் அஞ்சுகிறாய் ? நம் மன்னர் கோதையின் ஆட்சியில் எந்தக் கூச்சலும் கவலையும் இல்லை . மன்னரிடம் நஞ்சூட்டிய வேல் இருக்கிறது .பகைவர்கள் அஞ்சி நடுங்குவார்கள் .

 

மற்ற நாடுகளில் போர் நடப்பதாகவும் , எதிரிகள் ஊரையே தீவைத்து எரிப்பதாகவும் , அதனைக் கண்டு அஞ்சி மக்கள் அலறுவதாகவும் கேள்விப்படுகிறோம் . நாம் நம் நாட்டில் அப்படிக் கேள்விப்பட்டது உண்டா ? நீதான் கில்லாடி ஆயிற்றே ! ஏதேனும் குற்றம் கண்டுபிடி பார்க்கலாம் ?”

 

 

தலைவி சவால் விட்ட பிறகு தோழி சும்மா இருப்பாளா ? சுற்றுமுற்றும் நோட்டம்விட்டபடி நடக்கிறாள் .இவர்கள் சகதி நிறைந்த ஓர் நீர்ப் பொய்கை அருகே வந்து விட்டனர் .

 

 

அந்த பொய்கையில் சிவப்பு ஆம்பல் பூத்து குலுங்குகின்றன . இக்காட்சியைப் பார்த்த பறவையினங்கள் நீரில் தீப்பிடித்து விட்டது போல் மிரண்டு புதர்களுக்குள் ஓடி ஒடுங்குகின்றன .தம் குஞ்சுகளை சிறகுகளுக்கு அடியில் வைத்து பொத்துகின்றன . இந்தபரபரப்பையும் கூச்சலையும் அலறலையும் சுட்டிக்காட்டி !  “ என்னமோ சேர நாட்டில் கோதை ஆட்சியில் கவ்வையே [அலறலே] இல்லை என்கிறாய் ! இதோ பார்.. ! ” என்கிறாள்.

 

ஊரில் போர் இல்லை .இயற்கைதான் சிரித்து மகிழ்கிறது என இருவரும் சொல்லாமல் சொல்லுகின்றனர் . முத்தொள்ளாயிரம் இக்காட்சியை நமக்கு இப்படி வரைந்து காட்டி இருக்கிறது .

 

இது சேர நாட்டுக் காட்சி .இனி சோழ நாடு செல்வோம் !

 

நம் கதாநாயகியும் அவள் தோழியும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சோலையில் நடக்கின்றனர் . கதாநாயகி தோழியிடம் போர்ச் செய்தி ஏதேனும் உண்டா எனக் கேட்கிறாள் .

 

 “ தோழி ! அதை எப்படிச் சொல்லுவேன் ? நம் சோழ மாமன்னனின் படைகள் எதிரி நாட்டில் புகுந்தது தாக்கத் தொடங்கிவிட்டதாம். பெண்களெல்லாம் சோலை , வனம் எனத் தேடித் தேடி ஒளிந்து கொண்டனராம் .இவர்களில் சூலுற்ற பெண்களும் உண்டாம். .அவர்கள் அங்கேயே குழைதையைப் பெற்றெடுக்கின்றனராம்…

 

 

அந்தக் குழந்தைகள் இலைகள் ,சருகுகள் மேல் கிடக்கின்றனவாம் . தாலாட்டுப் பாடினால் அந்த ஒலி அவர்கள் தங்கி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் .எனவே பயந்து தாலாட்டாமல் இருக்கின்றனராம் தாய்மார்கள் . நள்ளிரவில் கூகைகள் அதாவது ஆந்தைகள்  அலறுகின்றனவாம் . அதையே தாலாட்டாகக் கேட்டோ ,பயந்தோ குழந்தைகள் தூங்கி விடுகின்றனவாம் .”

 

 

இப்படி தன் மன்னன் புகழைப் பாடுவதுபோல் போரின் அவலத்தை சொல்லிவிடுகிறாள் .இதுவும் முத்தொள்ளாயிரம் பாடலே .

 

சரி ! பாண்டிய நாட்டுக் காட்சி ஒன்றைப் பார்ப்போமா ?

 

இரண்டு தோழிகள் பக்கத்து ஊருக்கு செல்லலாம் என நடக்கலாயினர் .வெயில் கொளுத்துகிறது . வெக்கை தாள முடியவில்லை .சற்று அருகில் இருக்கும் கடற்கரையை ஒட்டிய சோலையில் போய் இளைப்பாறுகின்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது .

 

எங்கே பார்த்தாலும் சிதறிக் கிடக்கும் முத்துகள் கண்ணைப் பறிக்கின்றன ? அது வெறும் காட்சியா ? தோற்ற மயக்கமா ?

 

அதோ பார்! நந்தி அதாவது சங்கு ஈன்ற இன்னும்முதிராத வெண்முத்துகள் வெயிலொளியில் மின்னுகின்றன …

 

கூடவே கமுகு எனும் பாக்கு மரத்திலிருந்து உதிர்ந்த மணிகளும் முத்துகள் போல் ஜொலிக்கின்றன …

 

புன்னை மரத்தில் இருந்து வெண் நிறத்தில் உருண்டையான மொட்டுகள் அதாவது அரும்புகள் கொட்டி கிடக்கின்றன … அதுவும் வெயிலில் முத்துகளைப் போல் மின்னுகின்றன ..

 

இவற்றையெல்லாம் பார்த்து பாண்டிய நாட்டில் முத்துகள் கொட்டிக் கிடப்பதாய் தோழிகள் சுட்டி மகிழ்கின்றனர் .

 

கொஞ்சம் இளைப்பாறிய பின் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்குச் செல்கின்றனர் .

 

அங்கே போய் , “ நாங்கள் முத்துகள் கொட்டிக் கிடக்கும் பாண்டிய நாட்டில் இருந்து வருகின்றோம்” என பெருமை பீற்றுகின்றனர் .

 

சேர ,சோழ ,பாண்டிய நாடுகள் சார்ந்து சுமார் ஒவ்வொருவருக்கும் ஒண்பதினாயிரம் வீதம் மூவருக்குமாய் 27,000 ஆயிரம் பாடல்கள் முத்தொள்ளாயிரத்தில் பாடப்பட்டதாக கூறப்பட்டாலும் இன்று நமக்கு கிடைத்திருப்பவை 105 மட்டுமே . ஆசிரியர் யாரென்றும் உறுதி செய்யப்படவில்லை.

 

சங்கப் பாடல்களுக்கு மிகவும் பிந்தைய  முத்தொள்ளாயிரத்தில் நிறைய காணாமல் போனது எப்படி ? சந்த நயமும் அழகில் நயமும் கொஞ்சும் பாடல்களை எப்படித் தொலைத்தோம் ?

 

காமச்சுவை அதிகம் மிகுந்த பாடல்கள் என்பதால் சென்ஷார் ஆகி இருக்குமோ ? அல்லது வஞ்சகப் புகழ்ச்சியாக அரசர்களைச் சாடியவைகளை ஒழித்துக் கட்டியிருப்பார்களோ ?

 

நான் ஆய்வாளனல்ல . முத்தொள்ளாயிரம் வாசிப்போம்! ரசிப்போம் !

 

[ நாம் இங்கே சுட்டிய  மூன்று பாடல்களும் பொதுவானவை மட்டுமே ! ]

 

போர்களை எப்போதும்

பெண்கள் விரும்புவதில்லை .

காதலர்கள் விரும்புவதில்லை .

மனிதர்கள் விரும்புவதில்லை .

 

காதல் செய்வீர் ! போர் எங்கும் எப்போதும் வேண்டாம் !

 

 

 

சேரன்…

 

 “அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் - புள்ளினந்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு”

 

சோழன்…

 

 “இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற

வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில்

ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன்

நாமம்பா ராட்டாதார் நாடு.”

 

 

பாண்டியன்….

 

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகை முத்த வெண்குடையான் நாடு.” 

 

காதல் செய்வீர் ! போர் எங்கும் எப்போதும் வேண்டாம் !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/4/2022.



0 comments :

Post a Comment