உரைச் சித்திரம் – 7 விலங்குகளிடமும் நாம் கற்க பாடம் உண்டு !

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் – 7

 

விலங்குகளிடமும் நாம் கற்க பாடம் உண்டு !

 


 

 நீ என்ன மனுஷனா ? மிருகமா ? என்னை மிருகமா மாத்திராதே! இப்படி பலவிதமாய் நாம் கடிந்து கொள்வதுண்டு .

 

விலங்குகள் தாழ்ந்தவை என்பது நம் பொது புத்தி . ஆயின் உண்மை நேர் எதிரானது . நமக்கு விலங்குகள் சொல்லும் பாடம் நிறைய இருக்கு , அதைக் கற்போமா ?

 

ஒரு குட்டிக் கதையோடு தொடங்கலாமே !

 

அடர்ந்த ஒரு பெருங்காடு . சிங்கம் ,புலி போன்ற விலங்குகள் அதிகம் உலவும் அடர் வனம் அது .

 

அந்தக் காட்டில் ஒரு பெரிய வேங்கை மரம் . செழித்து ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பி நிற்கிறது . பொதுவாய் காட்டு விலங்குகள் வெயிலுக்கு அம்மர நிழலில் படுத்துறங்கி ஓய்வெடுத்துச் செல்லும்.

 

ஒரு காட்டுப் பசு அங்கே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது . காட்டில் மேய்ந்து நிறைய தின்றிருக்கிறது . அதன் கொம்புகள் வளைந்து பார்ப்பதற்கு முரட்டுத் தோற்றத்தோடு மிரட்டுகிறது .

 

அந்தப் பசு அண்மையில்தான் கன்றுக்குட்டியை ஈன்றிருக்கிறது . அதன் மடி பால்மிகுந்து சுரந்து பொழியத் தயாராய் இருக்கிறது. கன்றுக்குட்டிகள் பல பால்குடிக்கலாம் போலிருக்கிறது .அவ்வளவு பெருத்து பால்பிதுங்கி வழிகிறது .

 

அந்த மரத்தில் ஓர் குரங்குக் கூட்டம் அங்கும் இங்கும் தாவித் தாவி கூச்சலிட்டு ஆடிக் கொண்டிருக்கிறது . மந்தி என பெண் குரங்கையும் வானரம் என ஆண் குரங்கையும் அழைப்பது தமிழ் இலக்கிய மரபு.

 

ஓர் தாய் மந்திஉஷ் என்ற சப்தத்துடன் வாயில் விரலை வைத்து சைகை காட்டுகிறது .

 

பசுவின் தூக்கத்தை கெடுக்காதே என்கிற தாய் மந்தியின் நல்லெண்ண சமிக்ஞை புரிந்து கொண்டு எல்லா குரங்குகளும் கட்டுப்பட்டு அமைதி காக்கின்றன .

 

சைகை காட்டிய அந்தத் தாய்க்குரங்கு ,இன்னும் இரைதேடி உண்ணக் கற்றுக்கொள்ளாத தன் பிஞ்சுக் குட்டியைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்குகிறது .

 

பசுவருகே சென்று பசுவின் தூக்கம் கலையாமல் மெல்ல மடியை பற்றி பாலைப் பீச்சுகிறது ; அந்தப் பாலைக் குடிக்க வசதியாக குட்டியின் கையை குவியச் செய்து அதில் பீச்சுகிறது .குட்டி பசியாறுகிறது .

 

பொதும்பில்கிழார் என்னும் சங்கப் புலவர், நற்றிணை [57வது பாடலில்] உயிர் ஓவியம் போல இதனைத் தீட்டிக் காட்டி இருக்கிறார் .

 

பொதுவாய் கர்ப்பமான விலங்குகளையும் குட்டி ஈன்ற விலங்குகளையும் இதர விலங்குகள் தொந்தரவு செய்வதில்லை . கர்ப்பமான பசு எனில் முகர்ந்து பார்த்துவிட்டு காளைகூட நகர்ந்து விடும் .

 

குரங்குக்கூட்டம்கூட ஒரு தாய்க் குரங்கின் சொல்லுக்கு கட்டுப்படுகிறது .

 

விலங்குகளிடையே காணப்படும் இவ்வுயரிய பண்பாட்டை வியந்துரைத்த புலவர் சொல்லும் செய்தி என்ன ?

 

சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் உடைய திணைப் பயிர்கள் பருவப் பெண்போல் தயாராய் குதிர்ந்து நிற்கிறது .

 

தலைவா ! எம் தோழியின் நிலையும் அந்த திணைப் பயிர் போன்றதுதான் .அந்த பருவ தாகம் அழியும் முன் நீ வந்து அவளை மணமுடித்துச் செல் ! அந்த மந்தியானது பசுவின் தூக்கம் கலைக்காமல் தன் குட்டியின் பசியைப் போக்கியது போல ,நீயும் பக்குவமாய் வந்து என் தோழியை மண முடித்து - பருவ தாகம் தீர்த்து காப்பாத்து ! .

 

ஓர் பருவ தாகத்தை பாடும் பாடலில் விலங்குகளின் மேன்மைப் பண்பை வரைந்து காட்டியிருக்கும் புலவர் பொதும்பில்கிழாரை நமக்கு அறிமுகம் செய்கிறது நற்றிணை .

 

இன்னொரு கதைக்குச் செல்வோம் !

 

துணியை சர்ரென கிழிப்பது போல இருண்ட வானத்தைக் கிழித்து மின்னல் வெட்டுகிறது . இரவு வேளை ,மழை கொட்டித் தீர்க்கிறது .குளிரில் உடல் வெடவெடவென நடுங்குகிறது .

 

கரடி ஒன்று பசி தாங்காமல் கறையான் புற்றைத் தோண்டுகிறது .கொல்லன் பட்டறையில் தீப்பொறி பறப்பதுபோல் ஈசல்கள் பறக்கின்றன .

 

நம் கதாநாயகன் அவ்வழியே வருகிறான் .வழியோ மிகக் கொடூரமானது . நம் கதாநாயகன் ஆற்றைக் கடந்தாக வேண்டும் .

ஆற்றிலோ கொடும் முதலைகள்  நிறைய உண்டு . மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது .படகையும் வெள்ளம் அலைக்கழிக்கிறது .மூங்கிலைத் துடுப்பாக போட முயன்றால் ,மூங்கிலும் வெள்ளத்தில் தடுமாறுகிறது . அத்தனையும் எதிர்கொண்டு அவன் வருகிறான்.

 

அந்த கடும் இருட்டில் அந்த அடர் வனத்தில் நிறைமாதக் கர்ப்பமாய் இருக்கும் தன் இணையான பெண்புலிக்காக ஆண்புலி இரை தேடிச் சென்றது .

 

யானையை பின்னாலிருந்து தாக்கிக் கொன்ற புலி, அதனை தன் இணைக்கு இரையாக இழுத்து வருகிறது . இதனை நம் நாயகன் பார்க்கிறான் .

 

எப்படித் தெரியுமா ? நாகப்பாம்பு உமிழ்ந்த மாணிக்கக் கற்களின் பேரொளியில் காண்கிறான் .

 

காட்டில் ஓர் மலையில் பிளவு உண்டாகி இருக்கிறது ; அந்த இடுக்கலானவாளின் கூர்மை போன்ற கற்கள் நிரம்பிய கடுமையான வழியில் வருகிறான். எதற்காக வருகிறான் ?

 

தலைவிக்கு அருள் புரியும் எண்ணத்தோடு வந்தானாம் அவன் .

 

 அவனும் கெட்டவனில்லை ; அவனுக்கு உன்னை முழுமையாகத் தந்த நீயும் கெட்டவளில்லை ; இடையில் மாட்டிக்கொண்ட நான் தான் பிழை செய்கிறோனோ ?” என தோழி அரற்றுவதாய் சங்கப் புலவர் எருமை வெளியனார் மகனார் கடலனார் அகநானூற்றில் பாடுகிறார் .

 

இதில் கொஞ்சம் மிகைக் கற்பனை உண்டு . நாகப்பாம்பு உமிழ்வதே மாணிக்கக் கல் என்கிற ஓர் கட்டுக்கதையும் செருகப்பட்டிருக்கும் . ஆயினும் கர்ப்பிணி புலிக்கு இணைப்புலி இரைதேடி கொடுப்பது விலங்கின் உயர் பண்பாகும்.

 

இந்த இரண்டு பாடலுமே காதல் வாழ்வு தொடர்புடையதே . இதில் விலங்கின் மேன்மையைச் சுட்டி மனிதனுக்கு அறிவுறுத்தி இருப்பது அற்புதம் .

 

 விலங்கிடமிருந்து பாடம் கற்பது இழிந்தன்று ; நன்றே . தேவையே ! விலங்கென ஒதுக்காதே அங்கும் உனக்கொரு பாடம் இருக்கும் !!!!

 

 

 “தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்

5

கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! “

 

                    (நற்றிணை- 57)

 

 

 

 இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை

இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
'
அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,

10ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்

 

வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின

 

ஆனா அரும் படர் செய்த
யானே, தோழி! தவறு உடையேனே.”

 

 [ அகநானூறு : 72. ] 

 

 

விலங்குகளிடமும் நாம் கற்க பாடம் உண்டு !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

9/4/2022.

 

 

 




 


0 comments :

Post a Comment