குடும்பத்திலும் நாட்டிலும்

Posted by அகத்தீ Labels:

 


குடும்பத்திலும் நாட்டிலும்





 

 

எப்போதும்

தலைவர் சர்வாதிகாரியாகவே இருக்கிறார்

கடினமாகவோ மென்மையாகவோ!

 

நிரந்தர இரண்டாமிடத்தவர்

புழுங்கிக் கொண்டே இருக்கிறார்

கூடுதலாகவோ குறைவாகவோ!

 

மூத்த குடிமக்கள்

புறக்கணிப்பதாய் புலம்பித்தீர்க்கிறார்கள்

பகீரங்கமாகவோ மனதிற்குள்ளோ !

 

இளையதலைமுறை

கோபத்தோடேதான் மோதுகிறார்கள்

மூத்தோர் வழிவிடவில்லை என்றே !

 

குழந்தைகளைக்

கொண்டாடுவதாய் பேசிக்கொண்டே

கூண்டுக்கிளி ஆக்கவே முயல்கிறார்கள் !

பாசம் வேஷம் நீதி அநீதி

விசுவாசம் துரோகம் லாபம் நட்டம்

ஏற்றம் இறக்கம் நட்பு பகை

 

குடும்பத்திலும் நாட்டிலும்

எல்லாம் இப்படித்தான்

ஜனநாயகம் பேச்சோடுதான்!

 

போராடித்தான்

எங்கும் எல்லோரும்

மூச்சுவிட முடிகிறது !

 

சுபொஅ.


போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு

Posted by அகத்தீ Labels:

 

போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு


போகி நெருப்பை ஊதிப் பெரிதாக்கு - கொடும்
வேளாண் சட்டங்களைக் கொளுத்திக் கரியாக்கு !
திருதராஷ்டிர ஆலிங்கனம் மகாபாரதத்தோடு
முடியவில்லை ; நீதிபதி ஆசனத்திலும் உண்டு….
ஒப்புக்கு கதைகேட்டு ஓய்ந்தவனா எம்விவசாயி ?
வரலாறுநெடுக வஞ்சகத்தை துரோகத்தை சகுனிகளை
சந்தித்து மீண்டவரே எம்உழவர் பெரும்படையும்
சிந்தித்து முடிவெடுத்தார் ; போராட்டம் தொடரும்
போகி நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல்
நெஞ்சில் கனன்றெரியுது எம்உழவர் கோபாக்னி
எரியட்டும் ஆணவ ஆட்சி ! எரியட்டும் காவி - கார்ப்பரேட் அநீதி !
பொங்கட்டும் புதுநீதி ! உழவர் உழைப்பாளர் சமூகநீதி !
சுபொஅகத்தியலிங்கம்.
13 ஜனவரி 2021.

பொங்கள் நன்னாளில் புத்தி வந்தது

Posted by அகத்தீ Labels:

 


பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது


விடியக் காத்திருக்கும் இரவில்
மொட்டவிழ்ந்தது ஓர் கனவு
பேசும் முகம் புலப்படவில்லை
பேச்சு மட்டும் தெளிவாய்க் கேட்டது …
“ யார் நீங்கள் ?”
நடுங்கும் குரலில் நான் கேட்டேன் .
“ கடவுள்”
என்றது கம்பீரமாய் ..
“ உருவம் புலப்படவில்லையே ?
நம்புவது எப்படி ?
சந்தேகக் கணையைத் தொடுத்தேன் …
கை கொட்டி உரக்கச் சிரித்தார்
மெல்ல வாய் திறந்தார்
“ உழவனின் வியர்வையில்
நானிருப்பேன்
உழைப்பவன் குருதியில்
உறைந்திருப்பேன்
பசிப்பவன் முன்பு
ரொட்டியாய் வருவேன்
தவிக்கும் வாய்க்கு
தண்ணீராய் தெரிவேன்
நீங்கள் கட்டும்
பிரமாண்ட கோயிலிலோ
சர்ச்சிலோ மசூதியிலோ
நானில்லை
வியர்வையில்
ரத்தத்தில்
கண்ணீரில்
நானிருப்பேன்
குருதேவர் ரவீந்திர நாத் தாகூரும்
தேசப்பிதா காந்தியும் அதைத்தான்
எப்போதும் சொன்னார்கள்
உழவு செய்யாவிடில்
நாற்று நடாவிடில்
உரம் இடாவிடில்
நீர் பாய்ச்சாவிடில்
ஒரு கவளம் சோறுமின்றி
உலகமே முடங்கிப் போகும்
முற்றும் துறந்த முனிவரும்
பசியால் தவத்தை மறப்பார்
ஆம்… அதைத்தான்
வள்ளுவனும் சொன்னார்
‘உழவினார் கைமடங்கின் இல்லை இல்லை விழைவதும்
விட்டோம் என்பார்க்கும் நிலை ..’
உழைப்பைப் போற்று
உழவைப் போற்று
அங்கே நான் இருப்பேன்…”
கடவுள் பேசி மறைந்தார்
நான் விழித்தேன்
பொங்கள் நன்னாளில்
புத்தி வந்தது மக்களுக்கு
ஆட்சியாளருக்கு அல்ல...
சுபொஅ.