பலப்பல வண்ணங்களில்

Posted by அகத்தீ

 


பலப்பல வண்ணங்களில் பூக்கள் சிரித்தன

வண்ணத்துப்பூச்சிகள் சிறடித்தன

பூங்கா நடுவே குட்டிபிசாசுகள்

ஆடி , ஓடி , ஏறிக் குதித்து விளையாடின

கூச்சல், மகிழ்ச்சி, கலகலப்பு

 

 

அங்கே ஐம்பது குட்டிப் பிசாசுகள்

ஆனால் ஒருப்போல் இல்லை

ஆண் ,பெண் ,கறுப்பு ,சிவப்பு ,மாநிறம்

சுரண்ட முடி , செம்பட்டைத் தலை ,

ஒழுகின மூக்கு , திக்குவாய் , சூம்பிய கால்

குட்டிப்பிசாசுகள் காய்விட்டன , பழம்விட்டன

எல்லாம் நொடிக்கு நொடி மாறின

ஒரு போதும் வெறுக்கவில்லை

 

 

அங்கே ஓர் மனித சங்கி வந்தார்

 “ நீ ஓரம் உட்கார் ! நீ அவனோடு சேராதே !

அவன் உனக்கு சமம் அல்ல ! நீ மட்டுமே மேலானவன் !”

குட்டிப் பிசாசுகளைக் கூறுப்போட்டார்.

 

 

 

வெற்றிக் களிப்புடன் வாசலைத் திறந்தார்

ஒற்றைக் காலை வெளியே வைத்தார்

 

 

குட்டிப் பிசாசுகள் ஒன்றாய்ச் சேர்ந்து

குலவையிட்டன .. கும்மாளமிட்டன

மனிதனைவிட பிசாசுகள் மேல் !!!

 

 

சுபொஅ.

 

[ இது ஓர் உண்மை நிகழ்வுசார் புனைவு ]

 


வேறென்ன வேண்டும் எனக்கு ?

Posted by அகத்தீ

 


#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

 

மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும்

வறட்டுத் தத்துவம் அல்ல

கம்யூனிசம் .

 

மண்ணின் தத்துவத்தோடும்

வரலாற்றோடும் பின்னிப் பிணைந்த

அறிவியல் பார்வை .

 

 

அறிவுஜீவிகளின் மயிர்பிளக்கும்

விவாதங்களில் கருக்கொண்டதல்ல

கம்யூனிஸ்ட் கட்சி !

 

மாளா மானுட அன்பும்

வர்க்கப் போரும் வர்ணப் போரும்

இணைந்த நம்பிக்கை !

 

சாதி ,சடங்கு ,மதம் ,மூடத்தனம்

ஏமாற்று ,வஞ்சகம் மிகுந்த

சாலையில் சாகசப் பயணம் !

 

இராயிரம் ஆண்டு அடைந்த அழுக்கை

ஒற்றைச் சலவையில் போக்கும்

மாயஜாலம் ஏதுமில்லை !

 

டிரம்பும் மோடியும் கார்ப்பரேட்டும் சங்கியும்

கம்யூனிச பூதமென அலறி அரற்ற

உழைக்கும் மக்களின் ஓங்காரச் சிரிப்பு !

 

 

நூறாண்டு ஆச்சே இன்னுமா என்போரே

வரலாற்றில் இது ஓர் துளி – இது

வைரம் பாய்ந்த போராட்டப் பயிர்

 

 

எதிர்ப்பினூடே ஓங்கி உயரும் !

மானுடத்தின் புன்னகை மலர

மார்க்சியம் மட்டுமே மாமருந்து !!!

 

அவசரகாலந்தொட்டு எம் மரணம்வரை

லட்சியப் பயணத்தில் நானும் ஓர் அங்கம் !

வேறென்ன வேண்டும் எனக்கு ?

 

சுபொஅ.

கொள்கை சார்ந்து வாழ்வது பெரும் போராட்டம் .

Posted by அகத்தீ

 

 கொள்கை சார்ந்து வாழ்வது பெரும் போராட்டம் .


கொள்கை சார்ந்து வாழ்வது பெரும் போராட்டம் . அது எல்லோருக்கும் இயலாது . நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பானது .

அதிலும் அரசியலை முழுநேரமாய் வரிந்து கொள்வோர்க்கு இறுதிவரை கொள்கைவழி நிற்பது என்பது ஒவ்வொரு நாளும் போராட்டமே !
வாழ்க்கைப் பாட்டிற்கு வேறு ஏதேனும் தொழில் செய்து கொண்டே ; பகுதியாய் அரசியலில் தலை நீட்டுவோர் ஓர் ரகம் . அவர்களில் பெரும் பாலோர் தம் தொழிலுக்கு பாதகம் இல்லாமல் தம் அரசியல் ஈடுபாட்டை வரையறுத்துக் கொள்வர் . ஓரளவு சுயமரியாதையை அவர்களால் பேணிக் கொள்ள இயலும் . கட்சிப் பதவிகளில் பெரிய ஆர்வம் காட்டாமலிருப்பது இவர்களுக்கு கூடுதல் பலமாகும் . ஆயின் பதவி ஆசை பாடாய்ப் படுத்திவிடும் . விளைவு இழப்புகளை சந்திப்பர் . எதிர் நிலைக்கும் போவர் .
எந்தத் தொழில் செய்யினும் தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப அடுத்த கட்ட உயர்வை எட்டுவது இயல்பு . அரசியலில் இந்த எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் . ஆயின் நடைமுறை அவ்வளவு எளிதாக ஏணியில் ஏறவிடாது .
எப்போதும் மேலே போகப்போக போட்டியும் பொறாமையும் காலைவாருவதும் விருப்பு வெறுப்பும் அதிகம் இருக்கும் .ஏமாற்றமும் விரக்தியும் மேலோங்கும் . வாழ்க்கைச் சூழலும் ,தனக்கு பின் வந்தவர் முன்செல்வதும் ஆன சூழல் வருத்தும் சுற்றியுள்ளோரும் பகைவரும் குத்திக் காட்டுவர் . உள் கட்சியிலும் ஓரங்கட்டவும் வெளியேற்றவும் சிலர் முயல்வர் இச்சூழலில் ஒதுங்கி கொள்கையை மட்டும் பற்றி நிற்பது மிகச் சிலருக்கே சாத்தியம். பலர் இடறி விழவும் ; தடுமாறவும் தடம்மாறவும் வாசல் தானே திறந்துவிடும் .இவை எல்லாம் கொள்கை சார்ந்த அரசியலில் மட்டுமே .
இப்போது அரசியல் களமும் மெல்ல மெல்ல சூதாட்டக் களமாக்கப்பட்டு வருகிறது . இங்கே ஒன்று ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்ட வேண்டும் அல்லது குறுக்கு வழியில் பணம் பிடுங்க வேண்டும் . இங்கே பதவி வாங்கப்படுவதே . வாங்கியதை விற்பது வியாபார நியதிதானே ! நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் கிரிமினல்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்திருப்பது சீரழிவின் அளவீடு ஆகும் .
உள் கட்சி ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பின் இத்தகு விபத்துகள் ஓரளவு தவிர்க்கப்படும் . பெரும்பாலான முதலாளித்துவக் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் புதைக்கப்பட்டு நாயக வழிபாடு முன்னிறுத்தப்படுவதால் “உழைப்புக்கும் ,தகுதிக்கும் ,அனுபவத்துக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பது முயற்கொம்பே ! ஜால்ராக்களும் ஒட்டுண்ணிகளுமே உயரே செல்லும் . விளைவு கட்சி வீழ்ச்சியைச் சந்திக்கும் .
பாஜக என்பதே ஆர் எஸ் எஸ் என்கிற பாசிச அமைப்பின் அரசியல் பிரிவே . ஆகவே ஆர் எஸ் எஸ் கட்டளைப்படி இயங்கவே ஆதிமுதல் பயிற்சியும் கருத்தியலும் உருவாக்கப்பட்டுவிடுவதால் அது ஓர் தாதாவுக்கு கட்டுப்படும் கிரிமினல் கூட்டம் போல் செயல்பட முடிகிறது . அதே சமயம் அரசியல் சதுரங்க வேட்டையில் எல்லா குயுத்திகளையும் சகுனி வேலைகளையும் செய்யும் போது அங்கும் அதிருப்தி உருவாகும் ; ஆயினும் சீக்கிரம் வெளிப்படாது .சர்வாதிகாரத்தின் கீழ் சீழ் ஒழுகுவது வெளிப்பட நாளாகும் .முற்றிய பிறகே வெளிப்படும் . அது அதன் இறுதி கட்டத்தை நெருங்கிவிடும் .
அரசியல் என்பது மக்கள் தொண்டு என்பது போய் ஆட்சி அதிகாரம் என்கிற நினைப்பே இப்போது ஊதி பெரிதாக்கப்படுகிறது தேர்தல் நெருக்கத்தில் கட்சி ஆரம்பிப்பேன் .கட்சி ஆரம்பித்ததும் ஆட்சியைப் பிடிப்போம் என ரஜினி அறிவிப்பதும் ; அதை விமர்சனமின்றி ஊடகங்கள் பெரிதாகப் பேசுவதும் அரசியலை வெறும் பதவி அரிப்பாக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டமாகும் .இதனை ஏற்பதைவிட மக்கள் விரோத சிந்தனை எதுவும் கிடையாது .
.
இடது சாரி /கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்கட்சி ஜனநாயகம் பேசப்படும் அளவு செயலில் இருக்கிறதா ? சுயபரிசீலனை ஆவணங்கள் வெறும் எட்டுச் சுரைக் காயாகவே அங்கும் மாறிப் போய்விட வில்லையா ? அக்கட்சிகளிலும் மனம் நொந்தோர் இல்லையா ? இவையும் இவைபோன்ற இன்ன பிற கேள்விகளும் எளிதில் புறந்தள்ள முடியாதவையே !
ஆயினும் அங்கு அமைப்புசார் நடைமுறையே முன்னிலைப் படுத்தப்படுவதால் ; நாயக வழிபாடு குறைவாக இருப்பதால் தீர்வுக்கான வாசல் அடைபடாமல் இன்னும் திறந்தே இருக்கிறது . உட்கட்சி ஜனநாயகம் என்பது பதவிகளுக்கான தேர்வு மட்டுமல்ல ; கொள்கை முடிவுகளை பரந்த விவாதத்தின் மூலம் எட்டுவதும் ஆகும் . உட்கட்சி ஜனநாயகத்துக்கான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் நடவடிக்கையாகும் . அது கட்சி வாழ்க்கையின் ஒரு பகுதி .இதிலும் ஓர் சிக்கல் சிலர் அதுமட்டுமே கட்சி செயல்பாடாய் கருதி அதையே இருபத்தி நாலுமணி நேரமும் செய்து தானும் நொந்து கட்சி வளர்ச்சிக்கும் குந்தகம் செய்கின்ற சிலர் உள்ளனர் . இளைய தலைமுறைக்கும் புதியவர்களுக்கும் வழிவிடாத மூத்த தலைமுறையும் தங்களை அறியாமலே கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் செய்பவரே .
மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ,அன்றைய சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.நல்லசிவன் சென்னை மாவட்ட மாநாட்டு நிறைவுரையின் போது சொன்னார் . “ உள் கட்சிப் போராட்டமும் தத்துவ விவாதமும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உயிர்நாடியே . மறுக்கவே முடியாது .மறக்கவும் கூடாது .அதேவேளை பொதுவெளியில் வேட்டியை உதறக்கூடாது ; ஜட்டியை மாற்றக்கூடாது அரிப்பெடுக்கிறது என்பதால் கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் சொறியவும் கூடாது .” என்றார் .
இப்போது உள்கட்சி போராட்டம் நடத்த தோதான நேரமும் இல்லை ;களமும் பாசிச எதிர்ப்புப் போர் முனையில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்துகிறது . இதனை கவனத்தில் கொள்வோமா ?
சிபிஎம் முதுபெரும் தோழர் என் .சங்கரய்யா அடிக்கடி சொல்லுவார் கட்சியிலிருந்து விலகி இருப்போரில் ஒரு சிலர் மட்டுமே கொள்கை மாறுபட்டு நிற்பவர் .பெரும்பாலோர் தனிநபர் நடவடிக்கை சார்ந்தே மாறுபட்டு நிற்கின்றனர் .அவர்களோடு பேசுங்கள்.ஏதேனும் ஒரு வகையில் கட்சியோடு நெருங்கி நிற்கச் செய்யுங்கள் .அது இன்றைய அவசரத் தேவை .
சுபொஅ.

தேவை ஒரு பதவி , ஒரு விசிடிங் கார்டு …????

Posted by அகத்தீ

 


தேவை ஒரு பதவி , ஒரு விசிடிங் கார்டு …????

அரசியலில் பலருக்கு ஏதோ ஒருவித ஆர்வம் பொதுவாய் இருக்கும் அதனாலேயே அவரவர் ஏதோ ஓர் கட்சியின் உறுப்பினராக இருப்பார் என்பது பொருளல்ல ; அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை .
சிலர் ஏதேனும் ஓர் கட்சியில் தீவிரமாய் அல்லது சாதரணமாய்ச் செயல்படத் துவங்குவர் அதற்கு அக்கட்சியின் கொள்கை ஈர்ப்பு / அக்கட்சி தலைமை மீதான நம்பிக்கை / மதம் ,சாதி ,இனம் ஏதோ ஒன்றின் மீதான பற்று / உள்ளூர் விரோத குரோத எதிர்நிலை என ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் .
கொள்கை சார்ந்து படித்து , விவாதித்து, போராட்டங்களில் ஈடுபட்டு புடம்போட்டு வார்க்கப்படுகிற லட்சியவாத அரசியல்வாதிகளும் உண்டு . எண்ணிக்கையில் குறைவாயினும் இவர்களின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருக்கிறது.
யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கும் ஊருக்கு இரண்டு பேர் கிடைத்து விடுகிறார்களே எப்படி ? சாதி அல்லது உபசாதி இப்படி ஏதேனும் தொடர்பு ஒரு காரணம் ; ஆயின் அதுமட்டுமல்ல.
இளைஞர்களில் ஒரு மிக மிகச் சிறு பகுதியினர் வெகுசீக்கிரம் செல்வாக்கு பெற வேண்டும் , செல்வம் ஈட்ட வேண்டும் என அவசரப் படுகின்றனர் . அவர்கள் ஏற்கெனவே வேர்விட்ட கட்சிகளில் சேர்ந்து பொறுப்புகளைப் பெறுவது மிகச் சிரமம் .
தாங்கள் போலிஸ் ஸ்டேசன் . அரசு அலுவலகம் இவற்றோடு தொடர்பு கொள்ளவும் , கட்டை பஞ்சாயத்துகள் ,கமிஷன் பேரங்கள் செய்யவும் ஒரு விசிட்டிங் கார்டு தேவை .தன் லெட்டர் ஹெட்டில் ஒரு பதவி தேவை ,வாகனத்துக்கு ஒரு கொடி தேவை ,இவை அவருக்கு செல்வாக்கையும் செல்வத்தையும் கொண்டுவர ஒரு வழி .
ஆகவேதான் அதற்கேற்ப சில கட்சிகளை தேர்ந்தெடுத்து சேர்கின்றனர் .தமிழகம் நெடுக்க இது போன்றோரைக் காணலாம். இது பழைய பாணி .
இப்போது இப்படி கட்டை பஞ்சாயத்து , போலிஸுக்கும் அரசு அலுவலகங்களிலும் கமிஷன் ஏஜெண்டு ,ரவுடித்தனம் ,இப்படி இருப்போரின் சாதி ,உபசாதி எல்லாம் கணக்கிட்டு தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது . அதற்காக பணத்தை வாரி இறைக்கிறது .அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியும் வழிக்கு கொணர்கிறது .
மறுபுறம் உயர் அதிகாரிகள் ,பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பலவீனங்களை சரியாக அறிந்து அதை கையில் எடுத்து பேசியும் ஆசைவார்த்த்தை காட்டியும் மிரட்டியும் பாஜகவில் சேர்க்க முயற்சிக்கின்றனர் .
சமூகநீதி ,சமத்துவம் , ஒடுக்கப்பட்டோர் உழைக்கும் மக்கள் நலம் விரும்புவோர் அரசியல் களத்தில் இன்னும் நுட்பமாக - இன்னும் பரவலாக - இன்னும் ஆழமாக - இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டியதையே இச்சூழல் உரக்கச் சொல்கிறது .
சுபொஅ.