#மானுடம் வேரில்தான்

Posted by அகத்தீ Labels:#மானுடம் வேரில்தான்

இளைஞர் முழக்கம் வெளிவரத் துவங்கிய சில நாளில் தோழர் தி.க.சி என்னை அழைத்தார் .நானும் அவரும் சென்னை மெரினா கடற்கரையில் சந்தித்தோம் . இதழை தொடர்ந்து நடத்துவது குறித்து  சில யோசனைகளைச் சொன்னார் .  சுண்டலைக் கொறித்தப்டி எங்கள் உரையாடல் எங்கெங்கோ நகர்ந்தது .

அவர் உரையாடலின் ஊடே சொன்னார் , “ ஒரு முறை கடற்கரையில் வைத்து புதுமைப் பித்தன் சொன்னார் , என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சென்னை மண் நம்ம உடம்பில ஒட்டாது …”

எங்கள் பேச்சு அதை ஒட்டியும் நீண்டது.

அண்மையில் சிஐடியு அகில இந்திய மாநாட்டுப் பேரணியின் போது ஒரு மூத்த தோழரோடு தீக்கதிர் அலுவலகத்தில் உரையாட நேர்ந்தது.

 “ தோழா ! இப்போ சென்னை வாசம்தானா ?” எனக் கேட்டேன்.

அவர் சொன்னார் , “ இது ஊரா , இங்கே எந்திரங்கள் மட்டும்தான் இருக்கு ,எங்கே மனுஷன் இருக்கான் ? கட்சி அலுவலகங்களில் உயிரைக் காணோம் ,தோழமை வெறும் சொல்லாயிருக்கு….”

இந்த உரையாடல் என்னை வெகுவாகப் பாடாய்ப் படுத்தியது .தூக்கத்தைத் தின்றது . என் நினைவுச் சுழலில் ஏதேதோ வந்து போனது . நான் வாலிபர் சங்கப் பொறுப்பில் இருந்த போது தமிழகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன் .எல்லோரோடும் நெருங்கிப் பழகி இருக்கிறேன் . எனக்கும் சில அபிப்பிராயங்கள் உண்டு .

பொதுவாய் சென்னையும் வடமாவட்டங்களும் ஒரு வித்தியாசமான பண்பாட்டோடு இருக்கும் , மதுரை சுற்று வட்டாரம் இன்னொரு ரகம் , நெல்லை தூத்துக்குடி தனி , குமரி முற்றிலும் வேறுபட்டிருக்கும் , கோவையும் மேற்கு மாவட்டங்களும் அது ஒரு ரகம் , தஞ்சை மண்டலம்  இன்னொரு ரகம் . தமிழ் நாடு ஒற்றைப் பண்பாடல்ல ; அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஒவ்வொன்றிலும் உயர்ந்த சில நல்ல அம்சங்களும் இருக்கும் ; ஏனையோருக்கு ஒவ்வாத சில கூறுகளும் இருக்கும் . இதை அளவிடுவதில் கூட அவரவர் அளவுகோல் மாறுபட்டே இருக்கும் .

தோழர் ஏ.நல்லசிவன் கட்சி மாநிலச் செயலாளராக இருந்தபோது ஒரு முறை நான் கோவமாக சண்டை போட்டேன் . அவர் என்னை அழைத்து வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார் . அது அவர் இயல்பு . என் கோபம் தனிந்தது . சூழல் கலகலப்பானது . அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் ,

 “ இந்த நாஞ்சில் நாட்டுகாரங்களுக்கு ஏன் மூக்கு மேலேயே கோபம் இருக்கு ? நீங்க சென்னையில இருந்தாலும் இன்னும் நாஞ்சில் வாசம் போகலையே..”

 “ தெரியலை…” என்றேன்.

அவர் சொன்னார், “ குமரி மாவட்டத்தில நிலப்பிரபுத்துவம் பெருசா இல்லை ,சிறு உடைமையாளர் , சுயதொழில் செய்வோர் ,கல்வி பெற்றோர் , அதிகம் ரப்பர்லாம்கூட எஸ்டேட் தொழிலாயிடிச்சி …அதுனால கொஞ்சம் சுயம் அதிகமாயிருக்கலாமோ … நீங்கதான் ஆராய்ச்சி பண்ணனும்னு …. “

அவர் போகிற போக்கில் சொன்னாலும் சமூகப் பொருளாதார நிலைமைக்கும் பண்பாட்டு சூழலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை யோசிக்க வைத்தது .

நெல்லை இலக்கியவாதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் பிற மாவட்ட இலக்கிய வாதிகளுக்குள் இருப்பதில்லையே என நான் யோசித்ததுண்டு . கரிசல் இலக்கிய வட்டம் போல் வடமாவட்ட செம்மண் இலக்கிய வட்டம் தழைக்கவில்லையே ஏன் ?

மதுரை வட்டாரத்தில் கட்சித் தோழர்களுக்கு இடையேகூட உறுவுமுறை விழிச்சொல் புழக்கம் அதிகம் இருப்பது ஏன் ? இப்போது அங்கும் அது மறைந்து வருகிறது .

கட்சிக்குள்ளும் தோழமை ஒரு போல் இருப்பதில்லை . மேலே மண்டலம் மண்டலாமாய் நான் சுட்டியது இங்கும் பிரதிபலிக்கும் .மண்ணின் வேர் கொண்ட இயல்பு சீக்கிரம் மாறிவிடாது .

சரி ! சென்னைக்கு வருவோம் .இங்கே வாழ்வோரில் பெரும்பாலோர் பிற மாவட்டங்களில் இருந்து வந்தேறிகளே . பிழைக்கப் போன இடத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பதே இயல்பு . அது சென்னையில் வேரில் ஒட்டிய இயல்பல்ல . வளர்ச்சியில் தோன்றிய பெருநகர வாழ்வின் கூறு . அது கட்சியிலும் பெரிதும் பிரதிபலிக்காமலா இருக்கும் ? அதுவும் கட்சியில் சென்னையின் பூர்வகுடியினர் மிகச் சொற்பமாய் இருக்கையில் கட்சி பெருநகர எந்திரவாழ்வின் கூறாகத்தானே இருக்கும் . அது மட்டுமே சென்னை அல்ல.

மீனவர் குப்பமும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சேரி / குடிசைப் பகுதியும் தான் சென்னையின் சொந்த வாசம் . அங்கு எல்லையற்ற பேரன்பைக் காணலாம் . எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தோள் கொடுக்கும் நல்லியல்பு சென்னைக்கு உரியது . ஆபத்து நேரத்தில் ஓடோடி வரும் உயர் குணம் அங்கு வேர் கொண்டிருக்கும் .தருமமிகு சென்னை என்பது மெய்யே . இருப்பவன் செய்வதல்ல தருமம் .இல்லாதவன் இருப்பதை பங்கு போட்டு பசித்தவனுக்கு தருவதே தருமத்தின் உச்சம் .இதை சென்னை மற்றும் வட மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் காணலாம் . திருவள்ளூர் அருகில் செவ்வாய் பேட்டை ரயில் நிலையத்தின் அருகே திரூரில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாய்  வாழ்ந்தேன் . ஒடுக்கப்பட்ட மக்களின் எல்லையற்ற பேரன்பை அனுபவித்தேன் .

ஆயின் ஒன்று , எங்கே போயினும் அது எந்த மாவட்டம் /ஊர் ஆயினும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிபந்தனையற்ற தோழமை அன்பும் , நடுத்தர மக்களின் மரியாதை நிமித்தமான தோழமையும் வேறு வேறுதான் .

மானுடம் எங்கும் வேரில்தான் குடிகொண்டுள்ளது .சரிதானே!!

[ இங்கு நான் சென்னவை அனைத்தும் என் அனுபவம் மற்றும் சொந்த உளவியலின் அடிப்படையிலாலானது.அவரவருக்கு வெவ்வேறு அனுபவம் இருக்கக்கூடும் . அதன்படி உணர்க !]

சு.பொ.அகத்தியலிங்கம்.
பிப்ரவரி ,5 / 2020 
அவர்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?

Posted by அகத்தீ Labels:

அவர்களை  ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


கரசேவை எனும் திவ்ய நாமம் வேறு அதற்கு
இடிப்பதும் அழிப்பதுமே அவர்களின் திருப்பணி
யாக குண்டத்தில்கூட அனைத்தையும்
எரிக்கவும் பாழாக்கவும்தானே செய்கின்றனர்
அதுவும் ஊரான் வீட்டு நெய்யில்….


அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்தால்
அவர்கள் தெரிந்ததைத்தானே செய்வார்கள்
நிதித்துறை ,நீதித்துறை ,கல்வித்துறை
வேளாண்மை , தொழில் ,இன்னபிறவற்றை
எதையும் இடித்து நொறுக்கவே
அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்


ஆக்கும் கடவுள் பிரம்மனுக்கே கோயில் இல்லை
உழைப்பாளி உனக்கா மரியாதை தருவார் ?
அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


 பழைய இந்தியாவை நொறுக்குவது
புதிய இந்தியாவைக் கட்டவா ? இல்லை .
நீ அப்படி நம்பினால் மூடன்


விபத்து நடக்கும் போது
பேரழிவின் போது
உதவுவதற்கு சிலர் ஓடோடி வருவர்
எரிகிற வீட்டில் புடுங்கினது ஆதாயம் என
கொள்ளையடிக்க களமிறங்கும் ஒரு கூட்டம்
துணை இருக்கும் காவல் துறை ,அதிகாரம்
அனுபவத்தில் பார்த்ததில்லையா ?


பேரழிவின் விழிம்பில் தேசம் திணறுகிறது
அம்பானி ,அதானி தேசத்தை சூறையாட
மோடிஷா அதிகாரம் வெண்சாமரம் வீசுகிறது
அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


சுபொஅ.
  

#ஆயிரம் கண்ணுடையோராய் மாறுக !”

Posted by அகத்தீ Labels:


#ஆயிரம் கண்ணுடையோராய் மாறுக !” நாடு கெட்டுக் கிடக்குது
விழிப்பாய் இருங்கள் !”

 “ஐயா !
உங்கள் உபதேசம் சரிதான் .
ஆனால் ,
எதில் விழிப்பாயிருப்பது
என்பதில்தான் குழப்பம்…”

 “ இதில் என்ன குழப்பம் ?”

 “ எதிரிகளிடமா
நண்பர்களாய் நடிப்பவர்களிடமா
பற்றி எரியும் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து
கவனத்தை சிதறடிக்கும் குபீர் ஞானதேசிகன்களிடமிருந்தா ?
ஊடகங்களிடமிருந்தா ?
அடக்குமுறையை ஏவுவோர்களிடமா ?
அதை நியாயப்படுத்துவோரிடமா ?
பொய் பித்தலாட்டம் செய்வோரிடமா ?
அதற்கு வக்காலத்து வாங்கிவோரிடமா ?
நீதிமான்களிடமா ?
வெறுப்பை விதைப்போரிடமா ?
அதனை சகிப்போரிடமா ?
அடகுபோன அறிவுஜீவியிடமா ?
அநீதிகளுக்கு துணைபோவோரிடமா ?
அதனைக் கண்டும் உணர்ந்தும்
வாய்மூடி கண்மூடி மவுனித்திருப்போரிடமா?
…. ….. …… ….. ….. ….. ….. ….. …..
யாரிடம்… யாரிடம்… யாரிடமிருந்து ?”

 “ எல்லோரிடமும்
எல்லாதிசையிலும்
எப்போதும்
தூங்கும் போதும்
விழித்திருக்கும் போது
ஒவ்வொன்றிலும்
விழிப்பாயிருப்பீர் ..
காலம் கொட்டுக் கிடக்குது
எதிரி ஆயிரம் முனைகளில்
ஆயிரம் முகத்தோடு நிற்கையில்
உனக்கு மட்டும் ஒரு கண் போதாது
ஆயிரம் கண்ணுடையோராய் மாறுக !”

சு.பொ.அகத்தியலிங்கம் .
ஜனவரி 24 , 20 20

வேதம் புதிது.

Posted by அகத்தீ Labels:
வேதம் புதிது.எல்லா கண்களையும்
ஒரே நேரத்தில் குருடாக்க வேண்டும்
எல்லா காதுகளையும்
ஒரே நேரத்தில் செவிடாக்க வேண்டும்
எல்லா வாய்களையும்
ஒரே நேரத்தில் ஊமையாக்க வேண்டும்
சர்வ வல்லமை மிக்க
அதிகாரத்தின் பேரால் ஆணையிட்டார் …
மாமன்னர்.


மயாண அமைதியில் மன்னர் புன்னகைத்தார்
திடீரென்று வானம் இருண்டது இடி இடித்தது
பெருமழை ஊரைப் புரட்டிப் போட்டது .


பார்வை அற்றவரும்
நெற்றிக் கண்ணைத் திறந்தனர்
கேட்கும் திறனிழந்தோரும்
காற்றுக்கும் காதுகொடுத்தனர்
பேசமுடியாதோரும்
அடிவயிற்றிலிருந்து ஆங்காரக் குரலெழுப்பினர்


அதிசய சுகமளிக்காது ஆராதனைகளென
ஆர்ப்பரித்து திரண்டனர் வீதிகளில்
அதிகார வெறி பொடிந்து தூளாகும்
சமிக்ஞை விண்ணில் பளிச்சிட்டது
தேவதூதரின் வருகையை அல்ல
மக்கள் எழுச்சியை முன்னறிவித்தது …

சு.பொ.அகத்தியலிங்கம்.