அன்பும் அறிவும் உடைத்தாயின்...

Posted by அகத்தீ Labels:









அன்பும் அறிவும் உடைத்தாயின்... 

சு.பொ. அகத்தியலிங்கம் 




‘‘தப்பு, சரின்னு புத்திக்கு தெரிகிறது; மனசுக்கு உறைக்கவில்லையே ...”இதே வசனத்தை அல்லது இது போன்ற வசனத்தை எத்தனையோ திரைப்படங்களில், நெடுந்தொடர்களில், மெகா சீரியல்களில் கேட்டுக் கேட்டு காதே புளித்துவிட்டது .ஆனாலும் தொடர்கிறது .ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை அனுபவத்தில் இது போன்று சொல்ல நேர்ந்த சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

அப்படியாயின் அன்பும் அறிவும் எதிரெதிர் நிற்பவையா? அல்ல . அல்ல . பின் ஏன் அப்படி ?அன்பையும் அறிவையும் புரிந்து கொள்வதிலும் கையாளுவதிலும் ஏற்படுகிற பிழைகள் ;இப்படி யோசிக்க வைத்து விடுகிறது .

அவன் மனைவியை அளவு கடந்து நேசிக்கிறான்; அவளும் எல்லை கடந்து பாசத்தைக் காதலைப் பிழிகிறாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் இருவருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டு விடுகிறது .ஏன் ? எப்படி ?ஒரு கதை சொல்லலாம் அல்லவா ?

மேலே குறிப்பிட்டது போன்ற காதலால் கருத்தொருமித்த ஒரு தம்பதியர் கொஞ்சி மகிழ்ந்திருக்கும் வேளை-வானுலா வந்த சிவபெருமானிடம் பார்வதி இந்தக் காதல் ஜோடியைக் காட்டி காதல் உன்னதமானது ; அன்பு மழையில் மூழ்கும் தம்பதியரைப் பிரிக்க உலகின் எந்த சக்தியாலும் முடியாது என்கிறார்.நம்ம சிவன் விஷமமாய் புன்னகைக்கிறார் .பார்வதி எரிச்சலுற்று, “ஏன்” என வெடித்துச் சீறுகிறாள் .சிவன் சொன்னார்: “ நாளை காலைக்குள் இருவரையும் பிரித்துக் காட்டுகிறேன்.”சவால் விட்ட சிவன் களத்தில் இறங்குகிறார் .

ஒரு குறி சொல்லும் பெண்ணாக வேடமிட்டு அந்தப் பெண்ணைச் சந்தித்து குறிசொல்லுகிறார் . “உன் வாழ்க்கை பெரும் மகிழ்ச்சி யாய் இருப்பினும், உன் கணவர் போன ஜென்மத்தில் நாயாய் இருந்தார். முழு ஆயுளும் முடியும் முன் இறந்து விட்டார். அதன் மிச்ச சொச்சமாகத்தான் தினமும் நள்ளிரவில் உன்னை நாவால் தீண்டு கிறார், இன்று இரவு நீயே தூங்குவது போல் நடித்து உண்மையை அறிக”

அதே போல் ஒரு பிராமண ஜோதிடராக வேடமிட்டு அந்த ஆணிடம் சென்று சொல்வார்;“உன் மனைவியும் நீயும் இரண்டறக் கலந்து காதல் வாழ்வு வாழினும் ; போன போன ஜென்மத்தில் அவள் (ஒரு சாதியைக் குறிப்பிட்டு) அந்த சாதியில் பிறந்து அந்த சாதிக்குரிய வர்ணக்கடமையை சரியாகச் செய்யாமல் செத்துவிட்டாள். எனவே நள்ளிரவில் அவள் உடம்பில் உப்புகரிப்பு மேலோங்கி இருக்கும்.ஐயம் இருந்தால் நள்ளிரவில் நாவால் தீண்டிப்பார்,!”

இருவரின் தூக்கமும் தொலைந்தது.அவள் தூங்குவது போல் நடிப்பாய் படுத்துக் கிடக்கிறாள்.அவன் மெல்ல எழுந்து அவளை நாவால் தீண்டுகிறான்..

“ச். சீ ... நாய் ஜென்மம்...” “ச்..சீ... ...ஜாதி கெட்டவள்...”வார்த்தைகள் தடித்து விழுந்தன . உறவு நொறுங்கியது .

சிவன் ஜெயித்த எக்காளத்தில் பார்வதியை வம்பிழுக்கிறார். அன்பு தழுவிய குடும்பம் நொறுங்கிவிட்டதே என பார்வதி புழுங்குகிறார் .

ஆனால் மூளையில் உறைந்து போயிருந்த சாதிய அழுக்கும் , வெறுப்பும் யாரோ ஒருவர் நிமிண்டிவிட்டபோது விஸ்வரூபமெடுத்து விளையாடிவிட்டது.

அறிந்த உண்மையக்கூட நொடியில் மறக்க வைத்து பகையாக்கிவிட்டது .அறிவு கொஞ்சம் அசந்த போது அன்பையும் அழிக்கும் வன்மம் விதைக்கப்பட்டுவிட்டது .

ஆக, அன்பைக் காக்கவும் அறிவின் துணை அவசியமாகும் . ஏனெனில் வள்ளுவன் சொல்லுவான்:“ அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்  /அழிக்கல் ஆகா அரண்.”அதாவது வாழ்வின் இறுதிவரை காக்கும் பெரும் கருவி அறிவே ஆகும் . உள் புகுந்து பகைவரும் அழிக்கமுடியா கோட்டை அரணாகும் அது .நான் மேலே சொன்னது வெறும் கதை அல்ல; வாழ்வின் நடப்பு.

எனக்கு தெரிந்த காதல் மணம், சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்ட ஒரு டாக்டர் இணையர் ஒரு நாள் சாதாரணச் சண்டையில் அவசரப்பட்டு பயன்படுத்திய சாதியச் சொல்லாடல் மண முறிவை நோக்கி இருவரையும் விரட்டிவிட்டது. அறிவைக் கொஞ்சம் இழந்தபோது பேரிழப்பாகிவிட்டது. பின்னர் நேர் செய்ய மூன்றாண்டுகள் பெரும்பாடுபட வேண்டியதாயிற்று

.குடும்பம் நடத்துவதில், உறவைப் பேணுவதில், சமூக வாழ்வில் இணைந்து நிற்பதில் - ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறுவதில் அறிவின் பாத்திரம் மிகவும் காத்திரமானது .வெறும் அன்பைக் கொண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது; வாழ்வின் சவாலை ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ள அறிவில் தெளிவும் உறுதியும் மிகமிக அவசியம்.ஆயினும் அன்பின் வலிமை ஆகப் பெரிது .மீண்டும் ஒரு கதை .

பொன்னீலன் எழுதிய “ காமம் செப்பாது” என்கிற கதை .கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா? இல்லையா? இந்த திருவிளையாடற் புராண சினிமா காட்சியை அசை போட்டுக் கொள்ளுங்கள் .

பொற்றாமரைக் குளத்தில் இருந்து எழுந்து வந்த பின்னும் நக்கீரனுக்கு ஐயம் தீரவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான் .நள்ளிரவு அரைத் தூக்கத்தில் எழுந்து விறுவிறுவென்று சொக்கன் சன்னதிக்குப் போகிறான். அங்கே சொக்கனில்லை .மீனாட்சி சன்னதியில் கொஞ்சல் மொழி கேட்கிறது .இங்கிதமின்றி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான் .

அங்கே மீனாட்சி மடியில் படுத்துக் கொண்டு கூந்தலை முகர்ந்தாவாறே சொக்கன் காதல் மொழி பிதற்றிக் கொண்டிருக்கிறான் .நக்கீரன் உள் நுழைய மீனாட்சி அவசர அவசரமாக எழுந்து தன் உடையைத் திருத்துகிறாள் வெட்கத்தோடு.

நக்கீரன் மீண்டும் ஐயம் கேட்கிறான் .சொக்கன் சொல்லுவான்;“ நக்கீரா ! காதலித்திருக்கிறாயா? காதலித்துப் பார், கூந்தல் மணக்கும். எச்சில் இனிக்கும். குழந்தையின் மழலை மொழி யாழைவிட குழலைவிட இனிதாவதைப் போல - சிறுகை அளாவிய கூழ் அமிர்தமாவதை போல ... போ... போ... போய் காதலித்துப் பார்.”

காதலின் மாயாஜாலம் புரிந்தவனாய் நக்கீரன் திரும்புகிறான்.

காதலும் அன்பும் குறையை மறைத்து நிறைவைத் தரும்; அந்த வெள்ள அன்பின் பெருக்கில் வாழ்க்கை சுகிக்கும் .குறை நிறைகளோடு ஒருவரையொரு வர் ஏற்பதே வாழ்வின் வெற்றியாகும் .
ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வ தென்பதன் பொருளென்ன?தமிழீழப் போர்ச் சூழலிலும் நாளாயினி தாமரைச் செல்வி எனும் பெண்கவிஞர் மொழிந்த காதல் வாழ்வு விடையாகும் .

“காதல் என்றால்என்னவென்று தெரியுமா உனக்கு ?

எனக்கே எனக்கான வாழ்வையும்

உனக்கே உனக்கான வாழ்வையும்

நீயும் , நானும்

மனம் கோர்த்து

வாழ்ந்து பார்ப்பதுதான்.

அதற்காக,

என் வாழ்வை,

என விருப்பை வெறுப்பை

எல்லாம் துறந்து

உனக்காய் மட்டும்

உன் விருப்பு வெறுப்போடு

உனக்காய் வாழ

எனக்கு இஷ்டமில்லை .

நீ நினைக்கும்

குருட்டு

செவிட்டு

ஊமைக் காதலியாய்

நான் இருப்பேன் என

நினையாதே!”


அன்பும் அறிவும் சங்கமிக்கும் சமத்துவ வாழ்வின் வாசல் இதுதானே!

“அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”

-என்ற வள்ளுவரின் அளப்பரிய மெஞ்ஞானத்தோடு
“அன்பும் அறிவும் உடைத்தாயின்... என்ற

பொருள் பொதிந்த புதிய சொற்றொடரையும் சேர்ப்பது காலத்தின் தேவை அல்லவா?

நன்றி ; தீக்கதிர் , வண்ணக்கதிர் , 13/05/2018.