கோழிக்கோடு சொன்ன சேதி - 4

Posted by அகத்தீ Labels:


கோழிக்கோடு சொன்ன சேதி - 4
இனியும் வெல்லப்போவது சோஷலிசமே!
இடதுசாரி ஜனநாயகப் பாதையில் அணி சேர்வீர்!

மார்க்சியத்துக்கு குருபீடம் எங்கும் இல்லை இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எ. பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரு பிரசுரத்தின் தலைப்பு. சீனப் பாதையையோ, ரஷ்யப் பாதையையோ காப்பியடித்து இந்தியாவில் சோஷலிசப் புரட்சியைக் கொண்டு வர முடியாது என்பதையும்; இந்தியாவின் தனித்த சூழலை கணக்கில் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் வகுத்திருக்கிறது என்றும் அவர் வலுவாகச் சொன்னார். கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உதயமான சூழலில் சாதாரண மக்கள்கூட இது ரஷ்யக் கட்சியா, சீனக் கட்சியா என கேட்கிற நிலை இருந்தது. அப்போதுதான் நாங்கள் இந்தியப் பாதையில் செல்கிறோம் என மார்க்சிஸ்ட் கட்சி உரக்க முழங்கியது. சோஷலிசத்திற்கான இந்தியப் பாதை என தோழர் இஎம்எஸ் எழுதிய கட்டுரைகள் புதிய வெளிச்சத்தை அளித்தன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான் இந்த கோழிக்கோடு மாநாட்டில் சில தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் முந்தையத் தீர்மானங்களை மறுதலிப்பது அல்ல. 1968ல் பர்துவானில் உருவாக்கப்பட்ட தத்துவத் தீர்மானமும், 1990ல் சென்னையில் நிறைவேற்றப்பட்ட தத்துவத் தீர்மானமும் அன்றுவரையிலான சர்வதேசச் சூழலைக் கணக்கில் எடுத்து சில வரையறைகளை மேற்கொண்டது. அதன் பின்னர், உலகத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கொப்ப புரிதலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் விளைவுதான் இத்தீர்மானம். இதை முன்மொழிந்த சீத்தாராம் யெச்சூரி கூறியதுபோல முந்தையத் தீர்மானங்களையும் சேர்த்தே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

64 பக்கங்கள் கொண்ட தீர்மானத்திற்கு 40 பக்க விளக்கக் குறிப்புகள் என்பது தீர்மானத்தின் துல்லியத்தையும் நேர்மையையும் பறைசாற்றுவதாகும்.

வர்க்க சக்திகளின் பலாபலன்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில் நிதி மூலதனம் சர்வதேச அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்திவரும் சூழலில்; வரலாற்றின் ஒரு காலகட்டம்  நேர்கோட்டுப் பயணமாகவோ அல்லது ஒருவழிப்பாதையாகவோ இருக்காது என்ற தெளிவான புரிதலை இத்தீர்மானம் முன்வைக்கிறது. உயர்ந்தபட்ச லாபம் தேடி நிதிமூலதனம் சகல மனித மாண்புகளையும் சிதைத்து கண்டம் விட்டு கண்டம் தாவிக் கொண்டிருப்பதை தேச எல்லைகளை மிதித்துத் துவைத்துவிட்டு சுரண்டல், கொள்ளை, ஆதிக்க தர்பார் நடத்துவதை தீர்மானம் சுட்டிக்காட்டி உள்ளது.

மனிதர்களுக்காக பொருட்களை உற்பத்தி செய்வது என்பது மட்டும் அல்ல; தாங்கள் செய்து குவிக்கிற பொருட்களை வாங்குகிற நுகர்வோர்களாக மனிதர்களை உருவாக்க நிதிமூலதனமும் ஏகாதிபத்தியமும் கட்டவிழ்த்து விட்டுள்ள பிரச்சார மயக்கத்தை இத்தீர்மானம் படம் பிடிக்கிறது.

சிலரின் தனிப்பட்ட பேராசையோ, ஒழுங்காற்று அமைப்புகளின் பலவீனமோ இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் அல்ல. மாறாக, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த தன்மையாகிய எதைச் செய்தாவது கட்டுப்படுத்த முடியாத லாப வேட்கையே இதற்கான காரணம் என்கிற அடிப்படையை தீர்மானம் கோடிட்டு காட்டுகிறது. அதன் விளைவாக உலகெங்கும் சந்திக்கும் நெருக்கடிகளை, அதற்கு எதிரான போராட்ட எழுச்சிகளை இந்தத் தீர்மானம் சரியாகச் சுட்டிக் காட்டுகிறது.

ஏகாதிபத்தியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரசு பயங்கரவாதமும், அடிப்படை வாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்படும் தனிநபர் பயங்கரவாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன என்பதை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்ய இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

பண்பாட்டுத் துறையிலும், அறிவுத் துறையிலும் ஏகாதிபத்தியமும் நிதிமூலதனமும் தங்களின் லாப வேட்டைக்கு ஏற்ப உருவாக்கி வரும் சீர்குலைவு தத்துவப் பிரச்சாரத்தை, கருத்துப் பிரச்சாரத்தை கவலையோடு இம்மாநாடு அலசியது. மனித குலத்தின் புரட்சிகர முன்னேற்றத்தை எட்ட வேண்டுமானால் தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் ஒட்டு மொத்த முயற்சிகளில் ஒரு பகுதியாக ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டுள்ள தத்துவார்த்த தாக்குதலுக்கு எதிராக உறுதியாகப் போராடுவது தேவைப்படுகிறது என்ற வரலாற்றுக் கட்டாயத்தை மாநாடு உள்ளங்கை நெல்லிக்கனி என உணர வைத்தது. இன்றைய ஊடகங்கள் பெரும் முதலாளிகள் கையில் சிக்கி உள்ளதை - அவர்களின் தேவைக்கேற்ப சுயநலமிக்க மனிதர்களையே உருவாக்க அவை முயல்வதை - இத்தீர்மானம் சுட்டிக்காட்டியதுடன், கருத்துருவாக்கத்தில் ஊடகங்கள் ஆற்றும் பெரும் பங்கை எடுத்துக்காட்டி அவற்றுக்கெதிராக மெய்யான மனிதத்தை உருவாக்கும் கருத்துப் பிரச்சாரத்தின் தேவையை மாநாடு வலியுறுத்தி உள்ளது.

சீனா, கொரியா, கியூபா உள்ளிட்ட சோஷலிச நாடுகளில் ஏற்பட்டு வரும் நிகழ்ச்சிப் போக்குகளை மிகுந்த அக்கறையோடு இம்மாநாடு விவாதித்தது. சீனாவோ கொரியாவோ சோஷலிசப் பாதையை விட்டு விலகிச் சென்று விட்டது என்று தூற்றுவோர்களின் கூற்றையும் இம்மாநாடு ஏற்கவில்லை. அதே நேரத்தில் உலகச் சூழல் காரணமாக இந்நாடுகளில் உருவாகி வரும் சில போக்குகள் குறித்து எச்சரிக்கையோடு இம்மாநாடு அணுகியது. அரபு வசந்தம் என்கிற பெயரில் அரபு உலகில் ஏற்பட்டு வரும் போராட்டங்கள், லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளின் கை வலுப்பட்டு வருவது உட்பட பலவற்றை இம்மாநாடு பொறுப்பு உணர்வோடு காய்தல் உவத்தல் இன்றி அலசி ஆராய்ந்தது.

பின் நவீனத்துவம், அடையாள அரசியல் உட்பட மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் குறித்துத் தெளிவான கண்ணோட்டத்தை இம்மாநாடு முன்வைத்துள்ளது. அதேசமயம், இன்றைய கால மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களுக்கும், எதிர்காலத்தில் எழக்கூடிய மற்றவைகளுக்கும் எதிராக சித்தாந்த ரீதியிலும்; வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் அதன் வெளிப்பாடுகளுக்கு எதிராகவும்; நடைமுறையில் நேரடியாக மோத வேண்டிய அவசியம் உள்ளது.

என விரிவாக சொல்லிவிட்டு இந்தியச் சூழலில் சந்திக்கிற பிரச்சனைகளைப் பட்டியல் இட்டுள்ளது. சாதியம், வகுப்புவாதம் இவற்றுக்கு எதிராக போராடுவதும், வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதும் எவ்வளவு சவாலான விஷயம் என்பதையும்; தொழிலாளி விவசாயி கூட்டணியை வளர்ப்பதே மெய்யான தீர்வு நோக்கிய பயணம் என்பதையும்; இடதுசாரி ஜனநாயக மாற்றே இன்று நம்முன் உள்ள நம்பகமான உறுதியான மாற்று என்பதையும்  இத்தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. நாடாளுமன்றத்தை பயன்படுத்துகிறபோது ஏற்படுகிற நோய்களையும், அதை வெல்லுவதற்கான தத்துவ வழிகாட்டலையும் இத்தீர்மானம் அளித்துள்ளது.

முதலாளித்துவம் எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது. 21ஆம் நூற்றாண்டிலும் சோஷலிசமே ஒரே மாமருந்து. அதனை விடாப்பிடியாக பற்றி நின்று முன்னிலும் வலுவாய் - முன்னிலும் வீரியமாய் - முன்னிலும் விரிவாய் - முன்னிலும் தெளிவாய் முன்னெடுத்துச் செல்ல இத்தீர்மானம் ஒரு கருத்தாயுதமாகவே வார்க்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கு கொரியா, கிரீஸ், சைப்ரஸ், பிரேஸில், பொலிசாரியோ, அமெரிக்கா, பொஹிமா மொரவியா, அயர்லாந்து, ஈரான், இத்தாலி உட்பட பல நாடுகளிலிருந்து இம்மாநாட்டை வாழ்த்திச் செய்திகள் வந்திருந்தன. ஒருகாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சர்வதேச அநாதைகள் என்றனர். இன்று உலகெங்கும் இருக்கிற அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளி வர்க்க கட்சிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்லுகிறது என்பதை உன்னிப்பாகக் காதைத் தீட்டிக்கொண்டு கேட்கிறார்கள். ஆளும் வர்க்கமும் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மிக நுட்பமாக கவனிக்கிறார்கள். மாநாட்டைப்பற்றிச் செய்திகள் வெளியிட உலகெங்கும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஊடகப் பிரதிநிதிகள் குவிந்திருந்தது இதன் சாட்சி. அவர்கள் நம்மை விமர்சிக்கட்டும். நாம் சரியான பாதையில் பயணப்படுகிறோம் என்பதற்கு அதுவே அத்தாட்சியாகி விடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தேர்தல் தோல்விகளால் அழித்து ஒழித்து விட முடியாது. அவதூறு கரையான்களால் தின்று அழிக்க முடியாத நெருப்புப் பேரலையாய் உழைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாய் எழுந்து விட்டனர். இதைத்தான் நிறைவுநாள் பேரணி உலகுக்குப் பறை சாற்றியது.  நாம் வெல்லுவோம். நாம் வெல்லுவோம். நாம் வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை

- சு.பொ. அகத்தியலிங்கம்

கோழிக்கோடு சொன்ன சேதி -3

Posted by அகத்தீ Labels:


கோழிக்கோடு சொன்ன சேதி -3

மண்டிக் கிடக்குது இங்கே பிரச்சனைகள்
மக்களைத் திரட்டி களத்தில் நிற்பீர்!

பக்கம் பக்கமாய் ஆவணங்கள், மணிக் கணக்கில் விவாதங்கள் எல்லாம் எதை நோக்கி? மார்க்சியம் திண்ணை வேதாந்தம் அல்ல. மக்களை படிப்படியாய் முன்னேற்ற மார்க்கம் சொன்ன தத்துவம். அதனை வழிகாட்டியாகக் கொண்ட கட்சியின் மாநாட்டில் பேசப்பட்டது எல்லாம் மக்கள் பிரச்சனைகள் அன்றி வேறு என்ன?

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்களின் தலைப்புகளை, உள்ளடக்கத்தை ஒரு பருந்துப் பார்வையில் வலம் வந்தாலே மக்களோடு மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ள பற்றும் அக்கறையும் பளிச்சிடும்.

வறுமைக்கோட்டின் கீழே வாழ்கிற மக்களை மீட்டு எடுப்பதற்கு உருப்படியாக திட்டம் தீட்ட வக்கில்லாத அரசு மோசடியாக வறுமைக் கோட்டையே மாற்றி அமைத்ததை ஒரு தீர்மானம் கடுமையாகக் சாடியது. அதன் தொடர்ச்சியாக வந்த இன்னொரு தீர்மானம் 46 கோடி மக்களுக்கு மேல் முறைசாராத் தொழிலில் இருப்பதை - குறிப்பாக சமூகத்தில் உழைக்கத் தயாராக இருப்பவர்களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் தொழிலாளியாகவே இருப்பதை அடிக்கோடிட்டு காட்டி அனைவருக்கும் சமூக பாதுகாப்புப் பலன்கள் வழங்க வேண்டுமென ஒரு தீர்மானம் வலியுறுத்தியது.

கெட்டும் பட்டணம் போ என்ற பழமொழிக்கு ஏற்ப பிழைக்க நகரங்களை நாடிய ஏழைப் பாட்டாளிகளின் வாழ்நிலை எவ்வளவு படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை கவலையோடு ஒரு தீர்மானம் அலசியதோடு இதற்குத் தீர்வு காணவும் வற்புறுத்தியது. மக்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமிக்கிற பல கோடி ரூபாயை சூறையாட சர்வதேச நிதி நிறுவனங்களும், பெரும் முதலைகளும் வாய் பிளந்து நிற்பதை நெஞ்சம் பதைக்க ஓர் தீர்மானம் இடித்து உரைத்தது. அதேபோல, வேலை வாய்ப்பு எப்படி முயல் கொம்பு ஆகிவருகிறது என்பதை இன்னொரு தீர்மானம் புள்ளி விவரங்களோடு வடித்துக் கொடுத்தது. மறுபுறம், இருக்கிற வேலைகளும் கான்ட்ராக்ட் முறைக்கு மாற்றப்படுவதை அடுத்து வந்த தீர்மானம் அம்பலப்படுத்தியது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட துணைத் திட்டம் படும்பாட்டை ஒரு தீர்மானம் படம் பிடித்தது. மலைவாழ் மக்கள் வாழ்வுரிமையையே கேள்விக்குறியாக்கும் தனியார் சுரங்கக் கொள்ளைக் குறித்து இன்னொரு தீர்மானம் குத்தீட்டியாய் பாய்ந்தது. நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடத்திலும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்கிற அவலத்தையும், விவசாயத் துறை சந்திக்கிற சவால்களையும், நிலச்சீர்திருத்தத்தின் அவசியத்தையும் அடுத்தடுத்த தீர்மானங்கள் வரைந்து காட்டின. பெண்கள், சிறுபான்மையோர், மாற்றுத் திறனாளிகள் என எந்தப் பிரிவினரின் வாழ்க்கைப் பிரச்சனையையும் விட்டு வைக்காமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மிக முக்கியமானது.

வெறுமே செய்திக்காக நிறைவேற்றப்பட்டது அல்ல இந்தத் தீர்மானங்கள். மண்டிக் கிடக்கும் மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அதை நோக்கி மக்களைத் திரட்டி களத்தில் இறங்க ஆயுதமாகவே இத்தீர்மானங்கள் மாநாட்டு உலைக்களத்தில் புடம் போடப்பட்டன.

இந்தத் தீர்மானங்கள் ஒருபுறம். மறுபுறம், இரண்டு மாதங்களாக விவாதிக்கப்பட்ட அரசியல் தீர்மானமும், அரசியல் ஆய்வு அறிக்கையும் மிக முக்கியமானது. இருபது பக்கங்களில் 46 பத்திகளில் உலகை பீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி தொடங்கி உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிற நெருக்கடிகளையும் எழுச்சிகளையும் மிக நுட்பமாக கோர்த்துத் தரப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் தீர்மானம் கூறுகிறது, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு முதலாளித்துவத்திடம் இருந்து வந்த குதூகல மனநிலை மறைந்திருக்கிறது. அந்த இடத்தில் முதலாளித்துவத்தின் எதிர்காலம் குறித்த ஒருவகையான நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதுஎனவும் நெருக்கடியின் சுழற்சியில் இருந்து விடுபடுவதற்குள்ள ஒரே மாற்று சோஷலிசமே ஆகும். உழைக்கும் வர்க்க இயக்கத்தை வலுப்படுத்துவதும், விரிந்து பரந்த இடது சாரி அரசியல் மாற்றை உருவாக்குவதும் காலத்தின் தேவையாகும்என்றும் உறுதிபட உரைக்கிறது.

62 பக்கங்களில் 157 பத்திகளில் இந்தியாவின் சூழல் அலசப்பட்டுள்ளது. அந்நிய மூலதனம் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்ளுக்கு ஆதரவாக செயல்படும் ஐமுகூ அரசின் நவீன தாராளமயமாக்கல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் அதன் விளைவாய் எழும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சரிவு, உணவுப் பாதுகாப்பில் சிக்கல், விவசாயத் துறை நொடிந்து விவசாயிகளைத் தற்கொலைக்குத் துரத்துவது, ஊழல், உழைப்பாளி மக்கள் சந்திக்கும் சவால்கள் என தாராளமயமாக்கலின் இருபது ஆண்டுகளின் அவலத்தை மிகத் துல்லியமாக இத்தீர்மானம் அம்பலப்படுத்துகிறது. வகுப்புவாதம், பயங்கரவாதம், மத்திய - மாநில உறவுகள் சீர்கெடுவது, பண்பாட்டுச் சீரழிவு ஊடகங்களின் அரசியல், இங்குள்ள கட்சிகளின் நிலைமைகள் என இத்தீர்மானம் சுட்டாத விஷயமே இல்லை.

அடையாள அரசியல் குறித்து முதன்முறையாக கட்சியின் அரசியல் தீர்மானம் வலுவாகப் பேசி உள்ளது.

சமூக அடக்குமுறை, பாரபட்சம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்படும் குழுக்கள் மற்றும் சமூகங்கள் அடையாள அரசியலை வளர்ப்பதற்கு வளமான மண்ணாக விளங்குகிறது. ஜாதி, ஆதிவாசி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு   ஆளாகும்  ஒரு பகுதி மக்கள் அடையாள அரசியலின் பின்னால் அணி திரட்டப்படுவதற்கு ஏற்ற நிலையில் இருக்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குறுகிய நோக்கம் கொண்ட குழுக்கள் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அரசியலுக்கு நிதி உதவி செய்கின்றன; இது வர்க்க ரீதியான திரட்டல் மற்றும் வர்க்கம் சார்ந்த இயக்கங்களைச் சிதைக்கும் நோக்கம் கொண்டது, எனவும்; பொதுவான வர்க்க அடிப்படையிலான இயக்கங்களைக் கட்டுவதன் மூலம் அடையாள அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதேநேரத்தில் சமூகத்தின் பல்வேறு பகுதியினரிடம் காணப்படும் ஜாதி சமூக மற்றும் பாலியல் ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது எனவும், எவ்விதக் குழப்பமும் இன்றி கட்சி வழிகாட்டி உள்ளது. சமூகப் பிரச்சனைகளைக் கையிலெடுக்க வலுவாக அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலக் குழுக்கள் இப்பணியில் செயல்படத் துவங்கி உள்ளதை உரக்கப் பாராட்டி உள்ளது, தொடர வற்புறுத்தி உள்ளது.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் அரசியல்ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் கட்சி சந்தித்த சவால்களை அரசியல் ஸ்தாபன அறிக்கை நுட்பமாக அலசியுள்ளது. மேற்கு வங்கத்தில் இடது சாரி அரசுகள் வீழ்த்தப்பட்டது. இதன் காரணத்தை இத்தீர்மானம் ஆராய்ந்துள்ளதோடு சில பிரச்சனைகளில் செய்துள்ள தவறுகளை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. அதே வேளையில் 35 ஆண்டுகால மேற்கு வங்க இடது சாரி அரசின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதனை மீண்டும் உரக்கச் சொல்ல வேண்டுமென வற்புறுத்தி உள்ளது. கட்சியை விரிவாக்க, வலுவாக்க, உறுதியாக்க எல்லா வகையிலும் முயற்சி செய்ய கட்டளை இட்டுள்ளது.

நிலம், உணவு, வேலை வாய்ப்பு, சமூக நீதி இவற்றுக்காகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டிப் போராட மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. இடது சாரி ஜனநாயக மாற்று ஒன்றே உண்மையான மாற்றாக இருக்க முடியும் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது. ஆலைத் தொழிலாளிகள், முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அறிவுஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலன்களை இடது மற்றும் ஜனநாயகத் திட்டமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என தீர்மானம் ஆணி அடித்தாற்போல் சொல்லுகிறது.

இடது மற்றும் ஜனநாயக மேடையில் மேலே நாம் பட்டியல் இட்ட எண்ணற்ற பிரச்சனைகள் அடிப்படையிலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ச்சியாக மக்களைத் திரட்டிப் போராடுவதே ஒரே மாற்று. தேர்தல் நேரங்களில் அப்போதைய அரசியல் தேவைகளுக்காக செய்யப்படுகிற உடன்பாடுகள் மாற்று அல்ல, அது தீர்வும் அல்ல. மாறாக போராட்டக் களத்தில் - போராட்ட நெருப்பில் கைகோர்க்கிற பிணைப்பே உண்மையான இடதுசாரி மாற்று. அதுவே இந்திய மக்களை புதிய பாதையில் இட்டுச் செல்லும் ஒரே மார்க்கம். அவ்வழியில் போராட எழுவீர்! மக்களோடு இரண்டறக் கலந்து களத்தில் அணி வகுப்பீர்!

    

கோழிக்கோடு சொன்ன சேதி -2

Posted by அகத்தீ


கோழிக்கோடு சொன்ன சேதி -2
அந்த 48 மணி நேரம் நடந்தது என்ன?
உட்கட்சி ஜனநாயகத்தின் உரத்த சாட்சி


என்ன சார்! உங்கள ஒரு வாரமா காணோம்?  என அன்போடு விசாரித்த நண்பர்களிடம் ஏப்ரல் 4 முதல் 9 வரை ஆறு நாட்கள் எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றேன் என கூறியதை அவர்கள் நம்பவில்லை. ஆறு நாட்கள் மாநாடா? அப்படி என்னதான் செய்வீங்க? என அவர்கள் எதிர்கேள்வி கேட்டது நியாயம்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை மாநாடு என்பது பெரும் கூட்டத்தைக் காட்டுவதும், தலைவர்கள் உரையாற்றுவதற்குக் கைதட்டுவதும்தான் என்ற எண்ணத்தை இங்குள்ள பல கட்சிகள்  வலுவாக விதைத்துள்ளன. கொடி பிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான் கோஷமிடும் தொண்டன் கொள்கை வகுப்பான் என்ற சொற்றொடர்கள் இங்கே பல கட்சிகளுக்கு வெறும் சுவரொட்டி வாசகமே. இதற்கு முற்றிலும் மாற்றாய் அவ்வாசகத்தின் பொழிப்புரையாய் கோழிக்கோட்டில் மாநாடு நடந்தது என்பதை அவர்களுக்கு விவரித்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்தே போயினர். அரங்கிற்குள் பேராளர்கள் (டெலிகேட்டுகள்) மாநாடு ஆறு நாட்களுமாக 48 மணி நேரம் நடந்தது என்று சொன்னபோது அந்த 48 மணி நேரமும் அப்படி என்னதான் பேசினீர்கள் என வெடிச் சிரிப்போடு வினயமாய் அவர்கள் வீசிய கேள்வி நியாயமானது.  அதனை விளக்கியதோடு, தற்செயலாய் எம் பையிலிருந்த ஆவணங்களை அவர்கள் முன் விரித்தபோது  வியப்பின் உச்சிக்கே சென்றனர். பொதுமக்கள் பலருக்கும் இதே கேள்வி இருக்கும் என்பதால் அதுகுறித்து சற்று அலசுவோம்.

முதல் நாள் 11 மணி வரை மாநாட்டுத் திடலில் கலை நிகழ்வுகளும், கொடியேற்று நிகழ்ச்சிகளும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடந்தேறின. 11 மணி முதல் 1 மணி வரை அரங்கிற்குள் மாநாட்டு துவக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது அனைவரும் பங்கேற்ற நிகழ்ச்சி. அன்று மதியம் 3 மணி முதல் 9ஆம் தேதி மதியம் 1 மணி வரை ஆறு நாட்கள் பேராளர்கள் மாநாடு நடைபெற்றது. தினசரி காலை 9.30 மணி தொடங்கி இரவு 9 மணி வரை - தேநீர் உணவு இடைவேளை தவிர மாநாட்டுக்குள் மொத்தம் 48 மணி நேரம் உட்கட்சி ஜனநாயகத்தின் உன்னத சாட்சியாய் விவாதங்களும் உரைகளும் தீர்மானங்களும் அமைந்தன.

இம்மாநாட்டில் அரசியல் தீர்மானம், தத்துவார்த்தத் தீர்மானம், அரசியல் ஸ்தாபன அறிக்கை என மூன்று முக்கிய ஆவணங்கள் மனந்திறந்த விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டன. அதேபோல, கட்சி அமைப்பு விதிகளுக்குத் திருத்தமும் மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்டது.

அரசியல் தீர்மானம் ஆங்கிலத்தில் 59 பக்கங்கள் கொண்டது. 2 பகுதிகளை உள்ளடக்கியது. 203 பத்திகள் கொண்டது. முதல் பகுதி, சர்வதேச பகுதியாகும். இரண்டாவது பகுதி தேசியப் பகுதியாகும். தத்துவார்த்தத் தீர்மானம் 81 பக்கங்களையும் 11 பகுதிகளையும் 160 பத்திகளையும் கொண்டது. முதல் 48 பக்கங்களில் தீர்மானமும் அதைத் தொடர்ந்து 33 பக்கங்களில் 39 விளக்கக் குறிப்புகளும் அடங்கும். அரசியல் ஸ்தாபன அறிக்கை என்பது அரசியல் பரிசீலனை, ஸ்தாபனப் பரிசீலனை, வர்க்க வெகுஜன அமைப்புகளின் பரிசீலனை, 12 அட்டவணைகள், 218 பக்கங்கள் கொண்டதாகும். இந்த விவரங்களை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், அறிக்கைகள் வெறும் வசனமாகவோ தலைவர்களின் சொற்பொழிவாகவோ அமையாமல், எவ்வளவு பொறுப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை  உணர்த்தவே. இந்த அறிக்கைகளை கட்சி முழுமையும்  மாநாட்டுப் பேராளர்களும் நுட்பமாக விவாதித்தனர் என்றால் எவ்வளவு சமூக பொறுப்பும் அரசியல் விழிப்புணர்வும் இருக்குமென்பதை சொல்லவும் வேண்டுமோ? நண்பர்களிடம் இது குறித்து பேசியபோது மாபெரும் ஆய்வுப் பணியை மேற்கொண்டீர்கள் என்று சொல்லுங்கள் என்றனர். ஆம், ஆனால் இந்த ஆய்வு வெறுமே சில தலைவர்களால் மட்டுமே நிறைவேற்றப்படவில்லை. கட்சி அணிகள் முழுமையும் பங்கேற்றது. 727 பேராளர்களும் 74 பார்வையாளர்களும் பங்கேற்று உணர்வுபூர்வமாய் ஈடுபட்டு நிறைவேற்றியதாகும்.

அரசியல் தீர்மானமும் தத்துவார்த்தத் தீர்மானமும் மாநாடு துவங்குவதற்கு 2 மாதங்கள் முன்பே கட்சி மத்தியக் குழுவால் பகிரங்கமாக வெளியிடப்பட்டுவிட்டது. இது ரகசிய ஆவணமல்ல. இதன் மொழி பெயர்ப்பும் எல்லா மாநிலக்குழுவாலும் வெளியிடப்பட்டன. கட்சி அணிகள் முழுவதும் இதை விவாதித்தது.


கட்சியின் 93,107 கட்சிக் கிளைகள், 5,733 வட்டாரக் குழுக்கள், 971 பகுதி- வட்டக் குழுக்கள்,397 மாவட்டக் குழுக்கள், 22 மாநிலக் குழுக்கள், 4 மாநில அமைப்புக் குழுக்கள் என அனைத்து மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானத் திருத்தங்கள் மத்தியக்குழுவுக்கு மாநாட்டுக்கு முன்பே அனுப்பப்பட்டது.


அரசியல் தீர்மானத்திற்கு 3,713 திருத்தங்களும், 483 யோசனைகளும் அனுப்பப்பட்டிருந்தன. இதுபோக மாநாட்டில் பேராளர்கள் 326 திருத்தங்களையும் 33 ஆலோசனைகளையும் வழங்கினர். இதுபோல தத்துவத் தீர்மானத்திற்கு 984 திருத்தங்களும் 86 யோசனைகளும் முன்கூட்டியே அனுப்பப்பட்டிருந்தன. மாநாட்டின்போது பேராளர்கள் 234 திருத்தங்களையும் 29 ஆலோசனைகளையும் முன்மொழிந்தனர். இதன்மீது விவாதம் நடைபெற்றது.

அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் பரிசீலனை அறிக்கைமீது நடைபெற்ற விவாதத்தில் 47 தோழர்கள் பங்கேற்று 472 நிமிடங்கள் கருத்துகளை சொன்னார்கள். அதுபோல தத்துவத் தீர்மானத்தின்மீது 47 தோழர்கள் பங்கேற்று 472 நிமிடங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். இதுபோக அரசியல் ஸ்தாபன அறிக்கையின்மீது 40 தோழர்கள் 390 நிமிடங்கள் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். ஆக இந்த மூன்று ஆவணங்களை சேர்த்து மட்டும் 1334 நிமிடங்கள் அதாவது 22 மணி நேரம் 24 நிமிடங்கள் 134 தோழர்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே சுட்டியதுபோல மூன்று ஆவணங்களிலும் மொத்தமாக  5357 திருத்தங்களும், 633 யோசனைகளும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இப்போது நாம் சவால் விட்டுக் கேட்கிறோம். வேறு எந்தக் கட்சியில் இவ்வளவு விரிவாக - இவ்வளவு பங்கேற்போடு - இவ்வளவு நுட்பமாக தொண்டர்களின் கருத்துகள் முழுமையாக கேட்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது? உட்கட்சி ஜனநாயகம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வெறும் வார்த்தையல்ல. உயிரோட்டமுள்ள செயல்முறை. அதன் முழு சாட்சிதான் இவ்வளவு நெடிய விவாதம்.

இதன்பிறகு, தொகுப்புரை வழங்கப்பட்டு திருத்தங்கள்மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஒன்றிரண்டு தோழர்களின் ஆட்சேபனையோடு ஆவணங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுபோக அமைப்பு விதிகளில் சில திருத்தங்களை மத்தியக் குழு முன்மொழிந்தது. அதற்கும் 12க்கும் மேற்பட்ட திருத்தங்கள் பேராளர்களால் முன்மொழியப்பட்டன. மாநாட்டுக்கு முன்பும், டஜனுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அனைத்திற்கும் உரிய விளக்கம் சொன்ன பிறகு ஏற்கப்பட்டது.

இதுபோக, 20க்கும்  மேற்பட்ட தீர்மானங்கள் தீர்மானக் குழுவால் முன்மொழியப்பட்டன. உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சனை மீதும் தீர்மானங்கள் அக்கறையோடு பேசின. இந்தத் தீர்மானங்களும் எழுத்து மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டு- உரிய திருத்தங்கள் முன்மொழிய பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டு பல திருத்தங்கள் ஏற்கப்பட்டு மாநாட்டின் ஒட்டு மொத்தக் குரலாய் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் முதல் தீர்மானம் அஞ்சலித் தீர்மானமாகும். அதுவே 24 பக்கங்கள் கொண்டது. கடந்த மாநாட்டிற்குப் பிறகு மறைந்த மூத்த தலைவர்கள், முன்னணி ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு போர்களத்தில் மடிந்த கியாகிகள் பெயர் பட்டியலை முன்வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 572 பேர், கேரளாவில் 27 பேர், பீகாரில் 10 பேர், திரிபுராவில் 6 பேர், ஆந்திராவில் 5 பேர், தமிழ்நாடு, சத்தீஷ்கர், ஒடிசாவில் தலா இருவர், மஹாராஷ்டிராவில் ஒருவர் என பெரும் பட்டியல் மனதை கனக்கச் செய்தது. இது சென்ற மாநாட்டுக்குப் பிறகு உள்ள கணக்கு. விடுதலைப் போர் தொடங்கி இன்றுவரை கம்யூனிஸ்ட்டுகள் செய்துள்ள உயிர் தியாகத்தைக் கணக்கிட்டால் மலைப்பே ஏற்படும். வர்க்கப் பகைவர்களும், மத வெறியர்களும், சுரண்டும் கூட்டமும், ஆதிக்க சாதி வெறியர்களும், சமூக விரோதிகளும் எம் தோழர்களை அன்றாடம் குருதி வெள்ளத்தில் வீழ்த்துகின்றனர். ஆயினும், எம் போராட்டம் தொடர்கிறது, தொடரும். இம்மாநாடும் அதன் ஒரு பகுதியே!

ஆக, அந்த 48 மணி நேரமும் என்ன நடந்தது? விவாதத்திற்கும் திருத்தங்களுக்குமே ஏறத்தாழ 24 மணி நேரத்திற்கு மேல் செலவிடப்பட்டது. ஆவணங்களை முன்மொழிய, தொகுப்புரை வழங்க, இதர 24 மணி நேரம் பயன்பட்டது.இதில்மொத்தமாக ஏறத்தாழ 8 மணி நேரம் அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த அளவு விரிந்து பரந்த அரசியல் விழிப்புணர்வு மிக்க உள்கட்சி ஜனநாயத்தை வேறெங்கு காண முடியும்? கட்சியின் மத்தியக் குழுவை, தலைமைக் குழுவை, கட்டுப்பாட்டுக் குழுவை ஏகமனதாக தேர்வு செய்ததென்பது வெறுமே தலைவருக்குக் கட்டுப்பட்டு தலையாட்டும் செயலாக அல்ல. கருத்தொற்றுமை, செயலொற்றுமை அதற்கே மாநாட்டில் உட்கட்சி ஜனநாயகம் முன்னுரிமை அளித்தது. அதில் வெற்றியும் பெற்றது. இம்மாநாட்டு ஆவணங்களில் தீர்மானங்களில் வெளிப்படும் தொலை நோக்கையும் சமூக அக்கறையையும் சொல்லவும் வேண்டுமோ?

கோழிக்கோடு சொன்ன சேதி: 1

Posted by அகத்தீ Labels:


கோழிக்கோடு சொன்ன சேதி: 1
தியாக வரலாற்றை முன்னெடுத்துச் செல்க!
மண்ணில் காலூன்றி வீரியமாய் எழுக!


வரலாற்று ஞானமும் பண்பாட்டுப் புரிதலும் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டு நம்மை வியப்பின் விளிம்புக்கே இட்டுச் சென்றன. கோழிக்கோட்டில் ஏப்ரல் 4 முதல் 9 வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராயத்தில் (காங்கிரஸில்) பங்கேற்ற ஒவ்வொருவரின் அனுபவமும் இதுவே. 3ஆம் தேதி நள்ளிரவில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்த தமிழக மற்றும் இதர மாநில பேராளர்கள் (டெலிகேட்டுகள்), பார்வையாளர்களை கேரளத்து பாரம்பரியத்தைப் பறைசாற்றும் செண்டை மேளம் முழங்க வரவேற்றபோது ஏற்பட்ட நெகிழ்வை என்னென்று சொல்வது? அதிலும் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாய் கூடி - சிகப்புச் சீருடையோடு செண்டை முழங்கிய காட்சி பழமையும் புதுமையும் கைகோர்த்து நம்மை வரவேற்ற மாட்சியாகும்.


முதல் நாள் துவக்க நிகழ்ச்சியாகட்டும், நிறைவு நாள் பேரணியாகட்டும், தினசரி காலை, மதியம், இரவு என வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேராளர்களுக்கு நிகழ்த்திக் காட்டிய கலை நிகழ்வுகளாகட்டும், கண்காட்சியாகட்டும், மாநாட்டுப் பிரச்சார கலை நிகழ்வுகளாகட்டும் அனைத்திலும் மீண்டும் மீண்டும் உரக்க சொன்ன செய்தி ஒன்றுதான். தியாக வரலாற்றை - தத்துவ உறுதியை கேரளத்து மண்ணின் மணம் கமழ பண்பாட்டோடு குழைத்து வழங்கியதுதான் அச்செய்தி.


தியாக வரலாற்றை வெறும் கம்யூனிஸ்ட் இயக்க தியாகமாகச் சுருக்கி விடவில்லை. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் கால் பதித்தபோது எதிர்த்து சமரிட்டு குருதி வெள்ளத்தில் வீழ்ந்த குஞ்ஞாலி மரைக்காயர் தொடங்கி உழைப்பாளி மக்களின் உன்னத உரிமைப் போராட்டம் வரை - அகில இந்திய முக்கிய நிகழ்வுகளோடு கேரளத்து முத்திரையையும் கலந்து - காந்திக்கும் உரிய இடத்தைக் கொடுத்து - சமூக சீர்திருத்த போராட்டத்தை தகுந்த அளவில் முன்னிறுத்தி வரலாற்றை ஒரு சமூகப் படிப்பினையாய் பாடல்களில், கலை நிகழ்வுகளில், கண்காட்சிகளில் தந்துள்ள பாங்கு வியப்பளிக்கிறது. பார்க்கும் போதும், கேட்கும்போதும் உணர்ச்சி கொப்பளிக்கிறது. குருதி சூடேறுகிறது. இசையும் பாடலும் மண்ணின் அடித்தளத்து மக்களின் ஆவேசக் குரலை நகலெடுத்துக் கொடுத்ததுபோல் அமைந்ததுதான் சிறப்பு. இது ஒரு நிகழ்வைப் பற்றியக் கணிப்பல்ல. ஒவ்வொரு நிகழ்விலும் இதே எதிரொலிதான்.


மாநாட்டில் தத்துவத்துக்கும் வரலாற்றுக்கும் கொடுத்த மிகுந்த முக்கியத்துவம் நம்மை சிந்திக்க வைக்கிறது. எந்த இடத்திலும் நிகழ்காலத் தலைவர்களின் ஒரு புகைப்படத்தைக்கூட, பிரகாஷ் காரத் , அச்சுதானந்தன், பினராய் விஜயன் உட்பட எந்தத்  தலைவரின் படத்தையும் காண இயலாது. இது கோழிக்கோட்டில் மட்டும் அல்ல. ஒட்டு மொத்தக் கேரளா முழுவதும் விளம்பரம், பிரச்சாரம் எதிலும் இதே நிலைதான். மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மற்றும் சே குவாரா போன்றவர்களின் படங்களும் சிலைகளும் நீக்கமற நிறைந்திருந்தன. இஎம்எஸ், ஏகேஜி போன்றவர்களுடைய படங்களும் பொன்மொழிகளும் - தியாகிகளின் படங்களும் வரலாறும் பார்ப்பவர்களோடு உரையாடிக்கொண்டே இருந்தன. வெளியிலே இருந்த இதே உணர்வு மாநாட்டு அரங்குக்குள்ளும் எதிரொலிக்காமலா இருக்கும்? மாநாட்டில் வழக்கமாக நிறைவேற்றப்படும் அரசியல் தீர்மானம், அரசியல் ஸ்தாபனத் தீர்மானம் இவற்றோடு தத்துவார்த்தத் தீர்மானத்தை முன்மொழிந்து விவாதித்து நிறைவேற்றியது இம்மாநாட்டின் கூடுதல் மகுடமாகும்.


இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்றத் தீர்மானங்களில் இரண்டு நூற்றாண்டுகள் குறித்த தீர்மானம் அடிக்கோடிட்டுக் காட்டத்தக்கன. ஒன்று, கத்தார் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்தது. 1913 ஏப்ரல் 1ஆம் தேதி சான் பிரான்ஸிஸ்கோவில் உருவாக்கப்பட்ட கத்தார் கட்சி இந்திய விடுதலைப் போரில் அக்னிக்குஞ்சை பொரித்தது சாதாரண நிகழ்வல்ல. காமகட்டமாரு கப்பலில் புறப்பட்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு படையாய் கிளம்பிய இவர்களின் உயிர்த்தியாகம் அளப்பரியது. 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 35க்கும் மேற்பட்டவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும்பாலோர் சீக்கியர்கள், பஞ்சாபியர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ? இந்த கத்தார் கட்சியை சார்ந்த பலர் பின்னர் கம்யூனிஸ்ட்டுகளாக மாறினார்கள் என்பது வரலாறு. இதன் நூற்றாண்டைக் கொண்டாடுவது அக்னிக்குஞ்சினை இளைஞர்களின் நெஞ்சக்கூட்டில் அடைகாக்கச் செய்வதாகும்.


இரண்டு, தோழர் பி. சுந்தரய்யா பிறந்த நூற்றாண்டுக் கொண்டாட்டம் குறித்த தீர்மானமாகும். மே 1, 2012 இந்த நூற்றாண்டு விழா துவங்குகிறது. 1930ஆம் ஆண்டு அமீர் ஹைதர்கானால் தாமும் கம்யூனிஸ்ட்டாக மாறி - தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை விதைக்கவும் அரும்பாடுபட்டார். தோழர் சுந்தரய்யா தெலுங்கானா ஆயுதப்புரட்சியின் தள நாயகன். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி. ஆந்திராவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வலுப்பெற வியர்வையைச் சிந்தியவர். விவசாயிகளை அணி திரட்டுவதில் முன்னின்றவர். மாணவர்களை கம்யூனிஸ்ட்டுகளாக வார்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றியவர். அவருடைய பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டமென்பது வெறும் சடங்கல்ல. தத்துவ வரலாற்று உணர்வை புதிய தலைமுறைக்கு பதியம் போடும் பெரும்பணி. மார்க்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல அடித்தளம் அமைக்கும் ஆக்கபூர்வமான செயல். அதற்கு இந்த மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.


இந்த நூற்றாண்டுகளை கொண்டாடுகிறபோது மாறிய சூழலில் - இந்த 21ஆம் நூற்றாண்டில் சோஷலிசம் சந்திக்கும் சவால்களை; அதனை எதிர்கொண்டு வெற்றிபெற பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய வியூகத்திற்கு அடித்தளமாகும் தத்துவார்த்தத் தீர்மானத்தை இம்மாநாடு ஒரு மாபெரும் போராயுதமாய் வடித்தெடுத்துத் தந்துள்ளது. 1968 பர்துவான் தீர்மானம், 1990 சென்னைத் தீர்மானம் இவைகளின் தொடர்ச்சியாய் இத்தீர்மானத்தை புரிந்துகொள்ள வேண்டுமென தோழர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டது கவனத்திற்கொள்ளத்தக்கது.


அத்துடன், இடது சாரிப் பாதையில் தேசத்தை முன்னெடுத்துச் செல்ல செயல் தளத்தை விரிவுபடுத்த இம்மாநாடு விடுத்துள்ள அறைகூவலும் மிக முக்கியமானது.


இந்த லட்சியப் பயணத்தை ஊக்கத்தோடு தொடர இந்த இரு நூற்றாண்டு கொண்டாட்டங்களும் நிச்சயம் உரமாகும். அத்துடன் தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் 29 முதல் துவங்கும் தீக்கதிர் பொன்விழா ஆண்டும் பெரும் வாய்ப்பாகிறது. மற்றவர்களுக்கு இரு பெரும் விழா. நமக்கோ முப்பெரும் விழா. இந்த சமூகத்தை வறுமைப் படுகுழியிலும், அறியாமை இருட்டிலும், ஏற்றத்தாழ்வெனும் பெரும் சதியிலும், சமூக ஒடுக்குமுறையெனும் கொடூரத்திலும் ஆழ்த்தியிருக்கும் சுரண்டல் தத்துவத்தையும் வரலாற்றையும் முறியடித்து பாட்டாளி வர்க்கம் முன்னேற இவ்விழாக்கள் துவக்கமாகட்டும். கேரள மாநாடு தந்த உணர்வோடு மண்ணில் வேரூன்றி,  நமது பண்பாட்டு சாரத்தை உள்வாங்கி, நமது வரலாற்றுத் தடங்களை - தியாகத் தடங்களை அடையாளம் கண்டு உரக்கப் பாடுவோம். உரக்கப் பேசுவோம். நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள், சாதி மத பேதமற்றோர்கள் என எங்கும் நமது பூபாள ராகம் ஓங்கி ஒலிக்கட்டும்.          

“புத்தகங்களைப் பரிசளியுங்கள்”-இது சரியான முழக்கமா?

Posted by அகத்தீ Labels:


நான் புத்தகங்களோடுதான் வாழ்கிறேன்.புத்தகங்களைப் புரட்டாமல் புத்தகங்களைப் பற்றிப் பேசாமல் ஒரு நாள்கூட நகர்வதில்லை.புத்தகங்கள் என் உடலில் இன்னொரு உறுப்பாகிப்போனது.இப்படி ஒவ்வொருவரும் சொல்லும் நாள் விரைக!எனது புத்தகதினச் செய்தி இதுவே

புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்பதை நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன்.எழுதி வருகிறேன்.செயல்படுத்தியும் வருகிறேன்.இது உன்னதப் பண்பாட்டுக் குறியீடு என்று இன்றும் நம்புகிறேன்.ஆனாலும் அனுபவக்கல்லில் உரசும்போது உண்மை சற்று இடறுகிறது என்பதைச் சொல்லுவதில் எனக்குத் தயக்கமில்லை.

வழக்கம் போல் நேற்றும் பணிக்கு மின்சாரரயிலில் பயணித்தபோது ரயில் சிநேகிதர்கள் அரட்டையினூடே புத்தகதினம் குறித்து நான் பேச விவாதம் சூடானது.அடுத்த மாதம் ஒய்வுபெறப்போகிற நண்பர் சொன்னார், “என் பணி ஓய்வு நிகழ்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்,ஆனால் எந்த பரிசும் தரக்கூடாது.”என்றார். அண்ணனுக்கு என்னாச்சு என்று மற்றவர்கள் கிண்டலடிக்க அவர் சொன்ன விளக்கம் என்னை உலுக்கிவிட்டது.

நானும் என் தோழர்களும் எந்த விழாவாயினும் புத்தகங்களை பரிசு கொடுப்பதைச் சுட்டிக்காட்டி    அதனால் என்ன பயன் என்றார்.நானும் என் தோழர்களும் பரிசாகக் கொடுத்த எந்தப் புத்தகத்தையும் தான் புரட்டிக்கூடப் பார்த்ததில்லை என்றும் அவற்றை பழையபேப்பருக்குப் போட்டதைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை என்றவர்.மீண்டும் அப்படி நடக்க வேண்டாம் என்பதற்காகவே பரிசே தரவேண்டாம் என்று கூறியதாகத் தெரிவித்தார்.கூடவே சகநண்பர்களைப் பார்த்து நீங்களெல்லாம் மொய்யோடுதான் வரவேண்டும்,இல்லையென்றால் வரவேண்டாம்..தோழருக்கு மட்டும்தான் விதிவிலகு என்றார்.பயண அரட்டை தொடர்ந்தது.

என் நினைவில் அவர் கூறிய சொற்கள் புகுந்துகொண்டு வெகுநேரம் பாடாய்ப்படுத்தியது. “பாத்திரம் அறிந்து பிச்சையிடு”என்று அவ்வை கூறியது இதுக்குத்தானோ என்கிற எண்ணம் மேலோங்கியது.அவர் கந்தசஷ்டி கவசமும், சக்தி கவசமும் மட்டுமே படிக்கிறவர்.செய்தித்தாளில் வார ஏடுகளில் கூட சோதிடம்,ஆன்மீகம் பகுதிகளை மட்டுமே வாசிக்கிறவர்-அவருக்கு முற்போக்கு புத்தகங்களைப் பரிசளித்தது எம் தவறுதானே?

புத்தகங்களை பரிசளிப்பது என்பதை எந்திரத்தனமாக அமல்படுத்தும் காட்சிகள் நினைவுக்கு வந்தன.நம்மிடம் உள்ள புத்தகங்களை மீண்டும் யாராவது பரிசளித்தால் நமக்கு ஏற்படும் சலிப்பை எண்ணாமல் இருக்க முடியவில்லை.பொதுவாக நம் வீடுகளில் ஒன்றுக்கு நான்காய் கிடக்கும் திருக்குறளும், பகவத்கீதையும் எப்படியோ பரிசாக வந்தவைகளாகத்தான் இருக்கும். ஆனாலும் அவசரத்துக்கு திருக்குறள் புத்தகம் கைக்கு அகப்படாமல் ஒருவருக்கொருவர் கோபித்துக்கொண்ட சம்பவங்களும் உண்டு.

சமீபத்தில் ஒரு மத்தியதர தொழிற்சங்க நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள்.நிகழ்ச்சிக்கு சில நாட்கள் முன்பு அதன் நிர்வாகிகள் என்னை அழைத்து உங்களுக்கு ஐநூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களைப் பரிசளிக்க யோசித்துள்ளோம்.உங்களுக்கு என்ன புத்தகம் வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார்.புத்தகங்கள் எனில் எனக்குக் கசக்குமா?நான் கேட்டுக்கொண்ட புத்தகங்கள் எனக்குக் கிடைத்தது.விலை சற்று அதிகம் ஆயினும் தோழர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.எனக்கு மகிழ்ச்சி.

என் பேரன் [வயது நான்குதான்] “ தாத்தா ஸ்டோரி புக்ஸ் வாங்கித்தாங்க” என்று கேட்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாங்கிக் கொடுத்தால் அவன் குஷியாவது நெஞ்சுக்கு இதமாக இருக்கிறது.ஆயினும் நாமாகத் தேர்வு செய்து வாங்கித் தருபவைகளைவிட அவனாக தேர்வு செய்து வாங்கிய ஸ்பைடர் மேனும்,பென் டென்னும் தான் அவன் கையிலும் பையிலும் நெஞ்சிலும் ஒட்டிக்கொள்கிறது என்பது உண்மையல்லவா?

புத்தகங்களைப் பரிசளிப்பது எளிமையானது அல்ல. யாருக்குக் கொடுக்கிறோம்- எதற்குக் கொடுக்கிறோம்-எப்போது கொடுக்கிறோம்-எங்கு கொடுக்கிறோம்-அவரின் விருப்பம் என்ன-அவருக்கு இந்நூல் பயன்படுமா-அவர் இந்நூலை முன்பே வாங்கியிருப்பாரா-இப்படி பல கோணங்களில் யோசித்துச் செய்தால் மட்டுமே ஓரளவு நோக்கம் நிறைவேறும்.கூப்பன்கள்,அதற்கான பிரத்யோக காசோலைகள் வழங்கி விரும்பிய புத்தகங்களை வாங்கச் செய்யலாம் எனிலும் அதற்கான வாய்ப்பும் சூழலும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

அப்படியானால் புத்தகங்களைப் பரிசளிக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடலாமா?கூடாது.பெரிய அளவு பயன்பாட்டுக்கு உதவாது எனிலும் சால்வை அணியும் வழக்கம் நம்மோடு ஒட்டிக்கொண்டுள்ளது.அதனை கைத்தறி துண்டாக அணிவிக்கும் போது பயன் உண்டல்லவா?அது போல இடம் சூழலுக்கு ஏற்ப புத்தகப் பரிசளிப்பை பக்குவமாகச் செய்யப் பழக வேண்டும்.ஆம்.பாத்திரம் அறிந்து பிச்சையிடல் போல செய்யவேண்டும்.இந்தப் பயிற்சியை தொடர் அனுபவத்தின் மூலமே பெறமுடியும்.அதுவும் நபருக்கு நபர் இடத்துக்கு இடம் மாறக்கூடியது.எளிய சூத்திரமல்ல.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்க பல வழிகள் உள்ளன.அவை எளிமையானவை.பெரும் பணச்செலவு பிடிக்காதவை.யாரையும் சிரமப்படுத்தாதவை.அவற்றில் சிலவற்றை மட்டும் தங்களுக்கு ரகசியமாகச் சொல்கிறேன்..புத்தகப் பரிசளிப்புக்கு மாற்றாக அல்ல துணையாக.

முதல் வழி, நீங்கள் எங்கே பேசினாலும்,அரட்டை அடித்தாலும் நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம் எதாவது ஒன்றிலிருந்து அந்தச் சூழலுக்குப் பொருத்தமான ஏதாவது ஒரு செய்தியைச் சொல்லுங்கள்.அந்தச் செய்தி எந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பதையும் கூறுங்கள்.போகிற போக்கில் பிரச்சாரவாடையின்றி நீங்கள் சொல்கிற செய்தி நிச்சயம் பத்தில் ஒருவரையாவது அப்புத்தகம் பற்றி அறியத் தூண்டும்.அதில் சிலர் அப்புத்தகத்தை தேடி வாசிக்கக்கூடும்.சிலர் எங்காவது அப்புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தால் புரட்டக்கூடும்.அது வெற்றிதானே.

இரண்டாவது வழி,அன்றைய காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிற விஷயம் குறித்த புத்தகங்களை எங்கே சென்றாலும் உங்கள் கைகளில் வைத்திருங்கள்.குறிப்பாக பயணத்தின்போதும்- திருமணம் போன்ற சுற்றமும் நட்பும் சந்திக்கும் நிகழ்வுகளின்போதும் வெளிப்படையாகத் தெரியுமாறு கையில் வைத்திருங்கள்.நிச்சயம் ஒன்றிரண்டு பேராவது உங்கள் கைகளிலிருந்து அந்த புத்தகத்தை வாங்கிப் புரட்டுவார்கள் அது அவர்களைத் தொற்றிக்கொள்ளுமே.

மூன்றாவது வழி,மட்டமான வார ஏட்டினையோ,மலிவான சிலநாவல்களையோ,நாலாந்தரமான புத்தகங்களையோ படிக்கிற யாரையும் கேலி செய்யாதீர்கள்.படிக்காமல் இருப்பவர்களைவிட இவர்கள் மேலானவர்கள்.நான் ஆரம்பகாலத்தில் படித்த புத்தகங்கள் இப்படிப்பட்டவைதான்.வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்டால் மனது நிச்சயம் புதியன தேடும்.நானும் அப்படித்தான் புதியன நோக்கிப் பயணித்தேன்.உங்களுக்கும் இதே அனுபவம் இருக்கும்.அவரின் சுவை அறிந்து அடுத்த கட்டம் நோக்கி மெல்ல மெல்ல கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.அதற்கேற்ப புத்த்கங்களை அறிமுகம் செய்வது ஒரு அரிய கலை.அதற்கு உங்களுக்குப் பரந்த வாசிப்பு அனுபவம் வேண்டும்.என் நூலக ஐயா என்னை படிப்படியாக மேலே கொண்டுவந்தார்.மூளையோடு பேசுவதற்கு முன்னால் இதயத்தோடு பேசவேண்டும்.அவர் என்னிடம் அப்படித்தான் பேசினார்.குறைந்தபட்ச சமூகாக்கறை உள்ளவர்களாவது இந்தப் பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நான்காவது வழி,மனம் திறந்து பாராட்டப் பழகவேண்டும்.நீங்கள் படித்த புத்தகத்தை உரக்கப் பாராட்டுங்கள். சிலநேரம் கடுமையாகத் தாக்குவதன் மூலமும் ஒரு புத்தகத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தமுடியும்.ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி பேசினால் மட்டுமே தம்மை பெரும் அறிவாளியாக நினைப்பார்கள் என்கிற தாழ்வு மனப்பாண்மையை ஆழக்குழி தோண்டிப் புதைத்துவிட்டு தமிழ் புத்தகங்கள் பற்றிப் பேசுங்கள்.புத்தகங்களைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசுவதைத் தவிர வேறுவழியில்லை.அதே சமயம் சலிப்பூட்டிவிடாமல்-திகட்டச் செய்துவிடாமல்- ஊறுகாயை நாக்கில்தடவி-இனிப்பை நாக்கில் தடவி- உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதுபோல் பேசிப்பழக வேண்டும்.

ஐந்தாவது வழி மேடையிலோ,அல்லது வேறு ஏதேனும் கூட்டங்களிலோ சந்திப்புகளிலோ பேசுகிறவர்கள் தங்கள் பேச்சில் புத்தகங்களை, ஏடுகளை மேற்கோள் காட்டவேண்டும். ஹிந்து,ப்பிரண்டு லைன் போன்ற ஆங்கில ஏடுகளில் வந்த கட்டுரைகளை மேற்கோள்காட்ட பொதுவாக யாரும் தயங்குவதில்லை.அது அறிவின் அடையாளமாகப் பெருமையாகக் கருதுகிறார்கள்.ஆனால் தீக்கதிரிலோ அது போன்ற இன்னொரு ஏட்டிலோ வந்தவைகளை-தமிழ்ப் புத்தகங்களில் படித்தவற்றை அவ்வாறு சுட்டிக் காட்டுவதில்லை.அது ஒருவித தாழ்வு மனப்பாண்மையாகும்.நம் சொந்த எழுத்துகளைத் தூக்கிச் சுமக்க மறுப்பதாகும்.நாம் அப்படி மேற்கோள் காட்டும்போது அந்த ஏட்டுக்கு-அந்த புத்தகத்துக்கு பெரிய அறிமுகம் கிடைக்கும்.பலரை படிக்கத்தூண்டும்.தலைவரே அதை சுட்டிக்காட்டுகிறார் எனில் அதற்கு ஈர்ப்பு அதிகம்.பாரதிதாசன் பாடல்களை திராவிட இயக்க மேடைகளில் எடுத்தாண்டது பெரிதும் அவர்களைப் படிக்கத்தூண்டியது.கந்தர்வனை,நவகவியை,தமிழ்ச் செல்வனை,மேலாண்மையை,டி.செல்வராஜை,ஜீவியை, இன்னும் உள்ள முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகளை, கவிதைகளை தலைவர்களோ நாமோ எத்தனை மேடைகளில் கையாண்டிருப்போம்?எண்ணிப் பார்த்தால் பெருமூச்சே வரும்.அப்படி மேற்கோள் காட்டுவதன் மூலம் அவர்களின் புத்தகங்களைத் தேடிப்படிக்க மறைமுகமாகத்தூண்டுதல் ஏற்படும்.எழுத்தாளர்களை மேலும் மேலும் அதுபோல் எழுதத்தூண்டும்.

இப்படி எத்தனையோ எளியவழிகளில் வாசிப்புக்கலாச்சாரத்துக்கு உரம் சேர்ப்போம்.புத்தகதினத்தில் அதற்கான முயற்சியைத் தொடங்கலாமே.ஒரு சீன முதுமொழியோடு இப்போது இந்த உரையாடலை முடித்துக் கொள்வோம்.மீண்டும் சந்திப்போம்

 “ஒரு வாரம் முழுவதும் புதிதாக எந்தப் புத்தகத்தையும் படிக்காதவன் வார்த்தைகளில் நறுமணம் கமழ்வதில்லை.”.








சு.பொ.அகத்தியலிங்கம்


                                                                   




 

அகத்தேடல்-11

Posted by அகத்தீ Labels:


வெ
ங்காயத்தை
உரித்து உரித்து
இருப்பைத் தேடுகிறேன்..

அடையாளத்தை
உதிர்த்து உதிர்த்து
சுயத்தைத் தேடுகிறேன்..

ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு குணமுண்டு
மறந்தே போகின்றேன்..

ஒவ்வொரு நிலையிலும்
அதனதன் தேவைகள்
நன்றே உணர்கின்றேன்..

அளவுகள் மாறமாற
குணமும் மாறும்
அற்புதம் அறிகின்றேன்..

நிலையை மறுப்பதும்
பின் அதனை மறுப்பதும்
வாடிக்கை என்கின்றேன்..

முரண்பட்டு மோதலும்
உடன்பட்டு வாழலும்
வாழ்க்கை நியதி என்கின்றேன்..

மாறாதது ஏதுமில்லை
மாறிக்கொண்டே இருக்கின்றேன்
மாற்றங்களூடே வாழ்கின்றேன்..

-சு.பொ.அகத்திய்லிங்கம்.

விதை தூவியவரை மறக்கலாமா?

Posted by அகத்தீ Labels:




காமராஜர் முதலமைச்சராக இருந்த போது கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை மெருகேற்றி சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் செயல்படுத்தினார் என தேமுதிக சட்டமன்ற உறுப்பி னர் பேச ; பொறுக்காத அதிமுக அமைச்சர்கள், உறுப்பினர்கள் கூப்பாடு போட்டு அது முழுக்க முழுக்க எம்ஜிஆர்ருக்கு சொந்தமானது என உரிமைக் கொண்டாடினார்கள். காங்கிர காரர்கள் காமராஜர்தான் முதல்படி என்றனர்.

இப்படி தமிழக சட்டமன்றத்தில் அடிக்கடி சத்துணவின் மூலகர்த் தா யார் என்பது குறித்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆட்சியிலும் இவ்விவாதம் தொடர்கிறது. ஆனால், யாருமே உண்மையான மூலகர்த்தாவை நினைப்பதும் இல்லை, சொல்வதும் இல்லை. இதுதான் தமிழ் சமூகத்திற்கு நேர்ந்த பெரும் சோதனை.

வறுமை என்பது என்ன வென்பது நமக்கு தெரியும். உணவும், உடையும் இல்லாமல் எழுதும் பலகைகளுக்கும், புத்தகங்களுக்கும் எவ்வளவு பணம் செலவழித்தாலும் அது வீண். பல குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவும் கிடைப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். இவைகளெல்லாம் இருந்த போதிலும், இதை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தால் சட்டத்தின்படியும், நகரான்மைக் கழகம், பொதுசுகாதாரத்திற்காக செய்ய வேண்டிய கடமைப்பணி கள் என்று உள்ள சட்டத்தின்படி ஏழை குழந்தைகளுக்கு உணவு அளித்து, உடையும் அளிக்க நமக்கு (நகரான்மைக்கழகத்திற்கு) அதிகாரம் உண்டு.

இதைப்படிக்கின்ற போது இதை யார் பேசியிருப்பார் என்று யோசித்து பாருங்கள். எம்ஜிஆர்-ரும் இதுபோன்று பேசியிருக்கிறார். காமராஜரும் இதுபோன்று பேசியிருக்கிறார். ஆனால், இந்த உரை அவர்களுக்கு முன்னால் சிந்தனை சிற்பி சிங்காரவேலு பேசியதாகும்.

1925ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள் சென்னை நகரமன்றத்தில் மீண்டும் சத்துணவுத்திட்டத்தை அமலாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அவர் பேசியதாகும். 1921ம் ஆண்டு சிங்காரவேலர் முயற்சியில் சத்துணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் அரசின் சட்ட விதிகளை காட்டி அதை அமல்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மீண்டும் 1925ம் ஆண்டு இந்த தீர்மானத்தை சிங்காரவேலர் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு, பூங்கா சந்தை கண்காட்சிகள் நடத்தி அதில் கிடைக்கும் உபரி லாபத்தைக் கொண்டு ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க அவர் ஏற்பாடும் செய்தார். மிக குறைந்த எண்ணிக்கை குழந்தைகளுக்குதான் ஆரம்பத்தில் இச்சத்துணவு வழங்கப்பட்டது எனினும் இதுவே சத்துணவின் முதல் முயற்சி எனலாம். தமிழகத் தின் முதல் கம்யூனிட் என்ற பெருமை படைத்த சிங்காரவேலரின் சாதனை மகுடத்தில் சத்துணவும் சேரும்.

வெறுமே சத்துணவு என்பதை சாம்பார் சாதம், புளிசாதம் எனக் கருதாமல் பால் வழங்க வேண்டும், வாரம் இரண்டு முட்டை வழங்க வேண்டும் என்றெல்லாம் விவரமாக பேசியவர் சிங்காரவேலரே.

அதுமட்டுமல்ல ஆரம்ப பள்ளிக் கூடங்களில் வகுப்பறைகளில் பிரம்பே இருக்கக் கூடாது என்று நகரமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து இன்றையை கல்வியாளர்களின் குரலை அன்றே எதிரொலித்தவரும் அவரே.

பள்ளி பாட புத்தகங்களில் மதபோதனை இருக்கக்கூடாது என தீர்மானம் கொண்டுவந்த வரும் அவர்தான். அவர் நகர் மன்ற உறுப்பினராக இருந்தபோது, செய்த சாதனைகளை முழுவதும் பேசினால் நீளும். கல்விக்காக செய்தவைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டு வருகிறோம்.

சிங்காரவேலர் கல்வி பற்றிய நிலைக்குழுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட போது நகராட்சியினால் நடத்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 78ல் இருந்து 94ஆக உயர்த்தினார். மழலையர் பள்ளிக் கூடத்தை நகராட்சியே நடத்த வழி செய்தார். பள்ளிக்கூடங்களில் காந்தியின் படத்தை நகரமன்ற செலவிலேயே மாட்ட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இப்படி வரலாறு படைத்தவர்தான் சிங்காரவேலர்.

அவர் ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க முயற்சித்தார். அதற்காக விதை தூவினார். அதனை காமராஜர் ஒரு செடியை போல் மதிய உணவு திட்டமாக மாற்றி பெருமை சேர்ந்தார். எம்ஜிஆர் அதனை ஒரு ஆலமரமாக வளர்த்தெடுத்தார். எந்த ஆலமரமும் ஒரு விதையில் இருந்துதானே துவங்க முடியும். அந்த விதையை தூவியது சிங்காரவேலர் அன்றோ!

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு சென்னை ராஜாஜி மண்டபத்தில் கல்வி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டையொட்டி ஒரு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த புகைப்படக் கண்காட் சியில் மதிய உணவு திட்டம் குறித்து விவரங்கள் எழுதிவைக்கப்பட்டிருந்தது. அதை பார்வையிட வந்த எம்ஜிஆரிடம் அங்கே அதை விளக்கிக் கொண்டிருந்த ஆசி ரியை மதிய உணவு திட்டம் செயல்படும் விதம் குறித்து எடுத்துச் சொன்னார். எல்லா ஏழை குழந்தைகளுக்கும் இந்த உணவு கிடைக்கிறதா என அந்த ஆசிரியையிடம் எம்ஜிஆர் கேட்டார். அந்த ஆசிரியை பெரும்பாலான குழந்தைகள் மதிய உணவு இன்றி இருப்பதை வேதனையோடு எடுத் துரைத்தார். அதை கேட்டுவிட்டு மேடைக்கு சென்றார் எம்ஜிஆர்.

அன்று விழாவில் பேசுகின்ற போது தான் வருகின்ற போது ஒரு ஆசிரியை மதிய உணவு திட்டம் குறித்து விளக்கியதை குறிப்பிட்டு ; பெரும்பாலான குழந்தைகள் மதியம் உணவின்றி இருப்பதை அந்த ஆசிரியர் கூறியதை  கேட்டு தான் வருந்துவதாகவும், எனவே, எல்லா ஏழை குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கதான் முடிவு செய்வதாகவும் அறிவித்தார். அந்த மாபெரும் அறிவிப்பு. தான் இன்று உலகே வியந்து போற்றும் சத்துணவு திட்டமாகும்.

ஆக, ஒரு பெரிய திட்டத்தை தமிழக மக்கள் அனுபவிக்க விதை தூவிய சிங்காரவேலர், செடியாக வளர்த்தெடுத்த காமராஜர், ஆல மரமாக வளர்த்த எம்ஜிஆர் என மூவருக்கும் பெரும் பங்குண்டு. இதில், யாரையும் குறைத்து மதிப்பிடுவது வரலாற்றையும், தன்னலமற்ற தலைவர்களையும் கொச்சைப்படுத்துவதாகும்.

சத்துணவில் முட்டை போட்டு சிங்காரவேலரின் கனவை மேலும் நனவாக்கினார் கருணாநிதி.

அது மட்டுமல்ல ஆரம்ப கல் விக்கு 50, 60களிலேயே பட்ஜெட்டில் 25 விழுக்காடுக்கு மேல் நிதி ஒதுக்கி சாதனைப் படைத்தவர்கள் தமிழக முதல்வர் காமராஜரும், கேரள முதல்வரான இ.எம்.எ. நம்பூதிரிபாட் அவர்களும்தான்.

சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரு வேளை இந்த வரலாறை சரியாக அறியாமல் இருந்திருக்கலாம். இனியேனும் தவறான தகவல்களை சட்டமன்றத்தில் பேசி நேரத்தை வீணாக்கிட வேண்டாம். அத்துடன் வரலாற்றை தப்பும் தவறுமாக சட்டமன்ற நடவடிக்கை குறிப்பேட்டில் பதிய வைத்து வருங்கால தலைமுறையை குழப்பிடவும் வேண்டாம்.