கோழிக்கோடு சொன்ன சேதி - 4
இனியும் வெல்லப்போவது சோஷலிசமே!
இடதுசாரி ஜனநாயகப் பாதையில் அணி சேர்வீர்!
மார்க்சியத்துக்கு குருபீடம் எங்கும் இல்லை இது சுமார்
30 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எ. பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரு பிரசுரத்தின் தலைப்பு.
சீனப் பாதையையோ, ரஷ்யப் பாதையையோ காப்பியடித்து இந்தியாவில்
சோஷலிசப் புரட்சியைக் கொண்டு வர முடியாது என்பதையும்; இந்தியாவின்
தனித்த சூழலை கணக்கில் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் வகுத்திருக்கிறது
என்றும் அவர் வலுவாகச் சொன்னார். கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உதயமான சூழலில்
சாதாரண மக்கள்கூட இது ரஷ்யக் கட்சியா, சீனக் கட்சியா என கேட்கிற
நிலை இருந்தது. அப்போதுதான் நாங்கள் இந்தியப் பாதையில் செல்கிறோம் என மார்க்சிஸ்ட்
கட்சி உரக்க முழங்கியது. சோஷலிசத்திற்கான இந்தியப் பாதை என தோழர் இஎம்எஸ் எழுதிய கட்டுரைகள்
புதிய வெளிச்சத்தை அளித்தன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான் இந்த கோழிக்கோடு மாநாட்டில்
சில தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் முந்தையத் தீர்மானங்களை மறுதலிப்பது
அல்ல. 1968ல் பர்துவானில் உருவாக்கப்பட்ட தத்துவத் தீர்மானமும், 1990ல் சென்னையில் நிறைவேற்றப்பட்ட தத்துவத் தீர்மானமும் அன்றுவரையிலான சர்வதேசச்
சூழலைக் கணக்கில் எடுத்து சில வரையறைகளை மேற்கொண்டது. அதன் பின்னர், உலகத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கொப்ப புரிதலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன் விளைவுதான் இத்தீர்மானம். இதை முன்மொழிந்த சீத்தாராம் யெச்சூரி கூறியதுபோல முந்தையத்
தீர்மானங்களையும் சேர்த்தே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
64 பக்கங்கள் கொண்ட தீர்மானத்திற்கு 40 பக்க விளக்கக்
குறிப்புகள் என்பது தீர்மானத்தின் துல்லியத்தையும் நேர்மையையும் பறைசாற்றுவதாகும்.
வர்க்க சக்திகளின் பலாபலன்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக
மாறியுள்ள நிலையில் நிதி மூலதனம் சர்வதேச அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்திவரும் சூழலில்; வரலாற்றின் ஒரு காலகட்டம் நேர்கோட்டுப்
பயணமாகவோ அல்லது ஒருவழிப்பாதையாகவோ இருக்காது என்ற தெளிவான புரிதலை இத்தீர்மானம் முன்வைக்கிறது.
உயர்ந்தபட்ச லாபம் தேடி நிதிமூலதனம் சகல மனித மாண்புகளையும் சிதைத்து கண்டம் விட்டு
கண்டம் தாவிக் கொண்டிருப்பதை தேச எல்லைகளை மிதித்துத் துவைத்துவிட்டு சுரண்டல்,
கொள்ளை, ஆதிக்க தர்பார் நடத்துவதை தீர்மானம் சுட்டிக்காட்டி
உள்ளது.
மனிதர்களுக்காக பொருட்களை உற்பத்தி செய்வது என்பது மட்டும்
அல்ல; தாங்கள் செய்து குவிக்கிற பொருட்களை வாங்குகிற நுகர்வோர்களாக
மனிதர்களை உருவாக்க நிதிமூலதனமும் ஏகாதிபத்தியமும் கட்டவிழ்த்து விட்டுள்ள பிரச்சார
மயக்கத்தை இத்தீர்மானம் படம் பிடிக்கிறது.
சிலரின் தனிப்பட்ட பேராசையோ, ஒழுங்காற்று அமைப்புகளின் பலவீனமோ இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் அல்ல.
மாறாக, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த தன்மையாகிய எதைச் செய்தாவது
கட்டுப்படுத்த முடியாத லாப வேட்கையே இதற்கான காரணம் என்கிற அடிப்படையை தீர்மானம் கோடிட்டு
காட்டுகிறது. அதன் விளைவாக உலகெங்கும் சந்திக்கும் நெருக்கடிகளை, அதற்கு எதிரான போராட்ட எழுச்சிகளை இந்தத் தீர்மானம் சரியாகச் சுட்டிக் காட்டுகிறது.
ஏகாதிபத்தியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரசு
பயங்கரவாதமும், அடிப்படை வாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்படும் தனிநபர்
பயங்கரவாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன என்பதை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக
மக்களை விழிப்படையச் செய்ய இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
பண்பாட்டுத் துறையிலும், அறிவுத் துறையிலும் ஏகாதிபத்தியமும் நிதிமூலதனமும் தங்களின் லாப வேட்டைக்கு
ஏற்ப உருவாக்கி வரும் சீர்குலைவு தத்துவப் பிரச்சாரத்தை, கருத்துப்
பிரச்சாரத்தை கவலையோடு இம்மாநாடு அலசியது. மனித குலத்தின் புரட்சிகர முன்னேற்றத்தை
எட்ட வேண்டுமானால் தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் ஒட்டு மொத்த முயற்சிகளில் ஒரு
பகுதியாக ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டுள்ள தத்துவார்த்த தாக்குதலுக்கு எதிராக
உறுதியாகப் போராடுவது தேவைப்படுகிறது என்ற வரலாற்றுக் கட்டாயத்தை மாநாடு உள்ளங்கை நெல்லிக்கனி
என உணர வைத்தது. இன்றைய ஊடகங்கள் பெரும் முதலாளிகள் கையில் சிக்கி உள்ளதை - அவர்களின்
தேவைக்கேற்ப சுயநலமிக்க மனிதர்களையே உருவாக்க அவை முயல்வதை - இத்தீர்மானம் சுட்டிக்காட்டியதுடன்,
கருத்துருவாக்கத்தில் ஊடகங்கள் ஆற்றும் பெரும் பங்கை எடுத்துக்காட்டி
அவற்றுக்கெதிராக மெய்யான மனிதத்தை உருவாக்கும் கருத்துப் பிரச்சாரத்தின் தேவையை மாநாடு
வலியுறுத்தி உள்ளது.
சீனா, கொரியா, கியூபா உள்ளிட்ட சோஷலிச நாடுகளில் ஏற்பட்டு வரும் நிகழ்ச்சிப் போக்குகளை மிகுந்த
அக்கறையோடு இம்மாநாடு விவாதித்தது. சீனாவோ கொரியாவோ சோஷலிசப் பாதையை விட்டு விலகிச்
சென்று விட்டது என்று தூற்றுவோர்களின் கூற்றையும் இம்மாநாடு ஏற்கவில்லை. அதே நேரத்தில்
உலகச் சூழல் காரணமாக இந்நாடுகளில் உருவாகி வரும் சில போக்குகள் குறித்து எச்சரிக்கையோடு
இம்மாநாடு அணுகியது. அரபு வசந்தம் என்கிற பெயரில் அரபு உலகில் ஏற்பட்டு வரும் போராட்டங்கள்,
லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகளின் கை வலுப்பட்டு வருவது உட்பட பலவற்றை
இம்மாநாடு பொறுப்பு உணர்வோடு காய்தல் உவத்தல் இன்றி அலசி ஆராய்ந்தது.
பின் நவீனத்துவம், அடையாள அரசியல்
உட்பட மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் குறித்துத் தெளிவான கண்ணோட்டத்தை இம்மாநாடு முன்வைத்துள்ளது.
அதேசமயம், இன்றைய கால மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களுக்கும்,
எதிர்காலத்தில் எழக்கூடிய மற்றவைகளுக்கும் எதிராக சித்தாந்த ரீதியிலும்;
வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் அதன் வெளிப்பாடுகளுக்கு எதிராகவும்;
நடைமுறையில் நேரடியாக மோத வேண்டிய அவசியம் உள்ளது.
என விரிவாக சொல்லிவிட்டு இந்தியச் சூழலில் சந்திக்கிற
பிரச்சனைகளைப் பட்டியல் இட்டுள்ளது. சாதியம், வகுப்புவாதம் இவற்றுக்கு
எதிராக போராடுவதும், வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதும் எவ்வளவு சவாலான
விஷயம் என்பதையும்; தொழிலாளி விவசாயி கூட்டணியை வளர்ப்பதே மெய்யான
தீர்வு நோக்கிய பயணம் என்பதையும்; இடதுசாரி ஜனநாயக மாற்றே இன்று
நம்முன் உள்ள நம்பகமான உறுதியான மாற்று என்பதையும் இத்தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. நாடாளுமன்றத்தை
பயன்படுத்துகிறபோது ஏற்படுகிற நோய்களையும், அதை வெல்லுவதற்கான
தத்துவ வழிகாட்டலையும் இத்தீர்மானம் அளித்துள்ளது.
முதலாளித்துவம் எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது.
21ஆம் நூற்றாண்டிலும் சோஷலிசமே ஒரே மாமருந்து. அதனை விடாப்பிடியாக பற்றி நின்று முன்னிலும்
வலுவாய் - முன்னிலும் வீரியமாய் - முன்னிலும் விரிவாய் - முன்னிலும் தெளிவாய் முன்னெடுத்துச்
செல்ல இத்தீர்மானம் ஒரு கருத்தாயுதமாகவே வார்க்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டுக்கு கொரியா, கிரீஸ், சைப்ரஸ், பிரேஸில்,
பொலிசாரியோ, அமெரிக்கா, பொஹிமா
மொரவியா, அயர்லாந்து, ஈரான், இத்தாலி உட்பட பல நாடுகளிலிருந்து இம்மாநாட்டை வாழ்த்திச் செய்திகள் வந்திருந்தன.
ஒருகாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சர்வதேச அநாதைகள் என்றனர். இன்று உலகெங்கும்
இருக்கிற அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளி வர்க்க கட்சிகளும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்லுகிறது என்பதை உன்னிப்பாகக் காதைத் தீட்டிக்கொண்டு
கேட்கிறார்கள். ஆளும் வர்க்கமும் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மிக நுட்பமாக கவனிக்கிறார்கள்.
மாநாட்டைப்பற்றிச் செய்திகள் வெளியிட உலகெங்கும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஊடகப்
பிரதிநிதிகள் குவிந்திருந்தது இதன் சாட்சி. அவர்கள் நம்மை விமர்சிக்கட்டும். நாம் சரியான
பாதையில் பயணப்படுகிறோம் என்பதற்கு அதுவே அத்தாட்சியாகி விடும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தேர்தல் தோல்விகளால்
அழித்து ஒழித்து விட முடியாது. அவதூறு கரையான்களால் தின்று அழிக்க முடியாத நெருப்புப்
பேரலையாய் உழைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாய் எழுந்து விட்டனர். இதைத்தான் நிறைவுநாள்
பேரணி உலகுக்குப் பறை சாற்றியது. நாம் வெல்லுவோம்.
நாம் வெல்லுவோம். நாம் வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை
- சு.பொ. அகத்தியலிங்கம்
0 comments :
Post a Comment