இதுவும் கடந்துபோகும்

Posted by அகத்தீ Labels:


இதுவும் கடந்துபோகும்...




இன்று காலை நடை பயிற்சியின் போது உள்ளுக்குள் ஒரு வருத்தம் ; செங்கல்பட்டுத் தோழர் நரசிம்மன் மறைவுச் செய்தி உடனே அறிந்தும் இறுதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லையே ! பெங்களூரில் வாழ்நேர்ந்த வாழ்க்கைச்சூழலில் வசதிக்கு குறைவில்லை ஆயினும் நெடுநாள் பழகிய தோழர்கள் , நண்பர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பது இழப்பாகவே சில நேரங்களில் தோன்றுகிறது . உறவுகளைப் பொறுத்தவரை என்னுடைய நெருக்கம் குறைந்து நாளாயிற்று ; ஒரு சிறு வட்டத்தோடுதான் இப்போது போக்குவரத்து ஆகவே பிரசனை இல்லை . ஆனால் தோழமையும் நட்பும் அப்படி இல்லையே விரிந்தது பரந்தது நன்கு வேர்விட்டுத் தழைத்தது . திருமணம் , இறப்பு ,குடும்ப விழாக்கள் , பொது நிகழ்வுகள் என தோழமைமிகுந்த கைக்குலுக்கல்களுக்கு ….. விரும்பியபடி செல்ல முடியவில்லையே !

 பிறந்தது குமரிமாவட்டத்தில் சுசீந்திரத்தில் .. முதல் 15 ஆண்டுகளோடு அந்த உறவு விட்டுப்போனது ; அப்புறம் சென்னை 30 ஆண்டுகள் ; அடுத்து திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை திரூரில் 15 ஆண்டுகள் , ஆயினும் 45 ஆண்டுகளும் சென்னையோடு பின்னிப்பிணைந்தேன் . இப்போது 19 மாதங்களாக பெங்களூரில் ..ஆனால்  அவசரகாலம் தொடங்கி [ 1975 ] மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களிடையேதான் என் வாழ்க்கை ; என் சுக ,துக்கம் அனைத்திலும் அவர்களே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் ….. எங்கிருந்தாலும் என் உணர்வில் கட்சி கலந்தே நிற்கிறது .. கருத்துப்பரப்பலில் எங்கிருந்தாலும் என் பணி தொடர்கிறது ஆயினும் வெகுநாள் பழகிய தோழர்களின் நல்லது கெட்டதில் உடன் பங்கேற்க இயலவில்லையே என்கிற வருத்தம் சில நேரங்களில் மேலிடத்தான் செய்கிறது ...

நான் கட்சிக்கு வந்தபின்னர் 1978ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னை மாவட்ட மாநாட்டில் முதன்முறையாகப் பங்கேற்றேன் . தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற கட்சியில் 10 வது மாநிலமாநாட்டில் பங்கேற்றேன் அது தொடங்கி கடைசியாய் 2012ல் நாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 20 வது மாநில மாநாடுவரை அனைத்திலும் பங்கேற்றுள்ளேன் . சில அகில இந்திய மாநாட்டிலும் பங்கேற்றுள்ளேன் . முதன் முறையாக 21 வது கட்சி மாநில மாநாடு  பிப்ப்ரவரி 16-19 சென்னையில் நடக்கும்போது பிரதிநிதியாகப் பங்கேற்காமல் – அடிப்படை உறுப்பினராக மட்டும் நின்று  மாநாட்டுத் திடலில் தோழர்களுடன் கைகுலுக்கப் போகிறேன் ; அனுபவம் புதிதாகிறது . இலட்சியம் உதிரத்தில் கலந்துவிட்ட பிறகு  காலங்களையும் தூரங்களையும் கடந்து அது நம்மோடு பயணிக்கும் .

வாழ்க்கைப் பயணத்தில் தடம் பதித்த நிகழ்வுகள் மனதிலாடுகிறது .எல்லாவற்றையும் கடந்தே இங்கு வந்துள்ளேன். இதுவும் கடந்து போகும் . மாறாதது எதுவுமில்லையே ! நான் தப்பாய் புரிந்து கொண்டவர்கள் – நிகழ்வுகள் , என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டோர் – நிகழ்வுகள் ; எல்லாவற்றையும் நின்று நிதானமாய் அசைபோட காலம் கனிந்திருக்கிறது . காலநதியில் காயங்கள் வடுக்கள் பல மங்கி மறைந்து போகும் ; சிலவற்றை சுமந்தபடியே வாழ்க்கை நகரும் .

இன்னொரு நவகாளி

Posted by அகத்தீ Labels:









இன்னொரு நவகாளி 

எஸ் வி வேணுகோபாலன் 


மிக அவசரமாகத் 
தலைநகர் ராஜ்காட் சமாதியில் இருந்து 
காந்தி வெளியேறிவிட்டார் என்ற 
தகவலை உறுதி செய்கிறோம் 

மரணத்திற்குப் பின்னும் தொடரும் 
படுகொலை முயற்சிகள் குறித்து 
அவர் வேதனை அடைந்திருக்கக் கூடுமென்று 
அதிகாரபூர்வ வட்டாரங்கள் 
(பெருமிதம் பொங்கும் குரலில்) தெரிவிக்கின்றன 

ஒருபோதும் அவர் 
தாம் பிறந்த குஜராத் பக்கம் 
திரும்பி இருக்க வாய்ப்பில்லை என 
ஏற்கெனவே விளக்கப் பட்டது 
நேயர்களுக்கு நினைவிருக்கலாம் 

காணாமல் போன காந்தி பற்றிய 
முதல் தகவல் அறிக்கை எதுவும் 
நாட்டின் எந்தக் காவல் நிலையத்திலும் 
பதிவாகவில்லை என்கிறது யூ என் செய்தி ஒன்று 

தொலைந்தார் காந்தி என்று தொடங்கும் 
மத்திய அரசு  அறிக்கை ஒன்றின் மெய்ப்பொருள் வேறு 
என்கிறார் நமது நாடாளுமன்றச் சிறப்புச் செய்தியாளர் 

கோட்ஸே சிலைகளை 
தேசத்தின் கோயில்களில் நிர்மாணிக்க 
முடிவெடுத்திருக்கும் சந்நியாசி அமைச்சக 
பறக்கும்படை தளபதிகள் 
ரூபாய் நோட்டுக்களில் நீண்டகாலம் 
சிறைப்பட்டிருக்கும் காந்தியை வெளியேற்றி 
அங்கே கோட்சேயை நிரந்தரமாகக் குடிவைக்கும் 
அவசரச் சட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் 
சற்றுமுன் வந்த பி டி செய்திக்குறிப்பு எச்சரிக்கிறது 

'காந்தி இனிமேல்தான் கொல்லப்பட இருக்கிறாராமே?'
என்று தொடுக்கப்பட்ட 
பொதுநல வழக்கு 
ஜனவரி 30 காலை 11 மணி 
இரங்கல் நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது 

காந்தியைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு 
போடப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனு 
சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டாலொழிய 
விசாரணைக்கு எடுக்கப்பட மாட்டாது 
என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது 

மெரீனா கடற்கரையில் 
காலை வழக்கமான நடைப்பயிற்சிக்கு வந்தோர் 
காந்தி சிலையும் காணாமல் போயிருந்ததைக் கண்டு 
அதிர்ந்து போகாமல் அடுத்த சுற்று நடையைத் தொடர்ந்ததாக 
உற்சாக நேர்காணல் ஒன்றில் 
உலக ஆரோக்கிய நடைப்பயிற்சி சித்தர் ஒருவர் தெரிவித்தார் 

காந்தி என்பது ஒரு மேலைத் தத்துவம் 
காந்தி என்பது ஒரு வெறி 
காந்தி என்பதுதான் உண்மையில் மாயை 
காந்தியிலிருந்து காந்தியையும் 
காந்திக்கு வெளியே இருந்து காந்தியையும் 
காந்தியைக் கொண்டே காந்தியையும் 
காந்தியைக் கொன்றவனைக் கொண்டே காந்தியையும் 
விடுவிப்பதே பகவத் கீதையின் 
மோட்ச சித்தாந்தம் என்கிறார் 
பூஜ்ய ஸ்ரீ நாதுராம் தாச விநாயக் அடிவருடி கோட்ஸே கொண்டாடி பாபா 

இதனிடையே 

இரவு நேர ரோந்துப் பணியாளர்களிடம் 
சிக்கிய 
அடையாளம் தெரியாத மனிதர் ஒருவரை 
நள்ளிரவைக் கடந்த நேரத்தில் 
விசாரித்த மாஜிஸ்திரேட் 
தம் இருப்பு இறப்பைப் பற்றி 
யாதொரு கவலையுமின்றி 
அடியுதைகளால் களவாடப் பட முடியாத 
புன்னகை நிரம்பிய அந்த ஆசாமி 
இன்னொருமுறை நவகாளிக்குச் சென்று 
நடக்கத் தமது பாதங்களுக்கு 
சக்தி இல்லையே என்றே  
வேதனையோடு முனகிக் கொண்டிருந்ததாகக் 
குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்.....