எல்லாம் உங்களுக்குத்தான்

Posted by அகத்தீ Labels:

எல்லாம் உங்களுக்குத்தான் ..

சு.பொ.அகத்தியலிங்கம் .


  “எவ்வளவு தூரம் குனிய வேண்டும் ?
கையால் தரையைத் தொட்டால் போதுமா ?”

 “போதாது போதவே போதாது
தலை தரையில் இடிபட வணங்கு !”

 “ இந்த அடிமை சாசனத்தில்
என்னென்ன எழுத வேண்டும் சொல்லுங்கள்!
எழுதத் தயாராய் இருக்கிறோம்
எங்களுக்கு 52 இன்ச் நெஞ்சு
ஆனால் இதயம் உங்களுக்கு மட்டுமே ..”

 “ இது தேர்தல் மேடையல்ல
வசனம் பேச – மேலும் ஏமாற
நாங்களொன்றும்
உங்கள் வாக்காளர்களல்ல ..
நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம்
கையெழுத்து  போடுவது மட்டுமே உன் வேலை”

 “ உங்கள் சித்தம் எம் பாக்கியம்
கணவனுக்கு மனைவி
பாதபூஜை செய்ய வேண்டும் !
சாமியார்களுக்கு பக்தர்கள்
பாதபூஜை செய்யவேண்டும் !
எஜமானனுக்கு அடிமைகள்
அவன் விரும்பிகிற இடத்தையெல்லாம்
கழுவிவிட வேண்டும் ?
உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் ?”

 “ ஆஹா ! பிரமாதம் !
எனக்குக் கிடைத்த அடிமை !
ஆனாலும் ஒரு எச்சரிக்கை
எம் கண்ணசைவுக்கு
அடிபணிய சற்று தாமதித்தாலும்
யாம் பொறுக்கமாட்டோம் !
உம் முன்னவர் சிங்கரை
நாங்கள் தான் சிபாரிசு செய்தோம் !
 எதிர்பார்த்த வேகம் இல்லை !
கேட்டதுக்கு சற்று குறைந்தது
அசிங்கப்படுத்த தயங்கவில்லை !
யூஸ் அண்ட் த்ரோ எங்கள் பாலிஸி ..
உலகெங்கும்
எங்கள் ஆதிக்க ரகசியம் இதுவே !
உங்கள் ஊரை ஏமாற்ற
எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்!
எங்களின் கட்டளை
ஒரு அட்ச்ரம் பிசகக்கூடாது !
நம் சந்திப்பு இமாலயவெற்றி !
சிரித்துக்கொண்டே
மக்கள் கழுத்தை அறுப்போம் !”

  “ துவங்கி விட்டது
புதிய சகாப்தம் !
இந்த சவுக்கு பிரமாதம்
இந்த விஷம் பேரமுதம்
எல்லாம் உங்களுக்குத்தான்
இந்திய மக்களே !
வாருங்கள் !
உங்கள் முதுகில்
பரிட்சித்துப் பார்க்கிறோம் !
வாருங்கள் !
இதை அருந்தி
கடைசியாய்
புன்னகையுங்கள் !”0 comments :

Post a Comment