எதைத் தேடுகிறாய்?

Posted by அகத்தீ Labels:




இருட்டில் எதைத் தேடுகிறாய்?
இதயத்தைத்தான்
ரொம்ப சரி ! அது அங்கேதான்
எப்போதும் இருக்கும்

மாடமாளிகையில் அதிகார நாற்காலியில்
பகலிலும் காணக்கிடைக்காது
உபதேசிகள், மூளைவீங்கிகள்,வாடகை வாயர்கள்
எப்போதோ தொலைத்துவிட்டனர்

கொடுப்பதற்கு ஏதுமில்லாதவர்களிடம்
இதயம் இருக்கிறது அதில் ஈரம் இருக்கிறது
வெறுங்கையால் முழம்போட முடியாது
போராட முடியும் ! இதயம் வலுவாய் இருக்கிறது!!


சுபொஅ.

Posted by அகத்தீ

'வாகன 'மாகமாட்டேன்!

(இக்கவிதை தனிப்பட்ட உணர்வல்ல. இந்திய சராசரி வயதான 67.8ஐ கடந்துவிட்ட /நெருங்கிவிட்ட தோழர்கள் பலரோடு பேசியதின் பொது உணர்வு)

கொடிது கொடிது
முதுமையும் தனிமையும்
அதனினும் கொடிது
அடைபட்டுக் கிடத்தல்.

கடமைகள் முடிந்தது
கவலையும் குறைவு
வாழ்ந்தது போதும்
எந்த நொடியிலும்
புறப்படத் தயார்!

எமது மரணம் மற்றவர்
சுமை குறைக்கும்
வெற்றிடம் ஏதும்
நிச்சயம் இல்லை!

ஆனாலும் இந்த
கொரனா மரணம்
வேண்டவே வேண்டாம்.

சாவுக்கு யாரும் வரமுடியாது
என்கிற மன உறுத்தலா?
போகும்போது பரபரப்பான
சாவுப்பட்டியலில் இன்னொன்று
என்றாகிவிடக் கூடாது என்பதலா?

செத்தபின்பு
கொண்டாடினால் என்ன?
குப்பையில் தூக்கி எறிந்தாலென்ன?
செத்தவனுக்கு எல்லாம் ஒன்றுதான்.

சாவைக் கண்டு அஞ்சவில்லை
சாவை அரவணைக்கத்
தயாராகவே இருக்கிறேன்.
 பலருக்கு நோய் தொற்ற
கொரானா வாகனமாய்
சாகவிரும்பவில்லை!
சரரிதானே! தோழா!

சிலநாள் எம் தனிமை
அர்த்தமுள்ளதாய் இருக்கட்டும்!
தனிமை இனிதானது
கொரானா உபயம்.

சுபொஅ.

ஒரே வழி………..

Posted by அகத்தீ Labels:





ஒரே வழி………..



வெறுமையே எங்கும் அப்பிக் கிடக்கிறது
நொடி தோறும்  அடர் இருட்டு கூடிக்கொண்டே போகிறது
எல்லா குரலும் மெல்ல மெல்லத் தேய்ந்து கனத்த மவுனம் சூழ்கிறது
பேரழிவின் முன்னறிவிப்பா ?

எட்டுதிக்கும் குவிந்து கிடக்கும் பொய்களின் கீழே
உண்மை மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது
மூச்சுவிடவும் அவகாசமற்று மூடநம்பிக்கை
நீர்பாய்ச்சி உரம்போட்டு வளர்க்கப்படுகிறது
அறிவியலையும் அதன் தூதுவனாக்கிட
அசுர வேகத்தில் புனைவுகள் பெற்றுப் போடப்படுகின்றன

படித்தவனின் பொய்யும் சூதும் அனைத்தையும்
இடித்துத் தள்ள கரசேவை செய்கிறது
அடித்தட்டு மனிதரின் எளிய நியாயமும்
ஆழக் குழி தோண்டி புதைக்கப்படுகின்றது

எங்கும் அபயக்குரல் ! உதவுவோர் யாருமில்லை!
கொலையே வேதமாகிப்போன காலமானது
ஆற்றவோ அரவணைக்கவோ யாருமில்லை
திக்கற்றவரை தெய்வமும் கைவிட்டது
கடவுளின் சந்நிதானமும் கடையடைப்பு செய்துவிட்டது
திரும்பிய பக்கமெல்லாம் துரோகத்தின் கொடுங்கரம்

அழுதும் பயனில்லை .தொழுதும் பயனில்லை
ஊழிப் பேரழிவிலிருந்து தப்பிக்க வழிதெரியாமல்
எல்லாம் வல்ல இறைவனே கலங்கி நிற்கிறான்
அற்ப மானுடப் பதரே ! ஆண்டவன் கைவிட்டுவிட்டான்
உதனாபிஷ்டிம் படகு வரவே வராது
நோவா கப்பல் ஒரு போதும் வராது
மானுட ஆற்றலும் அறிவும் மட்டுமே
மானுடம் மீளும் ஒரே வழி !
வேறென்ன சொல்ல இப்போது ?

குறிப்பு : சுமேரிய நாகரிக அழிவை ஒட்டி எழுந்த கில்காமேஷ் எனும் உலகின் முதல் இதிகாசத்தில் சொல்லப்படும் மீட்புப் படகே உதனாபிஷ்டிம் . பைபிளில் கூறப்படும் மீட்புக் கப்பலே நோவா.

சுபொஅ.




மரணத்தின் செய்தி

Posted by அகத்தீ Labels:


மரணத்தின் செய்தி


மரணத்தின் வாசம் என்ன ?
ஒரு வேளை கொரானா வாசமாக இருக்குமோ ?

மதவெறி நாற்றமாக இருக்குமோ ?
சாதிவெறியின் நெடியாக இருக்குமோ ?

வறுமையின் வெப்பமாக இருக்குமோ ?
கடனின் இறுக்கமாக இருக்குமோ ?

தோல்வியின் அழுத்தமாய் இருக்குமோ ?
பழிவாங்கலின் முகமாய் இருக்குமோ?

எதுவாயினும் அம்மரணம் கொடியதே !
ஒரு போதும் யாருக்கும் அம்மரணம் வேண்டாம்.

மரணமில்லா வாழ்வு யாருக்கும் கிடையாது
எப்போதும் எங்கும் கிடையாது.

மரணம் இயற்கையானது .தேவையானது .
வாழ வேண்டியவருக்கு வரக்கூடாதது மரணம் .

பிஞ்சும் பூவும் காயும் உதிர்க்கும் மரணம்
இரக்கமற்ற பேரரக்கனே !

கனிந்த பழத்தைக் காக்க வைப்பது
மரணத்தினும் கொடிது !

எந்த மரணமாயினும்
இறகு உதிர்வது போல் எளிதாகட்டும் !
மலை பெயர்வதுபோல் வேண்டாம் !

கொரானா பற்றிய செய்திகளை வாசிக்க வாசிக்க
மரணத்தை யோசிக்க வைத்தது .

வாழு வாழவிடு என்பதறியா
பைத்தியக்கார சமூகம்
கொலைவெறி பிடித்தலைகிறது !

அன்பால் எங்கும் அணைந்து கொள்ளாமல்
வெறுப்பை விசிறி ! வெறுப்பை விசிறி !
வெறுப்பில் வெந்து கருகுதல் தகுமோ மானுடமே !

மானுடம் பயனுற வாழப்பழகு
இல்லையேல்
மரணமே உனக்கும் சமூகத்துக்கும் நன்று !

சுபொஅ.