மாட்டுக்கறியும் அன்பான தோழர்களும் ------------- --------------- ----------- -------------

Posted by அகத்தீ Labels:

மாட்டுக்கறியும் அன்பான தோழர்களும்
------------- --------------- ----------- -------------

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - கேரளாவின் முன்னாள் முதல்வர் தோழர். இ.எம்.எஸ் வாழ்க்கை வரலாற்று நூலான நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்... வெளியீட்டு விழா கேரளாவில் நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையில் நடைபெற்றது.

நூலை வெளியிட்டுப்பேசிய அவர் சாதிய அடுக்கின் உச்சத்தில் இருக்கும் நம்பூதிரிபாட் குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ். தாழ்த்தப்பட்ட ஒரு தொழிலாளி வீட்டில் தலைமறைவாய் இருந்த காலத்தில் அவர்கள் வழங்கிய மாட்டுக்கறி மற்றும் நத்தை உணவை சாப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி எவ்வளவு அர்ப்பணிப்பு என வியந்தார்.

இறுதியில் இ.எம்.எஸ் வழங்கிய ஏற்புரையில், நம்பூதிரி சமுதாயம் எவ் வளவு பிற்போக்கானது என்பதை எடுத்துக்கூறி அந்த சமூகத்தில் பிறந்த தன்னையும் தோழனாக அங்கீகரித்த அந்த தொழிலாளித் தோழருக்கும் அவர் அன்று வழங்கிய அன்பான உணவுக்கும் நன்றிக் கடன்பட்டி ருப்பதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை ஒரு முறை வி.பி.சிந்தன் அரசியல் வகுப்பொன்றில் குறிப்பிட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது. நம்பூதிரி சாதியில் பிறந்தது பெருமைக்குரியதாக அவர் ஒருபோதும் கருதியது இல்லை.பூணூலை தான் அறுத்ததோடு தன் சகாக்களோடு சேர்ந்து பிற நம்பூதிரிகளின் பூணூலை அறுக்கிற போராட்டமும் செய்தவர். சுயசாதி மறுப்புதான் கம்யூனிஸ்டுகளின் பெருமை.

தமிழகத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எ.பாலசுப்பிரமணி யம் பிராமண சாதியில் பிறந்தவர். தன் வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக் களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.அவரின் தொழிற்சங்க பிரவேசம் தோல் பதனிடும் தொழிலாளர்களைத் திரட்டுவதில்தான் துவங்கியது. அப்படி அவர்களோடு தோள் இனைந்து நின்றபோது அவர்கள் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டதைப் பெருமையாகவே கருதினார். முதல் நாள் சாப்பிட்டபோது வாந்தி வந்ததாகவும் அது சாதித் திமிரின் அடையாளமாகக் கருதி மனம் வருந்தியதாகவும்.பின்னர் அந்த உண வோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதையும் மகிழ்வோடு கூறியுள்ளார். தோல் நாவலில் அந்தக் காட்சியை அற்புதமாகச் சித்தரித் திருப்பார் டி.செல்வராஜ்.

சுடுகாட்டுப் பாதைகேட்டு அவர் நடத்திய போராட்டத்தின் போது மேல்சாதிக்காரர்களின் எதிர்ப்பை மீறி தடுப்புச் சுவரை உடைத்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பிணத்தை தானே சுமந்தார். இதனால் பிராமண சாதியினர் கண்டித்ததையும் ஏற்க மறுத்து தான் செய்தது உயர்வான செயல் என வாதிட்டார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டபோது பழைய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மேல் சாதியினர் வற்புறுத்தினர் தோழர் ஏ.பி. மறுத்ததோடு அதனால் தன்க்கு வாக்களிக்கவில்லை என்றாலும் கவலையில்லை என நெஞ்சு நிமிர்த்தி கூறினார்.

தஞ்சைத் தரணியில் சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவுகட்டி- பண்ணை அடிமைத் தனத்திலிருந்து விவசாயத் தொழிலாளிகளை மீட்ட பெருமை பி.எஸ்.ஆர் என அன்போடு அழைக்கப்பட்ட தோழர் பி.சீனிவாசராவ் அவர்களையே சாரும். அவர் பிறப்பால் கன்னடத்துப் பிராமணன்; கம்யூனிஸ்ட் கட்சி முடிவின்படி விவசாயிகளை அணிதிரட்ட தஞ்சை வந்தார் - அங்குள்ள அவலநிலை கண்டு நொந்தார். அவர்களோடு இரண்டறக் கலந்தார். அவர்கள் குடிசையில் தங்கினார் - அவர்கள் சாப்பிட்ட மாடு, நத்தை, மீன், நண்டு அனைத்தையும் சாப்பிட்டார். ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே பாயில் உறங்கி அவர்களில் ஒருவராய் ஆகிபோனார். கொடுமையை எதிர்த்துப் போராட நம்பிக்கை ஊட்டினார். கம்யூனிஸ்ட் தோழமையின் குறியீடாய் - தலைமைப் பண்பின் இலக்கணமாய் மாறி இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

மேலே சொன்னதெல்லாம் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சில சாட்சிகள் மட்டுமே. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பூணூலை மட்டுமல்ல வர்ணாஸ்ரம சிந்தனையையும் அறுத்தெறிந்தவர்களே கம்யூனிஸ்டுகள், மரக்கறி உணவோ ,புலால் உணவோ எதுவாயினும் அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று ஏதுமில்லை: மாட்டுக்கறியோ பன்றிக்கறியோ எதுவும் இழிவானது அல்ல. யாருக்கு எது பிடிக்கிறதோ - எது உடலுக்கு ஒத்து வருகிறதோ அதை உண்ண வேண்டும். அதனை மறுக்கவோ இழிவுபடுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. வலுக்கட்டாயமாக யார் மீதும் எந்த உணவையும் திணிக்கவும் கூடாது. அதிலும் அடித்தட்டு மக்களின் உணவுப் பழக்க வழக்கங் களையும் பண்பாட்டையும் மதிப்பதென்பது கம்யூனிஸ்ட் தோழமையின் மகுடம். அது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

தந்தைப் பெரியார் பெரிய அளவில் விளம்பரம் செய்து மாட்டுக்கறி பொது விருந்து வழங்குவதை தன் வாழ்நாள் முழுக்க வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் பெருமையாக - சமூகசீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதினார். இவற்றையெல்லாம் அசைபோட்டுப் பார்க்கையில் மாட்டுக்கறி சாப்பிடுவதை இழிவென்ற கோணத்தில் எழுதுகிற வரும் சரி - அதை அவமானம் எனக் கருதும் தலைவரும் சரி - அதை அவ மதிப்பாகக் கருதி தீர்ப்பு வழங்கும் நீதிபதியும் சரி வர்ணாஸ்ரம் சிந்தனை எனும் பிற்போக்கு சங்கிலியிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.

-சு.பொ.அகத்தியலிங்கம்

நீ உன்னை அறிந்தால்.....

Posted by அகத்தீ Labels:


நீ உன்னை அறிந்தால்.

"தன்னை அறிதல்””  என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும்  “தன்னை அறிதல் என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோக்கிச் செலுத்தமுடியும்”என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர்.

“நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில் ஒருவித  கருத்துப் பதியம் செய்யப்படுகிறது.”துன்பமும் நீதான். இன்பமும் உன்னிடம்தான்.பிரச்சனையும் நீதான். தீர்வும் நீதான்”.எனவே ஒவ்வொருவரும் தன்னை அறிவதுதான் வெற்றியின் முதல்படி என்று தொடர்ந்து எல்லோராலும் வலியுறுத்தப்படுவது சரியா?“ஆம்”என்றால் நான் ஏமாற்றுகிற திருக்கூட்டத்தில் சேர்ந்தவனாகிவிடுவேன்.”இல்லை”என்றால் ஒரு வாசலை அடைத்தவனாகிவிடுவேன். “சரி, சரி நீங்களும் உங்கள் பங்குக்கு குழப்புங்கள்”என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.ஆயினும் இப்பிரச்சனையில் சற்று நிதானமாகவே பேசவேண்டியுள்ளது.ஏனெனில் இது பெரும் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு விவாதமால்லவா?

“பறவையைப் பார்த்து பறக்க ஆசைப்பட்டான். அந்த ஆசைதானே விமானத்தைக் கண்டுபிடிக்க உந்துசக்தியானது?”இப்படி கேள்வியை சொடுக்கினார் நண்பர்.நான் பதில் சொன்னேன்,” “ஆம்,ஆனால் அதில் புதைந்துள்ள உண்மை வேறு.ரைட் சகோதரர்கள் பறக்க ஆசைப்பட்டதும் உண்மை,ஆயினும் அந்த ஆசையினால் மட்டுமே அவர்கள் வெற்றிபெற வில்லை.அதற்கு முன்பு பலர் ஆசைப்பட்டு,கனவு கண்டு பல முறை முயற்சித்தனர்.இம்முயற்சியில் தோற்றவர் எராளம்.அதில் உயிரை இழந்தவர்கள் ஏராளம்.அவர்களின் தோல்விகள்,அனுபவங்கள் இவற்றை உள்வாங்கி முயன்ற போது.வெற்றி சாத்தியமானது”

 “ரைட் சகோதரர்கள் ஆசைப் படாமல்,கனவுகாணாமல் அது கைக்கூடியிருக்குமா?என எதிர் கேள்விபோட்டார்.”நீங்கள் சொல்வது ஒருவகையில் சரி ஆசை முயற்சியின் தொடக்கம்.அதே சமயம் சூழல் அதற்கேதுவாய் அமையின் மட்டுமே சாத்தியம்.பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவு ஒரு நாளில் கைகூட வில்லை அது பலநூற்றாண்டுக் கனவு.தொடர் முயற்சி,தொடர் கண்டுபிடிப்புகள் இவற்றின் கூட்டுத்தொகையாய் கிடைத்ததுதான் விமானம்.இதில் ரைட் சகோதரர்கள் பங்கையும் மறுதலிக்கக் கூடாது.அதேபோல் அதற்கான சூழலையும்-முன்னர்கூறியதையும் மறுதலிக்கக் கூடாது.”என்பதிலில் நண்பர் திருப்ப்தி அடையவில்லை.அதுவும் நல்லதே.திருப்தியின்மையே தேடலுக்கு வழிவழிகுக்கும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்றார் வள்ளுவர். எண்ணம்போல் வாழ்க்கை என்பதையும் நினைவில் கொள்ளவும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு” என்ற திருக்குறளை நம் நாட்டின்  குடியரசுத் தலைவராக இருந்த  ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  அடிக்கடி கூறுகிறார்.“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்”என்னும் வள்ளுவர் வாக்குப்படி, வலுவான எண்ணங்கள் வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.இப்படி நண்பர் கூறினார்.நான் உண்மையைத் தேடத் துவங்கினேன்.

நண்பர்  கருதுவதில் பெரும் குற்றம் சொல்ல விரும்பவில்லை ஆனால் தனிநபர் முயற்சி சார்ந்த விஷயங்களில் நாம் எதையும் வற்புறுத்த விரும்பவில்லை என்பதோடு என்பணிமுடியவில்லை.அதற்கும் மேல் சமூகம் சார்ந்த பார்வையை மறந்துவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து.அப்துல் கலாம் மேற்கோள்காட்டும் குறளையே சரியா பொருள் கொண்டால் நான் சொன்னது சரி என்றாகிவிடும்.ஆம்.நீரில் மிதக்கும் தாமரை,அல்லி போன்ற செடிகளின் உயரம் நீரின் மட்டத்துக்கேற்ப இருக்கும்.அதுபோல் உள்ளத்துக்கேற்ப அமையும் உயர்வு.ஆம்,அது சரி,வெள்ளத்தின் உயரம் மழையைப் பொறுத்து, கரையின் உயரத்தைப் பொறுத்து,கரையின் வலுவைப் பொறுத்து இப்படி பல காரணங்களால் அமையும்,அது போல் உன் வாழ்க்கைச் சூழல், சமூகச்சூழல் சார்ந்தே உன் எண்ணம் சமையும் என்பதை மறந்து விடாதே.அகச்சூழலும் புறசூழலும் பொருந்திப்போகும் போதே விரும்பிய மாற்றங்கள் கைகூடும்.அதைத்தான் மார்க்ஸ் சொன்னார்  “உன் எண்ணங்கள் சமூகச்சூழலை தீர்மானிப்பதில்லை.மாறாக சமூகச் சூழலே உன் எண்ணங்களைத் தீர்மாணிக்கிறது”.

 “யோகாவும் தியானங்களும் தனி மனிதனின் உள்ளத்தின் பதற்றத்தைத் தணிப்பதில் ஒரு பங்கு வகிக்க முடியும் ஆனால் அது மட்டுமே தீர்வல்ல.  “யோகா,தியானம்,மரக்கறி உணவுப் பழக்கம் இவை அறிவுக்கூர்மையோடும் ஆன்மீகத்தோடும் இணைத்துப் பேசப்படுவது ஏற்கத்தக்கதா? இல்லை என்பது என் கருத்து.யோகா எனும் மூச்சுப்பயிற்சியும் அதோடு சேர்ந்த உடற்பயிற்சிகளும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல. உடல்நலம் சார்ந்தது.அதுபோல் தியானம் உளவியல் பயிற்சி.இதுவும் ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது அல்ல.இவை அனைத்தும் மதத்தோடு குழப்பப்பட்டதால்தான் பிரச்சினை.

அதுபோல் மாட்டுக்கறி உண்பதால் அறிவுமந்தம் ஏற்படும் என்பதும் சமூக ஒடுக்குமுறை நோக்கம் கொண்டபார்வையே.இன்றைக்கு நாம் அனுபவிக்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு மாட்டுக்கறி சாப்பிடுபவர்களால் கிடைத்ததே.மனிதன் வெந்த புலால் உணவை சாப்பிடத் தொடங்கிய பின்னரே மூளை வளர்ச்சி வேகமடைந்தது என்பது அறிவியல் கூறும் செய்தி.அதுபோல் இந்த சாதனையாளர்கள் எல்லோருமே யோகா, தியானம் மூலம் வல்லமை பெற்றவர்கள் என்று  கூற இயலாது.தியானம்,யோகா,ஆரோக்கியமான உணவு இவை உடல்நலம் சார்ந்தது.ஆரோக்கியமான உடல்,உள நிலை உங்கள் முயற்சிக்கு ஊக்கம் தரும் அவ்வளவே. சமூக,அரசியல்,பொருளாதராக் காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளே பெரும்பாலும் நம்மை அலைக்கழிக்கின்றன.அவற்றை எதிகொள்ளப் பழக வேண்டும் அதனை வெற்றிகொள்ள சமூகப்பார்வை அவசியம்.தனிமனிதனாகவும்,சமூக மனிதனாகவும் பிரச்சனைகளை எதிகொள்ளப்பழகுவ்தே சாரியான வழிமுறையாகும்.

நீ உன்னை அறிவது அவசியம்.உலகை அறிவது அதைவிட அவசியம்.நீ உண்ண,உடுக்க,படிக்க,இருக்க,நடக்க,பேச,பழக, வாழ இந்த சமூகம் அவசியம்.சமூகத்தைத் தவிர்த்து நீ இல்லை,இதை உணரவேண்டும்.நீ சமூகத்தின் ஒரு துகள் என்பதை அறிந்தால் உன்னைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும். ஏற்றம் வரும்.சுயநலக் குடுவையில் அடைபடாமல் சமூகமனிதனாய் இமை திற....எழுந்து நில்..விசாலப்பார்வையால் உயர்ந்து மேலேறு..நீயும் வாழு... சமூகத்துக்கும் தோள்கொடு.

சு.பொ.அகத்தியலிங்கம்.


























பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

Posted by அகத்தீ


அன்று,

பேரன் சாப்பிட பாட்டன் மரம் நட்டான்
ஏர்பின்னதே உலகம் என்று-உழவன்
உதிரத்தை நிலம்மீது வடித்தான்..

கவளம் உணவிணறி காய்ந்த வயிறோடு
துறவியும் பற்றறுத்து வாழார்-வள்ளுவன்
சொன்ன சொல் நினத்தான்

இன்று,

உழன்றும் உழவே தலையென்ற நிலை மறந்து
விளைநிலமெல்லாம் காங்கிரீட் காடாக்கி –தானும்
அழிந்து தலைமுறையும் அழித்தான்

நிலமென்னும் நல்லாள்நக உழவனை அழவிட்டு
உணவுக்கு கையேந்த சட்டமெனில்-பரந்து
கெடுக உலகியற்றி யான்.

இனி

உழுதுண்டு வாழ்வார் தற்கொலையில் சாவாரெனில்
அல்லற்பட்டு அழுது கண்ணீர் சிந்தாமல்-ஏர்பிடிப்போன்
போர்ப்பறை முழங்கி அணிவகுப்பான்

உழவரும் தொழிலாளரும் ஒன்றாய் கொடிபிடித்து
ஊரையே படைதிரட்டி தரணிவாழ-இனி
பொங்கியெழுவர் இது திண்ணம்.