மவுனத்தில் விலை

Posted by அகத்தீ Labels:

 


மவுனத்தில் விலை
முஸ்லீம் மாணவர்களை
கல்வி நிலையங்களை விட்டு துரத்து !
முஸ்லீம் வியாபாரிகளை
வியாபாரத்தை விட்டு துரத்து
முஸ்லீம்கள் வாழ்வுரிமையை
பிடுங்கி கசக்கி எறி
ஆட்சியாளர் தாளத்துக்கு
நீதிமன்றமும் நடனமாடும்
இதைக் கண்டு இந்து பெருமிதம்
பொங்க நீ வெறிகொண்டாடு !
முஸ்லீம்கள் கணக்கை முடித்ததும்
தலித்துகளை வேட்டையாடத் தொடங்குவர் !
ஆதிக்க சாதி பெருமையில்
இந்து என்று ஆனந்தமாய் ஆடு !
அப்புறம் பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
என வேட்டை தொடர - நீ
செய்வதறியாது விக்கித்து நிற்பாய்
காக்கவும் யாரும் இருக்கமாட்டார் !
மாட்டு மூத்திரக் குடிக்கிகளும்
வெறும் தாவர பட்சிணிகளும்
மேட்டுக்குடியினர் மட்டுமே
வாழ்த்தகுதியான இந்து என்பர்
எதிர்த்து கேட்கவும் நாதி இருக்காது !
நமக்கு எதுக்கு வம்பு ?
பேசாமல் மவுனம் காப்பீர் !
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எல்லாம் விதிப்படி நடக்கிறது
விதி வலியது .புரிந்ததா ?
மவுனத்தில் விலை இதுதாம்...
சுபொஅ. 39/3/2022.
Mookaiyan Murugan, Rabeek Raja A and 3 others

உரைச் சித்திரம் : 4.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 4.

 


தாய் குழந்தைகளைக்

காப்பாற்றுவதைப் போல…

 

 

 “கருங்கற் பாறைகள் நிரம்பி இருக்கின்றன .அவை பார்ப்பதற்கு எருமை மாடுகள் போலிருக்கின்றன .

 

அவற்றினூடே பசுக்கூட்டம் மேய்வதுபோல் யானைகள் கூட்டம்கூட்டமாய் மேய்கின்றன  .

 

அந்த யானைகளை ஒத்த வலுமிக்க கானக நாடன் என்பவன் நீர்தாமோ !

 

உமக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

 

அன்பும் அருளும் இல்லாதார் வாழ்க்கை நரகம் போன்றது ஆகும் .

 

அந்த தீயவர் கூட்டத்தில் நீங்களும் ஒருவனாக மாறிவிடாதீர்கள் !

 

ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றுவாரோ அப்படி நீவிர் உம் குடிமக்களைக் காப்பீராக !”

 

இப்படி சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் எனும் சேர மன்னரை நோக்கி புத்தி சொல்கிறார் நரிவெரூஉத் தலையார் எனும் புலவர்.

 

 

 

 “விரும்பி வந்த திருமகளை மார்பில் அணைக்காமல் , தோல் கவசம் அணிந்து வலிமை மிக்க மார்பினை நிமிர்த்தி நிற்கும் மன்னா !

 

 

யானைப் படையை ஏவியும் காலாட் படையை ஏவியும் எதிரி நாட்டை மிதித்து அழிக்கிறாய் !

 

கைத்திறனைக் காட்டி அம்பு மாரி பொழிந்து எதிரியை கலங்க அடிக்கிறாய் !

 

இரவு பகல் பாராது பகை நாட்டை தீவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் அந்நாட்டு மக்கள் கதறி அழுவதைக் கண்டு ரசிக்கிறாய் !

 

மன்னா ! இது நன்றல்ல . நன்றல்ல ….தவறு .

 

தண்ணீர் வள மிக்க சோழவள நாட்டைக் காக்கும் கடமையைச் செய்யாமல் , மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டை அழித்தொழிப்பது எந்த விதத்தில் நியாயம் ?”

 

 

சோழமன்னர் கரிகால் பெருவளத்தானை நோக்கி புலவர் கருங்குழல் ஆதனார் இடித்துரைத்தவை இவை .

 

 

 “விண்மீன்கள் மிகுந்திருக்கும் வானத்தை இருள் சூழ்ந்திருக்கிறது .

தகத்தாய பேரொளியுடன் சூரியன் உதித்து இந்த இருட்டை விரட்டி அடிக்கிறான்.

 

பாண்டிய மாமன்னர் நெடுஞ்செழியனே !

 

இருட்டை இல்லாமலாக்கிய சூரியனைப்போல தன் பகை நாடான சேர சோழ படைகளை தம் வலிமையான அம்புகளால் வீழ்த்துகிறாய் !

 

அவர்களின் போர் முரசுகளைக் கைப்பற்றி வெற்றி முழக்குகிறாய்… … எல்லாம் சரிதான்…

 

அங்கே பார் !

 

அங்கே போர்க்களத்தில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிகளைப் பார் !

 

தங்கள் கருங்கூந்தல் மண்ணில் புரள மார்பில் அடித்துக் கொண்டு கணவர்களின் உயிரற்ற உடலில் விழுந்து புரண்டு அரற்றி அழுவதைப் பார் !

 

தங்கள் அழகிய கருங்கூந்தலை வெட்டி எறிந்து மொட்டை அடிப்பதைப் பார் !

 

இன்னுமா யுத்தம் விரும்புகிறாய் ? வேண்டாம் ! வேண்டாம் !

 

நிலவு போன்று ஒளிரும் உன் வாள்கள் இனியேனும் யுத்தத்தைத் தவிர்க்கட்டும் ! யுத்தத்தைத் தவிர்க்கட்டும் !”

 

பாண்டிய மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை நோக்கி புலவர் கல்லாடனார் உளம் உருகப் பாடியது

 

சேரமன்னர் ,சோழ மன்னர் ,பாண்டிய மன்னர் மூவரையும் நோக்கி புலவர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் ?

 

 “போர் வேண்டாம் .மக்களைக் காத்து நிற்பீர் !

 

யுத்தத்தில் பொன்னும் பொருளும் உயிரும் விரயம் ஆவதைத் தவிர்த்து ,அதனை மக்கள் நல்வாழ்வுக்கு அரண் செய்வீர் !”

 

இன்றைய ஆட்சியாளர்களுக்கும் நாம் அதைத்தானே சொல்ல வேண்டி இருக்கிறது

 

 

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா

5

நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.

 

[ புறநானூறு :5 ]

 

 

 

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்,

5

தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!

10

தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

 

[புறநானூறு : 7 ]

 



மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை

5

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,

10

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

[ புறநானூறு : 25 ]

 

 

போர் செய்து அழியாதீர் !

மக்கள் நலம் பேணி புகழடைவீர்

 

!    

 

சு.பொ.அகத்தியலிங்கம் 28/3/2022.


 

சுவரெழுத்தும் முகநூலும் …

Posted by அகத்தீ Labels:

 

சுவரெழுத்தும் முகநூலும் …

 

நேற்று என் தம்பி சு.பொ.ஐயப்பன் அகமதாபாத்திலிருந்து அழைத்து பேசினான் .நினைவுகள் பின்னோக்கி உருண்டோடின .

 

பழவந்தங்கலில் வெண்மணிப் படிப்பகம் ஆரம்பிக்க முடிவெடுத்தோம். அந்நாட்களில் ரயில் நிலையங்களில் விளம்பர பலகைகள் வைப்பர் .அதன் அனுமதி காலம் முடிந்ததும் கழற்றி ரயில் நிலையத்தில் அனாதையாகப் போட்டுவிடுவார்கள். அப்படிக் கிடந்த ஒரு போர்டை ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டு உ.ரா.வரதராஜன் ,நான் ,பத்மநாபன் உள்ளிட்ட தோழர்கள் எடுத்து வந்தோம் .

 

என் குடிசை வீட்டில் வைத்து அதில் வெள்ளை பெயிண்டடித்து சிகப்பு எழுத்தில் அழகாக  ‘வெண்மணி படிப்பகம்’ என என் தம்பி சு.பொ.ஐயப்பன் வரைந்து கொடுத்தான் . சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி முதல் அறைகூவல் புத்தகத்திற்கும் அவனே அட்டை டிசைனர் . அவன் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவன் .பின்னர் அகமதாபாத்துக்கு பிழைப்பு நிமித்தம் சென்றுவிட்டான்.

 

நான் மட்டுமல்ல என் அண்ணன் நாராயணன் ,தம்பி ஐயப்பன் என மூவரும் இயக்கத்தில் இணைந்திருந்தோம் . சுவரொட்டி ஒட்ட பசை ரெடி பண்ணுவது தேடி வரும் தோழர்களை அரவணைப்பது என என் தாய் தங்கம்மாளும் தோள் கொடுத்தார் .என் அப்பா பொன்னப்பர் கூட்டங்கள் நடக்கும் போது வந்து பேச்சைக் கவனிப்பார் .

 

என் தாயும் தந்தையும் சாதி ,மத , கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே ! தோழர் தினதயாளன் சாதி மறுப்பு பதிவுத் திருமணம் செய்த போது பதிவு அலுவலகத்துக்கு என் தாயும் வந்தார் .என் அண்ணன் இதுபோல் சாதி ,மத மறுப்பு திருமணம் செய்யும் போது என் தாயும் தந்தையும் உடன் இருந்தனர் .ஆயின் பின்னர் ஏனோ அண்ணனையும் அண்ணியையும் அவர்களுக்குப் பிடிக்காமல் போனது .

 

தோழர்கள் மைதிலி சிவராமன் , பி.ஆர் .பரமேஸ்வரன் , எ.கே .பத்மநாபன் , கே .எம் .ஹரிபட் ,து.ஜானகிராமன் ,நெ.இல.சீதரன்,உ.ரா.வரதராஜன் போன்ற தோழர்கள் எங்கே பார்த்தாலும் என் தாயிடம் ஐந்துநிமிடம் பேசாமல் செல்லமாட்டார்கள் .

 

 

என்னை முழுநேர ஊழியராக்க தோழர்கள் வீட்டில் வந்து பேசியபோது என் அப்பா சொன்ன ஆட்சேபனை , “ உங்க கட்சியில சேர்ந்தால் கல்யாணமே பண்ணிக்காமல் அல்லவா வாழணும் .” குமரி மாவட்ட அனுபவத்தில் அவர் சொன்னார் . தோழர் வி.பி.சியும் பிஆர்பியும் வாக்கு கொடுத்து முழுநேர ஊழியர் ஆக்கினர் .பின்னர் தோழர் நெ.இல .சீதரன் பெண் பார்த்துக் கொடுக்க சி.கலாவதி என் இணையர் ஆனார்

 

வேடிக்கை என்னவெனில் என் தந்தையும் தாயும் அண்ணனும் சாகும் வரை கட்சி மீது பற்றுக் கொண்டவர்களாகவே இருந்தனர் . .என் அண்ணன் நோயில் விழுந்தபின்  சாகும் வரை வடசென்னை கட்சி மாவட்டக்குழு அலுவலத்தில்தான் தங்கியிருந்தார்.

 

நான் பெரம்பூரில் குடியிருந்த போது – வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டு சமயத்தில் என் வீட்டிற்கு தோழர் ஹன்னன் முல்லாவும் , மாணிக் சர்க்காரும் வந்திருந்தனர் . என் தாயிடம் இருவரும் முக்கால் மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர் .என் தாய்க்கு ஆங்கிலம் தெரியாது . அவர்களுக்கு தமிழ் தெரியாது . நீங்கள் என்ன பேசினீர்கள் எனக் கேட்டபோது ஹன்னன் சொன்னார் ,” “ எல்லா அம்மாக்களும் அன்புதான். மொழி பிரச்சனை இல்லை.”

 

நான் மட்டுமல்ல ,தோழர் குமாரதாஸ் , போக்குவரத்து ஊழியர் ராஜு இப்படி என் போல் குடும்பமாய் கட்சியோடு இருந்த தோழர்களும் உண்டு . என் தலையைப் பார்த்தாலே சபிச்சுக் கொட்டி - வீட்டுக்கு வராதே என விரட்டியடித்த வீடுகளும் உண்டு .

 

அதிலும் சுவர் பிரச்சாரம் / ஊர்வலம் /ஆர்ப்பாட்டம் என தெரிந்துவிட்டால் .அந்தத் தோழரை வீட்டைவிட்டு அனுப்பவே மாட்டார்கள் .ஆயினும் வீட்டில் ஏதாவது பொய் சொல்லிவிட்டு வந்து சேர்ந்துவிடுவர்

 

சுவரெழுத்துக்காக முன்கூட்டியே உட்கார்ந்து பேசி ; சுருக்கமாய் கவிதை வரிகளாய் எழுதிக் கொண்டு ,இரவு பத்து மணிக்கு மேல் போய் விடியற்காலை வரை சுவரில் தீட்டிவிட்டு வருவதும் ; மறு நாள் அந்தப் பக்கம் போய் மக்கள் அதை கவனிக்கிறார்களா  கேலி செய்கிறார்களா என கவனிப்பதும் ; அது ஒரு பருவ காலம் .

 

 “ கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை” என அவசரகாலத்தில் ஒன்றிய அரசு எங்கும் எழுதி வைத்தது , குறிப்பாக ரயில் நிலையங்களில் . நாங்கள் அதன் பக்கத்தில் எழுதினோம் . என்ன தெரியுமா ? “ ஆம் ! ஈடான ஊதியமும் இல்லை ; இணையான போணசும் இல்லை.” .இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே!

 

தட்டிபோர்டு வைத்தால் அது டீக்கடையில் பேச்சாகும் .போலீஸ் குறிப்பெடுக்கும் . எதிர்கட்சிக்காரன் மேடையில் இதைக் கிண்டலடிப்பான் . இந்த பிரச்சார யுத்தி எல்லாம் இன்று கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்டதோ ? இப்போதும் தேவைப்படும் இடங்களும் சந்தர்ப்பமும்கூட உண்டு.

 

முகநூலும் டுவிட்டரும் சமூகவலைதளங்களும் இந்த இடத்தைப் பிடித்துவிட்டது போலும் . ஆயின் அதை நாம் பயன்படுத்த கற்றுத் தேறிவிட்டோமா ?இல்லை .

 

மதவெறி ஆர் எஸ் எஸ் கூட்டம் பிழையான செய்தியைக்கூட வெகுசீக்கிரம் பரப்பிவிடுகிறார்கள் . நாம் சரியான செய்தியைக்கூட அப்படிச் செய்யத் தவறிவிடுகிறோமே ! இதற்கென வல்லுநர் ஆலோசனை பெற முயற்சிக்கலாமோ !

 

அதெல்லாம் இருக்கட்டும் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ?

 

முதலில் இறுக்கமான மொழிநடையின்றி எளிதாக சுவையாக சொல்லப் பயில்வோம் . ஆம் , எதைச் சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எப்படிச் சொல்கிறோம் என்பதும் முக்கியம்

 

இரண்டாவது மிக முக்கியம் நம்மிடம் மிகப்பெரிய மத்திய தர வர்க்கம் உண்டு .அவர்களுக்கு கணினி வசதி உண்டு .பயிற்சி உண்டு . அவர்கள் எல்லோரும் பதிவு போட்டு ,மற்ற பதிவுகளுக்கு லைக் போட்டு ,ஷேர் செய்து களமாடினால் நமது வீச்சு மிகப்பெரிதாக இருக்கும் .

 

அவர்களில் பெரும்பான்மையோர் வெறும் பார்வையாளர்களாக இருப்பதுதான் ஆகப் பெரும் தடை .

 

இன்றைய சுவர் நம் கையில் இருக்கிறது .இன்றைய தட்டிபோர்டு நம் கையில் இருக்கிறது .இடதுசாரி அரசியலை –கம்யூனிஸ்ட் அரசியலை உரக்கப் பேசத் தடை என்ன ?

 

நான் தொடர்புடைய குடும்ப வாட்ஸ் அப் குரூப்களில் என் அரசியல் பதிவுகளை தொடர்ந்து பதிகிறேன் . நீங்களும் செய்யலாமே ! ஆனால் எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் பதிய முடியாது அதனதன் நிலை அறிந்து நம் சங்கை ஊதத்தான் வேண்டும் . ஊதலாமே !

 

சுபொஅ.

27/3/2021.

 

 

 

 

 

 

உரைச் சித்திரம் : 3.

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் : 3.

 

குறை நிறைகளோடு பழகுவோமே !

 

 

ஒவ்வொரு மரத்துக்கும் ஓர் இயல்பு உண்டு . அதை நம் சமூகம் நன்கறியும் .

 

கமுகு மரத்தை அதாவது பாக்கு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ; நாள் தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் . அப்போதுதான் காய்த்துக்கொண்டே இருக்கும் .தண்ணீர் பாய்ச்சுவது நின்றுபோனால் காய்ப்பதும் நின்று போகும் .

 

தென்னை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வப்போது அதாவது விட்டு விட்டு நீர் பாய்ச்சினும் காய்ப்பதை நிறுத்தாது .

 

அதே வேளை பனை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எப்போதோ பாய்ச்சிய தண்ணீருக்கு காலம் முழுவதும் பயன் தரும் .

 

நட்பும் அப்படித்தான் . சிலர் நட்பு பாக்கு மரம் போன்றது , பணத்தால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே நட்பு நீடிக்கும் . சற்று வற்றினாலும் நட்’பூ’ உலர்ந்து உதிர்ந்து விடும்.

 

சிலர் நட்பு தென்னை போல அவ்வப்போது அதாவது வாய்ப்புள்ள போது மட்டும் பணமோ உதவியோ செய்து மகிழ்ந்தால் போதும் ; காலம் நெடுக நட்’பூ’ புன்னகைக்கும் .

 

சிலர் நட்பு பனை போன்றது . எப்போதோ செய்த ஒன்றை வாழ்நாள் முழுவதும் மறவாது கொண்டாடும் .குதுகலிக்கும் .நட்’பூ’ மணம் வீசிக்கொண்டே இருக்கும் .

 

இந்த நட்பு நீடிக்க என்ன செய்ய வேண்டும் ?

 

அரிசியாக அப்படியே விளைவதில்லை . நெல்லாகவே விளையும் .நெல்லில் உமி இருக்கும் . உமியை நீக்கித்தான் அரிசியை எடுக்க வேண்டும் . உமி இருக்கிறது என்பதால் அரிசி வேண்டாம் சோறு வேண்டாம் எனச் சொல்ல முடியுமா ?

 

பொங்கிப் பாயும் தண்ணீரில் நுரை கொப்பளித்து வரும் .எனக்கு நுரை பிடிக்காது எனவே தண்ணீரே வேண்டாம் எனச் சொல்வோமா ?

 

அழகிய பூவாயினும் அங்கு அதில் புல்லி வட்டம் இருக்கும் , ரோஜா பூவை எடுத்தால் முள் இருக்கும் . ஆதலால் பூக்களை வெறுப்போமோ ?

 

நாம் நண்பராக வாரி அரவணைத்தவரிடமும் சில குற்றங் குறைகள் இருக்கும் . குற்றங் குறை இல்லாத மனிதர் யார் ? குற்றம் பார்க்கின் சுற்றம் உண்டோ ? நட்பு உண்டோ ?

 

காதலாயினும் நட்பாயினும் குறை நிறைகளோடு ஏற்கப் பழகுவதுதானே வாழ்வை இனிதாக்கும் ! சின்னச் சின்ன குற்றங்களைக் கண்டு வெறுக்கத் துவங்கினால் ஒவ்வொருவரும் தனித்தே இருக்க வேண்டியதுதான்.

 

நாம்தான் அணை கட்டுகிறோம் .தண்ணீரைத் தேக்குகிறோம். ஏதோ காலச் சூழலால் அணை உடைந்து நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது . கோபப்பட்டு என்ன செய்ய ?

 

அதற்காக மீண்டும் அணை கட்டாமல் இருக்க முடியுமா ?தண்ணீரைத் தேக்காமல் இருக்க முடியுமா ?

 

சில நேரங்களில் நாம் விரும்பி நட்பு கொண்டோர் நாம் வெறுக்கும் சில செயல்களைச் செய்துவிடக்கூடும் . சொற்களைக் கொட்டிவிடக்கூடும் . அந்த ஒன்றைச் சொல்லியே நட்பை காவு கொடுக்க இயலுமா ? காதலுக்கும் இதுவே !

 

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் – அதாவது பிளஸ் அண்ட் மைனஸ் இரண்டும் கலந்துதான் நட்பும் காதலும் .அப்படியே ஏற்பதும் தொடர்வதுமே வாழ்க்கையின் வெற்றி !

 

இப்படி எல்லாம் நம்மை செப்பனிடும் நல்ல வழிகாட்டியே சங்க இலக்கியங்கள் .நாலடியார் வரைந்த சில செய்திகளை இங்கு தீட்டிக் காட்டினேன் .

 

நீங்களும் அசை போடுங்கள் !

 

 

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

216



நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

221




செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.                                        222



 

குறை நிறைகளோடு மக்களை அரவணைக்கப் பழகுவோமே !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

24/3/2022.