சு.பொ.அலி என்பவரை நீங்கள் அறிவீர்களா ?

Posted by அகத்தீ Labels:

 

சு.பொ.அலி என்பவரை நீங்கள் அறிவீர்களா ?

 


தமிழ் நாடு முழுவதும் இன்னும் இப்பெயரால் என்னை அறிந்தவர் அழைப்பவர் பலர் உண்டு . தோழர் ஏ .கே .பத்மநாபன் நேற்றுகூட என்னை இப்படித்தான் விழித்தார் ; என் மீது மாறா பற்று கொண்டவர் .

 

என் முன் பதிவில் சில தோழர்கள் பெயரைச் சுட்டி இருந்தேன் . எல்லோரையும் ஒரே பதிவில் சுட்டுவது சாத்தியமல்ல . அடுத்தடுத்து இன்னும் பலரைச் சுட்டுவேன் .

 

ஓர் தோழர் நான் என் வாழ்க்கை வரலாற்றை தன்வரலாறாக எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தார் . என்னையும் எஸ் ஏ பி யையும் தன் வரலாறு எழுதுமாறு தோழர் என்.ராமகிருஷ்ணன் சாகும் வரை வற்புறுத்திக் கொண்டிருந்தார் . நான் தீர்மானமாக மறுத்துவிட்டேன் . இப்போதும் அதே உறுதியோடு சொல்கிறேன் , “ நானொன்றும் பெரிய ஆளுமை இல்லை ;பெரிதாய் எதுவும் சாதித்துவிடவும் இல்லை.”

 

அவ்வப்போது என்னுள் மகரயாழை மீட்டும் தோழமை ராகத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்வேன் ; அதுவும் தோழமையின் வாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தவே !

 

நான் கலந்து கொண்ட முதல் கிளைக் கூட்டத்தில் [ ஆதரவாளர் கிளை ] கட்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி தோழர் ஏ.கே .பத்மநாபன் பேசினார் .கூட்டம் பழவந்தங்கலில் எம் ஜி ஆர் நகரில் பத்மநாபன் [ஆர் பி ஐ கேண்டின் பத்மநாபன் ]  குடிசையில் கூட்டம் நடைபெற்றது .

என்னை எப்போதும் கேலி செய்யும் தோழர் கோபிநாத் கேள்வி கேட்க என்னை உசுப்பி விட்டார் . நானும் கேட்டேன் , “ கட்சித் திட்டத்தை நடைமுறையாக்க கட்சி  ‘டைம் டேபிள்’ ஏதாவது வைத்திருக்கிறதா ?”

 

மொத்த கிளையும் சிரித்தது . தோழர் ஏ.கே.பி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் , “ ஸ்கூல்ல இருக்கிற மாதிரி டைம் டேபிள் எல்லாம் போட்டு கட்சி செயல்பட முடியாது . ஓர் கருத்து ஜனங்கள கவ்விப் பிடிச்சால் அது பெளதீக சக்தி ஆகிவிடும் என மாமேதை மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் .அதை நோக்கி ஜனங்களை தயார் செய்யுறதுதான் நம்ம வேலை.”

 

காலம் ஓடியது .நான் வகுப்பெடுக்கத் தொடங்கினேன் , அப்போது நானும் இது போன்ற கேள்விகளை எதிர்கொண்டேன் .

 

இப்போது தெரிகிறது , நாம் இன்னும் செல்ல வேண்டியது நெடும் நெடும் நெடும் தொலைவு .எம் சந்ததியர் செல்லட்டும் .இலக்கை எட்டட்டும் !

 

அவசர காலத்தில் தலைவர்கள் தலைமறைவாகி விட்டனர் . தோழர் து.ஜானகிராம் ,கே.எம் ,ஹரிபட் ,வழக்கறிஞர் சிவாஜி உட்பட பல தோழர்கள் கைது செய்யப்பட்டு மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டனர் . தோழர் சி.பி.தாமோதரன் ,ஏ.கே.பத்மநாபன் போன்ற ஒரு சிலரே வெளியில் இருந்து செயல்பட்டனர் . சி.பி.தாமோதரன் ஒரு கட்டத்தில் போலிஸாரால் கைது செய்யப்பட்டுவிட்டார் .

 

தென் சென்னையில் பழவந்தங்கல் , கிண்டி ரயில் நிலையம் அருகே மாடி அறை , தோழர் குமாரதாஸ் வீடு ,சைதை தோழர் வை.கிருஷ்ணசாமி அறை , திருவான்மியூர் சின்னையா அறை இவையே சந்திப்பு மையங்கள் .

 

தமுஎச [ அப்போது தமுஎகச அல்ல] மூலம் இலக்கிய அறைக் கூட்டங்கள் நடத்தினோம் . சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி ஒன்று பழவந்தங்கலில் துவக்கினோம் . அதன் மூலம் அறைக்கூட்டங்கள் நடத்தினோம் .

 

வகுப்புகள்  ,அறைக்கூட்டங்கள் ,ரயிலில் பிரசுர விற்பனை , உண்டியல் வசூல் , சுவரெழுத்து , கையெழுத்து போஸ்டர்கள் ,போராட்டங்கள் என பழவந்தங்கலில் செயல்பாடுகள் தீவிரமாய் இருந்தது . “வெண்மணிப் படிப்பகம்” துவக்கினோம்.

 

நான் , பத்மநாபன் ,அல.கந்தன் ,தீனதயாளன் [பின்னர் மணியரசனோடு சென்றுவிட்டார்] ,ராமச்சந்திரன் [ ஒரு கட்டத்தில் விலகிவிட்டார் ] சேகர் ,என் அண்ணன் நாராயணன், விஸ்வம்பரன் ,கோபிநாத் ,முண்டன் ,சந்திரகாசன் , டிரான்ஸ்போர்ட் ராஜு .டி.கே.ராஜன் ,பொன்முடி ,குமாரசாமி [ நினைவில் நின்றபடி எழுதுவதால் சில பெயர்கள் மறந்திருக்கலாம்] இன்னும் பலர் தோழமை பொங்க கிண்டலும் கேலியும் செய்துகொண்டும் விவாதித்துக் கொண்டும் கழித்த நாட்கள் அவை . அரசியலில் அது  “அவசரகாலமாக இருண்ட காலமாக” இருக்கலாம் ,ஆனால் எங்களுக்கு உத்வேகம் தந்த- எங்களைச் செதுக்கிய  “பட்டறைக்காலம்” .

 

உ.ரா.வரதராஜன் , து.ஜானகிராமன் ,நெ.இல .சீதரன் போன்ற தலைவர்கள் பழவந்தங்கலில் குடியிருந்ததும் ;எங்களோடு களத்தில் நின்று ஊக்கமும் உற்சாகமும் தந்ததும் தனிக்கதை . என் அண்ணன் நாராயணன் முதலில் எங்கள் பகுதியில் தீக்கதிர் விநியோகம் செய்யது வந்தார் .பின்னர் கொஞ்சகாலம் நானும் தொடர்ந்தேன் . எல்லோரோடும் அன்றாடத் தொடர்புக்கு அது உதவியது .

 

நான் கவிதை எழுதுவதில் பேரார்வம் காட்டிய காலம் . மாசே துங் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் ,ஓர் கவிதை எழுதினேன் .கிண்டி அறையில் தோழர் ஏ கே பி யிடம் வாசித்துக் காட்டினேன் .மறுநாள் புதுவண்ணையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் வாசிக்கச் சொன்னார் . நானும் வாசித்தேன் .செல்லாராம் என்னோடு மிகவும் நெருங்க அக்கவிதையே தொடக்கமானது .

 

இக்காலகட்டத்தில் நான் கட்சி முழுநேர ஊழியர் ஆகவில்லை .பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் லிப்ட் பேக்ட்ரியில் தினக்கூலியாக வேலைபார்த்து வந்தேன் .அந்த அனுபவத்தோடு தினக்கூலிகளைப் பற்றி நான் எழுதிய கவிதை , “ வாழ்க்கைப் பாடலில் சிலவரிகள் “ என்ற தலைப்பில் 1977 தீக்கதிர் மே மலரில் முதல் பக்கத்தில் கிட்டத்தட்ட அரைப்பக்கம் வெளியானது ; சு.பொ.அலி என்ற பெயரில்தான் . இந்தக் கவிதை என்னை வேலையை விட்டு துரத்தவும் முழுநேர கட்சி ஊழியராகவும் வழி செய்த கதை தனி .

 

கல்ராயன் மலை மக்களின் வாழ்க்கைப் பாடுகள் குறித்து ஓர் ஆய்வு கட்டுரை கிடைத்தது . அது என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கியது .அதை உள்வாங்கி “ கல்ராயன் மலை எங்கள் மலையே – அங்கு / கண்ணீரில் கரைகின்ற வாழ்வெங்கள் வாழ்வே..” எனத் தொடங்கும் ஒரு நீண்ட கவிதையை [பாடலை] நங்கநல்லூர் இலக்கிய வட்டத்தில் வாசித்தேன் .அங்கு வந்த அக்னி புத்திரன் அதை வாங்கிக் கொண்டுபோய் “ நோக்கு “ முதல் இதழிலேயே பிரசுரிக்கச் செய்தார் . [ இப்போது அக்கவிதை என் கைவசம் இல்லை ] சு.பொ.அலி என்கிற பெயரிலேயே வெளிவந்தது .

 

தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன் என்னை அழைத்து கவிதை நன்றாக இருக்குது .செம்மலருக்கு அனுப்பி இருக்கலாமே ஏன் நோக்குக்கு அனுப்பினாய் எனக் கேட்டார் .கவிஞர் மாயாகவ்ஸ்கி மென்ஷ்விக்குகள் இதழில் எழுதியதை லெனின் தவறென சுட்டிக்காட்டிய சம்பவத்தை வி.பிசிந்தன் எனக்கு விளக்கினார் .

 

அப்போது நான் முழுநேர ஊழியர் இல்லை . என்னை குறி வைத்து கட்சியில் பேசிக்கொண்டிருப்பது அப்போது எனக்குத் தெரியாது . என்னை வளர்தெடுக்க தலைவர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்கள் .  தோழர் கே.எம்.அரிபட் குறித்து பிறகு பேசுவோம் !

 

தோழமை வாசத்தை அவ்வப்போது முகர்வோம்…

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

17/3/2022.

 

 

0 comments :

Post a Comment