ஊருக்கு ஆயிரம் கண்கள்.

Posted by அகத்தீ Labels:

 

 “நீங்கள் ஏன் கோவிலுக்கு வருவதில்லை ?”

ஊருக்கு ஆயிரம் கண்கள்.

 

எனக்கு கன்னடமோ , இந்தியோ தெரியாது .ஆங்கிலமும் அரைகுறை .தமிழ் மட்டும்தான் தெரியும்.

 

பெங்களூர் வந்த பின் ஊர் புதிது . நட்பு வட்டமும் இல்லை .முதலில் திணறினேன் . பின்னர் நடை பயிற்சி வழி ஓர் முதியோர் வட்டம் நெருக்கமாக எலக்ட்ராணிக் சிட்டி நிலாத்திரி நகரில் வலம் வந்தேன் . தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,வங்காளி என பலமொழி நண்பர்கள் .சாலை சாக்கடை வசதி என பொதுப் பிரச்சனைகளில் முதியோர் நாங்கள் குடியிருப்போர் சங்கம் வழி தலையிட 2013 -2017 வரை அங்கு ஊரறிந்த  “சீனியர் சிட்டிசன்ஸ்” ஆனோம்.

 

2017 பொம்மசந்த்ரா காச்சநாய்க்கன்ஹள்ளியில் போலீஸ் லே அவுட் அருகே  ஓர் அடுக்ககத்தில் மகன் வீடு வாங்க குடியிருப்பு மாறியது . அடுக்ககத்தில் எல்லோருடனும் அறிமுகமானவரானேன்.  எல்லோரும் மிகுந்த மரியாதை தந்தனர் . அன்பைக் கொட்டினர் .ஆனால் அந்த மரியாதையே எல்லோரிடமும் ஓர் மரியாதைக்குரிய தூரத்தையும் தொடரச் செய்துவிட்டது.

 

தற்செயலாக அசோக் லேலண்டு தோழர் பன்னீர் செல்வம்  அவர்களைச் சந்திக்க இருவரும் எங்கும் சுற்றினோம். இப்போது அவரும் ஓசுரூக்கே மீண்டும் சென்றுவிட்டார் .

 

நான் நினைப்பேன் , “இங்கு யாரையும் எனக்குத் தெரியாது .” ஆயின் அனுபவம் வேறாக இருக்கிறது . “ஊருக்கு ஆயிரம் கண்கள்” என்பதை நிறைய சம்பவங்கள் சொல்லிச் செல்கிறது . ஒன்றிரண்டு சுவரசியமான செய்திகளைக் கூறுவேன்.

 

சில நாட்கள் முன்பு நடை பயிற்சி முடித்து வரும் போது , நடை பாதையில் ஒரு பழவண்டிக்காரியிடம் பழங்கள் வாங்கினேன். அவர் கேட்டார் ,” சார்! போலீஸ் லே அவுட்டா ? அபார்ட் மெண்டா ?” நான் சொன்னேன்.” அபார்ட் மெண்ட்” . அந்த அம்மா சொன்னார் , “ நீங்க டெய்லி வாக்கிங் போவதைப் பார்ப்போம். நீங்க ஒரு நாள் கூட ஒயின் ஷாப்பில நுழைஞ்சு பார்க்கலை . எங்களுக்கு உங்கள பிடிக்கும் .அண்ணைக்கு ஒரு லேடி அந்த காய்கறி அம்மாவிடம் அதிகமாக பேரம் பேசியபோது ,நீங்க வந்து பேரம் பேசாமல் காய்கறி வாங்கினது மட்டுமல்ல ;அந்த லேடியிடம் ஆண் லைன்ல பேரமா பேசுறீங்க … இவங்க கொள்ளை அடிச்சு பங்களவா கட்டப் போறாங்க … என எங்களுக்காகப் பேசுனதை நாங்க எல்லோரும் பேசி பேசி சந்தோஷப்பட்டோம்…” இப்படி அந்த அம்மா பேசின போது ஊரு நம்மை உற்றுப் பார்ப்பது தெரிந்தது . கன்னடம் கலந்த தமிழில் பேசினாலும் புரிந்தது .

 

நான் வழக்கமாக வாக்கிங் போகும் போது வழியில் பலர் வணக்கம் சொல்வார்கள் .நானும் சொல்வேன் .பேச்சு கிடையாது . ஒரு வீட்டு வாசலில் அம்மா ,மகள் ,பேத்தி என நிற்பார்கள் .நானும் அவர்களும் பரஸ்பரம் வணக்கம் சொல்லுவோம். அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தெலுங்கு குடும்பம் . தமிழ் பேசுவார்கள் . கொரானா காலம் நடை பயிற்சியை முடக்கிப் போட்டது . அதன் பின் நடை பயிற்சி தொடர்ந்த போது அவர்கள் உரையாடினர் . அண்மையில் ஒரு நாள் அவர்களைக் கடக்கும் போது  “ சார் !” என அழைத்தனர்.

 

“ நீங்க ஐயரா ? அய்யங்காரா ?”- பாட்டி கேட்டார் .

“நான் மனுஷன்…” என் பதில்.

“ இல்லை சார் ! நான் நீங்க ஐயர் அல்லது அய்யங்கார்ன்னு சொல்றேன் .என் மகள் முதலியார் ,கவுண்டர்ன்னு எதாவதுதான்னு சொல்றா ,எம் பேத்தி கிறிஸ்டியன்னு சொல்றா நீங்க யாரு ?”

“ நான் மனுஷன்மா ! எனக்கு சாதியும் இல்லை .மதமும் இல்லை …” என நான் பேசி முடிக்கும் முன்பே ,

“ அப்ப நீங்க கறுப்புச் சட்டை பெரியார் கட்சியான்னு…” பாட்டி கேட்டார் .

“ எனக்கு பெரியாரைப் பிடிக்கும் .நான் கம்யூனிஸ்ட்ன்னு” சொன்னேன்.

எல்லோரும் சிரித்து விடை கொடுத்தனர் .இப்போதும் அவர்களை கடக்கும் போது தினசரி வணக்கம் சொல்கிறேன் ; அவர்களும் புன்னகையோடு வணக்கம் சொல்கின்றனர் .

 

இன்னொரு அனுபவம் போலீஸ் லேஅவுட் நண்பர்கள் என்னை சாட்டர்டே பார்ட்டிக்கு அழைத்தனர் . எல்லாம் மது குடிக்கத்தான் . கைச் செலவு கிடையாது .யாராவது ஸ்பான்சர் பிடிப்போம் என்றனர் .அதில் எல்லோரும் ரிட்டர்யைடு போலீஸ்..” , [ பன்னீர் செல்வம் மூலம் அறிமுகமான] ஒரு ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி இவரு தீக்கதிரு இதில் எல்லாம் பங்கேற்க மாட்டாருன்னு சொல்ல … எல்லோரும் விளக்கம் கேட்க என்னைப் பற்றி ஒரு குட்டி அறிமுகம்..”

 

எல்லோரும் கை கொடுத்தனர் .பார்ட்டிக்கு அழைத்ததவர்  ஸாரி கேட்டார் . அதன் பின் பார்க்கும் இடத்தில் எல்லாம் எல்லோரும் வணக்கம் சொல்வார்கள் .சிலர் காம்ரேட் என அழைத்து நமஸ்காரம் சொல்வார்கள் .  ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்று சில இளைஞர்கள் என்னை மறித்து நன்கொடை புத்தகத்தை நீட்டினார்கள் .பார்ட்டிக்கு அழைத்தவர் தலையிட்டு ,” சார் !கம்யூனிஸ்ட் ! அவர விட்டுருங்க..” என்றார் . அதன் பின்னர் அந்த இளைஞர்களும் வழியில் புன்னகையோடு வணக்கம் சொல்கின்றனர் .ஊர் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது .

 

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு சம்பவம் முன்பே சொல்லியிருக்கிறேன் .மீண்டும் சொல்வதில் பிழையில்லை.

 

அடுக்ககம் வந்து ஒரு ஆறேழு மாதங்கள் ஆகி இருக்கும் . நான் நடை பயிற்சி செல்லும் போது ஒருவர் குறுக்கே பைக்கை நிறித்தினர் .  “சார் !உங்கள டெய்லி பார்க்கிறேன். பேசணும் ”என்றார் . “சரி” என்றேன்.

 

 “ நீங்க கிறிஸ்டியனா ?”

 “ இல்லை.”

 “ உங்களப் பார்த்த முஸ்லீம் மாதிரியும் தெரியலையே..”

 “ என்ன விஷயம் சார்!”

“ நான் இங்கு கவுன்சிலர் …பிஜேபி..”

“ தெரியும் சார் ! நண்பர்கள் சொன்னார்கள்..”

 “ ஓண்ணு மில்லே நீங்க டெய்லி இப்படி போறீங்க அனுமார் கோயில் பார்த்து ஒரு நாள் கூட கும்பிட்டதா தெரியலை … உங்க மகன் ,மருமகள் ,மனைவி யாரும் கோவில் பக்கம் வந்ததாத் தெரியவில்லை …”

 “ நான் சிரித்தேன் …உங்க நம்பிக்கை வேற என் நம்பிக்கை வேற நான் சயின்சை மட்டுமே ஏற்பவன்…”

“ சார் ! நீங்க பெரியார் கட்சியா ?”

“ இல்லை.பெரியாரைப் பிடிக்கும் . நான் கம்யூனிஸ்ட் .சிபிஎம்…” என்றேன்.

 “ அதனாலென்ன பரவாயில்லை … ஒவ்வொருவருக்கும்  அவரவருக்கு பிடிச்ச கட்சி … உங்க வீட்ல யாருமே சாமி கும்பிட மாட்டாங்களா ?”

“ என் மனைவி எப்போதாவது கோவிலுக்கு செல்வதுண்டு .பூஜை ,படையல் எல்லாம் எங்க வீட்ல எப்போதும் கிடையாது…”

 “ தெரிஞ்சுக்கிறதுக்குத்தான் கேட்டேன் … தப்பாக நினைக்காதீங்க…” என்றார்

“ தெரிஞ்சிக்கிறது தப்பே இல்லை” என்றபடி விடை பெற்றேன்.

 

அப்புறம் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்வதோடு சரி ! அங்கு சாமுண்டேஸ்வரி கோயில் கட்ட நிதி வசூலித்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பலோடு எதிர் கொண்டேன் .மற்றவர் நிதி கேட்க ”சார் ! கம்யூனிஸ்ட் ஜெர்னலிஸ்ட் மீடியா ஆளுன்னு “ சொல்லி மற்றவர்களை விலக்கிவிட்டார் .எல்லோரும் விடை பெற்றனர்.

 

ஊருக்கு ஆயிரம் கண்கள் …

உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது …

 

சுபொஅ.

31/3/2023.

இருப்பதே பாக்கியம் !

Posted by அகத்தீ Labels:

 



இருப்பதே பாக்கியம் !

 

 

நீயாக எதையும் பாராதே !

மாமன்னர் சுட்டுவதை மட்டும் பார்!

 

நீயாக எதையும் பேசாதே !

மாமன்னர் சொல்வதை மட்டும் பேசு !

 

நீயாக எதற்கும் காது கொடுக்காதே !

மாமன்னர் சொல்வதை மட்டும் கேள் !

 

நீயாக எதையும் சிந்திக்காதே !

மாமன்னர் சிந்திக்கிறார் ! நீ மவுனமாயிரு !

 

ஆனால்,

 

நீ ! சுதந்திர மனிதன் உன் உரிமையை

மாமன்னர் நினைவூட்டுகிறார் !

 

நீயாக வேலை தேடு ! கடுமையாக உழை !

பலனை எதிர்பாராதே ! உழைப்பதே உன் கடன் !

 

உனக்காக மாமன்னர் சாப்பிடுகிறார் !

நாட்டுக்காக நீ உணவை தியாகம் செய் !

 

மாமன்னர் ராஜ்யத்தில் இருப்பதே பாக்கியம் !

வாழ்வதைப் பற்றி மனதாலும் நினையாதே!

 

சுபொஅ.

26/3/2023.


வாழப்பழகு ! புதிதாக சிந்திக்கப் பழகு ! – 2

Posted by அகத்தீ Labels:

 

வாழப்பழகு ! புதிதாக சிந்திக்கப் பழகு ! – 2

 

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் டுவிட்டர் ,முகநூல் ,யூ டியூப் ,இன்ஸ்டிரோகிராம் என சமூக ஊடகங்கள் உங்களிடம் வந்து சேர்ந்துவிடும் .ஓடி ஒளியவே முடியாது.

 

அவை அள்ளிக்கொட்டுகிற ஒவ்வொன்றையும் நீங்கள் நம்பினால் பைத்தியம் பிடித்துவிடும் . நம்பாவிட்டால் இயந்திரமாகி விடுவீர் ! என்ன செய்வது ?

 

யார் சொல்கிறார் ? என்ன சொல்லுகிறார் ?எங்கு சொல்கிறார் ? ஏன் சொல்கிறார் ? எப்படிச் சொல்கிறார் ? யாருக்கு சொல்லுகிறார் ? இப்படி கொஞ்சம் கேள்வி எழுப்பி தள்ளுவன தள்ளி கொள்ளுவன கொள்ளுவதே சமூக ஊடக உலகில் வாழும் வழி !

 

Character assassination எனப்படும் தனிநபரை இழிவு செய்யும் பதிவுகள் , சாதி ,மத வெறுப்பு அரசியல் , ஆனாதிக்கப் பதிவுகள் , சமூகத்தையும் சரித்திரத்தையும் பின்னுக்கு தள்ளும் பதிவுகள் , அள்ளி வீசப்படும் மருத்துவ ஆலோசனைகள் , ஆன்மிகத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அறிவியல் முலாம் பூசும் போலி அறிவியல் வாதங்கள் இப்படி பட்டியல் போட்டால் நீளும் .இவை எல்லாம் முற்றாக ஒதுக்கப்பட வேண்டியவை .

 

எல்லாவற்றிற்கும் லைக் போட வேண்டியதோ ,பதில் போட வேண்டியதோ இல்லை . பலவற்றை ignore செய்ய வேண்டும் அதாவது கண்டு கொள்ளாமல் ஒதுக்க வேண்டும். பல கெட்ட பதிவுகளுக்கு நீங்கள் பதில் போட்டு அதனை புதிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விடுகிறீர்கள் .இப்படி செய்யாமல் தவிர்க்கலாம்.  பதில் சொல்லுவதாயின்கூட உங்களின் தனிப் பதிவாக்கி அவர் பெயரை இழுக்காமல் பதிந்து ஆக்க பூர்வ விவாததுக்கு வழி செய்யலாம்.

 

எல்லாவற்றிலும் பெரும் தீங்கு ஒன்று ஒண்டு அதுதான் நல்லவர்களின் மவுனம் . நல்லவர்கள் இதில் உரக்கப் பேசாதவரை கெட்டவர்கள் ஆட்டம் ஓங்கத்தானே செய்யும் !

 

முற்போக்கு இடதுசாரி தோழர்களே ! சக தோழர்களின் எத்தனை பதிவுகளை நீங்கள் லைக் போட்டும் பகிர்ந்தும் கமெண்ட் போட்டும் பிரபலப் படுத்துகிறீர்கள் ? உங்களின் இந்த அடக்கம் அல்லது அசட்டைப் போக்கே நல்ல கருத்துகளின் குரல் வலுக்க பெரும் தடையாகிறது .

 

தீக்கதிர் போன்ற இதழ்களில் பிரசுரமாவதில் நாலு செய்தியையாவது பதிய ஏன் தயக்கம் ? உங்கள் மூலம் ஒரே ஒரு புதியவர் அதை வாசித்தாலும் நல்லதுதானே !

 

நான் கேட்கிறேன் , “ நாசிக் – மும்பை வெங்காயத்துக்கு விலைகோரி நடந்த மாபெரும் செங்கொடி எழுச்சிப் பயணமும் வெற்றியும் ,அண்மையில் டெல்லியில் விவசாயிகள் பெரும்படையாய்த் திரண்டது  ; இவற்றை உங்களில் எத்தனை பேர் பகிர்ந்தீர்கள் ! பதிந்தீர்கள் !” அவரவர் பாணியில் இச்செய்தியை கொண்டு சென்றிருந்தால் எவ்வளவு வீச்சாயிருந்திருக்கும் ?

 

டீக்கடையில் அரசியல் பேசுவது , திண்ணையில் பேசுவது ,அலுவலக அரட்டையில் பேசுவது  அதுபோல சமூக ஊடகங்களில் பேசுவதும் நம் பிரச்சாரத்தின் ஒரு கூறே . கொஞ்ச நேரம் இதற்கும் இடம் கொடுங்கள்.

 

இப்போது ஆளும் வர்க்கம் சமூக ஊடகங்களின் கழுத்தை நெரிக்கத் துவங்கிவிட்டது .நாளை என்ன ஆகுமோ ? யார் கண்டார்கள் ? வாய்ப்பு கிடைக்கும் வரை முடிந்தவரை இதனை பயன்படுத்தல் நம் கடனே !

 

சுபொஅ.

23/3/2023.

 

 


பனையேறிகளின் வாழ்க்கைப் பாடுகளூடே …

Posted by அகத்தீ Labels:

 



 


பனையேறிகளின் வாழ்க்கைப் பாடுகளூடே …

 

 

“ இன்னும் பாடு பேசி முடியலையா ?” என குமரி மாவட்டத்தில் சர்வசாதாரணமாக கேட்பார்கள் . பாடு பேசுதல் என்பது கதை பேசுதல் ,வம்பளத்தல் ,கஷ்ட நஷ்டங்களைப் பேசுதல் என பல தொனியில் பயன்படுத்தப்படலாம். மொத்தத்தில் வாழ்க்கைப் பாட்டைப் பேசுவதுதான். இல.வின்சென்டின் “ அக்கானி” நாவல்  நம்மோடு பனையேறிகளின் பாடு பேசுகிறது .

 

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ,தோவாளை ,கல்குளம் ,விளவங்கோடு,குளச்சல் என ஒவ்வொரு வட்டாரத்திலும் தமிழ் ஒவ்வொரு வகையாய் இருக்கும் அதிலும் மேற்கில் பனையேறும் மனிதர்களின் வாழ்க்கைப் பாடும் மொழியும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும் , குளச்சல் கடல்புறம் போனால் அத்தமிழ் இன்னொரு விதமாக இருக்கும் . குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் என தமிழ்கூறும் நல்லுலகின் நான்கு திணைகளும் உள்ள மாவட்டம் அது . இந்நாவல் அதன் ஒரு பகுதியைக் காட்டுகிறது . விளவங்கோடு மண்ணின் மொழியழகோடு பேசுகிறது.

 

 “ அக்கானி என்பது பனையின் சுண்ணாம்பு தடவிய கலயங்களில் வடியும் கள் . தெளிந்த அக்கானியில் மாங்காய் பிஞ்சைத் தல்லிப் போட்டு குடித்தால் ருசி ஆளைத் தூக்கும். “

 

 “ ‘ அக்கானி’ மேற்கு குமரி மாவட்டப் பனைத்தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல்.” என பொன்னீலன் அணிந்துரையில் சுண்டக் காய்ச்சி சொல்லிவிட்டார் .

 

“கடலுக்கு மீனு பிடிக்கப் போனவனும் ,பனையில அக்காணி எடுக்கப் போனவனும் திரும்பி வந்தாத்தாங் உண்டுன்னு சிம்மாவா செல்லிவச்சனம்.” என்கிற வாழ்க்கைப் பாட்டை ஞான முத்து , தங்கையன் இருவர் சாவு மூலமும் இந்நாவல் காட்சிப் படுத்துகிறது .

 

ஆயின் ஒரே வேறுபாடு ஞானமுத்து சாவுக்கு எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை .தங்கையன் சாவுக்குப் பின் அரசு உதவி ரூ.5000 கிடைத்தது . விளவங்கோடு பூட்டேற்றி கிராமத்தில் நடக்கும் கதை இது .இடையில் அங்கு தொழிற் சங்கம் உருவானதும் ,கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடித்ததும் ,கிறுத்துவ இறையியல் அரும்பியதும் நாவலாக பரிணமித்திருக்கிறது .

 

பனையேறுவது மட்டுமின்றி , நெசவு ,மரச்சீனி நடவு ,புளி , கொல்லம் பழம் பருப்பு [ முந்திரி],மா  என பூட்டேற்றியிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் வேர்விட்ட இதர தொழில்களையும் வாழ்வின் பாடுகளையும் இந்நாவல் பேசுகிறது .

 

மாத்தூர் தொட்டிப் பாலம் வருவதற்கு முன் நாயர் சாதியினர் மட்டுமே தண்ணீர் பெற்று விவசாயம் செய்து வலுவாக இருந்ததையும் ,சாதிய ஒடுக்கு முறையையும் ,தொட்டிப் பாலத்துக்குப் பின் ஏற்பட்ட மாற்றத்தில் எல்லா சாதியினரும் விவசாயம் செய்ய முடிந்தததையும் இந்நாவல் பேசுகிறது . தொட்டிப் பாலம் எனச் சொல்லிய போதும் தொங்கு வாய்க்காலாய் 115 அடிஉயரத்தில்  28 தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு கி மீ கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் ஏற்பாடு .காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது . இன்று குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையம்.

 

 “ வண்டி பள்ளிக்கு போவாதில… காலுதான் பள்ளிக்கு போவும் ,நொண்டாத நட..” என தம்பி மைக்கேலை நடக்க வைத்தாள் ராபேக்கா . பல மைல் நடந்து கல்வி கற்றதால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதன் சாட்சியாய் பூட்டேற்றி .

 

 “ அம்மிங்கிரெ … தூக்கினது தோஷமெங்கி … கெடந்த இடத்திலேயே யாமானக் கொண்டு போடியம் .. பெறவு நீங்க போய் தூக்கிண்டு வாரும் … துக்குல யாமானெ..” இது போன்ற சாதியத்துக்கு எதிரான ஆவேசம் நாவலில் பல உண்டு பூட்டேற்றியில்  சாதியின் கோரமுகமும் அதன் செவிட்டில் அறையும் புதிய எழுச்சியும் கதைப் போக்கில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது . பெரும்பாலும் கிறுத்துவ கதா பாத்திரங்கள் மூலமே நகரும் நாவலில் ஓரிடத்தில் இடம் பெறும் நாடகத்தில் ஓர் வசனம்,

 

 “ சாதிக்கொரு பங்காப் பிரிச்சி பூசெ வச்சா .. அங்கெல்லாம் கடவுளு இருக்க மாட்டாரு பண்ணயார … கல்லும் மண்ணும்தான் இருக்கம். யூதன்மாரு அண்ணு இயேசுவெ சிலுவையில் அறஞ்சி கொன்னுனம் … நீங்க சாதியில அறஞ்சி கொல்லுதிய ..”

 

கிறுத்துவத்திலும் ஊடுருவியுள்ள சாதியை நன்கு தோலுரிக்கிறது நாவல் .

 

சிவலிங்கம் மூலம் அய்யா வழிபாடும் வைகுண்டர் எழுச்சியும் தோள் சீலைப் போராட்டமும் நாவலில் விவரிக்கப்படுகிறது . மேலும் அம்மண்ணில் மெல்ல ஆர் எஸ் எஸ் தலை தூக்குவதையும் காட்சிப்படுத்தியுள்ளார் . மதக்கலவரத்தை தூண்டிவிட ஆர் எஸ் எஸ் செய்யும் சதிவேலைகளை இந்நாவல் தொட்டுக்காட்டியுள்ளது .

 

அரிசி பஞ்ச காலத்தில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்தி ஜீவனம் நடத்தும் ஏழைப் பெண்கள் குறித்த சித்தரிப்பு நாட்டு நடப்பின் யதார்த்தம் பேசும்.

 

கிளாரா ,ராபேக்கா , தெரசம்மாள் ,சசிகலா , கமலம் ,அமலா ,ரெஜினா ,எலிசபெத் போன்ற ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தையும் மிக நுட்பமாகச் செதுக்கி உள்ளார் இல.வின்சென்ட் . அதிலும் கிளாரா ,ராகேக்கா ,சசிகலா மிக நுட்பமான பாத்திரப் படைப்புகள் . இந்நாவலுக்கே கிளாரா என பெயர் சூட்டியிருக்கலாமோ என நான் எண்ணுகிறேன்.

 

கிளாராவும் ராபேக்காவும் எப்போதும் துணிச்சல்காரியாகவும் எங்கும் அநீதி பாரபட்சம் இவற்றுக்கு எதிராக  கேள்வி கேட்பவளாகவும் படைக்கப் பட்டுள்ளனர் . கிளாரா வாழ்வில் ஏற்பட்ட ஓர் பாலியல் வன்மத்தை அவள் எதிர்கொண்ட விதம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது .

 

” இது என்னெக் கேவலப் படுத்துன்னு நீ நெனச்சிய … அந்த ஆணாப் பொறந்தவனெக் கேவலப்படுத்துன்னு நாங் நெனச்சியன் .கருவில கலஞ்சுபோன சிசுக்களும் ,அப்பன் அம்மா பேரு தெரியாத அனாத பிள்ளைகளும் மனித சமூகத்துக்கு ஆண்கள் செய்த துரோகத்தின் அடையாளங்க …இப்ப இது யென் பிள்ளெ .. கலச்சி ரத்தக் கட்டியா பூத்தமாட்டேன் .”

 

“ நீங்க எனக்க வாழ்க்கெயப் பத்திக் கவலெப்படுதிய சாமி … நானோ .. எனக்கு வவுத்ல இருக்கிய கொழந்தெ வாழ்க்கெயப் பத்திக் கவலெப்படியன்..”

 

“ கிளாரா நீ மனுஷி .. நீதான் மனுஷி …நீதான் உயர்ந்த மனுஷி..”

 

இந்த கிளாரா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்து வெல்வதும் சிறப்பு .

 

மைக்கேல் ,சார்ல்ஸ் ,வில்சன் ,சேவியர் என இளைஞர்கள் முற்போக்காக , இடதுசாரியாக ,கம்யூனிஸ்டாக பரிணமிப்பது இயல்பாக நடக்கிறது . ஆசிரியர் ஜோசப் ஓர் அரிய பாத்திரப் படைப்பு . மைக்கேல் தன்னை முழுநேர அரசியல் பணிக்கு அர்ப்பணிப்பதுடனும் மைக்கேல் சசிகலா காதல் நிறைவேறுமா கேள்விக் குறியோடும் நாவலில் இருந்து விடை பெறுகிறோம். 

 

இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறை நிறைகளோடு உலவவிட்டிருப்பது நேர்த்தியான செயல் .காதல் , கல்யாணம் ,பருவதாகம் , பாலியல் வன்மம் ,ஆணாதிக்கம் எல்லாம் கலந்த வாழ்வின் பாடுகளை இல.வின்செண்ட் நீரோட்டமாய் சொல்லிச் செல்கிறார் .

 

 “பூட்டேற்றியில் 1958 முதல் 1974 வரை வாழ்ந்த மக்களின் பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்துள்ளேன் . உண்மைகள் மட்டுமல்ல ,புனைவுகளும் கலந்த புதினம் இது . இடைச்செருகலாக 1978 காலத்தை ஒட்டிய நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன . குறிப்பாக விடுதலை இறையியல் சிந்தனைப் போக்கு , அருள் தந்தை எம். எக்ஸ். ராஜாமணி, தோழர் ஜி. எஸ். மணி, தோழர் டி.கொச்சுமணி ஆகியவர்களோடு நடந்த சந்திப்பு , பூட்டேற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் ,பனையேறிகளின் போராட்டம் , இக்கால வழுக்கள் கதையோட்டத்தையும் ,பாத்திரப் படைப்புகளையும் வலுவாக்கின .இவற்றுக்கு வாசகர் உலகம் வழுவமைதி காணும் என நம்புகிறேன்.” என ஆசிரியர் இல .வின்செண்ட் கொடுத்துள்ள வாக்குமூலம் மிக முக்கியம்.

 

நாவலின் பின் பகுதியில் உள்ள அரசியல் சார்ந்த பகுதிகள் ஒரு பகுதி இலக்கியவாதிகளுக்கு பிடிக்காமல் போகலாம். அவை நாவலின் வீரியத்தை குறைத்து விட்டதாக குறை சொல்லலாம். எனக்கோ அப்பகுதி சுருக்கப்பட்டாதாகக் கருதுகிறேன்.இன்னும் கொஞ்சம் விரிவாக்கி இருக்கலாமோ ?

 

 “ஏழைகளின் மீதும் , பாட்டாளிகள் மீதும் அன்பும் அக்கறையும் வச்சிருக்கிய ஒருத்தரு … மார்க்சியத்தையும் லெனினியத்தையும் படிச்சா தீப்பிளம்பாயிருவாரு …அதெக் கூடப் பிறப்புகளின் கரைச்சலோ ,காதலியின் கண்ணீரோ தணிக்க முடியாது… ஒரு புரட்சியில் முங்கி எழும்பினாத்தான் அது தணியும் பாத்துக்களுங்க …” என 1970 களின் மனோ நிலையோடு நிறையும் நாவல் நம் நெஞ்சக்கூட்டில் அதன் அக்னி முட்டையை அடைகாக்க வைக்கிறதோ ?

 

கல்வியில் முன்னேறிய குமரிமாவட்டத்தில் சாதியும் மதமும் இன்னும் ஆட்டம் போடுவதை எண்ணி என் மனங்குமைகிறது ;இந்நாவல் அந்த வெப்பிராளத்தை உசுப்பிவிட்டுவிட்டது .

 

நாம் கடந்து வந்த வாழ்வின் ஓர் தடத்தை வாசித்துப் பாருங்கள் !

 

 

அக்கானி  [ நாவல் ] , ஆசிரியர் : இலா.வின்சென்ட் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

www.thamizhbooks .com bharathiputhakalayam@gmail.com

பக்கங்கள் :330 , விலை : ரூ.330/

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

21/3/2023.

 

 

 

 

 

 

 

 

 

 

 


ஞானம் வேறொன்றுமில்லை.

Posted by அகத்தீ Labels:

 


ஞானம் வேறொன்றுமில்லை.



உன் பார்வையை
உள் முகமாக திருப்பு
என்றார் துறவி!

சுற்றி நடப்பவற்றை
உற்றுப் பார்
என்றார் யதார்த்தவாதி!

வீடும் குடும்பமுமே
மிக முக்கியம்
என்றார் உறவினர் !

ஒன்றில்லாமல்
இன்னொன்று இல்லை
ஞானம் வேறொன்றுமில்லை.
சுபொஅ.
20/3/2023.

மதிய நேரம் .அந்த கோவில் வாசலில்

Posted by அகத்தீ Labels:

 

மதிய நேரம் .அந்த கோவில் வாசலில் பள்ளி விட்டு வரும் பேத்திக்காகக் காத்திருந்தேன்.
அந்த வழியாக வேலைக்குச் செல்லும் ஏழு பெண்கள் கோவில் வாசலில் நின்றனர் . பூட்டிய கோவில் கதவின் முன் மிகுந்த மரியாதையுடன் நின்றனர்.
அதில் ஒரு பெண் சர்ச்சுகளில் கும்பிடுவதுபோல் சிலுவைக் குறியிட்டு கும்பிட்டாள் .
இன்னொருத்தி முஸ்லீம் பெண் . செருப்பை கழற்றி ஓரமாக விட்டுவிட்டு அமைதியாக தோழிகளுடன் நின்றிருந்தாள்.
ஜீன்ஸ் போட்ட பெண் ஒருத்தி ஸ்டைலாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே நின்றாள் .
சுரிதார் போட்ட பெண் கைகுவித்து வணங்கிய படியே வெளியே நின்றாள் .
சேலை கட்டிய இரு பெண்கள் கிட்டே போய் கும்பிட்டுவிட்டு கோவில் சுவற்றில் சாய்ந்து நின்றனர்.
இன்னொரு சேலை கட்டிய பெண் சாமிக்கு எதிரே விழுந்து கும்பிட்டாள்.பின் உட்கார்ந்து தாலியில் குங்குமத்தை பயபக்தியோடு வைத்தாள். இவள்தான் அதிக நேரம் சாமி கும்பிட்டவள்.
எல்லோரும் இவளுக்காக பொறுமையாய் காத்திருந்தனர்.
பூட்டிய கதவுக்கு பின்னாலிருந்த அனுமார் யாரை ஆசிர்வதித்திருப்பார் ? இதில் எவர் ஆகமநெறிப்படி கும்பிட்டவர் ?
பாரத்தை சாமியிடம் இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில் சாலையில் அடியெடுத்து வைத்தனர் ஏழு பேரும் ;
" அந்த சூப்ரவைசர் பார்வையே சரியில்லை. அவன் கண்ணில கொள்ளி வைக்க , கம்பெனியை மூடப் போகிறார்களாமே ? எங்கே வேலை தேடுவது ?எங்கே கடன் வாங்குவது ?" என பேசியபடியே நடந்தனர்.
இவ்வளவுதான் கடவுள் நம்பிக்கை. மதம் அவர்களுக்குள் தடையல்ல. பிரச்சனை எல்லோருக்கும்தான்.
சுபொஅ.
All react

வாழப்பழகு ! புதிதாக சிந்திக்கப் பழகு ! - 1

Posted by அகத்தீ Labels:

 

வாழப்பழகு ! புதிதாக சிந்திக்கப் பழகு ! - 1

 

 நேற்றையைப் போல் இன்று வாழ்க்கை இல்லை…” - அநேகம் பேர் இப்படித்தான் புலம்புகிறார்கள் .

 

 “ நேற்று போலவே இன்றும் வாழ்க்கை அப்படியே ஏன் இருக்க வேண்டும் ?” என்று யாருமே தனக்குள் கேள்வி கேட்பதில்லை .

 

 “ நேற்றின் சுவை நாக்கிலும் வாழ்விலும் ஒட்டிக்கிடக்கிறதே என்ன செய்ய ?” என அங்கலாய்க்கிறார்கள் .

 

 “ நேற்று சுவாசித்த காற்றையா இன்று சுவாசிக்கிறாய் ? நேற்று குளித்த தண்ணீரிலா இன்று குளிக்கிறாய் ? நேற்று உண்ட உணவையா இன்று உண்கிறாய் ? நேற்று உடுத்த உடையையா இன்று உடுக்கிறாய் ? நேற்று அனுபவித்த வாழ்க்கையையா இன்று அனுபவிக்கிறாய் ?நுகர்வுச் சந்தையில் பார்க்கும் ஒவ்வொன்றையும் முன்பு நீ யோசித்ததேனும் உண்டா ?” யதார்த்தம் நெற்றிப் பொட்டில் அறைந்து கேட்கிறது .

 

 “ இழந்ததைப் பற்றி பேசவே கூடாதா ?” என்கிறாய் .

 

 “ இழந்தது அதிகமெனில் பெற்றதும் அதிகமே . எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது . எதை இழக்கிறாய் எதைப் பெறுகிறாய் என்பது மட்டுமே கேள்வி .” என்கிறது வாழ்க்கை அனுபவம் .

 

 “அந்த அனுபவம்தான் இழந்ததை எண்ணி அரற்றவைக்கிறது..” என சமாதானம் சொல்கிறாய் .

 

 “ மன இறுக்கத்தை அழுகை குறைக்குமெனில் சற்று அழலாம் .பிழை இல்லை .ஆயின் அழுகை ஒரு போதும் தீர்வல்ல. பிரச்சனைகளை சரியாக அலசினால் தீர்வு புலப்படலாம்.” – என ஞானிகள் சொல்லிச் சென்றது மறக்கக்கூடியதல்ல.

 

 “ அப்படியே நேற்றை மீட்டுவிட முடியுமா ?” – இப்படித்தான் கற்பனையில் உழல்கிறார்கள் .

 

 “கடந்த காலத்துக்குள் மீண்டும் வாழமுடியாது ;கடந்த காலத்தை போன்றும் வாழ முடியாது . நேற்றின் தொடர்ச்சியாக -  நேற்றின் அனுபவத்தோடு இன்று புதிதாக வாழப்பழகு !

 

“ தொலைத்து தலைமுழுக வேண்டியவற்றை இன்னும் சுமந்து திரிகிறாய் ; சுமந்து திரிய வேண்டியதை சாக்கடையில் வீசிவிட்டு பழம் பெருமை பேசுகிறாய் என காலம் உரக்கச் சொல்கிறது.

 

என்ன ? என்ன ?

 

பேசுவோம்…

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

15/3/2023.

 

 


குடிக்கதை -2

Posted by அகத்தீ Labels:

 

 உங்களுக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சனை ?”- ஆன்மீகப் பெரியவர் மெல்லக் கேட்டார் .

 

 “ இல்லாதவரோடு எனக்கு என்ன பிரச்சனை ?” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் .

 

 “ ஊர் உலகமே அவர் இருப்பை ஒப்புக் கொள்ள நீங்கள் மட்டும் நிராகரிப்பது சரியா ?”

 

 “ ஊர் உலகமே பூமி தட்டை என்ற போது ஒருத்தன் மட்டுமே பூமி உருண்டை என்றான் ; இன்று உலகமே பூமி உருண்டை என ஒப்புக்கொண்டுவிட்டதே ..” அவன் உறுதியாகச் சொன்னான்.

 

 “ விஞ்ஞானத்தாலும் விடை காணா முடியா கேள்விகள் நிறைய இருக்கே ?” என கேட்டுவிட்டு வென்றது போல் சிரித்தார் .

 

 “ மெய்தான் . விடை காணாத கேள்விகள் விஞ்ஞானத்திலும் உண்டு . ஆயின் நேற்று தெரியாதவற்றை இன்று தெரிந்து கொண்டது ; இன்று தெரியாததை ஆராய்ந்து கொண்டிருக்கிறது ,நாளை விடை காணக்கூடும் . ஆன்மீகம் விடை தேடும் முயற்சியை கைவிட்டு சரணாகதி அடைய அல்லவா சொல்கிறது … உலகத்தின் வளர்ச்சி தேடலில்தான் ஏற்பட்டது ,இனியும் அப்படித்தான் ;சரணாகதியில் அல்ல”அவன் உறுதியாகச் சொன்னான்.

 

 “ நீ… [கோவத்தில் நீங்கள் நீ ஆனது ] நம்பாவிட்டால் ; கடவுளுக்கு என்ன நட்டம் ? உனக்குத்தான் அவரின் கருணைக் கடாட்சம் கிடைக்காது..”

 

 “ நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை ;யாரிடமும் யாசிக்கவும் இல்லை ; இல்லாதவரிடம் கருணை கடாட்சம் எதிர்பார்ப்பது ஏமாளித்தனம்தானே..”

 

 “ மரணத்தின் விழிம்பில் நிச்சயம் நீ கடவுளை அழைப்பாய் அவர் அப்போது உனக்கு உதவமாட்டார் …?”

 

“ அப்படியே ஆகட்டும்! அன்றாடம் கடவுளிடம் மன்றாடும் பலகோடி மக்களுக்கு கடைக்கண் பார்வையைக்கூட திருப்பாமல் இருக்கிறாரே ஏன் ?”

 

“ உன்னிடம் பேசிப்பேசி தலைவலி வந்துவிட்டது..” என சொல்லியபடியே பையிலிருந்து மாத்திரைகளை எடுத்து விழுங்கி தண்ணீர் குடித்தார் .

 

அவன் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன .

அவரோ விருட்டென்று எழுந்து விடைபெற்றார் .

 

சுபொஅ.

13/3/2023.

குட்டிக்கதை -1

Posted by அகத்தீ Labels:

 ஓர் ஆன்மீக குரு கூட்டத்தைப் பார்த்து கேட்டார் ,"உங்களில் யார் யார் சொர்க்கத்துக்கு போக விரும்புகிறீர்கள்... கையை உயர்த்துங்கள்.‌"


ஒரு சிறுவனைத் தவிர எல்லோரும் கை  உயர்த்தினர்.
  
ஒரு வேளை அந்த சிறுவனுக்கு கேள்வி விளங்காமல் இருக்கலாம் என எண்ணிய ஆனமீக குரு அவனிடம் கேட்டார் ,"உனக்கு சொர்க்கத்துக்குப் போக விருப்பம் தானே !"

சிறுவன் சொன்னான் ," சொர்க்கமோ நரகமோ சாதி மத சனியன் இல்லாத இடம் எதுவோ அதுவே போதும்..."

ஆன்மீக குரு சமாளிக்க எண்ணினார்." இரண்டு இடத்திலும் சாதி மதம் கிடையாது எனறார்..."

" அப்புறம் என்ன எழவுக்கு பூமியில இந்த சாதி மதங்கள தூக்கிட்டு அழுவுறீங்க... அது இல்லேன்னா பூமியும் சொர்க்கம்தானே..!!"

கூட்டம் அதிர்ந்தது.குரு மவுனம் ஆனார் !

சுபொஅ.
5)3/2023.

புத்தகத்தின் தலைப்பு போல் புத்தகமெனில் …

Posted by அகத்தீ Labels:

 



 

புத்தகத்தின் தலைப்பு போல் புத்தகமெனில் …

 

புத்தக அலமாரியை கரையான்கள் தின்று தீர்த்திருந்தன. அங்கு பாம்புகள் அங்கும் இங்கும் ஊர்ந்து ஊர்ந்து சத்தமாக வாசித்தன.மின்மினிப் பூச்சிகள் கேட்டு கிறுகிறுத்தன.கடல் அலைகள் பாலைவனத்தில் இந்தக் கதைகளை சுமந்து திரிந்தன .

 

இப்படியெல்லாம் “ கொட்டாவி” பற்றி எழுதினால்தான் நம்மை கெட்டஆவி பிடிக்கவில்லை என்று ஒப்புக் கொள்வார்களோ ? .

 

நாள் தோறும் 100 முதல் 200 பக்கங்கள் வரை எளிதில் வாசித்துக் கடக்கும் சாதாரண வாசகன் நான்; நூலின் அடர்த்தி மற்றும் ஈர்ப்பு என் வாசிப்பு வேகத்தை தீர்மானிக்கும்.

 

ஆனால் வெறும் 96 பக்கங்களையேக் கொண்ட  “கொட்டாவி” நூலை மூன்று நாளாக கொட்டாவி விட்டு விட்டு வாசித்தேன் . கதைகளை விளங்கிக் கொள்ள முடியாமைக்கு என் இலக்கிய அறிவு போதாமையே காரணமாக இருக்கக்கூடும் . 

 

 “கற்பனைக்கும் யதார்த்ததுக்கும் இடையே மொழிகளின் மாய இழைகளால் பின்னிய”  என வாக்கு மூலமாக பின் அட்டையில் பதிந்திருக்கும் ,இந்நூலை புரிந்து கொள்ள முடியவில்லையே  என்ன செய்ய ?

 

முன்னுரையை அணிந்துரையை இதை எழுதும் போது மீண்டும் படித்தேன்.

 

 “ நீங்கள் கீழே விழுகின்ற மழைத்துளிகளை பொறுக்கி எடுப்பவரா ? [ கடைசி கதையில் கிழவி பொறுக்குகிறாள்] நீங்கள் காதுகளுக்கு கேளாத சொற்களைப் பேசுபவரா ?” உங்களுக்காகத்தான் இந்த “ கொட்டாவி” ,  “குழந்தைகளின் கொட்டாவியை ரசிப்பதுபோல்” ரசிக்கச் சொல்கிறார்  அகமது ஃபைசல்.

 

நூல் நெடுக ஆங்காங்கே வித்தியாசமான உவமையோடு சில கவித்துவ வரிகள் ; கதையோடு அதனை பொருத்துவது வாசகர் சாமர்த்தியம். அதுபோல் மாய வித்தைபோல  ஓவியம் ,பேனா,சிக்ச்ரெட் எல்லாம் எதையோ சொல்லும் .  “கொண்டு கூட்டு பொருள் கோள்” என பள்ளிப் பாடத்தில் ஓர் இலக்கணம் படித்தது என்னமோ உண்மைதான் . அதற்காக இப்போது தேர்வு வைப்பதா ?

 

“ சிப்பி வடிவில் அவன் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தன .அவன் உறங்கும் போது அந்தக் கண்கள் திறந்து கிடக்கும் .அவன் விழிதிருக்கும் போது மூடிக்கிடக்கும்” அது அகக்கண்ணா புறக்கண்ணா என என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை . தினத்தந்தி கன்னித்தீவு மாயக்கண்ணாடியை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்தால்  தீர்வு கிடைக்கலாம்.

 

 “பாதிக் காடு தன் கையில் இருப்பதாய் எண்ணியபடி நிமிர்ந்து நிற்கிறது ஆலமரம் “ “கடலுக்குள்ளிருந்து வெளியே வரும் போது மீன்கள் தங்கள் வயதைக் கடலில் ஓர் ஆடையைப் போன்று கழற்றிப் போட்டுவிடுகின்றன.” “ வீடென்றால் யாருடைய சத்தமாவது கேட்டுக்கொண்டே இருக்கும்.”  “ ஒரு தடவை வாசித்தாலே புரிந்துவிடும் சில புத்தகங்கள் போல இருந்தது அவரது பெயர் “  

 

இப்படியும் பலவரிகளை ரசிக்கும் படி எழுதிச் செல்கிறார் .

 

 “மரம் முளைத்தவன்”, “மாய சிகரெட்”, “மேசையின் கால்களில் நகங்கள்”, “ மீசைக் கண்ணாடி” இப்படி தலைப்புகளைப் படித்ததும் எளிதாக வாசிக்கும் குழந்தை இலக்கியம் என்றோ , பேய்க்கதை என்றோ எண்ணிவிடக்கூடாது ;  முயற்சி எடுத்து வாசிக்க முனைவீர்!!

 

சரிதான் , புனைவு என்றால் அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும் ?ஆகவே பொறுமையோடு படிக்கணும் . ஓரிரு கதைகள் எனக்கும் புரிந்தது .

 

அகமது ஃபைசல் போல் சொல்வது எனில் ;புத்தகத்தின் தலைப்பு போல் இருந்தது புத்தகமெனில் …

 

அணிந்துரை வழங்கிய தில்லை சொல்லிவிட்டார் .” சிலர் யதார்த்தத்தை விட்டுத் தப்பிச் செல்கின்றனர் .சிலர் கற்பனையின் புதிர் விளையாட்டுக்குள் சிக்கிக் கொள்கின்றனர் .ஆனால் கற்பனையின் மாய உலகிற்கும் ,யதார்த்தத்தின் தீர்க்க முடியாத நெருக்கடிகளுக்கும் இடையே திக்கற்று திகைப்புற்று அலைந்து உழன்றும் சிக்கித் தவிக்கும் விலங்குதான் மனிதன் என நம்புகிறேன்….”

 

ஆக ,” மனிதன் என்ற சொல்லே உயர்ந்தது “ என்கிற பார்வையை அல்ல இவர்கள் முன்வைப்பது . மனிதனை சூழ்நிலையின் கைதியாகச் சித்தரிக்கும் பார்வையையே இவர்கள் நவீன சொல்லாடலில் முன்வைக்கிறார்கள்.

 

 “ ‘மானிடம்என்றொரு வாளும்அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும்இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்”

என்கிற பாரதிதாசன் கவிதையைச் சொன்னால் ; அவர் ஓர் சார்பானவர் என தட்டிக் கழித்துவிடுவார்களோ என்னவோ ?

 

தாயதி வெளியீட்டில் “எழுத்தின் தடம் : ஈழப் படைப்புவெளி ” நூல் குறித்து 6/3/2023 அன்று ஓர் விமர்சனம் எழுதினேன் .இன்றும் “ கொட்டாவி” விடுகிறேன் .தாயதியின் செல்நெறி யாது ? யோசிக்க வேண்டியுள்ளது .

 

அதுபோகட்டும் இவ்வளவு பொடி எழுத்தில் அச்சிட்டு முதியோர்களை வருத்துவது சரியா ? [ நான் பொதுவாக தலைவலி  தைலங்கள் பயன்படுத்துவதில்லை .சிங்கப்பூர் தோழர் கொடுத்த  ‘கோடாலி’ தைலம்கூட சும்மாவே கிடந்தது .இன்று உபயோகிக்க வேண்டியதாயிற்று ]

 

கொட்டாவி , ஆசிரியர் : அகமது ஃபைசல் ,தாயதி வெளியீடு,

கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :044 24332924 .

பக்கங்கள் : 96 ,விலை : ரூ.95/

 

 

சுபொஅ.

13/3/2023.