மெல்லத் தொலையும் தடயங்கள் ….

Posted by அகத்தீ Labels:


மெல்லத் தொலையும் தடயங்கள் ….


நான்கு வருடங்கள் முன் மகன் இந்த அடுக்ககத்தை காட்டினான் .

பின் பக்கம் ஏரி .மூன்று பக்கமும் சோளக்கொல்லை .

அங்கொன்றுமாய் தனிதனி வீடுகள் .

சில சிறிய அடுக்ககங்கள் . மக்கள் நெரிசல் இல்லை .

இன்னும் பத்து வருடங்களுக்காவது பசுமையும் ஈரமும் இருக்கும்.

எல்லாவற்றையும்விட வனத்தின் தடயம் இன்னமும் மிச்சமிருந்தது .

இரண்டாண்டுகளுக்கு முன் குடிவந்தோம் .

கழுகுகள் வட்டமிட்டன .ஆந்தைகள் அலறின .கிளிகள் சிறகடித்தன .புறாக்கள் இங்கும் அங்கும் பறந்து பறந்து திரிந்தன. நாரைகள் அழகு காட்டின .பாம்புகள் பயமுறுத்தின . எலிகள் தொல்லை தந்தன .

பேரனுக்கு காட்டி மகிழ்ந்தேன் .

இப்போது  சோளக் கொல்லைகள் மனைகளாக , வீடுகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன . வீடுகள் பெருத்துவிட்டன . மக்கள் நெருக்கம் நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன . கடைவீதி உருவாகிக்கொண்டிருக்கிறது .
கழுகுகள் தென்படுவது அபூர்வமாகிவிட்டது . ஆந்தைகள் இருக்குமிடம் தெரியவில்லை . புறாக்கள் அருகிவிட்டன .பாம்புகளும் முன்போல் இல்லை .நாரைகள் காணோம் ,

ஒரே நிம்மதி முன்பைவிட எலித் தொல்லை குறைந்திருக்கிறது .

பெங்களூரின் ஆதி ஏரிகளில் ஒன்றான – இயற்கையான ஏரியான காச்சநாய்க்கன் ஏரியை பாதுகாக்க வேண்டிய ஏரி பட்டியலில் அரசு அறிவித்திருப்பது ஆறுதல் .

ஆனால் சுற்றிலும் குவியும் குப்பைக்கூழங்களை யார் தடுப்பரோ ? விடுமுறை நாட்களில் குடித்து கும்மாளவிட வரும் இளைஞர் கூட்டத்தை யார் கட்டுப்படுத்துவரோ ?

எப்படியாயினும் இன்னும் ஏரி உயிருடன் இருப்பதே பெருமகிழ்ச்சிதானே !

திடீர் திடீரென சில நாட்களில் , நள்ளிரவு தாண்டிய பொழுதில் காற்று திசைமாறி வீசும் போது ஒரே பிண நாற்றம் ,பீ நாற்றம் .

பயகான் என்கிற மருந்து தொழிற்சாலை அவிழ்த்துவிடும் வாயு என்கின்றனர் . யாமறியோம் ஒரு போதும் உண்மையை…

அது போல் அடை மழை ஓங்கி அடித்து வீதியில் வெள்ளம் கரை புரளும் போது சிவப்பு ,பச்சை ,நீலம் என பலவண்ணத்தில் சாக்கடை நீர் சுழித்தோடும் ..

எதுவும் ஆபத்து அற்றது என்றே சொல்கிறார்கள் … ஆனாலும் போபாலும் யூனியன் கார்பைடும் நினைவில் வந்து அச்சுறுத்தத்தான் செய்கிறது …

ஆயினும் ஏதோ ஒரு நம்பிக்கையும் கூடவே இருக்கிறது … போபாலில் இருந்து கற்றுக் கொண்டிருப்பார்களில்லையா ?

பெங்களூர் நகரின் இதயப் பகுதியிலோ அருகிலோ இடமோ வீடோ வாங்குவதை சாதாரண நடுத்தர மக்கள் யோசித்தே பார்க்க முடியாது.அவர்களுக்கு இதுபோல்தான் குதிரும் .

கூட்டிக் கழித்துப் பார்த்தால் .வாங்கியதில் பிழை இல்லை . வாய்த்ததும் பிழையில்லை .மாறுதல் வேகமெடுக்கிறது என்பதே உண்மை .அந்த மாறுதல் எதை நோக்கி?

வனத்தின் மிச்சசொச்ச தடயங்களும் வேகமாய் விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

வளர்கிறோமோ ?

தொலைகிறோமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்.
23/02/2019  மாலை 7.31.



சொற்கோலம் 10

Posted by அகத்தீ Labels:



சொற்கோலம் .10….

அனைத்துக்கும் ஆசைப்பட வேண்டிய பருவம் ஒன்றுண்டு . ஒவ்வொன்றாய் ஆசையை அறுத்தெறியும் பருவமும் ஒன்றுண்டு .

பின்னது போல் முன்னதில் ஆசையை அறுப்பதென்பது பிஞ்சில் பழுத்ததாகாது ; பிஞ்சில் வெம்பியது ஆகும் .

பின்னதிலும் ஆசையைத் தொலைக்க முடியாது அலைவது ஆரோக்கியமும் அல்ல ஆளுமையும் அல்ல ; ஆதிக்கமும் வெறியும் ஆகும் .

பற்றறு பற்றறு என்பது சுலபம் .பற்றறுப்பது சுலபமல்ல . மணல் கடிகாரம் போல் கடைசி சொட்டுவரை ஏதோ ஒரு பற்றிருக்கும் .

அதிகாரப் பற்றைத் துறப்பது ஆகப் பெரும் துறவாகும் .துறவியும் துறக்காத பற்று அது . அதிகாரம் செய்யாமலிருந்தாலே முதுமை மரியாதையை மாண்பைத் தக்க வைக்கும் .

தவறுகளிலிருந்தே நீ கற்றுத் தெளிந்தாய் ; அடுத்த தலைமுறையும் அவ்வாறே கற்றுத் தெளிவார்கள் . நீ இல்லாமலும் உலகம் இயங்கும் .உணர்ந்து அதிகாரப் பற்றறு !


 “என் அனுபவத்தில் … “என சொல்லுவதை நிறுத்து … உனது அனுபவத் தெளிவே இறுதியானது அல்ல .அனுபவமும் என்பது உன்னோடு முடிந்து போவதுமல்ல .தலைமுறை தலைமுறையாய் அடித்துத் திருத்தி தேவைக்கு ஏற்ப செப்பனிட்டுக் கொண்டே இருப்பது .

எல்லாவற்றிலும்  மூக்கை நுழைப்பதை நிறுத்து ! மூக்கு உடைபடாது .முதுமைக்கு அழகாகும் . கேட்டால் மட்டுமே சொல் .அதுவும் இறுதித் தீர்ப்பாக அல்ல ;பரிசீலனைக்கான முன்மொழிவாய் .

சொன்னதை அப்போதே மறந்துவிடு .நீ சொன்னதை ஏற்பதும் உதறுவதும் அவரவர் முடிவு . அவரவர் தேவை .சூழல் .இதை உணர்ந்து கொள் .

ஒட்டி வாழ வேண்டும் ஆயின் பாசப்பசையோ வெறெந்த பசையோ குழைத்துத் தடவி ஒட்டி விடக்கூடாது . எப்போதும் விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும் .

கொஞ்சங்க் கொஞ்சமாய் உடலை உள்ளத்தை இலகுவாக்கி எந்த நொடியும் பறந்து செல்ல தயார்படுத்திக் கொண்டே இருப்பதே முதுமையின் இனிமை .

சு .பொ.அகத்தியலிங்கம்.



sorkolam 9

Posted by அகத்தீ Labels:




சொற்கோலம் . 9.

என் பார்வையும் உன் பார்வையும் ஒரே கோணத்தில்  இல்லை . என் பார்வையில் நான் சொன்னதுதான் சரி.நான் செய்ததுதான் மிகச்சரி .உன் பார்வையில் நீ சொன்னதும் செய்ததும் சரியாக இருக்கக்கூடும் ;ஆயினும் நானே சரி !

மாமியார் கோணம் .மருமகள் கோணம் .கணவன் கோணம் .மனைவி கோணம் . அப்பா கோணம் .பிள்ளை கோணம் .அண்ணன் கோணம் . தம்பி கோணம் . அக்கா கோணம் .மருமகன் கோணம் . .மாமா கோணம் .மச்சான் கோணம் .மச்சினி கோணம் .ஒவ்வொன்றும் ஒரு ரகம் .

எதுவும் முழுதாய் சரியுமல்ல ; முழுசாய் தவறுமல்ல . அவரவர் தன்நலம் தன் பக்க நியாயத்தை மட்டுமே பார்க்கச் செய்யும் . ஆயின் நியாயத்தின் தராசு முள் அவர்களுக்கு எதிராய் போகக்கூடும் .

அதிலும் குடும்பம் ,உறவு ,நட்புக்குள் மோதல் வரும் போது நியாயம் சொல்லப் புகின் ஒரு பக்க பகையே மிஞ்சும் . இன்னொரு பக்கமும் நாம் முழுசாய் அவர் சொன்னதை புரியவில்லை அல்லது ஏற்கவில்லை என வருத்தம் மேலிட ஒதுங்குவர் .

அது நமக்கு சம்மந்தம் இல்லா விஷயம் என ஒதுங்கினும் ; நாம் எதிர் பக்கம் சேர்ந்து இவரை ஒதுக்குவதாய் இருவரும் குற்றம் சாட்டுவர் .

உங்கள் சொந்தக் கோணத்தைத் தவிர்த்து இந்தக் கோணத்திலும் அந்தக் கோணத்திலும் மாறி மாறி உள்ளுக்குள் ஓர் விசாரணையை அரங்கேற்றினால் ஓரளவு நியாயம் பிடிபடும் .

ஆனால் ஒன்று  சுத்த சுயம்பான சார்பற்ற நியாயம் என்பது வெறும் பேச்சே !


நாளொரு அக்கினிக் குஞ்சு….

Posted by அகத்தீ Labels:




, “நூலக அலமாரிகளில் ஆண், பெண் நூலாசிரியர்களின் நூல்கள் சகிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.” 1901 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்து இங்கிலாந்தில் லேடி ஹஃப் எழுதியபுக் ஆஃப் எடிகட்நூல் இப்படி உபதேசிக்கிறது. மேன்மை தங்கிய நாகரீக லட்சணம் இவ்வளவுதான்.


நாளொரு அக்கினிக் குஞ்சு….


நாளொரு தகவல் என366 நாட்கள் எழுதப்பட்ட குறிப்புகளின் தொகுப்பு. ஒவ்வொரு நாளும் நம்மை அங்கேயே கட்டிபோட்டு சிந்தனையில் அக்கினிக் குஞ்சை அடைகாக்க வைக்கும்;நகரவிடாமல் வரலாற்றுக்குள் வட்டமிட வைக்கும். எவ்வளவு வலி! எவ்வளவு ரணம்!அப்பப்பா நெஞ்சம் பதறுகிறது.

இன்று ஒரு தகவல்என தென்கச்சி சாமிநாதன் வானொலியில் ரசிகர்களை ஈர்த்த அனுபவம் நமக்கு உண்டு. துணுக்குச்செய்திகளுக்காகவேகல்கண்டுஎன்றொரு வார இதழ் நடத்தி பல்லாயிரம் வாசகர்களைக் கொள்ளை கொண்ட தமிழ்வாணன் நினைவில் வந்து போகிறார். இன்றும் வார ஏடுகளில் துணுக்குச் செய்திக்கு என பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. நானும் அதுபோல் எழுதியவை பெரிதும் ரசிக்கப்பட்டதுண்டு.

பரந்த வாசிப்பு, கூர்மையான பார்வை, நாலைந்து வரிகளில் சுண்டக் காய்ச்சி தரும் திறன் இவை எல்லாம் ஒன்றாய்க் கைகூடும் போதே இத்துணுக்குகளுக்குக் காந்தக் கவர்ச்சி ஏற்படும்.அதுவும் பழுதற்ற சமூகக் காதலும் ,ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான அளப்பரிய பேரன்பும் ஊடும் பாவுமானால் ஒவ்வொரு செய்தியும் அனுபவப் பிழிவாகும்.இந்நூல் அதற்கான உயிர்சாட்சியாகும்.

தினங்களின் குழந்தைகள்லத்தின் அமெரிக்க உலைக் களத்தில் தெறித்த நெருப்புப் பொறிகள்,வியர்வைத் துளிகள், இரத்தச் சுவடுகள் உலக வரலாற்றோடு பிசைந்த எண்ணச் சிமிழ்கள்.நாவலைப் போல் அல்லது ஒருபொருள் குறித்த நூல் போல் சுருக்கமாகச் சொல்லி அறிமுகம் செய்ய இயலாது.366 செய்திகளும் 366 கட்டுரைகளுக்கான உள்ளடக்கமாகும். எனவே சொல்லப்புகின் நீளும் ,ஆயினும் மாதிரிக்கு ஒன்றிரண்டு இங்கே சுட்டுகிறேன்.

மாயன்மக்கள், யூதர்கள், அரேபியர்கள், சீனர்கள் அல்லது இதர பலபூவுலக வாசிகளுக்கு இன்று வருடத்தின் முதல் நாள் அல்ல.” என ஜனவரி முதல் நாள் குறித்த தகவலைத் தொடங்கும் போதே ஒரு பண்பாட்டு ஆதிக்க வரலாற்றின் நுனியை அடையாளம் காட்டிவிட்டார்.

அப்படியே டிசம்பர் 25 ஆம் பக்கம் புரட்டினால், “இயேசு தன் பிறந்த நாளைக் கொண்டாட முடியாது. ஏனென்றால் அவருக்குப் பிறந்த நாளே கிடையாது.”என அதிரடியாய் அறிவிக்கிறார் காலியானோ. ஆம். பேகன் மக்கள் கொண்டாடிய சூரியக் கடவுளின்தினத்தை 354 ஆம் ஆண்டு ரோம் நகரில் கிருத்து பிறந்த தினமாக அறிவித்த வரலாற்று சோகத்தைப் பதிகிறார்.

பாரசீகத்திலிருந்து ரோம் நகருக்கு வந்த சூரியக் கடவுள் முதலில் மித்ரா என்றே அழைக்கப்பட்டதையும் பின்னரே இயேசுவானதையும் ரணத்தோடு சொல்லுகிறார்.வரலாறு நெடுக ஆளும் வர்க்கமும் அவர்களின் ஏவலான மதமும் பூர்வகுடி மக்களின் மதத்தை ,கடவுளை,பண்பாட்டை எப்படிக் கபளீகரம் செய்தது என்பதை ஆங்காங்கு சின்னச் செய்திகள் மூலம் போட்டு உடைக்கிறார்.

கிமு 47 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரியா நூலகத்திலிருந்த பாப்பிரஸ் ஓலைச் சுருள்கள் எரிக்கப்பட்டதை சுட்டி, ஈராக்கில் பாக்தாத் நூலகத்தை அமெரிக்கப் படைகள் எரித்ததையும் இணைத்து பண்பாட்டுத் தாக்குதல்கள் புத்தகங்களுக்கு எதிரே குவிமையப் படுவதை ஜனவரி 3 ஆம் நாளில் சொல்கிறார். மேலும் சில செய்திகளிலும் புத்தகத்தின் வலிமை, தேவை அழுத்தமாய் பதியப்படுகிறது.

பெண்களின் அந்தரங்க உறுப்புகளை இருக்கைக்கு எதிராக அழுத்துகையில் இன்பம் அடைவதன் காரணமாக ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும்என்று சொல்லி அமெரிக்காவில் சைக்கிள் ஓட்ட பெண்களுக்குத் தடை இருந்ததை ஜூன் 19ல்சொல்லுகிறார் அதற்கு முன்னும் பின்னும் ஆணாதிக்கம் எந்த அளவு ஓங்கி இருந்தது என்பதை சொல்லிக்கொண்டே போகிறார்.

ஜனவரி 23 அன்று ஒரு செய்தி சொல்கிறார், “நூலக அலமாரிகளில் ஆண், பெண் நூலாசிரியர்களின் நூல்கள் சகிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.” 1901 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்து இங்கிலாந்தில் லேடி ஹஃப் எழுதியபுக் ஆஃப் எடிகட்நூல் இப்படி உபதேசிக்கிறது. மேன்மை தங்கிய நாகரீக லட்சணம் இவ்வளவுதான்.

நயவஞ்சகிகள், நறுமணத் தைலங்கள்,வண்ணப் பூச்சுகள், அலங்கார சோப்புகள்,செயற்கைப் பற்கள், பொய்கேசம்,ஸ்பானிஷ் கம்பளி, குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள், நிமிர்த்தியபுட்டங்கள் போன்ற மோசடி கலைகளைப்பயன்படுத்தி மாட்சிமை தங்கிய மகாராஜாவின் குடிகளை ஈர்த்து தந்திரமாக கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளச் செய்துவிடுகிறார்கள்.” 1770 ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் பெண்களை வில்லிகளாக்குகிறது. மார்ச் 7 தகவல் இது.

1928 வரை ஒலிம்பிக்கில் பெண்களுக்கு இடமில்லை, “பந்தை எதிர் கொள்ளும் போது பெண்களின் எழில் மறைந்து விடுகிறது.”என்று சொல்லி 1970வரை கால்பந்து விளையாட பெண்களைஅனுமதிக்கவில்லை.இப்படிப் பெண்களைவரலாறு நெடுக இழிவுபடுத்திய செய்திகளை; அதை எதிர்த்து திமிறி எழுந்த போராட்டங்களை நூலில் நிறையவே விதைத்துள்ளார்.

பிரேசிலின் இராணுவ ஆட்சி முத்தமிடல் ஆபாசம், ஒழுக்கக் கேடென தடைவிதித்த போது 1980 ல் வீதிகளில் திரண்டஆண்களும் பெண்களும் எல்லாவயதினரும் முத்த மழை பொழிந்து தடையை நொறுக்கினர். பிப்ரவரி 8 ல் இடம் பெறுகிறது இத்தகவல்.

வட அமெரிக்காவில் பூர்வகுடி மக்களின்நினைவாகப் பெயரிடப்பட்ட அப்பலாச்சியன் மலைத் தொடர்களில் நானூற்று எழுபதுமலைகளை கடந்த இரு நூறாண்டில் வெட்டி எடுத்துவிட்டனர் என்பதைச் சுட்டி கார்ப்பரேட் அநீதியைக் கன்னத்தில் அறைந்து ஜூன் 8 ல் சொல்கிறார்.

அல்சீமர் எனும் ஞாபக மறதி நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க செலவுசெய்வதைவிட ஐந்து மடங்கு ஆண்மைஊக்கிகளுக்கும் சிலிக்கான் மார்பகங்களுக்கும் செலவிடுவதைச் சுட்டிகாட்டி நவம்பர் 10 தகவல் சொல்லும் போதுபிரேசில் நாட்டு மருத்துவர் ட்ராவஸ்யூ வரேல்லா வார்த்தையைக் குறிப்பிடுகிறார். “இன்னும் சில ஆண்டுகளில் மாபெரும் மார்பகங்களுடன் கிழவிகளும், தளர்வடையா குறிகளுடன் கிழவர்களும் நம்மிடையே இருப்பார்கள். ஆனால் அவைஎதற்காக இருக்கின்றன என்பதே அவர்களில் ஒருவருக்கும் நினைவிருக்காது.”

லத்தின் அமெரிக்கா சந்தித்த சோதனைகள், படை எடுப்புகள், ஒடுக்குமுறைகள்,வீரத்துடன் போரிட்டு மடிந்த ஆண், பெண் வீரர்கள், இழந்தஇயற்கைச் செல்வங்கள், ஏகாதிபத்தியத்தின் குரூர முகங்கள் இன்னும் இன்னும்பலப்பல அனுபவச் சேகரங்களை ஒவ்வொரு நாளாய் சின்ன சின்ன சிமிழாய் ஆனால் வெடிகுண்டாய் கோர்த்திருக்கும் இந்நூல் நம்மை சிந்திக்க வைக்கும்.கோபப்பட வைக்கும்.போராட்ட அனலை விசிறிவிடும். வேறென்ன வேண்டும் ?

களப் போராளிகளுக்கும், பிரச்சாரகர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் தங்கள் பேச்சின் வலிமையையும் சுவையையும் கூட்ட பல செய்திகளை வழங்கும் நூல் இது. அவசியம் படியுங்கள் .மொழி பெயர்ப்பாளர்களுக்கும் வெளியிட்ட சிந்தன் புக்ஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.

தினங்களின் குழந்தைகள் ,ஆசிரியர் : எடுவர்தோ காலியானோ,தமிழில் : வெற்றிவேல் ,.சி .விஜிதரன் ,
வெளியீடு : சிந்தன் புக்ஸ் ,132 / 251 அவ்வைசண்முகம் சாலை, கோபாலபுரம்,சென்னை – 600 014.
பக் : 426 , விலை : ரூ.350/-

சு.பொ.அகத்தியலிங்கம்.
நன்றி :தீக்கதிர் ,புத்தகமேசை , 18/02/2019.