Showing posts with label நூல் மதிப்புரை. Show all posts
Showing posts with label நூல் மதிப்புரை. Show all posts

பன்முகம் காட்டும் கோசாம்பி ….

Posted by அகத்தீ Labels:

 




பன்முகம் காட்டும் கோசாம்பி ….

 

மாபெரும் ஆய்வறிஞர் டி. டி. கோசாம்பியின் நினைவு நூற்றாண்டு நடந்து முடிந்துவிட்டது . அதையொட்டி சில வெளியீடுகளும் , அதன் முன்னும் பின்னும் அவரது நூல்கள் சிலவும் தமிழில் வெளிவந்துள்ளன .

 

தோழர் மூ.அப்பணசாமி எழுதிய  “வரலாறு – பண்பாடு- அறிவியல் : டி.டி.கோசம்பியின்  வாழ்க்கையும் ஆய்வுகளும்” எனும் நூல் மிகவும் காத்திரமானது . இந்திய பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் அக்கறைகொண்ட முற்போக்காளர்கள் அவசியம் இவைகளை வாசிக்க வேண்டும் .

 

இவற்றின் தொடர்ச்சியாக ’எதிர்பிழை’ வெளியீடாக ரிசி.சரவணன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள, “ டி.டி. கோசாம்பியின் ‘ மனதில் முகிழ்த்த கட்டுரைகள்’ ”[ இயக்கவியல் முறையில் பயிற்சிகள் ] நூல் முக்கிய கவனம் பெறுகிறது .

 

கோசாம்பியின் பார்வைப் பரப்பையும் நுட்பத்தையும் பன்முகத்தையும் பறைசாற்றும் 11 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் . பெரும்பாலான கட்டுரைகள் ஐம்பதுகளில் எழுதியவை . முதல் இரண்டு கட்டுரைகளும் மார்க்சிய தத்துவம் குறித்த சில குறிப்புகள் போல் டி டி கோசாம்பியின் பார்வையைச் சொல்லும் .

 

அடுத்துள்ள  இரண்டு கட்டுரைகள் ஜவஹர்லால் நேருவை விமர்சனபூர்வமாகப் பார்க்கச் சொல்லுகிறது . ஆர் எஸ் எஸ் அணுகும் எதிர்நிலையில் அல்ல ; காங்கிரஸ் அணுகும் வழிபாட்டு அணுகல் அல்ல ,மாறாக நிறைகுறைகளை தேவையை உள்வாங்கிய கோணம் .

 

இது நாம் அறிய வேண்டியது . ஜவஹர்லால் நேரு எழுதிய ‘ கண்டுணர்ந்த இந்தியா’ [’டிஸ்கவரி ஆஃப் இந்தியா’] நூலுக்கு கோசம்பி…. எழுதிய விமர்சன மதிப்புரை இதில் உள்ளது .அந்த விமர்சனத்தில் நேரு புத்தகத்தில் இந்திய வரலாறு தொடர்பாக சில பிழைகளைக் கடுமையாக கோசம்பி சுட்டிக்காட்டி இருக்கிறார் . ஆனால் இந்த விமர்சனம் நேரு -கோசாம்பி  இருவரின் தனிப்பட்ட நட்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்திய அறிவியல் மாநாட்டின் கணிதவியல் அரங்கின் பொறுப்பு கோசம்பிக்கு தரப்பட்டதன் மூலம் அறியலாம்.

 

இந்தியாவில் முதலாளித்துவம் காலெடுத்து வைத்த வர்க்கப் பின்னணியை கோசாம்பி சுட்டும் கட்டுரை முக்கியமானது . அதில் சோஷலிசத்தின் ஒரே மாற்றாக தன்னை முன் நிறுத்தும் பாசிசமும் அது முன் மொழியும்  ‘பலமான மனிதர்’ [ தலைமை ]யும் என்பதால் வரும் ஆபத்தை முன் உணர்ந்து 1954 லிலேயே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது . நாம் இன்று அனுபவிக்கிறோம்.

 

சீனப்புரட்சி , ஏகாதிபத்தியம் ஆகிய கட்டுரைகள் மிக ஆழமானவை . அறிவியல் சுதந்திரம் குறித்த கட்டுரை இன்றைக்கும் உரக்கப் பேசப்பட வேண்டிய – அறிவியல் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டிய பிரச்சாரத்தின் தேவையை அடிக்கோடிடுகிறது .

 

அணிந்துரையில் இரா.முருகவேள் சொல்லி இருக்கிற ஒரு செய்தியுடன் நிறைவு செய்யலாம் .” சாக்ரடீசின் விசாரணை ,புத்தமத்ததின் வீழ்ச்சி, பாத்ரூஹரி ஆகிய கட்டுரைகள் நமக்கு முற்றிலும் எதிர்பாரா திறப்புகளைக் கொடுக்கின்றன.”

 

கோசாம்பி எனும் மாபெரும் மார்க்சிய அறிஞர் தனக்கு சரியெனப் பட்டதைத் தயங்காமல் உரைத்த மாபெரும் அறிவுஜீவி . எஸ் ஏ டாங்கே [சிறீபத் அம்ரித் டாங்கே] எனும் கம்யூனிஸ்ட் தலைவர் வேதகாலம் குறித்து எழுதியதை கடுமையாக எதிர்த்தவர் கோசம்பி என்பதும் கவனத்துக்கு உரியது .

 

சரளமான தமிழ்நடையில் நன்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல் கோசாம்பி பற்றி மேலும் மேலும் வாசிக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை .

 

 

டி.டி. கோசாம்பியின் ‘ மனதில் முகிழ்த்த கட்டுரைகள்’ [ இயக்கவியல் முறையில் பயிற்சிகள் ] , தமிழில் : ரிசி .சரவணன் , எதிர்பிழை பதிப்பகம் ,தொடர்புக்கு : 91 70103 76016 /  ethirpizhaipublications@gmail.com  பக்கங்கள் :168 , விலை : ரூ.200 /.

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

14 /09/26.

 

 

                                                                                         

கவித்துவமும் வலியும் மிக்க ‘பயணம்’.............

Posted by அகத்தீ Labels:

 








[ 1 ]

 

கவித்துவமும் வலியும் மிக்க ‘பயணம்’.............

 

ஒரு நெடுங்கதை உள்ளிட்டு ஐந்து கதைகளின் தொகுப்பை ‘ பயணம்’ எனும் பெயரில் நம் கையில் தவழ விட்டிருக்கிற அப்துல் நஜ்முதீன் எனும் அரோ கவிப்பிரியன் .ஐந்து கதையும் பெண் மையச் சிந்தனையின் தெறிப்புகள் எனில் மிகை அல்ல .

இதில் பயணம் எனும் நெடுங்கதை ஓர் நடை பெற்ற சம்பவதின் எதிரொலி ; செத்தவரை உயிரோடு உலவவிட்டு வேலை தேடி இடம் பெயரும் மக்களின் வாழ்க்கை வலியை கவித்துமும் வலியும் கொப்பளிக்கும் நெடுங்கவிதை நடையில் எழுதி உள்ளார் . “ அவன் நம்ம ஊர்க்காரன்தானே” , “அதுதான் எனக்குப் பயம்” இந்த வரிகளில் கதையின் உயிர் முடிச்சு அவிழ்கிறது . கடைசி வரி நெஞ்சைப் பிசைகிறது “ எல்லா கதைகளுக்கும் / இங்கே முடிவு கிடையாது / சில கதைகள் / உயிரோடு வெளியேறுவதிதான் / வெற்றி.”

 

பச்சையம்மாள் கிழவியும் ஒத்த ஆடும் அடித்தட்டு பெண்களிடம் பொங்கி வழியும் பேரன்பும் அக்கறைக்கும் உயிர் சாட்சி .” உயிரைப் பிரித்துக் கொடுக்கிறதுதான் / உண்மையான தியாகம்” வரிகள் மட்டுமல்ல கதையும் பளிச் .

 

உறக்கத்தை இருட்டை மிகவும் பிடித்துப் போகும் அளவுக்கு அவர் வாழ்க்கைப்பாடு . பெண்ணிய நோக்கில் ‘ உறக்கம் ‘ உரக்கப் பேசும் .

 

“ ‘பாட்டி ஜன்னல் வழியே உலகத்தைப் பார்த்தாள்.அம்மா தையல் இயந்திரத்தின் வழியே உலகத்தைப் தைத்தாள் .நான் எனது லென்ஸ் மற்றும் பேனா வழியே உலகிற்கு உரக்கச் சொல்கிறேன்.’பொன்னூலாடை’ என்பது சங்கிலி .அது ஒரு விடுதலைப் பாலம்” என்கிறாள் சுலைகா . முஸ்லீம் சமுதாயம் ஒரு மூடுண்ட சமூகமாய்  வாழ நிர்பந்திக்கும் சமூகச் சூழலில் மெல்ல பரிணமிக்கும் விடுதலை உணர்வை அழகாய் இயல்பாய் கவித்துவமாய்ச் சித்தரித்திருக்கிற அப்துல் நஜ்முதினுக்கு என் பாராட்டுகள் !

 

“ அரசியல் / மேடையில்  தொடங்கல /உயிரைக் காக்கும் / ஒரு சிறிய முடிவில்தான் / தொடங்கியது ….” மல்லிகாவிடம் , “ ஒரு தொழிலாளி / வர்க்க அரசியலைக் கற்றுக்கொள்ளும் போதுதான் / மனிதம் உயிர்த்தெழும்பும்” என்பதை வலுவாய்ச் சொல்லுகிறது ‘நூல்’.

 

கவித்துவ மொழிநடை எழுத்தாளருக்கு நன்கு கை கொடுக்கிறது .தெளிவான பாலின ,வர்க்க ,சமூகபார்வை வலு சேர்க்கிறது . தொடர்ந்து நுட்பமாகக்  கதை எழுதினால் சிகரத்தைத் தொடலாம் . வாழ்த்துகள் !

 

பயணம் , அரோ கவிப்பிரியன் , விலை : ரூ.120 / ,பக்கங்கள் : 96

தொடர்புக்கு : 91 90803 29144

 

 

 சுபொஅ.

 [ 2 ]

கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் சிறுகதைகள் ....

அடைப்புக் குறிக்குள் சொல்லப்பட்ட வரியே இந்நூலின் அறிமுகமாகிவிட்டது. ஒன்பது கதைகள் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட்துதான் ஆயின் குட்டிச் சொல்ல வேண்டிய செய்தியைக் குட்டிக்கதையாய் கடத்திவிடுவது சிறப்பு .

‘கனவைக் காத்த மனிதர்’ என்பது நூலின் தலைப்பு மட்டுமல்ல சிவப்புச் சட்டை தாத்தா ,ஸ்ரீ ராமுலு தாத்தா , பீடி ஆயா ,புத்தக மாமா என ஒவ்வொருவரும் அடை காக்கும் கல்வியின் கனவே இந்நூலின் ஆதார சுருதி . ஏனைய கதைகளும் அதையொட்டியே .

இந்த கேரட்டர்களை வாழ்க்கையிலிருந்து எடுத்து தன் கற்பனையில் சிறுவர்களுக்கு சொல்லத்தக்க வித்ததில் வடித்திருக்கிறார் .

 

சிவப்புச் சட்டை தாத்தா என அவர் யாரைச் சொல்கிறார் என்பதை நானறியவில்லை . அவர் வாழும் பகுதியில் மீஞ்சூரில் தோழர் மாணிக்கம் என்பவரை நானறிவேன் . அவர் இறந்த போது பொதுசுடுக்காட்டில் எரிக்க்க்கூடாது என மேல்சாதியினர் எதிர்த்தனர் . அதை மீறி அவரை அங்கு கொண்டு சென்று எரித்தோம் . மேல் சாதிக்காரர்கள் கடையடைப்பு நடத்தி கண்டனம் தெரிவித்தனர் . ஆனால் ஊரும் சேரியும் ஒன்றாய்த் திரண்டு அவருக்கு இறுதி வழியனுப்பு நிகழ்வை மீஞ்சூர் கடைவீதி நெடுக நடத்தியது மறக்க முடியாதது .

 

கல்வியை வலியுறுத்த சிவப்புச் சட்டை தாத்தா , ஸ்ரீ ராமுலு தாத்தா , பீடி ஆயா மூவரும் கறாராக இருந்தனர் .கடுகடுப்பைக் காட்டி விரட்டினர் .அது அன்றைய காலத் தேவை .அன்பைக் கொட்டும் புத்தக மாமா அடுத்த தலைமுறையின் பரிணாமம் .

 

பிரச்சாரக் கதைகள் கண்டிப்பாய் தேவை . நானும் சில எழுதினேன் ஒரு பதிப்பகம் வாங்கியது . வடிவமைத்துக் காட்டியது ; ஆனால் வெளி வராமல் போனது . ஒரு வேளை வேறு யாரேனும் பின்னர் வெளியிடலாம் . அமுதன் தேவேந்திரனின் முயற்சி பாராட்டத் தக்கது . தொடர்க இன்னும் கூர்மையாய் இன்னும் நுட்பமாய் இன்னும் வலுவாய் இன்னும் எளிதாய்…. வாழ்த்துகள் !!!

கனவைக் காத்த மனிதர் ,[ கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் சிறுகதைகள் ], அமுத தேவேந்திரன் , விலை : ரூ.60 / , பக்கங்கள் :ரூ. 56 /அறிவியல் வெளியீடு ,94880 54683 / 97919 05003

 

 சுபொஅ.

 

 


ஒரு புத்தகமும் 11 + 1 பேர்கள் விமர்சனமும் ….

Posted by அகத்தீ Labels:

 





ஒரு புத்தகமும் 11 + 1  பேர்கள் விமர்சனமும்   ….


ஓசூர் புத்தகக் காட்சியில் இம்முறை ஒரு சோதனை முயற்சி செய்யப்பட்டது . தமுஎகச வோடு இணைந்து . புத்தக விமர்சனம் என்பதை ஒரு போட்டியாக்கியது . ஒரு புத்தகத்தை பலர் விமர்சனம் செய்ய வேண்டும் . சிறந்த விமர்சன்ங்களுக்கு பரிசு உண்டு .

 

இம்முறை எடுத்துக் கொள்ளப்பட்டது என்ன தெரியுமா ? “ வானி” எனும் இளையோருக்கான நாவல் . 11 பேர் பங்கேற்றனர் .அதில் இரண்டு மாணவர்கள் . பெண்கள் 6 , ஆண்கள் 5 . முதல் முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாக இருப்பினும் முயற்சி நிறைவாக இருந்தது . நான் நடுவராகப் பங்கேற்றேன்.

 

எல்லோரும் புத்தகத்தை வாசித்து வந்திருப்பதை உணர முடிந்தது . அவரவர் அந்நூல் கூறும் செய்தியை தங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு உரசி ‘ சுற்றுச் சூழலை’ பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையைப் பகிர்ந்தனர் . வெறும் கதைச் சுருக்கமாக இல்லாமல் கருத்துச் செறிவோடு பேசியது மகிழ்ச்சி அளித்தது. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் .

 

நூலின் பெயர் ’வாணி’ அல்ல ’வானி’ . ஏன் மூன்று சுழி போடாமல் இரண்டு சுழி போடப்பட்டது . வானி என்பது சரியே ஏன் ? எல்லோரும் விளக்கினார்கள் . இங்கே சொன்னால் எப்படி ? நூலை வாசித்து அறிக !

 

பவானி ஆற்றில் விஸ்கோஸ் ஆலை நச்சுக் கழிவு நீர் கலந்ததால்   தண்ணீர் மாசாகியது ,பொது மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு தோல் நோய் ,புற்று நோய்ப் பரவ காரண மாகியது . இதனை எதிர்த்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராடி நதியை மீட்டதே கதை .

 

கதாநாயகி டாக்டர் சத்திய சுந்தரியும் அவர் பேத்தி நித்திலாவும் தான் கதையின் மைய பாத்திரங்கள் . அவர்களின் உரையாடலே பெரும்பகுதி கதையை நகர்த்தியது . டாக்டர் சத்திய சுந்தரி , டாகடர் ஜீவா ஆகியோர் உண்மையில் அப்போராட்டத்துக்கு முன் நின்றவர்கள் . அமைப்பாக்கியவர்கள் . மக்களுக்கு விழிப்பூட்டியவர்கள் ,

விழிப்புணர்பிரச்சாரம் ,சட்டப் போராட்டம், மக்கள் பங்கேற்பு ,ஊடகக்குரல் எல்லாம் சேர்ந்து வெற்றியை ஈட்டியது .இதனை பேசியவர்களில் பலர் சுட்டிக்காட்டினர் .

 

நான் இங்கு கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை . வாசியுங்கள் ! வாசித்த பின் பேசிய ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை ஆற்றைப் பற்றி கவலையைப் பகிர்ந்தார் . ஒரு பெண் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தோடு நினைவு கூர்ந்தார் .ஒருவர் காவிரி மாசுபடுவதைச் சொன்னார் . ஒருவர் குடிநீர் சவாலைச் சொன்னார் .

 

நான் முடிவுரையில் பெங்களூரில் 1200 ஏரிகளில் நூறு மட்டுமே மிச்ச மிருப்பதை ; ஒரு மருந்து கம்பெனி கழிவால் என் வீட்டருகே உள்ள காச்சநாய்க்கன் ஹள்ளி ஏரி நாசமானதை . குடிநீர் தட்டிப்பாட்டில் கிராமமே அல்லாடுவதை . இப்போது ஏரியை மறு சீரமைக்க நடக்கும் முயற்சியைச் சொன்னேன் .

 

ஒரு நாவல் மேலும் பல உண்மைகளைப் பார்க்கத் தூண்டியது என்பது அந்நூலுக்கு பெருவெற்றி ஆகும் !

 

கடைசியாக ஒரு வேண்டுகோள் ஓசூர் புத்தகத் திருவிழா அமைப்பாளர்களுக்கும் தமுஎகசவினருக்கும் ! இனி ஒவ்வொரு ஆண்டும் இதனைத் திட்டமிடுவீர் ! பத்து நாட்கள் பத்து புத்தகங்கள் என யோசிக்கலாம் . சுற்றுச்சூழல் ,மனித உரிமை ,பாலின சமத்துவம் , மத நல்லிணக்கம் , விடுதலைப் போராட்ட வரலாறு  இப்படி பல பொருண்மைகளை மையப்படுத்திய நாவல் ,சிறுகதை , கவிதை ,ஆய்வு நூல் , உரைநடை என வகைக்கொண்றாய் எடுக்கலாம் . யோசிப்பீர் அன்பர்களே !


வானி [ இளையோர் நாவல் ]

ஆசிரியர் : ஈரோடு சர்மிளா ,

சூழல் அறிவோம் பதிப்பகம் ,

91-8825857649 / 

suzhalarivom@gmail.com   


சு.பொ.அகத்தியலிங்கம்.

 


 

 

பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

Posted by அகத்தீ Labels:

 


பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

 

 


பேராசிரியர் .பி. ராஜமாணிக்கம் எழுதிய  ‘பசு மாடு படும் பாடு’ என்னும் இச்சிறிய புத்தகம்  [ 32 பக்கங்கள் ] ஒவ்வொரு வரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் .

 

சில கேள்விகள்…

1] பசு மாட்டின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்துமா ?

2] பசு மாட்டின் சிறுநீரில்  தங்கம் இருப்பது உண்மையா ?

3] பசு மாடு ஆக்சிஸனை சுவாசித்து ஆக்சிஸனை வெளியிடுகிறதா ?

4 ] பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்குமா ?

5] பசு மாட்டின் பூர்வீகம் எது ? அது எங்கே பிறந்தது ? மூதாதையர் யார் ?

 

இப்படி சில அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக ஆணித்தரமான பதில்களைத் தருகிறது இந்நூல் .ஆகவே ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

 

தமிழ்நாடு அறிவியல் இயத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பேரா.பி. ராஜமாணிக்கம்  தேவையான நேரத்தில் , மிக அவசியமான இந்நூலை எழுதி இருக்கிறார்  . மாட்டுக்கறி வெறுப்பு அரசியலுக்குள் நுழையாமல் வேறு தளத்தில் நின்று அறிவியல் பூர்வமான நான்கைந்து கேள்விகளுக்கு மட்டும் தக்க ஆதாரத்துடன் பதில் சொல்லி இருக்கிறார். படங்கள் ,கார்ட்டூன் , சிந்திக்கத் தூண்டும் அட்டை என புத்தகம் நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது .

 

புரளிகளை அறிவியல் என விற்கும் புழுகுணிப் பிரச்சாரங்களில் சிக்கிக் கொண்ட மக்களை விடுவிக்க ஒவ்வொருவருக்கும் இந்நூலைப் பரிசளியுங்கள் !  அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் இதனைக் கருத்தில்க் கொள்க !

 

பசு மாடு படும் பாடு , ஆசிரியர் : பேரா.பி. ராஜமாணிக்கம் , வாசல் வெளியீடு , 40 D / 3 – முதல் தெரு ,வசந்தா நகர் , மதுரை 625 003 , vasalviji@gmail.com + 91 98421 02133 . பக்கங்கள்: 32 , விலை : ரூ.42 /

 

சுபொஅ.

Posted by அகத்தீ Labels:

 



’கமலாலயன் : இலக்கிய பெரினா விருது 2016 – சிறப்பு வெளியீடு’ வாசித்தேன் . 133 பக்கங்களில் கமலாலயன் பற்றி ஓர் பருந்துப் பார்வை அறிமுகம் எனில் மிகையல்ல .

 

சிறுகதை ,நாவல் ,மொழிபெயர்ப்பு ,கட்டுரை என பல முனைகளின் அவர் அளித்தப் பங்களிப்பை இந்நூல் பட்டியலிடுகிறது . பாவண்ணன் , உதயஷங்கர் இருவரின் கட்டுரைகளும் கமலாலயனின் காத்திரமானப் பங்களிப்பைச் சொல்கிறது .

 

கமலாலயனின் ‘ நகரப் பருந்துகள்’ எனும் குறுநாவல் இந்நூலுக்கு அழகு சேர்ப்பதோடு கமலாலயனின் சமூக அக்கறையையும் கூர்த்த பார்வையையும் பறை சாற்றுகின்றன . வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் செய்யும் அட்டகாசம் ; அதற்கு துணைபோய் அரசு பேருந்துகளை பழிவாங்கும் காவல்துறையும் நிர்வாகமும் இன்றும் தொடர் கதை . வேலூரில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்கிறது இந்நாவல் . மனித உயிரைவிட லாபம்தான் உயிர்நாடியாகிப்போன சமூக அவலத்தின் சாட்சி . இன்னும் சொல்லப் போனால் 1990 களில் நடந்த ஓர் நிகழ்வை உள்ளது உள்ளபடி துல்லியமாய் பதிவு செய்துள்ளது .இதுவும் வரலாறு அன்றி வேறென்ன ?

 

முதுமையின் வலியைச் சொல்லும் ‘ ஓய்ந்தவர்கள்’ சிறுகதையும் , வாழ்க்கை துயரையும் கடவுள் நம்பிக்கையும் சேர்த்து பகடி செய்யும் ஓர் நுட்பமான சிறுகதையும் இதில் இடம் பெற்றுள்ளன .

 

இக்கதைகள் ஏற்கெனவே வெளிவந்தவைதான் . இங்கு இவரின் ஆற்றலை படம்பிடித்துக் காட்ட தரப்பட்டுள்ளது .

 

இத்துடன் இவரின் பன்முகத்தைக் காட்டும் நான்கு கட்டுரைகளும் ஓர் நேர்முகமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன .இவையாவும்  இவர் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதற்கு சாட்சியாகிறது .

 

வாலிபர் சங்கத்தில் தொடங்கிய எங்கள் தோழமை இன்றுவரை அதே உயிர்ப்புடன் தொடர்கிறது . தோழரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

 

தேநீர் பதிப்பக வெளியீடு .விலை : ரூ140 / தொடர்புக்கு 9080909600.

 

சுபொஅ. 

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

Posted by அகத்தீ Labels:

 



பாலியல் வன்கொடுமை :

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

 

’தப்பு’ நாவலைத் தாமதமாகவே படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆயின் சரியானதைப் படித்தேன் என உறுதியாகச் சொல்லலாம் . கதை நேர்கோட்டுப் பாதையில் எளிமையாய்ச் செல்கிறது . திருப்பங்களும் இயல்பு போக்கிலேயே நடக்கிறது. தப்பு ஓரிடத்தில் மட்டுமே இல்லை திரும்பகிற இடமெல்லாம் தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு …..

 

ஒரு மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு . முதலில் குழந்தை மீதான பாலியல் வன்முறை என்ற வகையில் தொடங்குகிறது . பின் 28 வயதுப் பெண் என நகர்கிறது .பெண்ணின் பெயர் சின்னப் பொண்ணு   அவள் மனநிலைப் பிறந்தவள் என காணப்பட்டு , அதன் பின் அவள் வயிற்றில் ஏழுமாதக் கர்ப்பமோடு இருப்பதைச் சொல்லி , அப்புறம் அக்குழந்தை வயிற்றில் செத்து இருப்பதை கண்டுபிடித்து … இப்படி நாவல் சிக்கல் மேல் சிக்கலாக நகருகிறது . குற்றவாளி யார் என்பதுதான் சஸ்பென்ஸ் . இது கிரைம் நாவல் அல்ல .சமூக நாவல் . சமூகத்தை ஸ்கேன் செய்து காட்டும் நாவல் .

 

கிட்டத்தட்ட நாவல் முழுவதும் ஆய்வாளர் மனோன்மணியம் பார்வையில் நகர்கிறது . நாவல் நெடுக மனிதர்களுக்குள் இருக்கும் வன்மமும் போலித்தனமும் தோலுரிக்கப்பட்டுக்கொண்டே கதை நகர்கிறது .

 

காவல்துறை ,அரசு மருத்துவமனை இவற்றின் செயல்பாடு அன்றாடம் சமூக வாழ்வோடு நெருங்கி இருப்பதால் . இவற்றின் மீது எல்லோருக்கும் எரிச்சலும் கோபமும் இருக்கும் . அதற்கான நியாயமும் உண்டு . பணம் ,அதிகாரம் ,சாதி ,மதம் , அரசியல் செல்வாக்கு இவற்றின் கோரப்பிடி இங்கு வலுவாகவே உண்டு .

 

இங்கேயும் மனித இதயமும் , நீதி நேர்மைமீது பசிதாகமும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் . இங்குள்ள ஊழியர்கள் ,டாக்டர்கள் ,காவல்துறையினர்  படும்பாட்டை இந்நாவல் காட்டுகிறது .கிராமமோ நகரமோ தோற்றத்தைக் கண்டோ , பேச்சைக் கேட்டோ ஒருத்தரை எடை போட்டுவிட முடிவதில்லை .ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து கிடக்கும் ரகசியங்களும் உண்மைகளும் மிகவும் ஆழமானவை . குரூரமானவை .அருவருப்பனவைகூட .கசப்பானவைம்தான் .

 

பாலியல் குற்றவாளி யார் ? அவர் தண்டிக்கப்பட்டாரா ? நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் . ‘ தப்பு’ என உன் ஒற்றை விரல் பிறரை நோக்கி நீளும் போது ஏனைய நான்கு விரல்களும் உன்னை நோக்கி நீள்கிறது . பாலியல் வன்கொடுமை பெரும் அநீதி . அயோக்கியத்தனம் . ஆயின் அதன் விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய் விரவிக் கிடப்பதை இந்நாவல் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது . 24 வது அத்தியாயத்தின் மனோத்த்துவ மருத்துவரோட உரையாடல் நாவல் வாசிக்கிறவர்களையும் குற்றவாளிக் கூண்டிலேற்றிவிடுகிறது . மனச்சாட்சியை உலுக்கிவிடுகிறது .

 

நாவலை வாசித்து விடுங்கள். நாவலிருந்து ஒரு சில வரிகளை மேற்கோள் காட்டுவதுகூட முழுவாசிப்புக்குத் தடையாகிவிடக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன் .கட்டாயம் வாசியுங்கள் !

 

தப்பு [ நாவல் ], நாராயணி கண்ணகி , எழுத்து பிரசுரம் , zerodegreepublishing@gmail.com , 89250 61999 , பக் : 284 , விலை : ரூ. 340 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

சொடலி ...சொடலி...

Posted by அகத்தீ Labels:

 

சொடலி ...சொடலி...




இந்நூலைப் பற்றி ‘ அருவாள் தேசத்திலிருந்து…’ என்ற தன்னுரையில்  வசந்தி முனீஸ் சரியாகச் சொல்கிறார் ; “ எங்கள் ஊர் இருட்டுக்கடை அல்வாவை எல்லோரும் சப்புக் கொட்டிச் சுவைத்திருப்பீர்கள் .ஆனால் , எங்கள் அருவாள் தேசத்தின் அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தோலுரித்துக் காட்டுவாள் என் ‘சொடலி’. “ 

 

இப்படி தன் பிறந்த மாவட்டத்தை சுயவிமர்சனமாய்ச் சொல்ல -அதுவும் ‘அருவாள் தேசமென..’ தலைப்பிலேயே சொல்ல ; மனோ தைரியம் ரொம்ப வேண்டும் . ஆழமான சமூகக் கோபம் இருக்க வேண்டும்.  வசந்தி முனீஸூக்கு இவை அதிகமாக உள்ளது. நூலை வாசித்தால் புரியும்.

 

“ ‘சொடலி’ கதை வெறும் பழிவாங்கல் கதையல்ல ; அது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியின்வெடிப்பு.” என்கிறார் அணிந்துரையில் பிறைமதி குப்புசாமி . இது கவனத்தில் கொள்ள வேண்டிய அவதானிப்பு .

 

எட்டு கதைகள் . எட்டு கொடுமைகளை தோலுரிக்கிறது .எதுவும் வெறும் கற்பனையின் படைப்பல்ல . நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு கதாசிரியர் ஓர் கதை வடிவம் கொடுத்து ஒரு கோவப் பார்வையை வீசி இருக்கிறார் .

 

ஆணவக்கொலை ,சாதிவெறி .ஆணாதிக்கம் இவற்றையும்   மதநல்லிணக்கம் , மனிதம் ,பேரன்பு இவைகளையும்  உரக்க வெளிப்படுத்துகிற கதைகள் இவை .சொடலி , வரிப்பணம் , முனியாண்டிக்கு ஸ்தோத்திரம் போன்ற கதைகள் என்னை பெரிதும் ஈர்த்தன . நாட்டார் தெய்வங்களின் வரலாற்றுக் கதை நூலாசிரியருக்கு மிகவும் பிடித்த ஒன்று என நினைக்கிறேன் . சொடலி அதன் வெளிப்பாடுதானோ !

 

சமூகக் கோபம் நியாயம் . கிராமத்து மொழி நன்று . தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர்  வசந்தி முனீஸ் . 'விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை ‘ என்கிற பாரதிதாசன் வரிகளையும் உள்வாங்கி ,  சிறந்த கதை சொல்லியாய்  காலவெளியில் பரிணமிப்பார் என்பதில் ஐயமில்லை .

 

சொடலி [ சிறுகதைத் தொகுப்பு , ஆசிரியர் : வசந்தி முனீஸ் , கேலக்ஸி நூல் பதிப்பகம் & விற்பனையகம் , தொடர்புக்கு :  galaxybs2022@gmail.com , 99944 34432 , பக்கங்கள் : 125 , விலை : ரூ.165 /

 

 

சுபொஅ.

28 /06 /26.

ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

Posted by அகத்தீ Labels:

 





 

ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

 

முதலில் அனுபவம் …

 

தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற ஓர் போக்குவரத்துத் தொழிலாளியோடு ஒரு நாள் பெங்களூரில் நடை பயிற்சி போய்க் கொண்டிருந்தேன் . வழியில் அம்பேத்கர் படம் தாங்கிய ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் , “  என்ன சாதிச்சிட்டதுக்காக இப்ப தெருவெல்லாம் நட்டு வைச்சிருக்காங்க …” என ஆரம்பித்து வசை பாடினார் . எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது . நான் கொடுத்த விளக்கங்கள் எதையும் அவர் ஏற்கத் தயார் இல்லை . ஆதிக்க சாதி மனோநிலையில் அவர் உறைந்து போயிருந்தார் .

 

அடுத்து வாசிப்பு ….

 

 “ எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் ஓர் தமிழாசிரியர்.” ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை . அழகிய பெரியவன் எழுதிய கதை . அண்மையில் வாசித்தேன் . வகுப்பில் அம்பேத்கர் பாடத்தையே வாசிக்க விரும்பாமல் தட்டிக் கழித்த ஒரு தமிழாசிரியர் கதை அது . ஆனால் மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறுகிறார் . தெளிவு பெறுகிறார் .

 

“ அம்பேத்கருடைய பாடத்தை நான் இப்ப நடத்தப் போறேன்! இந்தப் புத்தகத்தை எனக்குப் படிக்கக் கொடுத்தவன் என்னுடைய நண்பன் சிவராஜ் . ஒரு முறை இதே மாதிரி வகுப்பறையில எனக்குப் பிறந்த நாள் கொண்டாடிய போது காட்டுப் பழங்களைக் கொடுத்தான் …. பதிலுக்கு நான் அவனுக்கு என்ன கொடுத்தேன்னு நினைவில்ல ! இன்னும் கொஞ்ச தூரம்தான் நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டோம் ! இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்து நகர்ந்து போவோம்! ஒண்ணாவே போவோம் ! இன்னும் கொஞ்ச தூரம்தான்.”

 

இக்கதை நாட்டு நடப்பை நமக்குச் சொல்லித் தந்துவிட்டது . ஆம் ‘அ’ கூட அறியாமல் இன்னும் வெறுப்புப் பள்ளத்தில் வீழ்ந்து கிடப்போரிடம் அம்பேத்கரைக் கொண்டு சேர்ப்போம் .

 

16 சிறுகதைகள் . அனைத்தும் தலித் சிறுகதைகள் . புதியவர்கள் எழுதிய 8 கதைகள் . அனுபவம் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய எட்டு கதைகள் . புதுசோ பழசோ வலிகள்தான் இக்கதைகளில் நிரம்பி வழிகிறது. தலித் வாழ்க்கை அதுதானே . வாசிக்க வேண்டிய நூல் .

 

இன்று ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் .

 

நவீன தலித் சிறுகதைகள் , தொகுப்பு : ப்ரதிபா ஜெயச்சந்திரன் , பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com ,பக்கங்கள் :176 , விலை : ரூ.180 /

 

சுபொஅ.

14 /06 /26 .





தல கோதும் இளங்காத்து கொண்டுவந்த சேதி……………

Posted by அகத்தீ Labels:

 



தல கோதும் இளங்காத்து கொண்டுவந்த சேதி……………

 

பேரப்பிள்ளைகளை மகனே ,மகளோ கண்டிக்கிற போது , ”குழந்தையை ரொம்பப் படுத்தாதே ! அழுத்தம் கொடுக்காதே !”என எனப் பிள்ளைகளுக்குப் புத்தி சொல்லுவதும் ; “ அப்பா ! இது உங்க காலம் இல்லை ; காம்பெட்டடிவ் வேர்ல்ட் “ என அவர்கள் சொல்வதும் வாடிக்கை . என் அனுபவம் மட்டுமல்ல ; என் போல் எழுபதைத் தாண்டியவர்களின் பொது அனுபவமாகவும் இருக்கும் . இந்த மனோநிலையோடுதான் பயணி தரன் எழுதிய ‘விதையெல்லாம் மரமாகும்  [அ] கற்பது எப்படி ? : அறிவியல் சொல்லும் உண்மைகள்’ எனும் இப்புத்தகத்தை மிகத் தாமதமாக இப்போது படித்தேன் .

 

இப்புத்தகம் சொல்வதெல்லாம் சரியா தப்பா எனத் தீர்ப்புக்கூற நான் கல்வியியலாளன் அல்ல . உளவியல் நிபுணருமல்ல . ஆனாலும் இப்புத்தகத்தைப் படித்த பின் இதனை   என் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்ய வேண்டும் எனத் தோன்றியது . காரணங்கள் .

 

1] “ இந்நூல் இளைஞர்களுக்கான நூல் . இந்நூலுக்காக அவர் மிகக் கடுமையான உழைப்பைத் தந்திருக்கிறார் . உலகளாவிய பல நூல்களைத் தேடிப்பிடித்து , வாசித்து அந்த நூல்களில் இருந்த சாரங்களை எல்லாம் உணர்ந்து ,நம்முடைய நாட்டுக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இந்த நூலை நாவல் வடிவத்தில் அழகாக உருவாக்கி இருக்கிறார்.” என எஸ் ஆர் வி தமிழ்ப்பதிப்பகம் சார்பில் சொல்லப்பட்ட பதிப்புரையை வழிமொழிகிறேன்.

 

2] தலை முறைகள் மாறுகின்றன , அறிவியல் அணுகுமுறை தேவை ,வரலாறு முடிந்துவிட்டது எனும் மாயை , மூளையின் இயல்பு , கற்றலின் அறிவியல் முறைகள் அடடா ! யானை .பூனை ,தக்காளி என இந்நூல் நெடுக சொல்லப்படும் செய்திகளும் வழிமுறைகளும் தேர்ந்த உளவியல் அறிவியல் அணுகுமுறை  என்றே கருதுகிறேன் .

 

3] இப்புத்தகம் எதையும் திணிக்கவில்லை .மாறாக இயல்புப் போக்கில் சொல்லிச் செல்கிறது . பலவேறு புதுப்புது செய்திகளும் சோதனைகளும் அறிமுகம் ஆகின்றன .

 

 

4 ] அதீத பாராட்டு ,கடுமையான வசை இரண்டுக்கும் இடையில் ஒரு நடைமுறை சாத்தியமான கோட்பாட்டை இந்நூல்  சொல்லுகின்றது

 

5] இந்தப் புத்தகம் behavioural psychology நடத்தை உளவியல் சார்ந்து எழுதப்பட்டுள்ளதாலும் ; கதை சொல்லும் பாணியில்  பெரும்பாலும் உரையாடல் வடிவில் இருப்பதாலும் உள்வாங்குதல் எளிதாக உள்ளது . ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் அதன் சாரம் பெட்டிச் செய்தியாக தரப்பட்டுள்ளதால் புரிதல் எளிதாகிறது .

இன்னும் பட்டியல் போடலாம் . நூலை நீங்களே படித்து ஓர் முடிவுக்கு வருவதே சிறந்தது !

 

நூலில் கூறப்பட்ட கருத்துகளை இத்துறை சார்ந்த வல்லுநர்கள் விமர்சிக்கட்டும் ! எனக்கு ஒரு ஐயம் உள்ளது .” புத்திசாலித்தனம் என்பது பிறவிக்குணம் இல்லை” [பக்கம்.66] என்பது முற்றிலும் சரிதான் .ஆயினும் சாதி ,வர்ணம் , ஏற்றதாழ்வு ,வர்க்கம் போன்ற சமூக்காரணிகள் தொழில்படுவது குறித்து நூலாசிரியர் ஏன் போகிற போக்கில்கூட சொல்லவில்லை . இந்நூல் மத்தியதர வீட்டு பிள்ளைகளுக்கானது மட்டும்தானா ?

 

இந்நூலாசிரியர் ஸ்ரீதரன் மதுசூதன் , என்ன யோசிக்கிறீங்க பயணி தரனின் இயற்பெயர் இதுதான் . நான்கு ஐந்து பட்டங்கள் வாங்கியவர் . ஐ எப் எஸ் படித்தவர் . இந்திய அயலுறவுப் பணியில் இருப்பவர் . நல்ல வாசிப்பாளர் . நூல்கள் பல எழுதியுள்ளார் . இந்நூலைத் தந்தமைக்கு நன்றி ! வாழ்த்துகள்!

 

அவரின்  www.payani/LEARN இணையப் பக்கத்தில் கற்பதற்கான நிறைய வழிகாட்டல்கள் கொட்டிக்கிடக்கின்றன . தேடி வாசித்து பயன்பெறுவது இதனை வாசிப்பவர்கள் பொறுப்பு.

 

பயணிதரன் சார் ! தலைப்பு இவ்வளவு நீட்டமாக வேண்டுமா ? “  “விதையெல்லாம் மரமாகுமா ?” என்று மட்டும் இருந்தால் போதாதா ? தேவை எனக் கருதினால் ”அறிவியல் உண்மைகள்” என உபதலைப்பும் போதுமே ! நானும் ஒரு பத்திரிகைக்காரன் அல்லவா அதுதான் திருத்தம் செய்யச் சொல்கிறது என் புத்தி .

 

 “தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…

மரமாகும் விதை எல்லாம் வாழச் சொல்லித்தரும்…

கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…

இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…”

என்கிற  ‘ஜெய்பீம்’ திரைப்பட பாடல் வரிகள் இந்நூலில் மிகப் பொருத்தமாக கையாளப்பட்டிருக்கிறது .பாராட்டுகள்!

 

விதையெல்லாம் மரமாகும்  [அ] கற்பது எப்படி ? :

அறிவியல் சொல்லும் உண்மைகள்,

ஆசிரியர் : பயணி தரன் , வெளியீடு : SRV தமிழ்ப் பதிப்பகம் ,

விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com 044- 24332934 / 9444567935 , பக்கங்கள் : 152 , விலை : ரூ. 190 /

 


ஆகிருதி

Posted by அகத்தீ Labels:

 



 


 

 

“ …. இந்தப் பொம்பளப் பொறப்பே ஆவாது சாமி . செத்துப் போய்க் கிடந்தாக்கூட சோத்தாக்கி வெச்சிட்டுப் பாடையில போய் படுன்னு சொல்வானுக….”  - இந்த வார்த்தைகளை விட வேறென்ன சொல்லிவிட முடியும் பெண்கள் படும் பாட்டை .

 

முதல் கதை ஆகிருதி மனதைப் பிழிகிறது.கறுப்பாப் பிறந்தது ஒரு குற்றமா ? மகாவின் வாழ்க்கை சோகமும் , தனக்கென புதிய தடத்தை அமைக்கும் துணிச்சலும் ’ஆகிருதி’யை வலுவாக நிறுத்துகிறது .

 

 

பெண்களே ஒரு பெண்ணைப் பழிக்கும் போது அவள் கணவன் அவள் பக்கம் நிற்கும் காட்சி மூலம் ஆணாதிக்கம்  இல்லா ஆண்களும் உண்டு , அதே வேளை ஆணாதிக்கம் ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் நிறைந்திருப்பதையும் சொல்லிச் செல்கிறார் .அப்படிப்பட்ட தன்னம்பிக்கை மிக்க பெண்களைத்தான் மானசீகமாக பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது ,நாயகி மகாவுக்கும் . ’ வாசிக்கபடாத அத்தியாயத்தின் ரேகைகள்’ கதை வாசிக்கப்பட வேண்டிய கதை .அதில் சிலுக்கு என்று  அந்த கதா பாத்திரத்திற்கு ஏன் பெயர் வைத்தார் ? குறியீடோ ! சிலுக்கு சிறந்த நடிகை ,சிறந்த மனுஷி .

 

நீலாம்பரியை எதிர் மறை கதாபாத்திரமாக சினிமா சித்தரித்தாலும் அப்படத்தில் கதாநாயகனைவிட நீலாம்பரியைத்தான் எல்லா பெண்களுக்கும் பிடித்தது .ஏன் ? குமுறும் பெண்களின் உளவியல் .சரிதா ஜோ அதனை உள்வாங்கி இருக்கிறார் .

 

“ சாதி என்னும் விஷயம் நம் வாழ்க்கையில் முறுக்கி பிணைந்திருப்பது ; ஆழ்மனதில் புதைக்கப்பட்ட சோகத்துடன் மனதைத் தைக்கும் படி பல கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது ..” என்கிறார் அம்பை . இந்நூலில் ‘கழுவாய்’, ‘தாபந்தம்’ போன்ற கதைகள் வாசித்த பின்  நீங்களும் அதனையே முன்மொழிவீர்கள் ‘ வீடிலிகள்’ சாதி ஆணவத்தையும் ஆணாதிக்கத்தையும் ஒருங்கே வரைந்து காட்டும் உயிர் சித்திரம் .

 

கதை சொல்லும் பாங்கும் வட்டார மொழியின் ஆளுமையும் சரிதா ஜோ வுக்கு நன்றாக கைவந்திருக்கிறது . எழுத்துக்கு வலு சேர்த்திருக்கிறது .

 

“ ஒரு புதிய கலகக்குரலாக இந்நூல் வெளிவந்திருக்கிறது ‘ என உதயசங்கர் சொல்வதை வழிமொழிகிறேன் .

 

ஆகிருதி [ சிறுகதைகள் தொகுப்பு ] , ஆசிரியர் : சரிதா ஜோ , பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com 044- 24332934 / 9444567935 , பக்கங்கள் : 176 , விலை : ரூ. 220 /

 

சுபொஅ.

07 /03 /26.