தல கோதும் இளங்காத்து கொண்டுவந்த சேதி……………

Posted by அகத்தீ Labels:

 



தல கோதும் இளங்காத்து கொண்டுவந்த சேதி……………

 

பேரப்பிள்ளைகளை மகனே ,மகளோ கண்டிக்கிற போது , ”குழந்தையை ரொம்பப் படுத்தாதே ! அழுத்தம் கொடுக்காதே !”என எனப் பிள்ளைகளுக்குப் புத்தி சொல்லுவதும் ; “ அப்பா ! இது உங்க காலம் இல்லை ; காம்பெட்டடிவ் வேர்ல்ட் “ என அவர்கள் சொல்வதும் வாடிக்கை . என் அனுபவம் மட்டுமல்ல ; என் போல் எழுபதைத் தாண்டியவர்களின் பொது அனுபவமாகவும் இருக்கும் . இந்த மனோநிலையோடுதான் பயணி தரன் எழுதிய ‘விதையெல்லாம் மரமாகும்  [அ] கற்பது எப்படி ? : அறிவியல் சொல்லும் உண்மைகள்’ எனும் இப்புத்தகத்தை மிகத் தாமதமாக இப்போது படித்தேன் .

 

இப்புத்தகம் சொல்வதெல்லாம் சரியா தப்பா எனத் தீர்ப்புக்கூற நான் கல்வியியலாளன் அல்ல . உளவியல் நிபுணருமல்ல . ஆனாலும் இப்புத்தகத்தைப் படித்த பின் இதனை   என் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் சிபாரிசு செய்ய வேண்டும் எனத் தோன்றியது . காரணங்கள் .

 

1] “ இந்நூல் இளைஞர்களுக்கான நூல் . இந்நூலுக்காக அவர் மிகக் கடுமையான உழைப்பைத் தந்திருக்கிறார் . உலகளாவிய பல நூல்களைத் தேடிப்பிடித்து , வாசித்து அந்த நூல்களில் இருந்த சாரங்களை எல்லாம் உணர்ந்து ,நம்முடைய நாட்டுக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இந்த நூலை நாவல் வடிவத்தில் அழகாக உருவாக்கி இருக்கிறார்.” என எஸ் ஆர் வி தமிழ்ப்பதிப்பகம் சார்பில் சொல்லப்பட்ட பதிப்புரையை வழிமொழிகிறேன்.

 

2] தலை முறைகள் மாறுகின்றன , அறிவியல் அணுகுமுறை தேவை ,வரலாறு முடிந்துவிட்டது எனும் மாயை , மூளையின் இயல்பு , கற்றலின் அறிவியல் முறைகள் அடடா ! யானை .பூனை ,தக்காளி என இந்நூல் நெடுக சொல்லப்படும் செய்திகளும் வழிமுறைகளும் தேர்ந்த உளவியல் அறிவியல் அணுகுமுறை  என்றே கருதுகிறேன் .

 

3] இப்புத்தகம் எதையும் திணிக்கவில்லை .மாறாக இயல்புப் போக்கில் சொல்லிச் செல்கிறது . பலவேறு புதுப்புது செய்திகளும் சோதனைகளும் அறிமுகம் ஆகின்றன .

 

 

4 ] அதீத பாராட்டு ,கடுமையான வசை இரண்டுக்கும் இடையில் ஒரு நடைமுறை சாத்தியமான கோட்பாட்டை இந்நூல்  சொல்லுகின்றது

 

5] இந்தப் புத்தகம் behavioural psychology நடத்தை உளவியல் சார்ந்து எழுதப்பட்டுள்ளதாலும் ; கதை சொல்லும் பாணியில்  பெரும்பாலும் உரையாடல் வடிவில் இருப்பதாலும் உள்வாங்குதல் எளிதாக உள்ளது . ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் அதன் சாரம் பெட்டிச் செய்தியாக தரப்பட்டுள்ளதால் புரிதல் எளிதாகிறது .

இன்னும் பட்டியல் போடலாம் . நூலை நீங்களே படித்து ஓர் முடிவுக்கு வருவதே சிறந்தது !

 

நூலில் கூறப்பட்ட கருத்துகளை இத்துறை சார்ந்த வல்லுநர்கள் விமர்சிக்கட்டும் ! எனக்கு ஒரு ஐயம் உள்ளது .” புத்திசாலித்தனம் என்பது பிறவிக்குணம் இல்லை” [பக்கம்.66] என்பது முற்றிலும் சரிதான் .ஆயினும் சாதி ,வர்ணம் , ஏற்றதாழ்வு ,வர்க்கம் போன்ற சமூக்காரணிகள் தொழில்படுவது குறித்து நூலாசிரியர் ஏன் போகிற போக்கில்கூட சொல்லவில்லை . இந்நூல் மத்தியதர வீட்டு பிள்ளைகளுக்கானது மட்டும்தானா ?

 

இந்நூலாசிரியர் ஸ்ரீதரன் மதுசூதன் , என்ன யோசிக்கிறீங்க பயணி தரனின் இயற்பெயர் இதுதான் . நான்கு ஐந்து பட்டங்கள் வாங்கியவர் . ஐ எப் எஸ் படித்தவர் . இந்திய அயலுறவுப் பணியில் இருப்பவர் . நல்ல வாசிப்பாளர் . நூல்கள் பல எழுதியுள்ளார் . இந்நூலைத் தந்தமைக்கு நன்றி ! வாழ்த்துகள்!

 

அவரின்  www.payani/LEARN இணையப் பக்கத்தில் கற்பதற்கான நிறைய வழிகாட்டல்கள் கொட்டிக்கிடக்கின்றன . தேடி வாசித்து பயன்பெறுவது இதனை வாசிப்பவர்கள் பொறுப்பு.

 

பயணிதரன் சார் ! தலைப்பு இவ்வளவு நீட்டமாக வேண்டுமா ? “  “விதையெல்லாம் மரமாகுமா ?” என்று மட்டும் இருந்தால் போதாதா ? தேவை எனக் கருதினால் ”அறிவியல் உண்மைகள்” என உபதலைப்பும் போதுமே ! நானும் ஒரு பத்திரிகைக்காரன் அல்லவா அதுதான் திருத்தம் செய்யச் சொல்கிறது என் புத்தி .

 

 “தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்

மரமாகும் விதை எல்லாம் வாழச் சொல்லித்தரும்

கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல

என்கிற  ஜெய்பீம்’ திரைப்பட பாடல் வரிகள் இந்நூலில் மிகப் பொருத்தமாக கையாளப்பட்டிருக்கிறது .பாராட்டுகள்!

 

விதையெல்லாம் மரமாகும்  [அ] கற்பது எப்படி ? :

அறிவியல் சொல்லும் உண்மைகள்,

ஆசிரியர் : பயணி தரன் , வெளியீடு : SRV தமிழ்ப் பதிப்பகம் ,

விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com 044- 24332934 / 9444567935 , பக்கங்கள் : 152 , விலை : ரூ. 190 /

 


0 comments :

Post a Comment