ஆகிருதி

Posted by அகத்தீ Labels:

 



 


 

 

“ …. இந்தப் பொம்பளப் பொறப்பே ஆவாது சாமி . செத்துப் போய்க் கிடந்தாக்கூட சோத்தாக்கி வெச்சிட்டுப் பாடையில போய் படுன்னு சொல்வானுக….”  - இந்த வார்த்தைகளை விட வேறென்ன சொல்லிவிட முடியும் பெண்கள் படும் பாட்டை .

 

முதல் கதை ஆகிருதி மனதைப் பிழிகிறது.கறுப்பாப் பிறந்தது ஒரு குற்றமா ? மகாவின் வாழ்க்கை சோகமும் , தனக்கென புதிய தடத்தை அமைக்கும் துணிச்சலும் ’ஆகிருதி’யை வலுவாக நிறுத்துகிறது .

 

 

பெண்களே ஒரு பெண்ணைப் பழிக்கும் போது அவள் கணவன் அவள் பக்கம் நிற்கும் காட்சி மூலம் ஆணாதிக்கம்  இல்லா ஆண்களும் உண்டு , அதே வேளை ஆணாதிக்கம் ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் நிறைந்திருப்பதையும் சொல்லிச் செல்கிறார் .அப்படிப்பட்ட தன்னம்பிக்கை மிக்க பெண்களைத்தான் மானசீகமாக பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது ,நாயகி மகாவுக்கும் . ’ வாசிக்கபடாத அத்தியாயத்தின் ரேகைகள்’ கதை வாசிக்கப்பட வேண்டிய கதை .அதில் சிலுக்கு என்று  அந்த கதா பாத்திரத்திற்கு ஏன் பெயர் வைத்தார் ? குறியீடோ ! சிலுக்கு சிறந்த நடிகை ,சிறந்த மனுஷி .

 

நீலாம்பரியை எதிர் மறை கதாபாத்திரமாக சினிமா சித்தரித்தாலும் அப்படத்தில் கதாநாயகனைவிட நீலாம்பரியைத்தான் எல்லா பெண்களுக்கும் பிடித்தது .ஏன் ? குமுறும் பெண்களின் உளவியல் .சரிதா ஜோ அதனை உள்வாங்கி இருக்கிறார் .

 

“ சாதி என்னும் விஷயம் நம் வாழ்க்கையில் முறுக்கி பிணைந்திருப்பது ; ஆழ்மனதில் புதைக்கப்பட்ட சோகத்துடன் மனதைத் தைக்கும் படி பல கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது ..” என்கிறார் அம்பை . இந்நூலில் ‘கழுவாய்’, ‘தாபந்தம்’ போன்ற கதைகள் வாசித்த பின்  நீங்களும் அதனையே முன்மொழிவீர்கள் ‘ வீடிலிகள்’ சாதி ஆணவத்தையும் ஆணாதிக்கத்தையும் ஒருங்கே வரைந்து காட்டும் உயிர் சித்திரம் .

 

கதை சொல்லும் பாங்கும் வட்டார மொழியின் ஆளுமையும் சரிதா ஜோ வுக்கு நன்றாக கைவந்திருக்கிறது . எழுத்துக்கு வலு சேர்த்திருக்கிறது .

 

“ ஒரு புதிய கலகக்குரலாக இந்நூல் வெளிவந்திருக்கிறது ‘ என உதயசங்கர் சொல்வதை வழிமொழிகிறேன் .

 

ஆகிருதி [ சிறுகதைகள் தொகுப்பு ] , ஆசிரியர் : சரிதா ஜோ , பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com 044- 24332934 / 9444567935 , பக்கங்கள் : 176 , விலை : ரூ. 220 /

 

சுபொஅ.

07 /03 /26.

 

 

 


0 comments :

Post a Comment