இரண்டு போதுமே..

Posted by அகத்தீ Labels:




இரண்டு போதுமே..

 
ஐயா
எனக்கொரு பெருத்த சந்தேகம்
இன்று நேற்றல்ல நீண்ட நாளாக இருக்கிறது
எவரேனும் தீர்ந்த்து வைத்தால்
தக்க சன்மானம் வழங்கப்படும்.
[ இது தேர்தல் வாக்குறுதி]

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பிறக்கும்
முன்னரே குவியும்..
புத்தாண்டு வாழ்த்துகள்

பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம்,
அடையாள அட்டை, பள்ளிச் சான்றிதழ்,
கடவுச் சீட்டு, உரிமைச் சீட்டு
எல்லாவற்றிலும்
இந்த ஆண்டுக்கணக்கே இருப்பதாலும்,
எல்லாவற்றையும்விட சம்பளம்
இதனடிப்டையிலேயே கிடைப்பதாலும்
ஆங்கிலப்புத்தாண்டோ, கிரிகேரியன் ஆண்டோ
நானறியேன்.. எனக்கது கவலையில்லை

சத்தியமாய் இது
 நாளும் பயன்படும்
‘’ வாழ்க்கை ஆண்டு’’
இதுவன்றி வேறென்ன ?

சரி! சரி! போகட்டும்
இன்னொரு கணக்கும் இங்குண்டே!

உண்ணாமல் வாழமுடியுமா?
உழவின்றி உண்ணமுடியுமா?
உழவைப் போற்றும் தைத்திருநாளை
தமிழ்ப்புத்தாண்டென்பது
வாழ்வியல் வகுத்த வருடக்கணக்கு - இதை
ஏற்பதே பண்பாட்டுப் பெருமை..

நடைமுறை வாழ்வுக்கு ஆங்கிலப் புத்தாண்டு
நயத்தகு பண்பாட்டுக்கு தைப்புத்தாண்டு
இரண்டு போதுமே ! இன்னொன்று எதற்கு?

ஐயா! குழப்பம் இருக்கட்டும் ஒரு புறம்
கொண்டாடுவோம் புத்தாண்டை மகிழ்ந்து..
வாழ்க வளமுடன்! வளர்க தமிழுடன்!

n  சு.பொ.அகத்தியலிங்கம்.

n  மின்னஞ்சல் : agathee2007@gmail.com
n  அலைபேசி : 9442202734

 

வேளாண் சிக்கல்களின்.. சாதிக்சிக்கல்களின்.. : வேர்

Posted by அகத்தீ Labels:



வேளாண் சிக்கல்களின்.. 
சாதிக்சிக்கல்களின்.. : வேர்
 தமிழக வரலாற்றில் வேளாண்குடிகள் எப்படி இருந்தனர் என்கிற ஒரு கறுப்பு வெள்ளைச் சித்திரத்தை இந்நூல் அளிக்கிறது. பொற்காலம் எப்போதும் இருந்ததில்லை என்கிற உறுத்தும் உண்மையை ஸ்கேன் ரிப்போர்ட்டாக இந்த ஆய்வு தந்துள்ளது.முது நிலை ஆய்வுக்காக எழுதப்பட்ட ஆங்கில ஆய்வுகட்டுரையினை தமிழில் இப்போது வெளியிட்டுள்ளனர். எட்டு அத்தியாயங்களாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயத்தில் காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய வேளாண் சமூகம் குறித்து ஒரு பின்புலத்தை வடித்துள்ளார். சோழப்பேரரசாயினும் விஜயநகர சாம்ராஜ்யமாயினும்  பிரம்மதேயம் என்கிற பெயரில் பிராமணர்களுக்கும், தேவதானம் என்கிற பெயரில் கோவில்களுக்கும் அதன் மூலம் பிராமணர்கள், வேளாளர்கள் என மேல்சாதியினருக்கும் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தியைச் சொல்கிறார். நிலத்தில் நேரில் இறங்கி பயிரிடாத பிராமணர்களின் நிலத்தை வாரக்குத்தகையில் இடைப்பட்ட சாதியினர் பயிரிட்டதை எடுத்துக்காட்டுகிறார். வேளாண்மை செழிக்க மன்னர்கள் காலத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தியதையும் மறுபுறம் தேவையான உழைப்பு சக்தியை திரட்டி உறுதிப்படுத்தியதையும்  கூறுகிறார். அதுவே பள்ளர், பறையர் என அடிமைத்தனம் சாதிய வடிவில் கெட்டிப்படுத்தப்பட்டதையும் ; அதன் பொருட்டு அச்சாதியினர் நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டதையும் அழுத்தமாக இந்நூல் பதிவு செய்துள்ளது.இடைப்பட்ட சாதியினர் வைத்திருந்த துண்டு துக்காணி நிலத்தையும் பிடுங்கி பிராமணர்களுக்கு தானம் வழங்கினான் ராஜராஜ சோழன். இவ்வாறு குடிநீக்கம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அத்தியாயத்தையும் இதனைத் தொடர்ந்து வரும் அத்தியாயங்களையும்படிக்கும் போது மூன்று உண்மைகள் புலப்படுகின்றன.
ஒன்று. நிலவுடைமையாளர்கள் யாரும் ஒரு துண்டு நிலங்கூட உழைத்துசம்பாதித்ததில்லை. அவர்கள் நிலம் அனைத்தும் தானமாகப் பெற்றதும் அபகரித்ததும்தான். இரண்டு,தமிழகத்தில் அடிமைத்தனம் இருந்தது. அது பள்ளர்,பறையர் என சாதியாய் கெட்டிப்படுத்தப்பட்டது. மூன்று, வரிக்கொடுமைக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் கலகங்கள் செய்துள்ளனர்.அரசன் அதிகாரத்தை கேள்வி கேட்க சிவன் கோவில் சுவரையே இடித்துள்ளனர்.
காலனிய ஆட்சியின் தொடக்க காலம் -  கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் விவசாயிகள்  ஆதாயம் அடந்தனர். புதிய பகுதிகளுக்கு வேளாண்மை விரிவாக்கம் பெற்றது. பணப்பயிர் செய்வதில் ஈடுபட்ட இடைத்தட்டு சாதியினறில் சிலர் நிலப்பிரபுகள் ஆயினர்.ஆட்சி அதிகாரம் பிரிட்டீஸ் ராணியின் நேரடிக்கட்டுப்பாட்டில் போன பிறகு  தொழிற்புரட்சி காலத்திற்கு பின் இந்திய விவசாயி பேரிழப்புக்கு எப்படியெல்லாம் ஆளானான் என்கிற விபரம் இந்நூலில் நுட்பமாய் பதியப்பட்டுள்ளது.
மிராசுகள், ஜமீந்தார்கள்,கிராமக்குத்தகை என சுரண்டல் நடந்த வரலாற்றை ஆசிரியர் விவரிப்பதோடு;  பிரிட்டீஸ் ஆட்சியின் கொடுமையை  சாதி ஆதிக்கத்தை காப்பாற்ற பிரிட்டீஸ் ஆட்சியும் எப்படியெல்லாம் உதவியது என்பன உட்பட முக்கிய தகவல்களை நூலாசிரியர் விவரித்துள்ளார். விவசாய வரிக்கொடுமை தாளாமல் விவசாயிகள் கலகத்தில் ஈடுபட்டதையும் செய்தியாகத் தருகிறார். 1810-ல் தங்கனிக்கோட்டையில் விவசாயிகள் திரண்டு போராடியுள்ளனர்.ஒருவேளை இதுவே விவசாய சங்க ஸ்தாபன அமைப்பதற்கு முன்னோடியாகி இருக்குமோ?
நமது நாட்டில் ரயில் போக்குவரத்து வசதி தேவை என முதலில் குரல் எழுப்பியது நாமல்ல. மான்செஸ்டர் தொழில் கழகம் எனும் செய்தியைப் படிக்கும் போது; உலகவங்கி ஆலோசனை அடிப்படையில் நாற்கர சாலைகள்  இப்போது அமைப்பது நினைவுக்கு வருகிறது. முதலாளித்துவம் தன் வளர்ச்சிக்காக கட்டமைப்பு வசிதிகளை மேம்படுத்தும் என்பதும் அதற்குரிய சுமை மக்கள் மீதே விழும் எனபதும் நன்கு புலனாகிறது.
1863 பிரிட்டீஸ் ஆட்சி கொணர்ந்த தரிசுநில மீட்பு திட்டத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வன்னியர்கள் சிறுநில உடமையானார்கள் என்பதையும்- புதிய பகுதிகளுக்கு பணப்பயிர் விவசாயத்தை விஸ்தரித்த போது கள்ளர்,உடையார்,கவுண்டர், என பல இடைத்தட்டு சாதிகளில் ஒரு சிறு பகுதியினர் மெல்லமெல்ல சிறு அல்லது பெரு விவசாயி ஆயினர். ஆனால் அடிமைகளாகவே நடத்தப்பட பள்ளர்.பறையர் சாதியினருக்கு நிலம் வாங்கும் உரிமை பிரிட்டீஸ் ஆட்சிகாலத்திலும் வரை வழங்கப்படவில்லை என்பதையும் நூலாசிரியர் நிறுவுகிறார்.
பிடிட்டனில் அடிமைத்தனம் ஒழிக்கப்படபின்னும் இங்கு நீடித்ததை பல பாதிரியார்கள் எதிர்த்தனர். விளைவு இங்கு அடிமைகள் குறித்து ஆய்வு செய்ய ஆணையிட்டது. பிராமண அதிகாரிகளும் இதர ஆதிக்க சக்திகளும் கிராமங்களுக்குச் செல்லாமலே இங்கு அடிமைகள் இல்லை என்று அறிக்கை கொடுத்ததை படிக்கும் போது எப்போதும் நம் அனுபவம் அப்படித்தானோ என எண்ணத் தோன்றுகிறது. 
 “ஆரம்பகால காலனிய ஆட்சியில் மத்திய காலத்திலிருந்து தொடர்ந்து பாரம்பரிய நிலவுடைமையாளர்களான   (நிலம் தானமா பெறப்பட்டதும் அபகரித்ததுமே என்பதை இந்நூலின் பிற பக்கங்களில் சொலியுள்ளார்)  பிராமணர்கள், வேளாளர்கள் செல்வாக்குத்தான் ஓங்கி இருந்தது.அவர்களைக் குறிப்பாக நெல் விளையும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் அதிகம் காணலாம். காலப்போக்கில் இராணுவ சாதியினர்களான கள்ளர், படையாட்சி ஆகியோரில் ஒரு சிலரும்  நாயக்கர்கள் ஆட்சியில் ரெட்டி ,நாயுடு போன்ற வேளாண் சாதியினரும் நிலவுடைமையாளர்கள் ஆயினர். இவற்றோடு 18- ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஹைதை அலிப் போரின் விளைவாக தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில பெரும் நிலப்பிரபுக்கள் மூப்பனார், வாண்டையார் சாதியில் தோன்றினர். அவர்களுடைய நிலவுடைமை ஆங்கில ஆட்சியிலும் தொடர்ந்து வந்தது என்பதை இதற்கு முன்பே கூறியிருக்கிறோம். இச்சாதிய கட்டமைப்பில் நிலமற்ற சூத்திரர்களில் வாரம்தாரர்களாகவும், விவசாயக் கூலிகளாகவும் இருந்தனர். ஆனால் பள்ளர், பறையர் போன்ற அடிமை சாதியினர் நிலமற்றவர்களாக இருப்பதுடன் விவசாயக் கூலிகளாகவும் இருந்தனர்.” இப்படி நிலவுடைமைக்கும் சாதிகளுக்கும் இடையிலான உறவை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.
மன்னர் காலந்தொட்டு இன்றுவரை இடைத்தட்டு சாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் மோதிக்கொள்வதின் பொருளாதார வேர் இந்நூலில் நன்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆம் கடுமையான விவசாய வேலைகளைச் செய்ய தேவையான உழைப்பு சக்தியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள அடிமைத்தனம் சாதிய முறையில் தீண்டாமை வடிவில் இங்கு எல்லாகாலத்திலும் கெட்டிப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ள வரலாற்றை புரிவது தீண்டமையை எதிர்த்துப் போராட மேலும் வலு சேர்க்கும்.
தாதுவருடப் பஞ்சத்தைக் குறித்த புள்ளிவிவரங்கள் தந்ததுடன் நில்லாது நாட்டுப்புறப் பாடலின் சிலவரிகளை மேற்கோள் காட்டி இருப்பது மிகப் பொருத்தம்,  “உண்ணும் கலங்களை விற்பாரும்/உடைமைகளை எல்லாம் விற்பாரும்/பெண்டு பிள்ளைகளை விற்பாரும்..” இப்படி நீளும் பட்டியலில் தாலி,கலப்பை ,தவிடு,உரல்,உலக்கை எல்லாம் வரும். பஞ்சத்தின் கோரம் கண்முன் விரியும்.
தாதுவருடப் பஞ்சம், பிரிட்டீஸாரின் வரி வசூல் கொடுமை, அதனை எதிர்த்த கலகங்கள், விவசாய நெருக்கடியை பயன்படுத்தி கந்துவட்டிக்கொடுமை உருவாகி வளர்ந்தகதை.இப்படி இந்நுல் தரும் செய்திப்பரப்பு அதிகம். தென்மாவட்டங்களில் சிறுநில விவசாயிகள் பெருநிலப்பிரபுக்களிடம் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வாங்கினர் இவ்வாறு ஆசிரியர் சொல்வது உறுத்தினாலும் ஆச்சரியமாக இல்லை,ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரையில் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்த பள்ளர்கள் , சக்கிலியர் கூட தங்கள் சேமிப்பை இவற்றில் ஈடுபடுத்தினர் என்று கூறப்படுகிறது.என்கிறபோது வியப்பாக உள்ளது. நம்புவது சிரமமாக உள்ளது.ஆனால் ஸ்டேட் அட்லஸ் 1905 பக். 33 என ஆதாரம் தருகிறபோது நம்பாமல் இருப்பது எப்படி?

நவீனகல்வியும் எப்படி பிராமணர்கள் மற்றும் மேல்சாதியினருக்கே ஏணியானது என்பதையும்  திராவிட இயக்கம் உருவாக அது விதையாக்கப்பட்ட தகவலும் சிந்தனைக்குரியது. நவீன தொழில் வளர்ச்சியில் நகரம் நோக்கி நகர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அவலமும் பதிவாகியுள்ளது.
இன்று திராவிட இயக்கத்தின் மீதுள்ள கோபத்தில் பிராமணர்கள் எப்போதும் நேர்மையாளர்கள் என்பது போல சில அரைகுறை ஆய்வாளர்கள் விடும் சரடுகளை இந்நூல் முறியடிக்கிறது. நிலங்களை பிரம்மதானம், தேவதானம் என்கிற பெயரில் தானமாக அதாவது இலவசமாகப் பெற்றும் பிறர் உழைப்பை சுரண்டியும் வியர்வை சிந்தாமல் புல்லுருவியாய் வளந்தவர்களே பிராமணர்களும் இதர மேல்சாதியினரும்.
இன்னொரு முக்கிய செய்தியை இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது ; சோழர் காலம், விஜயநகர காலம், பிரிட்டீஸ் காலம் என ஒவ்வொன்றிலும் நீர்பாசனத்தை மேம்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் நம்மை வியக்க வைக்கின்றன. இப்போது நாம் செய்கிற தவறு உறைக்கிறது.
மேலும் விடுதலைக்கு முன்னும் பின்னுமாய் தஞ்சை மாவட்டத்தில் வெடித்தெழுந்த இடதுசாரி விவசாய இயக்கம் குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன எனினும் அது போதுமான அளவில் இல்லை. களப்பிரர் காலம் இருண்டகாலம் , சைவத்தின் தோற்றம் போன்றவை குறித்து நூலாசிரியர் தரும் தகவல்கள் ஏற்க இயலாததாகவே உள்ளன. சமூகப் பொருளாதார நோக்கில் புதிய வெளிச்சக் கீற்றுகளை இந்த ஆய்வு தரினும்- பண்பாட்டு கோணத்திலும் மீள் ஆய்வு செய்திருப்பின் பயன் பன்மடங்கு அதிகரித்திருக்கும். அதே வேளையில் தமிழ் சமூகச் சிக்கல்களை சரியாக உள் வாங்கவும் முகங்கொடுக்கவும் பல காத்திரமான செய்திகளும் தகவல்களும் இந்நூலில் நிறைய விரவிக்கிடக்கிறது. சமூக அக்கறையுள்ளோர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இந்நூலை வாசிப்பது நல்லது. விமர்சிப்பது நல்லது.

தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும்
ஒரு சமூகப் பொருளியல் பார்வை 1801-1947
ஆசிரியர் : பேரா.சி.கே. காளிமுத்து,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,421, அண்ணா சாலை,
தேனாம் பேட்டை,சென்னை - 600 018.
பக்: 248, விலை : ரூ.160/-
- சு.பொ.அகத்தியலிங்கம்.

விதேசி உபதேசம்

Posted by அகத்தீ Labels:



விதேசி உபதேசம்
 


தலைதெறிக்கும் அவசரத்தில்
தடுமாறும் அரசே!
விலைபேசி ஒவ்வொன்றாய்
கூறுகட்டி விற்பது ஏன்?

ஏனிந்த கஞ்சத்தனம்?
ஆமைவேகம் ஆகாது
விஸ்வரூபமெடு!

மொத்தமாய் விலைபேசி
நாட்டையே விற்றுவிடு!
பதவி பறி போகாது
ஆட்சிக்கு இப்போது
ஆபத்து கிடையாது..

கங்காணிகள்  துணைஇருக்கு!
ஊழல் வழக்குகளும்
மத்திய புலனாய்வும்
கைவாளாய் இருக்கும் வரை
கவலையில்லை..துணிந்து நில்!

ஒப்புக்கு கண்டனங்கள்
சுரத்தில்லா போர்முழக்கம்
ஊரெங்கும் நடக்கட்டும்
கண்டுகொள்ளாதே விட்டுவிடு!

என்ரான் அனுபம் மறவாதே
கரசேவகர்கள் ஆட்சியிலும்
விதேசிசேவை வெகுஜோராய்
நடக்குமே..நாடறியும் இதை..

எதற்கும்.. எச்சரிக்கை..
இடதுசாரிகள் மீது
ஒரு கண் வை..
புதைக்கப்பட்ட
பகத்சிங்குகளுக்கு
புத்துயிரூட்டிவிடப்போகிறார்கள்!!!

- சு.பொ.அகத்தியலிங்கம்






சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...

Posted by அகத்தீ Labels:





சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...
(இந்த புத்தர் கதைக்கும் அடுத்த கட்டுரைக்கும் தொடர்பிருக்கிறது!)
கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும்போது கையில் ஒரு துணியுடன் வந்தார். அவர்கள் முன் பேச அமர்ந்தவர் பேச்சைத் துவங்காமல் கையில் கொண்டு வந்திருந்த அந்த்த் துணியில் முடிச்சுகளைப் போட ஆரம்பித்தார். மற்ற சீடர்கள் அவர் பேசக் காத்திருக்கையில் சாரிபுத்தன் என்கிற சீடன் மட்டும் அவர் செய்கையும் அவர் உரையின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்திருந்தான். அவன் உன்னிப்பாக அவர் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.


விதவிதமாக சில முடிச்சுகளைப் போட்டு விட்டு தலை நிமிர்ந்த புத்தர் கேட்டார்.   "இந்த முடிச்சுகளை விரைவில் அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?"


மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க உடனடியாக சாரிபுத்தன் சொன்னான். "குருவே! முடிச்சுகள் எப்படி போடப்பட்டுள்ளன என்பதை அறியாத வரை அவற்றை விரைவில் அவிழ்க்க வழியில்லை. முடிச்சு போடப்பட்ட முறையை அறிந்திருந்தால் மட்டுமே அதை விரைவில் அவிழ்க்க முடியும்."


புத்தர் சொன்னார்: சரியாகச் சொன்னாய் சாரிபுத்தா. நினைவோடு போடப்படும் முடிச்சுகளை அவிழ்ப்பது எளிது. நினைவின்றி போடும் முடிச்சுகள் சிக்கலானவை. அவை சில சமயங்களில் அவிழ்க்க முடியாமலும் போகலாம். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். விழிப்புணர்வு இல்லாமல் நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்களில் இருந்துதான் மீள வழி தெரியாமல் திண்டாடுகிறோம்.


துணியில் போட்ட முடிச்சுகள் போட்ட விதத்திலேயே பிரிக்க சுலபமானவை. கவனத்துடன் போட்டிருந்தால் பொறுமையுடன் பிரிக்கலாம். இல்லாவிட்டால் பிரிக்க நாம் செய்யும் உத்திகளும் கூடுதல் முடிச்சுகளாகி விடும். கடைசியில் துணியை கிழிக்காமல் முடிச்சுகளை அவிழ்க்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.


வாழ்க்கையிலும் அப்படித்தான். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்கிற விழிப்புணர்வோடு செய்தால் தவறுகள் அதிகம் நிகழ வாய்ப்பே இல்லை. அப்படித் தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை விரைவிலேயே சரிப்படுத்திக் கொள்ள முடிபவையாகவே இருக்கும். ஆனால் விழிப்புணர்வில்லாமால் நம் வாழ்வில் செய்து கொள்ளும் சிக்கல்கள் ஆபத்தானவை. அந்தந்த நேர உந்துதல்களில் நாமாகவே ஏற்படுத்திக் கொள்பவை. உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னிலை இழந்து என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் செய்து கொள்பவை. இந்த சிக்கல்களில் இருந்து மீளச் செய்யும் முயற்சிகள் பல சமயங்களில் சிக்கல்களை அதிகப்படுத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். பல சமயங்களில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாமல் சிக்கல்களில் இருந்து விடுபட முடியாமல் அமுக்கிவிடும்.


துணியின் முடிச்சுகள் அவிழ்க்க முடிந்த பின் துணி பழைய நிலைமைக்கே வரலாம். வாழ்க்கையின் சிக்கல்கள் அப்படி அல்ல. பல சமயங்களில் சிக்கல்கள் தீரும் போது வாழ்க்கை முன்பு போல திரும்பி மாற வாய்ப்பு இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் அபாயம் கூட உண்டு. மேலும் சிக்கல்கள் அனைத்தும் நாமே ஏர்படுத்திக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் பெரும்பாலான சிக்கல்களில் நம் பங்கு கண்டிப்பாக ஓரளவாவது இருக்கக் கூடும், சில சமயங்களில் மற்றவர்களாலும் சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு விடலாம்.


நம் செயல்களால் ஏற்பட்ட முடிச்சாயினும் சரி, மற்றவர்கள் செயல்களால் ஏற்பட்ட முடிச்சாயினும் சரி, விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்தினால், வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும், வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே, அவ்வப்போதே அவற்றைத் தவிர்க்கவோ, சரி செய்து கொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவை பூதாகரமாகும் வரை கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டி வரும். சில சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போகலாம், தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை  நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம்...


எனவே விழிப்புணர்வோடு இருப்போம். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்போம். என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருப்போம். 90 விழுக்காடு சிக்கல்களை நாம் விழிப்புணர்வோடு இருந்தாதால் கண்டிப்பாகத் தவிர்த்து விட முடியும்.


(சமூகவலைத்தளமான முகநூலில் பகிரப்பட்ட ஒரு கதை)

ஒத்திகைப் பார்த்து அரங்கேற்ற நாடகமா வாழ்க்கை?

Posted by அகத்தீ Labels:

 https://mail-attachment.googleusercontent.com/attachment/?ui=2&ik=a1c27c2814&view=att&th=13b838c14f692270&attid=0.3&disp=inline&realattid=f_haj8fod12&safe=1&zw&saduie=AG9B_P8Jwgzgm1gYsL_arrEyuBOH&sadet=1355123033016&sads=YSweoaE1i5fYOqN0gjZLSSfi3zw&sadssc=1


ஒத்திகைப் பார்த்து அரங்கேற்ற 
நாடகமா வாழ்க்கை?

சு.பொ. அகத்தியலிங்கம்


[திருமணம் குறித்து ஆறுகட்டுரைகளுக்குத் திட்டமிட்டேன் இது ஐந்தாவது  நிறைவுக் கட்டுரை.12-08-2012 , 30-09-2012 , 14-10--2012,  4-11-2012 மற்றும் 18-11-2012 தேதிகளில் முந்தைய கட்டுரைகளின் பதிவைக் காண்க.]
இந்த அலசல் தொடர் எழுதத் துவங்கிய பிறகு நிறைய மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு அலைபேசி அழைப்பு. நண்பர் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மனைவி அலைபேசியை வாங்கிப் பேசினார். ” ரசிக்கத் தெரியாதவருடனும் சிரிக்கத் தெரியாதவருடனும் எப்படி வாழ்வது?”நான் சொன்னேன்,  “ ரொம்ப கஷ்டம்தான்.”

ஆம். அவர் கேள்வி நியாயமானது. கணவனோ மனைவியோ எதையும் ரசித்து அனுபவிக்காமல் - சுவைத்து இன்புறாமல் - கேலி, வேடிக்கை , விளையாட்டு இவற்றை சிரித்த முகத்தோடு எதிர்கொள்ளாமல் - எப்போதும் இறுகிய முகத்தோடும் விறைப்பாகவும் இருந்தால் தாம்பத்தியம் சங்கீதமாக இருக்காது. அபசுரமாகவே ஒலிக்கும். பாராட்டுவதால் நமக்கு எந்த நட்டமும் இல்லை. ஆனால் பிணைப்பு வலுப்பெறும். ரசிக்கப் பழகுங்கள் - சிரிக்கப் பழகுங்கள்  - பாராட்டப் பழகுங்கள்  வாழ்த்தப் பழகுங்கள்;  வாழ்வில் சுவைகூடிக்கொண்டே இருக்கும்.

“இருபது வருடம்
குடும்பம் நடத்தி முடிந்த பின்
ஒரு நாள் சண்டையின் போது
பரஸ்பரம்
பரிமாறிக் கொண்ட வார்த்தைகள்:
ஏமாற்றித் தலையில் கட்டிவிட்டனர்.”
-எப்போதோ படித்த கவிதை வரிகள் இவை. நிறையப்பேர் வாழ்க்கையில் இது உறுத்தும் நிஜமல்லவா!

 “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பது பழமொழி. இது என்ன கணக்கு என்பதறியோம். ஆனால் திருமணமான கொஞ்ச நாளிலேயே சின்னச் சின்னக் கசப்புகள் தலைதூக்கத் துவங்கி விடுகின்றன. இதற்கு சரியான முறையில் முகங்கொடுக்கத் தவறினால் கசப்பு காயமாகிறது. எல்லாக் காயங்களையும் காலம் ஆற்றிவிடுவதில்லை. சில காயங்கள் தானே காய்ந்து உதிர்ந்துவிடும். சில காயங்கள் நாள்பட்ட ரணமாகி சீழ்பிடித்துவிடும். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை கூட வரலாம்.  மணமுறிவுக்கு இட்டுச்சென்றுவிடலாம். அல்லது வாழ்க்கை சுமையாகிவிடலாம். ஈரக்கம்பளியைப் போர்த்திக் கொண்டு மழையில் நனைபவர் கதியாய் வாழ்க்கை ஆகிப்போவதை யார்தாம் விரும்புவார்? வீம்பும் வறட்டுப்பிடிவாதமும் அப்படித்தான் ஆக்கிவிடும். எனவே சிலவற்றை மனம் திறந்து பேசுவது நல்லது.

நேற்று சண்டை, இன்று சரசம்
நேற்று இரவு குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியை அடிக்க, மனைவி திருப்பி அடிக்க அந்த குடிசைப் பகுதியே ரணகளமாக இருந்தது. இன்று காலையில் குத்துக்கல்லில் உட்கார்ந்து இருவரும் கொஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அது எப்படி சாத்தியமாயிற்று ? அவர்களுக்குள் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது. கோபதாபங்களை அவ்வப்போது செட்டில் செய்து விடுவார்கள். சிக்கல் அதிகமானால் வெட்டிக் கொண்டு பிரிந்து விடுவார்கள். அவரவருக்கான இன்னொருவாழ்வை அமைத்துக்கொள்வார்கள். ஏனெனில் யாரும் யாரையும் சார்ந்து இல்லை. இருவரும் உழைப்பவர்கள். உண்பவர்கள். சேமிப்பும் இல்லை, சொத்தும் இல்லை, நாளையைப் பற்றிய பயமும் இல்லை. அன்றாடம் செத்துப்பிழைக்கிற வாழ்வுதான், ஆயினும் அதில் அவர்கள்  சுதந்திரமாய் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் படுபாதாளத்தில் தொடர்ந்து இருப்பது ஆரோக்கியமல்ல. அதுகுறித்தும் பேசலாம். ஆனால் அது வேறு தளம். 

சமூகத்தின் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு அமையும் பணம் சார்ந்த கட்டற்ற வாழ்க்கையும், எதுவுமற்ற அடித்தட்டு மக்களின் வறுமை சார்ந்த சுதந்திர வாழ்க்கையும் வேறுவேறானவை. ஆயினும் அவர்கள் இருசாராரும் பிடிக்காததை சுமந்துகொண்டு அழுவதில்லை. ஆனால் இடைப்பட்ட தட்டில் வாழ்வோர்தான் போலிப்பெருமை, சாதி வீம்பு, சம்பிரதாயத் தளை, சடங்குகளென்னும் விலங்கு... இவை போன்றவற்றில் சிறைப்படுத்திக் கொண்டு தாங்களும் அழுகிறார்கள். மற்றவர்களையும் நோகவைக்கிறார்கள். 

இதை உடைக்க முயல்கிறபோது பெண் தரப்பிலிருந்தே பொதுவாக முட்டுக்கட்டை போடப்படுகிறது. சில இடங்களில் ஆண்களும் அப்படியே. அல்லது   “ எனக்கு ஒண்ணும் இல்லை..ஆனால் மனைவி ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. வீட்ல ஒரே சண்டை,” -என பழியைப் பெண் தலையில் தூக்கிப்போட்டுத் தப்பிவிடுகிறார்கள். உரசலே இல்லாமல் சீர்திருத்தங்களை ஒருபோதும் அமல்படுத்த முடியாது. சில சீர்திருத்தங்களைப் பற்றியொழுக குடும்ப ஜனநாயகத்தில் சற்று அத்துமீறல்கள் செய்தால் தப்பில்லை.

சுயநலம் சார்ந்த ஆதிக்கம் தவறு. அதேசமயம் கோட்பாட்டில் பற்றி நிற்கும்போது சில கசப்புகள் தவிர்க்கமுடியாதுதான். மூடப் பழக்கவழக்கங்களை உடைத்தெறிய வலியை, சமூக எதிர்ப்பை, சொந்தபந்தங்களின் விமர்சனங்களை நீங்கள் தாங்கி நில்லுங்கள். இன்று தூற்றுவோரும் நாளை போற்றுவார்கள். அறிவியலும் சமத்துவமும் அன்பும் கலந்த புதிய வாழ்க்கைப் பண்பாட்டை படைத்து உங்கள் சந்ததி நாளை முன்னேறுவார்கள். பிரசவவலி போன்றதுதான் சாதி, சடங்கு, சம்பிரதாயங்களை மூடப்பழக்கங்களை மீறுவதால் ஏற்படும் வலி. இதை உணர்தலும், உணர்த்துதலும் வேண்டும்.

நீளும் சங்கிலி

குடும்பம் என்பது கணவன் மனைவிமட்டுமல்ல. கணவனின் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் அதுபோல் மனைவிக்கும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் என உறவுச் சங்கிலி நீளும். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்துவது சாத்தியம் இல்லை. ஆனால் இயன்றவரை அனுசரித்துப் போகப் பழக வேண்டும். சிலரிடம் பேசப்பேச புரிதல் மேம்படும். சிலரிடம் மவுனம் காப்பதே இருவருக்கும் நல்லதாக இருக்கும். முடிந்தவரை யாரையும் வெட்டிவிடாமல் நிறை குறைகளோடு அங்கீகரித்து வாழ்வதே உத்தமம். அவரவர் வாழ்க்கைக்கு ஒரு நியாயம் இருக்கும். அதைப் புரிய முயன்றாலே பாதி சிக்கல் அவிழும். யார் மீது உனக்குக் கோபமோ அவராக ஒரு நிமிடம் உன்னைக் கற்பனை செய்து அவர் தரப்பு நியாயங்களை அசைபோட்டால் பிரச்சனை தீரலாம், அல்லது காரம் குறையலாம். கணவன் மனைவி இடையே ஏற்படும் மனஸ்தாபங்களையும் இப்படி பரிசீலித்தால் விடை தானே பிறக்கும். மூன்றாம் நபர் சமரசத்தைவிட இது மேலானது. 

கோபம் பலவகைகளில் வாழ்க்கையை நரகமாக்கும். ஆயினும்   ‘கோபப்படாமலே வாழ்க’ என்பது வெறும் திண்ணைத்தூங்கி வேதாந்தமாகத்தான் இருக்கும். நடைமுறையில் குடும்பத்தில் சிலவற்றை சகித்துக்கொள்வதும் கூட ஆபத்துதான். வாழ்க்கையில் எங்கே கோபப் படுகிறோம் எதற்குக் கோபப்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒரு குட்டிக்கதை இங்கு  நம் கண்ணைத் திறக்கும் . ஒரு நல்ல பாம்பிடம்  “இனி யாரையும் கொத்தாதே ”என ஒரு ஞானி புத்திமதி சொன்னார். பாம்பும் திருந்தியது. கொத்துவதை நிறுத்தி சாந்தசொரூபி ஆகிவிட்டது. சில நாள் பொறுத்து அந்தப் பாம்பு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பதைப் பார்த்து ஏன் இப்படி என ஞானி விசாரித்தார்.  “அமைதியாக இருப்பதால் எல்லோரும் அடிக்கிறார்கள், ”என்றது பாம்பு.  “உன்னிடம் கொத்தாதே என்றுதானே சொன்னேன், சீறாதே என்று சொல்லவில்லையே, ”என்றார் ஞானி. பாம்புக்குப் புரிந்தது. பிழைத்தது.

படுக்கையறைக்குப் பள்ளியறை என்ற பெயரும் உண்டு தமிழில். அது மிகப் பொருத்தமானது. அது வாழ்க்கையின் சுருதியை சரியாக மீட்டுவதற்குக் கற்றுத்தரும் பள்ளியல்லவா! மன்மதக்கலை சொல்லித் தெரிவதில்லை என்பது தப்பான பார்வை. பாலியல் குறித்த அரைகுறை ஞானம் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடும். வாழ்க்கைப் பாடத்தை அன்றாடம் சொல்லித் தரும் பள்ளியறையை சரியாக பயன்படுத்த மருத்துவ மனநல அறிவியல் ரீதியான புரிதல் தேவை. அரைகுறை செக்ஸ் வைத்திய வியாபாரிகளிடம் யோசனை கேட்டு ஏமாந்துவிடக்கூடாது. நேர்மையான மருத்துவரிடம் யோசனை பெறுவது அவசியம். படுக்கையறை திருப்தியும் மகிழ்ச்சியும் வாழ்க்கை சமுத்திரத்தில் நீந்தவும் முத்துக்குளிக்கவும் நம்பிக்கைதரும். காதல் என்பது வாழ்க்கையின் கடைசித் துளிவரை உயிர்த்துடிப்பு தரும் அமுதமாகும். ஆம் முதுமையிலும் காதல் வற்றாது. கடைசிவரை கூட வரும். ஆனால்...

சிக்கல்களின் வேர்

இந்திய சமூகத்தில் பெண்ணுக்கோ பையனுக்கோ திருமணம் முடிந்தாலே பெரியவர்களுக்கு இனி என்ன வேண்டியிருக்கிறது என்கிற தப்பான கண்ணோட்டம் உள்ளது. பல குடும்பச் சிக்கல்களின் வேராக இது உள்ளது. இது போக்கப்பட வேண்டும். சாகும் வரை அவரவருக்கான வாழ்க்கை இருக்கிறது. காதல் உண்டு. ஆசாபாசங்கள் உண்டு. விருப்பு வெறுப்பு உண்டு. முதியோரின் வாழ்வுரிமையை வெறுமே அங்கீகரிப்பது மட்டுமல்ல, உரிய கவுரவம் அளிப்பதும் அவசியம். வீட்டில் இட நெருக்கடிகூட பலர் மன அழுத்தத்தை அதிகரிக்குமே!  கணவனின் பெற்றோரை மனைவியும், மனைவியின் பெற்றோரை கணவனும் மதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

பெரியவர்களின் ஆலோசனையும் உதவியும் குடும்பப் படகு மூழ்கிவிடாமல் காக்கும். அதே சமயம் பெற்றோர்களும் தாங்கள் சொல்வதும் செய்வதும் மட்டுமே சரி என்றும், “ நாங்கள் பார்க்காததா, எங்களுக்கு இல்லாத அனுபவமா” என்றும் முறுக்கி நிற்காமல்; பிள்ளைகளின் முயற்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடாமல் இருக்கப் பழகுங்கள். அவர்களாகக் கேட்கிறபோது மட்டும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அவர்கள் முடிவெடுக்கட்டும். வாழ்க்கை அவர்களுக்கும் உங்களைப் போலவே கற்றுக்கொடுக்கும் அல்லவா?

இளைஞர்கள் முதியோருக்கு ஊன்றுகோலாக மாற வேண்டும்; முதியவர்களின் சொற்கள் இளைஞர்களின் ஊக்க டானிக்காக வேண்டும். பெற்றோர் சொத்தில் மகனுக்கும் மகளுக்கும் சமபங்குண்டு என்பது எவ்வளவு நியாயமோ; அதே நியாயம் மகனைப் போன்றே மகளும் தங்கள் சம்பாத்தியத்தில் சாத்தியமான ஒரு பங்கை தன் பெற்றோருக்கு வழங்கலாம் என்பதும் நியாயம். மனைவியை இப்படி வழங்கச் சொல்வது அதீதம் என சிலர் கருதக்கூடும். கசப்பாக இருக்கும். ஆயினும் அதை நோக்கி பயணித்தாக வேண்டும். அப்போதுதான் சமத்துவம் என்பதன் பொருள் முழுமையாகும். 

அடுத்து தங்கமும் பட்டும் பிரச்சனையாகாத வீடுண்டோ? தங்க நகை சேமிப்பே. ஆத்திர அவசரத்துக்கு அடகுவைக்கப் பயன்படும். யாரிடமும் கையேந்தி நிற்கவேண்டாம். இந்தியப் பொருளாதாரத்தில் இது ஒருவகை பாதுகாப்பு அரணே. மண்ணிலும் பொன்னிலும் முதலீடு செய்து சேமிப்பது சரியே. ஆகவே வீட்டில் நகை வாங்க நினைப்பது தப்பல்ல. ஆயின் வட்டிக்கு கடன் வாங்கி அட்டிகை வாங்கினேன் அட்டிகையை விற்றும் வட்டியே அடைய வில்லை என்பது நமது அனுபவம் அல்லவா?

அட்சயதிரிதியைக்கு நகை வாங்கினால் அதிர்ஷ்டம் பொங்குமாம். சமீபத்தில் தங்க வியாபாரிகள் உருவாக்கிய மூடத்தனம். உண்மையில் “ நீங்கள் அடகு வைத்த நகையை மீட்டு நல்ல விலைக்கு விற்க ... ஏஜன்சியை அணுகவும் ”என்பது போன்ற விளம்பரங்கள் நம் வாழ்க்கை யதார்த்தத்தைக் காட்டவில்லையா?

அந்தஸ்துக்காகவோ - அடுத்தவர் வாங்கிவிட்டார் ஆகவே நாமும் வாங்க வேண்டும் என வறட்டு கவுரவத்துக்காகவோ நகை,பட்டுப்புடவைக்காக வீட்டையே ரணகளமாக்குவது தேவையா? பட்டோ, நகையோ, பாத்திரங்களோ, வீட்டு உபயோகப் பொருட்களோ எதுவும் தேவை - தேவையில்லை என்பதை அவரவர் குடும்ப பட்ஜெட்டிலிருந்து முடிவெடுக்க வேண்டுமே தவிர யாரையும் ஒப்பிட்டுப் பார்த்தல்ல.

 சேமிக்கப்பழகு

கணவன் மனைவி இருவரும் வரவு செலவை எழுதுகிற பழ்க்கம் இருப்பின், அதைக் கூட்டாகப் பரிசீலிக்க இருவருக்கும் பொறுமையும் பக்குவமும் இருப்பின், தேவையற்ற செலவுகள் எது எது என கண்டறிந்து இருவரும் தவிர்க்க முடியுமாயின் ஆசைப்பட்டதை வாங்கலாம். அப்போதும் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு, பைனான்ஸ் என ஏமாறாமல் சேமிக்கப் பழக வேண்டும். என் நண்பர் இரண்டு மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது கையில் காசு சேரும் போதோ ஒரு கிராம், அரை கிராம் என தங்க, வெள்ளிக் காசுகள் சேர்ப்பார். ஒரு போதும் அவற்றை நகையாக்கியதில்லை. அது போல் அன்றைக்கு மற்றவர்கள் யோசித்துப்பார்க்கத் தவறிய காடுகரைகளில் மிகமிக சொற்ப விலைக்கு சில இடங்களை வாங்கிப்போட்டார். அவர் மனைவி ஒற்றை செயின் அதுவும் கவரிங்கில் வாழ்ந்து பழகிவிட்டார். அவரது தங்கக் காசு சேமிப்பும் இந்த மனைகளும் பிள்ளைகள் மேல்படிப்புச் செலவுக்கும் திருமணத்துக்கும் பின்னர் கை கொடுத்தது. பலர் வறட்டுத்தனமாக இருந்து இன்று கடனை சுமக்கிறார்கள்.

சிக்கனம், சேமிப்பு உபதேசம் எல்லோருக்கும் பொருந்துமா? வருவாய் எப்போதாவது முட்டிமோதி சொற்பம் ஏறும் . ஆனால் செலவு மாதாமாதம் தாவித்தாவி உயரும்.  இன்றைய சூழலில் சிக்கனம் பற்றிய உபதேசம் வெறும் பேச்சாகிவிடுமே. உண்மைதான். எனினும் இதற்குள் வாழப்பழகியாக வேண்டுமோ!

விதியும் மீறலும்

சாலைவிதிகளை கறாராகப் பின்பற்றி வண்டி ஓட்டியாக வேண்டும். மீறினால் உயிருக்கு ஆபத்து. அதே சமயம் சாலையில் நீ விதிப்படி வண்டி ஓட்டிச் செல்ல எதிரே வருகிறவன் விதியை மீறி வருகிற போது உன்னைக் காப்பாற்றிக் கொள்ள சில விதிமீறல்கள் தவிர்க்கமுடியாது. குடும்பத்துக்குள்ளும் அப்படித்தான். இதைப்புரிந்து கொள்ளவேண்டும். வறட்டு சூத்திரத்திற்குள் பயணிப்பது சாலையிலும் சாத்தியம் இல்லை. வாழ்க்கையிலும் சாத்தியம் இல்லை.

பொதுவாக நெறிமுறைகளில் நின்றொழுக வேண்டும். நெருக்கடி கழுத்தை நெரிக்கும்போது சவாலை எதிர்கொள்ளுகிற சாதுரியமும் வேண்டும். பொய்யை மூலதனமாக்கி வாழநினைத்தால் முதலில் வெற்றி கிட்டலாம். ஆனால் பெரும் சிக்கலில் சிக்கி அழிவது திண்ணம். அதே நேரம் சின்னச் சின்ன பொய்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும். பிறரை வஞ்சிக்காத அந்த பொய்களையும் ரசிக்கப்பழகுங்கள்.

சொந்தம் பந்தம் ஊர் உறவு இவற்றை ஒதுக்கி வாழ்வது இயலாது. அப்படி வாழவும் கூடாது. பொதுநலன் சார்ந்த விஷயங்களில் ஊரோடு ஒத்துழைப்பது அவசியம். சாதி,சடங்கு,மூடத்தனம் இவற்றை மீறத்தான் வேண்டும். ஆம், நிர்வாணதேசத்தில் கோவணம் கட்டுவது பைத்தியக்காரத்தனம் என ஊரே உறவே எதிர்ப்பினும் கோவணமாவது கட்டுவதே அறிவுடமை. மற்றவர்களையும் கட்டச் செய்ய முயல்வதே பெருமை. அதில் கோபதாபம் எதிர்கொள்ள நேரினும் அஞ்சாமல் முன்செல்ல வேண்டும்.

(அடுத்து வரும் புத்தர் பற்றிய குட்டிக்கதையைப் படித்து மனதில் கொள்ளலாம்)

 “மனித உள்ளம் தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம்
இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு
தனது நாட்டுச் சுதந்திரத்தால்
பிறர் நாட்டைத் துன்புறுத்தல்
ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர்தம் வீடு நகர் காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்
மாம்பிஞ்சி உள்ளத்தின் பயனும் கண்டோம்
தூய உள்ளம் அன்பு உள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம்
தனிலன்றோ இன்பம் ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!”
-என்பார் பாவேந்தர் பாரதிதாசன். மனித உள்ளத்தை கடுகு உள்ளம், துவரை உள்ளம், தொன்னை உள்ளம், மாம்பிஞ்சி உள்ளம், தாயுள்ளம் என வகைப்படுத்தியுள்ளார்.

கடுகு உள்ளத்தவராய் தன்னலம் மட்டுமே கருதி வாழ்தல் தீது. நாம் நிம்மதியாய் வாழ குடிநீர், சாலை, பொது சுகாதாரம், மின்சாரம், கல்வி, மருத்துவம் என எல்லாம் வேண்டுமே! அப்படியானல் அவற்றைப் பெற சமூக மனிதனாவது இன்றியமையாது அல்லவா? எனக்கு அரசியல் பிடிக்காது என ஒதுங்குவதும் ஒருவகை அரசியலே. அது கொடுமைகளுக்குத் துணை போகிற அரசியல். தனியார்மயமும், தாராளமயமும், உலகமயமும் ஒவ்வொருவர் வீட்டு அடுக்களைக்குள்ளும் படுக்கறைக்குள்ளும், சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு : நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எதைப் பருக வேண்டும், எதைப் படிக்கவேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை வெறுக்க வேண்டும், எதை விரும்பவேண்டும் எனக்கட்டளை இடுகிறதே! இதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியமா?

என்ன செய்வது? ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தின் அங்கமே. சமூகத்துக்கு சளி பிடித்தால் தனிமனிதன் மட்டும் தப்ப முடியுமா? முடியாது. சளிக்கு சமூகம் மருந்து சாப்பிட தனிமனிதன் மருந்து சாப்பிட்டாக வேண்டும். கணவனும் மனைவியும் எதோ ஒருவகையில் பொதுவாழ்வோடு தொடர்பு கொள்வது இயல்பானது. இன்றியமையாதது. இதன் பொருள் எல்லோரும் தீவிர அரசியல் ஊழியராக வேண்டும் என்பதா? இல்லை. ஆர்வம் உள்ளவர் அப்படியாகலாம். ஏனையோர் ஏதோ ஒருவகையில் தன்னைச் சுற்றி நிகழ்கிறவற்றை யொட்டி வினையோ, எதிர்வினையோ ஆற்றியாக வேண்டும். சமூக சிக்கலும் யதார்த்தமும் புரிகிறபோது குடும்பச் சிக்கல்கள் பிரச்சனைகள் இவற்றின் காரண காரியம் புலப்படும். வாழ்க்கை மேலும் வசப்படும். பொது வாழ்வு சுமையல்ல. தேவை. கைவிலங்கல்ல கைவிளக்கு.

புற்றா சிப்பியா?

முன்கூட்டியே ஒத்திகை பார்த்து அரங்கேற்றுகிற நாடகமல்ல வாழ்க்கை. திடீர் திருப்பங்களும் எதிர்பார விபத்துகளும் இங்கே அதிகம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதும், எதிர்பாரா இன்ப அதிர்ச்சிகளும் தொடரும். உங்கள் கணக்குகளையும் சூத்திரங்களையும் மீறியதே உங்கள் வாழ்க்கை. 

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என அஞ்சிக் கொண்டே வாழ்வது கிட்டத்தட்ட செத்துப் போய்விட்டதற்குச் சமம். அதே சமயத்தில் அந்த சிப்பியில் முத்து கிடைக்கலாம் என வெறும் கனவில் முழம் போடவும் வேண்டாம். புற்று குறித்த விழிப்புணர்வும் - முத்து குறித்த தேடலும்தான் வாழ்க்கை. வாழ்ந்து காட்டுங்கள். 

இங்கே சொன்னவை எல்லாமும் உங்களுக்குப் பொருந்தலாம் அல்லது தேவைப்படாமல் போகலாம். கொள்ளுவன கொள்க! தள்ளுவன தள்ளுக! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலாப் பார்வையால் விழுங்கு மக்களை! வெள்ள அன்பால் இன்பம் சேர்! வாழ்க்கை வாழ்வதற்கே!

வண்ணக்கதிர் - தீக்கதிர் [ 9-12-2012]



குடும்பத்தில் வேண்டாமா கூட்டாட்சி?

Posted by அகத்தீ Labels:





குடும்பத்தில் வேண்டாமா கூட்டாட்சி?

சு.பொ. அகத்தியலிங்கம்

[திருமணம் குறித்து ஆறுகட்டுரைகளுக்குத் திட்டமிட்டு எழுதிவருகிறேன்.இது ஐந்தாவது கட்டுரை.12-08-2012 , 30-09-2012 , 14-10--2012, மற்றும் 4-11-2012தேதிகளில் முந்தைய கட்டுரைகளின் பதிவைக் காண்க.]

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் குடும்ப ஜனநாயகம் பற்றி முதல்முறையாக ஒரு இலக்கிய ஏட்டில் எழுதினேன். அப்போது ஒரு தோழர்  சொன்னார், " இப்பவே எல்லார் வீட்டிலும் குடும்ப ஜனநாயகம் இருக்கே!" உடன் இடைமறித்து, "  எப்படி?" என நான் விளக்கம் கேட்டேன்.  "பெரும்பான்மையினர் முடிவுக்கு சிறுபான்மையோர்கட்டுப்படுவதுதானே ஜனாயகம்?  புகுந்த வீட்டில் கணவர், மாமனார்,மாமியார்,நாத்தனார் என பெரும்பான் மையோர் எடுக்கும் முடிவுக்குவீட்டிற்கு வந்த மருமகள் கட்டுப்படுகிறாள்." அவர் இதை வேடிக்கையாகச்சொன்னார். ஆயினும் இது எழுதப்படாத விதியாக நடைமுறையில் இருந்துகொண்டுதான்இருக்கிறது! ஜனநாயகம் என்பது பெரும்பான்மை - சிறுபான்மை என வெறும்எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல.  மற்றவர்கள் உணர்வுக்குமதிப்பளிப்பதுமாகும். இந்தப் புரிதல் இன்றி இங்கு இது பற்றி பேசுதல்இயலாது.

ஆம், புகுந்த வீடு என்பது பெண்ணுக்கு முற்றிலும் புதிய சூழல்,
அந்தக் குடும்பம் மொத்தமாய் ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது தவறு எனதன் மனசாட்சிக்குத் தெரிந்தாலோ - அல்லது தனக்கு அதில் விருப்பம் இல்லைஎன்றாலோ - பெண்ணால் தன்னந்தனியாய் அதனை சொல்ல முடியுமா? சொன்னால் ஏற்கும்மனோநிலை உள்ளதா?

என்றைக்கு ஒரு பெண் தன் உணர்வுகளை அச்சமின்றி தனது புகுந்த வீட்டில்
வெளிப்படுத்த முடிகிறதோ  - மற்றவர்கள் அதை ஏற்கலாம் , எதிர்க்கலாம்,
எனினும் அவர்கள் அவள் அபிப்பிராயத்துக்கு செவிகொடுக்கிறார்களோ - அப்போதுஅந்தக் குடும்பத்தில் ஜனநாயகச் சூழல் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில்பதிவு செய்யலாம்.

ஒரு பெண் கருவாடு இல்லாமல் ஒருநாள்கூட சாப்பிடமாட்டாள். அப்படி
பழகிவிட்டாள். வீட்டில் பெரும்பாலும் நைட்டியோடும், வெளியே போகும்போது ஜீன்ஸ்-சர்ட் எனச் சுதந்திரமாகத் திரிந்தவள் அவள். ஆனால் புகுந்த வீட்டில் அதற்குத் தடை. அவள் அந்த புதியச் சூழலில் எவ்வளவு மனம்
நொந்திருப்பாள். யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண்ணின் உணவுப் பழக்கம், உடை விருப்பம், நம்பிக்கைகள், கலாச்சார
ஆர்வ ஈடுபாடுகள், என அனைத்திலும் கணவன் வீட்டாருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவேண்டுமா? இன்றைக்கு அப்படித்தான் எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது பெண்ணின் சுயம் அழிந்து ஆணில் கரைவது குடும்பப் பாங்கான பெண் என்ற புனிதக்கோட்பாடு ஒன்று இங்கு எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. இதனைஉடைத்தெறியாமல் குடும்பஜனநாயகம் துளிர்க்காது.

இதைப் பற்றிப்பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் கேட்டார்,  "அப்படியானால் எண்ணையும்தண்ணீரும் போல் ஒட்டாமல் தனித்தனியாக இருப்பதுதான் வாழ்க்கையா? அதுதான்குடும்ப ஜனநாயகமா?"

  இல்லை. இல்லை. இப்படித் தப்புத் தப்பாகப் புரிந்து கொள்ளக்கூடாது. கணவனோமனைவியோ யாரும் யார் மீதும் எதையும் திணிக்கக் கூடாது. மாறாக தொடர்உரையாடல் மூலமும் (எல்லையற்ற விதண்டாவாதம் அல்ல) அனுபவம் மூலமும்;காலகதியில் புரிந்து கொள்ளவும் விட்டுக்கொடுக்கவும் இருவரும் இயல்பாகதயாராக வேண்டும். அப்போதும் இருவரின் தனித்துவமும் சுயமும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

மணம்முடிந்த பின்  மனைவி கணவனின் வீட்டிற்குச் சென்றுவிடுவது
இயல்பானதாகவும் இருக்க, அதற்கு மாறாக கணவன் மனைவியின் வீட்டில் தங்கிவிட்டால் ; வீட்டோடு மருமகன் என்றிருப்பது இழிவானதாக சமூக பொதுபுத்தியில்உறைந்து போயிருக்கிறது. இது இங்கு சமத்துவமும் ஜனாயகமும் இல்லை என்பதன்கூறுதானே !

மணமக்கள் தனிக் குடித்தனம் தொடங்குவதா? கூட்டுக் குடித்தனமா?
இதை மணமக்களே முடிவு செய்திடவேண்டும். கூட்டுக் குடித்தனம் எனிலும் அதுஅவன் வீட்டோடா அல்லது அவள் வீட்டோடா என்பதை அவரவர் தேவைக்கும்சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்கிற உரிமையும் வாய்ப்பும் இயல்பானஏற்பும் சமுதாயத்தில் நிலவ வேண்டும். இப்போது அந்த நிலைமை இல்லையே!

பிறந்த வீடு சரி, புகுந்த வீடு என்பது சரியா? வலுக்கட்டாயமாக அவள்புகுந்தாளா இல்லையே விரும்பி இணைக்கப் பட்டவளல்லவா?அந்த வீட்டில் இனி அவளும் ஒரு அங்கமல்லவா? இது வெறும் வார்த்தைப் பிரச்சனையல்ல, வாழ்க்கைப்புரிதல் சார்ந்தது. ஆகவே பொருத்தமான வார்த்தையைக் காணவேண்டும்.. அதைபிறகு தேடுவோம்.

பிரச்சனை இல்லா வாழ்க்கை யாருக்கு வாய்த்திருக்கிறது?
மகாத்மா வீட்டிலும் உண்டு. எல்லோர் வீட்டிலும் உண்டு. காந்தி
வாழ்க்கையில் கஸ்தூரி பாயின் பங்கும் பிரச்சனைகளும் பற்றிக் காண்கிற
புத்தகம் ஒன்று இப்போது வெளிவந்துள்ளது. காந்தியின் ஆசிரமத்தில்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் சமைத்த உணவை கஸ்தூரி பாய்
சாப்பிட மறுத்து தனியாக சமையல் செய்தபோது ஆசிரமத்துக்கு வெளியே போ எனகஸ்தூரி பாயை காந்தி வெளி யேற்றினார். அது சரியா?

தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கட்சி நிகழ்ச்சி ஒன்றுக்குப் போகையில்
மனைவி ஆர்யா அந்தர்ஜனம் அழைத்துக் கொண்டு சென்றிருந்தார். ஆர்யா அந்தர்ஜனம் அங்குள்ளகோயிலுக்குச் செல்ல விரும்பினார். அவரை கோயிலுக்கு அனுப்பிவிட்டு இவர்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது சரியா?

காந்தி விவகாரத்தைப் பொறுத்தவரை அது வெறும் குடும்பம் சம்பந்தப்பட்டபிரச்சனை அல்ல. அவரின் ஆசிரமம் ஒரு நிறுவனம். ஒர் உயரிய பண்பாட்டை அந்தநிறுவனம் அமலாக்கும் போது எந்த உறுப்பினருக்கும் விதிவிலக்கு கொடுக்கமுடியாது. அதே சமயம் ஆசிரமத்துக்கு வெளியே கஸ்தூரி பாய் தனிக்குடித்தனம்செய்ய அனுமதித்திருக்கவேண்டும். மனைவியை பயிற்றுவித்து வென்றெடுக்கமுயன்றிருக்க வேண்டும். ஒருவேளை அதில் காந்தி தோற்றுப்போயிருந்தாலும்அதுவும் ஒரு பாடமாயிருக்கும்.


இ.எம்.எஸ். தமது மனைவியின் நம்பிக்கைச் சுதந்திரத்தை அங்கீகரித்தது
சரியே. மனைவியின் சுயம் பாதுகாக்கப்பட்டது. பெண்ணுரிமையில் அது
மிகமுக்கியமன்றோ! இதுபோல் இப்போது நம்வாழ்வில் பல நடக்கிறது . கணவனின்அல்லது மனைவியின் பொதுவாழ்வில் கொண்ட லட்சியத்திற்கு தம்செயல் சற்று ஊறு ஏற்படுத்துகிறது என்பதை மனைவியோ கணவனோ யோசிக்கத் தொடங்கினால் இதற்குத்தீர்வு உண்டு. ஆனால் அது இயல்பாக நிகழவேண்டும். திணிப்பாகஇருக்கக்கூடாது. சீர்திருத்தக் கருத்துகளை வீட்டில் நடைமுறைக்குக்கொண்டுவருவது மன உளைச்சல் தரும் பெரும் போராட்டம். வேறு குறுக்கு வழிஇருப்பதாகத் தெரியவில்லை.


நாகரீகமாக உடை அணிந்தவர்கள் சிந்தனையும் நாகரீகமாகவே இருக்கும் என்றுகருத முடியவில்லை. பல பெண்கள் தங்களின் வெளித்தோற்றத்துக்குச்
சம்பந்தமில்லாமல் பயந்து நடுங்கி அடங்கி ஒடுங்கி வாழ்வதை நடைமுறையில்காண்கிறோம். அதே சமயம் தழையத்தழைய கட்டிய புடவை, தலைமுடியை படிய வாரிப்பின்னிய சடை, காலணா சைஸ் குங்குமப் பொட்டு, தொங்கதொங்கத் தாலி என வலம்வரும் பெண்கள் சிலர் வீட்டுக்குள் போராளிஅவதாரம் எடுப்பதையும் அனுபவம்காட்டுகிறது. இதே அளவுகோல்கள் ஆண்களுக்கும் பொருந்தும்.வெளித்தோற்றத்தைக் கொண்டு எந்த முடிவுக்கும் வரமுடியாது. குடும்பத்தில்ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் - நல்லிணக்கம் நிலவ வேண்டுமானால் அவரவர்
மனதை விசாலப்படுத்திடப் பழக வேண்டும்.


அந்தப் பெண் அழகாக இருக்கிறாள் என்று ஒரு பெண்ணைச் சுட்டி கணவனும்
அந்தப் பையன் வெரி ஸ்மார்ட் என் ஒரு பையனைச் சுட்டி மனைவியும் சொல்ல முடியுமானால் அந்த தம்பதியினரின் புரிதல் நெருக்கம் சிறப்பாக இருக்கிறது என்று பொருள். சந்தேக நெருப்பின் பொறி விழுந்தாலே குடும்ப அமைதி கருகத் தொடங்கிவிடும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஆழமாக வேரூன்றுவதும், அதற்கொப்ப பரஸ்வரம் நடந்து கொள்வதும் மிகமிக அவசியம்.கணவனும் மனைவியும் மனம் திறந்து பேசுகிற பழக்கம் உறுதிப்பட்டால்நம்பிக்கை வலுப்படும்.

வதந்திகளை நம்பாமல் இருப்பதும்,புறம்சொல்கிறவர்களுக்கு காதுகொடுக்காமல் இருப்பதும் மிக அவசியம்.
தாம்பத்தியத்தில் திருப்தி இல்லற வாழ்க்கையின் ஆதாரம். அதை சிறப்பாகப்
பேணுவது மிகமிக அவசியம். இங்கேதான் பிரைவசி என்று ஆங்கிலத்தில்
சொல்லப்படுகிற அந்தரங்கம் - தனிமை உரிமைச் சூழல் - இருவருக்கும் கட்டாயம் தேவை. தனியான படுக்கை அறையே இல்லாத நம் சமூகச் சூழலில் குடும்ப ஜனநாயத்தைப் பற்றி அதிகம் பேசுவதே கூட சற்று அதீதமாகிவிடுகிறதே!

ஒருமுறைஓய்வு பெற்ற நீதிபதியும் இராமாயண ஆர்வலருமான இஸ்மாயில் ஒருபிரசங்கத்தின்போது, என் குடும்பத்தில் எனக்கும் என் மனைவிக்கும் சண்டையேவருவதில்லை என்றுகூறி நிறுத்தினார். அது எப்படி என மேடையில் இருந்த ஒருஇலக்கியவாதி கேட்டார். அதற்கு நீதிபதி இஸ்மாயில் சொன்னார்: எனக்கும் என்மனைவிக்கும் சரியான வேலைப்பிரிவினை உண்டு. அதனை ஒழுங்காகப்பின்பற்றுவதுதான் நல்லிணக்கத்தின் ரகசியம். அந்த வேலைப் பிரிவினையின்படிஇலங்கைத்தமிழர் பிரச்சனை, பாலஸ்தீனப்பிரச்சனை போன்றவற்றை நான் கவனித்துக்கொள்வேன், வீடு வாங்குவது, பிள்ளைகளை எங்கே படிக்கவைப்பது என மற்ற எல்லா
இலாக்காக்களையும் என் மனைவி கவனித்துக் கொள்வாள்! -அவர் இதை ஜோக்காகச்சொல்லிவிட்டு பின்னர் பரஸ்பர புரிதல் குறித்து தெளிவாகப் பேசினார்.


எனது நண்பர் ஒருவரும் அவர் மனைவியும் வங்கியில் பணியாற்றுகிறவர்கள்.தினசரி வரவு செலவை எழுதிவைப்பார்கள்.வாரம் ஒரு முறை நேர் செய்வார்கள்.மாதக்கடைசியில் தொகுத்து எழுதுவார்கள். பத்து காசு குறைந்தாலும்மெனக்கெட்டு மறுபடியும் கணக்கைச் சரிபார்ப்பார்கள். இப்போது கேட்டாலும்கடந்த 31 ஆண்டுகளுக்கு உரிய வரவு செலவுக் கணக்குகளைக் காட்டமுடியும்அவர்களால். கணக்கு எழுதத் தொடங்கிய போது ஏன் இந்தச் செலவு  இதைதவிர்த்திருக்கலாம் என்பதுபோன்ற எந்த கேள்வியும் பரஸ்பரம் மூன்றாண்டுகளுக்குக் கேட்டதில்லை. அதைப்பற்றி பின்னர் பரிசீலித்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்தார்களாம். அதன்படி செயல்பட்டதால் கிடைத்த அனுபவம் அவர்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்தது. அவர்கள் குடும்ப பட்ஜெட் இன்றும் மிக வலுவாக உள்ளது.

இதை அப்படியே எல்லோரும் காப்பியடிப்பது மிகச்சிரமமே. ஆயினும் வரவு செலவு இருவருக்கும் இடையில் ஒளிவுமறைவற்றதாக இருப்பது அவசியமல்லவா? குடும்ப பட்ஜெட்டை இருவரும்சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கினால்  அது பற்றாக்குறை பட்ஜெட்டாகஇருப்பினும் உரசலைத் தவிர்க்கலாம். மீள வழிதேடலாம். ஒரு மூளை மட்டும்எடுக்கும் முடிவைவிட இரண்டு மூளைகள் சேர்ந்து எடுக்கும் முடிவு நிச்சயம்மேலானதாகவே அமையும். பிள்ளைகள் ஒரளவு வளர்ந்த பின் அவர்களுக்கும் குடும்பநிதி நிலமை தெரிந்திருக்க வேண்டும். உபதேசத்திற்கு இது மிக எளிது.அமலாக்கபெரும் முயற்சி தேவைப்படும்.

குடும்ப நிர்வாகம், முடிவெடுத்தல், பண வரவு- செலவு என அனைத்திலும்
இருவரும் ஒளிவு மறைவின்றி கலந்து பேசி செயல்பட்டால் அந்த இல்லத்தில்
அமைதி தழைக்கும். வீட்டு வேலைகளை, குழந்தை பராமரிப்பை இருவரும் பங்கிட்டுஒருவருக்கொருவர் தோள்கொடுத்து இயங்கினால் அந்தக் குடும்பத்தை மாதிரிக்குடும்பம் எனலாம்.ஆண்களுக்கான சமையல் குறிப்புகள் என்ற புத்தகம் எழுதியதோடு நிற்பவரல்லதோழர் ச. தமிழ்ச் செல்வன். வீட்டில் அவரே நன்கு சமைக்கவும் செய்வார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டில் ஆண்கள்வீட்டில் சமைப்பது குறித்து தீர்மானமும் நிறைவேற்றி, அதை அமலாக்கிட சிலமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. சரிபாதி என மனை வியையும் கணவனையும்
சொல்வது வெறும் சொற்றொடராகி விடக்கூடாது. இன்பம், துன்பம், சுமை, வேலை எனஅனைத்திலும் சமபங்காளி ஆவது அவசியமல்லவா?

வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கப்படுவதுண்டு. உங்கள் வீடு சிதம்பரமா?
மதுரையா? அதாவது ஐயா ஆட்சியா? அம்மா ஆட்சியா ? இக்கேள்வியே ஆணாதிக்கம்சார்ந்ததுதான். எங்கள் வீட்டில் கூட்டாட்சிதான் என்று கூறும் நிலைஇப்போது எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? அதை நோக்கி நகர வேண்டாமா?

ஊடல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின், -என்றார் வள்ளுவரும். ஊடல் இல்லா வாழ்க்கைஇனிக்காது. ஊடல் மோதலாகாமல் இருக்க காயப்படுத்தும் சொற்களை இரு சாராரும்பயன்படுத்தாதிருக்க வேண்டும். ஆனால் அது சுலபமல்ல ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு விதமான பின்னணியும் பயிற்சிச் சூழலும் இருக்கும். வார்த்தைகளைவிட
வாழ்க்கை முக்கியம் என்கிற புரிதல் இருபக்கமும் இருப்பின் சிக்கல் இல்லை.
நெருப்பில் நெய்யூற்ற உறவுகள் தயாராய் இருக்கிறார்களே என்ன செய்வது?
குடும்ப அமைதி என்பது கணவன் மனைவி சார்ந்தது எனினும் அதில் இதர குடும்பஉறுப்பினர்கள் பங்கும் முக்கியமல்லவா? அது குறித்துப் பேசாமல் குடும்ப ஜனநாயகம் முழுமையாகாது அல்லவா? அது குறித்தும் பேசுவோம்.

நூற்றுக்கு தொண்ணுறு ஆண்களிடம் ஆணாதிக்கச் சிந்தனையும் வறட்டுக்கவுரவமும்இருக்கிறது. அதன் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடலாம். அதே போல் நூற்றுக்குதொண்ணுறு பெண்கள் சடங்கு சம்பிரதாயம் இவற்றைக் கெட்டியாக பற்றிநிற்கின்றனர். இதிலும் ஆளுக்கு ஆள் அளவு மாறுபடலாம். அவ்வளவே. இதன்காரணமாக ஏற்படுகிற உரசல்களை எதிர் கொள்வது பற்றியும் பேசியாக வேண்டும்.குடும்ப ஜனநாயகத்தை சிதைப்பதில் இதற்கும் ஒரு பங்கு இருக்கிறதே...

நகை சேமிப்பா? சுமையா? எது தேவை? எது ஆடம்பரம்? தானுண்டு தன்குடும்பம் உண்டு என எந்த வம்பு தும்புக்கும் போகாது வாழ்வது நல்லதா ? ஊர், சமூகம்என பொதுவாழ்வில் ஈடுபடல் அவசியமா? இது போன்ற கேள்விகளுக்கும் விடைதேடாமல் குடும்ப ஜனநாயகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.கடலின் கொந்தளிப்பு படகிலும் எதிரொலிக்கும். சமூகத்தின் கொந்தளிப்புகளும் அலைவீச்சுகளும் தனிமனித வாழ்விலும் குடும்பத்திலும் தாக்கத்தைஏற்படுத்தத்தானே செய்யும். அது குறித்தும் பேசுவோம்.

மானுட யாத்திரை : ஓர் நம்பிக்கைப் பிரகடனம்.

Posted by அகத்தீ Labels:








மானுட யாத்திரை :  


ஓர் நம்பிக்கைப் பிரகடனம்.

சு.பொ.அகத்தியலிங்கம்.

முற்றிலும் புதிய முயற்சி. முற்றிலும் எளிய பயணம். மானுடத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை. அறிவியலை பற்றி நிற்கும் நேர்மை. கவிஞர் குலோத்துங்கனின் காவிய ஆக்கத்தின் ஊடும் பாவுமாய் இருப்பது இதுதான். “மானுட யாத்திரைஎன்ற தலைப்பே பொருளைத் தாங்கி நிற்கிறது

முதல் பாகம், சமுதாயம் அரசியல் குறித்து 28 அத்தியாயங்கள் 369 பாடல்கள். இரண்டாம் பாகம், அறிவியல் குறித்து 37 அத்தியாயங்கள் 609 பாடல்கள். மூன்றாம் பாகம், ஆன்மீகம், சமயம் குறித்து 35 அத்தியாயங்கள் 1145 பாடல்கள். மொத்தம் மூன்று பாகங்கள் 478 + 128 பக்கங்கள்,  100 அத்தியாயங்கள் 2123 பாடல்கள் 8492 வரிகள். முன்னுரை , அணிந்துரை, என்னுரை என 7 அறிமுக விளக்கங்கள்

செய்யுள்ளா?  கவிதையா? நெடுங்கவிதையா?  எப்படிக் குறிப்பிடுவது என்கிற ஐயம் எனக்குள் எழுந்தது. காப்பியம் என்றும், பாடல்கள் என்றும் ஆசிரியரே குறிப்பிட்டபின் அதனையே சொல்வதுதான் நியாயம். இக்காவியத்தை வரவேற்க பலநியாயங்கள் உண்டு. எனினும் இங்கு மூன்று கோணங்களில் இதனை பார்த்தல் நன்று

முதலாவதாக, காதலை, இயற்கையை ,கடவுளைப் பாடக் காவியங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அறிவியலை, அதன் வரலாற்றை எத்தனை பாடல்களில் பாடி உள்ளோம்? எனவே அறிவியலைப் பாடுவதால் இந்நூலை வரவேற்போம்.  

இரண்டாவதாக, எந்த தனிமனிதரையும் கதாநாயகனையும் கதாநாயகியையும் முன்னிலைப் படுத்தாமல் சமுதாயம், அரசியல், அறிவியல், ஆன்மீகம், சமயம் என மானுடம் இதுகாறும் நடத்திய பயணத்தை கருப்பொருளாய்க் கொண்டு காவியம் பாடத் துணிந்தமைக்கு கட்டாயம் பாராட்டியாக வேண்டும். யாமறிந்தவரை தமிழில் இது முதல் முயற்சி என்றே கருதுகிறேன்

மூன்றாவதாக, எந்தச் சூழலிலும் மானுடத்தின் மீதும்,  அதன் எதிர் காலத்தின் மீதும், அறிவியலின் மீதும், நம்பிக்கையை இழக்காமல் மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே இந்த ஆக்கம் உள்ளதால் வரவேற்றாக வேண்டும்.
முதல் பாகத்தில், “கலப்பையை அன்றோர் மேதை / கண்டனன்: மானிடத் திற் [கு ] / அளப்பரும் சேவை செய்தான் / அவன் கொடைப் பெருமை பாடக் / காவியம் தேவை : மற்றோர் கம்பனே தேவை : மண்ணில்என்று ஆசிரியர் பாடும் போது ; நாம் பாட மறந்த பொருள்கள் விரிகிறது. “ போதுமென் றெண்ணும் நெஞ்சம் / பொன்செயக் கூடும் : ஆனால் / போதுமென் றெண்ணும் நெஞ்சம் / புதியன செய்வ தில்லை.”என்கிறார். 
 
சமுதாயம் முன்னேற கடந்த படிகளை, அரசியல் முறைகளை, சந்தித்த வலிகளைப் பருந்துப் பார்வையாகக்கூட அல்ல பாய்ச்சல் பார்வையாகச் சொல்லிச் செல்கிறார். கருவிகளின் வளர்ச்சியோடு சந்தைகளின் நெருக்கடியையும் போர்களையும் சொல்லிச் செல்கிறார். தனக்கு எந்த அரசியல் முத்திரையும் வந்துவிடக்கூடாதென  மிகுந்த எச்சரிக்கையோடு பாடல்களை யாத்துள்ளார். சொற்களைத் தெரிவு செய்து கோர்த்துள்ளார்.

 சமத்துவம் மனித நேயத் / தத்துவம் பேசு கின்ற / அமைப்பினர் சிலபேர் மட்டும் / அமைதியின் பக்கம் நின்றார் ”. இதனை பதிவு செய்கிற குலோத்துங்கனுக்கு சோவியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தெரியாமல் இருக்காது. ஆயினும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளது தற்செயலானதா ? . ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை 1476 வரிகளில் சுமார் ஆறாயிரம் வார்த்தைகளில் சொல்வது இயலாத ஒன்று. ஆகவேதான் பாய்ச்சல் பார்வை என குறிப்பிட்டேன். அரசியல் என்பதால் விமர்சனப் போருக்கு அதிகம் வாய்ப்புள்ள பகுதி இது.

இரண்டாம் பாகத்தில், “ தேவர்கள் கண்ட தில்லாத் / தெய்வங்கள் படைத்த தில்லா / மாவரும் திறமை ஒன்று / மானுடர்க் குண்டாம் : அஃது / கருவிகள் படைக்கும் ஆற்றல்என பழுதற உரைதுள்ளார். இந்நூலே அதன் விரிவு எனலாம்.  கதிரவன் கடவுள் அல்லன் / ககனமும் கோயில் அன்று / மதிநலம் வளருங் காலை / மர்மங்கள் மறையும் : நீங்கும்எனக் கூறுகிற ஆசிரியர் ஏராளமான அறிவியல் தகவல்களை,  அதன் வளர்ச்சி, வரலாற்றுச் செய்திகளைக் கதம்பமாகக் கோர்த்துள்ளார்

அறிவியல் துறைகள் ஒன்றில் / அனைத்துமே ஒருவர் கண்ட / சரிதைஒன் றிலை:அ டுக்குத் /தளமெனும் கட்ட டத்தைப் / படிப்படி யாகக் கட்டும் / பாங்குபோல் முந்தை ஆய்வை / அடிப்படை யாகக் கொள்வார் / அதனினும் மேலே செல்லும்” எனபதை நன்கு விளங்க வைத்துள்ளார்.இது போற்றத்தக்க முயற்சி

நாம் இன்று அனுபவிக்கும் வாழ்க்கையின் சகல கூறுகளுக்கும் அடித்தளமான அந்த அறிவியல் முன்னேற்றங்களுக்காக இரத்தம் சிந்தியோர், உயிரிழந்தோர், இவர்களை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கிறோம். அறிவியல் முன்னேற்றத்தை எத்தனை பேர் பாடி இருக்கிறோம்? ஆகவேதான் இந்த பாகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. இதன் பொருட்டு இதனைக் காவியம் எனச் சொல்வதில் எனக்கு பெருமகிழ்ச்சியே. “ சிறுத்த மனது அல்லால் பிரிக்கும் சுவர் வேறில்லை” என மானிடரைச் சரியாக இனங்கண்டு ; தோல்விகளும் வீழ்ச்சிகளும் உண்டெனிலும் “ வையம் மேற்செலும் : மேலும் செல்லும்” என உறுதியாகப் பிரகடனம் செய்கிறார்.

மூன்றாம் பாகத்தில், “...:மனித சாதிக் [கு ] / அச்சம்போல் பகைஒன் றில்லை./பயங்கரம் சூழ்ந்த நெஞ்சில் / பகுத்தறி[வு] ஆள்வ தில்லை.” எனவும், “பாரதம் திரள வேண்டும்: / பகுத்தறி வாளர் சேனைப் / போர்அனல் பரவ வேண்டும்: / பூகம்பப் புரட்சி வேண்டும்” எனவும் கூறுகிற வரிகளில் இந்த பாகத்தை அவர் யாத்த நோக்கம் புலப்படுகிறது. இந்து சமயத்தின் பல்வேறு கூறுகள், சமணம், பெளத்தம், கிறுத்துவம், இஸ்லாம், யூதம் என பல்வேறு மதங்களின் சாரத்தை சுருக்கமாக – ஒரு அறிமுகமாகப் பாடியுள்ளார். அதே சமயம் தத்தவ விமர்சனம், தத்துவப்போர் இவற்றுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்துள்ளார். கட்டாயம் சில கருத்துகளைக் கூறியாக வேண்டும் என்கிற சந்தர்ப்பத்தில் கூட அதனை எதிர்த்து வந்துள்ள கருத்து என்கிற விதத்தில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் சமயக் கருத்துகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி அந்தப் பக்கம் மக்களைத் தள்ளிவிடக்கூடாது என்பதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டிருக்கிறார்.

பகவத் கீதை குறித்த அத்தியாயத்தில் ஆசிரியர் கூறுகிறார், “வருணங்கள் நான்கும் மண்ணில் / வகுத்தவன் இறைவன்: அஃது / கருமத்தால் அமைத்தான் அல்லன் / கருவினில் அமைத்தான் என்பன் / மண்மிசை பெண்கள் மற்றும் வணிகர் சூத் திரர்கள், பாவப் /பெண்கருப் பையில் வந்த பிறப் [பு] எனத் தாழ்த்தும் என்பர்” என்கிற வரிகளில் அழுத்தமான விமர்சனத்தை தன் கருத்தாக அல்ல இன்னொருவர் கருத்தாகவே பதிவு செய்கிறார்.இந்த எட்டுவரிகளைத் தொடர்ந்து, “பார்த்திபன் ஆன்மா: கண்ணன் / பரமாத்மா: தீய வென்னத் / தூர்த்திடத் தகு குணங்கள் / துரியோத னாதி என்பர் ” என  காந்தியப் பார்வையைச் சொல்லி சமன் செய்கிறார் ஆசிரியர்.இந்த நாலுவரிகளை சற்று முன்நகர்த்தி வர்ண்ஸ்ரம விமர்சன வரிகளை இறுதியாக்கி இருந்தால் கூர்மையாக இருந்திருக்கும். ஆனால் சார்பு வெளிப்பட்டுவிடும். எனவே நுட்பமாகவே காந்தியப் பார்வையை இறுதியாகத் தந்து நடுநிலை காட்ட முயன்றிருக்கிறார்.ஆயினும் நூலின் கடைசிப் பகுதியில் மனிதனை முதன்மைப்படுத்துவதும், பக்த்தறிவுப் பார்வையை வலியுறுத்துவதும் நிறைவைத் தருகிறது.

மார்க்சிய தத்துவம் அனைத்துக்கும் பதில் சொல்லும் வல்லமை மிக்கது. ஆனால் இப்பகுதியில் அது இடம் பெறாததும், அரசியல் பகுதியில் வரலாற்றுத் தகவலாக சுட்டிக்காட்டியுள்ளதும் ஆசிரியர் மிகக் கவனமாகவே செய்துள்ளார் என்று யோசிக்க வைக்கிறது.தத்துவம் என்கிற விரிகடலை சுருக்கித் தொகுக்கையில் விடுபடலும் தாவிச் செல்லலும் தவிர்க்க இயலாது. அதே சமயம் இது தத்துவ விமர்சன நூல் அல்ல - மானுட யாத்திரையில் தத்துவத்தின் பயணத்தை கோடிட்டுக் காட்டல் அவ்வளவே. 

“வையம் எனும் அமைப்பிற்கு முகவரியும் [ஐடிண்டிடி] அவன்தான்: வையத்தின் வரலாற்றிற்கு ஆசிரியனும் அவன்தான். அவனுடைய யாத்திரையாக வரலாறு தொடங்குகிறது. அவனுடைய யாத்திரையாக வரலாறு தொடர்கிறது.அந்தப் பயணத்தின் சிறு பகுதிதான் நமது காவியம்” என்று என்னுரையில் வாக்குமூலமாக வா.செ.குழந்தைசாமி கூறுகிறார்.மேநாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமியின் புனைப்பெயரே குலோத்துங்கன் என்பதறிக.

கடைசியாக, “ மனிதரை மிஞ்சி நிற்கும் / வாழ்வில்லை: மண்ணும் விண்ணும் / புனிதம்என் றெண்ணத் தக்க / பொருள் எனில் மனிதம் ஒன்றே/ இறவனின் இருப்புக் கூற / எவருளர்: மனிதன் இன்றேல் / குறையுள தாகும் அண்டம்; குடிமகன் அவனே யன்றோ/………../வய்யம் ஓர் இன்பவீடு / வாழ்வொரு வரம் என் கின்ற / மெய்மையே எமது வேதம் / விண்ணகம் இங்கு காண்போம்.” என்ற வரிகளோடு நூலின் இறுதிப் பிரகடனம் கம்பீரமாய் அறைகூவுகிறது.வா.செ.குழந்தைசாமி உயர்ந்து நிற்கிறார்.

யாரும் துணியாத பாதையில் காவியம் யாத்த ஆசிரியருக்கு பாராட்டுகள்.கவிதை புத்தகங்களின் விற்பனையே பெரும் கேள்விக்குறியாகி உள்ள நேரத்தில்; யாப்பிலக்கணங்களுக்குட்பட செய்யுள்களில் அடர்த்தியான செய்தி, தகவல், கருத்துகளின் தொகுப்பாய் இந்நூலை எழுதுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும்.சற்று யாப்பு இலக்கணத்திற்கு விடை கொடுத்துவிட்டு கொஞ்சம் சுதந்திரமாய் எழுதியிருந்தால் இன்னும் கூர்மையாகவும், சுவையாகவும் வந்திருக்குமே. உரையிடையிட்ட செய்யுளும் நம் மரபுதானே.நூலை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்கிற என் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே இதனைச் சொல்கிறேன்.

“குலோத்துங்கனின் மானுட யாத்திரை தமிழ் இலக்கியத்திற்கு ஒரு தலைசிறந்த புது வரவு: இலக்கிய வகையில் ஒரு புதிய பரிமாணம்.”என்று முன்னுரையில் ப.ஸ்ரீ.ராகவன் கூறியிருப்பது கவனதில் கொள்ளத்தக்கது.

மானுட யாத்திரை,

பாகம் 1 : சமுதாயம்,அரசியல்,
பக:112, விலை: ரூ.60.

பாகம் 2 :அறிவியல்,
பக:136 +48 , விலை: ரூ.85.

பாகம் : ஆன்மீகம்,சமயம்,
பக:230 + 80 , விலை: ரூ.160.

ஆசிரியர் : குலோத்துங்கன்,

வெளியீடு: பாரதி பதிப்பகம்,
126/108,உஸ்மான் சாலை,
தி.நகர், சென்னை-600017.