மானுட யாத்திரை :
ஓர் நம்பிக்கைப் பிரகடனம்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
முற்றிலும் புதிய முயற்சி. முற்றிலும் எளிய பயணம். மானுடத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை. அறிவியலை பற்றி நிற்கும் நேர்மை. கவிஞர் குலோத்துங்கனின் காவிய ஆக்கத்தின் ஊடும் பாவுமாய் இருப்பது இதுதான். “மானுட யாத்திரை” என்ற தலைப்பே பொருளைத் தாங்கி நிற்கிறது.
முதல் பாகம், சமுதாயம் அரசியல் குறித்து 28 அத்தியாயங்கள் 369 பாடல்கள். இரண்டாம் பாகம்,
அறிவியல் குறித்து 37 அத்தியாயங்கள் 609 பாடல்கள். மூன்றாம் பாகம்,
ஆன்மீகம், சமயம் குறித்து 35 அத்தியாயங்கள் 1145 பாடல்கள். மொத்தம் மூன்று பாகங்கள் 478 + 128 பக்கங்கள், 100 அத்தியாயங்கள் 2123 பாடல்கள் 8492 வரிகள். முன்னுரை , அணிந்துரை, என்னுரை என 7 அறிமுக விளக்கங்கள்.
செய்யுள்ளா? கவிதையா? நெடுங்கவிதையா? எப்படிக் குறிப்பிடுவது என்கிற ஐயம் எனக்குள் எழுந்தது. காப்பியம் என்றும், பாடல்கள் என்றும் ஆசிரியரே
குறிப்பிட்டபின் அதனையே சொல்வதுதான் நியாயம். இக்காவியத்தை வரவேற்க பலநியாயங்கள் உண்டு. எனினும் இங்கு மூன்று கோணங்களில் இதனை பார்த்தல் நன்று.
முதலாவதாக, காதலை, இயற்கையை ,கடவுளைப் பாடக் காவியங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அறிவியலை, அதன் வரலாற்றை எத்தனை பாடல்களில் பாடி உள்ளோம்? எனவே அறிவியலைப் பாடுவதால் இந்நூலை வரவேற்போம்.
இரண்டாவதாக, எந்த தனிமனிதரையும் கதாநாயகனையும் கதாநாயகியையும் முன்னிலைப் படுத்தாமல் சமுதாயம், அரசியல், அறிவியல், ஆன்மீகம், சமயம் என மானுடம் இதுகாறும் நடத்திய பயணத்தை கருப்பொருளாய்க் கொண்டு காவியம் பாடத் துணிந்தமைக்கு கட்டாயம் பாராட்டியாக வேண்டும். யாமறிந்தவரை தமிழில் இது முதல் முயற்சி என்றே கருதுகிறேன்.
மூன்றாவதாக, எந்தச் சூழலிலும் மானுடத்தின் மீதும், அதன் எதிர் காலத்தின் மீதும், அறிவியலின் மீதும், நம்பிக்கையை இழக்காமல் மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே இந்த ஆக்கம் உள்ளதால் வரவேற்றாக
வேண்டும்.
முதல் பாகத்தில், “கலப்பையை அன்றோர் மேதை / கண்டனன்: மானிடத் திற் [கு ] / அளப்பரும் சேவை செய்தான் / அவன் கொடைப் பெருமை பாடக் / காவியம் தேவை : மற்றோர் கம்பனே தேவை : மண்ணில் ” என்று ஆசிரியர் பாடும் போது ; நாம் பாட மறந்த பொருள்கள் விரிகிறது. “ போதுமென் றெண்ணும் நெஞ்சம் / பொன்செயக் கூடும் : ஆனால் / போதுமென் றெண்ணும் நெஞ்சம் / புதியன செய்வ தில்லை.”என்கிறார்.
சமுதாயம் முன்னேற கடந்த படிகளை, அரசியல் முறைகளை, சந்தித்த வலிகளைப் பருந்துப் பார்வையாகக்கூட அல்ல பாய்ச்சல் பார்வையாகச் சொல்லிச் செல்கிறார். கருவிகளின் வளர்ச்சியோடு சந்தைகளின் நெருக்கடியையும் போர்களையும் சொல்லிச் செல்கிறார். தனக்கு எந்த அரசியல் முத்திரையும் வந்துவிடக்கூடாதென மிகுந்த எச்சரிக்கையோடு பாடல்களை யாத்துள்ளார். சொற்களைத் தெரிவு செய்து கோர்த்துள்ளார்.
“சமத்துவம் மனித நேயத் / தத்துவம் பேசு கின்ற / அமைப்பினர் சிலபேர் மட்டும் / அமைதியின் பக்கம் நின்றார் ”. இதனை பதிவு செய்கிற குலோத்துங்கனுக்கு சோவியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தெரியாமல் இருக்காது. ஆயினும்
கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளது தற்செயலானதா ? . ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை 1476 வரிகளில் சுமார் ஆறாயிரம் வார்த்தைகளில் சொல்வது இயலாத ஒன்று. ஆகவேதான் பாய்ச்சல் பார்வை என குறிப்பிட்டேன். அரசியல் என்பதால் விமர்சனப் போருக்கு அதிகம் வாய்ப்புள்ள பகுதி இது.
இரண்டாம் பாகத்தில், “ தேவர்கள் கண்ட தில்லாத் / தெய்வங்கள் படைத்த தில்லா / மாவரும் திறமை ஒன்று / மானுடர்க் குண்டாம் : அஃது / கருவிகள் படைக்கும் ஆற்றல் ” என பழுதற உரைதுள்ளார். இந்நூலே அதன் விரிவு எனலாம். “கதிரவன் கடவுள் அல்லன் / ககனமும் கோயில் அன்று / மதிநலம் வளருங் காலை / மர்மங்கள் மறையும் : நீங்கும் ” எனக் கூறுகிற ஆசிரியர் ஏராளமான அறிவியல் தகவல்களை, அதன் வளர்ச்சி, வரலாற்றுச் செய்திகளைக் கதம்பமாகக் கோர்த்துள்ளார்.
“அறிவியல்
துறைகள் ஒன்றில் / அனைத்துமே ஒருவர் கண்ட / சரிதைஒன் றிலை:அ டுக்குத் /தளமெனும் கட்ட
டத்தைப் / படிப்படி யாகக் கட்டும் / பாங்குபோல் முந்தை ஆய்வை / அடிப்படை யாகக் கொள்வார்
/ அதனினும் மேலே செல்லும்” எனபதை நன்கு விளங்க வைத்துள்ளார்.இது போற்றத்தக்க முயற்சி.
நாம் இன்று அனுபவிக்கும் வாழ்க்கையின் சகல கூறுகளுக்கும் அடித்தளமான அந்த அறிவியல் முன்னேற்றங்களுக்காக இரத்தம் சிந்தியோர், உயிரிழந்தோர், இவர்களை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கிறோம். அறிவியல் முன்னேற்றத்தை எத்தனை பேர் பாடி இருக்கிறோம்? ஆகவேதான் இந்த பாகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. இதன் பொருட்டு இதனைக் காவியம் எனச் சொல்வதில் எனக்கு பெருமகிழ்ச்சியே. “ சிறுத்த மனது அல்லால் பிரிக்கும் சுவர் வேறில்லை” என மானிடரைச் சரியாக இனங்கண்டு ; தோல்விகளும் வீழ்ச்சிகளும் உண்டெனிலும்
“ வையம் மேற்செலும் : மேலும் செல்லும்” என உறுதியாகப் பிரகடனம் செய்கிறார்.
மூன்றாம் பாகத்தில், “...:மனித சாதிக் [கு ] / அச்சம்போல் பகைஒன் றில்லை./பயங்கரம் சூழ்ந்த நெஞ்சில் / பகுத்தறி[வு] ஆள்வ தில்லை.” எனவும்,
“பாரதம் திரள வேண்டும்: / பகுத்தறி வாளர் சேனைப் / போர்அனல் பரவ வேண்டும்: / பூகம்பப்
புரட்சி வேண்டும்” எனவும் கூறுகிற வரிகளில் இந்த பாகத்தை அவர் யாத்த நோக்கம் புலப்படுகிறது.
இந்து சமயத்தின் பல்வேறு கூறுகள், சமணம், பெளத்தம், கிறுத்துவம், இஸ்லாம், யூதம் என
பல்வேறு மதங்களின் சாரத்தை சுருக்கமாக – ஒரு அறிமுகமாகப் பாடியுள்ளார். அதே சமயம் தத்தவ
விமர்சனம், தத்துவப்போர் இவற்றுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக
இருந்துள்ளார். கட்டாயம் சில கருத்துகளைக் கூறியாக வேண்டும் என்கிற சந்தர்ப்பத்தில்
கூட அதனை எதிர்த்து வந்துள்ள கருத்து என்கிற விதத்தில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் சமயக் கருத்துகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி அந்தப் பக்கம் மக்களைத் தள்ளிவிடக்கூடாது
என்பதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டிருக்கிறார்.
பகவத் கீதை குறித்த அத்தியாயத்தில் ஆசிரியர் கூறுகிறார், “வருணங்கள்
நான்கும் மண்ணில் / வகுத்தவன் இறைவன்: அஃது / கருமத்தால் அமைத்தான் அல்லன் / கருவினில்
அமைத்தான் என்பன் / மண்மிசை பெண்கள் மற்றும் வணிகர் சூத் திரர்கள், பாவப் /பெண்கருப்
பையில் வந்த பிறப் [பு] எனத் தாழ்த்தும் என்பர்” என்கிற வரிகளில் அழுத்தமான விமர்சனத்தை
தன் கருத்தாக அல்ல இன்னொருவர் கருத்தாகவே பதிவு செய்கிறார்.இந்த எட்டுவரிகளைத் தொடர்ந்து,
“பார்த்திபன் ஆன்மா: கண்ணன் / பரமாத்மா: தீய வென்னத் / தூர்த்திடத் தகு குணங்கள் /
துரியோத னாதி என்பர் ” என காந்தியப் பார்வையைச்
சொல்லி சமன் செய்கிறார் ஆசிரியர்.இந்த நாலுவரிகளை சற்று முன்நகர்த்தி வர்ண்ஸ்ரம விமர்சன
வரிகளை இறுதியாக்கி இருந்தால் கூர்மையாக இருந்திருக்கும். ஆனால் சார்பு வெளிப்பட்டுவிடும்.
எனவே நுட்பமாகவே காந்தியப் பார்வையை இறுதியாகத் தந்து நடுநிலை காட்ட முயன்றிருக்கிறார்.ஆயினும்
நூலின் கடைசிப் பகுதியில் மனிதனை முதன்மைப்படுத்துவதும், பக்த்தறிவுப் பார்வையை வலியுறுத்துவதும்
நிறைவைத் தருகிறது.
மார்க்சிய தத்துவம் அனைத்துக்கும் பதில் சொல்லும் வல்லமை மிக்கது.
ஆனால் இப்பகுதியில் அது இடம் பெறாததும், அரசியல் பகுதியில் வரலாற்றுத் தகவலாக சுட்டிக்காட்டியுள்ளதும்
ஆசிரியர் மிகக் கவனமாகவே செய்துள்ளார் என்று யோசிக்க வைக்கிறது.தத்துவம் என்கிற விரிகடலை
சுருக்கித் தொகுக்கையில் விடுபடலும் தாவிச் செல்லலும் தவிர்க்க இயலாது. அதே சமயம் இது
தத்துவ விமர்சன நூல் அல்ல - மானுட யாத்திரையில் தத்துவத்தின் பயணத்தை கோடிட்டுக் காட்டல்
அவ்வளவே.
“வையம் எனும் அமைப்பிற்கு முகவரியும் [ஐடிண்டிடி]
அவன்தான்: வையத்தின் வரலாற்றிற்கு ஆசிரியனும் அவன்தான். அவனுடைய யாத்திரையாக வரலாறு
தொடங்குகிறது. அவனுடைய யாத்திரையாக வரலாறு தொடர்கிறது.அந்தப் பயணத்தின் சிறு பகுதிதான்
நமது காவியம்” என்று என்னுரையில் வாக்குமூலமாக வா.செ.குழந்தைசாமி
கூறுகிறார்.மேநாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமியின் புனைப்பெயரே குலோத்துங்கன் என்பதறிக.
கடைசியாக, “ மனிதரை மிஞ்சி நிற்கும் / வாழ்வில்லை: மண்ணும் விண்ணும்
/ புனிதம்என் றெண்ணத் தக்க / பொருள் எனில் மனிதம் ஒன்றே/ இறவனின் இருப்புக் கூற / எவருளர்:
மனிதன் இன்றேல் / குறையுள தாகும் அண்டம்; குடிமகன் அவனே யன்றோ/………../வய்யம் ஓர் இன்பவீடு
/ வாழ்வொரு வரம் என் கின்ற / மெய்மையே எமது வேதம் / விண்ணகம் இங்கு காண்போம்.” என்ற
வரிகளோடு நூலின் இறுதிப் பிரகடனம் கம்பீரமாய் அறைகூவுகிறது.வா.செ.குழந்தைசாமி உயர்ந்து
நிற்கிறார்.
யாரும் துணியாத பாதையில் காவியம் யாத்த ஆசிரியருக்கு பாராட்டுகள்.கவிதை
புத்தகங்களின் விற்பனையே பெரும் கேள்விக்குறியாகி உள்ள நேரத்தில்; யாப்பிலக்கணங்களுக்குட்பட
செய்யுள்களில் அடர்த்தியான செய்தி, தகவல், கருத்துகளின் தொகுப்பாய் இந்நூலை எழுதுவதற்கு
பெரும் துணிச்சல் வேண்டும்.சற்று யாப்பு இலக்கணத்திற்கு விடை கொடுத்துவிட்டு கொஞ்சம்
சுதந்திரமாய் எழுதியிருந்தால் இன்னும் கூர்மையாகவும், சுவையாகவும் வந்திருக்குமே. உரையிடையிட்ட
செய்யுளும் நம் மரபுதானே.நூலை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்கிற என் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே
இதனைச் சொல்கிறேன்.
“குலோத்துங்கனின் மானுட யாத்திரை தமிழ் இலக்கியத்திற்கு ஒரு
தலைசிறந்த புது வரவு: இலக்கிய வகையில் ஒரு புதிய பரிமாணம்.”என்று முன்னுரையில் ப.ஸ்ரீ.ராகவன்
கூறியிருப்பது கவனதில் கொள்ளத்தக்கது.
மானுட யாத்திரை,
பாகம் 1 : சமுதாயம்,அரசியல்,
பக:112, விலை: ரூ.60.
பாகம் 2 :அறிவியல்,
பக:136 +48 , விலை: ரூ.85.
பாகம் : ஆன்மீகம்,சமயம்,
பக:230 + 80 , விலை: ரூ.160.
ஆசிரியர் : குலோத்துங்கன்,
வெளியீடு: பாரதி பதிப்பகம்,
126/108,உஸ்மான் சாலை,
தி.நகர், சென்னை-600017.
0 comments :
Post a Comment