உரைச் சித்திரம் : 12.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 12.

 

கர்வமும் வேண்டாம் !

கழிவிரக்கமும் வேண்டாம் !

 

 


 

 

விலங்குகள் ,பறவைகள் ,புழு பூச்சிகள் ,மரம் செடி கொடிகள் என நம்மைச் சுற்றி இருக்கும் உலகில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்பானது ; ஒவ்வொன்றிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள செய்திகள் உண்டு .

 

தமிழ் சங்க இலக்கிய பரப்பு நெடுகிலும் இத்தகைய நுண் நோக்கு நிறைந்து காணப்படும் . தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர் .இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டனர் . அவற்றை அடுத்த தலைமுறைக்கு சிந்தனைப் புதையலாய் கையளித்துச் சென்றனர் .அவற்றில் சில இக்கால அறிவியல் மற்றும் சமத்துவ உலகுக்கு பொருந்தாமல் போகலாம்.ஆயின் ,காலவெள்ளத்தில் கரையாத உண்மைகளும் நிரம்ப உண்டு.

 

புலவர் காரியாசானின் சிறுபஞ்சமூலத்தில் இருந்து சில காட்சிகளைப் பார்ப்போம்.

 

சிலந்திப்பூச்சிக்கு தன் முட்டையே எமனாகுமாம். பெண்சிலந்தி தன் கடைசி முட்டையை இட்டதும் இறந்துவிடும் .

 

மான் ,ஆடு ,மாடு இன்னபிற விலங்குகளுக்கு கொம்பு எமனாகிவிடும் . புலி ,சிங்கம் ,சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாட துரத்தும் போது மரம் செடி கொடிகளுக்கு இடையே புகுந்து மான்,ஆடு ,மாடு போன்றவை ஓடுமல்லவா ,அப்போது கொம்புகள் அவற்றில் சிக்கிக் கொள்ளும் ; பலியாகிவிடும்.

 

கவரிமான் தன் மயிரை இழந்தால் உயிர் நீத்துவிடும் என்கிற ஒரு செய்தி நீண்டகாலமாக உலவுகிறது .

 

நண்டுக்கு அதன் குஞ்சே எமனாகிவிடும் என்பதையும் அறிவோம்.

 

இப்படி நான்கு இயற்கைச் செய்திகளைச் சொன்ன புலவர் ,அடுத்து நெத்தியடியாய்ச் சொன்னதுதான் “டாப்”

 

ஒருவர் பேசும் வசைமொழிகளே அவருக்கு எதிரியாகிவிடும்.

 

சரிதானே !

 

இன்னொரு பாடலில் புலவர் சொல்கிறார் ;

 

வான் குருவி எனப்படும் தூக்கணாங்க் குருவி மிக வலிமையாக கூட்டைக் கட்டுகிறது .மின்மினிப் பூச்சியை விளக்காக வைத்து அந்தரத்தில் தொங்கி தூக்கணாங்குருவி கூடுகட்டுவது அற்புதமானது.

 

அரக்கு பூச்சி என்றொரு பூச்சி கல்யாண முருங்கை ,பூவரசம் மரம் இவற்றில் குடியேறி அவற்றின் சாற்றை உண்டு எச்சிலாய் துப்பும் ; அது காய்ந்து அரக்காகும் .அதன் வலிமை அதிகம்.

 

உலண்டு என்கிற பட்டுப்புழுக்கள் பின்னும் பட்டுநூலின் மென்மை தனித்துவம் மிக்கது .

 

ஒருவகை அந்துப் பூச்சிகள் குட்டிகுட்டி மரக்குச்சிகளை ஒண்றிணைத்து கூட்டுப்புழுவாக வாழும் .கோல்கூடு அல்லது புழுக்கூடு என அழைக்கப்படும் அவற்றினை பார்த்து வியக்காமல் இருக்க முடியுமா ?

 

அதேபோல் தேன்கூடு .அதனை யோசிக்க யோசிக்க வியப்பே மிஞ்சும் .

 

இப்படி இயற்கையின் வியப்பான செய்திகளைச் சொல்லிவிட்டு புலவர் ஓங்கி உரைப்பது என்ன தெரியுமா ?

 

ஒருவர் எளிதாய் செய்துவிடுகிற செயலை இன்னொருவர் அதேபோல் செய்துவிட முடிவதில்லை . ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் செயல் எளிது ;பிறர் செய்யும் செயல் அரிது . எதையும் குறைத்து மதிப்பிடாதீர்I

 

 

இன்னொரு பாடலில் மிகச்சாதாரண்மாக உண்மையைப் போட்டுடைத்து விடுகிறார் காரியாசான்.

 

 “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்கிற சொலவடை சொல்வதென்ன ? எல்லாம் தெரிந்த ஒருவர் என யாரும் கிடையாது ; இருக்கவும் முடியாது.

 

அதுபோல் எதுவும் தெரியாத சாணி மூளை என வசைபாடுவோம் . ஆனால் அப்படி எதுவும் தெரியாத  “சுத்த சூன்யம்” யாரும் கிடையாது ;இருக்கவும் முடியாது.

 

இரண்டுக்கும் நடுவில்தான் நாமெல்லாம்.

 

இவன் தங்கக் கம்பி ,அப்பழுக்கில்லாதவன் என சிலரைச் சுட்டுவோம் .இதுவும் மிகைக்கூற்றே . கெட்ட குணமோ ,கெட்ட சிந்தனையோ துளியும் இல்லாதவர் எவரும் இல்லை.

 

இவன் /இவள் மகா அயோக்கியன்/ள் மருந்துக்கும் நல்லகுணம் இல்லை என வெறுப்போம் . ஆனால் அந்தக் கல்லிலும் ஈரம் இருக்கும் ;ஒரு புல் தலைநீட்டும் .முழுக்க கெட்டவர் என்று யாருமில்லை .இருக்கவும்முடியாது .

 

இரண்டுக்கும் நடுவில்தான் நாமெல்லாம்.

 

நான் இருபதாயிரம் புத்தகங்கள் படித்துவிட்டேன் . நூல்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என்கிற அகந்தை யாருக்கும் வேண்டாம் . எல்லா நூல்களையும் பழுதறக்கற்றவர்கள் என்று யாருமில்லை ;இருக்கவும் முடியாது .

 

ஆகவே கர்வமும் வேண்டாம் ! கழிவிரக்கமும் வேண்டாம் !

 

இங்கே நான் விவரித்த மூன்று சிறுபஞ்சமூலம் பாடல் காட்சிகளை .இப்போது கீழிருந்து மேலாக அசை போடுங்கள் !

 

மீண்டும் சொல்கிறோம் ;

கர்வமும் வேண்டாம் ;கழிவிரக்கமும் வேண்டாம் !

 

 

சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை

(சிறுபஞ்சமூலம் - 11)




“வான்குருவிக் கூடுஅரக்கு வால்உலண்டு நூல் புழுக்கோல்

தேன்புரிந்து யார்க்கும் செயல்ஆகா - தாம்புரீஇ

வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோ ஒருவர்க்கு

ஒல்காது ஓரொன்று படும்”                                            

                                                         - (சிறுபஞ்சமூலம்: 25)

ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும், இல்.                                       [ சிறுபஞ்சமூலம்:29]

 

 

கர்வமும் வேண்டாம் !

கழிவிரக்கமும் வேண்டாம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/5/2022.

 

உரைச் சித்திரம் : 11.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 11.

 

மழைக் காதலும் ; காதல் மழையும்…

 

காதலர் குழந்தைகள் போல் மழையில் நனைவர் .மழை கொட்டும் போது ஏதாவது கொறித்துக் கொண்டே கதை பேசும் காதலர் கொடுத்துவைத்தவர் என்பர் .காதலுக்கும் மழைக்கும் இருக்கும் தொடர்பு சங்க இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது . ஒன்றிரண்டை இங்கு நாமும் கொறிக்கலாம்.

 

 “ உன் குவளை மலர் கண்ணுக்கு ஏன் இந்த வருத்தம் ? அணிகலன் அணிந்த அல்குலின் வரிவனப்புக்கு ஏன் இந்த வாட்டம் ? கருணை இல்லாமல் உன்னை இப்படி கண்ணீரில் தவிக்கவிட்டு மலை காடென நெடுந்தொலைவு சென்றுவிட்டாரே உன் காதலன் ! வருந்தாதே தோழி ! வெகு சீக்கிரம் வந்துவிடுவார்….” என தலைவியை தேற்றினாள் தோழி .

 

 “ தோழி ! நானறிவேன் .என் வருத்தமோ வேறு .அதோ பார் காலையிலேயே  கொண்மூக் கிளை எனப்படும் மழை மேகம் வருகிறது. அலை எழுப்பும் பாட்டொலி அடங்கி பனியில் கிடக்கும் கடலில் இருந்து நீரை அள்ளிக் கொண்டு வருகிறது . கருவுற்றிருக்கும் யானைபோல் மழை மேகம் வானில் அங்கும் இங்கும் அலைகிறது . இது மழைக்காலம் முடியப்போகிறது பனிக்காலம் தொடங்கப் போகிறது . இக்காலத்தில் மலரும் பிடவம் பூ எங்கும் மணம் வீசுகிறது . இந்த ஊதல் காற்றும் குளிரும் அவரை வருத்துமே என நான் வருந்துகிறேன்.” என தலைவி தோழிக்கு மறுமொழி தந்தாள்.

 

அகநானூறில் கருவூர் கலிங்கத்தார் இப்படிச் சொல்கிறார் என்றால் குறுந்தொகையில் புலவர் பெருங்கண்ணார் இன்னொன்றை வரைந்து செல்கிறார் .

 

தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு காம இச்சை உள்ளுக்குள் அலை மோதுகிறது .இதனை காமநோயென சங்க இலக்கியம் சொல்லும். இந்நோயில் அல்லலுறும் தலைவி தோழிக்கு சொல்கிறாள் ,

 

“ தோழி ! திங்கள் அதுதான் நிலவு வளர்பிறையில் நாளொரு மேனியாய் வளர்வதுபோல் என் காதல் நோய் பெருகுகிறது ;உடல் மெலிந்துவிட்டது ;கைவளை கழன்றுவிட்டது . இளம் தளிரைக் கசக்கிப் பிழிவதுபோல் நான் கவலையால் பிசையப்படுகிறேன். இது மழைக்காலமல்ல , ஆயினும் காலந்தவறிய மழை பெய்யத்துவங்கிவிட்டது .இந்த மழைக்காலம் தொடங்கும் முன்பே என்னவர் வந்துவிடமாட்டாரா என எண்ணுகிறேன் .வராவிடில் மழைக்காலத்தில் கூட இவளை தவிக்கவிட்டுவிட்டாரே என ஊரார் கவலைப்படுவதுபோல் வசை பொழிவாரே . நானும் அதை எண்ணியே கவலையில் மெலிகிறேன்….”

 

பொதுவாய் திருமண விழாக்களில் பேசுவோர் இந்தக் குறுந்தொகைப் பாடலைச் சொல்லாமல் விடுவதில்லை .ஆனாலும் பெரும்பாலும் தப்பும் தவறுமாகவே சொல்லுவார்கள் .ஒரு முறை கலைஞர் தலைமையேற்று நடத்துகின்ற திருமணத்தில் ஒருவர் இப்படிச் செய்ய , மனம் நொந்த கலைஞர்  “இந்த ஒரு குறுந்தொகைப் பாடலையாவது பிழையில்லாமல் தெரிந்து கொள்ளக்கூடாதோ!” என தன் பேச்சில் குறிப்பிட்டார்  .

 

அந்தப்பாடலை ஒட்டி ஓர் சித்திரம் : மழையில் முழுக்க நனைந்த காதலர் ஒரு மாடத்தில் ஒதுங்குகிறார் ; அப்போது தலைவிக்கு ஓர் சந்தேகம் எழுகிறது .மழை விடை பெறுவதுபோல் இவரும் விடைபெற்று விடுவாரோ என சந்தேகக் கண்ணோடு தலைவரை நோக்குகிறார் ; குறிப்பறிந்த தலைவர் சொல்லுகிறார் ,

 

“ என் தாயும் உன் தாயும் உறவினாரா ? இல்லை .என் தந்தையும் உன் தந்தையும் உறவினரா ? இல்லை . உறவின் வழியாகவா நாம் சந்தித்தோம், பழகினோம் , காதல் கொண்டோம் ? இல்லையே ?

 

[ இங்கே நீ என்ன சாதி , நீ என்னமதம் என கேட்டா காதல் கொண்டோம் ? என விரித்துப் பொருள் கொண்டாலும் பிழை இல்லை.]

 

செம்மண் நிலத்தில் மழை பொழிகிறது . செம்மண்ணும் மழைநீரும் பிரிக்க முடியாதவாறு ஒன்றாகக் கலந்துவிடுகிறது .அதுபோல் நாம் அன்பால் கலந்துவிட்டோம் .”

 

இதனைப் பாடியவர் பெயரைக்கூட செம்புலப்பெயல்நீரார் என்றே சங்க இலக்கியம் பதிவு செய்து கொண்டது .

 

ஆம் காதல் சாதி ,மதம் ,எல்லாவற்றையும் மீறி இதுபோல் அன்பால் கலக்கச் செய்யும் .ஆகவேதான் சாதி ,மத வெறியர் காதலுக்கு எதிராய் கத்தியைத் தூக்குகின்றனர் .

 

நாம் காதலைத் தூக்கிப் பிடிப்போம் !

மானுடத்தை வாழவைப்போம் வான்மழைபோல்….

 

மழைக் காதலும்

காதல் மழையும்

தமிழர் ரசனை மட்டுமல்ல பண்பாடும்கூட …

 

 

 குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று

5

பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
காலை வந்தன்றால் காரே மாலைக்

10

குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?

15



  [கருவூர்க் கலிங்கத்தார் , அகநானூறு 183.]

 

 

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையுந் தோழி மான்றுபட் டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத் திரங்கு நம்மினும்
நந்திறத் திரங்குமிவ் வழுங்கல் ஊரே. 

 

புலவர் பெருங்கண்ணார் ,குறுந்தொகை 289.

 

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

 

 [ புலவர் :செம்புலப் பெயல்நீரார் ,குறுந்தொகை :40.]

 

 

மழைக் காதலும்

காதல் மழையும்

தமிழர் ரசனை மட்டுமல்ல பண்பாடும்கூட …

 

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/5/2022.

 

ஒவ்வொரு மரணச் செய்தியும்

Posted by அகத்தீ Labels:

 

ஒவ்வொரு மரணச் செய்தியும்

ஏதோ ஒன்றைச் சொல்லிச் செல்கிறது .

 

நண்பர்கள் தோழர்கள் வட்டம்

விரிந்துகொண்டே சென்ற காலம் ஒன்று இருந்தது

தோளில் கைபோட்டபடி அளவளாவிய கதைகளின்

எண்ணிக்கையை சொல்லி முடியாத காலம் அது.

 

அப்போதும் இதயத்தை பகிர்ந்து கொண்டவர்கள் சொற்பமே

ஒவ்வொருவராய் அவர்களும் விடைபெற

அடுத்து யார் எனும் கேள்வியோடு

தூங்கச்  செல்லும் முதுமையின் துயரத்தை

கவிதையில் சொல்லிவிட முடியாது !

 

சுபொஅ.

ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுகிறது…

Posted by அகத்தீ Labels:

 

 

ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுகிறது…

 

 



ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுவது அசாதாரணமானது . அதுவும் மார்க்சுக்கு பிறகு மோடிவரையிலான தத்துவம் ,கோட்பாடு,அரசியல் சார்ந்து உரையாடுவது மிகவும் நுட்பமானதும் ஆழமானதும்கூட. ஆழந்த புலமைமிக்க இருவரின் உரையாடலாக இந்நுல் அமைந்துள்ளது .

 

ஏற்கனவே இத்துறையில் ஞானம் உள்ளோருக்கு இந்நூல் மறுவாசிப்பாகவும் புத்துணர்வு ஊட்டுவதாகவும் அமையும் . புதிய வாசகர் ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து பல செய்திகளை தகவல்களை உள்வாங்கலாம். தெளிவடையலாம்.

 

சர்வதேச அரசியல் தத்துவப் போக்குகளூடே இலக்கிய கலாச்சாரப் போக்குகளையும் விரவி உரையாடும் இருவரும் மிகவும் பரந்த வாசிப்பும் கூர்ந்த ஞானமும் உடைய செயல்பாட்டாளர்கள். இந்நூலில் அய்ஜாஸ் அஹ்மத் உடன் விஜய் பிரசாத் உரையாடுகிறார் .

 

அய்ஜாஸ் இந்தியாவில் உத்திரபிரதேசம் முஷாபர் நகரில் 1941 பிறந்து ,பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு குடிபெயர்ந்து ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசித்து ,மீண்டும் இந்தியா வந்து இங்கு பல காலம் வசித்துவிட்டு ,அமெரிக்காவில் இவ்வாண்டு [2022] மார்ச்சில் தன் இறுதி மூச்சை விட்டவர் . உலகின் சிறந்த மார்க்சிய அறிஞராக வலம் வந்தவர் .  இடது ,வலது என எல்லா சார்பு நூல்களையும் தேடித்தேடி வாசித்தவர் . மார்க்சியத்தை தொடர்ந்து வந்த பல்வேறு தத்துவக் கூறுகளை விமர்சன நோக்கில் ஆய்ந்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் . உலகெங்கும் இவரது கட்டுரைகள் அறிவுப் புலத்தில் பெரிதும் கொண்டாடப்படுகின்றன. .இந்தியச் சூழல் குறித்து நுட்பமாக பேசியவர் .இவை அனைத்தின்  சாரத்தையும் இந்நூலில் தரிசிக்கலாம்.

 

இவரோடு உரையாடிய விஜய் பிரசாத் நல்ல மார்க்சிய அறிஞர் .பரந்த வாசிப்புக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர் . இதில் அய்ஜாஸை பல கோணங்களில் பேச வைத்துள்ளார் விஜய் பிரசாத் .அதன் மூலம் அறிவார்ந்த செய்திகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார் . பதினெழு பகுதிகளாக இந்த உரையாடல் நீண்டிருக்கிறது .

 

 “… மொத்த உருது இலக்கியத்திலும் எங்கேயும் புனைவாகக்கூட ,இலக்கியத்துவமாகக்கூட,பாகிஸ்தான் உருவாக்கத்துக்கான கொண்டாட்டத்தைப் பார்க்க முடியாது .அது எப்போதுமே துயராகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கும்.” என அய்ஜாஸ் சொன்னதை வாசித்த போது ஒரு நிமிடம் உறைந்து போனேன் .எவ்வளவு ஆழமான அவதானிப்பு .

 

 “ ஒரு கட்டத்தில் லெனினைப் பற்றிய உருது மொழி எழுத்துகள் என்னை அலுப்பு கொள்ளச் செய்தன .எனவே மாஸ்கோவிலிருந்து வந்த லெனின் எழுத்துகளை நான் அமர்ந்து திருத்திச் சரியான உருது வார்த்தைகளில்  எழுதினேன்..” என்கிற அய்ஜாஸ் அஹ்மத் அனுபவம் நம் அனுபவமாகவே உள்ளது .

 

 “ பிராமணியம் மரபாக இல்லாமல் ஆசாரமாக நெஞ்சில் இருக்கிறது” என்கிற சுவிரா ஜெய்ஸ்வாலுடன் உடன்படும் அய்ஜாஜ் சொன்ன ஒரு செய்தி முக்கியமானது ,

 

“பாகிஸ்தானில் அதிக காலத்துக்கு வாழ்ந்துவிட்டு ,அற்புதமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதாலும் - காந்தி ,நேரு போன்றோர் இருப்பதாலும் -மதச்சார்பின்மை முதலிய அம்சங்கள் இருப்பதாலும் ஆர்வத்துடன் இங்கு வந்த எனக்கு , ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கீழ்ப்படியும் தன்மையைப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது .என்னால் உடனடியாக சாதியுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது .இங்கு உயர்சாதியினர் பேசுவதுபோல் பாகிஸ்தானில் பேசினால் அடிவாங்குவார்கள். பாகிஸ்தானில் உங்கள் பாலினத்தை வைத்தே அடையாளம் கொள்வீர்கள் . உங்கள் வர்க்கம் ,சாதி ,மதத்தைக் கொண்டு அல்ல. இரண்டு ஆண்கள் சந்தித்தால் அணைத்துக் கொள்வார்கள் .தில்லிக்கு வந்த பிறகு பல உயர்சாதிக் குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சாதியில் நம்பிக்கைகூட இருக்காது .இடதுசாரிகளாகக் கூட இருப்பார்கள்.ஆனால் நண்பர்கள் மத்தியில்கூட இடைவெளியையைக் கடைப்பிடிப்பார்கள்.அனைப்பது என்பது வரவேற்புக்கான விஷயமாக அவர்களுக்கு இருப்பதில்லை .அத்தகையத் தன்மையை என்னால் உடனடியாக சாதியுடன் பொருத்த முடிந்தது.”

 

இதைத் தொடர்ந்து அம்பேத்கரைப் பற்றிப் பேசும்போது ஓரிடத்தில், “ இந்தியாவில் வர்க்கப் புரட்சி ஏற்பட சாதி ஒழிப்பு முன் நிபந்தனை எனத் தெரிந்துகொண்டேன்” என்கிறார்.

 

தோழர் இஎம்எஸ் ,பி.டி.ரணதிவே ஆகியோர் சாதியைப் பற்றி பேசியதை பாராட்டுகிறபோதே ,கட்சி நடவடிக்கைகளில் அது பிரதிபலிக்கவில்லை என தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார் .இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஒப்புக் கொள்கிற அவர் இன்னும் போக வேண்டியது நெடுந்தொலைவு எனச் சுட்டிக்காட்டுகிறார் .

 

லெனினுக்கு பிறகான உலகில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலில் ஏற்பட்ட மாற்றங்களும் குழப்பங்களும் ,பின் நவீனத்துவம் ,கட்டுடைத்தல் , கிராம்ஸியின் பார்வை ,ஐரோப்பாவில் உருவான பல்வேறு போக்குகள் குறித்து  இந்நூல் நெடுக விமர்சனபூர்வமாக ஆழமாக உரையாடுகிறார் அய்ஜாஸ் . சோவியத் யூனியன் தகர்வு ,சீனாவின் தற்போதைய போக்கு உள்ளிட்ட எதுவும் அவர் பார்வையிலிருந்து தப்பவில்லை .

 

இன்னும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவம் இருப்பதும் , இன்னும் அமெரிக்க கரன்சி உலகில் தனி இடம் பெற்றிருப்பதும் , உலகெங்கும் கலாச்சாரத்தில் அமெரிக்க ஆதிக்கம் நீடிப்பதும் , ராணுவம் சார்ந்த அமெரிக்க பொருளாதாரம் , உட்பட பலவற்றை சுட்டி அமெரிக்க வல்லரசின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மிகச் சரியாகச் சொல்லுகிறார் .

 

ஏகாதிபத்தியத்தை குறைத்து மதிப்பிடும் போக்கை விமர்சிக்கிறார் ; அதே நேரம் காலகதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இணைத்தே பார்க்கிறார் .சோவியத் யூனியன் தகர்வு ,சீனாவின் செயல்பாடுகள் இவற்றின் பின்னணியில் ஒருங்கிணைந்த பார்வையை நோக்கி நகர்த்துகிறார் .

 

நவதாராளமயத்துக்கும் உலகெங்கும் வலதுசாரி அரசியல் மேலோங்குவதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும் ,இடதுசாரிகளின் தோல்வியையும் தயக்கமின்றி விவாதிக்கிறார் . இங்கு சங்பரிவாரின் எழுச்சியையும் மோடியின் வருகையையும் இதனோடு இணைத்துப் பார்த்தும் இதன் தனிக் கூறுகளை உரசிப்பார்த்தும் அய்ஜாஸ் சொல்லும் கருத்துகள் ஆழ்ந்து பரிசீலிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவையே !

 

கேரளாவில் ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் இடதுசாரிகளுக்கு தந்த தோல்வியையும் சுட்டுகிறார் . இதைப் படித்த போது என்னுள் எழுந்த கேள்வி ; மதவாதம் சூழ்ந்துள்ள நாட்டில் ஒரு மாநில அரசு மதச்சார்ப்பற்று செயல்படுவதில் உள்ள சங்கடங்களும் சவால்களும் முக்கியமானவை . “ஓரடி முன்னே இரடி பின்னே” என்கிற லெனின் சொற்களைத்தான் இங்கும் சொல்ல வேண்டுமோ ?

 

 “பிராமண முறையிலோ சமூக சமத்துவத்துக்கான கொள்கையே கிடையாது . சாதிய முறையின் அடுக்குகள் அத்தகைய கொள்கை இருக்கும் வாய்ப்பையே இல்லாமலாக்கி விடுகிறது” என்கிற அய்ஜாஸ் தன் உரையாடல் போக்கில் அம்பேத்கரின் சரியான பார்வைகளை சுட்டிக்காட்டுகிறார் . மேலும் , “இந்து மதவாதம் குறிப்பிட்ட வலிமையுடன் எதிர்க்கப்பட வேண்டும் என்கிற நேருவின் வாதத்தை நான் ஏற்கிறேன்.” என்கிறார் அய்ஜாஸ் .

 

மொழிப் பிரச்சனை தவிர்த்து வேறெதுக்கும் தமிழகம் பக்கமோ தென் இந்தியா பக்கமோ தன் பார்வையை பொதுவாக அய்ஜாஸும் திருப்பவில்லை . பொதுவாய் தில்லியில் மையம் கொள்கிற அறிவுப் புலமை வட இந்தியாவை மட்டுமே மையம் கொண்டே இருப்பது தற்செயலானதா ? இடதுசாரிகளுக்கும் இந்த விபத்து ஏற்படுகிறதே என்கிற காத்திரமான கேள்வி என்னுள் எழுகிறது .

 

ஜோதிபாசுவை பிரதமராக முன் மொழிந்த விவகாரத்தை அவர் நோக்கில் பேசவும் தவறவில்லை . பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து பின் வெளிவந்த தான்  அதன் பிறகு வேறு எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராகவில்லை எனினும் அவர்களோடு நெருக்கமாக இருந்தேன் . சிபிஎம் ,சிபிஐ இருபக்கமும் தனக்கு நண்பர்கள் உண்டு என்பவர் ஜோதிபாசு விவாதத்துக்கு பிறகு சம்மந்தமில்லாமல் தானும் கோஷ்டிவாதத்தில் இழுத்துவிடப்பட்டது குறித்து வருந்துகிறார் .

 

இறுதியாக . “ இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் உங்களை அதன் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறது.” என்கிற விஜய் பிரசாத்தின் கூற்றை அங்கீகரித்து அய்ஜாஸ் சொல்கிறார் ,“ நிச்சயமாக .அதுதான் சரியும்கூட .எனக்கு அது ஆச்சரியம் அளிக்கவில்லை . ஏனெனில் அது எனக்கு சந்தோஷம் தரக்கூடிய உண்மை.”

 

இந்த நூலில் பல்வேறு அறிஞர்களின் பெயர்களும் ,அவர்களின் வாதமும் விமர்சனபூர்வமாக இடம் பெற்றுள்ளது .நான் அவற்றை எல்லாம் இந்த நூலறிமுகத்தில் சொல்லி புதிய வாசகர்களை மிரட்ட விரும்பவில்லை .அவை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளே ! ஆகவே ,இந்த புத்தகத்தை ஒருவர் தனியே வாசிப்பதைவிட கூட்டாக வாசிப்பதும் விவாதிப்பதுமே பயன் தருவதாக அமையும் என பரிந்துரைக்கிறேன்.

 

கடினமான நூலை தமிழாக்கம் செய்த ராஜசங்கீதனுக்கு வாழ்த்துகள் .

 

மானுடத்துக்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல,

அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் உரையாடல் ,தமிழில் : ராஜசங்கீதன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,Email : bharathiputhakalayam@gmail.com , www,thamizhbooks.com தொடர்புக்கு 044 -24332934 / 24332424 /24330024 / 9498062424 .பக்கங்கள் :272 , விலை : ரூ.260 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

14/5/2022.