குறுமதியாளருக்கு….

Posted by அகத்தீ Labels:

 

குறுமதியாளருக்கு….




 

பட்டாம் பூச்சிகளின்

வண்ணங்களை பட்டியல் போட

சொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 

மலர்களின்

வாசனையை வகைப் படுத்த

வழிதெரியாது தவிக்கிறேன்

 

கனிகளின்

சுவையை விவரிக்க இனிப்பு என்கிற

ஒற்றைச் சொல் போதுமானதாக இல்லை .

 

கானகத்தின் கனத்த மவுனத்தை

கவின் சிரிப்பை தாள இசையை

நகலெடுக்க கருவி இல்லை !

 

அருவியின் பேரழகை

தாள லயத்தை நீர்ச் சுழிப்பை

சொல்லில் அடக்க முடிவதில்லை

 

ஒற்றையாய் அனைத்தையும் குறுக்கும்

குறுமதியாளருக்கு பன்மையின் வலிமை

எப்போதும் புரியப் போவதில்லை !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

23/1/2022.

கூத்துக்கலையைச் சுற்றி…..

Posted by அகத்தீ Labels:

 


 

கூத்துக்கலையைச் சுற்றி…..

 


பெரணமல்லூர் சேகரனின் படுகளம்’நாவல் படித்தேன் .தலைப்பும் அட்டையும் இந்நாவல் தெருகூத்து தொடர்பானது என அறிவித்தது . களமும் கதையும் அதுவேதான் .

 

தெருக்கூத்து கலைஞர் முருகேசன் மகன் கர்ணன் கூத்துக் கலைக்காக தன்னை அர்ப்பணித்து கொள்பவனாகவும் , புதிய முயற்சி செய்பவனாகவும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறான் . பெரியார் தொண்டரும் கட்டிட மேஸ்திரியுமான பலராமன் மகள் மண்டோதரி கதாநாயகி .இரு குடும்பமும் நட்பான குடும்பம் . மண்டோதிரியின் தாய் கல்யாணிக்கு தன் அண்ணன் மணியின் மகன் ஐயப்பனுக்கு மகளைக் கட்டிகொடுக்க ஆசை . மண்டோதரியோ கர்ணனைக் காதலிக்கிறார் . இந்த முடிச்சை சுற்றியும் தெருக்கூத்தைச் சுற்றியும் நாவலை கட்டி எழுப்புகிறார் .

 

சேகரன் அவருக்கே உரிய நாடக பாங்கில் கதையை நகர்த்திச் செல்கிறார் . தெருக்கூத்து தன் பழமையான புராணத் தடத்திலிருந்து வெளியேறி புதுமையைப் படைக்க வேண்டும் என்கிற சேகரினின் ஆசையையும் அமைப்பு சார்ந்த பார்வையையும் இந்நாவல் நெடுக பிசைந்திருக்கிறார் .

 

தெருக்கூத்துக்கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் ,அதை நம்பி வாழும் கலைஞர்களை அமைப்பாக்கி வழிநடத்த வேண்டும் என்கிற தன் தீர்மானத்திற்கொப்ப பாத்திரங்களை கட்டமைத்திருக்கிறார் .கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் .ஆயின் ,தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியல் போக்கு யதார்த்தத்தில் எப்படி உள்ளது என்பதை அனுபவ ரீதியாக அறிந்த களச் செயல்பாட்டாளர்கள்தான் உரசிப் பார்த்து உண்மை சொல்ல இயலும் .

 

 

மகாபாரதத்தை கட்டியங்காரன் கர்ணன் மூலம் கேள்விக்கு உட்படுத்தும் இடங்களை நான் ரசித்தேன் . இதுபோன்று குறுக்கீடுகள் மூலம் விமர்சனப் பார்வையை உருவாக்குவது ஏற்கப்பட்ட கலையுத்தியே !  

 

இந்நாவலில் சாதியம் தீண்டாமை ,பண நெருக்கடி , சக பெண் தொழிலாளிக்கு பாலியல் சீண்டல் போன்ற பிரச்சனைகள் வருகின்றன .தீர்வும் உடனுக்கு உடனே காணப்பட்டு விடுகின்றன .இதுபோல் யதார்த்தமும் இருந்தால் நல்லதுதான் . சரி ,கற்பனையிலாவது அப்படி இருக்கட்டும் என்று நாவலாசிரியர் முடிவெடுத்திருக்கலாம்.

 

நான் வாசிக்கத்துவங்கிய காலத்தில் நாவல்களில் கதாபாத்திரங்கள் வில்லனைத் தவிர அனைவரும் ஒழுக்க சீலர்களாக நூறு விழுக்காடு உத்தமர்களாக இருப்பார்கள் . நெடிய இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு நாவலை வாசிக்க வழி ஏற்படுத்தியுள்ளார் சேகரன். தொலைகாட்சி மெகா சீரியல்களில் வில்லத்தனமே எல்லா பாத்திரங்களிலும் ஓங்கி நிற்பதைத் தொடர்ந்து அவதானித்த சேகரன் அதற்கு நேர் எதிரான ஒன்றை கட்டமைத்திருப்பாரோ ?

 

“…புதினத்தின் பக்கங்கள் தோறும் பாத்திரங்களின் நேர்த்தியான உரையாடல்களும் ஆசிரியரின் கருத்துப் பதிவுகளும் களச் சித்தரிப்புகளும் கதையை செம்மை செய்யும் வகையில் இயல்புச் சீர்மையில் இடம் பெற்றுள்ளன.” என்கிறார் அணிந்துரையில் ப.ஜீவகாருண்யன் . அது ஒரு வகையில் சரியே !

 

ஆயின் ,முன்னுரையில் சேகரன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறபடி அவரின் கருத்துவரைவுக்கு ஒப்ப பாத்திரங்களையும் உரையாடல்களையும் ஆக்கியிருக்கிறார் என்பதும் மேலும் பொருத்தமான வரையறை ஆகும் .

 

நூலறிமுகத்தில் கதைச் சுருக்கம் சொல்லிவிடக்கூடாது என்பதால் விட்டுவிடுகிறேன். வாசகர்கள் படித்து தீர்ப்பெழுதுங்கள் !

 

படுகளம் , [நாவல் ]

ஆசிரியர் :பெரணமல்லூர் சேகரன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

பக்கங்கள் : 360 , விலை : ரூ.340/

நூல் பெற : 044 24332424 ,24332924 ,24356935

bharathiiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

22/1/2022.

 


‘குக்கூ’ என்றது கோழி ; பெருநகை கேளாய் , தோழி !

Posted by அகத்தீ Labels:

 

‘குக்கூ’ என்றது கோழி ;

பெருநகை கேளாய் , தோழி !




 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 எப்போதும் அரசியல் பேச்சுதானா ? பொங்கல் நன்னாளிலாவது கொஞ்சும் காதலைக் கொஞ்சம் பேசினால் என்ன ?”

 

 அட ! காதலைவிட்டால் வேறு பேசப் பொருளே இல்லையா ? அங்கே சுற்றி இங்கே சுற்றி காதலில் வந்து நங்கூரம் பாய்ச்சி நிற்க வேண்டுமா ?”

 

 அறம் ,பொருள் , இன்பம் என முப்பால் தந்த வள்ளுவன் காதலைப் பேசினானே !நாமும் பேசலாமே !”

 

பொங்கல் இதழுக்குக் கட்டுரை கேட்டதும் என் மனதுள் இப்படித்தான் உரையாடல் எழுந்தது .

 

காதலும் காமமும் கெட்ட விவகாரம் போல் போலியாய் சித்தரித்து , சாதி ,மத வெறியை பெண்ணின் யோணியில் திணித்து , இதுவே பண்பாடென கொக்கரிக்கிறது வெறிக்கூட்டம். அதற்குப் பதிலடியாய் காதலைப் பேசுவதும் காலத்தின் கட்டளையே.

 

தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க இலக்கியம் தொட்டு இன்றுவரை காதல் எப்போதும் உயிர்ப்பான பாடுபொருளே ! சங்க இலக்கியம் சொல்லும் காதலை மட்டுமே எழுத பல்லாயிரம் பக்கங்கள் தேவை . காதலும் காமமும் அங்கு நெடுக விரவியே கிடக்கும்.

 

பெண் கவிஞர்கள் ,பெண் எழுத்தாளர்கள் காதலை ,காமத்தை வெடிப்புறப் பேசலாமா என கொதிப்புற்று கேள்விக் கணை வீசுவோர் கோபப் பர்வைக்கு எதிராகச்  சங்கப் பெண்பாற் புலவர்கள் எழுதியதில் சிலவற்றை காட்சிப்படுத்த விரும்புகிறேன் .

 

முதலில் ,சங்க பெண்பாற் புலவர்கள் எத்தனை பேர் என்பதில் அறிஞர்கள் கணிப்பில் மாறுபாடுண்டு ; .வே.சா -38 , வையாபுரிப்பிள்ளை -30 , புலவர் கா.கோவிந்தன் -27 , .சஞ்சீவி 30 ,ஒளவை துரைசாமிப்பிள்ளை -34 , ஒளவை நடராஜன் -41 , தாயம்மாள்-45 , என சொல்லுகின்றனர் . ந.முருகேச பாண்டியன் 41 தான் சரி என்கிறார் . இதுபோக காரைக்கால் அம்மையார் ,ஆண்டாள் என பட்டியல் நீளும் . பெரும்பாலும் இவர்கள் எல்லோர் பாடல்களிலும் காதலும் காமமும் விரவியே இருக்கும் . ஏனெனில் அது மானுடர் இயற்கை . சரி, சில காட்சிகள் பார்ப்போம்.

 

இப்போது நேரம் என்ன  ? பிரம்ம முகூர்த்தம் என அவர்கள் சொல்லுகிற புலர்ந்தும் புலராதக் காலைப் பொழுதா ? அதி காலையா ? நண்பகலா ? உணவு உண்ட பின் மயக்கம் கொள்ளும் மதியப் பொழுதா ? இரவு பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதா ? முன் இரவா ? நள்ளிரவா ? என்றெல்லாம் கணக்குப் பார்த்தால் காமம் பொய்யாகிவிடுமாம். காதலியைக் கூடாமல் பிரிய நேருமாயின் ஏற்படும் துயரத்துக்கு அளவேது ? பனை ஓலையில் குதிரை செய்து அதன் மீது ஏறி நடுத் தெருவில் அவன் நின்றாலும் பழி அவளுக்குத்தானாம். அதையும் மீறி உயிர் வாழ்தல் அவனுக்கு பழியாம் .

 

நான் சொல்லவில்லை அள்ளூர் நன்முல்லையார் எனும் பெண்பாற் புலவர் சொல்கிறார் .

 

 காலையும் பகலும் கையறு மாலையும்,

ஊர்துஞ்சு யாமமும் விடியலு,என்று இப்

பொழுது இடை தெரியின் ,பொய்யே காமம் ;

மாஎன மடலொடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே ;

வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே .”

 

[குறுந்தொகை 32 : குறிஞ்சி]

 

இன்பம் துய்க்க நாளென்ன ? பொழுதென்ன ? ஆனால் அப்படியே கிடக்க முடியுமா ? எல்லா இரவும் விடியத்தானே செய்யும் ? பொழுது புலரத்தானே செய்யும் ? கோழி கூவத்தானே செய்யும் ?

 

அள்ளூர் நல்முல்லையார் தன்பாடலில் இதை காட்சிப்படுத்துகிறார் . காதலனும் காதலியும் தோளோடு தோளணைத்து கிடந்தனர் . கால நேரம் மறந்து முயங்கிக் கிடந்தனர் .அப்போது கோழி ‘குக்கூ’ எனக் கோவியது .அது எப்படி இருந்தது தெரியுமா ? காதலரைப் பிரிக்கும் கூர்வாளாய் இருந்ததாம் .அந்த கூர்வாளைக் கண்டு காதல் நெஞ்சம் கதறியதாம்.

 

 “ ‘குக்கூ’ என்றது கோழி ; அதன் எதிர்

துட்கென் றன்று என்தூஉ நெஞ்சம்-

தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.”

 

[ குறுந்தொகை 157 ; மருதம் ]

 

அதெல்லாம் சரி ! வீட்டு வசதியும் சுற்றுச்சூழலும் இதற்கு ஒத்துழைத்ததோ ! அல்லது அன்று குறைந்த மக்கள் தொகையால் இயற்கையின் பெருவெளி அடைக்கலம் தந்ததோ ! யாமறியோம் !

 

இன்றைக்கு பெரும்பாலன குடும்பங்களில் கணவன் மனைவிக்கு தனி படுக்கை அறையே கிடையாது .பிரைவேசி எனச் சொல்லுகிறார்களே அந்த தனக்குரிய இடமே கிடையாது . கோழி வாழ்க்கைதான் பெரும்பாலோருக்கு வாழக்கிடைக்கிறது .

 

தாம்பத்திய சிக்கலில் இதைப் பற்றி யார் பேசுவது ?அடுத்தவன் படுக்கை அறையில் அத்துமீறி நுழைவதும் மனித உரிமை மீறல்தான் ; படுக்கை அறையே இல்லாத பெரும்திரள் மக்கள் ; எந்த வகை மனிதமோ ?

 

அன்றைக்கும் பொருள் தேடி காதலியைப் பிரியும் கட்டாயம் ; போர் நிமித்தம் பிரியும் கட்டாயம் எல்லாம் இருந்திருக்கிறது .இதற்கு எதிராய் புலவர்கள் கொதித்து நெருப்பள்ளி கொட்டியிருக்கிறார்கள் .

 

நற்றிணையில் புலவர் ஒளைவையார் விவரிக்கிறார் ;

 

அன்பான தோழியே ! ஒரு நாள் ஒரே ஒரு நாள் உன்னைப் பிரிந்தாலும் உயிர் பிரிந்ததுபோல் அலறுபவளே !

 

எழிலான அடர்த்தியான கூந்தலை உடையவளே !

 

நம்மை இங்கே தனியாக விட்டுவிட்டு அவர் வெளிநாடு செல்வாராம் …அங்கே போய் பணி முடித்து பொருள் ஈட்டி வருவாராம் …

 

அதுவரை இங்கு நாம் புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமாம் …

 

தோழி ! படம் எடுக்கும் பாம்பும் புள்ளிமானும் நடுங்கும்படி இடியும் மழையும் கொட்டும் நடுயாமத்திலும் , நாம் அதனைக் கேட்டுக்கொண்டு உயிர்தரித்திருக்க வேண்டுமாம் ;

 

கேட்டாயா ? பெரும் நகைப்புக்குரிய இந்தச் செய்தியை…

 

இப்படி தங்களின் தாபத்தைக் கொட்டிக் கேள்வியால் கீறுகின்றார் .

 

“பெருநகை கேளாய் , தோழி !காதலர்

ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்

பொம்மல் ஓதி ! நம் இவண் ஒழியச்

செல்ப என்ப ,தாமே ; சென்று ,

தம் வினை முற்றி வரூஉம் வரை ,நம் மனை

வாழ்தும் என்ப ,நாமே ,அதன் தலைக்

கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்ப,

படுமழை உருமி உரற்று குரல்

நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே.”

 

[ குறுந்தொகை 129 ;குறிஞ்சி ]

 

அந்தக் காலத்தில் வாரங்கள் ,மாதங்கள் என  பிரிந்துபோக நேரிட்டபோதே இப்படிப் புலம்பித் தீர்த்தனர் .இப்போது குடும்பத்தைப் பிரிந்து ஆண்டுகள் பலவாக , அதிலும் கொரானா கடுங் காலத்தில் இன்னும் நீளும்  கொடுந்தண்டனையை என்னென்பது ?

 

சரி ! வயிற்றுப்பாடு பொறுத்துக் கொள்ளலாம் என்றாலும் ஆண் ஆண்தானே,ஆண் மையச் சமூகம்தானே ! என்ன நடக்கும் ?

 

சங்கப் புலவர் ஒளவையாருக்கு அந்த சந்தேகம் வந்து விட்டது . அவர் பாடலில் நொந்து சொல்கிறார் ; ஆண்களை சந்தேக நெருப்பில் பொசுக்குகிறார் .

 

நாம் அவரை நினைக்கிறோம் .அவர் நம்மை இதுபோல் நினைக்கிறாரா ? பிரிவை நினைத்த மாத்திரத்திலேயே நம்முள் கவலையும் கண்ணீரும் ஊற்றெடுக்கிறது . நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை . உணர்ச்சிகள் நம் கட்டிற்குள் இல்லை .வானளவு துயர் மேலிடுகிறது .என்ன செய்ய ? சரி ! நாம் கட்டி அணைத்து மகிழ்ந்த காதலர் அங்கு பிறன் மனை அல்லது வெறொரு பெண்ணை நாடாத சான்றாண்மை மிக்கவராக இருப்பாரா ?

 

 “ உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளது ,

இருப்பின்எம் அளவைத்து அன்றே ; வருத்தி

வாந்தோய் வற்றே ,காமம் ;

சான்றோர் அல்லர் ,யாம்மரீஇ யோரே “

 

[குறுந்தொகை 102 ; நெய்தல் ]

 

இங்கே ஓர் கேள்வி எழுகிறது .கற்புநிலை என்று சொல்ல வந்தால் அதனை இரு கட்சிக்கும் பொதுவில் வைக்கும் பண்பாடு எப்போது முகிழ்க்கும் ?

 

ஆணுக்கு ஓர் நியாயம் .பெண்ணுக்கு ஓர் நியாயம் . சரியா என்பது நம் கேள்வி . ஆயின் , ஏற்க மறுத்து  அப்படியானால் பெண்ணும் கெட்டழிந்து போகலாமா எனப் பண்பாட்டு போலிஸார் கேள்வி எழுப்புவர் .

 

நாம் தெளிவாக உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாயிற்று . ஆண் ஒன்றைச் செய்யலாமெனில் பெண்ணும் செய்யலாம் , திருநங்கையும் செய்யலாம் ,திருநம்பியும் செய்யலாம் .ஒன்றை பெண் செய்யக்கூடாதெனில் ஆணும் செய்யக்கூடாது .திருநங்கையும் செய்யக்கூடாது .திருநம்பியும் செய்யக்கூடாது .பாலின சமத்துவப் பார்வை என்பது விரிந்து கொண்டே செல்ல வேண்டும் . ஏற்ற தாழ்வு கூடாது .

 

காதலுக்கு சாதி ,மதம் ,மொழி ,இனம் ,நாடு என்ற பாகுபாடும் கிடையாது .கூடாது .காதல் மானுட இயற்கை .

 

ஒரு பெண்ணின் ஆவேசமான ஆனால் மிக நியாயமான மிகவும் வலுவான கேள்வியை பெண்பாற் புலவர் வெள்ளிவீதியார் கேட்கிறார் ,

 

நல்ல ஆரோக்கியமான பசு ஒன்று இருக்கிறது .அது இன்சுவைப் பாலைப் பொழியும் . அதனை ஒன்று கன்று குடிக்கட்டும் இல்லையெனில் பாத்திரத்தில் கறந்து குடிப்போம் .அதைவிடுத்து மண்ணில் பீய்ச்சலாமோ ?தேமலைக் கொண்ட அல்குலும் இளமைப் பேரழகும் வீணாகவிடலாமா ?

 

“ கன்றும் உண்ணாது ,கலத்திலும் படாது,

நலஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு,

எனக்கும் ஆகாது ,என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என்மாமைக் கவினே.”

 

[குறுந்தொகை 27 ; பாலை]

 

காதலை ஏற்று உடனே மணமுடித்து வாழவைப்பவர் குறைவு .ஓட ஓட விரட்டுகின்றனர் .இப்போதெல்லாம் கொலையே செய்து விடுகின்றனர் .சாதியும் மதமும் காதலுக்கு எமனாய் கொலைவாளோடு திரிகிறது .ஆயினும் காதல் மடிவதில்லை .அது துளிர்த்துக் கொண்டேதான் இருக்கும்.

 

அதனையும் வெள்ளிவீதியார் பாடுகின்றார் .

 

தோழி ! இந்த மண்ணை ஆழமாகத் தோண்டி அதற்குள்ளாகவா நம் காதலர் மறைந்திருக்கப் போகிறார் ; வானை நோக்கி உயர்ந்து பறந்து விண்ணுலகம் போயிருக்கப் போகிறாரா ? நீளப் பெருங்கடலில் நடந்து போயிருக்கப் போகிறாரா ? மாட்டார் . எனவே நாடு தோறும் ,ஊர் தோறும் ,வீதி தோறும் குடி தோறும் தேடிப்பார்த்தால் அவர் அகப்படாமல் தப்புவதுண்டா ?

 

 “நிலம்தொட்டுப் புகாஅர் ; வானம் ஏறார்;

விலங்குஇரு முந்நீர் காலின் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரின்

கெடுதரும் உளரோ ?நம் காதலரே .”

 

[குறுந்தொகை 130 ; பாலை ]

 

காதலை தடுக்கும் எந்த அரணும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை .இனியும் கிடையாது .

 

கவிஞர் தமிழ் ஒளியின் கவிதையோடு இப்போது விடைபெறுவோம்.

 

 “ காவலும் கட்டுகளும் – ஒரு

கன்னியின் உள்ளம் வளர்

ஆவலை வென்றதில்லை –நீ

அறிக என்றுரைத்தேன் !”

 

நன்றி : வண்ணக்கதிர் ,தீக்கதிர் , 16/1/2022.