தோழர்கள் இல்லாமல் போனால்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி - 39


தோழர்கள் இல்லாமல் போனால் 

சு.பொ.அகத்தியலிங்கம்





‘‘தனிப்பட்ட முறையில் கிடைக்கும் ஆதாயத்தின் பொருட்டு நீங்கள் பொய்சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் ; அப்போது ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்கு எதிராகபொய் சொல்வீர்களா?உண்மையைத்தான் சொல்லுவீர்களா?’’ 

‘‘போட்டி கடுமையாக இருக்கிறது . சில இடங்களே உள்ளன. திறமையான பலர் போட்டியில் உள்ளனர் .நீங்கள் வெற்றி பெற அடுத்தவர் குரல்வளையை நெரித்தாக வேண்டும் ; அப்படிச் செய்வது தப்பில்லை என்று நினைக்கிறீர்களா?’’


‘‘உங்களுக்கென்று ஒரு உறுதியான லட்சியத்தை வரிந்து கொண்டு உறுதி குலையாது உழைப்பீர்களா? அல்லது அதிர்ஷ்டத்தை பொறுத்தது என இருப்பீர்களா?’’
இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்லுவீர்கள் என சற்று கற்பனை செய்துகொள்ளுங்கள்; கீழே உள்ள பதில்களைப் படியுங்கள்.
முதல் கேள்விக்கான பதில்; ‘‘நீ நேர்மையாய் இருக்க வேண்டும். எப்போதும் உண்மையில் நீ என்ன நினைக்கிறாயோ எதை நினைக்கிறாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். நீ உன்னையே மதிப்பிட்டுக் கொள்ள – மற்றவர்கள் மதிப்பை சம்பாதிக்க – துணிச்சல்மிக்க வலிமைமிக்க மனிதனாய் இருக்க நீ நேர்மையானவனாய்த்தான் இருக்க வேண்டும் .பொய் சொல்லுகிற ஒருவன் உண்மையான நண்பனாக இருக்க முடியாது ; அவனை நம்ப முடியாது . விண்வெளிக்கு எப்போதேனும் பயணம் செய்ய நேர்கையில் நம்முடன் வரும் தோழன் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பொய் சொல்லாதவனாக இருக்க வேண்டும்..’’
இரண்டாவது கேள்விக்கான பதில்; ‘‘வாய்ப்புகள் குறைவாகவும் போட்டி அதிகமாகவும் இருக்கிறது என்பது உண்மை அல்ல; குறைந்தபட்சம் எங்கள் நாட்டில் அப்படி இல்லை. ஒருவனின் உழைப்பு, ஆற்றல், முன்முயற்சி இவற்றைக் கொண்டே எங்கள் நாட்டில் தீர்மானிக்கிறோம்.செயலூக்கமான அணுகுமுறையும், புதுமையைப் புகுத்தும் ஆற்றலுமே பணியில் மிக முக்கிய அம்சமாகும். இன்னொருவன் குரல்வளையை அறுப்பதின் மூலம் வெற்றி பெறுகிறவன் நிச்சயமாக உடல்வலிமையால் மிரட்டியும், பணபலத்தால் பேரம் பேசியுமே தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளுகிறவன் ஆவான். அப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறுவார்களேயானால் எல்லா இடங்களிலும் தகுதியற்றவர்களே நிரம்பி வழிவார்கள். எங்கள் நாட்டில் அப்படிப்பட்ட சூழலே இல்லை.’’
மூன்றாவது கேள்விக்கான பதில் ; ‘‘நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய அபாயத்தைப் போலவே ; அதிர்ஷ்டத்தையும் எதிர்கொள்கிறேன் .குறிக்கோளை நோக்கி கடுமையாக உழைப்பவருக்கே அதிர்ஷ்டம் கிட்டும் , என்றாலும் நான் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன் ,வகுத்துக்கொண்ட குறிக்கோள் உழைப்பதற்கு உரியதாய் இருக்கவேண்டும் – உன்னைச் சுற்றிலும் தோழர்கள் இருக்க வேண்டும் .நீ ஊக்கம் குன்றி –குறிக்கோளைக் கைவிடத் துணியும் போது தோழர்கள் தோள்கொடுத்து வெற்றிக்கு உதவுவார்கள் .மகிழ்ச்சியில் பங்கு கொள்வார்கள். நீ தனித்திருந்தால் எந்த வெற்றியும் உனக்கு மகிழ்ச்சியூட்டாது.’’
கனடா நாட்டைச் சார்ந்த இர்விங் லாசர் சோவியத் விண்வெளிவீரர் யூரி ககாரினுக்கு கடிதத்தில் எழுப்பிய கேள்விகளும் ; யூரி ககாரின் எழுதிய பதில்களும்தான் மேலே உள்ளவை . ‘‘லிட்டரேச்சர்நாயா கெஸட்டா’’ ஏடு அதனை வெளியிட்டது . யூரி ககாரின் பதில் தொடங்கும் முன் சொன்ன வரிகள்; ‘‘என்னுடைய நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘தோழரே’ என்றுதான் அழைத்துக் கொள்கிறோம்.குழந்தைப் பருவம் தொட்டே நான் நண்பர்கள் ,தோழர்கள் சூழ வாழ்ந்தவன். எட்டு வயதானபோது இளம் பயோனியரில் சேர்ந்தேன் .நாட்டில் குறுக்கே கால் போன போக்கில் சென்றோம்.விளையாடினோம்.காட்டில் முகாம்களில் உறங்கினோம். அந்த வாழ்க்கை தோழமையின் அவசியத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. காலம் ஓடியது. நான் இளம்கம்யூனிஸ்ட் கழகத்தில் சேர்ந்தேன் .பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன்…’’
கடிதத்தின் நிறைவாக எழுதினான் , ‘‘ஒழுக்க நெறியானது உழைப்பின் நடைமுறையில் கணக்கிடப்படுகிறது . அது உழைப்பின் சமூக இயல்பாலும் ; அதனைத் தூண்டும் சக்தியாலும் தீர்மானிக்கப்படுகிறது.’’

 கவிதையை ஒன்றைப் பார்ப்போம். 

‘‘வேண்டாம்! வேண்டாம்! ஒருவர் பிழைப்பிற்காக இரு உயிர்கள் சித்திரவதைப்பட வேண்டாம் ; 
வேண்டாம்! வேண்டாம்! கீரியையும் பாம்பையும் மோதவிடவே வேண்டாம் ; வேண்டாம்! 
வேண்டாம்! மனிதர்கள் ஒருவரையொருவர் கொத்தி வேதனைப்படுத்த வேண்டாம்; வேண்டாம் 
! வேண்டாம் ! நாடும் நாடும் மோதி அழிய வேண்டாம்.’’ 
இந்தக் கவிதை பிறந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. இந்திய – சோவியத் நட்புறவு அடிப்படையில் இந்தியா வந்தார் உக்ரேனைச் சார்ந்த இளங்கவிஞர். தில்லி வீதியிலே பாம்புக்கும் கீரிக்கும் சண்டைவிடப் போவதாய் மோடிமஸ்தான் வித்தை காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்பட்டார் . ஊர் திரும்பியதும் கவிதை ஆக்கினார் . இவர் பெயர் தெரியவில்லை. ரஷ்ய இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டும் கவிதையானது.
சண்டைகளை குற்றவுணர்ச்சியின்றி வேடிக்கை பார்க்கும் நம் உளவியலும் ; சதா எங்கும் சமாதானத்தை விழையும் ருஷ்ய உள்ளமும் எதிர் எதிரே இருப்பதை இது படம் பிடிக்கிறது . சோவியத் இலக்கியங்களில் கலையும் விழுமியங்களும் ஓங்கியிருந்தது. லெனினை கதாநாயகனாக வரித்து எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகள் ஏராளம்; பட்டியல் நீளும். அதில் மரீய்ட்டா ஷாகினியா எழுதிய ‘‘உல்யானவ் குடும்பம்’’ என்ற இரட்டை நாவல் புகழ்பெற்றது. ‘‘….. ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லாமல் – ஒரு ஆசிரியர்கூட இல்லாமல் –எழுத்து வாசனை கூட இல்லாமல் ; வயல்களில் புல்லைப்போல் நசுங்கும் – லட்சக் கணக்கான குழந்தைகள் – ஏன் ஒரு மனிதக் கூட்டமே விடப்பட்டிருக்கிறது; அறியாமை வாழ்க்கையைக் குறுக்கிவிடுகிறது’’ என வருந்தும் ஒரு கல்வி அதிகாரி.
‘‘குழந்தையானது எதுவும் எழுதப்படாத புத்தம் புதிய கரும்பலகை; எவனொருவனும் விரும்பியதை எல்லாம் கிறுக்குவதற்காக துடைத்துவைக்கப்பட்ட கரும்பலகை அல்ல; குழந்தையும் ஒரு மனிதனே; அவ்வாறுதான் கருதப்பட வேண்டும்’’ என பேசுகிறார் அந்த கல்வியதிகாரி – லெனினின் தந்தையை – அவர் பள்ளிக்கூடமில்லா ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டுவர எடுத்த முயற்சியை முன்வைத்து இலியா நிக்கோலியாவிச் எனும் கதாபாத்திரத்தை இந்நாவலில் அதன் ஆசிரியர் உருவாக்கி இருப்பார் .
 சிங்கிஷ் அய்த்மாதோவின் கதையொன்றின் கதாநாயகன் டூயீஷென் – முன்னாள் செம்படை வீரன் – எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதே செம்படையில்தான். புரட்சிக்குபின் 1920இல் தன் படைவீரன் உடுப்போடு பின்தங்கிய கீர்கீழ் கிராமத்துக்கு ஒரு ஆசிரியனாய் வருகிறான் . ஒரு மனிதரின் படத்தைக் காட்டி ‘‘இவர்தான் லெனின்’’ என தன் மாணவர்களுக்குப் பாடம் தொடங்குகிறான். எழுத்தறிவின்மையை சோவியத் யூனியன் வெற்றிகண்ட ரகசியம் அதுதான். சோவியத் புரட்சி படைத்தது புதிய மனிதனை – புதிய வாழ்க்கையை …
.
புரட்சி தொடரும்
நன்றி : தீக்கதிர் , 31 /07/2017

புதைக்கப்படும் உண்மை

Posted by அகத்தீ Labels:



புதைக்கப்படும் உண்மை








பொய் சிரித்துக்கொண்டிருக்கிறது
உண்மை அழுதுகொண்டிருக்கிறது

பொய்க் கூடி கும்மாளமடிக்கிறது
உண்மை தனித்து முடங்கிக்கிடக்கிறது

பொய் வண்ண விளக்கொளியில் ஜொலிக்கிறது
உண்மை கும்மிருட்டில் தடயமற்று இருக்கிறது

பொய் ஊரே இரண்டுபட உரக்க ஊளையிடுகிறது
உண்மை மென்மையாய் ஜீவனற்று ஒலிக்கிறது

பொய்க்கு பல திவ்ய நாமங்கள் பலமுகமூடிகள்
உண்மைக்கு ஒரே முகம் முகமூடி ஏதுமில்லை


என்னதான் சொல்ல வருகிறீர்கள் ?
பொய் வெல்லப்பட முடியாததா ?
உண்மை வலுவற்ற நோஞ்சானா ?
அழிந்துதான் போகவேண்டுமா ?


யார் சொன்னது ?
உண்மை அவதூறு செய்யப்படும்
உண்மை வஞ்சிக்கப்படும்
உண்மை அடித்து துவைக்கப்படும்
உண்மை தண்டிக்கப்படும்
உண்மை புதைக்கப்படும்

புதைக்கப்பட்ட உண்மை
எரிமலையாய் வெடித்துச் சிதறும் போது
பொய் எரிந்து சாம்பலாகிவிடும் .


அனைத்தையும் சந்தேகி!

Posted by அகத்தீ Labels:

புரட்சிப் பெருநதி - 38


அனைத்தையும் சந்தேகி!

சு.பொ.அகத்தியலிங்கம்




நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டடைகிறேன்’’





‘‘நான் தத்துவத்தைக் காதலிப்பவன். ஆனால், என் காதலியோ என்னை உதாசீனப்படுத்தி பாராமுகமாக இருக்கிறாள்’’ - சொன்னவர் யார்?


மனிதனின் தத்துவத் தேடல் கிட்டத்தட்ட ஆண்டான் – அடிமை யுகத்திலேயே கருக்கொண்டாலும் ; நெடுநாளாய் அறிவியலும் தத்துவமும் பிணைந்தே கிடந்தது . 19 ஆம் நூற்றாண்டில் வில்லியம் வெவல் என்பவர்தான் அறிவியலுக்கு ஒரு வரையறை செய்து தத்துவத்தையும் அறிவியலையும் வேறுபடுத்தினார் . 


பிளாட்டோ, அரிஸ்டாட்டில், தலாமி என சகலரும் இரண்டையும் சேர்த்தே எழுதினர். அவர்கள் இயற்கை தத்துவவாதிகள் என்றே அழைக்கப்பட்டனர் .நாம் இங்கு இந்திய தத்துவஞான வரலாற்றுப் போக்கை பேசப்போவதில்லை .பெரிதும் பொருள் முதல் வாதம் சார்ந்த அதன் வரலாற்றை தனியாக அலசவேண்டும் . 


19 ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக இரண்டும் வேறுவேறு துறையாகின .ஆயினும் அறிவியல் பூர்வமாக தத்துவத்தை கட்டி எழுப்ப முயற்சி நடந்துகொண்டே இருந்தது. ஆகபுரட்சிகரமான தத்துவம் மார்க்சியமே.இதனை சூனியத்திலிருந்து மார்க்ஸ் உருவாக்கவில்லை.


‘‘காண்ட்டும் ஃபிஹ்டேயும் தொலைதூரத்திலுள்ள
உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள் ;
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டடைகிறேன்’’
- என 1837 இல் நையாண்டிக் கவிதை எழுதினார் மார்க்ஸ்.


தம் காலத்து தத்துவஞானங்களை , அறிவியல் உண்மைகளைத்தேடிப் படித்து –விமர்சித்து –கொள்வன கொண்டு , தள்ளுவன தள்ளி பாட்டாளி வர்க்கத்துக்கான சொந்த தத்துவமாக மார்க்சியத்தை உருவாக்கியதே பெருங்கதை.‘‘அனைத்தையும் சந்தேகி!’’ என்கிற பொன்மொழியே தனக்கு மிகவும் பிடித்தமானது என்பார் மார்க்ஸ். ஆனால் அந்த வாசகம் மார்க்ஸ் உருவாக்கியதல்ல . ரெனே டெஸ்கார்ட்ஸ் என்கிற டெமாக்கிரிடஸ் எனும் கிரேக்க தத்துவஞானியுடையது. கல்லூரியில் தம் முனைவர் பட்டத்திற்கான தத்துவ ஆய்வில் டெமாக்கிரிடஸ், எபிகூரஸ், ஃப்ளுடார்க் ஆகியோரை விமர்சன நோக்கில் சுட்டிக்காட்டினார் மார்க்ஸ்.‘‘மனிதவாழ்க்கை மதத்தின் மரணச் சுமையினால் - பூமிப் புழுதியில் அடிமையாகக் கிடந்த போது – ஒரு கிரேக்கன் முதலில் தலைநிமிர்ந்தான் ; கிரேக்க அறிவியக்கத்தின் மாபெரும் பிரதிநிதி அவன்’’ என எபிகூரஸுக்கு புகழாரம் சூட்டினார். கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸின் ஆளுமை மீதும் இலட்சிய ரீதியான ஈர்ப்பு கொண்டார் மார்க்ஸ். அந்த ஆய்வுக் கட்டுரை பொருள் முதல் வாதத்தை நிரூபிக்க முயலவில்லை. ஆனால் கருத்து முதல்வாதத்தின் மீதான அதிருப்தியும் விமர்சனமும் மேலோங்கி இருந்தது .


பாரூச் ஸ்பின்னோசா, ,காட்ஃபிரை வில்ஹம் லீப்னிக்ஸ், ஃபிரான்சிஸ் போகன், தாமஸ் ஹாப்ஸ், ஜன் லாக், ஜார்ஜ் பெர்க்லி, டேவிட் ஹியூம், வால்டர், ரூசோ,தீதரோ என தத்துவ முகாமில் தோன்றிய ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கை வழங்கினர். ‘‘அறிவதற்கு அச்சம் தவிர்’’ என்றார் இம்மானுவேல் காண்ட் ; அவர் சொன்ன ஒரு வரியே கட்டுரையின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்டதாகும். ‘தூய காரணியம் குறித்த விமர்சனம்.’ ஸஉசவைiளூரந டிக யீரசந சநயளடிn ] எனும் நூல் இவரின் முக்கியப் பங்களிப்பு.ஹெகலின் தத்துவத்தை காண்ட் தத்துவத்தின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே மார்க்சியர்கள் காண்கின்றனர்,ஜார்ஜ் வில்கெம் ஃபிரடெரிக் ஹெகலி-ன் கருத்துமுதல்வாதமும் , லூத்விக் ஃபாயர்பாக்கின் பொருள்முதல் வாதமுமே மார்க்சிய தத்துவஞான அடிப்படையானது. பாய்ந்து முன்னேறிய அறிவியல் ;குறிப்பாக டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு மார்க்சை மிகவும் ஈர்த்தது.


இளம்ஹெகலியர் தத்துவ முகாமில் மார்க்ஸ் இருந்தார். ‘‘உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்’’ என்று கிரேக்க புராணத்தில் வரும் எஸ்கிலசின் புரோமித்தியாஸ் கூறியதை ‘‘வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் எதிரானதாக’’ மார்க்ஸ் திருப்பினார். கதைப்படி புரோமித்தியாஸை வானகக் கடவுளான  ஜோஸ்வாவுக்கு பணியும் படிச் செய்ய ஹோர்மஸ் என்கிற தேவதூதன் முயற்சிப்பான். கை, கால் விலங்கால் பிணைக்கப்பட்டபோதும் பணியமறுத்து போராடி பூமிக்கு நெருப்பைக் கொணர்வான் புரோமித்தியாஸ் . இதை உவமேயமாக்கி மார்க்ஸ் எழுதினார்;


‘இது உறுதி; என்னுடைய நிலையை
உங்களுடைய அடிமைத்தனத்திற்கு
மாற்றிக்கொள்ளவே மாட்டேன்
ஜோஸ்வாக்கு ஊழியம் புரிவதைக் காட்டிலும்
இந்த மலைக்கு ஊழியம் செய்வது மேல்’’


மார்க்சின் அதிதீவிர சீற்றம் கண்டு அராஜகவாதியான புரூனோ பெளவ்ரே அதிர்ந்தார். ஆயினும்இரண்டே வருடங்களில் தன் நிலையை மார்க்ஸ் தெளிவுபடுத்திவிட்டார். வர்க்கப் போராட்டத்தோடும் வாழ்க்கைப் போராட்டத்தோடும் இணைந்து மதவிமர்சனத்தை தொடர்வதே வழி என்றார் . மதத்தைப் பற்றிய விமர்சனமே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் ஆரம்பம் என்றார்.


கருத்து முதல்வாதம் எனும் கூண்டுக்குள் சிக்கிக்கிடந்தது ஹெகலியம். கூண்டைத் திறந்துஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையிலிருந்த பகுத்தறிவுப் பூர்வமான சாராம்சத்தை மட்டும் மார்க்சும் ஏங்கெல்சும் எடுத்துக்கொண்டு, மேன்மேலும் நவீன அறிவியலோடு வளர்த்தனர்.ஃபாயர் பர்க்கின் பொருள் முதல்வாதக் கோட்பாடு கருத்து முதல்வாதத்துக்குள்ளும் - இயக்க மறுப்பாகவும்- மதசம்பந்தமான நெறிமுறைக்குள்ளும் சிக்கிக் கிடந்தது.
இதையெல்லாம் விலக்கிவிட்டு ஃபாயர்பாக் பொருள் முதல்வாதத்தின் உள்சாராம்சத்தை எடுத்து அதை அறிவியல் தத்துவக் கோட்பாடாகவே வளர்த்துச் சென்றனர்.


மார்க்சியம் என்பது இந்த தத்துவஞானத்தை மட்டும் குறிப்பதாகாது. காண்ட், ஹெகல், ஃபாயர்பாக் ஆகியோரின் ஜெர்மன் தத்துவஞானம்; ஜீன்ஸ் ,, போரியர், சைமன் உள்ளிட்ட பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் சிந்தனை; ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ உள்ளிட்டோரின் அரசியல் பொருளாதாரம் இவற்றை விமர்சன பூர்வமாக அடிஉரமாக்கி அறிவியல் ரீதியாக வளர்த்தெடுத்த புரட்சிகர வர்க்கப் போராட்ட சித்தாந்தமே மார்க்சியம். மற்ற தத்துவங்கள் உலகை வியாக்கியானம் செய்தன;


ஆனால் உலகை மாற்றியமைக்க நெம்புகோலானது மார்க்சியமே. அது திண்ணை வேதாந்தமல்ல; செயலுக்கான சித்தாந்தம்.மார்க்சும் ஏங்கெல்சும் தத்துவயியல் குறித்து அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ற அளவு நூலேதும் எழுதவில்லை . ஆனால் ஏங்கெல்ஸ் எழுதிய ‘‘டூரிங்கிற்கு மறுப்பு’’ , ‘‘இயற்கையின் இயங்கியல்’’, ‘‘லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்’’ ஆகிய மூன்று நூல்களும் அப்பணியை பெருமளவு செய்தன . லெனின் எழுதிய ‘‘பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனமும்’’ எனும் நூல் தத்துவப் போரின் மார்க்சிய பார்வையை நுட்பமாகப் போதித்தது.


‘‘பொருள் முதல்வாத அடிப்படையிலான இயங்கியல் விதிகள் மார்க்சியத்தின் கண்டுபிடிப்பு எனலாம் .அதனால்தான் மார்க்சியம் ஒன்றுமட்டுமே முழுமையாக அறிவியல்பூர்வமாக விளக்கவல்லதும் எதிர்காலப் போக்கைக் கூறவல்லதுமாகும்’’‘‘மார்க்சியம் கூறும் பொருள்முதல்வாதமும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அருளிச் சென்றதல்ல .அவர்கள் துவக்கிவைத்ததுதான் .அது முழுமையும் நிறைவும் அடைந்துவிட்ட அறுதிப் பொருள் [FINISHED PRODUCT]அல்ல. இதில் ஏங்கெல்ஸ் மிகத் தெளிவாக இருந்தார் .ஒவ்வொரு காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சிக்கொப்ப இயங்கியல் பொருள்முதல்வாதமும் புதுப்பிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்’’ என்கிறார் புரட்சியில் பகுத்தறிவு நூலில் ப.கு.ராஜன்.புரட்சி தொடரும்…


புரட்சி தொடரும்…

பசியாப் பழம்

Posted by அகத்தீ Labels:



பசியாப் பழம்






பாட்டிசொன்ன செய்திகள்
பசுமையாய் நினைவுத்திரையில்

ஒன்று தின்றால் போதுமாம்
ஆயுளுக்கும் பசி எடுக்காதாம்

ராமர் வனவாசம் போகையில்
இதைத்தான் சாப்பிட்டாராம்

எந்தப் பருவத்தில் எங்கே விளையும் ?
யாருக்கும் இங்கே தெரியவில்லை .

ஏடுகள் தேடிச் சலித்தேன்
எந்தக் குறிப்பும் அகப்படவில்லை

கல்வெட்டில் இருக்குமோ ?
தொல்லியியலாளர் கைவிரிக்கின்றனர்

ஒரு வேளை அமைச்சர்
அறிந்திருக்கக் கூடுமோ ?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்
கேட்டுப் பார்ப்போமா ?




ஆதர் அட்டையும் பான் கார்டும்
அவசியம் காட்டவேண்டுமோ ?


கனவும் குழப்பமுமாய் நாட்கள்
நகர்ந்ததன்றி ஒரு தடயமும் சிக்கவில்லை


காய்த்திரி மந்திரம் ஜெபிக்கும் பெரிய
மூளைக்காரருக்கு அறிந்திருப்பாரோ ?


சூத்திரன் அதைத் தின்பதற்கு
சாஸ்திரங்கள் அனுமதிக்குமோ ?


எது எப்படியோ என்னுள் பேராசை
பெருவெள்ளமாய் மடைகடக்கிறது


பசியாப் பழம் எமக்கு கிடைத்துவிட்டால்
பசிவயிற்றைக் கிள்ளாதாகையால்


வேலைக்கு அலைய வேண்டாம்
விலைவாசிக்கு கலங்க வேண்டாம்


போராடவும் தேவையில்லை
போராடத் தூண்டவும் தேவையில்ல .


ஆனாலும் ஒரு சந்தேகம்
ஜி எஸ் டி வரி உண்டா ?


- சு.பொ.அகத்தியலிங்கம் .










ஆசையாகத்தான் இருக்கிறது …..

Posted by அகத்தீ Labels:



ஆசையாகத்தான் இருக்கிறது …..




பிறர் மனம் புண்படாமல்
பேசத்தான் ஆசையாக இருக்கிறது
உண்மையை நியாயத்தை
எப்படி பேசாமல் இருப்பது ?



யாரோடும் பகைமை பாராட்டாமல்
வாழத்தான் ஆசையாக இருக்கிறது
கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை
எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது ?


எச்சூழலிலும் கோபம் தலைக்கேறாமல்
பொறுத்திடத்தான் ஆசையாக இருக்கிறது
கடையனுக்கும் கடையனை ஏறிமிதிக்கையில்
எப்படிச் சீறிச்சினந்தெழாமல் இருப்பது ?





சட்டத்திற்கு அடங்கிய குடிமகனாய்
இருக்கத்தான் ஆசையாக இருக்கிறது
ஆதிக்க அதிகாரம் காப்பதே சட்டமாயின்
எப்படி கொதித்தெழாமல் இருப்பது ?


- சு.பொ.அகத்தியலிங்கம்.















உயிர்த்துடிப்புள்ள ஒன்பதாண்டுகள்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி - 37


உயிர்த்துடிப்புள்ள ஒன்பதாண்டுகள் 



அயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது,
 மரணதண்டனைக்கு எதிராக - 
மனித உரிமைகளுக்காக முதலாவது அகிலம் போராடியது.




‘அந்தக் கூட்டத்தில் என்ன நடைபெற வேண்டும், என்ன நிறுவப்பட வேண்டும் என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக இருந்தவர் ஒருவரே; அவர் ஏற்கெனவே 1848 ஆம் ஆண்டிலேயே உலகிற்கு ‘அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தை அறிமுகம் செய்தவராவார்’ -இவ்வாறு அக்கூட்டத்தில் பங்கேற்ற ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.



1863 போலந்து எழுச்சிக்குப் பின்னர், பிரிட்டன், பிரான்ஸ் தொழிலாளர்கள் ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறித்து யோசிக்கலாயினர். ஹென்றிதோலின், பெரோச்சன், லிம்போஸின் ஆகியோர் லண்டனில் செயிண்ட் ஜேம்ஸ் ஹாலில் - போலந்து தொழிலாளர் எழுச்சியை ஆதரித்து கூடியகூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது இக்கருத்து வலுப்பட்டது. முயற்சி தொடங்கப்பட்டது.1864 செப்டம்பர் 28. லண்டன் செயிண்ட் மார்ட்டின் அரங்கில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளும், முற்போக்கு - சோசலிச சிந்தனையாளர்களும் கூடியிருந்தனர். பலத்த ஆதரவு முழக்கங்களிடையே ‘சர்வதேச பாட்டாளி வர்க்க சங்கம்’ [international working man’s association] உதயமானது.


இதுவே ‘முதலாவது அகிலம்’ எனப்படும் .லண்டன் வர்த்தகக் கவுன்சிலின் ஏடான ‘தேன்கூடு’ [BEEHIVE] அகிலத்தின் ஏடானது.ஜெர்மன் நாட்டுப் பிரதிநிதியாக பங்கேற்றார் காரல் மார்க்ஸ். அவரைக் குறிப்பிட்டு ஏங்கெல்ஸ் சொன்னவையே ஆரம்பத்தில் சுட்டிய வரிகள். நிர்வாகக் குழுவில் காரல் மார்க்சும் இடம்பெற்றார். அகிலத்தின் அடிப்படையான திட்டம், கொள்கை மற்றும் அமைப்பு விதிகளை வகுத்துக் கொடுக்குமாறு அவர் பணிக்கப்பட்டார். மாஜினியின் சீடரான லூயிஜி ஒல்ப், பிரெஞ்சுக்காரரான விக்டர் லி லூபேஜ் ஆகியோரும் சில ஆவணங்களை முன்மொழிந்தனர். அக்டோபர் 20இல் நடந்த துணைக்குழு கூட்டத்தில் ஆங்கிலேயர் வில்லியம் கிரிமர், லி லூபேஜ், இத்தாலியன் குஜப்பி பாண்டெனா ஆகியோர் பங்கேற்றனர். மார்க்ஸ் தயாரித்த முகப்புரை, அமைப்பு விதி அனைத்தையும் நவம்பரில் கூடிய பொதுக்குழு ஏற்றுக் கொண்டது.


‘தொழிலாளி வர்க்கத்தின் முழு விடுதலையை தொழிலாளி வர்க்கம்தான் வென்றெடுக்க வேண்டும்’ என கம்பீரமாய் துவங்கிய மார்க்ஸின் முகவுரை வழிகாட்டும் ஆவணமானது ‘சோஷலிச இயக்கத்தின் சர்வதேச குணாம்சத்தை இந்த அமைப்பு தொழிலாளருக்கு எடுத்துக்காட்டும்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘எண்ணிக்கைக் கணக்கு நிறுத்துப் பார்க்கப் பயன்படும்; ஆனால் கூட்டமைப்புகளின் மூலம் ஒன்றுபட்டால் – அறிவாற்றல் மூலம் தலைமை தாங்கப்படுமானால் நிலைமையே வேறு’ என்று விளக்கியது. இது அடிப்படையில் ஒரு அரசியல் ஸ்தாபனம். ஆனால், இதனை வெறுமே தொழிற்சங்க மேடையாக குறுக்கிப் பார்க்க ஆரம்பம் முதலே பலர் முயன்றனர். முதல் அகிலத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகள், சார்ட்டிஸ்டுகள், இத்தாலிய தேசியவாதிகளான மாஜினிகள், குட்டி முதலாளிய புருதோனியவாதிகள், அராஜகவாத பக்கூனியவாதிகள், பிளாங்கியவாதிகள் – என பல்வேறு தரப்பினரும் இருந்தனர்.


1871 ஆம் ஆண்டு முந்தைய ஆறாண்டுகாலத்தை அசைபோட்டு மார்க்ஸ் எழுதினார். ‘அகிலத்தின் வரலாறு என்பது ;தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான இயக்கத்திற்கு எதிராக - அகிலத்திற்குள் தங்களைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முயற்சித்த தனிக்குழுக்கள் மற்றும் அரைவேக்காட்டுப் பரிசோதனைகளுக்கு எதிராக பொதுக்குழு நடத்திய தொடர்ச்சியான போராட்டமாகும்’ ஜெனீவா, லாஸ்ன்ஸ், பிரசல்ஸ், ஹேக் என நடந்த மாநாடுகளில் அவர்களின் தவறான அணுகுமுறைக்கு எதிராக தத்துவப் போர் நடத்திய மார்க்ஸ்; மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஒன்றுதிரட்ட முனைந்தார். ‘தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முதற்கடமை’ என்றார். 1867 வரை இவ்வமைப்பு ஆண்களின் அமைப்பாகவே இருந்தது .


அந்த பொதுக்குழுவில்தான் சிறந்த பேச்சாளரான ஹரியட் லா பொதுக்குழுவில் சேர்க்கப்பட்டார். முதல் அகிலம் கலைக்கப்படும்வரை அவர் ஒருவர் மட்டுமே பெண் பிரதிநிதி.ஏறத்தாழ 80 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த முதலாவது அகிலத்தை வளர்த்தெடுப்பதில் மார்க்ஸ் மிக முக்கிய பங்காற்றினார். எட்டுமணி நேர வேலை, வேலைநிறுத்த உரிமை, பிற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு என்பதற்கும் அப்பால் தன் பணிகளையும் பார்வையையும் விரிவுசெய்தது.பெல்ஜிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் போராட்டம், ஜெனீவா கட்டிடத் தொழிலாளர் போராட்டம், பாரீஸ் நகர பித்தளைத் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவற்றுக்கு சகோதர ஆதரவு நல்கியது.
வேலைநிறுத்தங்களை உடைக்கும் முயற்சிக்கு எதிராக லண்டன், எடின்பர்க் நகரங்களில் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியது.



உழைக்கும் வர்க்கப் பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரலெழுப்பியது.


அயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, மரணதண்டனைக்கு எதிராக - மனித உரிமைகளுக்காக முதலாவது அகிலம் போராடியது.


போலந்தின் விடுதலை இத்தாலியின் ஐக்கியம் , அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க லிங்கன் தலைமையில் நடந்த போர் இவற்றுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தியது.


தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடு க்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்து 1871-இல் பாரீஸ் கம்யூனில் முதன்முதலாக செயல்வடிவம் பெற்றது.


1872 -இல் ஹேக் நகரில் நடந்த மாநாட்டின்போது, அராஜகவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்குமிடையிலான சித்தாந்தப் போராட்டத்தில் முதலாவது அகிலம் பிளவுபட்டது.1873 செப்டம்பர் 23 சோர்ஜி என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ‘இன்றுள்ள ஐரோப்பிய நிலைமைகளை நான் காணும் போது அகிலத்தின் சம்பிரதாயமான அமைப்பு முறை அவசியமில்லை என்றும்; அதை இப்போது தற்காலிகமாக பின்னணிக்கு தள்ளிவிடலாம் என்றும்’ மார்க்ஸ் எழுதினார். நடைமுறையில் அகிலம் பிளவுபட்டு அதன் தன்மையை இழந்துவிட்டது.1875இல் மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். ‘தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசிய நடவடிக்கை எந்த வகையிலும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை - அகிலத்தைச் சார்ந்து, அதை நம்பி இருக்காது. அந்த நடவடிக்கைகளை மையப்படுத்துவதற்கு அது ஒரு முயற்சிதான்.


அந்த முயற்சி பெரும் வெற்றியைத் தந்திருக்கிறது. அகிலம் அதற்கு தூண்டு விசையாய் இருந்திருக்கிறது. ஆனால் பாரீஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த பிறகு அகிலத்தில் முதல் வரலாற்று வடிவம் தொடர்ந்து நீடிக்க இயலாமல் போய்விட்டது’1883இல் மார்க்சின் நினைவஞ்சலி உரையில் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்; ‘மார்க்சின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக முதலாவது அகிலம் அமைந்துள்ளது… இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்றாலும், எல்லா நாடுகளது பாட்டாளிகளிடம் அது உருவாக்கிய உயிர்த்துடிப்புள்ள ஐக்கியமானது இன்றும் நீடித்து நிலவி வருகிறது என்பதோடு, முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது. ஒரே படையாக, ஒரே கொடியின் கீழ் திரண்டு நிற்கிறது…’முதலாவது அகிலம் கலைந்தாலும் பின்னர் இரண்டாவது, மூன்றாவது அகிலங்கள் களத்துக்கு வந்தன.


புரட்சி தொடரும்…

நன்றி : 17/07/2017

உடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…

Posted by அகத்தீ Labels:

 புரட்சிப் பெருநதி -36



உடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…





அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச் சாளரங்களூடே அவர் செய்த பிரச்சாரம் படைவீரர்களை வீறுகொள்ளச் செய்தது. அவர்கள் இவரை விடுதலை செய்தனர். திரைப்படக் காட்சி போல் தோன்றும் இச்சம்பவம் உண்மையில் 1849இல் நடந்தது எனில் ஆச்சரியப்படுவீர்கள். இந்த உண்மைக் கதையின் நாயகன் வில்ஹெல்ம் லீப்னெக்ட். லீப்னெக்ட் 1826இல் ஜீஸ்சென் எனும் ஜெர்மன் நகரில் அதிகாரியின் மகனாய்ப் பிறந்தவர்; தாய், தந்தையரை ஆறு வயதுக்குள் இழந்தவர். 16வயதில் ஜீஸ்சென்னில் தொடங்கி பெர்லினிலும் கல்லூரியில் தத்துவம், மொழியியல், இறையியல் பயின்றார்.


கல்லூரியில் கிறிஸ்துவத்தின் சாரம் – உழைப்பு பற்றி தீவிர விவாதங்களில் பங்கேற்றார். படிப்பு முடிந்து ஊர்திரும்பும் வழியில் ஆஸ்திரிய ஆதிக்கத்திலுள்ள சாக்ஸ்னி, பொஹிமா ஆகியவற்றிற்கு சென்றார். அங்கு ஆட்சிக்கு எதிரான எழுச்சியில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டு – நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அரசியலால் ஈர்க்கப்பட்டு; மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துகளைத் தேடித் தேடி வாசித்தார். 1847இல் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே ஜெர்மன் எதிர்க்கட்சிப் பத்திரிகை ‘மான்ஹெய்னர் அபெண்ட்ஸெய்டங்’கின் நிருபரானார்.  பேடன் நகர் சென்று முதலாளித்துவ ஜனநாயகவாதி குஸ்டாவ்ஸ்ட்ரூக் தலைமையில் நடந்த எழுச்சியில் பங்கேற்றார். அரசு படையிடம் லீப்னெக்ட்டும் தோழர்களும் சிக்கிக் கொண்டனர். விடுதலையானதும் ஸ்ட்ரூவின் தளபதியானார்.
பிராஸ்டட்டில் மீண்டும் கைதானார். அந்த சம்பவம்தான் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டது. பேச்சாற்றலால் விடுதலையானார். பிரஷ்ய ராணுவத்தை எதிர்த்த இறுதிப் போரில் பங்கேற்றார். ஜெர்மனிக்குள் இவர் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஜெனீவாவில் குடியேறினார். அங்கு ஏங்கெல்சைச் சந்தித்தார். ஜெனீவாவில் ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையின் தலைவராக லீப்னெக்ட் தேர்வு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். பின்னர் நாடுகடத்தப்பட்டார். லண்டனில் குடியேறினார் . அங்கு மார்க்ஸின் நெருங்கிய தோழரானார். சீடரானார். குடும்ப நண்பரானார். 1862இல் ஜெர்மன் திரும்பினார். 1863இல் லாஸ்ஸல் தோற்றுவித்த ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையில் இணைந்து செயல்படலானார்.
‘பிஸ்மார்க் பிற்போக்குவாதி அல்ல’ என நம்பவைக்க லஸ்ஸால் முயன்றார்; லீப்னெக்ட் நம்பாதது மட்டுமல்ல 1865 ல் அச்சுத் தொழிலாளர் மத்தியில் உரையாற்றும் போது, ‘‘முற்போக்குக் கட்சியோ –பிரஷ்ய அரசாங்கமோ தொழிலாளர் சமுதாயக் கோரிக்கையை தீர்க்கமாட்டா அரசாங்க உதவி பற்றிய அனைத்து பேச்சுகளும் போலி புலமைவாதப் பேச்சுதான். சொல் அலங்காரம்தான். முதலாளித்துவத்தை முற்றாகத் தகர்த்து தரைமட்டமாக்கும்வரை தொழிலாளருக்கு மெய்யான விடுதலை இல்லை’’ என்றார். சும்மா இருக்குமா அரசு, ‘ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ எனக் கைது செய்யப்பட்டு – நாடு கடத்தப்பட்டார் . அங்குதான் ஜெர்மன் சோஷலிஸ்ட் பேபலைச் சந்தித்தார் .தான் ஒரு சோஷலிஸ்டாக மாற்றம் பெற லிப்னெக்டே காரணம் என்றார் பேபல் .
1867இல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .அங்கு பேபலுடன் இணைந்து திறமையாகச் செயல்பட்டார் . 1869ல் இவ்விருவர் முயற்சியில் ‘வோல்க்ஸ்ட்டாட்’ எனும் ஏடு துவக்கப்பட்டது. லீப்னெக்ட் ஜெர்மன் பிரதிநிதியாக ‘முதல் அகிலத்தில்’ பங்கேற்றார் . 1870இல் ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவதை எதிர்த்து இருவரும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்; தேசத்துரோக வழக்கில் சிறையிலடைக்கப்பட்டார். 1874இல் சிறையிலிருந்தபடியே லீப்னெக்ட் வென்றார். 1875இல் கோதா எனுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் –இரண்டு கட்சிகள் இணைந்த மாநாட்டில் ஒரு செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ‘கோதா திட்டம்’ மார்க்சிய நோக்கில் இல்லை என மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தனர்.
1877 தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி ஐந்து லட்சம் வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து; சோஷலிசக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க கடும் சட்டம் பிறப்பித்தனர் ஆட்சியாளர். 1879இல் ‘சோஷியல் டெமாக்ரட்’ என்ற சட்டவிரோத ஏடு துவங்கினர். முதலாம் அகிலத்தில் லீப்னெக்ட் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. லண்டனில் இருந்து திரும்பியதும் லீப்னெக்ட் கைது செய்யப்பட்டார். ஆறுமாதம் தண்டனை பெற்றார். விடுதலை செய்யப்பட்ட பின்பும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திலேயே வைக்கப்பட்டார் .
1881இல் தேர்தலில் போட்டியிட்டு கட்சி மூன்று லட்சம் வாக்குகள் வாங்கியது. கட்சிக்கு நிதி திரட்ட 1886இல் லீப்னெக்ட் பலநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த அனுபவங்களை ‘ புதிய உலகம்: ஒரு பார்வை’ எனும் நூலாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இவர் எழுதிய ‘‘பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு’’ நூல் பல பதிப்புகளைக் கண்டது. ‘‘சிலந்தியும் ஈயும்’’ என்ற தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை ஒரு சிறு வெளியீடாக வந்தது. ஈக்களை தன் வலைப் பின்னலில் விழவைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்ணும் சிலந்தியை முன்வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள், உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும்தான் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார்.
விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்களின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் இப்பிரசுரம் லீப்னெக்ட் பெயரை உலகெங்கும் தொடர்ந்து உச்சரிக்கச் செய்தது; இன்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விழைகிற ஒவ்வொருவரும் அவசியம் படிக்கும் பிரசுரம் இதுவாகும். 1881ல் அடக்குமுறை சட்டம் திரும்பப் பெறப்பட்டது. கட்சி மாநாடு ஹாலேயில் நடைபெற்றது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘வோர்வார்ட்ஸ் பெர்லினர் வோல்க்ஸ்பிளாட்’ மலர்ந்தது .லீப்னெக்ட் அதன் ஆசிரியரானார். பிரஸ்ஸல்சில் நடந்த இரண்டாவது அகிலத்தில் பங்கேற்றார். 1869இல் லீப்னெக்ட் 70 வது பிறந்த நாள் பெர்லினில் விழாவாகக் கொண்டாடப்பட்டது ஹனோவரில் நடந்த மாநாட்டில் பங்கேற்க இயலாத போதும் இவர் எழுதி அனுப்பிய உரை பிரசுரமானது. ‘‘சமரசங்களே கிடையாது! தேர்தல் உடன்பாடுகளும் கிடையாது’’ என்பது முக்கிய ஆவணமாக வழிகாட்டியது ‘‘ஒரு சமூக ஜனநாயகவாதி முதலாளித்துவ முகாமிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு நண்பனின் ஆபத்தான நோக்குகளையும் அம்பலப்படுத்தும் திறமை படைத்திருக்க வேண்டும். அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. லீப்னெக்ட் இதனை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார்’’ என்பார் லெனின்.
இறுதி மூச்சுவரை மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்தும்; அதற்கு எதிரானோரை விமர்சித்தும் போராடிய லீப்னெக்ட் 1900இல் இயற்கையெய்தினார் . அவரது மகன் கார்லினால் தன் தந்தையின் அடிச்சுவட்டில் கட்சியை முன்னெடுத்தார்.
புரட்சி தொடரும்
நன்றி : தீக்கதிர் ,10/07/2017

ஒவ்வொன்றும் ஒருவாசலைத் திறக்கும்

Posted by அகத்தீ Labels:




ஒவ்வொன்றும்
ஒருவாசலைத்
திறக்கும்


  • சு.பொ.அகத்தியலிங்கம்.
கனவுப் பிரியனின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தருகின்றன.” - உதயசங்கர் சொல்வதன் பொருளை ஒவ்வொரு கதையைக் கடக்கும் போதும் முழுதாய் உணர்ந்தேன் .






பொதுவாய் குடித்துவிட்டு நடுத்தெருவில் வாந்தி எடுப்பவரை வெறுக்கத்தக்கவராயும் நாகரிகமற்றவராகவுமே பொதுபுத்தியில் யோசிக்கப் பழக்கி இருக்கும் தமிழ்ச்சூழலில் துணிக்கடைக்கார அண்ணாச்சி வாந்தி எடுத்ததோ குடித்ததை. ஆனால் விழுங்கியது….... ? அதுதான் கதையின் சாரம் . அடேயப்பா மனிதம் செத்துபோச்சின்னு சொல்றவங்க நெற்றிப்பொட்டில அறையுதையா இந்தக் கதை . கதையைப் படித்துவிட்டு அணிந்துரை பக்கம் போனால் இந்தக் கதைக்கு உதயசங்கர் முதல் பரிசே கொடுத்திருக்கிறார் . கதையை நீங்களே படிச்சுக்குங்க !



சுமையாவின் கதை ஜெய்ப்பூரில் ஆரம்பித்து சென்னை வழியே பாகிஸ்தானிலுள்ள சியால்கோட் செல்கிறது .கதையின் மூலமோபிரிவினையின் போது சியால்கோட்டில் பிறந்து தாய்தந்தையரை இழந்து சென்னைக்கு வந்த ஆயிஷா சித்தி வழியே நகர்கிறது .கொஞ்சம் வரலாறு ,கொஞ்சம் பூகோளம் ,கொஞ்சம் கால்பந்து, கொஞ்சம் காதல், கொஞ்சம் அரசியல்அடடா செய் நேர்த்தியும் சொல்லும்செய்தியும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது . அன்று பிரிவினை வந்ததும் அவர்களால்தான்.இன்று …ஊடகங்கள் மூலம் வன்மம் புகுத்துவதே அரசியல்வாதிகளின் பொதுக்குறிக்கோள் ஆகிவிட்டது.” இரு நாட்டின் துயரத்துக்குமான வேரை போகிற போக்கில் சொல்லிச் செல்லும் நேர்த்தி அபாரம் .



மொத்தமுள்ள 21 கதைகளில் ஆறுகதைகள் இஸ்லாமிய சமுதாயப் பின்னணியுடன் எழுதப்பட்டவை .பன்றிக்கறியால் முறிந்துபோன காதலைச் சொல்லும் நேற்றைய ஈரம் கதை . “ குத்தம்தான் , மாட்டுக்கறி திங்கிறான்னு ஆளையே கொல்லுற நாடு இது . நான் வெறும் காதலைத்தான் கொன்னுருக்கேன் .வேண்டாம் மாப்ள இதுல தலையிடாத.” தெறித்த வார்த்தைகள் எவ்வளவோ சேதி சொல்லிவிட்டது .



அது ஒரு மழைக்காலம் கதை என்பதைத் தாண்டி ஜலீல் ஹாஜியாருக்கும் அவர் பேரனுக்குமான உறவும் பாடமும் நமக்கும் சொல்லும் செய்திகள் அதிகம் .



ஷாகிர்க்கா தட்டுக்கடை கதை நாலே பக்கங்கள்தான். ஆனால் மனிதத்தின் ஈரமான இதயத்தை கைமாறு கருதா தூய அன்பைப் பறை சாற்றுகிறது . ஷாகிர்க்காவுக்கும் நாகராஜூக்கும் இடையே முகிழ்ந்த நட்பின் வலிமைதான் மானுடம் மதவெறி நெருப்பில் பொசுங்காமல் இருப்பதன் ரகசியம்.



அன்று சிந்திய ரத்தம் கதையை எழுத அசாத்திய துணிச்சலும் மானுடத்தின் மீது காதலும் வேண்டும். இம்மி பிசகினாலும் பெரும் தலைவலியாகிவிடும் கதைக்களம் . ஈரானுக்கு பிழைப்பு நிமித்தம் போகும் இந்திய ,பாகிஸ்தானிய , கத்தார் நாட்டு முஸ்லீம் இளைஞர்கள் . அவர்களோடு வந்து சேரும் டென்மார்க் இளைஞர் . முகமது நபியை கார்ட்டூன் போட்டு பிரச்சனை சூடாயிருக்கும் காலம்; அந்த டென்மார்க்கிலிருந்து வந்த இளைஞன் எனில் சிக்கலைக் கேட்கவும் வேண்டுமோ ;உறவும்உரையாடலுமாய் நகரும் கதை. தீவிரவாதமும் மனிதமும் அருகருகே கழைக்கூத்தாடியின் சாமர்த்தியத்தோடு கதையை நகர்த்தியிருக்கிறார் . படித்த பின் நம்மை அறியாமலே ஒரு நிம்மதிப் பெருமூச்சு வரும் பாருங்க அங்கேதான் கனவுப்பிரியனின் வெற்றி புன்னகைக்கும் .



மன்னார் வளைகுடா -பிலிப்பைன்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரோசி எனும் கேடு விளைவிக்கும் கடற்பாசி- பெப்சி நிறுவனம் - சேர்ந்து செய்யும்சதி ; உள்ளூர் தாதா - விலைபோய்விட்ட அரசு இவற்றைத் தோலுரிக்கும் ஆவுளியா கதையும் ; அசாமில்
செத்துவிழும் பறவைகளுக்குபின்னே இருக்கும் மர்மக் கரம் சர்வதேச போதை வியாபாரிகளுடையது என்பதை துப்பறியும் தற்கொலைப் பறவைககதையும் இரண்டுமே நம்மைத் திடுக்கிட வைக்கும் . இது போல் எவ்வளவு மர்மங்கள் இத்தேசத்தில் உள்ளதோ என பதறவைக்கும்


ஒரு நூலறிமுகத்தில் எல்லாக் கதையைப் பற்றியும் சொல்லித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் ஏதேனும் இருக்கிறதா என்ன ? ‘நீ வந்தது விதியானால் கதை மட்டும் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை என்பதைசொல்லுவது தப்பில்லையே?



இவரது பரந்த வாசிப்பும் அவதானிப்பும் கூர்மையான பார்வையும் எல்லா கதைகளிலும் காணமுடியும்.இரா. முருகவேள் சொல்வது போலபாறைபோல் அழுத்தும் சோகங்களை ,வலியை ….... இயல்பாக அலட்சியமாக வாழ்வின் ஒரு பகுதிபோல் சொல்லிச் செல்லும் கனவுப் பிரியனின்சிறுகதைகளை நீங்களும் வாசித்து அனுபவியுங்கள் !இந்தத் தொகுப்பைப் படித்ததும் இவரின் முதல் தொகுப்பான கூழாங்கற்கள் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.



சுமையா ,
ஆசிரியர் : கனவுப்பிரியன்,
வெளியீடு : நூல்வனம்,
எம் 22 , ஆறாவது அவென்யூ,அழகாபுரி நகர், ராமாபுரம்,
சென்னை - 600 089.
பக் : 216, விலை : ரூ .160 /-














கூழாங்கற்கள்

Posted by அகத்தீ Labels:



கூழாங்கற்கள் 



சு.பொ.அகத்தியலிங்கம்.


எதைப் பற்றியும் கருத்துச் சொல்ல
எல்லோருக்கும் உரிமை இருக்கிறது
காது கொடுப்பதோ கடந்து செல்வதோ
முழுக்க முழுக்க விருப்பம் சார்ந்ததுதான்



சரியாகத்தான் சொல்ல வேண்டும் என்று
யாரும் ஒருபோதும் கட்டளையிட முடியாது
பிழையாகவோ அரைகுறையாகவோ சொல்லுவதாலேயே
கழுத்தை நெரித்துக் கொல்ல முடியாது




நேற்று சரியாயிருந்தது இன்று பிழையாகாதா ?
அல்லது பிழையாகத் தோன்றியது சரியாகப்படாதோ ?
பிழை என்பதும் சரி என்பதும் சார்பானதுதானே
காலம் எவ்வளவு மாற்றங்களைச் செய்துகொண்டேயிருக்கிறது



அவரவர் தெரிந்ததைச் சொல்ல விடுங்கள்
அறிவும் அறியாமையும் கலந்தே இருக்கும்
ஆளுக்காள் விகிதாச்சாரம் மாறுபடலாம்
நாளுக்குநாள் அது மாறிக்கொண்டேயிருக்கும்



பார்த்தது படித்தது கேட்டது நம்பியது
ஏமாந்தது ஏமாற்றியது அழுதது சிரித்தது
காலநதியில் அனுபவக் கூழாங்கற்கள் பளபளக்கும்
கூழாங்கற்களின் மீதேறி சிகரத்தைத் தொடமுடியுமோ ?








கம்யூனிஸ்டாக வாழ்வதென்பதின் பொருள்.... ??? சு.பொ.அகத்தியலிங்கம்.

Posted by அகத்தீ Labels:





கம்யூனிஸ்டாக 
வாழ்வதென்பதின் 
பொருள்.... ???


சு.பொ.அகத்தியலிங்கம்.




 “ அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்.. “ 36 வருடங்களுக்குப் பிறகு அந்த புரட்சிக்காரனின் விருப்பத்தை நண்பர்கள் சொன்னபோது , 
“ எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்போல் இருக்க வேண்டாமா ?”
என கோடேஸ்வரம்மா திருப்பிக் கேட்டது புரட்சிக்காரியின் மன உறுதிக்கும் பழுதற்ற பெண்சமத்துவப் பார்வைக்கும் சாட்சியாகும்.
தோழர்கள் சிலரே வற்புறுத்திய போது கோடேஸ்வரம்மா கேட்டாள்


 ஒரு நூலைப் படித்துவிட்டால் உடனே நூல் அறிமுகமோ , விமர்சனமோ ,குறிப்போ எழுதுவது என் வழக்கம் ; இந்நூலைப் படித்துவிட்டு எழுதச் சொற்களின்றி இரண்டு மூன்று நாட்கள் இடிந்து உட்கார்ந்துவிட்டேன்.தூக்கத்திலும் தோழர் கோடேஸ்வரம்மா என்னோடு உரையாடிக்கொண்டே இருந்தார் . 



கட்சி, தத்துவம் , உள்கட்சிப் போராட்டம் ,தனிமனிதப் பண்பு என எவ்வளவோ பேசியும் பேச்சு முடியவில்லை.கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாறான  “ஆளற்ற பாலம்” வெறுமே தனிமனிதக் கதை என்பதைத்தாண்டி ; ஆந்திர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகவும்  அகம் புறமாகவும் உள்ளது .இந்த நூலை அவர் எழுதும் போது அவருக்கு வயது 92.



  " திருமணம் ஆவதற்கு முன் அவர் சிறுவயதில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடும் .அதன் பின் வாழ்நாள் முழுவதும் துக்கத்தை சுமந்துகொண்டே அலைந்திருக்கிறார்.தன் வாழ்க்கைக் கதையைச் சொல்லும்போதும் அந்தத் துக்கச் சுமையின் முடிச்சை அவிழக்கவில்லை.அவிழ்க்கப்படாத  அந்தச் சுமைமூட்டையில் நம் இதயம் பாரமாகிவிடும்.” என ஓல்கா முன்னுரையில் சொல்லியிருப்பது மிகை அல்ல .


 “இவளுக்குக் கணவன் இறந்துவிட்டானாம் ;அதுதான் இவளை நன்றாகாப் பார்த்துக் கொள்கிறார்கள்.” என சக மாணவிகள் பள்ளியில் சுட்டிப் பேசும்வரை தனக்கு திருமணம் ஆனதே தெரியாமல் வளந்தவர்தாம் கோடேஸ்வரம்மா . நாலு வயதிலேயே  விதவையான அவருக்கு மறுமணம் செய்துவைக்க அம்மா மற்றும் சீர்திருத்த எண்ணம் கொண்ட சிலர் முயற்சி எடுக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த கொண்டபல்லி சீதாராமய்யாவுடன் 1939 ல் திருமணம் நடைபெற்றது ;அப்போது அவர் வயது பதினெட்டு. அதுவே அன்றைய சமூகச் சூழலில் மிகப்பெரும் சாகசம் .


சிறுவயதில் தேசிய இயக்கத்தில் இணைந்து தேசபக்திப் பாடல்களைப் பாடிவந்த கோடேஸ்வரம்மா - சீர்திருத்த இயக்கத்தோடும் கைகோர்த்த அவர் கம்யூனிஸ் இயக்கத்தால் கவரப்பட்டதும் ; தன் கணவனோடு அந்த இயக்கத்தில்  ஈடுபட்டதும் வியப்பே அல்ல ; அதுதான் அவர் இயல்பு .


தலைமறைவு வாழ்க்கையின் கொடுமைகளை அணுஅணுவாய் அனுபவித்தவர் .கட்சிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக தலைமறைவாக வாழும்போது கிராமிய முறையில் கருகலைப்பு செய்து  ; மரணத்தின் விழிம்பில் தப்பிப் பிழைத்தவர் . அப்போது அருவருப்பு பாராமல் உதவிய ஆண் தோழர்களை கோடேஸ்வரம்மா விவரிக்கும் போது தோழமையின் கனம் மனதுள் வியாபிக்கிறது .அதே நேரம் தலைமறைவு வாழ்விலும் தன் உடலிச்சையை தணிக்க முயன்ற சிலரின் குணகேடுகள் இன்னொரு பக்கத்தைக் காட்டியது .


சீத்தாரமய்யா - கோடேஸ்வரம்மா லட்சியத் தம்பதிகளாய் - போராளிகளாய் வலம் வந்தனர் .பிரஜா நாட்டிய மண்டலி ,மாதர் சங்கம் என பணிகளை தன் தோள்மீது சுமந்து திரிந்தார் . மேடை தோறும் இயக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பிவந்தார் .ஆண்களே பெண் பாத்திரம் ஏற்று நடிக்கும் காலம் ; பெண்கள் நடித்தால் வசை சொற்களில் குளிக்க வேண்டிவரும் .கோடேஸ்வரம்மா துணிந்து பெண் வேடமேற்று இயக்கமேடைகளில் நடிக்கலானார் . 



அதுமட்டுமா தெலுங்கான போராட்டத்தில் ஆயுதங்களை கொண்டு சேர்க்கும் சாகசப் பணியிலும் ஈடுபட்டுள்ளார் .கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு வந்த போது அது இவரை மிகவும் பாதித்தது .இரு பக்கமும் கருணை வற்றிப் போய் வறட்டுப் பிடிவாதம் மேலோங்கியது .


சீத்தாராமய்யா வாழ்விலும் சறுக்கல் ஏற்பட்டது . இருவரும் பிரிய நேரிட்டது .சீத்தாராமய்யா வெறொரு பெண்ணோடு வாழ - தன் கையை நம்பி கோடேஸ்வரம்மா வாழ்க்கைப் போரட்டத்தில் திக்குமுக்காடினாள் ; யாரிடமும் கையேந்தாமல் சொந்த உழைப்பில் நின்றார் ; அவரின் சுயமரியாதை உணர்வு படிக்கும் போதே நம்மைத் தொற்றிக் கொள்ளும் .


சீத்தாராமய்யா நக்சலைட் இயக்கம் பீப்பிள்ஸ் வார் குரூப்பின் தலைவரானார் . தலைமறைவாய் அவர் பயணமும் தொடர்ந்தது .மகணையும் மகளையும் வளர்க்கும் பொறுப்பை சீத்தாராமய்யாவே ஏற்க - அவர்களையும் பிரிய வேண்டிய நிலை கோடேஸ்வரம்மாவுக்கு .மீண்டும் படித்து ஒரு ஹாஸ்டல் வார்டனாய் வாழ்க்கையைத் துவங்கினார் .


கால ஓட்டத்தில் மகனும் தன் தந்தையின் இயக்கத்தில் சேர்கிறான் ; போலிஸாரால் கொல்லப்படுகிறான் .மகளின் கணவரும் திடீரென மரண மடைய - மனமுடைந்த மகளும் தற்கொலை செய்துகொள்ள தீப்பட்ட காயத்தில் தேளாய் கொட்டிய துயரத்தின் தொடர்கதை .வாழ்நாளெல்லாம் துணையாய் வந்த தாயும் மரணமடைய அப்பப்பா எவ்வளவுதான் ஒருவரால் தாங்க இயலும் ..

.

  “ அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்.. “ 36 வருடங்களுக்குப் பிறகு அந்த புரட்சிக்காரனின் விருப்பத்தை நண்பர்கள் சொன்னபோது , “ எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்போல் இருக்க வேண்டாமா ?”என கோடேஸ்வரம்மா திருப்பிக் கேட்டது புரட்சிக்காரியின் மன உறுதிக்கும் பழுதற்ற பெண்சமத்துவப் பார்வைக்கும் சாட்சியாகும்.
தோழர்கள் சிலரே வற்புறுத்திய போது கோடேஸ்வரம்மா கேட்டாள் . 



“மனு சாஸ்திரம் ,இந்து மனப்பாண்மை என்னுள் ஜீவித்திருந்து ; எத்தனை வேதனைகளை அனுபவித்திருந்தாலும் -  பதிவிரதையைபோல் கணவனைக் காப்பாற்றுவேன் என நான் சொன்னால்கூட  ; வேண்டாம் என தடுக்க வேண்டிய கம்யூனிஸ்ட்டுகளாகிய நீங்கள் அடக்கிவைக்கப்பட்ட பெண்ணினத்திற்கு அநியாயம் செய்யலாமா ? கடிந்து கொள்ள வேண்டிய நீங்களே அவரைப் போய்ப் பார்க்கச் சொல்வது விநோதமாக இருக்கிறது..” 


கோடேஸ்வரம்மாவை வாட்டி வறுத்த எந்த துயரமும் அவரின் கொள்கை உறுதியை சிதைக்கவே இல்லை .அவர் எழுதிய சிறுகதை ,கவிதை எல்லாம் அவற்றை உரக்கப் பேசின . இலக்கிய உலகில் பரிசுகளையும் விருதையும் அவருக்கு கொண்டுவந்து சேர்த்தன .இலட்சியவாதி -இயக்கவாதி -இலக்கியவாதியும் ஆணாள்.
சிபிஐ ,சிபிஎம் , நக்சலைட் என மூன்று இயக்கத்தோடும் தொடர்பு உண்டு ;கட்சி பிளவு பட்ட பின் எந்தப் பிரிவிலும் உறுப்பினர் இல்லை . ஆனால் எப்போதும் மக்கள் தொண்டில் கம்யூனிஸ்ட்தான் . காம்ரேட்தான்.


ராஜேச்வர ராவ் , புச்சபல்லி சுந்தரயா ,.மாணிகொண்ட சூர்யவதி, தாபி ராஜம்மா , மத்துக்கூரி சத்திரம் இன்னும் பல தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க கட்சி வாழ்க்கையூடே ,தெலுங்கானா போராளிகள் தொட்டி குமரய்யா ,சித்தபல்லி பாப்பா, இப்படி பலரின் தியாகக் கதைகளூடே மாபெரும் கம்யூனிஸ்ட் இயக்கம் பட்டபாட்டையும் சிந்திய இரத்தத்தைதையும்  சுயநலமற்ற அர்ப்பணிப்பையும் இந்நூலோடு பிசைந்து ஊட்டி இருக்கிறார் கோடேஸ்வரம்மா .


கட்சி பிளவுண்டபோது அரசியல் வெறுப்பு மேலோங்கி பழகிய நட்பும் தோழமையும் பட்டுப்போனதை ; கொள்கை மாறுபட்டவர் உடல்நலிவுற்றபோதும் கண்டுகொள்ளாமல் இருந்ததை சொல்லும் கோட்டேஸ்வரம்மா , ஒரு முறை சுந்தரையா மனைவி லீலாவதியிடம் , ஆண்கள் இப்படித்தான் வறட்டுத்தனமாக இருப்பார்கள் நாம் பெண்கள் அப்படி இருக்க முடியுமா எனக்கேட்டு இருவரும் ஒரு தோழரை பார்க்கப் போனதைச் சொல்கிறார் .


கொள்கை உறுதியை மெய்சிலிர்க்க சொல்லுவதுபோல் , வாழ்க்கையை வறட்டுத்தனமாய் அணுகும் சில புரட்சிக்காரர்களையும் அடையாளம் காட்டுகிறார் .ஓரிடத்தில் கோடேஸ்வரம்மா எழுத்கிறார் ;


 “ஆண் - பெண் இருவரும் சமம் என்ற உணர்வைக் கட்சிதான் எங்களுக்குள் ஏற்படுத்தியது .பெண்கள் ,ஆண்கள் ,தலித்துகள் ,மற்றவர்கள் எல்லாம் ஒன்றுதான் ; ஏற்ற தாழ்வுகள் கூடாது என வலியுறுத்தியது.சொல்லியதோடன்றி எங்களை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்ததும் கட்சிதானே .அன்று கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த சுதந்திரத்தினால்தான் நாங்கள் எத்தனையோ காரியங்கள் செய்தோம் . ஆனால்...” இதனை அடுத்து கோடேஸ்வரம்மா சுட்டுவதுதான் மிக முக்கியம் .


 “ஆனால் ஆண்களைவிட பெண்கள் ஓரடி முன்னே வைத்தால் மட்டும் அவர்களின் ‘ ஆணாதிக்கம்’ தென்படும் .பெண்களிடம் அவர்களுக்கு வெறுப்போ , அடக்கி வைக்கும் எண்ணமோ இல்லை என்றாலும்  ‘ தான் உயர்ந்தவன்’ என்கிற நினைப்பு ஒரேயடியாகப் போய்விடாது.அவர்களும் இந்த சமுதாயத்தில் பிறந்தவர்களில்லையா ? ஆனால் சமச்சீர் சமுதாயம் உருவானால் இதெல்லாம் தானாக மறைந்துவிடும் எனக் கட்சி நம்பி வந்தது . எது எப்படி இருந்தாலும் மற்ற ஆண்களைவிட தோழர்கள் மேல்தான்.” ஆம். இன்றும் அப்படித்தானே சொல்ல முடிகிறது .பெண்ணின் வலியை சுந்தரய்யா போல் , ராஜேஸ்வரராவ் போல் புரிந்து கொண்டோர் எத்தனை பேர் ? ஆணாதிக்கத்திற்கு எதிரான போர் கட்சிக்குள்ளும் ; ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய ஒன்றல்லவா ?


கோடேஸ்வரம்மா காட்டிய மனவுறுதி , சுயமரியதை ,தன்னம்பிக்கை , சொந்தக்காலில் நிற்கும் உழைப்பு உறுதி  என ஒவ்வொன்றும் பெண்ணியத்தின் முக்கிய கூறுகளன்றோ ?இந்நூல் பெண்ணிய நூல் - தன்னம்பிக்கை நூல் - கட்சி வரலாற்று நூல் - போராளியின் தன்வரலாற்று  நூல் . 


ஒவ்வொரு ஆண் பெண் கட்சித் தோழரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் ;கோடேஸ்வரம்மாவின் கஷ்ட வாழ்க்கையோடும் போராட்ட வாழ்க்கையோடும் எந்தச் சூழலிலும் கட்சி மீதும் கொள்கை மீதும் பற்று அறாத  அவரின் உணர்வோடும் ஒவ்வொருவரும் தன்னை உரசிப் பார்த்து  ; நம்மை நாமே செதுக்கிக் கொள்ள இந்நூல் ஒரு பட்டறைக்கல்லாகும்..


 “ தனியாளாய் தனிமையில் ஒடுங்காமல்
துக்க சம்பவங்களால் பெருகிய கண்ணீர் ஆறாகி
விண்ணைத் தொட்ட இயக்கத்தின்
கலாச்சார நினைவுகளில் கடலாகி
கொள்கை முத்துகளை எதிர்காலத்திற்காக
தவிப்புடன் பாதுகாத்து
வயது கடந்தும் பொறுமையுடன் அம்முத்துகளை
எழுத்தில் வடித்து
ஆறுதல் அடைகிறேன்” 


என்கிறார்  ‘நிஜன வாராதி’ [ஆளற்ற பாலம் ] எனும் இந்நூலில் கோடேஸ்வரம்மா ; படிக்காமல் கடக்க முடியுமோ  உங்களால் ?


ஆளற்ற பாலம் 

ஆசிரியர்  : கொண்டபல்லி கோடேஸ்வரம்மா,தமிழில் :கெளரி கிருபானந்தன் ,

வெளியீடு :  காலச்சுவடு பப்பிளிகேஷன் [பி]லிட்,669 , கே.பி.சாலை , 
நாகர்கோவில் - 629001.

பக் :272 , விலை : ரூ.295.


நன்றி : இளைஞர் முழக்கம் ,ஜூலை ,2017.



09 /07/2017 ல்









ஆளற்ற பாலம் மொழிபெயர்ப்பு, கௌரிகிருபானந்தன் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுத்தந்தது ஆனால், எங்குமே நீங்கள் மொழிபெயர்ப்பு பற்றியோ மொழிபெயர்ப்பாளர் குறித்தோ இந்த விருது குறித்தோ குறிப்பிடவில்லை. முன்பொருமுறை, சுப்பாராவ் மொழிபெயர்ப்பின்போதுகூட உங்களிடம் இது பற்றி சில ஆண்டுகளுக்குமுன் பேசிய நினைவு.

எஸ் வி வியின் மின்னஞ்சல்





தோழர் எஸ் வி வி ! நீங்கள் சுட்டிக்காட்டும் பிழையை செய்துவிட்டேன் .இப்போது வருந்துகிறேன். மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய மதிப்புரைகளில் இப்பிழை எனக்குத் தொடர்கிறது. மன்னிக்க முடியாத தவறுதான் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . கெளரி கிருபானந்தன் மின்னஞ்சல் தெரிவிக்கவும் . அவரிடமும் வருத்தம் தெரிவித்து விடுவதுதான் நாகரிகம் . இதையே பிறபதிவுகளிலும் சேர்த்துவிடுகிறேன் .

சுபொஅ

Attachments area