பெரும்பசி பேய்ப்பசியுடன்

Posted by அகத்தீ

 

பெரும்பசி பேய்ப்பசியுடன்
லாபப்பிசாசு வலம்வர
மந்திர உச்சாடனத்தோடு
தொப்பைகாவி முன்வர
அவர் கொள்ளிக்கண்களில்
பட்டதெல்லாம் சாம்பலாக
சுபம் லாபம் சர்வம் நாசம்
ஜெய் ராம் ஸ்ரீராம் !ராம் ராம் !
சுபொஅ.

இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்

Posted by அகத்தீ

 


இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்

 

அவன் வானத்துக்கும் பூமிக்கும்

விஸ்வரூபமெடுத்து நின்றான்

தன் இரும்புக் கைகளால் கண்ணில்

கண்ட அனைத்தையும் பிடுங்கி எறிந்தான்

 

 

நூறாண்டு கண்ட ஆலமரமோ

பாரம்பரியமான கற்கோட்டையோ

மரமோ ,கட்டிடமோ ,உயிரோ ,செடி கோடியோ

எதையும் அவன் விட்டுவைக்கவில்லை

 

 

அவன் கால்களில் புல்பூண்டு புழு

அனைத்தும் துவம்சமாயின

அவன் தோள்களில் கால்களில்

ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணிகள்

மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன

 

 

 “மானிடப் பதர்களே ! என்னையா எதிர்ப்பீர்?

ஊதிப் பறத்துவேன் !நசுக்கி அழிப்பேன் ?

ஹா…ஹா,,,, ஹா,,,,, ஹா,,,,” என்றவன்

அரக்கச் சிரிப்பை அடக்கியபடியே

கடுப்பாய்க் கேட்டான் , “ யாராடா

பூமிக்கு கீழே நெருப்பைப் புதைத்தவன் ?”

 

முனகலாய் வெளிப்பட்டது பதில்

 “ நான் தான் தூங்கும் எரிமலை

இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்.”

 

சுபொஅ.


எது தர்மம் ? எது அதர்மம் ?

Posted by அகத்தீ

 


எது தர்மம் ? எது அதர்மம் ?
எது அறம் ? எது அறமற்றது ?
எது நீதி ? எது அநீதி ?
எது நியாயம் ? எது அநியாயம் ?
எது புண்ணியம் ? எது பாவம் ?
எது புனிதம் ? எது தீட்டு ?
எதற்கும் எப்போதும்
ஒற்றை விடை இல்லை
இருப்பவர் / இல்லாதவர்
ஒடுக்குபவர் / ஒடுக்கப்படுபவர்
சுருண்டுபவர் /சுரண்டப்படுபவர்
அந்த சாதி /இந்த சாதி
எல்லோருக்கும் எங்கும்
ஒரே பதில் இல்லை.
வர்க்கப் பார்வையும்
வர்ணப் பார்வையும்
முகம்காட்டும் – அங்காங்கு
கண்ணோட்டம் அதற்குத்தகும்.
சுபொஅ.

பிணங்களின் காடு .

Posted by அகத்தீ

 


பிணங்களின் காடு .

 

பிணங்களெல்லாம் பிணங்களல்ல

எல்லா பிணங்களும் சமமும் அல்ல

இருக்கும் பிணங்கள் இறந்த பிணங்கள்

வாழ்ந்த பிணங்கள் மறைந்த பிணங்கள்

வாழ்தலும் இருத்தலும் ஒன்றல்ல என்பதை

 

அறியாப் பிணங்கள் அறிந்த பிணங்கள்

அனாதைப் பிணங்கள் ஆண்ட பிணங்கள்

அதிகாரப் பிணங்கள் அரசவைப் பிணங்கள்

மர்மப் பிணங்கள் மாண்புமிகு பிணங்கள்

ஊர்ப் பிணங்கள் சேரிப் பிணங்கள்

 

உழைக்கும் பிணங்கள் ஏய்க்கும் பிணங்கள்

நீட்டுப் பிணங்கள் செல்லா நோட்டுப் பிணங்கள்

பக்திப் பிணங்கள் கடவுள் பிணங்கள்

நீதிப் பிணங்கள் போதைப் பிணங்கள்

காவிப் பிணங்கள் கார்ப்பரேட் பிணங்கள்

 

மமதைப் பிணங்கள் மகுடம் தரித்த பிணங்கள்

கொரானா பிணங்கள் கொலைகாரப் பிணங்கள்

பிணங்கள் மட்டுமே அலையும் காட்டில்

மனிதரைத் தேடிக் காண்பது  எங்ஙனம் ?

 

சுபொஅ.