நான் யார் என்ற கேள்விக்கு என்ன பதில்?

Posted by அகத்தீ Labels:





தொடரும் வினாக்கள் :

நான் யார் என்ற கேள்விக்கு என்ன பதில்?

சு.பொ. அகத்தியலிங்கம்

·         நான் யார் என்கிற கேள்விக்கு என்னதான் இறுதியான பதில்?

·         எல்லாவற்றையும் வெறுமே அறிவியல் அளவுகோலால் அளந்துவிட முடியுமா ? ஒரு குழந்தையின் புன்சிரிப்பை ; நோயாளி மீதான கருணையை அளக்க அறிவியல் உதவுமா ?

·         அகம் பிரம்மாஸ்மி, தத்வமஸி ஆகிய மகாவாக்கியங்களின் அடிப்படையில்தான் சமுதாயத்தைக் கட்டமைக்க இந்து சமுதாயம் முயற்சிப்பதாகவும் வசுதேவ குடும்பம் என்கிற உலகப் பார்வையை இந்துமதம் கொண்டிருப்பதாகவும் இப்போது அடிக்கடி சொல்லப்படுகிறதே அதன் மெய்யான சாரம் என்ன ?

·         காலையிலே எழுந்ததும் குளிங்கன்னு இந்து மதம் சொல்லுகிறது என்றால் ; அதற்கும் நொட்டியம் பேசுவீர்களா ? குளித்தல் நல்ல பண்பாட்டுக் கூறு அல்லவா ? சுத்தபத்தமா இருந்தால் பிரச்சனை இல்லையே ! பதில் சொல்லுங்கள்!

·         மனிதன் சூழ்நிலையின் கைதி என்றோசூழ்நிலையின் விளைபொருள் என்றோ கொள்வது பிழையில்லை அல்லவா ?

இந்த உரையாடலை வாசகர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பது தெரிகிறது. பதில் சொல்லாமல் நழுவவோ மழுப்பவோ இயலாது. அலைபேசியிலும் நேரிலும் மின்னஞ்சலிலும் குறுஞ்செய்தி மூலமும் ஏதாவது ஒருவகையில் தேடலை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேடல் ஒருவழிப்பாதை அல்லவே! கேள்விகளை மட்டுமல்ல பதிலுக்கான தரவுகளையும் அனுப்பி இந்த கேள்வி பதிலை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வேறென்ன வேண்டும் !

நான் யார் என்கிற கேள்விக்கு என்னதான் இறுதியான பதில்?

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு என்ப்படும் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒரு செல் உயிரியிலிருந்து மனிதகுலம் தோன்றிய வரலாற்றுப் போக்கை டுத்துச் சொல்லும் . அதற்கு டார்வினைப் படியுங்கள். இங்கு மனிதன் கதையைப் பார்ப்போம் .

முன்னர் நம் இச்சையினால் பிறந்தோமில்லை ; முதல் இறுதி நம் வசத்தில் இல்லைஎன்பார் கண்ணதாசன்.  ஆம் நானோ நீயோ விரும்பி மனு கொடுத்து வந்தவரல்ல .

தந்தை தவறு செய்தார் / தாயும் இடம் கொடுத்தாள் / வந்து பிறந்து விட்டேன் / வாழத்தெரியவில்லைஎன்கிற பழைய திரைப்படப் பாடல் உடன் நினைவிற்கு வந்தது . இது ஒரு குற்ற உணர்வாக ஒலிக்கிறது . உண்மையில் தந்தையின் விந்தணுவும் தாயின் கருமுட்டையும் உடலுறவில் இணைவது குற்றமல்ல ; தேவை. அதில் பிறந்தவர்தாம் நீங்களும் நானும்.

இந்த இயற்கைச் சுழற்சி இல்லையெனில் எந்த உயிரினமும் இல்லாது பூண்டற்றுப் போய்விடாதோ ? இப்படி தாய் தந்தையால் பிறந்தோம் என்பது  உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே. நானோ நீயோ சுயம்பு அல்ல, சமூகப்பிராணி எனவும் ஒரு வகையில் சொல்லலாம். சமூகத்தில் உழைப்பால் உருவான உணவு, உடை, இருப்பிடம், இன்னபிற வசதிகள் அனைத்தையும் கொண்டே  நாம் ஒவ்வொருவரும் வளர்கிறோம் .

உமது தாய் தந்தையரும் என் தாய் தந்தையரும் அப்படியே . அதனால்தான் அவர்கள் உறவு கொள்ள முடிந்தது, நீயும் நானும் பிறக்க முடிந்தது. இந்த பிறப்பு இறப்புச் சங்கிலி காலங்காலமாய் தொடரும். ஆழ்ந்து யோசித்தால் நானும் நீரும் சமூகத்தின் ஒரு அங்கமே. ஆம், இந்த சமூகம் இட்ட உரத்தில் வளர்ந்தே உன்னையும் என்னையும் தாய்தந்தையர் பெற்றனர் என்பதே உண்மை .

ஒவ்வொருவருக்கும் சமூகம் தரும் வாய்ப்பினையொட்டியும் - அவரவர் தனித்த முயற்சியை ஒட்டியும் ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றனர் . இதனை பிறிதொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம் . ஒரே மாதிரி இரண்டு இலையை ஒரு மரத்தில் காட்ட இயலுமா?

அபூர்வம். நிச்சயம் ஒன்றுக்கொன்று வித்தியாசம் இருக்கும். ஒரு உயர்ரக மாமரத்தில் கனிந்த எல்லா மாம்பழங்களும் நிச்சயம் ஒரே சுவை தருவதில்லை; ஒவ்வொன்றிலும் சிறிய வேறுபாடுண்டு . அந்தமரத்திலும் சில காய்கள் வெம்பிவிடுவதுண்டு; சில அழுகிவிடுவதுண்டு. ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆய்வு செய்யும் போது அதனதன் பொதுத்தன்மையும் தனித்தன்மையும் புலனாகும். இப்படித்தான் மனிதர்களும் .


இந்தச் சூழலில் தனிமனித சிக்கல்களை மட்டுமே முன்வைத்து அவனை தனித்தீவாக மாற்றவும் ஆன்மீகச் சிமிழுக்குள் அடைக்கவும்நான் யார்எனதத்துவ விசாரம்செய்யவும் தொடங்கி விடுகின்றனர்.

மாறாகநீ ஒரு சமூக உறுப்பினர் உனக்கு தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சமூக வாழ்க்கையும் இருக்கிறது ; நீ சமூகத்தின் ஒரு அங்கம் ; சமூகத்தால் நீ பெற்றதும் உண்டு ; உன்னால் சமூகம் பெற்றதும் உண்டு . இந்த பரஸ்பர உறவு இல்லாமல் நீயும் இல்லை . நானும் இல்லை,” என்ற சிந்தனையையும் அறிவியல் சிந்தனையாளர்கள் முன்வைக்கிறார்கள்.  இந்த தெளிவு பிறப்பின் மயக்கம் இல்லை. குழப்பம் இல்லை. மரணம் வரும்போது வரட்டும்; வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்.


எல்லாவற்றையும் வெறுமே அறிவியல் அளவுகோலால் அளந்துவிட முடியுமா ? ஒரு குழந்தையின் புன்சிரிப்பை ; நோயாளி மீதான கருணையை அளக்க அறிவியல் உதவுமா ?

நிச்சயமாக அப்படி செய்யும்படி யாரும் சொல்லவில்லை. வறட்டுத்தனமாக அறிவியல் முழக்கோலைத் தூக்கிக்கொண்டு திரியவும் கூடாது; மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள் போல் அறிவியல் சார்ந்த மூடநம்பிக்கைகளும் தீமையானதே ! குழந்தையின் புன்னகையும் நோயாளி மீதான கருணையும் மானுடத்தன்மை . அதைக் கொண்டாடுவோம் . ஆயினும் இதற்கும் சமூக உணர்வுக்கும் சம்மந்தமில்லை என்பதும்; இதற்கும் சமூக அறிவியலுக்கும் சம்பந்தமில்லை என்பதும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யே!

புன்னகைக்கும் பெண் சிசுவைக் கொல்லுவது ஏன் ? ஒடிசாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிட்சை அளித்துவந்த ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்குடும்பத்துடன் உயிரோடு எரிக்கப்பட்டது ஏன்? புன்னகை சிந்தவேண்டிய மழலைகள் கையேந்தி பிச்சைக்கு கெஞ்சுவது ஏன் ? ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னாலும் அழுகைக்குப் பின்னாலும் கருணைக்குப் பின்னாலும் கோவத்துக்குப் பின்னாலும் தனிப்பட்ட காரணங்கள் இருப்பது போலவே சமூகக் காரணிகளும் இருக்கும் . இதனை பொதுவாய் புரிந்து கொண்டால் போதும் . வறட்டுத்தனமாய் இந்த குழந்தை ஏன் சிரிக்கிறது என ஒவ்வொரு முறையும் ஆராய்ச்சியில் இறங்கிவிடக்கூடாது . பிச்சைக்கு; கையேந்தாத சமூகத்தைப் படைக்க கனவு காண்பதும், அதற்காக முயற்சிப்பதும் தேவை.

அதே சமயம் நம் முன் பசியின் குரலொடு நீளும் கைகளை தட்டிவிடுவது இதயமற்ற செயல் .

அகம் பிரம்மாஸ்மி, தத்வமஸி ஆகிய மகாவாக்கியங்களின் அடிப்படையில் சமுதாயத்தைக் கட்டமைக்க இந்து சமுதாயம் முயற்சிப்பதாகவும் - வசுதேவ குடும்பம் என்கிற உலகப் பார்வையை இந்துமதம் கொண்டிருப்பதாகவும் - இப்போது அடிக்கடி சொல்லப்படுகிறதே அதன் மெய்யான சாரம் என்ன ?

தத்  = அது; துவம் = நீ; அஸி = ஆகிறாய். -அதாவது   “நீ அதுவாகிறாய்என்பதே இதன் பொருள்

.அதாவது   “நீயே கடவுள்என்பதே இதன் சாரம்.

இந்த மகாவாக்கியம் நான்கு வேதத்திலும் ஒரே மாதிரியாகச்  சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லையே! நான்கு விதமாய் சொல்லப்பட்டிருக்கிறது .

ரிக் வேதத்தில்பிரக்ஞானம் பிரம்மம்அதாவது  “தூய அறிவே பிரம்மம்என்று கூறப்படுகிறது. இதைத்தான்சுத்த அறிவே தெய்வம்என்றானோ பாரதி ?

யஜூர் வேதத்தில்அகம் பிரம்மாஸ்மிநானே அந்த பிரம்மம் , இதைத்தான் இப்போதும் சில சாமியார்கள்  “ நானே கடவுள்என ஏமாற்றித் திரிகிறார்களோ ?

சாம வேதத்தில்  ‘தத்வமஸி ‘  நான் பிரம்மம் ஆனால் என் எதிரில் நிற்கும் நீயும் அதுவே.அப்புறம் ஏன் சாதி, மத பேதம் ?

அதர்வண  வேதத்தில்அயம் ஆத்மா பிரம்மம் ‘ – இந்த ஆத்மாவே பிரம்மம் என்பதாம். அப்படியாயின் வஞ்சகமும் பழிவாங்கலும் கொலைவெறியும் ஏன் ?

 இதற்கு விளக்கம் சொல்ல வந்தவர்கள் ; அவர்கள் மொழியில் சொல்வதானால் பாஷ்யம் எழுத வந்தவர்கள் மூன்று பிரிவுகளாகி விட்டனர் .

 ஆதி சங்கரரால்  விளக்கப்பட்ட அத்வைதவேதாந்தம் 'அதுவே நீயாக உளாய்' என்பதைஅது'வும்நீ'யும் ஒன்றே என்று பொருள் கொள்கிறது.

ஸ்ரீராமானுஜரால்  விளக்கப்பட்ட, வைணவம் என்ற பெயரில் அறியப்படும் விசிட்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. ஆன்மா அப்பரம்பொருளின் ஒர் அம்சமே. ‘இது' வும்அது' வும் ஒன்றாகாது, வெவ்வேறு என்கிறது இந்த இரட்டை நிலையைக் குறிக்கவே விசிட்டாத்துவைதம் என பெயரிடப்பட்டது .

மத்வாச்சாரியாரால்  விளக்கப்பட்ட துவைதம் வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. ‘தத்துவமஸி' என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் ஆத்மா' என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, ‘ ஆத்மாதத்துவமஸி' என்பதை ஆத்மா + அதத்துவமஸி' என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள்நீ 'அதத்', அதாவது, ‘பரம்பொருள் அல்லாததாக உளாய்' என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு என்பது துவைத சித்தாந்தம்.


இப்போது இந்துத்துவம் பேசுகிறவர் இதில் எப்பொருளை பற்றி நிற்கிறார்?

விவேகானந்தர் அத்வைதத்தைப் பின்பற்றினாலும் சங்கரரின் எல்லாம் மாயை என்பதை ஏற்கவில்லை . இன்னும் சொல்லப்போனால் ஆதிசங்கரரைபேராசை கொண்ட தென்னகத்து புரோகிதப் பாப்பான்என்று ஓங்கிக் குட்டவும் வெய்திருக்கிறார் விவேகானந்தர்.

பாரதியும்மாயைஎன்பதை ஏற்கவில்லை . “ நிற்பதுவும் நடப்பதுவும் அற்ப மாயைகளோ, உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோஎன்கிற பாடலே இதற்குப் பதில்.

இது போலவே   “அகம் பிரம்மாஸ்மிஎனில்   “ நான்தான் பிரம்மம்,” அதாவது  “ நானே கடவுள்என்றே பொருள். இதன் நீட்சியாகசோஸூஅகம் அஸ்மிஇதன் பொருள்  “ நானே அவன்அதாவது  “நானே கடவுள்”. இப்படியெல்லாம் பேசுவதும் கேட்பதும் புதிதல்ல . அப்படியாயின் எல்லோரும் கடவுள் ; பின் ஏன் போட்டி, பொறாமை, பூசல் ? கேள்வி எழுப்பினால் தலை சுற்றும் .


எல்லாவற்றிற்கும் பொதுவாய் .  “சர்வம் பிரம்ம மயம்என்கிறது வேதம் என்பர். எல்லாம் கடவுளின் அம்சம் என்பதே இதன் பொருளாம். ஆனால் அத்தத்துவம் சமத்துவத்துக்கான தத்துவமாக வளரவே இல்லை என்பார் அம்பேத்கர் .  “ வசுதேவ குடும்பம்எல்லோரும் ஒரே குடும்பம் என்கிற உலகப் பார்வை என பீற்றிக்கொள்வர். அப்படியாயின் பிரிவும் பேதமும் பார்ப்பது ஏன் என்பதே நம் கேள்வி. இவ்வளவும் வெறும் பேச்சே . ஏனெனில் நால் வர்ணமும், சாதி அடுக்குகளும் அதன் கொடூரங்களும்தானே நடைமுறை இந்து மதமாக உள்ளது?

உண்மையில் நானே கடவுள்  அல்லது நானே பிரம்மம் என எப்படி பொருள் கொள்ளினும் விளக்கினும் இறுதியில் பரம்பொருளில் கேள்வி முறையற்று சரணடையச் செய்வதே இலக்காகிறது; அதாவது மனித முயற்சியைத் தேடலை முடக்குவதே இதன் பொருள்.  செயலுக்கு உந்தித்தள்ளாதவெறும் கற்பனை மயக்கத்தில்  -இல்லாத பரம் பொருளை நோக்கி  -மனிதகுலத்தை படுகுழியில் தள்ளுவதன்றோ இதன் சாரம் .

இதனை எதிரானதன்றோ இந்தியாவின் பல்வேறு தத்துவ மரபுகள்! தமிழர் தத்துவ மரபும் இவ்வாறு வைதீகத்திற்கு எதிரானதுதானே! நாம் நமது அறிவார்ந்த பொருள் முதல் வாத மரபை அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுப்போம் .


முதல் கேள்வியில்   “நான்ஏன்பதற்கு தரப்பட்ட விளக்கம் ஒவ்வொருவரையும் சமூகத்தில் அங்கமாகக்கருதி தானும் சமூகமும் பயனுற வாழ வழிசெய்யும் . “நான்என்பதின் வேதாந்த விளக்கம் மேற்கூறியவாறு குழப்பதிலும் முடியும் - சுயத்தில் ஒடுக்கும் . எது தேவை என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்.


காலையிலே எழுந்ததும் குளிங்கன்னு இந்து மதம் சொல்லுகிறது என்றால் ; அதற்கும் நொட்டியம் பேசுவீர்களா? குளித்தல் நல்ல பண்பாட்டுக் கூறு அல்லவா? சுத்தபத்தமாக இருந்தால் பிரச்சனை இல்லையே! பதில் சொல்லுங்கள்!


நித்தம் நித்தம் நீராடின் 
நெடுமால் அருளைப் பெறலாமாம்
தத்தும் தவளை மீன்களெல்லாம்
அப்பேறடைய வேண்டாவே

 -எப்போதோ படித்த கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் பாட்டு வரிகள் நினைவில் மோதின. நாம் குளிப்பதற்கு எதிரி அல்ல ; ஆனால் அதற்கொரு புனிதம் கற்பித்து ; மதச்சாயம் பூசி மதவெறி அரசியல் நடத்த முனைவோருக்கு நிச்சயம் எதிரி .

கூழானாலும் குளித்துக் குடிஎன்பதும் நம்மரபே ! “ சனி நீராடுஎன வாரம் ஒரு முறை குளிப்பதும் நம் மரபே ! ஆறும் குளமும் உள்ள ஊருக்கு முன்னது ; தண்ணீர் பஞ்சம் உள்ள ஊருக்கு பின்னது அவ்வளவுதான் .

ஆற்றிலே மூழ்கிக் குளிப்பதும் நம்மரபே! அரை வாளித் தண்ணீரில்காக்கா குளியல்போடுவதும் நம் மரபே. இது அவரவர் வாழும் சூழல் சார்ந்தது .

 காலையில் வயலில் இறங்கி உழைத்து விட்டு, வரப்பிலேயே கஞ்சி குடித்து விட்டு, மீண்டும் உழைத்து விட்டு, வீடு திரும்புகையில் குளிப்பவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள். இப்படித்தான் பெரும்பாலான உடலுழைப்புத் தொழிலாளர் வழக்கம். அது அவரின் பணிச் சூழல் சார்ந்தது.  சில தொழில்களில் ஈடுபடுவோர் பணியை முடித்து வீடு திரும்பிய பின்னரே குளிப்பர்.  இது அவர்களின் தேவை சார்ந்தது .

 இன்றைய அவசர உலகில்பணிச் சூழலில் தூங்குவதும் குளிப்பதும்  எந்த நேரத்தில் என்பதை நாமாக தீர்மானிக்க முடியுமா ? வேலை நேரம் சார்ந்தல்லவா தீர்மானிக்க இயலும் !  

வெயில் , குளிர், மழை, எனப் பருவச் சூழலுக்கும் தட்பவெப்ப நிலைக்கும் ஏற்பவே குளியல் எப்போது எப்படி என்பதெல்லாம்... சரிதானே!

 கோயிலுக்கு போகும் போது குளித்துவிட்டுப் போ என்பதுகூட வெப்பநாட்டில் சரி ! உறைபனி நிலவும் இடத்தில் சாத்தியமா ? எந்த சாமி குளித்து விட்டு வா என கட்டளையிட்டது?

மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்றே குறளாசானும் எடுத்து இயம்பினான். சுத்த பத்தமாக இருப்பது என்கிற போர்வையில் சாதியத்தையும் தீண்டாமையையும் நியாயப்படுத்துவது மானுடத்துக்குச் செய்யும் வஞ்சகம்.

 குளிப்பதும் சுத்தமாக இருப்பதும் உடல் நலம் சார்ந்தசூழல் சார்ந்தவாய்ப்பு சார்ந்த பிரச்சனையே ஒழிய அதில் எந்தப் புனிதச் சங்கிலியோமதச் சங்கிலியோ பிணைக்கப்டத்தேவை இல்லை. அப்படி பிணைக்கும் கலாச்சார அடியாட்கள் மனிதகுல விரோதியே! ஐயம் இல்லை.


மனிதன் சூழ்நிலையின் கைதி என்றோசூழ்நிலையின் விளைபொருள் என்றோ கொள்வது பிழையில்லை அல்லவா ?


அப்படிச் சொல்ல இயலாது. ஆன்மீகவாதிகள் மனிதப் பிறவி ஆண்டவனின் இச்சைக்குட்பட்டது. வெற்றியும் தோல்வியும் மகிழ்ச்சியும் துக்கமும் விதிவசம் என்பர். இதனை ஏற்க இயலாது. ஏற்கக் கூடாது

முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்என வள்ளுவன் சொன்னதை மனதில் நிறுத்தி விடாமுயற்சியில் ஈடுபடலே சாலச் சிறந்தது. அதுபோலவே மனிதனை வெறுமே சூழ்நிலையின் விளை பொருளாகப் பார்ப்பதும் பிழையே .

ஒரு மனிதன் என்பவன் என்னவாக இருக்கிறானோ, அவனுடைய குணம் , அவனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் அவனுடைய சுற்றுச் சூழலும், கல்வியும் தீர்மானிக்கிறது என்று நினைத்தார்கள் ஒரு பகுதி பொருள்முதல்வாதிகள் அல்லது ஒரு பகுதி பகுத்தறிவாளர்கள். இவர்களை யாந்திரீகப் பொருள் முதல் வாதிகள் அல்லது வறட்டு நாத்திகர்கள் எனலாம். மாரீஸ் கான்போர்த் என்பவர்இயக்கவியல் பொருள் முதல்வாதம்நூலில் இதனை பின்வருமாறு விளக்கினார் :


 “இது அனைவருக்கும் மேலான கற்பனாவாத சோஷலிஸ்டுகளுக்குப் பொருந்தியது . ஆகவே மனிதர்களை மேம்பட்டவர்களாகவும் அதிக மகிழ்ச்சியுடையவர்களாகவும் பகுத்தறிவுகூடியவர்களாகவும் ஆக்குவதற்கு அவர்களை இன்னும் சிறந்த நிலைமைகளில் இருக்க வைத்து மேலும் அவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவது அவசியம் என்று அவர்கள் பிரகடனம் செய்தார்கள் .”

ஆனால் மார்கஸ் இதற்கு இப்படி பதிலளித்தார்:

சூழ்நிலை மற்றும் வளர்ப்பு முறை ஆகியவற்றின் விளைபொருள்கள்தான் மனிதர்கள். – மாற்றமடைந்த சூழ்நிலை, மாற்றமடைந்த வளர்ப்புமுறை ஆகியவற்றால் மாற்றமடைந்த மனிதன் உருவாக்கப்படுகிறான் என்கிற பொருள்முதல்வாதக் கோட்பாடானது, சூழ்நிலைகள் மனிதனால் மாற்றப்படுகின்றன என்பதையும் கல்வியளிப்பவருக்கே கல்வி கற்பிக்கப்பட வேண்டியிருக்கிறது என்பதையும் மறந்து விடுகிறது.”
மனிதர்கள் வெறும் சூழ்நிலையின் விளைபொருட்களாக இருப்பார்களேயானால் அப்பொழுது சூழ்நிலையின் தயவில் இருப்பவர்களாகிவிடுவார்கள் . ஆனால் அதற்கு நேர் முரணாக மனிதர்கள் தங்கள் சூழ்நிலைகளைத் தாங்களே மாற்றிக்கொள்ளமுடியும் . மனிதர்கள் தாங்களாகவே மாறிவிடுகிறார்கள்.  அது மாற்றம் அடைந்துவிட்ட சூழ்நிலைகளின் யாந்திரீக விளையாட்டல்ல. மாறாக தங்கள் சூழ்நிலைகளை மாற்றிக் கொள்கிற செயல்வழியிலும்அந்த மாற்றத்தில் அவர்களுடைய சொந்தச் செயல்பாடுகளாலும் மாறுகிறார்கள்.”

காட்டில் எந்த கருவியுமின்றி பாதுகாப்புமின்றி உணவுக்கு அலைத்த மனிதன் இன்று எவ்வளவு முன்னேறிய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறான் . சூழ்நிலையை  மாற்றி அமைத்ததில் மனிதரின் பங்களிப்பு முக்கியமானதல்லவா?

ஆம் . மனிதனை இயந்திரமாகப் பார்க்காமல் செயலூக்கமுள்ளவனாகப் பார்ப்பதே சரியான அணுகுமுறை . ஆவவேதான் யாந்திரீகப் பொருள்முதல் வாதத்தை, வறட்டு நாத்திகத்தை நிராகரித்து அந்த இடத்தில்   “இயக்கவியல் பொருள் முதல் வாதம்எனும் சரியான சித்தாந்தத்தை மார்க்சிஸ்டுகள் முன்வைக்கிறார்கள். அது என்ன? அதனை இனிவரும் பகுதிகளில் பேசலாம் .

நன்றி : வண்ணக்கதிர் 28 ஜூன் 2015