sorkolam 6

Posted by அகத்தீ Labels:


சொற்கோலம் .6.

முட்டை அழுகினால் சற்று தாமதமாக அப்புறப்படுத்தினும் கேடொன்றும் நிகழ்ந்துவிடாது .

தக்காளி அழுகினால் உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும் ; இல்லையேல் கூடைத் தக்காளியும் அழுகிவிடும் .

முட்டையும் அழுகியது ,தக்காளியும் அழுகியது ஆயினும் இரண்டும் ஒருப்போல் இல்லை . கையாளுவதற்கு ஒரு பக்குவம் தேவை .புரிதல் தேவை .

சமூக உளவியலும் அப்படித்தான் முடை நாற்றமெடுக்கும் பல அழுகல் சித்தாந்தங்களின் குவியலாக உள்ளது .தூய்மைப் படுத்த வேண்டும் .

எங்கிருந்து தொடங்குவது என்பதே அடிப்படையானக் கேள்வி .எங்கே தொட்டாலும் மினனதிர்ச்சி ஏற்படும் .அளவும் தாக்கமும் மாறுபடும் .

 ‘மானுடம் வென்றதம்மா’ எனக் கவிபாடும் பரந்த இதயத்துடன் மானுடம் ஒன்றுபட எவை எவை தடை என ஓர்ந்து நொறுக்குதல் ஓர் புறம் .

பேயிருட்டையும் ஓர் கணத்தில் கொல்லும் தீபச் சுடராய் முயன்று  அறிவொளி ஏற்றுதல் இன்னோர் புறம் .

நல்லது அல்லது பகுத்துப் பார்க்கும் பார்வையைத் தொலைத்து ; ஒரு கலயம் கள்ளுக்கு ஆசைப்பட்டு குடியிருக்கும் வீட்டுக்கு தீ வைக்கும் படித்த மூடரை தீமையின் கருவென அறிந்து அகற்றுக விரைந்து .

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதென ஓருத்தர் ஆவேசம் கொண்டு பொருதும் வேளையில் ; அவர் வேட்டியை கோவணத்தை உருவி தனக்கென உரிமை கொள்வேன் அழுகிய தக்காளியினும் அழுகிய மனம் கொண்டோன். ஆபத்தின் மூலவேர் .

இல்லாதிருப்பது இரக்கத்திற்குரியதே . தேவையை அடைய தேடிப் பயணித்தல் உயிர்த்தலின் பொருட்டே .

ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் கோடாரிக் காம்பாய் தீட்டிய மரத்தை பதம் பார்த்தல் அறமும் அன்று .மனிதமும் அன்று .

கொல்லும் வறுமையிலும் போராட்ட துணையாகு ! மானுடம் வெல்லும் வழி அது ஒன்றே .இன்றும் .என்றும் .

-         சு.பொ.அகத்தியலிங்கம்.



corkolam 5

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .5. அந்த நாய்க்குட்டியின் வலது முன்னங்கால் ஒடிந்து தொங்குகிறது .வாயிலும் பெரிய கிழிசல் . ஒற்றைக்காதும் பிய்ந்து கிடக்கிறது . உடல் முழுக்க அழுக்கு அப்பியுள்ளது . அந்த நாய்க் குட்டிக்காகத்தான் இரண்டு குழந்தைகளுக்குள் சண்டை .அடம் பிடித்து அழுகின்றன . வேறு அழகழகான புதிய நாய் பொம்மைகள் இருந்தாலும் பழைய உடைந்த நாய்க்குட்டி பொம்மை மீதே குழந்தைக்கு அலாதி பாசம் . அன்புக்கு ஊனம் தடையல்ல ; அழகும் பொருட்டல்ல. அந்த காலொடிந்த நாய் பொம்மைக்கு முத்தம் ஈந்து குதுகலிக்கிறது குழந்தை . அது மட்டுமல்ல உடைந்த பேனா மூடி , நசுங்கி கிடக்கும் பழைய தகர டப்பா , பற்பசை வாங்கிய அட்டைப் பெட்டி ,சக்கரம் கறன்றுவிட்ட கார் பொம்மை , உருக்குலைந்து கிடக்கும் குட்டி பாப்பா பொம்மை இப்படி குழந்தையை ஈர்க்கும் ஒவ்வொன்றும் நம்மை ஏதோ சிந்திக்கத் தூண்டுகிறது . விலை உயர்ந்ததில் இல்லை ; விருப்பமானதைக் கொஞ்சி விளையாடவே குழந்தைகள் ஆர்வம் காட்டுகின்றன .கிடைக்காவிடில் அழுது புரண்டு அதை எடுத்துக் கொள்கிறது . அழகு பொம்மைகள் அலமாரியில் கொலுவிருக்க உடைந்த பொம்மைகளோடு படுக்கையில் உறங்கவும் ,சாப்பாடு ஊட்டவும் குழந்தைகள் எப்போதும் பிரியப்படுகின்றன . குப்பையாய்ச் சேர்ந்திருக்கும் உடைந்த பொம்மைகளை தூக்கி எறிந்துவிட அம்மா பலமுறை எண்ணியுள்ளார் .முயற்சித்துள்ளார் . தூங்கும் போது அவற்றை அள்ளிக் கொட்ட முயற்சித்த தாய் ,குழந்தை விழித்ததும் அழுமே என தன் முயற்சியில் தோற்றுப் போகிறாள். குழந்தைகளுக்கு எப்போதும் ஏன் ஒன்றைப் பிடிக்கிறது .காரணமில்லை. .பிடிக்கிறது .அவ்வளவுதான் .அவர்களின் உலகமே தனி. குழந்தைகளின் கட்டற்ற அன்பையும் பிரியத்தையும் வளர வளர எங்கே தொலைத்து விடுகிறோம் ? கொஞ்சம் வெட்கத்தையும் கவுரவத்தையும் விட்டு குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளலாமே ! சு.பொ.அகத்தியலிங்கம்.

sorkolam 4

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .4. “நாற்காலியைத் தேய்க்கிறான் ,நாற்காலிப் பைத்தியம் ,நாற்காலித் திமிர் ,நாற்காலி ஆசை, நாற்காலி சதி ,நாற்காலி வெறி இப்படி என்னைக் குற்றம் சொல்கிறீர்களே நியாயமா ?” “ நான் என்ன பிழை செய்தேன் ? மூடன் உட்கார்ந்தாலும் அறிஞன் உட்கார்ந்தாலும் நான் வேறுபாடு பார்ப்பதில்லை.” “ குபேரன் உட்கார்ந்தாலும் பிச்சைக்காரன் உட்கார்ந்தாலும் நான் பிரித்தறிவதில்லை.” “குற்றவாளி உட்கார்ந்தாலும் அப்பிராணி உட்கார்ந்தாலும் நான் பேதம் பார்ப்பதில்லை . யோக்கியன் அயோக்கியன் எல்லாம் எனக்கு ஒன்றுதான்” “இற்று ஒடியும் வரை என் மீது அமர்வோரை சுமப்பதே என் பணி . நீங்களே உடைக்காத வரை முகத்தைச் சுழிக்காமல் , வெறுப்பைக் காட்டாமல் உழைக்கிறேன். உங்களின் ஆன்மீக அகராதிப்படி நான் ‘கர்ம யோகி’.என்னைப் பழிக்கலாமா ?” “ சரி,சரி நாற்காலி ! நீ ரொம்பவும் அளக்காதே ! உனக்காக நடக்கும் சண்டைகளும் அட்டூழியங்களும் நீ அறியாததா ?” “ குசு போட்டாலும் , குசுகுசுவென ரகசியம் பேசினாலும் நீ அறிவாயே ! என்றைக்கேனும் அதை உரக்கச் சொன்னது உண்டா ?” “ நான் மரக்கட்டை .எனக்கு உயிர் இல்லை .உணர்ச்சி இல்லை .ஆனால் இரத்தமும் சதையும் உயிர்துடிப்பும் உள்ள எத்தைனையோ பேர் கண்ணெதிரே நடக்கும் அநீதிகளைக் கண்டு உதட்டைக்கூட அசைக்காமல் மவுனம் காக்கிறார்களே ! அதற்கு என்ன சொல்கிறீர்கள் ?” “ என்னிடம் பதில் இல்லை .உன் முன் தலைகுனிகிறேன் ..” என்னுள் கேள்வி விஸ்வரூமெடுத்தது , “ தவறு நாற்காலியிடமா ? சகித்து சகித்து ஜடமாகிப் போன நம்மிடமா ?” சு.பொ.அகத்தியலிங்கம்.

சொற்கோலம்.3

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .3. “உஷ் ! சத்தம் போடாதே !” குழந்தைகளை அதட்டினாள் அம்மா. அமைதி திரும்பியது போல் தெரிந்தது . ஆனால் கொஞ்ச நேரம்தான் .மீண்டும் குதூகலாமாய் அவர்கள் கூச்சலிட்டனர் . வீட்டில் கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது . நோய்வாய்ப்பட்ட பெரியவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர் . பெரிய பிள்ளைகள் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருக்கின்றனர் . அம்மா புலம்பினாள் . மீண்டும் அதட்டினாள் . “ போம்மா ! நாங்க விளையாடுகிறோம் …” எனச் சொல்லிக் கொண்டே கோரஸாக கூச்சலிட்டனர் குழந்தைகள் . அம்மா பொறுமை இழந்தாள் . ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அடிக்கத் துரத்தலானாள் . குழந்தைகள் பிடிகொடுக்காமல் ஓடினார்கள் .கையில் சிக்கிய பொடியன் காதைத் திருகினாள் அம்மா .அவன் ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தான் . மற்ற குழந்தைகளும் கூடவே அழத் தொடங்கினர் . இப்போது அம்மா சமாதானம் செய்வதில் இறங்கினாள் . மீண்டும் குழந்தைகள் உற்சாகமாய் கூச்சலிட்டபடி விளையாடத் தொடங்கினர் . உரிமைகளை ஒரு போதும் யாரும் நசுக்கவோ பறிக்கவோ முடியாது .அடக்குமுறையினால் சற்று அடங்குவதுபோல் தெரிந்தாலும் ; அந்த அமைதி அற்ப நேரமே ! குழந்தைகள் மனித உரிமைப் பாடத்தை அவர்களின் வழியில் சொல்லியபடியே ஆரவாரம் செய்தனர் . அமைதியைவிட இரைச்சல் மேலானது அல்லவா ?

Posted by அகத்தீ

சொற்கோலம். 2. ஓர் நொடியில் அவன் / அவள் என்பது மாறி பிணம் என்றானது. இப்போது உயர் திணை இல்லை. அகறிணை. நேரம் செல்லச் செல்ல நாறும். அழுகும். வைத்து பாதுகாப்பது பெரும் சிரமம். எரித்து தீ தின்னக் கொடுப்பதா? புதைத்து மண் தின்னக் கொடுப்பதா? காக்கை கழுகுக்கு இரையாக்குவதா? அறுத்து பாடம் படிக்க மருத்துவ கல்லூரிக்கு உடல் கொடை அளிப்பதா? கேள்வி எளிது. பண்பாடு, நம்பிக்கை, பழக்கவழக்கம், சடங்கு, சம்பிரதாயம் எத்தனை எத்தனை இடையூறுகள். நாறும் பிணத்தை புதைக்கவோ எரிக்கவோ விடாமல் தடுத்து வழிமறிக்கும் ஆணவமும் சேரும். பிறப்பைக் கொண்டாடுவது போல் இறப்பைக் கொண்டாட முடியாதுதான். பிறப்பை தடுக்க வழியுண்டு. இறப்பை தடுக்கவே இயலாது. யாக்கை நிலையாமையை ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. முரட்டுத்தனமாய் பிணத்தோடும் மல்லுக்கட்டும் பழக்க வழக்கத்தை புதையுங்கள் / எரியுங்கள் முதலில். சு.பொ.அகத்தியலிங்கம்.

சொற்கோலங்கள். 1.

Posted by அகத்தீ

சொற்கோலம். 1 எந்த விழாக் கொண்டாட்டமும் ஏதேனும் கீறலை நெஞ்சில் பொறித்து விடுகிறது. இது விழாவின் குறைபாடா? கொண்டாடியவர் குறைபாடா? எந்த விழாவும் இயற்கையோடும் உழைப்போடும் சேர்ந்தே பிறக்கிறது. ஆயினும் அர்த்தம் அற்ற சடங்குகள் அதன் அங்கமாகி விடுவது ஏனோ? விழாக்களே இல்லா மனித குலம் கற்பனை செய்யவே கனக்கிறது இதயம். நாளும் கிழமையும் நலிந்தோர்க்க்கு இல்லை என்பது முள்ளாய் உறுத்துகிறது. ஒரு வட்டாரமோ, இனமோ வர்க்க, வர்ண, சாதி வேறுபாடின்றி விழாக் கொண்டாடல் எக்காலமோ? கொண்டாட்டங்கள் பண்பாட்டுச் செழுமையின் வாழும் அடையாளங்கள். கும்பிடுவதும் வழிபடுவதுமாய் வீழ்ந்த விழாக்கள் பண்பாட்டு வீழ்ச்சியின் பழம் சுமைகள். நேற்றின் விழாக்களை அதன் வேரிலிருந்து அடையாளம் காண்பீர்! மீட்டெடுப்பீர்! நாளைய விழாக்களை அறிவியல் துணையோடும், அனுபவப் பிழிவோடும், வாழ்வின் தேவையோடும் வார்த்தெடுப்பீர் புதிதாய்! சு.பொ.அகத்தியலிங்கம்.

Posted by அகத்தீ

சொற்கோலம். 1 எந்த விழாக் கொண்டாட்டமும் ஏதேனும் கீறலை நெஞ்சில் பொறித்து விடுகிறது. இது விழாவின் குறைபாடா? கொண்டாடியவர் குறைபாடா? எந்த விழாவும் இயற்கையோடும் உழைப்போடும் சேர்ந்தே பிறக்கிறது. ஆயினும் அர்த்தம் அற்ற சடங்குகள் அதன் அங்கமாகி விடுவது ஏனோ? விழாக்களே இல்லா மனித குலம் கற்பனை செய்யவே கனக்கிறது இதயம். நாளும் கிழமையும் நலிந்தோர்க்க்கு இல்லை என்பது முள்ளாய் உறுத்துகிறது. ஒரு வட்டாரமோ, இனமோ வர்க்க, வர்ண, சாதி வேறுபாடின்றி விழாக் கொண்டாடல் எக்காலமோ? கொண்டாட்டங்கள் பண்பாட்டுச் செழுமையின் வாழும் அடையாளங்கள். கும்பிடுவதும் வழிபடுவதுமாய் வீழ்ந்த விழாக்கள் பண்பாட்டு வீழ்ச்சியின் பழம் சுமைகள். நேற்றின் விழாக்களை அதன் வேரிலிருந்து அடையாளம் காண்பீர்! மீட்டெடுப்பீர்! நாளைய விழாக்களை அறிவியல் துணையோடும், அனுபவப் பிழிவோடும், வாழ்வின் தேவையோடும் வார்த்தெடுப்பீர் புதிதாய்! சு.பொ.அகத்தியலிங்கம்.

pபோஓபோ

Posted by அகத்தீ Labels:

உழவனின் கோபக் குரல் உழன்றும் உழவே தலை என்றும் உலகத்தாற்கு அச்சாணி என்றும் உழவினார் கைமடங்கின் சந்நியாசிக்கும் சோறில்லை என்றும் உழாமல் சோம்பி இருப்பின் நிலமென்னும் நல்லாள் நகுமென்றும் -இன்னும் பலவாக தோள்மீது சுமந்து கொண்டாடிய உழவர் படும்பாடு உரைக்கும் தரமோ இன்று ! உழவர் திருநாளின் வாழ்த்துரைத்தால் போதுமோ பொங்கும் கண்ணீரை யார் துடைப்பார் ? பச்சை வயலை எல்லாம் எங்கும் விஷவாயு களமாக்கி மலடாக்கி தூர்த்துவிட்டு உழவன் பெருமை உரைப்பதும் வெறும் பேச்சே! நீர்நிலையைத் தூர்த்துவிட்டு மனைபோட்டு விற்றுவிட்டு உழவின் தேவையை ஊர் முழுக்க முழங்குவதில் லாபம் என்ன ? உழவை அழித்துவிட்டு டிஜிட்டல் சிப்ஸ்சை திண்று பசியாறுவையோ ? போகி நெருப்பில் பொசுக்கிடு உன் மெத்தனத்தை தூக்கத்தை அகத்தில் நெருப்பேற்றி சூடும் சொரணையும் உள்ளவனாய் மாறிவிடு! யாரோ ஒரு தலைவர் விடுதலையை தருவார் என நம்பி ! காலில் விழும் கலாச்சாரத்தைப் போகி நெருப்பில் பொசுக்கு சுயமரியாதை என்பது வெறும் சூத்திரத்தில் அடங்குவதல்ல அநீதி நடக்குமிடமெல்லாம் ஆர்த்தெழும் போர்க்குணமே! வெறுங்கையில் முழம்போட்டு வீண்க்னவு காணாமல் வாழ்க்கையை வென்றெடுக்க வியூகத்தில் சங்கமிப்பீர் ! சு.பொ.அகத்தியலிங்கம் .

பிளாஸ்டிக் குப்பைகளும் … கம்ப்யூட்டர் சவால்களும் ..

Posted by அகத்தீ Labels:

போகி கொண்டாட மட்டுமா ? கொஞ்சம் யோசிக்கவும் செய்யுங்களேன்… “டிஜிட்டல் உலகம்” எனக் கேட்பதும், செயல்படுவதும் இனிதுதான். ஆனால் அது தள்ளும் குப்பை பற்றி நம்மில் எத்தனை பேர் கவலைப்படுகிறோம்?

பிளாஸ்டிக் குப்பைகளும் … கம்ப்யூட்டர் சவால்களும் .. சு.பொ.அகத்தியலிங்கம் நெகிழி, கணினி என தூய தமிழில் எழுதவே விருப்பம். ஆயினும் மக்களிடம் பெரிதும் புழங்கிவிட்ட பெயர்ச் சொற்களை அப்படியே பயன்படுத்தல் பிழை இல்லை. தேவையும்கூட. பொறுத்தருள்க! பஸ்சில் ரயிலில் பயணிக்கும் போது பார்வையை ஜன்னல் வழியே வீசினால் வழிநெடுக ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைத் திட்டுகளை தீவுகளைப் பார்க்கலாம் ; சுற்றிலும் வழிந்தோடும் சாக்கடையும் மொய்த்து அப்பும் கொசுவும் நம்மை உறுத்தும் . “பூமித்தாய் /முதுமை எய்துவிட்டாளோ! /தேசமெங்கும்/ பிளாஸ்டிக் பைகள்” எனக் கவலைப்படுகிறார் கவிஞர் தமிழ்தாசன். அதைவிட்டால் ரியல் எஸ்டேட் மனை ஒதுக்கீடுகள் பச்சை வயல்களின் கல்லறையாகக் காட்சி தரும் . பசுமை விரைவாய் நம்மிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கிறது . லாபவெறியில் நாம் எங்கே போகிறோம்? சரி! உலகம் நேரான பாதையில் போகிறது; நாம் மட்டும் குறுக்குப் பாதையில் போகிறோமா என்று யோசித்தால்;அப்படி ஒன்றுமில்லை தீமை பயக்கும் பாதையில் பயணிப்பதில்தான் ‘உலகத்தோடு ஒட்டஒழுகுகிறோம்’. உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் குப்பைத் தீவாக உருவெடுத்துள்ளது. ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த குப்பைத் தீவு உருவாகியுள்ளது. கடலில் ஏற்படும் சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் திரண்டு உருவான இக்குப்பை தீவு அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது! இத்தீவு நீர் மட்டத்திற்கு கீழ் இருக்கிறதாம். உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும் 100 ஆண்டுகளில் மாறிவிடும் அபாயத்தை இந்தத் தீவு சொல்கிறது. இப்படி ஒரு கட்டுரையில் வேதனைப்படுகிறார் சுப்ர பாரதிமணியன் . மொத்தப் பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது பிளாஸ்டிக் தொழில். “பெண்சிசு கொலையைப் போல மன்னிக்க இயலா பெரிய குற்றம் மண்சிசு கொலை” என கவிஞர் குமுறுவது நியாயமே! தற்போது பிளாஸ்டிக் தடை பற்றி அரசு உரக்கப் பேசுகிறது .ஆனால் அது மிகவும் மேலோட்டமானது . பிளாஸ்டிக் பைகளை தடை செய்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்கிற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பை தடைக்கு நாம் எதிரி அல்ல .சிறு வியாபாரிகளின் மீது பாயும் அரசு ,பெரும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொதி பற்றி வாய் திறப்பதில்லை. ஏன்? பிளாஸ்டிக் பை பற்றி வாய்கிழியப் பேசும் , கட்டுரை எழுதும் பலர் மின்னணுக் குப்பை (இ வேஸ்ட்) பற்றி வாயையே திறப்பதில்லை. ஏன்? உபயோகப்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், செல்போன், டிவி உள்ளிட்டவை மின்னணுக் குப்பையாகும். உலகெங்கும் சுமார் 4.5 கோடி டன் மின்னணுக் குப்பைகள் ஆண்டுதோறும் குவிகின்றன. இதில் 70 சதம் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. மின்னணு குப்பைகளை கையாளுவதில் இந்தியா 178 நாடுகளில் 155 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது .இதனால் சுகாதார நிலையில் 127 வது இடத்துக்கும், காற்று மாசில் 174 வது இடத்துக்கும், தண்ணீர் மாசுபடுவதில் 124 வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது. மின்னணுக் குப்பைகளைக் கிளறி தரம் பிரிக்கும் வேலையில் இந்தியாவில் மட்டும் 14 வயதுக்கு உட்பட்ட 4.5 லடசம் குழந்தைக் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரமும் நோய்களும் சொல்லும் தரமன்று. இந்தியாவில் பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, பூனா, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்னணு குப்பைகளின் தலைநகராகத் திகழ்கின்றன என்கிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் டன் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. இது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. இன்னும் பல மடங்கு குவிந்துள்ளதே மெய்.பெங்களூருவில் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது. இந்திய அளவில் மின்ன ணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இவை எல்லாம் பழைய கணக்கு இப்போது இது இரட்டிப்பாகிவிட்டதே மெய். சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.தமிழகத்தில் மட்டும் 2011ம் ஆண்டு கணக்கின்படி, 28,789 டன் மின் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதில் 60 சதவீதம் பழுதடைந்த கம்ப்யூட்டர் கழிவுகள்தானாம். சென்னை சுற்றுப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 பெரிய நிறுவனங்களும், 100 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன.இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 789 டன் மின்கழிவுகள் உருவாகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் நிலைமை சீரடையவில்லை. மேலும் மேலும் மோசமடைந்துள்ளது. அரசு கணக்குகூட சொல்வதில்லை. இவற்றை முறையான மறுசுழற்சி மூலம் அகற்றினால் மட்டுமே மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னையில் அங்கீ காரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் வெறும் 18 மட்டுமே உள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பின்னும் இன்றும் இதே நிலைதான். அதிலும் சென்னை மாநகராட்சி அந்நிறுவனங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு காரணம், இந்த மின்கழிவுகளை அகற்றுவதில் பிளாஸ்டிக் குப்பைத் தொழிலில் ஈடுபடுவோர் சிறு முதலீட்டில் தொழில் செய்வோராக உள்ளதுதான். இவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களை பிரித்தெடுத்துவிட்டு, மற்றவைகளை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறங்களில் வைத்து எரித்துவிடுகின்றனர். இவ்வாறு மின்கழிவுகளை எரிக்கும் போது வெளியாகும் டயாக்சின் என்ற அமிலம் பொதுமக்களுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வாமையால் ஏற்படும் தோல் நோயும் வேகமாகப் பரவுகிறது. மேலும் காரீயம், குரோமியம் 6, பெரிலியம், கேட்மியம் உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் வெளிப்படுகிறது. இதனால் உடல் உறுப்புகள் மட்டுமின்றி டிஎன்ஏ மூலக்கூறுகளும் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு வேளைகளில் இதுபோன்ற மின்கழிவுகளை எரிப்பதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஊராட்சி பகுதிகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பிளாஸ்டிக் குப்பை தொழிலில் ஈடுபடுவோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மின்கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது. மின்னணு குப்பைகளை மறு சுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்பங்கள் உள்ளன. அதேநேரம், 10 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சியவை இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்னணுக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதிகள் ஒரளவு உள்ளது. அதுவும் யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெரும் சவாலைக் கண்டு கொள்ளாமல் வெறுமே பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை என சொல்லிவிட்டு தன் தார்மீகப் பொறுப்பைக் கைகழுவுகிறது. இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது. தமிழகமும் அதில் பெரும் பங்கு வகிக்கும் .இந்த உண்மை தமிழக அரசுக்கு உறுத்தவே இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம் . “டிஜிட்டல் உலகம்” எனக் கேட்பதும், செயல்படுவதும் இனிதுதான். ஆனால் அது தள்ளும் குப்பை பற்றி நம்மில் எத்தனை பேர் கவலைப்படுகிறோம்? “மூச்சு திணறுதப்பா பூமிக்குஅவள்முந்தியில்பிறந்த சந்ததிகள் நாமொரு முடிவெடுக்க வேண்டாமா?” நன்றி : வண்ணக்கதிர் ,தீக்கதிர் , 13/01/2019.

Posted by அகத்தீ Labels:

தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான மேற்கோள்களை பொருத்தமாக எடுத்து கையாண்டிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். மார்க்சியம் என்பது அந்நிய விதை. அது இந்த மண்ணில் முளைக்காது என்போருக்கு விடையளிக்கிற பணியை இந்நூல்செய்கிறது. இளைய சமூகத்துக்கு அரிச்சுவடியாக…… மதுக்கூர் இராமலிங்கம்.

மார்க்சியம் குறித்த நூல்கள் உலகம் முழுவதும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. மார்க்ஸ் மண்ணில் பிறந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால்,அவரது சிந்தனைகள் இன்னமும் மனிதகுலத்திற்குவழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்து கொண்டேயிருக்கின்றன . மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அந்தத் தத்துவத்தை பயில முயல்பவர்களுக்கான துவக்க நிலை நூல்கள் நிரம்ப தேவைப்படுகின்றன. அந்தத் தேவையைபூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான நூல்கள் வெளிவந்து இருந்தபோதும், தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியுள்ள ‘மார்க்சியம் என்றால் என்ன? - ஒரு தொடக்கக் கையேடு’என்ற இந்த நூல் தனித்துவம் வாய்ந்தது. இந்திய விடுதலை குறித்து அவர் எழுதிய ‘விடுதலைத் தழும்புகள்’ என்ற நூலும், சோவியத் புரட்சி குறித்து எழுதிய‘புரட்சிப் பெருநதி’ என்ற நூலும் பெரும் வாசகர்கள் கவனத்தைப் பெற்றது. எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு நியாயம் வழங்குகிற முறையில் முழுமையாகக் கற்றறிந்து, உள்வாங்கி, எளிமையாக எழுதும் பாங்குடையவர் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம். இடுப்பில் இருக்கிற குழந்தைக்கு சோறு ஊட்டுகிற தாய், கதைகள் கூறி, குழந்தையின் போக்கிலேயே சென்று, அமுதூட்டுவது போல மார்க்சியம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள விரும்பி வரும் இளைய சமூகத்தை மனதில் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான மேற்கோள்களை பொருத்தமாக எடுத்து கையாண்டிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். மார்க்சியம் என்பது அந்நிய விதை. அது இந்த மண்ணில் முளைக்காது என்போருக்கு விடையளிக்கிற பணியை இந்நூல்செய்கிறது. பொருள் முதல்வாத, கருத்துமுதல்வாத தத்துவப் போர் உலகம் முழுவதும் நடந்து கொண்டேயிருக்கிறது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. லோகாயதவாதம், சார்வாகம், பூதவாதம், பகுத்தறிவு, நாத்திகவாதம் என பல்வேறு வடிவங்களில் வழங்கி வந்தபொருள் முதல்வாதமே நம் வேர் என்று சுட்டிக் காட்டும் அதே நேரத்தில், காலத்தின் விளைச்சலான தத்துவங்களின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுகிறார். அந்தத் தத்துவங்களை உள்வாங்கி, குறை களைந்து, பூரணத்துவமாக மார்க்சியம் உருவான பின்னணியையும் எளிமையாக எடுத்துரைக்கிறார். முரண்பாடுகள் குறித்து மிக அழகாக விளக்கியுள்ளார். எல்லா முரண்பாடுகளும் நல்லதும், கெட்டதுமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. நேசமுரணும் உண்டு, பகைமுரணும் உண்டு, இயல்பாக எழுகிற முரணும் உண்டு என்பதை முரண்பாடின்றி சொல்லிச்செல்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சின் வாக்கு. ஆனால், தானாய் எதுவும் மாறாது, மாற்றத்தை முன்னேற்றமாக மாற்ற வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்று விளக்கும்போது, வள்ளுவனையும் துணைக்கு அழைத்து விளக்குகிறார். மார்க்சியத்தை இந்தியப் பின்னணியோடு விளக்கியுள்ள இந்த நூல், பொதுவுடமை இயக்கத்தில் இணையும் இளைய சமூகத்திற்கு ஓர் அரிச்சுவடியாக அமையும்என்பது திண்ணம். சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல் மார்க்சியத்தை பயிலவும் முடியாது. நிறைவேற்றவும் முடியாது. அதற்கும் இந்த நூல் துணை நிற்கும். இதுபோல, இன்னும் பல நூல்களை சு.பொ.அகத்தியலிங்கம். எழுத வேண்டும் என்பதே நமது விருப்பம். மார்க்சியம் என்றால் என்ன? ஒரு தொடக்க நிலை கையேடு ,ஆசிரியர்:சு.பொ.அகத்தியலிங்கம் வெளியீடு: பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 600018 பக்: 136 விலை: ரூ.120 தொலைபேசி: 044-24332924 நன்றி : புத்தக மேசை , தீக்கதிர் , 7/1.2019.

எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !

Posted by அகத்தீ Labels:

எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !

சு.பொ.அகத்தியலிங்கம் . ஆண்டவரே ! நீவீர் ஆண்டைகளின் இரட்சகர் எனில் எமக்கு நீவீர் வேண்டாம் ! ஆண்டவரே ! நீவீர் ஆண்களின் கடவுள் எனில் – நிச்சயம் நீவீர் எமக்கு வேண்டாவே வேண்டாம் ! ஆண்டவரே ! நீவீர் ஆளுவோரின் இறைவன் எனில் - உம் நாமத்தை நான் உச்சரிக்காதிருக்கக் கடவது! ஆண்டவரே ! நீவீர் அநீதியின் பக்கமே எப்போதுமிருக்கிறீர் ! சைத்தானும் நீவிரும் ஒன்றா ? ஆண்டவரே ! நிறத்தின் பேரால் பாரபட்சம் காட்டுகிறீர் நீவிர் எப்படி ஆண்டவராவீர் ? ஆண்டவரே ! சாதி ,மதம் ,பால் ,தீட்டு என சன்னதியை மூடும் நீவிர் எப்படி ஆண்டவராக இருக்க முடியும் ? ஆண்டவரே ! அப்பாவிகளுக்கு கொடுமை இழைப்போரை காணிக்கை பெற்று புனிதராக்கும் நீவிர் எப்படி இதயம் உள்ளவராவீர் ! ஆண்டவரே! பலவீனர்களுக்கும் பாவப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தோள் கொடுகாத நீவீர் ! எமது ராஜ்யத்தை விட்டு விலகுவீராக !