திருமணநாளில் திரும்பிப்பார்க்கிறேண்..

Posted by அகத்தீ Labels:



 திருமணநாளில் திரும்பிப்பார்க்கிறேண்..

இன்று எமக்கு இனிய நாள். ஆம். 1981 அக்டோபர் 25 - தீபாவளிக்கு முதல் நாள் - ஞாயிற்றுக்கிழமை மலை 5.15 மணிக்கு  தோழர் வி.பி.சிந்தன் தலைமையில் சி.கலாவதியை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்டேன்.   
தோழர்கள்பி.ஆர்.பரமேஸ்வரன்,வே.மீனாட்சி சுந்தரம், மைதிலிசிவராமன்,கே.எம்.ஹரிபட்,
என்.நன்மாறன்,து.ராஜா உட்பட பலர் வாழ்த்துரைக்க மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டோம்.

அது முகூர்த்த நாளுமல்ல தேர்ந்தெடுத்த நேரமும் ராகுகாலம் எனவே இருவர் வீட்டிலும் பெரியவர்கள் சற்று வருந்தவே செய்தனர். ஆயினும் மீறி செய்தோம். யார் மனமும் நோகாமல் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமல்ல அல்லவா?


காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்ய எனக்கு ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு கூடவில்லை. தோழர்கள் ஏற்பாடு செய்த திருமணமே.இருவருக்கும் ஏறத்தாழ சமவயது.அது பிரச்சனையே அல்ல.

எங்களுக்கு வாய்க்காவிடினும் எங்கள் பிள்ளைகள்  எம் நெஞ்சில் பால்வார்த்துவிட்டனர்.ஆம், என் மகள் காதல் திருமணம் கலப்புத் திருமணம் செய்து கொண்டது எனக்கு மனநிறைவான நிகழ்வாகும். தற்போது என் மகனும் அப்பாதையில் செலவது கூடுதல் மகிழ்ச்சி . விரைவில் திருமணம் நடக்கும்.

இடையில் ஒரு குறுந்தகவல் : திருமணத்திற்குப் பிறகு  எம்.சி.சி வங்கியில் கடன் வாங்கி மின்விசிறி, அலாரம். ரேடியோ வாங்கியதும்..மாதா மாதம் ரூ.27 தவணை கட்டத் திணறியதும்  - 36 மாதத்தில் முடிய வேண்டிய கடன் 48 மாதமாக நீண்டதும் நினைவில் நிற்கிறது.பணவீக்கம் எப்படிப் போகிறது என்பதை வாழ்க்கை உணர்த்துகிறது.

கடன் வாங்காமல் வருவாய்க்குள் சிக்கனமாக வாழவேண்டும் என்கிற போதனை சரிதான்.ஆனால் வாழ்க்கை யதார்த்தம் வேறாக அல்லவா இருக்கிறது ? வருவாய் எப்போதாவது சொற்பமாக உயர்கிறது. ஆனால் விலைவாசி அன்றாடம் தாவித்தாவி ஏறுகிறது.குடும்ப பட்ஜெட்டில் மாதாமாதம் பற்றாக்குறை உயர்கிறது.என்ன செய்ய ? கடன் புதைகுழிதான். ஆயினும் அதில் சிக்காதார் யார் ? நாங்களும் விதிவிலக்கல்ல. எது ஆசை ? எது தேவை ? நேற்று டிவியும்,கம்யூட்டரும் ஆடம்பரப் பொருள். இன்று அத்தியாவசியப் பொருள். இன்று இன்வெட்டர் கூடத் தேவைப்படுகிறதே..

எங்கள் திருமண வாழ்வு நிச்சயம் வெற்றிகரமானதுதான்.பண நெருக்கடி மட்டுமே இருவருக்கும் இடையில் பலநேரங்களில் தற்காலிக உரசலை உருவாக்கியுள்ளது.ஆயினும் அந்த நெருக்கடியை எதிர்த்து சேர்ந்து போராடியே இதுவரை சமாளித்திருக்கிறோம்.இப்போதும் அப்படித்தான்.கடனோடும் கவலையோடும் தொடரும் வாழ்க்கை. ஆயினும் ஆறுதலாய் மகனின் செயல்பாடுகள். மீள்வோம் இந்த இக்கட்டிலிருந்தும்.

அவளின் கடவுள் நம்பிக்கையை நான் இயன்றவரை மதித்துள்ளேன்.எனது கருத்துகளை அவளும் எமது பிள்ளைகளும் நன்கு மதிக்கின்றனர்.வீட்டிற்குள் ஆரோக்கியமான கருத்து விவாதம் அவ்வப்போது நடைபெறும்.எனது கருத்துகளை தொடர்ந்து பேசிவருகிறேன்.மூட நம்பிக்கைகள்,சடங்குகள் பெரும்பகுதி தவிர்க்க முடிந்திருக்கிறது.சொந்த [கடன்] இல்லத்திறப்பு விழாவை - பெரியோர்கள் விரும்பாத பாட்டிமை அன்று சடங்குகள் இன்றி நடத்த முடிந்தது.அனைத்தும் வீட்டில் நாங்கள்  கூடிப்பேசி எடுக்கிற முடிவாக அமைகிறது.

எனது அறிவியல் பார்வையை அவள் அங்கீகரித்தே என்னோடு தோள் சேர்ந்து நிற்கிறாள்.கடவுள் மீதான லேசான நம்பிக்கை மட்டும் [மதநம்பிக்கை சாதிப்பிடிமானம் கிஞ்சிற்றும் இல்லை]அவளுக்கு உள்ளது.இன்றுகூட மாலை திருவள்ளூர் பெருமாள் கோவிலுக்குப் போக விரும்புகிறாள். செல்வோம் ,ஆனால் வழக்கம் போல் நான் வெளியே காத்திருக்க அவள் உள்ளே சென்று வருவாள்.புதிய இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் இருவரும் சேர்ந்தே செல்வோம்.அவள் சாமி கும்பிட நான் சிற்பம்,கட்டிடக்கலை,ஓவியம், தலபுராணம் இவற்றை தெரிந்துகொள்வேன்.பிறகு இருவரும் அது பற்றி பேசுவோம்.தலபுராணங்களுக்குப் பின் ஒளிந்துள்ள சாதியத்தை .பெண்ணடிமைத்தனத்தை ,மூடநம்பிக்கைகளை  அவளும் பொதுவாக ஏற்பதில்லை.வாழ்க்கைச் சக்கரம் இப்படித்தான் ஓடுகிறது.

இசையிலும் பாட்டிலும் அவளின் ஆர்வம் அளவற்றது. அவள் திறமைக்கு சில வடிகால்களே கிடைத்தது. முழுவாய்ப்பு அமையவில்லை.நான் கல்லூரி பக்கம் சென்றதில்லை. எனினும் திருமணத்திற்குப் பிறகு அவள் முதுகலை பட்டம் பெறத் துணைநின்றது மட்டுமே நான் உருப்படியாகச் செய்தது என நினைக்கிறேன்.என் எழுத்துப் பணியிலும் இயக்கப்பணியிலும் அவள் எப்போதும் தோள்கொடுத்தே வந்துள்ளாள்.

ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து முற்றாக விடுபட்ட ஆணோ பெண்ணோ இங்கு இல்லை.நாங்களும் அப்படியே.ஆணாதிக்கச் சிந்தனையை எதிர்த்து நிற்க தொடர்ந்து முயல்கிறேன். தோற்ற இடம் பல. ஆனாலும் மீண்டெழுந்து தொடர்ந்து முயல்கிறேன்.மனைவி உடல்நலம் பாதிக்கப்படும்போதுதான் கணவன் கண்விழிக்கிறான் என்று சொல்வதுண்டு. நானும் அதில் விதிவிலக்கல்லவே..

வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டேன் என துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பேன்.அன்றைய புரிதல் அவ்வளவே.வாழ்க்கை இணையர் என்கிற சரியான கண்ணோட்டம் எம்முள் மெல்ல வேர்பிடித்து வருகிறது.அவரவர்களின் நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்கிற ஜனநாயகப் பண்பாடே வாழ்வின் அடித்தளம்.காயங்களும் வலிகளும் எங்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.காலம் எங்களை பக்குவப் படுத்தி இருக்கிறது.கனிய வைத்திருக்கிறது.

காதல் மட்டும் இன்றும் என்றும் அன்றுபோலவே.எங்கள் வாழ்க்கை வெற்றிதானே.

குறிப்பு : முதலில் பெண்பார்க்கச் சென்ற போது கலர் பூந்தி வைத்திருந்தார்கள்.இன்று மீண்டும் கலர் பூந்தி வாங்கிவந்து பழைய கணக்கை நேர்செய்து விட்டேன்.காத்திருந்து பழிவாங்கிவிட்டீர்களே என்கிறாள் மனைவி.இது எப்படி இருக்கு..?

வினையும் எதிர்வினையும்

Posted by அகத்தீ Labels:




வினையும் எதிர்வினையும்

காவிரியைக் குளிர வைக்கும் கனமழையே !
கலங்கிய உள்ளத்தைத் தெளிய வைப்பாய்..
வானின்றி அமையாது உலகெனினும் - இன்றும்
பெய்கையிலே தேக்காத பிழைசெய்தார் யார் ?

உரிமைப்பங்கைப் பெறுவதில் உறுதி வேண்டும்
யாருமிதை எப்போதும் இங்கு மறுப்பாரில்லை
கால்வாய்கள்,கண்மாய்கள்,ஏரிகுளம் உடைப்பெடுக்க
காலத்தே செப்பனிட்டு காக்காத கயவர் யார் ?

மழையமுதம் பூமித்தாய் அருந்தவும் வழியின்றி
வாயெல்லாம் வழிமறித்து இடமடைத்துத் தூர்த்தவர் யார் ?
 பெய்து கெடுத்ததும் பொய்த்துக் கெடுத்ததும் கொஞ்சம் - இவர்
தூர்த்துக் கெடுத்ததும் தூங்கிக் கெடுத்ததுமே அதிகம்.

இல்லை என்கிறபோது ஏங்கிச் சபிப்பவர்கள்
வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளையிலே கைமடங்கின்
வீணாகக் கலந்துவிடும் சமுத்திரத்தில் - அப்புறம்
கூப்பாடுபோட்டாலும் கூவியழுதாலும் திருப்பிவாராது.

அடங்கா ஆசையொடு கட்டுக்குள்ளடங்காமல் எங்கும்
வெறிகொண்டு இயற்கையை நாளும் விருதாவாக்கினோம்
ஒவ்வோர் வினைக்கும் எதிர்வினை உண்டென்பதை மறந்தோம்
இனி நாளும் இயற்கை நமைப் பழிதீர்க்கும் என்செய்வோம்?

சு.பொ.அகத்தியலிங்கம்

அமுக்கப்பட்ட நிலங்கள், படையெடுக்காத பொக்ளின்கள்

Posted by அகத்தீ Labels:



அமுக்கப்பட்ட நிலங்கள், படையெடுக்காத பொக்ளின்கள்


   "நில உச்சரவரம்புச் சட்டம், பூமி தான இயக்கம் ஆகியவற்றை லட்சியக் கனவு
நிறைவேறியதாகக் கொள்ளலாமே தவிர, வெகுஜனக் கனவு நிறைவேறிய தாகக் கொள்ளமுடியாது. இவ்வாறாக நிலம்பெற்ற விவசாயிகளும்கூட, இந்த நிலத்தைத்தொடர்ந்து தங்கள் வசம் வைத் துள்ளார்களா என்பதே கூடச் சந்தேகம் தான்.பஞ்சமர் நிலங்கள் எவ்வாறு மற்ற வர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு,பத்திரங்கள் மாற்றப்பட்டனவோ அதே போன்று பல சம்பவங்களில் நிலமற்ற ஏழை கள்,கொஞ்ச காலத்துக்கு நிலத்தைப் பயன்படுத்தியதோடு சரி. மீண்டும் அவர் கள்நிலமற்ற விவசாயிகளாக மாறும் சரித் திரம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது."

இது இன்றைய தினமணி நாளேட் டின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
வார்த்தைகள். நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்க வேண்டும் என்றபிரதான கோரிக்கை உட்பட் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குவாலியர்நகரிலிருந்து புதுதில்லிக்கு சுமார் 20,000 விவசாயிகளுடன் மேற் கொண்ட ஜனசத்யாகிரக இயக்கத்தின் பேரணியை ஆக்ரா நகரத்திலேயே தடுத்து நிறுத்திமத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்  வாக்குறுதிஅளித்துள்ளார். அதையொட்டி தின மணி எழுதிய தலையங்கத்தில்தான் மேற் கொண்டவார்த்தைகள் இடம் பெற்றுள் ளன.

நில உச்சவரம்பு என்பது வெறும் கண் துடைப்பாகவே பெரும்பாலான மாநிலங் களில்மாற்றப்பட்டது என்பது உண்மை தான். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் 30ஸ்டாண்டர்டு ஏக்கராக இருந்த நில உச்சவரம்பு, திமுக ஆட்சியில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டதை கலை ஞர் அடிக்கடி பெருமையாகக் கூறுவார்.ஆயினும் நில விநியோகத்தில் தமிழகம் சாதனை எதுவும் படைக்கவில்லை. ஏன்?


இந்தியா முழுவதும் இவ்வாறு நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டமொத்த நிலங்களில் 25 விழுக்காடு மேற்கு வங்கத்தில் அதுவும் இடது முன்னணிஆட்சியின்போது விநியோகிக்கப்பட்டது என்பது அடிக்கோடிட்டு மீண்டும்மீண்டும் சொல்லப்பட வேண்டியிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் 2008 ஆம் ஆண்டு வரையிலான நில விநியோகம் பற்றிய சில தகவல்கள் இதோ:


உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப் படுத்தப்பட்ட நிலங்களின் பரப்பளவு:
13,13,729 ஏக்கர் பட்டா அளிக்கப்பட்ட பரப் பளவு : 10, 36, 432 ஏக்கர்.
பட்டா பெற்றவர் கள் : 29,83,640 பேர்.இவர்களில் தலித் மக்கள்: 11,05,306 பேர்,  பழங்குடி மக்கள் 5,36,565 பேர்என் பது கூடுதல் செய்தி.

தலித்துகளும் பழங்குடி மக்களும் மக்கள் தொகையில்30 விழுக் காட்டினர்தாம் ஆனால் நில சீர்திருத்த பயனாளிகளில் அதாவதுநிலம்பெற்ற வர்களில் 56 என்பது உரக்கப் பேசவேண் டிய செய்திகள்.

அதேபோல்சிறுபான்மை மக்கள் தொகையில் விழுக்காட்டினரே ஆனால் நிலம்பெற்ற பயனாளிகளில் 36 விழுக்காட்டினர் ஆவர். 5,90,427 பட்டாக் கள் ஆணுக்கும்பெண்ணுக்கும் இணைந்து தரப்பட்ட பட்டாக்கள் என்பதும் 1,59,990 பட்டாக்கள்பெண்களுக்கு மட்டும் தரப் பட்டவை என்பதும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியசெய்தியாகும்.

மேலே குறிப் பிடப்பட்டிருப்பது நில மறுவிநியோகத்தில்
பயன்பெற்றவர்கள். இது தவிர, 15 லட்சத் திற்கும் மேற்பட்ட குத்தகை
சாகுபடியாளர் கள் ஆப்பரேஷன் பார்கா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுப்
பயனடைந்துள்ளனர்.இதனால்தான் இன்றும் உணவு உற் பத்தியில் மேற்குவங்கம் முன்னிலையில்உள்ளது.

இத்தகைய பெருமைகளை  மக் கள் நலம் சார்ந்த நற்செயல்களை வெளிச் சம்
போட்டுக் காட்டவில்லை என்பதுமட்டு மல்ல தொட்டுக்கூட காட்டுவதில்லை.விதிவிலக்காக மம்தாவாலும் ஊடகங் களாலும் ஊதிப் பெரிதாகக் காட்டப்பட்டநந்திகிராம் சம்பவம் சில நூறு ஏக்கர் சம் பத்தப் பட்டதே. அதுவும்வேண்டுமென்றே மிகமிக தவறான கோணத்தில் சித்தரிக்கப் பட்டது என்பதே உண்மை.காலங்கடந்து அப்பகுதி மக்கள் தாங்கள் மம்தாவின் முதல்வர் கனவுக்குப்பகடைக்காயாக ஆக்கப்பட்டுவிட்டோம் என உணர்கின் றனர்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல் ஆயிரம்வகைகளில் மேற்குவங்க இடது சாரி அரசை ஊடகங்கள் சிறுமைப் படுதி னாலும்மேற்குவங்க இடதுசாரி அரசின் நிலச்சீர்திருத்த சாதனையை மறைக்கவே முடியாது.

நில மறுவிநியோகத்திற்கான கம்யூ னிஸ்ட்டுகளின் நிலச்சீர்திருத்தப் போராட்
டங்களைத் திசை திருப்ப வினோபா அன்று பூமிதான இயக்கம் என்பதையே
அறிவித்தார். இந்த இயக்கம் படுதோல்வி அடைந்தது. நிலம் வைத்துள்ள எவனும்தன் நிலத்தைத் தானமாகத் தரமாட்டான் என்பதை வரலாறு உணர்த்தியது. தாம்பெற்றதில் பெரும் பகுதி வெறும் பொட்டல் காடு என்பதையும், பல இடங்களுக்குஉரிய ஆவணங்களே இல்லை என்பதை யும், ஆகவே பெரும்பகுதி பயன்பட வில்லைஎன்பதையும் பின்னர் வினோ பாவே மனம் புழுங்கி ஒப்புக்கொண்டார்.

தமிழகத்தில் நிலச்சீர்திருத்தம் கிட்டத் தட்ட தோல்வியே. தரிசு நிலங்களை
வழங்க ஆளுக்கு 2 ஏக்கர் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்
கலைஞர். அறி விக்கிறபோதே ஐம்பதினாயிரம் ஏக்கர் தரிசு நிலம்
விநியோகிக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளித்தார். தேர்தல் பிரச்
சாரத்தில் அவ்வளவு நிலம் தமிழகத்தில் கிடையாது என ஜெயலலிதா கிண்டலடித்தார். முந்தைய ஜெ ஆட்சியின் போது ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளதைகலைஞர் எடுத்துக் காட்டினார். அது தவ றான தகவல் என்பதை தாம் பின்னர்தெரிந்து கொண்டதாக ஜெயலலிதா பதிலடி தந்தார்.

அப்படியானால் சட்டமன்றத்தின் மூலம் ஜெயலிதா பொய சொல்லி யிருந்தார் என்றாகிறது. ஆயினும் அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.
முந்தைய ஜெயலிதா ஆட்சியின் போது தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்
சட்டமன்ற உறுப்பினர் ஹேமச்சந் திரன் கேள்வி எழுப்பியபோதெல்லாம் முதல்வர்ஜெயலிதா எரிச்சலடைந்தார். ஒரு கட்டத்தில் எரிச்சலின் உச்சத்திற்கே போய்இனி ஹேமச்சந்திரனுக்கு நானும் பதில் சொல்லமாட்டேன் மற்ற அமைச்சர் களும்பதில் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்.

ஆட்சிக்கு வந்த கலைஞர் உள்ளங்கை நிலம் இருந்தாலும் விநியோகிப்பேன்எனக்கூறி கொஞ்சம் விநியோகித்தாரே தவிர அந்த ஐம்பதாயிரம் ஏக்கர் தரிசு நிலமும் எங்கே இருக்கிறது என்று கண்டறிய முயலவில்லை. மார்க்சிஸ்ட் கட்சிமாநாடு நடத்தி தரிசு நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிற தோட்டமுதலாளிகள்.ஆலை முதலாளிகள், பெரியமனிதர்கள் ஆகியோரிபட்டியலைவெளியிட்டது.அண்ணாசாலையில், அந்தப் பெரிய அரங்கில் மாநாடு நடந்தும், அதற்குஊடகக்காரர்கள் நிறையப்பேர் வந்திருந் தும் அது பரப்பான செய்தியாக்கப்பட
வில்லை. எந்த புலனாய்வுப் ஊடகப் புலி களும் இதனைப் புலனாய்வு செய்துதமிழ் மக்களுக்கு உண்மைகளைச் சொல்ல முன்வரவில்லை.


மீண்டும் ஆட்சிக்குவந்துள்ள ஜெய லலிதாவும் பழைய திமுக அமைச்சர்கள், திமுகபுள்ளிகள் விழுங்கிய நிலங்களை தேடிக்கண்டுபிடித்து வழக்குத் தொடர் கிறது.அது சரியானதுதான். ஆக்கிரமிப்பு யார் செய்யினும் தவறே. அகற்றப்பட
வேண்டும். ஆனால் தரிசு நிலங்களை அமுக்கி வைத்துள்ள முதலாளிகள்ஏனைய பெரியமனிதர்கள் மீது வழக்குப் பாய்வ தில்லையே ஏன்? பொக்ளின் எந்திரம் அவர்களதுஅந்த ஆக்கிரமிப்பு நிலங் களை நோக்கிப் படையெடுப்பதில்லையே? ஏன்?

திமுக,அஇஅதிமுக இரண்டும் இந்த விசயத்தில் ஒன்றுதான். காங்கிர ஸும் பாஜகாவும்அப்படித்தான். குஜராத் தின் மோடி ஆட்சியில் நில விநியோகக் கதையைக்கேளுங்கள். இவர்களுக் கெல்லாம் இதில் அக்கறை கிடையாது என்பதே உண்மை.


 "தீர்வுக்கான தொடக்கம்" என தினமணி தீட்டிய தலையங்கத்தில் மேலே சுட்டிய விபரங்கள் எதுவும் இருக்காது.ஆம்.உண்மையை அடையாளம் காட்டாமல் பொத்தாம் பொதுவாய் எழுதிச் சுரண்டும் வர்க்க சேவை செய்வதுதான் அதன் பாணி. அப்படித்தான் அந்த பேரணியையும் பாராட்டி உள்ளது .ஆயினும் அது ஒருபோதும் சொல்ல விரும்பாத உண்மை ஒன்று உண்டு.ஆம்,அது என்ன தெரியுமா?

சகல சிக்கலையும் தீர்க்கும் உயிர் முடிச்சு நிலக்குவியலை உடைத்து நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவதில்தான் உள்ளது.இதனை இடதுசாரிகளே தொடர்ந்து கூறிவருகின்றனர்.போராடி வருகின்றனர்.மேற்கு வங்கம்,கேரளம்,திரிபுரா இங்கெல்லாம் அமல் நடத்திக் காட்டினர். அந்த இடதுசாரிகளின் பாதையே விடியலின் பாதையாகும்.

சு.பொ.அகத்தியலிங்கம் 
நன்றி ; தீக்கதிர் 18-10-2012
 

மாப்பிள்ளை ஒரு அம்மாக்கோந்து?

Posted by அகத்தீ Labels:





மாப்பிள்ளை ஒரு அம்மாக்கோந்து?
சு.பொ. அகத்தியலிங்கம்.


[திருமணம் குறித்து ஆறுகட்டுரைகளுக்குத் திட்டமிட்டு எழுதிவருகிறேன்.இது மூன்றாவது கட்டுரை.12-08-2012 மற்றும் 30-09-2012 தேதிகளில் முந்தைய கட்டுரைகளின் பதிவைக் காண்க.]

னது பெண்ணுக்கு வரண் தேடுவதில் இறங்கிய நண்பர் ஒருவர் பத்திரிகையில்விளம்பரங்களாக, சாதிசங்கம் வழியாக, தெரிந்தவர்கள் மூலமாக என செய்யாதமுயற்சி இல்லை. ஜாதகம் பொருந்தவில்லை, நல்ல வேலை இல்லை... இப்படி ஏதாவதுஒரு காரணத்தால் ஒவ்வொன்றையும் அவரே தட்டிவிட்டுக்கொண்டே வந்தார்.

ஒரு நாள், பொருத்தமான இடம் அமைந்து விட்டது, பெண்பார்க்க நாளைவருகிறார்கள்.  நீங்களும் வாருங்கள், என்று அழைத்தார். வழக்கமாகச் சடங்குரீதியாக நடக்கிற இது போன்ற நிகழ்வுகளில் நான் சற்று ஒதுங்கி இருக்கவேபிரியப்படுவேன். ஆனால் நண்பரின் வற்புறுத்தலால் சென்றேன்.

பையனுக்கு பீடி, சிகரெட், தண்ணி முதலான எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.எம்.ஏ. படிச்சிருக்கான். இரண்டு ரைஸ்மில், ஒரு கடை இருக்கு. அப்பாவும்அவனும் பார்த்துக்கிடுறாங்க. சொந்த வீடு, நிலபுலன் இருக்கு. ஒரே பையன்.அப்பா அம்மா பேச்சைத் தட்டாதவன். அடக்கமான புள்ளை... இப்படி
மாப்பிள்ளையின் கல்யாண குணாதிசயங்களை அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் மாப்பிள்ளை வீட்டார் வர எங்கள் பேச்சு தடைப்பட்டது. பெண்
பார்க்கும் சடங்குகள் வழக்கம் போல் நடந்தன. பையனின் அம்மாதான்
எல்லாவற்றையும் பேசினார். நகை, சீர், ரொக்கம் இது பற்றியே அதிகம்
பேசினார். தங்கள் தகுதிக்கு இவ்வளவு தாங்குமா என்ற யோசனையை விட இந்த வரணைவிட்டுவிடக்கூடாது என்ற பயத்துடனேயே பெண்ணின் பெற்றோர் அடக்கிவாசித்தனர்.

அப்போது பெண் என்னை அழைத்து, அங்கிள்! பெண்ணுக்கும் பையனுக்கும்
பிடிச்சிருக்கா என்று கேட்டீங்களா,எனக் கேட்க, அதை நான் அப்படியே அங்கே
சொன்னேன். நான் கிழித்த கோட்டை என் பையன் தாண்டமாட்டான்.இல்லையாடா? எனஅம்மா கேட்க, பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினான் பையன்.என் பொண்ணும் அப்படித்தான் என்று நண்பர் சொல்லி முடிக்கும் முன்இடைமறித்த பெண், இல்லைங்க, எனக்கு இஷ்டம் இல்லை, என்று சொல்லிவிட்டாள்.எல்லோருக்கும் அதிர்ச்சி. மாப்பிள்ளை வீட்டார் எழுந்து சென்றுவிட்டனர்.

பெண்ணுக்கு அன்று வீட்டில் கிடைத்த அர்ச்சனையை சொல்லவும் வேண்டுமோ? " சரி..சரி..ஏன் பிடிக்கலைன்னு சொல்லும்மா, என நான் கேட்டேன். " " " பெண் விடுதலைமண்ணாங்கட்டின்னு கண்ட கண்ட புத்தகங்களை படிக்கக்கொடுத்து அவ மனசைக்கெடுத்திட்டீங்க," என என் மீது பாய்ந்தனர் பெற்றோர்கள்.

 "அவரை ஏன் திட்டுறீங்க? அந்த பையன் அம்மா கண்ணசைக்காம எதையும் செய்றதில்லைபோலயிருக்கு... இங்கேயே பார்த்தோமே. அவன் பக்கத்து வீட்லதான் என் பிரண்ட்ரோகினி இருக்கா. அவள் இவனைப்பத்தி சொல்லியிருக்கா. அவனா எதையும்செய்யமாட்டான். அம்மா கீ கொடுத்தா ஆடுற ரோபோ மாதிரி அவன். சுயமா எதையும்யோசிக்கத் தெரியாது. சுயமா எதையும் செய்யத் தெரியாது. அவனைக் கட்டிக்கொண்டு சுகப்படமுடியமா?"
இப்படி அவள் கேட்டது சரியென்றே எனக்குப் படது. அவளுக்கு ஆதரவாக நான் வாய்திறக்க அதுவும் பிரச்சனையானது. அங்கு சூழல் கடுமையாகவே நான்வெளியேறினேன்.

பிறகு நண்பர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். மகளை
ஒரு ஆலைத் தொழிலாளிக்குக் கட்டிக் கொடுத்தனர். திருமணத்துக்கு எனக்கு
அழைப்பில்லை. வழியில் எங்காவது அந்த பெண்ணைப் பார்த்து நலம்
விசாரிப்பதோடு சரி. அவர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நண்பர் என்னைத் தேடிவந்தார்.
பரபரப்பாக இருந்தார். கையில் அன்றைய பத்திரிகை இருந்தது. திருமண வாழ்வுகசந்ததால் இளைஞன் தற்கொலை எனச் செய்தி வந்திருந்தது. அது வேறு யாருமல்ல,அந்த ரைஸ்மில் பையன்தான். அவர் கதையைச் சொன்னார். இவருடைய பெண் வேண்டாம்என்றதும் இவரது தம்பி பெண்ணுக்கு பேசி முடித்தார்களாம். திருமணத்திற்குப்பிறகு அந்தப் பெண் ஒரு நாள் வீட்டிற்கு வந்து அழுதாளாம். அந்தப் பெண்அங்கு சந்தோஷமாக இல்லையாம். சினிமா, கோயில் எங்கு போனாலும் அம்மா கூடவே
வருவாளாம். படுக்கை அறைக்குக் கூட அம்மா போ என்று சொன்னால்தான்
வருவானாம். மனைவியிடம் தனியாகப் பேசும்போதுகூட அம்மா நினைப்பில் பயந்துசாவானாம். சரியான அம்மாக்கோந்தாக இருந்திருக்கிறான். இதனால் அந்தப் பெண்அவனோடு சண்டை போடத்துவங்கினாள். அவனால் அம்மா பேச்சையும் மீறமுடியவில்லை, மனைவியின் நியாயத்தையும் மறுக்க முடியவில்லை. உள்ளுக்குள்குமைந்து கொண்டிருந்தவன். கடைசியாகத் தற்கொலையே செய்து கொண்டான். இதைசொல்லிவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்.


இது போல் விதவிதமான அனுபங்கள் நம்மில் பலருக்கு உண்டு. சிகெரெட், பீடி எனஎந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது, ரொம்ப கடவுள் நம்பிக்கையுள்ள பிள்ளை,அடக்கமான பையன், இப்படி சில மேலோட்டமான அளவுகோல்களே எங்கும்கையாளப்படுகின்றன.

அவன் சாமி இல்லை பூதமில்லைன்னு சொல்லிட்டுத்திரியுறவன், வீடு வாசல்ன்னு தங்காமல் இலக்கியம் புண்ணாக்குன்னு
ஊர்சுற்றுறவன் என்ற எதிர்மறை அளவுகோல்களும் இங்கே உண்டு.

இதனால் சமூகஉறவுகளைக் கணிப்பதிலும், நல்லவன் கெட்டவன் எனத் தீர்மானிப்பதிலும் இங்கேபெரும் குழப்பம் நெடுங்காலமாக நிலவுகிறது. இந்த சமூகச் சிந்தனைக்குழப்பம் பெண் பார்ப்பதிலும், மாப்பிள்ளை பார்ப்பதிலும் பெரும்பங்காற்றுகிறது. விளைவு சரியான இணையைத் தேர்வு செய்தில் பெரும்குழப்பமும் தோல்வியுமே மிஞ்சுகின்றன.


முதலில் தந்த அனுபவம் சிக்கலானது என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்,இடம் எதுவும் குறிப்பிடவில்லை. இன்னொரு சம்பவம் சொல்லுகிறேன். தென்சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியில் பணிபுரியும் மூத்த தோழர் டி.நந்தகோபால் சந்தித்த அனுபவம். அவருக்குத் திருமணமான புதிது. அப்போது அவர்ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கட்சிஇயக்கத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். அப்போதெல்லாம் கட்சித்தோழர்கள்இரவெல்லாம் கண்விழித்து கிளைக்கூட்டம், கமிட்டிக் கூட்டம் என நடத்தும்வழக்கம் உண்டு. அதனால் இவர் வீடு திரும்ப இரவு வெகுநேரம் ஆகும்.தீக்கதிர், செம்மலர், கட்சிப் பிரசுரங்கள், புத்தகங்கள்  என நிறையஅள்ளிக்கொண்டு போய் படிப்பார்.

கட்சி பற்றி எதுவும் தெரியாதவராக,செய்யாறு அருகே ஒரு கிராமத்திலிருந்து வந்த சாந்தி இதையெல்லாம் கண்டுபயந்திருக்கிறார். ஆனாலும் யாரிடம் சொல்வது? உள்ளுக்குள் தவித்துக்கொண்டே இருந்தார். ஒரு நாள் சொந்த ஊருக்குப் போனபோது இவரது உறவினரும்திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவருமான புலவர் கோவிந்தன் வீட்டுக்குவந்துள்ளார்.

அவரோடு குடும்பத்தவர் உரையாடிக் கொண்டிருக்கையில் சாந்தி
தன் கணவரின் போக்கு குறித்து கலக்கத்தோடு பேசி அழுதிருக்கிறார்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட புலவர், மாப்பிள்ளை எந்த மாதிரி பத்திரிகைபுத்தகம் படிக்கிறார், என வினவ, தீக்கதிரையும் செம்மலரையும்
எடுத்துவந்து சாந்தி காண்பித்திருக்கிறார். அவற்றைப் பார்த்த புலவர்,
கவலைப்படாதே சாந்தி. பையன் ரொம்ப நல்லவன்தான். கம்யூனிஸ்ட் கட்சி நல்லகட்சி. கம்யூனிஸ்ட்டுகள் நல்லவர்கள். இவை எல்லாம் நல்ல பத்திரிகைகள்.நான்கூட விரும்பிப் படிப்பேன், என்றெல்லாம் சொல்லித் தேற்றினாராம். காலப்போக்கில் சாந்தியும் கம்யூனிஸ்ட் ஊழியராகி விட்டார், தீக்கதிர், செம்மலர்வாசகராகிவிட்டார் என்பது கூடுதல் செய்தி.


ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவன் படிக்கிற புத்தகங்களை, ஏடுகளைவைத்துக் கணித்திருக்கிறார் புலவர் கோவிந்தன். ஆம், ஒருவனின் சமூகஈடுபாட்டை அறியாமல், சில சில்லறைப் பழக்க வழக்கங்களை வைத்து மட்டும்ஒருவரை சரியாக எடைபோட இயலுமா?

மிகச் சிக்கலான கேள்விதான். யார் நல்லவன்? யார் ஒழுக்கமானவன்? சட்டென்றுபதில் சொல்வது கடினம். அதே சமயம் சுத்தத் தங்கம் நகை செய்யப் பயன்படாதுஎன்ற பழமொழியையும், களவும் கற்று மற என்ற பழமொழியையும் நம் முன்னோர்கள்சும்மாவா சொன்னார்கள்? யோசித்துப் பாருங்கள். நூற்றுக்கு நூறு புனிதர்என்பது வெறும் கற்பனையே! ஒவ்வொரு மனிதரிடமும் நல்லதும் கெட்டதும் கலந்தேஇருக்கும். அதுதான் இயல்பு.

ஆயினும் பெண்வீட்டார் மணமகனைத் தேடும்போது
எதை அளவுகோலாகக் கொள்வது? இதுவே முக்கியக் கேள்வி.
வழக்கமான அளவுகோல்கள் மட்டும் போதவே போதாது.

வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரியாக அமையாது எனவே எதையும் துணிச்சலோடு சந்திக்கிற குணமேமிகமுக்கியம். பிரச்சனைகள் எழுகிறபோது பயந்து ஒடுகிறவனா அல்ல துணிந்துஎதிர்கொள்கிறவனா என்பது முதல் அளவுகோலாக இருக்க வேண்டும்.சுயநம்பிக்கை,சுயமுயற்சி,சுயசிந்தனை இம்மூன்றும் நிரம்பியவனாக இருப்பது
அடுத்த அளவுகோலாகும்.

பெண்களைப் பற்றி குறிப்பாக மனைவியைப் பற்றிய பார்வை
பழமையானதாக கரடுதட்டிப்போனதாக இருக்கக்கூடாது , சமத்துவ நோக்கில் அமைவதுஅவசியம். அதே சமயம் குருதியில் கலந்துவிட்ட ஆணாதிக்கம் அவ்வளவு சுலபமாகநீர்த்துவிடாது. எனவே இவ்விஷயத்தில் உரையாடலுக்குத் தயாராய் இருப்பதேஇனிய நம்பிக்கையூட்டும் தொடக்கம் எனக் கொள்ளலாம்.

இங்கே கூறப்பட்டிருப்பவை இறுதியானதோ முழுமையானதோ அல்ல. இதற்கான ரெடிமேடுசூத்திரங்கள் எதுவும் கிடையாது. அதற்கான பகிரங்க உரையாடலை இங்கு தொடங்கி
வைக்கிறோம்.அவ்வளவே. 
 
ஆணும் பெண்ணும் கலந்துபேசி ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டு வாழ்க்கை இணையராக ஏற்பதே ஆகச்சிறந்த வழி. எனினும் அதற்கு வாய்ப்போசூழலோ அமையாதோர் பற்றியே இங்கே பேசுகிறோம்.

அது சரி மாப்பிளை தேர்வின் சிக்கல் போல பெண் தேர்விலும் சிக்கல் இல்லையா?உண்டு. அது குறித்தும் பேசவேண்டும். பேசுவோம்.
அது இருக்கட்டும் இங்கே முதலில் ஒரு பையனை அறிமுகம் செய்யும்போது
அம்மாக்கோந்து என்றொரு வார்த்தையைப் பயன் படுத்தினோம் அல்லவா?
அப்படியானால் இங்கேயும் பெண்தானே வில்லியாகிறாள் என்ற கேள்வி எழக்கூடும்.

குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த அம்மாவின் செயல் ஏற்க இயலாதது. பல
குடும்பங்களில் இத்தகைய தாய்கள் உண்டுதான். மாமியார் மருமகள் சண்டை இங்குபெரும் பிரச்சனையாவதற்கு இது பெரும் காரணமாகிவிடுவது உண்மைதான்.இவையெல்லாம்கூட ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு என்றால் முதலில் புருவத்தைநெரிப்பீர்கள். ஆனால் உண்மை அதுதான். பெண்ணுக்கு சுயம் இல்லை. இளமையில்தந்தை, மணமான பின் கணவன், முதுமையில் மகன் இவர்களைச் சார்ந்தேவாழவேண்டும் என்று காலம்காலமாய் சொல்லிச்சொல்லி வளர்த்ததன் வினை. மகன்
கைவிட்டுப் போனால் எதிர்காலம் இருண்டுவிடும் என்கிற உள்ளுக்குள்
உறைந்திருக்கும் அச்சவுணர்வு மகனைத் தன் கைப்பிடிக்குள் வைக்கத்
துரத்துகிறது. இதனை நாம் மறந்துவிடமுடியாது. 
 
இருப்பினும் நாம் முன்னேறமெல்லமெல்ல, ஆனால் உறுதியாக அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்தாகவேண்டும். அந்தப் பாதையில் வாழ்க்கை இணையரைத் தேர்வு செய்வோம். ஆணைப்போலவே பெண்ணைத் தேர்வு செய்வதிலும் அள்வுகோல்கள் இருக்கத்தானே செய்யும்.அதைப் பற்றியும் பேசியாக வேண்டுமே... பேசுவோம்.
 
நன்றி : தீக்கதிர் வண்ணக்கதிர் 14-10-2012

இன்னும் என்ன தயக்கம்?

Posted by அகத்தீ Labels:

இன்னும் என்ன தயக்கம்?


நம்பிக்கை அளிக்கும் மெய்யான மாற்றுக்காக
காத்திருக்கிறார்கள் மக்கள்.

பொறுமை எல்லைகடந்து சென்றுகொண்டிருக்கிறது.

வாழ்க்கை சகிக்கமுடியாததாக மாறிக்கொண்டிருக்கிறது.

சுனாமியாய் சுழற்றப்படும் தாராள பற்சக்கரத்தில் சகலமும் பிழியப்பட்டு சக்கையாய் வீசிஎறியப்படுறது மனிதம்.

அச்சு முறிந்துவிட்டது.வண்டி குடைசாய்ந்து விட்டது.நாலாபக்கமும்
மனிதர்கள் தூக்கி எறியப்படுகின்றனர்.

தேவதூதன்களும் ஆபாத்பாந்தவன்களும் அவதரிப்பது காவியங்களிலும் கற்பனைகளிலும் மட்டிலுமே.

சுழன்றடிக்கும் காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டது மனிதம்.மீட்பர்களைக் காணோம்.

எங்கும் கும்மிருட்டு.எங்கும் அபயக் குரல்.இப்போது ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சப் போவது யார்?

கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் கப்பலை கரை சேர்க்கும் மாலுமி யார்? திசைகாட்டும் கருவி எங்கே?

நேற்றின் அழுக்குகளை அலச இதுவல்ல நேரம்.தத்துவம் பேசவோ
போதனைகள் செய்யவோ அவகாசம் இல்லை.

காலம் விரைந்து கொண்டிருக்கிறது.எல்லாம் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது.எங்கும் ஒரே அழுகை.

என்ன யோசனை?இன்னும் என்ன தயக்கம் ?பிரளயமாய் எழுங்கள்.கோட்டைகளும் கொடிமரங்களும் மூழ்கட்டும்

நம்பிக்கை அளிக்கும் மெய்யான மாற்றுக்காக
காத்திருக்கிறார்கள் மக்கள்.

-சு.பொ.அகத்தியலிங்கம்

மதுவிலக்கு சாத்தியமற்றது

Posted by அகத்தீ Labels:






மதுவிலக்கு சாத்தியமற்றது.. ஏன்
சு.பொ.அகத்தியலிங்கம்.

துவிலக்கு பற்றி இங்கு சிலர் உரக்கப் பேசுகின்றனர். அது வெறும் கற்பனாவாதப் பேச்சு. உலகத்தில் மதுப் பழக்கம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. இங்கு மட்டும் உள்ளதல்ல. இதன் வேர் ஆழமானது.பரவலானது. தட்பவெப்பம் சார்ந்தது. பண்பாட்டோடு பிணைந்தது. வெறுமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதனை விவாதிக்க முடியாது. பொறுமையும் அறிவார்ந்த விவாதமும் தேவை.


முதலில்,ஒன்றைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன் போதைப்பழக்கத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடுகிறவன் நான். அதே சமயம் மதுவிலக்கு விரும்பிய பலனைத்தராது என உறுதியாக நம்புகிறவன். ஏனிந்த முரண்பாடு எனக்கேட்பீர்கள். என் வாதங்களை முழுமையாகக் கேட்டபின் முடிவுக்கு வருவீர்.

முதலில் போதையை எடுத்துக் கொள்ளுங்கள்  அது உலகெங்கும் தடை செய்யப்பட்டதுதான்.  ஆயினும் போதைவியாபாரிகளின் சர்வதேச சாம்ராஜ்யமும் வலைப்பின்னல் போன்ற அதன் தொடர்பும் நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன. அமெரிக்கவில் சுமார் ஐநூறு பில்லியன் கோடி டாலருக்குமேல் சட்டவிரோத போதை வியாபாரம் ஆண்டுதோறும் நடக்கிறதாம். பல அமெரிக்க வங்கிகளின் முதுகெலும்பே இப்பணம் தானாம். உலகெங்கும் சில ஆயிரம் பில்லியன் கோடி டாலர் இந்த சட்டவிரோதத் தொழிலில் புழங்குகிறது. அவற்றின் அரசியல் தொடர்பு நுட்பமானது. ஆபத்தானது. தீவாரவாதிகள் நிதி மூலமாகவும் உள்ளது. குட்டித் தீவுகளில்-குட்டி நாடுகளில் மூக்கை நுழைக்கவும் கபளீகரம் செய்யவும் அமெரிக்கவுக்கும் வல்லரசுகளுக்கும் போதை ஒரு சாக்காகவும் உள்ளது. போதைக் கடத்தல் கும்பலுக்கும் பெண்டகனுக்கும் உள்ள உறவு ரகசியமானதல்ல.

போதையை எந்தச் சட்டமும் அங்கீகரிக்கவில்லை. எந்த சமூகமும் அங்கீகரிக்கவில்லை. ஆயினும் தங்குதடையின்றி போதைபொருட்கள் நடமாடுவது எப்படி? ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்,ஆசிரமங்கள்,அதிகாரவர்க்கம்,ஆட்சியாளர்கள்,போதையுலகத் தாதாக்கள், இவர்களின் புனிதக்கூட்டணியை எல்லோரும் அறிவர்.  ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார்? கேள்வி இதுதான்.

இப்போது மதுவுக்கு வருவோம்.மதுவும் போதைதான். ஆயினும் குஜராத் தவிர அது எங்கும் தடை செய்யப்படவில்லை. குஜராத்திலும் பெர்மிட் பெற்று குடிப்பவர்கள் அதிகம்.மேலும் கள்ளச்சாராயம் அங்கு செல்வங்கொழிக்கும் தொழிலாக விளங்குகிறது. அத்துடன் பா.. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நிதியை அள்ளி வழங்குவதில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உள்ள பெரும்பங்கை இங்குள்ள ஊடகங்கள் சொல்லாமல் விட்டாலும் அங்குள்ள மக்கள் நன்கறிவார்கள்.

அது போல் குஜராத்தில் டாஸ்மாக் பணம் இல்லாமலே பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது எனச் சொல்வது மகாபொய்.நவீனஹிட்லர் மோடியை தூக்கிப்பிடிக்கத் திட்டமிட்டு பொய்பரப்புரை செய்கிறார்கள்.சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு. அதைவைத்துக் கொண்டு தமிழகமே அப்படித்தான் என்று சோ வகையறாக்கள் சொல்லும் புளுகு போன்றதே அது.மனித வளர்ச்சி குறியீட்டில் குஜராத்தைவிட தமிழகம் பலமடங்கு மேல்.திராவிடக் கட்சிகளின் மீதுள்ள கோபத்தால் உண்மையை மறைக்கக் கூடாது.குஜராத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்பதே உண்மை.கள்ளச்சாராயம் அங்கு ஆறாக ஓடுகிறது என்பதும் அதைவிட உண்மை.

மது ஏதோ ஒரு வகையில் மக்கள் வாழ்வோடு உலகெங்கும் பிணந்தே உள்ளது. சோஷியல் டிரிங்கிங் என்றழைக்கப்படுகிற எப்போதாவது மது அருந்துபவர்கள் ஒருவகை. மதுவுக்கு அடிமையாகிப்போனவர்கள் ஒருவகை.பின்னதின் தொடக்கமாக முன்னது அமைந்துவிடுவதும் உண்டு. ஆயினும் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவும் வேண்டும்.

மதுவுக்கு அடிமையாதல் என்பதை தனிமனித ஒழுக்கச்சிதைவாக மட்டும் பார்த்தால் போதாது.அது ஒரு வகை நோயென அறிதல் வேண்டும்.அப்படித்தான் இன்றைய மருத்துவ அறிவியல் சொல்கிறது.
மது அடிமைகளில் வசதிபடைத்தவர்கள் மதுவிலக்கு  அமலுக்குவரின் பாதிப்பு அடையமாட்டார்கள். நட்சத்திர விடுதிகளும்,பெர்மிட்டுகளும் இவர்கள் மது அருந்த தாராளமாய் வழிசெய்யும். ஏழை குடிமகன்கள்தான் கள்ளச்சாராயத்தில் கூட்டம்கூட்டமாகச் சாவார்கள். பல அரசியல் கட்சிகளின் வி..பி.களாக கள்ளச்சாராய தாதாக்கள் வலம் வருவார்கள்.மதுவிலக்கால் வேறெந்தப் பயனும் விளையாது.

அப்படியானால் குடியைக் கெடுக்கும் குடியை அப்படியே விடலாமா? வேண்டாம் வலுவான மனதைக் கவ்வும் பிரச்சாரம் மூலம் மக்களை வென்றெடுக்கவேண்டும். இதில் குடும்பத்தின் பங்கே அதிகம். குடி என்ற ஒற்றை அளவுகோலை வைத்து ஒருவன் நல்லவனா கெட்டவனா என முத்திரை குத்துவது தவறு. வீட்டில்வைத்தே மது அருந்தலாம்,வீட்டிலுள்ளோர் அதனை தப்பாகக் கொள்ளார் என்கிற நிலையில் குடியின் அளவு மட்டுப்படும்.படிப்படியே மருத்துவர்கள் துணையோடு வென்றெடுக்கமுடியும்.கடினமான சவாலான பாதைதான். வேறுவழியில்லை.

பான்பாரக்கை முதலில் முழுவதுமாக தடை செய்யாமல் ஊரின் தூய்மையைப் பாதுகாக்கவே இயலாது.சிகரெட் மீதான கட்டுப்பாடுகள் ஒரளவு பயன் தந்துள்ளது அலவா? அந்த வெளிச்சத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதன் மூலம் மது பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கலாம்.அதே சமயம் பூரண மதுவிலக்கு நடைமுறை சாத்தியமற்றது என்பதை உணரவேண்டும்.

மதுவிலக்கு பற்றி கூச்சலிடும்கட்சிகளின் மாநாடு பேரணிகளின்போது டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பதைக் காணலாம். குடிப்பவர்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை என தலைவர்கள் மேடையில் சவால் விடலாம். யதார்த்தம் அதற்கு வெகுதூரம் என்பதை அனைவரும் அறிவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குடிகாரர்கள் உறுப்பினராக முடியாது என்று அமைப்பு விதியில் சொல்லப்பட்டுள்ளது. உலகின் வேறெந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படி ஒரு விதி இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் தனித்துவமான சூழலில்காந்தியின் தாக்கம் கம்யூனிஸ்ட் கட்சியிலும் வ்வலுவாக இருந்த பின்னணியில் இவ்விதி செய்யப்பட்டது. அப்போதும் பெரும் விவாதம் நடைபெற்றுள்ளது இது உழைப்பாளர்களின் கட்சி பெரும்பாலான உழைப்பாளி மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் மதுவை பயன்படுத்துவோரேஅது சில பண்பாட்டு நிகழ்வுகளில் ஒரு கூறாகவும் உள்ளது. ஆகவே பொதுவாக மது குடிப்பவருக்கு கட்சியில் இடமில்லைஎன்று சொல்லாமல், குடிக்கு அடிமையானோருக்கு இடமில்லை என்றே விதி அமைக்கப்பட்டது. ஆம்,அதுதான் நடைமுறை சாத்தியமும்கூட.

சோமபானம்,சுராபானம் வேதவழிபாட்டு மரபெனில்,கள்ளும் சாராயமும் நாட்டார் வழிபாட்டு மரபு.அவ்வைக்கு அதியமான் கள்ளு வழங்கியதும் நம் மரபே. வீக் எண்ட் பார்ட்டி வாரக்கடைசி கொடாட்டம் என்பது தாரளமய வழ்க்கம். எனவே மதுவுக்கு எதிரான போர் கடினமானது மட்டுமல்ல நெடுங்காலம் பிடிப்பதும் ஆகும். நம் பார்வையும் மனசும் விசாலப்படாமல்அறிவியல் பார்வை பரவலாகாமல்சமூக சிந்தனை வளப்படாமல் இதில் எளிதில் மாற்றம் காணமுடியாது.