மாப்பிள்ளை ஒரு அம்மாக்கோந்து?

Posted by அகத்தீ Labels:





மாப்பிள்ளை ஒரு அம்மாக்கோந்து?
சு.பொ. அகத்தியலிங்கம்.


[திருமணம் குறித்து ஆறுகட்டுரைகளுக்குத் திட்டமிட்டு எழுதிவருகிறேன்.இது மூன்றாவது கட்டுரை.12-08-2012 மற்றும் 30-09-2012 தேதிகளில் முந்தைய கட்டுரைகளின் பதிவைக் காண்க.]

னது பெண்ணுக்கு வரண் தேடுவதில் இறங்கிய நண்பர் ஒருவர் பத்திரிகையில்விளம்பரங்களாக, சாதிசங்கம் வழியாக, தெரிந்தவர்கள் மூலமாக என செய்யாதமுயற்சி இல்லை. ஜாதகம் பொருந்தவில்லை, நல்ல வேலை இல்லை... இப்படி ஏதாவதுஒரு காரணத்தால் ஒவ்வொன்றையும் அவரே தட்டிவிட்டுக்கொண்டே வந்தார்.

ஒரு நாள், பொருத்தமான இடம் அமைந்து விட்டது, பெண்பார்க்க நாளைவருகிறார்கள்.  நீங்களும் வாருங்கள், என்று அழைத்தார். வழக்கமாகச் சடங்குரீதியாக நடக்கிற இது போன்ற நிகழ்வுகளில் நான் சற்று ஒதுங்கி இருக்கவேபிரியப்படுவேன். ஆனால் நண்பரின் வற்புறுத்தலால் சென்றேன்.

பையனுக்கு பீடி, சிகரெட், தண்ணி முதலான எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.எம்.ஏ. படிச்சிருக்கான். இரண்டு ரைஸ்மில், ஒரு கடை இருக்கு. அப்பாவும்அவனும் பார்த்துக்கிடுறாங்க. சொந்த வீடு, நிலபுலன் இருக்கு. ஒரே பையன்.அப்பா அம்மா பேச்சைத் தட்டாதவன். அடக்கமான புள்ளை... இப்படி
மாப்பிள்ளையின் கல்யாண குணாதிசயங்களை அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் மாப்பிள்ளை வீட்டார் வர எங்கள் பேச்சு தடைப்பட்டது. பெண்
பார்க்கும் சடங்குகள் வழக்கம் போல் நடந்தன. பையனின் அம்மாதான்
எல்லாவற்றையும் பேசினார். நகை, சீர், ரொக்கம் இது பற்றியே அதிகம்
பேசினார். தங்கள் தகுதிக்கு இவ்வளவு தாங்குமா என்ற யோசனையை விட இந்த வரணைவிட்டுவிடக்கூடாது என்ற பயத்துடனேயே பெண்ணின் பெற்றோர் அடக்கிவாசித்தனர்.

அப்போது பெண் என்னை அழைத்து, அங்கிள்! பெண்ணுக்கும் பையனுக்கும்
பிடிச்சிருக்கா என்று கேட்டீங்களா,எனக் கேட்க, அதை நான் அப்படியே அங்கே
சொன்னேன். நான் கிழித்த கோட்டை என் பையன் தாண்டமாட்டான்.இல்லையாடா? எனஅம்மா கேட்க, பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினான் பையன்.என் பொண்ணும் அப்படித்தான் என்று நண்பர் சொல்லி முடிக்கும் முன்இடைமறித்த பெண், இல்லைங்க, எனக்கு இஷ்டம் இல்லை, என்று சொல்லிவிட்டாள்.எல்லோருக்கும் அதிர்ச்சி. மாப்பிள்ளை வீட்டார் எழுந்து சென்றுவிட்டனர்.

பெண்ணுக்கு அன்று வீட்டில் கிடைத்த அர்ச்சனையை சொல்லவும் வேண்டுமோ? " சரி..சரி..ஏன் பிடிக்கலைன்னு சொல்லும்மா, என நான் கேட்டேன். " " " பெண் விடுதலைமண்ணாங்கட்டின்னு கண்ட கண்ட புத்தகங்களை படிக்கக்கொடுத்து அவ மனசைக்கெடுத்திட்டீங்க," என என் மீது பாய்ந்தனர் பெற்றோர்கள்.

 "அவரை ஏன் திட்டுறீங்க? அந்த பையன் அம்மா கண்ணசைக்காம எதையும் செய்றதில்லைபோலயிருக்கு... இங்கேயே பார்த்தோமே. அவன் பக்கத்து வீட்லதான் என் பிரண்ட்ரோகினி இருக்கா. அவள் இவனைப்பத்தி சொல்லியிருக்கா. அவனா எதையும்செய்யமாட்டான். அம்மா கீ கொடுத்தா ஆடுற ரோபோ மாதிரி அவன். சுயமா எதையும்யோசிக்கத் தெரியாது. சுயமா எதையும் செய்யத் தெரியாது. அவனைக் கட்டிக்கொண்டு சுகப்படமுடியமா?"
இப்படி அவள் கேட்டது சரியென்றே எனக்குப் படது. அவளுக்கு ஆதரவாக நான் வாய்திறக்க அதுவும் பிரச்சனையானது. அங்கு சூழல் கடுமையாகவே நான்வெளியேறினேன்.

பிறகு நண்பர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். மகளை
ஒரு ஆலைத் தொழிலாளிக்குக் கட்டிக் கொடுத்தனர். திருமணத்துக்கு எனக்கு
அழைப்பில்லை. வழியில் எங்காவது அந்த பெண்ணைப் பார்த்து நலம்
விசாரிப்பதோடு சரி. அவர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நண்பர் என்னைத் தேடிவந்தார்.
பரபரப்பாக இருந்தார். கையில் அன்றைய பத்திரிகை இருந்தது. திருமண வாழ்வுகசந்ததால் இளைஞன் தற்கொலை எனச் செய்தி வந்திருந்தது. அது வேறு யாருமல்ல,அந்த ரைஸ்மில் பையன்தான். அவர் கதையைச் சொன்னார். இவருடைய பெண் வேண்டாம்என்றதும் இவரது தம்பி பெண்ணுக்கு பேசி முடித்தார்களாம். திருமணத்திற்குப்பிறகு அந்தப் பெண் ஒரு நாள் வீட்டிற்கு வந்து அழுதாளாம். அந்தப் பெண்அங்கு சந்தோஷமாக இல்லையாம். சினிமா, கோயில் எங்கு போனாலும் அம்மா கூடவே
வருவாளாம். படுக்கை அறைக்குக் கூட அம்மா போ என்று சொன்னால்தான்
வருவானாம். மனைவியிடம் தனியாகப் பேசும்போதுகூட அம்மா நினைப்பில் பயந்துசாவானாம். சரியான அம்மாக்கோந்தாக இருந்திருக்கிறான். இதனால் அந்தப் பெண்அவனோடு சண்டை போடத்துவங்கினாள். அவனால் அம்மா பேச்சையும் மீறமுடியவில்லை, மனைவியின் நியாயத்தையும் மறுக்க முடியவில்லை. உள்ளுக்குள்குமைந்து கொண்டிருந்தவன். கடைசியாகத் தற்கொலையே செய்து கொண்டான். இதைசொல்லிவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்.


இது போல் விதவிதமான அனுபங்கள் நம்மில் பலருக்கு உண்டு. சிகெரெட், பீடி எனஎந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது, ரொம்ப கடவுள் நம்பிக்கையுள்ள பிள்ளை,அடக்கமான பையன், இப்படி சில மேலோட்டமான அளவுகோல்களே எங்கும்கையாளப்படுகின்றன.

அவன் சாமி இல்லை பூதமில்லைன்னு சொல்லிட்டுத்திரியுறவன், வீடு வாசல்ன்னு தங்காமல் இலக்கியம் புண்ணாக்குன்னு
ஊர்சுற்றுறவன் என்ற எதிர்மறை அளவுகோல்களும் இங்கே உண்டு.

இதனால் சமூகஉறவுகளைக் கணிப்பதிலும், நல்லவன் கெட்டவன் எனத் தீர்மானிப்பதிலும் இங்கேபெரும் குழப்பம் நெடுங்காலமாக நிலவுகிறது. இந்த சமூகச் சிந்தனைக்குழப்பம் பெண் பார்ப்பதிலும், மாப்பிள்ளை பார்ப்பதிலும் பெரும்பங்காற்றுகிறது. விளைவு சரியான இணையைத் தேர்வு செய்தில் பெரும்குழப்பமும் தோல்வியுமே மிஞ்சுகின்றன.


முதலில் தந்த அனுபவம் சிக்கலானது என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்,இடம் எதுவும் குறிப்பிடவில்லை. இன்னொரு சம்பவம் சொல்லுகிறேன். தென்சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியில் பணிபுரியும் மூத்த தோழர் டி.நந்தகோபால் சந்தித்த அனுபவம். அவருக்குத் திருமணமான புதிது. அப்போது அவர்ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கட்சிஇயக்கத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். அப்போதெல்லாம் கட்சித்தோழர்கள்இரவெல்லாம் கண்விழித்து கிளைக்கூட்டம், கமிட்டிக் கூட்டம் என நடத்தும்வழக்கம் உண்டு. அதனால் இவர் வீடு திரும்ப இரவு வெகுநேரம் ஆகும்.தீக்கதிர், செம்மலர், கட்சிப் பிரசுரங்கள், புத்தகங்கள்  என நிறையஅள்ளிக்கொண்டு போய் படிப்பார்.

கட்சி பற்றி எதுவும் தெரியாதவராக,செய்யாறு அருகே ஒரு கிராமத்திலிருந்து வந்த சாந்தி இதையெல்லாம் கண்டுபயந்திருக்கிறார். ஆனாலும் யாரிடம் சொல்வது? உள்ளுக்குள் தவித்துக்கொண்டே இருந்தார். ஒரு நாள் சொந்த ஊருக்குப் போனபோது இவரது உறவினரும்திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவருமான புலவர் கோவிந்தன் வீட்டுக்குவந்துள்ளார்.

அவரோடு குடும்பத்தவர் உரையாடிக் கொண்டிருக்கையில் சாந்தி
தன் கணவரின் போக்கு குறித்து கலக்கத்தோடு பேசி அழுதிருக்கிறார்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட புலவர், மாப்பிள்ளை எந்த மாதிரி பத்திரிகைபுத்தகம் படிக்கிறார், என வினவ, தீக்கதிரையும் செம்மலரையும்
எடுத்துவந்து சாந்தி காண்பித்திருக்கிறார். அவற்றைப் பார்த்த புலவர்,
கவலைப்படாதே சாந்தி. பையன் ரொம்ப நல்லவன்தான். கம்யூனிஸ்ட் கட்சி நல்லகட்சி. கம்யூனிஸ்ட்டுகள் நல்லவர்கள். இவை எல்லாம் நல்ல பத்திரிகைகள்.நான்கூட விரும்பிப் படிப்பேன், என்றெல்லாம் சொல்லித் தேற்றினாராம். காலப்போக்கில் சாந்தியும் கம்யூனிஸ்ட் ஊழியராகி விட்டார், தீக்கதிர், செம்மலர்வாசகராகிவிட்டார் என்பது கூடுதல் செய்தி.


ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவன் படிக்கிற புத்தகங்களை, ஏடுகளைவைத்துக் கணித்திருக்கிறார் புலவர் கோவிந்தன். ஆம், ஒருவனின் சமூகஈடுபாட்டை அறியாமல், சில சில்லறைப் பழக்க வழக்கங்களை வைத்து மட்டும்ஒருவரை சரியாக எடைபோட இயலுமா?

மிகச் சிக்கலான கேள்விதான். யார் நல்லவன்? யார் ஒழுக்கமானவன்? சட்டென்றுபதில் சொல்வது கடினம். அதே சமயம் சுத்தத் தங்கம் நகை செய்யப் பயன்படாதுஎன்ற பழமொழியையும், களவும் கற்று மற என்ற பழமொழியையும் நம் முன்னோர்கள்சும்மாவா சொன்னார்கள்? யோசித்துப் பாருங்கள். நூற்றுக்கு நூறு புனிதர்என்பது வெறும் கற்பனையே! ஒவ்வொரு மனிதரிடமும் நல்லதும் கெட்டதும் கலந்தேஇருக்கும். அதுதான் இயல்பு.

ஆயினும் பெண்வீட்டார் மணமகனைத் தேடும்போது
எதை அளவுகோலாகக் கொள்வது? இதுவே முக்கியக் கேள்வி.
வழக்கமான அளவுகோல்கள் மட்டும் போதவே போதாது.

வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரியாக அமையாது எனவே எதையும் துணிச்சலோடு சந்திக்கிற குணமேமிகமுக்கியம். பிரச்சனைகள் எழுகிறபோது பயந்து ஒடுகிறவனா அல்ல துணிந்துஎதிர்கொள்கிறவனா என்பது முதல் அளவுகோலாக இருக்க வேண்டும்.சுயநம்பிக்கை,சுயமுயற்சி,சுயசிந்தனை இம்மூன்றும் நிரம்பியவனாக இருப்பது
அடுத்த அளவுகோலாகும்.

பெண்களைப் பற்றி குறிப்பாக மனைவியைப் பற்றிய பார்வை
பழமையானதாக கரடுதட்டிப்போனதாக இருக்கக்கூடாது , சமத்துவ நோக்கில் அமைவதுஅவசியம். அதே சமயம் குருதியில் கலந்துவிட்ட ஆணாதிக்கம் அவ்வளவு சுலபமாகநீர்த்துவிடாது. எனவே இவ்விஷயத்தில் உரையாடலுக்குத் தயாராய் இருப்பதேஇனிய நம்பிக்கையூட்டும் தொடக்கம் எனக் கொள்ளலாம்.

இங்கே கூறப்பட்டிருப்பவை இறுதியானதோ முழுமையானதோ அல்ல. இதற்கான ரெடிமேடுசூத்திரங்கள் எதுவும் கிடையாது. அதற்கான பகிரங்க உரையாடலை இங்கு தொடங்கி
வைக்கிறோம்.அவ்வளவே. 
 
ஆணும் பெண்ணும் கலந்துபேசி ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டு வாழ்க்கை இணையராக ஏற்பதே ஆகச்சிறந்த வழி. எனினும் அதற்கு வாய்ப்போசூழலோ அமையாதோர் பற்றியே இங்கே பேசுகிறோம்.

அது சரி மாப்பிளை தேர்வின் சிக்கல் போல பெண் தேர்விலும் சிக்கல் இல்லையா?உண்டு. அது குறித்தும் பேசவேண்டும். பேசுவோம்.
அது இருக்கட்டும் இங்கே முதலில் ஒரு பையனை அறிமுகம் செய்யும்போது
அம்மாக்கோந்து என்றொரு வார்த்தையைப் பயன் படுத்தினோம் அல்லவா?
அப்படியானால் இங்கேயும் பெண்தானே வில்லியாகிறாள் என்ற கேள்வி எழக்கூடும்.

குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த அம்மாவின் செயல் ஏற்க இயலாதது. பல
குடும்பங்களில் இத்தகைய தாய்கள் உண்டுதான். மாமியார் மருமகள் சண்டை இங்குபெரும் பிரச்சனையாவதற்கு இது பெரும் காரணமாகிவிடுவது உண்மைதான்.இவையெல்லாம்கூட ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவு என்றால் முதலில் புருவத்தைநெரிப்பீர்கள். ஆனால் உண்மை அதுதான். பெண்ணுக்கு சுயம் இல்லை. இளமையில்தந்தை, மணமான பின் கணவன், முதுமையில் மகன் இவர்களைச் சார்ந்தேவாழவேண்டும் என்று காலம்காலமாய் சொல்லிச்சொல்லி வளர்த்ததன் வினை. மகன்
கைவிட்டுப் போனால் எதிர்காலம் இருண்டுவிடும் என்கிற உள்ளுக்குள்
உறைந்திருக்கும் அச்சவுணர்வு மகனைத் தன் கைப்பிடிக்குள் வைக்கத்
துரத்துகிறது. இதனை நாம் மறந்துவிடமுடியாது. 
 
இருப்பினும் நாம் முன்னேறமெல்லமெல்ல, ஆனால் உறுதியாக அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்தாகவேண்டும். அந்தப் பாதையில் வாழ்க்கை இணையரைத் தேர்வு செய்வோம். ஆணைப்போலவே பெண்ணைத் தேர்வு செய்வதிலும் அள்வுகோல்கள் இருக்கத்தானே செய்யும்.அதைப் பற்றியும் பேசியாக வேண்டுமே... பேசுவோம்.
 
நன்றி : தீக்கதிர் வண்ணக்கதிர் 14-10-2012

2 comments :

  1. Unknown

    காலத்திற்கேற்ற அற்புதமான கட்டுரை.... ஆறு கட்டுரைகளையும் எழுதி முடித்த பின்பு ஒரு தொகுப்பாய் வெளியிடுங்கள்... ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

  1. Rathnavel Natarajan

    அருமையான பதிவு.
    நன்றி.
    Please avoid Word Verification.

Post a Comment