சொற்களில் இனிமை ; கருத்தினில் வலிமை காலத்தை மீறி நிற்கும் கவிமணி பாடல்கள் .

Posted by அகத்தீ Labels:

 




சொற்களில் இனிமை ; கருத்தினில் வலிமை

காலத்தை மீறி நிற்கும் கவிமணி பாடல்கள் .

 

“கள்ளுடனே ஆடுகோழி

கலந்துண்ணும் காளிதேவி

உள்ளிருக்கும் கோயிலிலே

உரிமை எமக் கிலையோ ? ஐயா !

 

 “கள்ளுடனே ஆடுகோழி

கலந்துண்ணும் காளிதேவி

பள்ளர் எமைக் கண்டவுடன்

பயந்தோடிப் போவாளோ !”

 

இந்த வரிகளை மட்டும் இப்போது நானோ நீங்களோ எழுதியிருந்தால் மதவெறி பாசிச ஆர் எஸ் எஸ் கூட்டமும் சாதி வெறிக்கூட்டமும் தாம்தூம் என குதித்திருக்கும் . வழக்கு மேல் வழக்கு போட்டிருக்கும் .

 

இப்போது என்ன செய்வார் ? இது மாபெரும் கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதியது ஆயிற்றே !

 

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை காந்தியவாதி . காந்தியைப் பின்பற்றி தீண்டாமைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்த மானுடன் . தீண்டாமைக்கு எதிராக காந்திய வழியில் ; போரிட்டவர் அவரின் மூன்று பாடல்கள் காணக்கிடைக்கின்றது .ஒவ்வொரு வரியும் நெருப்புக் கங்குகள் .

 

ஆண்டிப் பண்டாரம் மெட்டில் கவிமணி எழுதிய “தீண்டாதார் விண்ணப்பம்” 38 பத்திகளுடன் 150 வரிப் பாடல் [முதல் பத்தி 2 வரி பல்லவி ஆகும்]  . அடுத்து , 34 வரிகளைக் கொண்ட “ அரிசனங்களுக்காக வேண்டுதல்” இடம் பெறுகிறது , தீண்டாமையைப் பேயாக வர்ணிக்கும் “தீண்டாமைப் பேய்” 66 வரிப் பாடல் . அனைத்தையும் இங்கு பதிவிட கட்டுரை மிகப் பெரிதாகும் , வாசிப்பும் சுருங்கும் என்பதால் சில தெறிப்பான வரிகளை மட்டுமே பார்வைக்கு கீழே தருகிறேன்.

 

 “ காப்பாற்றி எமையாளும்

கடவுளரும் மக்களுள்ளே

பார்ப்பார்கள் பறையரென்றே

பகுப்பேதும் வைத்ததுண்டோ ?

 

கோவிலிலே தீட்டேறிக்

குடிபுகுமோ ? குளிப்பவரின்

பாவமெல்லாம் கங்கையிலே

படிந்திடுமோ ஐயா

 

பூவாரம் அணிந்த பிரான்

பொன்னடிக்கீழ் நின்றுஎளியேம்

தேவாரம் பாடில் அவர்

செவிக்கு இன்பம் ஆகாதோ ?

 

[ சிதம்பரம் தீட்தர்களுக்கு மண்டையிலும் உள்ளத்திலும் ஏறவில்லையே இன்னும் ]

 

சாவியிட்டு பூட்டுமிட்டுச்

சந்நிதியில் காவலிட்டுத்

தேவிருக்கும் கோயிலை நீர்

சிறைச்சாலை ஆக்கலாமோ ?

 

எல்லார்க்கும் வரமளிக்கும்

எம்பெருமான் ஆலயங்கள்

வல்லார்க்குச் சொந்தம் என

வழக்காடல் முறையோ ? ஐயா ?”

 

மேற்கண்ட வரிகள் “ தீண்டாதார் விண்ணப்பம்” பாடலில் இடம்பெற்றவை .

 

 “ இந்தப் பிறப்பு வேண்டாம் – இது ஒழிய

எந்தப் பிறப்பும் வரட்டும்.”

 

இவ்வரிகளை “ அரிசனங்களுக்காக வருந்துதல்” எனும் பாடலில் முதலில் பல்லவியாய் வைக்கிறார் . இது மிகவும் ஆழமான பொருள்பொதிந்த வரியாகும் . மநு அதர்மத்தை பின் பற்றாவிடில் அடுத்த பிறவியில் நாயாய் ,பன்றியாய்ப் பிறப்பாய் என சபிப்போரைப் பார்த்து , அப்படி எந்தப் பிறப்பும் வரட்டும் ஆனால் இந்தப் பிறப்பு வேண்டாம் என்பது எவ்வளவு வலிமிகுந்த வரிகள் . இப்பாடலில் மேலும் சொல்கிறார் ;

 

 “ வழியில் விழுபவரைத்

தழுவி யெடாது படு

குழியில் உருட்டி விடும்

பழியை நிதமும் தேடும் . [ இந்தப்]

 

உண்ணீர் விரும்பி வீட்டை

நண்ணி ஒருவன் நின்று

கண்ணீர் விடினும் செம்பில்

தண்ணீர் அளித்திடாத   [ இந்தப்]

 

முங்கிக் குளிக்க குளம்

தங்கி இருக்க இடம்

எங்கும் இலாது எளியர்

பங்கப் படும் புவியில்    [இந்தப்]

 

 “தீண்டாமைப் பேய்” பற்றி கவிமணி சித்தரிப்பு இன்றைக்கும் பொருத்தமாய் இருக்கிறதே . சில வரிகளைப் பார்ப்போம் .

 

 “பண்டுபண் டேயுள்ள பேயாம் – இந்தப்

பாரத நாட்டைப்பாடி ஆக்கிய பேயாம்

சண்டைகள் மூட்டிடும் பேயாம் – அது

சாத்திரி யார்பூசை கொண்டிடும் பேயாம்

 

பட்டப் பகல்வரும் பேயாம் – ஒரு

பக்கமே பார்க்கப் பழகிய பேயாம்

முட்டிக் குளித்திடும் பேயாம் – அது

முன்னேற்றம் கண்டு முட்டவரும் பேயாம்

 

[ முடமருகும் /முட்டவரும் என பதிப்புகளில் மாறிமாறி காணப்படுகிறது]

 

கோவில் வாசற்படியில் – தினம்

கும்மாளி கொட்டி குதித்தாடும் பேயாம்

வாவிக் கரையிலும் நிற்கும் – அங்கு

வந்த மனிதரைத் துரத்தும் .

 

வேதக் கடலைக் கலக்கும் – அதில்

வேண்டும் விதிவலை வீசிப் பிடிக்கும்

சாதிப் பிளவை உண்டாக்கும் – எங்கும்

‘சண்டாளர் ! சண்டாளர்’ என்றே முழக்கும் .

 

தாகித்து வந்தவருக்குச் – செம்பில்

தண்ணீர் அளித்திட சம்மதிக்காது

தேடி வருவோரை அன்பாய் – வீட்டுத்

திண்ணையில் உடகார வைக்க வொட்டாது .

 

கண்ணுதல் ஆலயம் சென்றால் – அங்கே

கையிற் பிரசாதம் போட வொட்டாது;

எண்ணி வரையளந் திட்டே – அதற்கு

அப்புறம் இப்புறம் நில்லென்[று] அதட்டும்

 

முன்னம் பெரியோர் இதனை – வெட்டி

மூடிப் புதைத்தும் , உயிர்வலிகொண்டு

பின்னும் முளைத்ததே ஐயா ! – இதை

நாட்டைவிட்[டு] ஓடித் துரத்துவோம் ஐயா !”

 

மெய்தானே ! காந்தியின் பாதையில் தீண்டாமையை எதிர்க்க கவிமணி முன்வந்தாலும் , தமிழ் மண்ணுக்கே உரிய வைதீக எதிர்ப்பும் இயல்பாகப் பிணைந்து விடுகிறதே . அதுதானே எம் தமிழ் மண்.

 

புதிய இளைஞர்கள் கவிமணியை அதிகம் அறிய மாட்டார்கள் எனவேதான் நீண்ட மேற்கோள்கள் தவிர்க்க முடியாததாகிறது.

 

பெண் விடுதலையில் மிகவும் நாட்ட முள்ளவர் கவிமணி . அவர் எழுதிய “ பெண்ணின் உரிமைகள்” என்கிற பாடலின் ஆரம்ப வரிகளை கிட்டத்தட்ட பலமேடைகளில் கேட்டிருப்போம் .

 

 “ மங்கையராய்ப் பிறப்பதற்கே – நல்ல

மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா !

பங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்

பாரில் அறங்கள் வளரும் அம்மா !”

 

அடுத்து வருகிற 52 வரிகளை நிச்சயம் கணிசமானோர் வாசித்திருக்கவே மாட்டோம் . பெண்ணைக் கொண்டாடிய வரிகள்தாம் அவை . அன்றையப் பார்வை எல்லைக்கு உட்பட்டுத்தானே பொதுவாய் எந்தக் கவிஞரும் சிந்திப்பார். கவிமணியும் அப்படித்தான். .ஆயினும் கற்புச்சங்கிலியோ , மூடத்தனங்களையோ , போலிப் பெருமையோ அதில் இல்லை . மாதிரிக்கு ஒரு சில பத்திகள் பார்ப்போம்.

 

 “ அல்லும் பகலும் உழைப்பவர் ஆர் ? உள்ளத்து

அன்பு ததும்பி எழுவது ஆர் ?

கல்லும் கனிய கசிந்துருகி – தெய்வக்

கற்பனை வேண்டித் தொழுபவர் ஆர் ?”

 

[ தெய்வக் கற்பனை என்பதை அடிக்கோடிடுவீர்]

 

“ ஊக்கம் உடைந்து அழும் ஏழைகளைக் – காணில்

உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர் ?

காக்கவே நோயாளி அண்டையிலே – இரு

கண்ணிமை கொட்டா[து] இருப்பவர் ஆர் ?

 

இந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர் ? – பயம்

சிந்தனை அகன்றிடச் செய்பவர் ஆர் ?

முந்து கவலை பறந்திடவே – ஒரு

முத்தம் அளிக்க வருபவர் ஆர் ?

 

அன்பினுக் காக வாழ்பவர் ஆர் ? – அன்பில்

ஆவியும் போக்கத் துணிபவர் ஆர் ?

இன்ப உரைகள் தருபவர் ஆர் ? – வீட்டை

இன்னகை யால்ஒளி செய்பவர் ஆர் ?

 

மங்கைய ராகப் பிறந்ததனால் – மனம்

வாடித் தளர்ந்து வருந்துவதேன் ?

தங்கு புவியில் வளர்ந்திடும் – கற்பகத்

தாருவாய் நிற்பது நீயல்லவோ ?”

 

இந்தக் கவிதையை அன்றைய நாஞ்சில் மண்ணில் நிலவிய சூழலோடு பொருத்திப் பார்ப்பின் வலிமை விளங்கும்.



 

தாய் வழி சமூகமே ஆதியில் நிலவியது . சொத்துடைமை வந்த பின்தான் தந்தை வழி சமுதாயமும் லிங்க வழிபாடும் வந்தது என்பது சமூக ஞானம் . அந்த தாய்வழி சமூகத்தின் மிச்ச சொச்சம் கேரளாவில் நிலவியது . தாய் வழி சமூகத்தின் நல்ல கூறுகளைத் தொலைத்துவிட்டு தீமையை மட்டுமே கொண்டிருந்தன இந்த மிச்ச சொச்சம் .

 

திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்ப்பட்ட அன்றைய நாஞ்சில் நாட்டிலும் அதனைக் காணலாம் . மக்க வழி ,மருமக்க வழி என்ற சொற்றொடர்கள் புழக்கத்தில் இருந்தன . மருமக்க வழியில் சொத்து என்பது சகோதரியின் வாரிசுகளுக்கு உரியது என்பதால் ஆண்கள் பொறுப்பற்றும் ,கட்டிய மனைவியை பிள்ளைகளைக் கவனியாமலும் பாலியல் வேட்கையாளராகவும் திரிந்தனர் .

 

இந்நிலையில்  “மருமக்கள்வழி மான்மியம்” என்கிற நூலை எழுதி அதற்கு எதிராய் இளைஞர்கள் போராட வழி செய்தவர் கவிமணி . போராட்டத்தின் முன்நின்று வென்றவர் .

 

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதைநூலாகும். இது நாஞ்சில்நாட்டில் நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீங்குகளை அந்த முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வதுபோல பாடப்பட்டிருக்கின்றது.

 

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ஒரு சமுதாய அங்கதப் பாட்டாகும். நகைச்சுவையும் கிண்டலும் நிறைந்த அப்பாட்டுக்கு நிகரானதொரு ‘அங்கதப்பாட்டு’ இதுகாறும் தமிழில் தோன்றவில்லை.” என்பார் தமிழண்ணல் .

 

கவிமணியின் மழலைப் பாடல்களையும் கதைப்பாடல்களையும் பேசப்புகின் கட்டுரை நீளும். சொல்லாமலும் முடியாது .

 

பெண்கள் சைக்கிள் ஓட்ட பயிற்சி கொடுத்தது அண்மையில். எண்பதுகளில் அறிவொளி இயக்கம்தான் முன் கை எடுத்தது .

 

அரசு இலவச சைக்கிள் கொடுத்தது அதன்பின்னரே . ஆயின் அந்தக் காலத்திலேயே சைக்கிளை குறித்த மழலைப் பாட்டை தங்கைகளை நோக்கிப் பாடியவர் கவிமணி.

 

 “ தங்கையே பார் ! தங்கையே பார் !

சைக்கிள் வண்டி இதுவே பார் !”

 

எனத் தொடங்கி..

 

 “ ஒன்றன் பின் ஒன்றாக

உருளும் பைதாக்களைப் பார் !

 

அக்காளும் தங்கையும் போல்

அவை போகும் அழகைப் பார் !’

 

என முடியும் .பெண்களை நோக்கி சைக்கிளைத் தள்ளிய கவிமணியின் பார்வை நேர்த்தியானது .

 

கூண்டுக்கிளி எனும் பாடல் சிறுவனும் கிளியும் உரையாடுவதுபோல் ஆமைந்திருக்கும் . “கூட்டில் வாழும் வாழ்வினிலே குறைகள் ஏதும் உண்டோ சொல் ?” என சிறுவன் கேட்பான் .கிளி பதில் சொல்லும்;

 

 “ சிறையில் வாழும் வாழ்வுக்குச்

சிறகும் படைத்து விடுவானோ ?

இறைவன் அறியா பாலகனோ?

எண்ணி வினைகள் செய்யானோ ?

 

பாலும் எனக்குத் தேவை இல்லை

பழமும் எனக்குத் தேவை இல்லை

சோலை எங்கும் கூவி நிதம்

சுற்றித் தெரிதல் போதுமப்பா ?”

 

இதுபோல் சுட்டிக்காட்ட அநேக பாடல்கள் உண்டு .

 

கவிமணியின் மழலைப் பாடல்களையும் , கதைப் பாடல்களையும் நல்ல வண்ண ஓவியங்கள் ,படங்களுடனும் நூலாக அச்சிடல் இப்போது காலத்தின் தேவையாகும் . பாரதி புத்தகாலயமும் , த மு எ க ச வும் இதில் கவனம் செலுத்துவார்களாக !

 

 “ பந்தம் எரியுதோடி ! கண்களைப்

பார்க்க நடுங்குதடி!

குத்தும்வாள் ஈட்டியெல்லாம் – கூடவே

கொண்டு  திரியுதடி “

 

எனத் தொடங்கும்  “புலிக்கூடு” பாடல் வில்லியம் ப்ளேக் எனும் ஆங்கிலக் கவிஞரின் பாடலைத் தளுவி கவிமணி பாடியது ஆகும் . இதுபோல் நிறைய செய்துள்ளார் .

 

உமர்கயாம் கவிதைகளை முதலில் மொழிபெயர்த்தவர் இவரே . அந்த மொழிபெயர்ப்பில் குறை காண்போர் உண்டு .ஆயினும் எட்டுத் திக்குக் சென்று கலைச் செல்வம் யாவையும் தமிழில் கொண்டு சேர்க்கும் கவிமணியின் பேரவாவும் முயற்சியும் நமக்கெல்லாம் முன்னோடி .

 

மத நம்பிக்கை கொண்டவர் ஆன்மீக ஈடுபாடும் உண்டு , ஆயின் மதவெறி , வெறுப்பு அரசியல் ,மூடத்தனம் அண்டா நெருப்பு அவர் .சித்தர் மரபு சார்ந்த பார்வை கொண்டவர் எனவும் சொல்லலாம் . “ கோவில் வழிபாடு” எனும் தலைப்பில் அவர் பாடிய பாடலை இங்கு முழுதாகப் பகிர்கிறேன் .அவர் உள்ளம் நாடும் உண்மை ஒளி அதில் பளிச்சிடும் .

 

 கோவில் முழுதுங் கண்டேன் – உயர்

கோபுரம் ஏறிக்கண்டேன்.

தேவாதி தேவனையான் – தோழி

நான் தேடியும் கண்டிலேனே.

 

தெப்பக்குளம் கண்டேன் – சுற்றித்

தேரோடும் வீதி கண்டேன்

எய்ப்பில்வைப் பாம் அவனை – தோழி

ஏழையான் கண்டிலேனே !”

 

சிற்பச் சிலை கண்டேன் – நல்ல

சித்திர வேலை கண்டேன்.

அற்புத மூர்த்தியினைத் – தோழி

அங்கெங்கும் கண்டிலேனே.

 

பொன்னும் மணியும் கண்டேன் – வாசம்

பொங்கும் பூமாலை கண்டேன்.

என்னப்பன் எம்பிரானைத் – தோழி

இன்னும்யான் கண்டிலேனே .

 

தூபமிடுதல் கண்டேன் – தீபம்

சுற்றி எடுத்தல் கண்டேன்.

ஆபத்தில் காப்பவனைத் – தோழி

அங்கேயான் கண்டிலேனே.

 

தில்லைப் பதியும் கண்டேன் – அங்குச்

சிற்றம்பலமும் கண்டேன்.

கல்லைக் கனிசெய்வோனைத் – தோழி

கண்களாற் கண்டிலேனே.

 

கண்ணுக்கு இனிய கண்டு – மனதைக்

காட்டில் அலையவிட்டு

பண்ணிடும் பூசையாலே – தோழி

பயன் ஒன்றில்லை ,அடி !

 

உள்ளத்தில் உள்ளான் அடி – கோயில்

உணர வேண்டுமடி !

உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்

உள்ளேயும் காண்பாய் அடி !”

 

மேலும் சில கவிதைகளின் தலைப்பை எடுத்துக்காட்டாய்ச் சொன்னாலே கவிமணி உள்ளம் தெரியும் ; செல்வமும் வறுமையும் , ஏழைச் சிறுமியர் மனப்புழுக்கம் யுத்தக் கொடுமை ,தொழிலாளியின் முறையீடு ,வேலையில்லாத் திண்டாட்டம் ,சர்வாதிகாரி ,உடல் நலம் பேணல் . இவை அவர் தேர்ந்த பாதையைச் சொல்லும்.

 

கவிமணி பற்றி பேசப்பேச விரியும் . இடம் கருதியும் வாசகர் மனோநிலை கருதியும் ஒரே ஒரு செய்தியுடன் நிறைவு செய்கிறேன்.

 

[ கவிதை குறித்து கவிமணியின் தெளிந்த பார்வையை நேற்றே பதிவிட்டுவிட்டதால் இங்கு சேர்க்கவில்லை .இது தனிக்கட்டுரை ஆகும் போது இதனை இணைக்கலாம்.]

 

நாஞ்சில் நாட்டை தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திற்கு தோள் கொடுத்தவர் கவிமணி . 1950 ஜனவரியில் நடைபெற்ற  குமரி எல்லை மாநாட்டில் ப தேவி பிரார்த்தனையோடு உரையைத் தொடங்கியவர் கவிமணி. அந்த பிரார்த்தனையிலும் தமிழ்நாட்டோடு இணைய வரங்கேட்டவர் . அம்மாநாட்டில் கவிமணி ஆற்றிய உரை அவரின் உரைகள் நூல் தொகுப்பில் உள்ளது .அப்பாடல் கீழே !

 

 “ தென் எல்லை ,காத்து ஆளும் தேவி ! குமரீ ! நின்

பொன்னடியைக் கும்பிட்டுப் போற்றுகின்றேன் – மன்னுபுகழ்

செந்தமிழ் நாடு ஒன்றாகித் தேவர் நா[டு] ஒத்து உலகில்

சந்ததம் வாழ்வரம் தா !”

 

கவிமணியைக் குறித்து நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை நெக்குருகிச் சொன்னவற்றை முழுதும் சொல்லப்போவதில்லை ,மாதிரிக்கு நாலுவரிகள் மட்டும் காணீர் !

 

 

“தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை

தினமும் கேட்பது எம் செவிப்பெருமை

ஆசிய ஜோதியெனும் புத்தர் போதம்

அழகுதமிழில் சொன்னான் அது போதும்.”

 

புத்தர் பெருமை பேசும் ஆசிய ஜோதி ,உமர்கயாம் ,மலரும் மாலையும் ,காந்தளூர் ஆராய்ச்சி , தேசிய கீதங்கள் , காதல் பிறந்த கதை ,மருமக்கள் மான்மியம் ,குழந்தைப்பாடல்கள்  உட்பட பல நூல்கள் யாத்தவர் . கம்பராமாயணப் திவாகரம் ,நவநீதப் பாட்டியல் முதலிய ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்தவர்.சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதியாளராய் பணியாற்றியவர் .

 

1876 ல் பிறந்து 1954 ல் மறைந்த கவிமணி தன் 78 ஆண்டு கால வாழ்வில் ஆழமான சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளார் . கவிமணி காந்தியக் கவிஞர் ,தேசியக் கவிஞர் ,மழலைக் கவிஞர் , சமுதாயக் கவிஞர்  என பன்முகம் கொண்டவர் .

 

அவர் தான் வாழ்ந்த காலத்தில் முற்போக்கின் பக்கமே நின்றார் . அவர் முற்போக்கு ஜனநாயக் கவியே . அவரை மதவெறி சக்திகள் கடத்திக் கொண்டு போகாதிருக்க விழிப்போடு இருப்போம் . அவரைக் கொண்டாடுவதும் நம் கடந்தானே .

 

[ அவர் பிறந்த நாஞ்சில் மண்ணில்  “தனித்துவம் நமது உரிமை .பன்மைத்துவம் நமது வலிமை.” என்ற முழக்கத்துடன் தமுஎகச மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 13 -15 தேதிகளில் நடைபெறும் வேளையில் அவரை நான் நினைவு கூர்வது நம் காலத்தின் தேவையன்றோ ! ]




 

சு.பொ.அகத்தியலிங்கம்.

29/7/2022.

 

 

 

 

 


கவிதைக் குழப்பம் – நான் - கவிமணி …..

Posted by அகத்தீ Labels:

 


கவிதைக் குழப்பம் – நான் - கவிமணி  …..

 

 

அட போப்பா! இந்த கவித பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தா இருக்கு ? பட்டிமன்றம் ,வழக்காடு மன்றம் , பகடி ,அவதூறு ,விமர்சனம் ,எள்ளல் ,எகத்தாளம் எல்லாம் கலந்துகட்டி ஆடுறாங்க.

 

புரிஞ்சாத்தான் கவிதை , புரியவிட்டால்தான் கவிதை , அதைப் பற்றி எழுதினால்தான் கவிதை , இதைப் பற்றி எழுதினால்தான் கவிதை, இப்படி எழுதினால்தான் கவிதை , அப்படி எழுதினால்தான் கவிதை ; முடியலைடா சாமி ! ஆளைவிடுங்கோ ! நல்ல வேளை நான் கிறுக்கியவைகளை கவித புத்தகம்னு போட்டுத் தொலைக்கல …

 

நீ என்ன சொல்லுகிறாய் எனக் கேட்போருக்காக நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கவிதைகளைக் கோர்க்கிறேன் .

 

[ அதைக் கவிதைன்னு யாரு சர்ட்டிபிகெட் கொடுத்ததுன்னு பஞ்சாயத்துக்கு வராதீங்க ..நானே சொல்லிக் கொண்டது .ஆளை விடுங்க ]

 

“ரசனை இல்லாமல்

கவிதை பூக்காது

 

அன்பில் நனையாமல்

கவிதை முளைக்காது

 

காதலில் தோயாமல்

கவிதை துளிர்க்காது

 

கோபம் தகிக்காமல்

கவிதை வெடிக்காது

 

அனுபவம் செதுக்காமல்

கவிதை பிறக்காது -ஆயின்,”

 

மனிதம் கொன்றபின்

கவிதைதான் ஏது ??”

 

சுபொஅ. [2021 டிசம்பரில் எழுதியது]

 

 

புதிய சொல் நெய்வோம்

 

 “பாவம் புண்ணியம்

புனிதம் தீட்டு

இன்னும் இன்னும்...

 

சொற்களுக்குப் பின்னாலே

பதுங்கி இருக்கிறது வஞ்சகம்,

இப்போது கண்டுகொண்டோம்

 

ஏன் கண்ணை உருட்டுகிறாய் ?

வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறாய் ?

உன் வேஷம் கலைந்து விட்டதென்றா ?

 

நாங்கள் தூக்கி எறிய நினைப்பது,

வார்த்தைகளை மட்டுமல்ல,

வர்ணநீதியின் சகலகேடுகளையும் தான்.

 

மனிதனை மனிதன் சமமாய்ப் பார்க்கும்;

புதுநெறியை மானுடப் போரில் நெய்வோம் ;

அதனுடன் அதற்கான சொற்களையும்தான்.”

 

சுபொஅ.[ 2016 ஜூலையில் எழுதியது]

 

அதெல்லாம் இருக்கட்டும் கவிதை என்றால் என்ன சொல்லுக என நீட்டி முழக்குவோருக்காக ….

 

எங்கள் ஊர் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதையைப் பற்றி “ கவிதை” என்ற தலைப்பிலேயே எழுதியதைச் சொல்லட்டுமா ? உரக்கச் சொல்லட்டுமா ? அதைவிட தெளிவாய் வலுவாய் அழகாய் ஆழமாய் யார் சொல்லிவிட முடியும் ?

 

 “வண்டி அற்புதப் பொருளாம் – வண்டி

மாடும் அற்புதப் பொருளாம் ;

வண்டி பூட்டும் கயிறும் – எந்தன்

மனதுக்[கு] அற்புதப் பொருளாம் .

 

வண்டல் கிண்டி உழுவோன் – கையில்

வரிவில் ஏந்தி நின்ற

பண்டை விசயன் போல – இந்தப்

பாரில் அற்புதப் பொருளாம்.

 

பறக்கும் குருவியோடு என் – உள்ளம்

பறந்து பறந்து திரியும்;

கறக்கும் பசுவைச் சுற்றி – அதன்

கன்று போலத் துள்ளும்.

 

ஈயும் எனக்குத் தோழன் – ஊரும்

எறும்பும் எனக்கு நண்பன்;

நாயும் எனக்குத் தோழன் – குள்ள

நரியும் எனக்கு நண்பன் .

 

கல்லின் கதைகள் எல்லாம் – இரு

காது குளிரக் கேட்பேன்;

புல்லின் பேச்சும் அறிவேன் –அதைப்

புராண மாக விரிப்பேன்.

 

அலகில் சோதியான – ஈசன்

அருளினாலே அமையும்

உலகில் எந்தப் பொருளும் – கவிக்கு

உரிய பொருளாம் .ஐயா !

 

உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை ;

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை .”

 

கவிமணியின் அளவுகோலை மிஞ்சிய அளவுகோல் என் கண்ணில் தட்டுப்படவில்லை .

 

கவித பஞ்சாயத்து முடிஞ்சது … கிளம்புங்க கிளம்புங்க கவிதை எழுத .. கவிதை வாசிக்க … ரசிக்க…

 

 “உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை ;

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை .”

 

நாளையும் கவிமணியின் பாடல்களுடனும் பார்வையுடனும் சந்திக்கிறேன்… சரிதானே …

 

 

 

 

சுபொஅ.

28/7/2022.

 

நான் பிறந்த ஊரு …

Posted by அகத்தீ Labels:

 



நான் பிறந்த ஊரு …

 

 ஆற்றங் கரையுண்டு

அழகான சோலையுண்டு

நந்தவனம் உண்டு

நன்செயல்கள் சூழவுண்டு

சத்திரங்கள் உண்டு

தமிழ்க் கல்வி சாலையுண்டு

தெப்பக் குளம் உண்டு

தேரோடும் வீதி உண்டு

நான்கு மதில்கள் உண்டு

நடுவில் ஒரு கோவில் உண்டு

கோபுர வாசல் உண்டு

கொடிமரம் இரண்டுண்டு

சித்திரையும் மார்கழியும்

திருவிழாக் காட்சி உண்டு

பார்த்திடக் கண்கள்

பதினாயிரம் வேண்டும்

தொன்னகரம் ஆன

சுசிந்தைச் சிறப்பெல்லாம்

என்னொரு நாவால்

எடுத்துரைக்க ஏலாதே !”

 

மேலே உள்ளது “சுசீந்திரம்”எனும் தலைப்பில் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய கவிதை ..

 

கவிதை என் நினைவுகளைக் கிழற , நான் பிறந்த ஊரும் சுசீந்திரம் என்பதால் “ நான் பிறந்த ஊரு..” என புதிய தலைப்பிட்டு இங்கு நான் அதனைப் பகிர்ந்தேன். இது என் தாயின் ஊர் ஆகும். நான் பிறந்து வளர்ந்த்தெல்லாம் இங்குதான்.

 

பத்தாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை புழுதியில் உருண்டு விளையாடிய ஊர் சுசீந்திரம் ஆகும் .பதினோராம் வகுப்பு முதல்தான் சென்னை வாசம்.

 

சுசீந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேரூர் எனும் சிற்றூரில் பிறந்தவர்தாம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை .

 

அவர் மணம் முடித்தது புத்தேரி .இவ்வூர் நாகர்கோவிலில் இருந்து தோழர் ப.ஜீவானந்தம் பிறந்த பூதப்பாண்டிக்கு போகும் வழியில் உள்ள ஊர் .

 

புத்தேரி என் தந்தை ஊர் . என் தந்தை கவிமணியோடு நன்கு பழகியவர் .

 

என்னிடமிருந்த எனக்குப் பிடித்த  “ கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடல்கள் ” தொகுப்பு எப்போதோ [ சிலவருடங்கள் முன்பே ] தொலைந்துவிட்டது . படிக்க வாங்கிச் சென்றவர் பதுக்கிவிட்டார் .நான் செய்யாததையா அவர் செய்தார் ?

 

அண்மையில் 11வது ஓசூர் புத்தகக் காட்சியில்  ‘மீனா எண்டர்பிரைசஸ்’ ஆவுடையப்பன் அன்போடு தாம் வெளியிட்ட “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடல்கள்” நூலைக் கொடுத்தார் .மீண்டும் அப்புத்தகம் என அலமாரிக்கு வந்ததால் ஆசையோடு புரட்டினேன் . சுசீந்திரம் கண்ணில் பட்டது .இங்கே பதிந்துவிட்டேன். ஒன்று தொடக்கத்தில், இன்னொன்று கீழே !

 

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .பக்தி இல்லை .ஆயினும் தேசிய விநாயகம் பிள்ளை எங்கள் ஊர் சுசீந்திரம் தாணு மாலயனைப் பாடிய பக்திப் பாடலின் சொல்நயமும் ஊர்பாசமும் என்னை ஈர்த்துவிட்டது . பாடல் கீழே !

[ நாலாவது வரியில் உள்ள கடு எனும் சொல்லை நச்சு /விஷம் எனப் புரிக]

 

“திங்கள் கருணை காட்டும்;

தீக்கண் உன் வெகுளி காட்டும்;

கங்கையுன் பெருமை காட்டும்;

கடுவும்உன் ஆண்மை காட்டும்;

சிங்கம்நுண் இடையைக் காட்டும்;

சிறையனம் நடையைக் காட்டும்;

மங்கையோர் பாகா ! தாணு

மாலயா !சுசிந்தை வாழ்கவே !”

 

தேசிய விநாயகம் பிள்ளை பாடல்களை இன்னும் கொஞ்சம் பேசலாம் என எண்ணுகிறேன். நாளை சந்திப்போம்.

 

 

[ தேசிய விநாயகம் பிள்ளை மீசையோடு இருக்கும் படம் அபூர்வம் .அவர் தன் இணையரோடு இருக்கும் அரிய படம் ஒன்று என் கண்ணில் பட்டது பதிந்துவிட்டேன்.]

 

சுபொஅ.

27/7/2022.



உரைச் சித்திரம் : 16. வளமை ஓர்புறம் வறுமை ஓர்புறம் : தொடர்கதை

Posted by அகத்தீ Labels:

 



உரைச் சித்திரம் : 16.

 

வளமை ஓர்புறம் வறுமை ஓர்புறம் : தொடர்கதை

 

 

 

பசியை ஓர் நோயாகச் சொன்னது தமிழ் மரபாகும் .பசிப்பிணி அகற்ற கனவு கண்ட இலக்கியங்கள் தமிழில் ஏராளம் .இதன் பொருள் தமிழ்ச் சமூகம் பசிப்பிணியை பெரும் சவாலாகவே பார்த்து வந்திருக்கிறது ; அதனை வேரறுக்க தொடர் கனவு கண்டு வந்துள்ளது என்பதே ஆகும் . சங்க காலம் பொற்காலம் என்போர் ,அதன் இன்னொரு பக்கத்தை சொல்லுவதில்லை .இன்று அப்பக்கம் சிறிது செல்வோமா ?

 

பசிப்பிணி குறித்த ஓரிரு காட்சிகள் பார்ப்போம் ;

 

தன்மானம் மிக்க ஒருவர் அதனை காத்து நிற்க முனைவரா , அல்லது தன்மானத்தை உதறிவிட்டு கூனிக்குறுகி பிறரிடம் ஈயென்று இரந்து நிற்பாரா ? நாலடியார் இது குறித்து பேசியுள்ளது .

 

பசி நோயால் உடல் வாடி வதங்கி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் உதவி கேட்பாரோ தன்மானம் மிக்கவர்கள் .  மாட்டார்கள் .நிச்சயம் மாட்டார்கள் .  அதே வேளையில் தான் தன் வறுமையை எடுத்துச் சொல்லாமலே பார்த்தவுடன் குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் பேரன்பு உடையவரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பாரோ? கூறுவார்கள். ஆக ,தன் வறுமையை எடுத்துச் சொல்லி உதவி கேட்கும் போதும் பண்பில்லாதவரிடம் கேட்கக்கூடாது .

 

புறநானூற்றில் இன்னொரு காட்சி . சற்று வேடிக்கையானதும்கூட .புலவர் கழைதின் யானையார் பாடி பரிசில் பெற கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியிடம் போகிறார் . அந்த நேரம் வல்வில் ஓரி என்ன மனோ நிலையில் இருந்தாரோ ! இல்லை என கைவிரித்து விட்டார் . விடுவாரா புலவர் “ நீர் வள்ளல்தான் .குறைத்துப் பேசமாட்டேன் .ஆயின் நான் வந்த நேரமும் சகுனமும் சரியில்லை” என தன்னை நொந்து கவிபாடுகிறார் . அதை முழுதாகப் பார்ப்போம்.

 

 

ஈ என அதாவது தாவென கை நீட்டி யாரோ ஒருவரிடம் பிச்சை கேட்பது யாராயினும்  மிகவும் இழிவு தருவதாகும். வேதனை தருவதாகும் .அப்படியும் மானமிழந்து ஒருவர் கேட்ட பிறகும் ஈயேன் கொடுக்கமாட்டேன் என கொடுக்காமல் இருப்பது அதைவிட கேவலமானதும் இழிந்ததும் ஆகும்.

 

இதையே இன்னொரு வகையிலும் சொல்லலாம் .இதோ வாங்கிக் கொள் என ஒருவர் கொடுப்பது உயர்வானது ஆகும்; அப்படிக் கொடுத்தாலும் அதை ஏற்க மாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்வானது ஆகும்.

 

உப்புக் கரிக்கும் கடலில் அளவில்லாமல் நீர் நிறைந்து இருந்தாலும்  அதனை நாடி தாகம் தணிக்க ஒருவரும் செல்வது இல்லை. [ இப்போது கடல் நீரை குடி நீராக்குகிறோம் அது வேறு தளம் ]

 

பசுமாடும் , கால்நடைகளும் ஏனைய விலங்குகளும் சென்று தண்ணீர் குடித்து கலக்கி சேறாக்கிவிட்ட  சிறு நீர்த் தேக்கம் என்றாலும் குடிநீருக்காக அதனை  நோக்கிப் பலரும் செல்வார்கள்; குடிநீர் என்பதால் அதற்கு வழிகள் பல தானாக அமைந்தும் விடுகின்றன.

 

வள்ளியோரை நாடி உள்ளி  அதாவது வல்வில் ஓரியை நாடி அவர் பரிசில் தருவார் என்று கருதிச் செல்கின்றனர். அவரை நாடிப் போகும் பாதையோ பலரும் போய் போய் தேய்ந்து பழகிய பாதை பாதை. தப்பித் தவறி அங்கு எதிர்பார்த்த பரிசில் கிடைக்கவில்லை என்றாலும்  அங்கு போவோர் அப்பரிசில் தரும் மேன் மக்களைக் குறைவு பட இழித்துப்  பேசமாட்டார்கள்.

 

பரிசில் கிடைக்காவிடினும் வழங்குபவரைக் குறை கூறுவது இல்லையாம். தம் சகுனம் சரி இல்லை என்று தம்மைத் தாமே தேற்றிக் கொள்வராம். தாம் சென்ற நேரம் சரி அல்ல என்றுதான் பேசுவார்களாம்.

 

யாரென பேதம் பார்க்காமல் பொழியும் மழை போல் , ஆம் மாரி போல வாரி வழங்கும் இயல்பு உன்பால் உள்ளது; அதனால் எப்பொழுதும் உன்னை வெறுப்பது என்பது இல்லை.

 

இப்படி பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி தலையில் வைத்தபின் கொடுக்காமல் இருந்திருப்பார்பாரோ ?

 

இன்னொரு காட்சி ,

 

குடுமி வைத்திருக்கும்   தமது மகன் பசியால் துடிக்கும் காட்சியை புலவர் பெரும்சித்திரனார் பார்க்கின்றார் . உண்ண உணவில்லாது பசியோடு தாயிருக்கிறாள் . அந்த தாயின் முலைக் காம்பை சப்பிச் சப்பி  பால் இன்றி ஏமாறுகிறது குழந்தை . பால் இல்லாததால் கூழாவது கஞ்சியாவது கிடைக்குமா  என பாத்திரத்தைத் திறந்து திறந்து பார்த்து, உணவு ஏதுமில்லாமல் பாத்திரம் காலியாக இருப்பதைக் கண்டு  குழந்தை  மேலும் வீறிட்டு அழகிறது .அதனைக் கண்டு தந்தையான பெருஞ்சித்திரனார்  கலங்குகிறார் .

 

இப்படி 160 வது புறநானூற்றுப் பாடலில் காட்சி விரிகிறது .இதன் தொடர்ச்சி இன்னும் வலுவாய் 164 வது பாடலில் வெளிப்படுகிறது .

 

 

வள்ளல் குமணன் காட்டில் இருக்கிறார் .ஆனாலும் விரட்டிச் சென்று புலவர் பெருஞ்சித்திரனார் தான்படும் கொடுந் துயரத்தைச் சொல்லி உதவி கேட்டு நிற்கிறார் . கொடுக்காவிடில் இவ்விடத்தை விட்டு நகர மாட்டேன் என அடம் பிடிக்கிறார் .

 

அடுப்பு எதற்கு ? சோறு சமைப்பதற்குத்தானே , ஆனால் ,தன் வீட்டு அடுப்பில் பலநாள் சோறே சமைக்காததால் காளான் பூத்துக் கிடக்கிறது.

 

 

அதனால் தம் பிள்ளைகளுக்கு பசியாற்ற முடியவில்லையே என வருந்தி என் மனைவியின் ஈர இமை கொண்ட கண்கள் விடாது கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருக்கின்றன. 

 

 

அதுமட்டுமா ? பலநாள் சாப்பிடாததால் அவள் முலையில் பால் சுரக்கவில்லை . ஆயினும் அதையெல்லாம் அறியாத குழந்தை மூலைக் காம்பை சப்பி சப்பி பால் வராமல் பசி பொறுக்காமல் தேம்பித் தேம்பி அழுகிறது . குழந்தை முகத்தைப் பார்த்து தாயின் கண்களிலும் கண்ணீர்மழை கொட்டுகிறது.

 

 

அவள் துன்பத்தைப் காணச் சகிக்காமல் நான் உன்னை நோக்கி வந்துள்ளேன்.

 

 

என் கொல்வறுமை நிலை அறிந்து தேவையானதை நீ நல்கும்வரை உன்னை விட்டு நான் போகமாட்டேன்.

 

 

நீயோ வறிய யாழிசைக் கலைஞர்கள்  வறுமையைப் போக்கும் உயர்ந்த குடியில் பிறந்தவன் ஆயிற்றே.

 

 

இப்படி குமணனிடம் யாசித்து நின்றார்.

 

 

இப்படி நிறைய காட்சிகளைச் சுட்ட இயலும் .இப்போது இன்னொரு காட்சியோடு முடிப்போம் .

 

 

மன்னனைப் புகழ்ந்து யாசகம் கேட்கும் பாணர்களுக்கு கொடுக்க ஏதுமின்றி மன்னனே இருக்கிறான் .ஆயினும் அவன் நெஞ்சில் ஈரம் இருக்கிறது .கவுரவம் பார்க்காமல் இன்னொரு வள்ளலைப் புகழ்ந்து  சோறு கிடைக்கும் இடம் நோக்கி கை நீட்டுகிறான் .இது மிகவும் வித்தியாசமான காட்சி .

 

அந்த மன்னன் சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவன் .அவன் காட்டிய வள்ளல் சிறுகுடி கிழான் பண்ணன் .இதனைப் பாடியதும் அந்த மன்னனே .

 

நான் வாழும் நாளெல்லாம் சேர்த்து அந்த பாணன் வாழ்க !

 

நிறைய பழங்கள் பழுத்திருக்கும் மரத்தில் தமக்கேற்ற உணவு இருப்பதால் ; அம்மரம் நாடிச் சென்று மகிழ்ச்சியால் பறவைகள் ஆரவார ஒலி எழுப்பும் .

 

அதுபோல  அங்கே ஒலி கேட்கிறதே அது என்ன ஒலி ?

 

 

சிறுகுடி கிழான் பண்ணன் வீட்டில் பாணர்கள் கூட்டம் கூட்டமாய் கள் குடித்து , வயிறு முட்ட உணவு உண்டு , மகிழ்ந்து எழுப்பும் பேரொலி அது.

 

அவன் இல்லத்தில் அந்தப் பேரொலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 

 

அப்போது மழை இல்லாவிடினும் சீக்கிரம் மழை பெய்யும் என இருண்ட வானம் பார்த்து  அறிந்த எறும்புகள் , தன் முட்டைகளை எடுத்துக்கொண்டு 

வலிமையான மேட்டுநிலம் நோக்கி வரிசை வரிசையாகச் செல்கின்றன.

 

 

அதுபோலவே சிறுவர் சிறுமியர் தம் குடும்பத்தார்க்குத் தந்த சோற்று மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வரிசையாச் செல்கின்றனர்.

 

 

பண்ணன் சாதாரண ஆளல்ல ; பசிப்பிணியைப் போக்கும் மருத்துவன்.

 

 

அவனை நான் பார்த்தாக வேண்டும்.எனக்கு சொல்லுங்கள் அவன் இல்லம் அருகில் உள்ளதா ? தொலைவில் உள்ளதா ?

 

 

ஆக , சேரர் காலம் பொற்காலம் ,சோழர் காலம் பொற்காலம் ,பாண்டியர் காலம் பொற்காலம் , குப்தர் காலம் பொற்காலம் , மொகலாயர் காலம் பொற்காலம் , அவர் காலம் பொற்காலம் ,இவர் காலம் பொற்காலம் என்பதெல்லாம் காதில் பூமாலை சுற்றுகிற வேலை .உண்மையல்ல .

 

எல்லா காலத்திலும் வளமை ஒரு பக்கம் ; வறுமை ஒரு பக்கம் என இரண்டு கூறுகள் தொடர்கதையே ! ஒன்றை மட்டும் பார்த்துவிட்டு மொத்தமும் இப்படித்தான் என்பது அறியாமை . இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுதான் நேர்மையான அணுகுமுறை .

 

வளமை ஓர்புறம் வறுமை ஓர் புறம் தொடர்கதை ஆவதுவோ ?

பசிப்பிணி இல்லா பொற்காலம் நோக்கி பயணிக்க வழி காண்போம் .

 

 

 

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.


            நாலடியார் 292.

 

 

என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழிய ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

 

புறநானூறு பா. 204

 

 

குடுமி புதல்வன் பல்மான் பால்இல் வறுமுலை
சுவைத்தனன் பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ ஊழின் உள்இல்
வறுங்கலம் திரிந்து, அழக் கண்டு

புறநானூறு பா. 160

 

 ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தேலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம் தன்மகத்து முகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!”

புறநானூறு பா. 164

.

 யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வன்புலம் சேரும்
சிறு துண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றென
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே

புறநானூறு பா. 173

 

வளமை ஓர்புறம் வறுமை ஓர் புறம் தொடர்கதை ஆவதுவோ ?

பசிப்பிணி இல்லா பொற்காலம் நோக்கி பயணிக்க வழி காண்போம் .

 

 

சுபொஅ.

26/7/2022.