நடுகற்கள், கோட்டைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் :

Posted by அகத்தீ Labels:

நடுகற்கள், கோட்டைகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் :

 ஓசூர் கோட்டைதான் காதல் கோட்டை .

காதலர் தினத்தைக் கொண்டாட உலகெங்கும்

ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் ஓசூரில்தான்

காதலிக்காக கட்டப்பட்ட கோட்டையும் உள்ளது

 


 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொல்லியல் தடயம் தேடிய பயணங்களின் பதிவுத் தொகுப்பே இந்நூல்  . தேடிய தொல்லியல் செல்வங்களும் தேடலில் மூழ்கிய அறம் கிருஷ்ணனும் நிறைந்த நூல் இது எனச் சொல்லினும் பிழையில்லை.

 

இந்நூல் வழக்கமாக நான் பயணிக்காத அறிவுப் புலம், எனவே இந்நூலின் நிறை குறைகளை எடை போட்டு அறிமுகம் செய்யும் சோதனையில் நான் ஈடுபடப்போவதில்லை .பொதுவாசக மனோநிலையில் இருந்து சில செய்திகளைச் சுட்டவும் கேள்விகளை எழுப்பவுமே விழைகிறேன்.

 

கோயில்கள் , கல்வெட்டுகள் ,நடுகற்கள் , கோட்டைகள் ,நெடுங்கற்கள் , கற்திட்டைகள் ,கல்வட்டங்கள் ,பாறை ஓவியங்கள் ,அகழாய்வுகள் , கள ஆய்வுகள் என விரிந்த பரப்பில் அறம் கிருணன் பயணப்பட்டிருக்கிறார் .அது சார்ந்து அவர் மேற்கொண்ட மரபு நடை பயணம் ,கோவில் புனரமைப்பு என செய்தித் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன .

 

முதலில் 22 கோவில்கள் குறித்த தொல்லியல் செய்திகளும் படமும் தொகுக்கப் பட்டுள்ளது . இதைப் புரட்டியதும் கோயில் கோயிலாய் தேடியலைந்த  பயணமோ என முதலில் எண்ணினேன் . பிற அத்தியாயங்கள் அப்படி இல்லை தொல்லியல் பயணமே எனச் சொன்னது .

 

இந்தக் கோவில்களின் காலம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே . பெரும்பாலும் இந்த ஆலயங்கள் மன்னர்களால் கட்டப்பட்டதே .  “தேவதானம்” என்கிற பெயரில் கோவில்களுக்கு நிலமும் கிராமமும் தானமாக வழங்கப்பட்ட செய்தி பதிவாகி உள்ளது .அதுபோல் பிராமணர்களுக்கு நில தானம் வழங்கப்பட்ட செய்தியும் உள்ளது .ஆயின் இந்த  “பிரம்மதானம்” குறித்த அதிகத் தகவல்கள் இல்லை .

 

சைவ ,வைணவ கோயில்கள் பற்றிய செய்தியே பெரிதும் உள்ளது . பெரிதும் மலையும் காடும் சூழந்த இப்பரப்பில் ஆதி வழிபாடான தாய் தெய்வம் ,காவல் தெய்வம் ,நாட்டார் வழிபாடு முதலியன இந்த தொல்லியல் தேடலில் இடம் பெறவில்லையா ? அல்லது கிடைக்க வில்லையா ? சமண ,புத்த கோயில்கள் சைவ ,வைணவ கோயில்களாக மாற்றப்பட்ட நிகழவுகளாக எதுவும் இல்லையா ? ஆய்வின் பரப்பில் அது இடம் பெறவில்லையா ? இது போன்ற சில ஐயங்கள் இந்த அத்தியாயம் தொடர்பாக எழுகின்றன .

 

ஒரு செய்தி தெளிவாகிறது ; அரசர்களே கோவில்களைக் கட்டியுள்ளனர். பராமரிக்கவும் வழிசெய்துள்ளனர் . ஆக கோயில்கள் அரசு ஆளுகைக்கு உட்பட்டதே . அப்படி இருக்க இன்றைக்கு , “ இந்து அறநிலையத் துறையிடம் இருக்கும் கோயில்களை பக்தர்களிடம் அதாவது தனியாரின் கொள்ளைக்கு ஒப்படை..” என சிலர் கூப்பாடுபோடுவது  துளியளவும் நியாயமற்ற கோரிக்கை அன்றோ ?

 

செவிடபாடி ,செவிடவாடி ,சூடவாடி , ஹொசாவூரு [ ஹொசா எனில் கன்னடத்தில் புதிய எனும் பொருளுடையது ] ஹொசூரு ,ஹொசூர் , ஓசூர் [ புதிய ஊர் என்றே பொருள்] என ஆயிரம் ஆண்டுகளில் பெயர் மாறி மருவி வந்துள்ள செய்தி இந்நூலில் உள்ளது .

 

அடுத்து கல்வெட்டுகள் குறித்த அத்தியாயம் ஈர்த்தது . “ இருது கோட்டையில் பூர்வாதிராசன் தர்மத்தாழ்வார் எனும் குறுநில அரசனின் நன்மைக்காக ஆண்டாள் எனும் பெண் கட்டிய கோயில்.” எனும் செய்தி வியப்புக்குரியது .

 

 “ வயிற்றுப் பசியோடு யாரும் வாழ்ந்திடகூடாது என்று யோசித்த ஓர் மன்னன் அதற்கான அரசாணையும் ,அதனை எப்படி செயற்படுத்த வேண்டும் என்ற முறையையும் ..” பேசள அரசன் வீர ராமநாதன் 1295 ல் வெளியிட்ட ஆணை கல்வெட்டாக உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . அதில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் அந்த சூழலை உருவாக்கிய அதிகாரிகள் தலையைச் சீவ ஆணையிட்டுள்ளார் . பசிப்பிணிக்கு எதிரான போராட்டம் வலுவாக தமிழ் மண்ணில் நடைபெற்றுள்ள செய்திக்கு மேலும் ஓர் சான்றாகும் இது .

 

 “அதியமான்களின் கொடி  ‘வில்’ என்பது ஆந்திர மாநிலத்திலுள்ள லட்டிகம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு மட்டுமே சான்றாக இருந்தது .தற்போது குந்துக்கோட்டை என்ற ஊரில் இவரால் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டில்  ‘வில்கொடி’ உள்ளதாகப் பதிவு செய்துள்ளார் எனவே அதியமானின் கொடி  ‘வில்கொடி’ என்பதை இவ்விரண்டு கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன.” என்கிறார் தொல்லியல் துறை உதவி இயக்குநர் முனைவர் தி .சுப்பிரமணியன் .

 

16 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன . அதில் சில கன்னடத்திலும் உள்ளன . இவை முறைகாக வாசிக்கப்பட்டு வரலாற்று பின்புலத்தோடு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

 

அடுத்து முக்கியமானது நடுகல் . தொல் பழங்காலந்தொட்டே நடுகல் எடுக்கும் பழக்கம் தமிழ் நாட்டில் உள்ளது . அகநானூறு ,புறநானூறு போன்றவற்றிலும் நடுகல் பற்றிய செய்திகள் உண்டு . கால்நடைகளை கவர்தல் ,மீட்டல் ,பாதுகாத்தல் என வாழ்ந்த வீரர்களின் நினைவாகவும் நடுகல் நடப்படுவதுண்டு . உள்ளூர் வீரர்களைப் போற்றியும் நடுகல் உண்டு . நாட்டார் தெயவழிபாட்டின் தொடக்கமாகவும் நடுகற்களைப் பார்ப்பதுண்டு . மிகவும் தொல்கால எச்சங்களாகும் இவை .

 

கிருஷ்ணகிரி ,தருமபுரி மாவட்டங்களில்தான் அதிகமாக நடுகல் உள்ளன என்கிறார் நூலாசிரியர் .ஓசூர் ,தேன்கனிக்கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களில்தான் குவியல் குவியலாக நடுகற்கள் உள்ளன என்கிறார் .

 

“ இதுவரையிலும் தமிழகத்தில் அதிகமான நடுகல் உள்ள இடமாக தளிக்கு அருகில் உள்ள நாகொண்டா பாளையம் அறியப்பட்டுள்ளது . நாகொண்டா பாளையம் 48 , தேன்கனிக் கோட்டை அருகிலுள்ள பிக்கண பள்ளி 45 , உளிவீரணள்ளி 25 ,கொத்தூர் 26 , கெலமங்கலம் 25க்கும் மேல் ,ஒன்னல்வாடி 20 ,தேர்பேட்டை 20 , குடிசெட்லு 20 ,சின்னக் கொத்தூர் 20 -30 …’” இப்படி இன்னும் பல ஊர்களில் இருப்பதாக நூலாசிரியர் குறுப்பிடுகிறார் .நடுகற்கள் ,புலிக்குத்திக்கற்கள் ,மாடுபிடிச் சண்டை நடுகற்கள் என பலவற்றைச்  சுட்டிக்காட்டுகிறார் .

 

பொதுவாக முவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களெனவும் சொல்லிச் செல்கிறார் .குறும்பர்கள் கல்வெட்டை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் . காவேரிப் பட்டிணத்திற்கு அருகே உள்ள நெடுங்கல்லில் உள்ள நெடுங்கல்லையும் சுட்டுகிறார் .இவற்றை எல்லாம் துல்லியமாக ஆய்வு செய்தால் நம் மரபின் வேர் எவ்வளவு ஆழமானது என அறிய முடியும் .தொல்லியல் துறை செய்யுமா ?

 

கற்திட்டைகள் ,கல்வட்டங்கள் சிலவற்றையும் அடையாளம் கண்டு காட்சிப் படுத்தியுள்ளார் .இவை நடுகல் போன்றவை அல்லது அதன் தொடர்ச்சி . இவை மிக தொன்மைக் காலத்தை சுட்டுவன .இவற்றை உரியமுறையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

 

 

தமிழ்நாட்டில் அதிகமான கோட்டைகள் உள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி என்கிறார் நூலாசிரியர் .

 

 “1,கிருஷ்ணகிரி 2. ஜெகதேவி துர்க்கம் ,3.வீரபத்ரதுர்க்கம் ,4.கவல்கரா ,5. மகராஜாக்கடை ,6.பஜங்கரா ,7.கடோர்கர் ,8.திருப்பத்தூர், 9.வாணியம்பாடி ,10.கனகநகரா ,11.சுதர்சநகரா ,12.தட்டக்கல் . மேற்கண்ட கோட்டைகளில் ஆறு கோட்டைகள் தற்போது இல்லை .”

 

“16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பாராமகால் என்று குறிப்பிடப்படும் பன்னிரண்டு கோடைகளின் பெயர்களே இவை . இந்தப் பெயர்கள் அனைத்தும் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டதாகும்.”

 

“ திப்பு சுல்தான் காலத்திலும் உருவாக்கப்பட்ட மேலும் சில கோட்டைகள் : இராயக் கோட்டை , ஓசூர் கோட்டை , தேன்கனிக் கோட்டை , தளிக் கோட்டை ,மத்தூர் கோட்டை ,காவேரிப்பட்டிணம் தரக்கோட்டை , ஊடே துர்க்கம் கோட்டை , இரத்தினகிரிக் கோட்டை.” என நூலாசிரியர் பட்டியலிடுகிறார் .

 

இவ்வளவு கோட்டைகளைச் சொல்லிவிட்டு காதல் கோடையைச் சொல்லாமல் போனால் வரலாற்றுப் பிழையாகிவிடுமே !

 

ஓசூர் கோட்டைதான் காதல் கோட்டை . காதலர் தினத்தைக் கொண்டாட உலகெங்கும் ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் ஓசூரில்தான் காதலிக்காக கட்டப்பட்ட கோட்டையும் உள்ளது என்கிறார் நூலாசிரியர் .

 

சேலம் மாவட்ட ஆளுநராக  1853 – 64 காலக்கட்டத்தில் செயல்பட்ட கேப்டன் எச் ஏ பிரெட் தன் காதல் மனைவியின் விருப்பத்திற்காக ஓசூர் இராமப்பநாய்க்கன் ஏரிக்கரையில் கட்டிய மாளிகை அது . லண்டன் கெனில்வர்த் மாளிகை மாதிரி ஓர் காதல் மாளிகையை அன்றைய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் செலவில் ஹாமில்டன் எனும் பொறியாளர் மேற்பார்வையில் கட்டி முடித்தார் .

 

அவர் காதல் மனைவி இங்கு வந்து வாழ வரவே இல்லை .ஆனால் அரசு பணத்தை கையாடல் செய்த குற்றச்சாட்டில் பிரெட் சிறையில் அடைக்கப்பட்டார் . இன்று அந்த காதல் மாளிகை மண்மூடிக் கிடக்கிறது .

 

இன்னொரு காதல் சின்னம் . ஆங்கில அதிகாரியான ஜான் குளோவர் யுத்தத்தில் பெற்றோரை இழந்த அமீருன்றிஷாவை பாதுகாத்து ,திருமணம் செய்துகொடுக்கவும் முயல்கிறார் ,அப்பெண் இவரை காதலிப்பதை சொன்னதால் , மதம்மாறி திருமணமும் செய்து கொள்கிறார் .

 

மனைவி இறந்த பின்  இராயக்கோட்டை அருகே பஞ்சப்பள்ளி எனும் இடத்தில் புதைத்த இடத்தில் ஓர் நினைவுச் சின்னமும் ஈத்காவும் அமைக்கிறார் . காதலுக்கு மதம் ஏது ? மொழி ஏது ?

 

இந்த இரண்டு காதல் செய்திகளும் புனைவு எழுதாளர்கள் பார்வைக்கும் ; திரைப்பட ஆர்வலர் பார்வைக்கும் உரியதும்கூட

 

இராயக்கோட்டை அருகில் கெட்டூரில் 2500 ஆண்டுகள் பழமையான 50 க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதாக நூலாசிரியர் சுட்டுகிறார் . மேலும் சிலவற்றையும் அடையாளம் கண்டுள்ளார் .எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி மேலதிகச்  செய்திகளைத் தெரியலாம். .

 

தேன்கனிக்கோடை அருகில் பிதிரெட்டி கிராமம் அருகில் நானூறு வருட பழமையான ஆலமரம் ஐந்து ஏக்கரில் பரவி நிற்பதையும் , ஜெக்கேரியில் 500 ஆண்டு பழமையான ஆலமரம் இருப்பதையும் சுட்டிய நூலாசிரியர் அவற்றை சுற்றுலா மையமாக்க வேண்டும் எனக் கோரி இருப்பது மிகச்சரியே !

 

மயிலாடும் பாறையில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த ஒரு மீட்டர் நீளமுள்ள இரும்புவாள் ,மூன்று கால் ஜாடி பற்றி ஓர் கட்டுரை உள்ளது . இதில் 4194 ஆண்டு பழமையான இரும்பு வாள் எனவும் சுட்டுகிறார் . கெலமங்கலம் அருகே பாவடரப்பட்டி மலைக்குன்றில் இரும்பு உருக்கும் தொழிற்கூடம் செயல்பட்ட விவரத்தை இன்னொரு கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார் . நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தும் நுட்பம் தமிழ்ர்க்கு கைவரபெற்றது என்கிறார் .மேலும் ஆய்வுகள் தொடர்ந்தால் இன்னும் பல செய்திகளும் தகவல்களும் உறுதிப்படும்.

 

குறும்பர் ,இருளர் உள்ளிட்ட பல பிரிவினர் தனித்திறமை படைத்தவர்களாக பொதுவாகவே பல ஆய்வுகளில் காண்கிறோம் . இந்நூலிலும் இதற்கான குறிப்பு உண்டு .ஆயின் அச்சமூகங்கள் ஒடுக்கப்பட்டது எப்படி ? எப்போது ? யாரால் ? போன்ற கேள்விகளுக்கான விடை தேடப்பட வேண்டும்.

 

மேட்டூர் அணையைக் கொண்டாடுகிறோம் . காவிரி தண்ணீருக்காகச் சண்டை போடுகிறோம் . மேட்டூர் அணையை உருவாக்க கரையோரத்தில் இருந்த அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டதால்  வாழ்வை இழந்த மக்களின் வலியை நூலாசிரியர் பகிர்ந்திருப்பது சிறப்பு .

 

மரபு நடை பயணச் செய்திக் குறிப்புகள் ,நூலாசியர் பற்றிய குறிப்புகள் எல்லாம் இடம் பெற்றுள்ளன .

 

நூல் நெடுக பல செய்திகள் விரவிக் கிடக்கின்றன .அவற்றைக் கோர்த்து அவற்றிலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தியை காலக் கிரமமாக தொகுத்து வடிகட்டி சொல்லி இருப்பின் ,இனி வரும் ஆய்வாளர் மேலும் தொடர நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கும் .

 

இப்போது எப் ஐ ஆர் என போலிஸ் மொழியில் சொல்லப்படுவதைப் போல் இவை பெரும்பாலும் முதல் தகவல் அறிக்கை போல் உள்ளது .இனி வருவோர் இதனுள் நுழைந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்து நம் வேரின் தொன்மையை வலிமையை வெற்றியை தோல்வியை எடுத்து இயம்புவார்கள் என நம்புவோமாக !

 

நூல் நெடுக படங்கள் நிறைந்திருப்பது தனிச் சிறப்பு .ஒவ்வொரு செய்தியும் படத்துடன் பதியப்பட்டுள்ளது . ஒவ்வொரு படமும்கூட ஓர் செய்தியை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது .பாராட்டுகள்!

 

அறம் கிருஷ்ணனின் தேடலும் உழைப்பும் ஈடுபாடும் நூல் நெடுக பளிச்சிடுகிறது .பாராட்டுகள் .அவரோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் .

 

அதே சமயம் வாழ்த்துரை வழங்கிய கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவர் இரா.கோமகன்  வாழ்த்துரையில் சுட்டிக்காட்டியுள்ள எச்சரிக்கை பொருள்பொதிந்தது எனக் கருதுகிறேன்.

 

 “… வரலாற்றை மத பெருமிதமாகக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன .இனம் நிலை நிறுத்தப்பட்ட தளத்தில் மதம் என்னும் நிறுவனம் தன் நிழல் பரப்புகிறது .”

 

 “ வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மதம் என்னும் நிகழ்காலத் தளைக்குள் சிக்கவைக்கப்படுகின்றனர் ,…. தமிழ் மன்னன் என்ற கட்டமைப்புக்கு மாறாக  இந்து மன்னன் என்ற கட்டமைப்புக்குள் திணிக்கும் முயற்சி தொடங்கிவிட்டன .நிலவுடைமை அரசதிகாரம் ,அரசு பேரரசு உருவாக்கம் பற்றிய ஆய்வுகள் சிலவே .”

 

இதற்குமேல் நானும் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன் .இனப்பெருமிதம் ,மதப்பெருமிதம் என்பதைத் தாண்டி மக்களின் வாழ்வியலோடு கூடிய சமூக உண்மைகளைத் தேடிப் பயணம் செல்ல வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம் எனும் நிகழ்கால உறுத்தும் உண்மையை மறந்துவிடவே கூடாது. .

 

வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்,

ஆசிரியர் : அறம் கிருஷ்ணன்,

வெளியீடு :அறம் பதிப்பகம் , 3/336 - W ஸ்ரீ சாய் நகர் , அரசனட்டி ,மூக்கண்டப்பள்ளி , ஓசூர் – 635 126 , கிருஷ்ணகிரி மாவட்டம்.

அலைபேசி :7904509437 , 9578468122. மின்னஞ்சல் : aramhosur@gmail.com

பக்கங்கள் : 416 /  விலை : ரூ.500/

 

[ ஜூலை 8-19 ஓசூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்ட நூல் .]

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

23/7/2022.

 

 

 

0 comments :

Post a Comment