ஒவ்வொருவர் வீட்டிலும் மனதிலும் விவாதக் களம் அமைக்க...

Posted by அகத்தீ Labels:


ஒவ்வொருவர் வீட்டிலும் மனதிலும் விவாதக் களம் அமைக்க...

சு.பொ. அகத்தியலிங்கம் 
 

தமிழகப் பண்பாட்டுச் சூழல் ,வெளியீடு :தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ,11-எ , மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி ,மதுரை - 62 610 .பக் :160 , விலை : ரூ . 65 .
 
காலம் ரொம்ப மாறிப் போச்சு ; பண்பாடு ரொம்ப கெட்டுப் போச்சு என்கிற அங் கலாய்ப்பை பரவலாகக் கேட்கி றோம் . பண்பாடு குறித்த விவாதம் வேண்டும் ; ஆய்வு வேண்டும் என் கிற அக்கறை மிக்க குரலும் ஆங் காங்கே ஒலிக்கிறது . எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் அடிப் படையான கேள்வி . வெறும் கை யில் முழம் போட முடியாது .

யாராவது எங்காவது தொடங்கி வைத்தால் அதை ஒட்டியும் வெட்டியும் விரித் தும் தறித்தும் விவாதிப்பது சாத்தி யம் . த.மு.எ.க.ச தற்போது முன் கை எடுத்து ஒரு ஆவணத்தை உருவாக் கித் தந்துள்ளது .விவாதத்திற்கான வாய்ப்பு வாசலைத் திறந்துள்ளது . இது தனியொருவரின் கனவில் பூத்த ஒன்றல்ல ; கூட்டு உழைப்பில் செதுக் கப்பட்ட ஆவணம் . ஆம் , தூத்துக் குடியில் நடைபெற்ற தமுஎகச சிறப் புமாநாட்டில் 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து இறுதி யாக்கிய கூட்டு ஆவணம் . இதன் சிறப்பும் பலமும் இதுவே .இந்த ஆவணம் எட்டு அத்தி யாயங்களைக் கொண்டது .

முதல் அத்தியாயம் மட்டுமே அருணன் பெயரில் வெளியாகியுள்ளது . மற் றவை கூட்டுப் படைப்பென ஊகிக் கலாம். ‘பண்பாட்டைக் கட்டமைக் கும் கூறுகள்’ என்கிற முதல் பகுதி ஆவ ணத்தின் நுழைவாயில் போல் அமைந்துள்ளது. இதில் பண்பாடு குறித்த பொது வரையறையும் செல்ல வேண்டிய திசை வழியும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது . “ தமிழகத்தில் இன்று நிலவுகிற வாழ்க்கை முறை கள் மீது அந்தப் பொதுப் பண்பாட் டின் மீது நமக்கு மரியாதை இல்லை தான்.ஆனால் மாற்றுப் பண்பாடு என்பது அந்தரத்தில் இருந்து இறங்கி வருவதில்லை என்பதை மறந்து விடக்கூடாது. அது ஏற்கனவே உள்ள பண்பாட்டின் நல்ல கூறு களை எடுத்துக் கொண்டு ,நவீன வாழ்வு தரும் புதிய நல்ல கூறுகளைச் சேர்த் துக் கொண்டு பரிணமிப்பது.”இந்த வரையறை த.மு.எ.க.ச வின் நேர்மை யான நிதானமான அடிவைப்பின் இலக்கணம் எனில் மிகை அல்ல.

‘தாய் மொழிக்கல்வி’ , ‘மதவெறி அரசியல்’ , ‘சாதியப் பாகுபாடு’ , ‘பெண் கள் மீதான வன்முறை’ , ‘ஊடக அரசி யல்’ , ‘மாற்றுப் பண்பாடு’ என ஆறு தளங்களில் பண்பாட்டு விவாதம் முன்னெடுக்கப்பட்டிருகிறது . இவை அனைத்தும் இன்றைய அரசியல் பொருளியல் வாழ்வோடு நேரடியாகப் பிணைந்தவை .ஆக , இவ்விவாதம் பண்பாட்டு அரசியல் விவாதமாக நீட்சி பெறுவது தவிர்க்க இயலாதது .தாய்மொழிக் கல்வி குறித்த வரலாற்றுப் பின்புலத்தோடும் இன் றைய நெருக்கடியோடும் இணைந்து பேசும் இந்த ஆவணம் ; செய்ய வேண் டியது என்ன என்பதையும் பட்டியலிடு கிறது .
ஆங்கிலக் கல்வி மீதான மோக மும் ஈர்ப்பும் ஏற்படக் காரணம் என்ன ? அதற்கான சமூக உளவியலின் வேர் எது ? உலக மயமாக்கலின் விளைவன் றோ இது . இதை இன்னும் உரக்க விவா திக்கவேண்டும். கல்வியில் மட்டு மல்ல எல்லா இடங்களிலும் தம்மொழி பெரும் சிதைவுக்கு ஆளாவதில் உல கமயப் பண்பாட்டு ஆதிக்கமும் ஒரு கூறல்லவா ? இது குறித்தும் பேசியாக வேண்டுமே!

‘மதவெறி அரசியலும் சேதுசமுத் திர திட்டமும்” என்கிற விவாதம் பண்பாட்டுத் தளத்திலும் அரசியல் தளத்திலும் காத்திரமானது. அவசியமா னது. இந்துத்துவ அரசியல் மூர்க்கம் பெற்று வரும் வேளையில் .விரிவாக வும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியது ; அதே சமயம் இஸ்லாமிய, கிறிஸ்த்துவ , இதர மத வெறியையும் சரியான கோணத்தில் சுட்டிக்காட்டாவிடில் இந்துத்துவ வெறியர்களுக்கு நாமே இடம் கொடுத் ததாகி விடும் . இதனையும் சேர்த்து இப்பகுதி கூர்மைப்படுத்தப்பட வேண் டும்.

சாதியப் பாகுபாடும் வன்கொடு மைகளும் என்கிற பகுதி காலத்தின் கட்டாயம். “சாதியத்தைப் புரிந்து கொள்ளாமல் இந்திய சமூகத்தை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது . சமப்படுத்தவும் முடியாது.
 ” என ஆவணம் சரியாக கணிக்கிறது . சாதி எதிர்ப்பை வெறும் பார்ப்பன எதிர்ப்பாக சுருக்கிவிட்ட தமிழகச் சூழல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது . சாதியத்தைப் பாதுகாப்பதில் சடங்குகளின் பாத்திரம் குறித்து பேசப்பட்டுள்ளது ; இது குறித்து தனித்தே விவாதிக்க வேண்டி யுள்ளது .“ சாதியப் படிநிலையை வெறும் ரத்தக்கலப்பினால் மட்டுமே குலைத்து விட முடியாது என்பதைப் போலவே ரத்தக் கலப்பு நிகழாமலும் குலைத்து விட முடியாது ”எனவும் ; “தீண்டா மைக்கு எதிரான போராட்டத்தை நிலத் தில் மட்டுமல்ல மனத்திலும் நடத்த வேண் டும்”எனவும் ஆவணம் குறிப்பிட்டி ருப்பது கவனத்திற்குரியது .அதுவும் தருமபுரி நிகழ்விற்குப் பின் சாதியத்துக் கெதிரான போர் தமிழக பண்பாட்டுச் சூழலில் முக்கிய இடத்தைப் பெறு கின்றதன்றோ!சாதியமும் பெண்கள் மீதான வன் முறையும் நாம் மானுடன் எனக் கூறிக் கொள்ளும் அருகதையையே பறித்து விடுகிறது .

“மனம் எனும் பதுங்கு குழி களுக்குள் ஆளும் வர்க்க சாதிய சித் தாந்தத்தைச் சுமந்து கொண்டு பெண் விடுதலையையோ சமூக விடுதலை யையோ நோக்கி நம்மால் நகரத்தான் முடியுமா ? கொடியை ஏற்றத்தான் முடி யுமா ? அணுகுமுறை மட்டுமல்ல அடிப் படையே மாற்றப்பட வேண்டும்” என்கிற தெளிவான புரிதலோடு புறம், அகம் என இருநிலையிலும் ஆணாதிக் கத்தை அம்பலப்படுத்தி மாற்றுக்கான புள்ளிகளையும் முன்வைத்துள்ளது . வலுவான விவாதம் தேவை.கருத்துருவாக்கத்தில் இன்று பெரும் பங்காற்றும் ஊடக அரசியல் குறித்த விவாதம் துவக்கப்பட்டுள்ளது . அது போல் மாற்றுப் பண்பாட்டுக்கான சில முன்வைப்புகளும் உள்ளன .

இது தொடக்கமே . போதுமானதல்ல .பெண் களுக்கான பொதுவெளி கோயிலும் வழிபாடுகளுமே என குறுக்கப்பட் டுள்ள சமூகச் சூழலில் ; கலச வேள்வி , விளக்கு பூஜை , கூட்டுப் பிரார்த் தனை என பெண்களை மதவெறி சக்தி கள் திரட்டும் வேளையில் ; கூடிக்க ளிக்க பெண்களுக்கு முற்போக்காளர் கள் முன்வைக்கும் மாற்று என்ன என்ற கேள்வி எழுகிறது .பண்டிகைகள் , கொண்டாட்டங்கள் ஒரு சமூகத் தேவை . இவை இல்லாத உலகம் வெறு மையாக இருக்கும் . மதவெறி சக்திக ளிடமிருந்து மீட்கப்பட மக்களுக் கான புதிய கொண்டாட்டங்கள் உளப்பூர் வமாய் குடும்பம் குடும்பமாய் கொண் டாடும் நிகழ்வுகள் பற்றிய விவாதமும் முன்னெடுக்கப்பட வேண் டும்.உலகமயம் உருவாக்கியுள்ள நுகர்வுவெறிப் பண்பாடும் பண , பதவி மோகச் சூழலும் எல்லா பண்பாட்டுக் கூறுகள் மீதும் மிகவும் ஆழமான விரி வான தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறபோது அதைப்பற்றிப் பேசாமல் பண்பாட்டு விவாதம் முழுமையடை யாது ; கூர்மைபெறாது
. இதுவும் கல்வி குறித்த விவாதமும் பின்னர் மேற் கொள்ளப்படும் என முன்னுரையில் தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் வாக்குறுதி தந்துள் ளார். விரைந்து செய்ய வேண்டும் என்பது நம் அவா.மொத்தத்தில் காற்றில் முழம் போடாமல் ; வெறும் வாயை மெல்லாமல் கொஞ்சம் அவல் கொடுத்திருக்கிறது இந்த ஆவணம் . சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்த ஆவணத் தைப் படிக்க வேண்டும் - விவாதிக்க வேண்டும் ; புதிய மதச்சார்பற்ற ஜன நாயகப் பண்பாட்டுக்கான போராட்டம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு வர் மனதிலும் பக்குவமாய் அதேநேரம் சமரசமின்றி நடத்தப்பட வேண்டும். அதற்கு களம் அமைத்துள்ளது இந்த ஆவணம்.










 
 

சட்டமும் தீர்வல்ல ; மதபோதனையும் மாற்றல்ல..

Posted by அகத்தீ Labels:


சட்டமும் தீர்வல்ல;
மதபோதனையும் மாற்றல்ல...

சு.பொ. அகத்தியலிங்கம்
 
“பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய 16-18 வயதுக்கு உள்பட்ட சிறார்களையும் இந்திய குற்றவியல் சட்டத் தின் கீழ் கடுமையாகத் தண்டிக்க வேண் டும் என்ற கோரிக்கை தற்போது வலுப் பெற்று வருகிறது. ஆனால், சட்டத்தின் மூலம் மட்டுமே இத்தகைய குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவதைத் தடுத்துவிட முடி யுமா என்ற கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் கூற முடியாத நிலையே உள்ளது.”- இவை “ சட்டம் இதற்குத் தீர்வாகாது” எனற தலைப்பில் நா.குருசாமி தினமணி நாளேட் டில் எழுதியுள்ள கட்டுரையின் முதல் பத்தி. பொதுவாக இதுசரிதான். ஆனால் இதற்கு மாற்றாக நா.குருசாமி முன்மொழிகிற யோச னைகள் பொருத்தமற்றவையாகவும் நடை முறை சாத்தியமற்றதாகவும் உள்ளன.

நா.குருசாமி கூறுகிறார், “மாறி வரும் இத்தகைய சூழல்களால், 18 வயதுக்கு உள் பட்ட சிறார்கள் தவறான பாதைக்கு திசை மாறிச் செல்கின்றனர். வெறும் சட்டங்களால் மட்டும் இத்தகைய சிறார்களை நல்வழிக் குத் திருப்பிவிட முடியாது. நமது அடிப்ப டைக் கல்வி முறையிலும், நமது கூட்டுக் குடும்ப முறையிலும் முன்னர் இருந்த நல்ல விஷயங்களை மீளாய்வு செய்து, அவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசர அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகள் இடம் பெற வேண்டும். அனை த்து மதங்களின் ஆன்மிக நூல்களில் இடம் பெற்றுள்ள நல்ல கருத்துகள் மாணவர் களின் மனங்களில் ஆழமாகப் பதியும் வகை யில் அவற்றைக் கற்றுக் கொடுக்க வேண் டும். இதற்காக, கல்வியில் சிறந்து விளங்கும் நல்லாசிரியர்களையும் தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்.”இன்றைய கல்விமுறையில் மாற்றங்கள் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் நேற்றைய கல்வி முறையோ, திண்ணைக் கல்விமுறையோ, குருகுல முறையோ இதற்கு மாற்றல்ல. சாதிய ஆதிக்க உணர்வுக்கு அடிபணிந்து போவதற்கும் பெண்ணடிமை சமூக ஒழுங்கை கட்டுக்குலையாமல் காப்பதற்குமே நேற் றைய கல்வி முறை பாடுபட்டது. இன் றைக்கு தலைகீழ் மாற்றம் ஏற்படாவிட்டா லும் நிலைமையில் முன்னேற்றம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆகவே இனி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வழிகாண வேண்டுமே தவிர பின்னுக்குப் போகும் பேச்சுக்கே இடம் இல்லை. பொதுவாக சீரழிவு பண்பாட்டை எதிர் கொள்ள ‘ நீதி நெறி போதனை’, ‘ஆன்மீகக் கல்வி’, ‘கூட்டுக் குடும்ப வாழ்வை மீட்டெ டுத்தல்’ எனப் பேசுவது வாடிக்கையாகி விட்டது.

ஆனால் அது தீர்வை நோக்கிய அடிவைப்பு ஆகாது. முதலாவதாக நீதி நெறி போதனைகளை எடுத்துக்கொள்வோம். பொய்சொல்லாதே, திருடாதே, புறங்கூறாதே என பொதுவாக கூறிச் செல்வது மட்டுமே நீதிபோதனை ஆகிவிடுமா? அவை மட்டும் போதுமா? இன்றைய ஏற்ற தாழ்வான சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்க உரு வாக்கப்பட்டவைதானே நடப்பிலுள்ள நீதி போதனைகள். பெண்களை சகமனுஷியாக மதிக்காதவைதானே நம் முன் குவிந்து கிடக்கும் நீதி நூல்கள். சாதிய ஆதிக்கத் தைக் கேள்வி கேட்கத் துணியாதவை என்பது மட்டுமல்ல; கேள்வி கேட்பதே பாவம் என்றும், குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் போதிக்கும் நேற்றைய நீதி நூல்கள் இன்றைக்கு பயன்படுமா? நாலடி யார், ஏலாதி இவற்றில் நாலுவரிச் செய்யுள் ஒவ்வொன்று தவிர வேறெந்த நீதி நூல் களும் பெண்கல்வி பற்றி பேசவில்லையே! ஆகச்சிறந்த வாழ்வியல் நூலான திருக் குறள் கூட - பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் என முரசறைந்த திருக்குறள் கூட -பெண்கல்வி பெண்சமத்துவம் பேசவில் லையே! அது வள்ளுவன் குற்றமல்ல - நீதிநூல்கள் யாத்தவர்கள் குற்றமல்ல; அவர் கள் வாழ்ந்த காலத்தின் குற்றம். காலத்தை மீறிய நீதி எது? இன்றைய தேவைக்கும் சவால்களுக்கும் ஈடுகொடுக்கும் சமத்துவம் போதிக்கும் நீதி நெறிகள் - அறிவியல் ரீதி யாக வாழ்வை அணுகும் நீதி நெறிகள் - சிந்தனைகள் -கதைகள் போதுமான அளவு இல்லை என்பது மலை போன்ற உண்மை அன்றோ! சமூக அக்கறையுள் ளோர் அத்திசையில் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆக இப்படி சமூகவெற் றிடம் உள்ள இன்றைய சூழலில் பொதுவாக நீதிபோதனை என்பது புதிய இளைஞரை வார்க்க உதவாது. அடுத்து மத போதனை அல்லது ஆன் மீக போதனை என்பது தீர்வாகுமா? ஆகவே ஆகாது.

இந்து மதமோ இஸ்லாமிய மதமோ கிறுத்துவ மதமோ வேறெந்த மதமோ பெண் களை எப்படிப் பார்க்கின்றது? ஆண் களுக்கு அடங்கி ஒடுங்கி வாழவேண்டிய அடிமைகளாய்த்தான் மதங்கள் பெண் களைக் காட்டுகின்றன. பெண்களைப் போகப் பொருளாகத்தானே அனைத்து மதங் களும் சித்தரிக்கின்றன. பெண் சமத்து வத்தை எந்த மதம் அங்கீகரிக்கிறது? கேள்வி கேட்பதை எந்த மதநூல் ஏற்கிறது. நம்பு, விசுவாசி எனக் கட்டளை அல்லவா இடுகிறது. சாதி, இனம், நிறம் இவற்றாலோ அல்லது வேறு எதன் பேராலோ பேதப்படுத் துவதையும் கூறுபோடுவதையும் மதம் நியாயப்படுத்துகிறது. சுரண்டலை, ஆதிக் கத்தை, அடக்குமுறையை மவுனமாக சகித் துக்கொள்ள மதநூல்களன்றோ போதிக் கிறது. தலைவிதி, சொர்க்கம், நியாயத்தீர்ப்பு என மக்களை மயக்கி; கற்பனையான மயக் கத்தில் நிகழ்கால நரகத்தின் காரணகர்த் தாக்களை அடையாளங்காணாமலோ - கண்டாலும் எதிர்க்காமலோ இருக்க வன்றோ மதபோதனைகள் துணை செய் கின்றன.
மத நம்பிக்கையின் அளவு அதி கரிக்கும் போது பிறமதத்தை இகழ்வாகப் பார்ப்பதில் தொடங்கி மத காழ்ப்புணர்வாய் மதவெறியாய் மாறுவதை நாளும் அனுபவம் சுட்டுகிறதே. மத போதனை அல்லது ஆன் மீக போதனை விஷமுறிவல்ல விஷமே அதுவன்றோ!நுகர்வுவெறியும், பணமோகமும் உச்சத் தில் இருக்கும் சமூகத்தில் கல்விமட்டும் வேறுமாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியுமா? இன்றைய கல்வி முறையின் அடிப்படைக்கோளாறு அதுதானே! ஒவ் வொரு மாணவனின் ஆர்வமும் ஈடுபாடும் வெவ்வேறாக இருக்கும் அதனை சமூகமும் குடும்பமும் அங்கீகரிக்கிறதா? சில குறிப் பிட்ட துறைகள், படிப்புகள் மட்டுமே உயர்ந் தது. பொன் முட்டையிடும் வாத்து என்று சமூகப் பொதுப் புத்தியில் உறைந்து போயுள் ளதால். வளரிளம் பருவ இளைஞர் / ஆண்/பெண்களின் படைப்பூக்கமும் ஆர்வ ஈடு பாடும் முளைவிடாமல் பெற்றோராலும் சமூகச்சூழலாலும் நசுக்கப்படுகிறது. ஒடுக் கப்பட்ட மனம் வேறுவடிகால் தேடுகிறது.

போதையும் இதர தீய ஒழுக்கங்களும் மண்டுகின்றன. தவறான பாதையில் துரத் துகின்றன. அது மட்டுமல்ல நமது கல்வி கேள்வி கேட்க கற்றுக்கொடுக்கிறதா? கொடுமையையை எதிர்த்து நிற்க கற்றுக் கொடுக்கிறதா? பாலின சமத்துவத்தை, மனித உரிமையை, உழைப்பின் பெருமை யை, சாதி மறுப்பை நமது கல்வியும் சமூக மும் அடிஉரமாக இடுகின்றதா? இல்லையே இது குறித்துத்தான் நாம் கவலைப் பட்டாக வேண்டும். பாவ்லோ பிரைரோ போன்ற சிந் தனையாளர்களை நாடவேண்டுமே தவிர பழமையில் பயணித்து பயனில்லை. “இது யாருடைய வகுப்பறை” என்கிற கேள்வி தான் இன்றைய கல்வியில் கேட்க வேண் டிய அடிப்படைக் கேள்வி. நாம் விரிவாகவும் ஆழமாகவும் நடத்த வேண்டிய விவாதத் தின் மையப்புள்ளி இதுதான். ஆயிஷா நட ராசனின் நூல் அந்த விவாதத்தை துவக்கி உள்ளது. அவர் வாதம் அனைத்தையும் ஏற்கலாம். எதிர்க்கலாம். கேள்விக்கு உட் படுத்தலாம். வெறும் கையால் முழம் போடு வதைவிட இது மேலானதல்லவா? இந்த விவாதம் தான் வளரிளம் பருவத்தினரை சரியான திசையில் சுதந்திரமாக நடை போடச்செய்ய பாதை துலக்கும். நா.குருசாமி கூறும்பாதைக்கு மாற்றாக இதுவே இருக் கும்.அடுத்து குருசாமி கூறுகிற இன்னொரு முக்கியமான அம்சம் கூட்டுக்குடும்பம். அவர் கூறுகிறார், “இவை எல்லாவற்றுக் கும் மேலாக, நமது கூட்டுக் குடும்ப முறை மீண்டும் தழைத்தோங்க நம்மால் இயன் றதைச் செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். பெற்றோர் மட்டுமல்லாது தாத்தா, பாட்டி, மற்றும் ஏனைய உறவினர் களின் அரவணைப்பில் வளரும் சிறார்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு தடுக்கப்படும்! கடுமையான சட்டங்களால் அல்ல.”இதனை மற்ற அம்சங்களைப் போல எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் யதார்த்தம் வேறெதிராகவே உள்ளது.

சொத் துகள் கைமாறாமல் தலைமுறை தலை முறையாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் -சாதியக் கட்டுமானம் குலையாமல் காப்பது -விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு தேவைப்பட்ட உழைப்பு இலவசமாக கிடைப்பது - பெண்கள் ஆண்களுக்கு அடி பணிந்து வாழ்வது என்கிற நிலப்பிரபுத்துவ தேவைகளின் மீதுதான் கூட்டுக் குடும்பம் நிலைகொண்டது. இன்றைய சமூகபொரு ளாதார வாழ்க்கைச் சூழலும் - பாலின சமத்துவத் தேவையும் கூட்டுக் குடும்பத் துக்கு சாதகமாக இல்லை. இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையான மனித உரிமை, பாலின சமத்துவம், சாதிய மறுப்பு போன்ற உயரிய விழுமியங்களோடு கூட்டுக்குடும்ப வாழ்வு அமையின் யாருக்கும் அட்டி யில்லை. அப்படி இல்லாத போது தனிக் குடும்பம் தவறல்ல.அது இன்றைய யதார்த் தம். கூட்டுக்குடும்பமோ, தனிக்குடும்பமோ எதுவாயினும் சண்டை சச்சரவில்லாமல் - ஈகோ எனப்படுகிற அகம் தலைதூக்காமல் - சொத்துக்காக அடித்துக் கொள்ளாமல் - ஜனநாயக பூர்வமாக உறவுகளைப் பேண முடிந்தால் அதுவே குழந்தைகளுக்கு நம் பிக்கையான சூழலை - பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.

பிள்ளைகள் குரலுக்கு செவி கொடுங்கள் - அவர்களின் படைப் பூக்கத்திற்கு தோள்கொடுங்கள் - கேள்வி கேட்க அனுமதியுங்கள் -அவர்களின் விருப்ப ஈடுபாட்டிற்கு வாய்ப்பளியுங்கள் - பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள் -உங்கள் நம்பிக்கையும் சமூக எதிர்பார்ப்பும் வீண்போகாது. தோளுக்கு மிஞ்சியவன் /மிஞ்சியவள் தோழர் மறவாதீர்!