மார்க்ஸை பயில்வது என்பதன் பொருள்

Posted by அகத்தீ Labels:




மார்க்சை பயில்வது என்பதன் பொருள்...



சு.பொ. அகத்தியலிங்கம்

 
   " நாம் ஒரு புதிய கொள்கையுடன் ; இதுதான் உண்மை - இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக்கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை . உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்" இப்படிச் சொன்னவர் கார்ல் மார்க்ஸ்.
அந்த மார்க்ஸையும் அவர் தந்த சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தையும் ஐயம்திரிபற கற்பது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன்நிபந்தனை ஆகிறது. அதிலும் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூப்பாடுபோடுகிறவர்களுக்கு மத்தியில் - மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக்கி மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகக் கூர்தீட்டுகிறவர்களுக்கு மத்தியில் செயல்படுகிற முன்னணிப் படைவீரர்கள் மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தின் இயங்கியல் சாரத்தை உட்கிரகிப்பது இன்றைக்கு மிகமிக அவசியம்.

அதற்காக மார்க்ஸைப் பயில வேண்டும் . இதன் பொருள் மார்க்ஸை தேவதூதனின் வருகையைப் போல் தரிசிக்க முயல்வது அல்ல. மார்க்ஸ் என்னும் மாமேதை எப்படி உருவானார் என்பதை வரலாற்று இயங்கியல் கண்ணோட்ட்த்தில் பயில்வது தேவைகிறது . அதற்கு டேவிட் ரியாஜெனோவ் எழுதிய  மார்க்ஸ் எங்கெல்ஸ் ;வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம்  என்ற நூல் பெரிதும் உதவும். அதுபோல மார்க்சியத்தை ஒரு சமூக அறிவியலாகப் பயின்றிட விக்டர் ஆஃபேன் ஸீவ் எழுதிய  மார்க்சிய லெனினிய தத்துவம் நிச்சயம் கைகொடுக்கும்.

சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கைவரலாறு ஆரம்ப நிலையில் மார்க்ஸ் குறித்த எழுச்சியூட்டும் சிந்தனையை நெஞ்சில் விதைக்கும் ஐயமில்லை. ஆனால் களப்போராளிகளுக்கு அதுமட்டுமே போதுமானதல்ல மேலும் ஆழமான புரிதல் தேவை. அதற்கு கருவியாக பல நூல்கள் வந்துள்ளன . ஹென்ரி வோல்கவ் எழுதிய கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாற்றைக் கூறும்   மார்க்ஸ் பிறந்தார்  எனும் நூல் , ஒண்பது ஆசிரியர்கள் கூட்டாகத் தொகுத்த   கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு  உள்ளிட நூல்களை நுட்பமாக வாசிப்பதும் அதன் தொடர்ச்சியாக இந்நூலை வாசிப்பதும் புரிதலில் தெளிவையும் விசாலப்பார்வையையும் உருவாக்கும்.

 மார்க்ஸும் எங்கெல்ஸும் எவ்வாறான நிலைமைகளிலும் சுற்றுச்சூழல்களிலும் வளர்ந்து சிந்தனை  பெற்றனர் என்பதை கூர்மையாகப் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்வோம் .  "ஒவ்வொரு தனிமனிதனும் , குறிப்பிட்ட சமூகச்சூழலின் படைப்பே ஆவான்  சாதனை ஒன்றை உருவாக்கும் எந்த ஒரு மேதையும் அதை தனக்கு முன்னால் அடையப்பெற்ற சாதனைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்குகிறான் . சூன்யத்திலிருந்து அவன் உதிக்கவில்லை"  இவ்வாறு கூறும் ரியாக்ஜெனோவ் 9 அத்தியாயங்களில் வரலாறு எப்படி மார்க்ஸை செதுக்கியது ? ; வரலாற்றை  பாட்டாளிவர்க்கத்துக்கு சாதகமாக மடைமாற்ற சிந்தனைக் களத்திலும் செயல் களத்திலும் எவ்வாறு மார்க்ஸ் இயங்கினார்  இதில் எங்கெல்ஸின் பாத்திரம் யாது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைகண்டிருக்கிறார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துகள் அனைத்தையும் சேகரித்து தொகுத்து ஆவணப்படுத்தும் பணியில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என்ற முறையில் மார்க்சின் சிந்தனையின் பரிணாமத்தை நன்கு உட்கிரகித்தவர் ரியாஜெனோவ் ; எனவே அவரால் மார்க்ஸை மிகச்சரியான கோணத்தில் இந்நூலில் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது .

முதல் அத்தியாயத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கம் மேலோங்கி வளந்த காலகட்ட்த்தில் மார்க்ஸ் , எங்கெல்ஸ் 20,25 வயதுப் பருவத்தினராய் அதை எதிர்கொண்டனர் , அது அவர்கள் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதென வாதிடுகிறார்.

ஜெர்மனியில் புரட்சிகர இயக்கத்தின் தொடக்க நாட்கள் குறித்த அலசலோடு  எனக்கு கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது  என்று மார்கஸ் கூறிய காலகட்டத்தினையும்  டாய்ட்ஷ் பிரான் ஷென் ஜார்புச்சேர் என்கிற ஏட்டில் எழுதத்துவங்கிய காலதிலேயே 1843 புரட்சிகர ஜனநாயகவாதி என்பதிலிருந்து கம்யூனிஸ் சிந்தனைக்கு மார்க்ஸ் மாறத்துவங்கினார்  இரண்டாவது அத்தியாயத்தில் நூலாசிரியர் விவரிக்கிறார்.என்பதையும்

இளம் ஹெகலியாராக கல்லுரி நாட்களில் விளங்கிய மார்க்ஸ்  கருத்துமோதலில் விமர்சனங்களூடே ஹெகலையும் பியர்பாக்கையும் மறுத்தும் உட்கொண்டும் புரட்சிகர தத்துவத்தை நோக்கி படிமலர்ச்சி அடைந்த வரலாற்றை மூன்றாம் அத்தியாயம் பேசுகிறது.

கம்யூனிஸ்ட் லீக்கின் உருவாக்கம் அதில் மார்க்சின் செயலூக்கமிக்க பாத்திரம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் தோற்றம் இவை குறித்து பேசும் நாலாவது அத்தியாயம் சுவைமிக்கது மட்டுமல்ல நிறைய தகவல்களையும் பரிசீலனைகளையும் உள்ளடக்கியது . மார்க்சின் அமைப்பு சார்ந்த பணிகள் ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் நூலாசிரியர் அக்குறையை இந்நூலில் நிறைவு செய்துள்ளார்.

1848 ன் ஜெர்மன் புரட்சி குறித்து அலசும் 5 வது அத்தியாயம் புரட்சியின் தோல்வி  கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்பட்டது என புதிய சூழலை சரியாகப் படம் பிடிக்கிறது . அதில் மார்க்ஸின் பாத்திரம் ஒரு கட்டத்தில் அவரது தவறான அனுமானம், அதிலிருந்து மீண்டது என மார்க்சின் சிந்தனை வளர்ச்சி நன்கு பதியப்பட்டுள்ளது.

1850  களில் பிற்போக்குவாதம் தலைதூக்கிய பின்னணியில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்த்திய தத்துவப்போர் மிகமுக்கியமானதாகும் . முதல் அகிலத்தின் தோன்றிய சூழல் அதில் மார்க்சின் பாத்திரம்  1867-68 நெருக்கடி  தத்துவத்தின் வறுமை , தூரிங்கிற்கு மறுப்பு போன்ற நூல்கள் எப்படி தத்துவ மோதலில் மலர்ந்தன  அவை எப்படி சரியான கண்ணோட்ட்த்தை வளர்தெடுக்க உதவின  மூலதனம் நூல் எவ்வாறு கருக்கொண்டு வளர்ந்தது  எங்கெல்ஸ் மார்க்ஸ் உறவின் ஆழம் எத்தகையது  சிந்தனைக்களத்தில் இருவரும் எப்படி இணைஇசையமைப்பாளர்கள் போல் செயல்பட்டனர் என விரிந்த சித்திரத்தை அடுத்தடுத்து வந்த அத்தியாயங்களில் நூலாசிரியர் திறம்பட விளக்கி உள்ளார்.

இறுதி அத்தியாயம் இருவரும் நமக்கு விட்டுச் சென்றுள்ள கருத்துப் பொக்கிஷத்தை அடையாளம் காட்டுகிறது . கருத்துகளோடு மோதி மோதித்தான் மார்க்சியம் எனும் சமூக அறிவியல் படிநிலை வளர்ச்சி பெற்றது என்பதையும் ; ஆகவே அந்த அறிவு ஊற்று மேலும் மேலும் சுரக்கும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மார்க்சிய அறிவியலை வெறுமே தத்துவவியாக்கியானமாகப் பயிலாமல் அறிவியலாகப் பயில்வது இன்றையத் தேவை. அதற்கு இந்நூலைத் தொடர்ந்து விக்டர் ஆல்பேன் ஸீவ் எழுதிய மார்க்சிய லெனினிய தத்துவம் என்ற நூலை வாசிப்பது அவசியம். இந்நூல் வழக்கமான பாணியில் நெடுங்கட்டுரைகளாக அமையாமல் பாடக்குறிப்புபோல் வரைபடங்கள் , அட்டவணைகள் , விளக்கப்படங்கள் என அமைந்துள்ளதால் வாசகர்கள் எளிதில் உள்வாங்க இயலும்.

மேலும், "மார்க்சியத் தத்துவத்தை முழுமையடைந்த மீறக்கூடாத ஒன்றாக நாம் கருதவில்லை; மாறாக அது அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே இட்டுள்ளது என்று தெளிவாகவே உள்ளோம் ; சோஷலிஸ்டுகள் , வாழ்க்கையின் வேகத்துடன் இணைந்து செல்ல விரும்பினால் , அவர்கள் அந்த அறிவியலை அனைத்து திசைகளிலிருந்தும் வளர்க்க வேண்டும் . இந்த தத்துவம் பொதுவான வழிகாட்டும் கொள்கையை மட்டும் அளிக்கிறது ; அக்கொள்கைகள் இங்கிலாந்தில் பிரான்ஸிலிருந்து வேறுவிதமாகாவும், பிரான்சில் ஜெர்மனியிலிருந்து வேறுவிதமாகவும் , ஜெர்மனியில் ரஷ்யாவிலிருந்து வேறுவிதமாகவும் பொருத்திப் பார்க்கப்பட்டன"  என்கிறார் லெனின்.

தமிழக மற்றும் இந்திய தத்துவ மரபை உள்வாங்கி இதுபோல் பொருத்திப் பார்த்து ஓர் நூலாக்கித் தருவோன் இந்திய  தமிழக பாட்டாளி வர்க்கத்திற்கு பெரும் தொண்டாற்றியவனாவான் . அத்துடன் விஞ்ஞானி ஜெயராமன் எழுதி ஆங்கில மார்க்ஸிஸ்ட் காலாண்டிதழில் வெளிவந்த  - மார்க்சிய தத்துவத்தின் இன்றைய பொருத்தப்பாடு குறித்த  இன்றைய காலகட்டம் வரையிலான அறிவியல் வளர்ச்சியோடு இணைந்த  அந்தக் கட்டுரையும் உடனே தமிழாக்கம் செய்யபட்டு வெளியிடப்படவேண்டும். ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய  மார்க்சிய தத்துவம் : ஓர் தொடக்க பாடம் , எமிலி பார்ன்ஸ் எழுதிய மார்க்சிய தத்துவம் உள்ளிட்ட நூல்களையும் தேடித்தேடி படிப்பதும் பதிப்பிப்பதும் மிகமிக அவசியம்.

மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல செயலுக்கான வழிகாட்டி என்று திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி ஆனந்தப் படுவது மட்டும் போதாது ; மாறாக அந்த அறிவியலை இப்போதையத் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப படிப்பதும் உள்வாங்குவதும் பிரயோகிப்பதும் அவசியம். ஆம் அந்தப் பயணத்தின் ஒரு கூறாக இவ்விரு நூல்களைப் பழுதறக் கற்போம் முதலில்.

1 மார்க்ஸ் எங்கெல்ஸ் : வாழ்வும் எழுத்தும்
ஆசிரியர் : டேவிட் ரியாஜெனோவ்,
தமிழில் : அபராஜிதன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ தெரு , தேனாம்பேடை,,
சென்னை 600 018.
பக் :256 , விலை : ரூ.160.

2 மார்க்சிய லெனினிய தத்துவம்
ஆசிரியர் : விக்டர் ஆஃபேன் ஸீவ்,
தமிழில் : ஆர்.பெரியசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ தெரு , தேனாம்பேடை,, சென்னை 600 018.
பக் : 168 , விலை : ரூ.200.
   
   

ஒவ்வொரு நொடியையும்…

Posted by அகத்தீ Labels:

ஒவ்வொரு நொடியையும்
[ அகவை அறுபதில் ஒரிரு வார்த்தைகள் ]


இன்று[ 15 ஜூன் 2013 ] எனக்கு அகவை அறுபது . பிறந்த நாளன்று தமிழ் நாட்டுக்கு வெளியேபெங்களூரில் வசிக்க நேர்வது இதுவே முதல் முறை . வாழ்வில் இன்று இன்னொரு நாளே . ஆயினும் முதுமையின் தலைவாசலில் நுழைவது வளர்ச்சியின் அடுத்தகட்டமல்லவா ?அந்த பூரிப்பு என்னுள் சில்லென்று வருடுகிறது.

 2011 தொடங்கி பிறந்த நாளன்று சில செய்திகளை தெரிவிப்பதை வாடிக்கையாக்கி உள்ளேன் .அகவை 58 ல் ஓய்வெனப்படுவது யாதெனக்கேட்டு என் கருத்துகளை பதிவிட்டிருந்தேன். அகவை 59 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவருவது குறித்து திருப்தி தெரிவித்திருந்தேன் .


http://akatheee.blogspot.in/2012/06/2.html

 ஆம், இப்போது நான் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினராகவோ - தீக்கதிர் இணை ஆசிரியராகவோ - வேறு எந்த முக்கிய பொறுப்பிலும் இல்லை . என் சுயவிருப்பத்தினை ஏற்று என்னை இவற்றிலிருந்து விடுவித்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் - கட்சியின் முழுநேர ஊழியராகவும் - தீக்கதிர் ஆசிரியர் குழுவிலும் தொடர்கிறேன். என்னால் இயன்ற அளவு கட்சிப் பணிகளில் கட்சி வழிகாட்டுதல்படி தொடர்வேன் .என் எழுத்துப் பணிக்கும் கருத்துப்பரப்பல் பணிக்கும் இறுதி மூச்சுவரை ஒய்வு இல்லை. மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தை பின்பற்றி நடந்ததற்காக வாழ்வில் பெருமிதம் கொள்கிறேன் . தொடர்ந்து அதே பாதையில் பயணிப்பதையே பெரும்பேறாகக் கருதுகிறேன்

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொறுப்புகளிலிருந்து விலகி - அதே சமயம் அனுபவத்தை வீணாக்காமல்  அமைதியாகப் பணியாற்றும் பக்குவம் பெறவேண்டும் என்பது எனது நெடுநாள் வாதம் . அந்த சோதனை முயற்சியில் என்னை நான் ஈடுபடுத்தியுள்ளேன். அதன் சிரமங்களும் வலியும் இருக்கத்தான் செய்கிறது .சில சமயங்களில் தர்மசங்கடமான சூழலில்  சிராய்ப்புகளோடு தப்புவது அவ்வளவு எளிதல்ல. ஏற்கெனவே வரலாற்று எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் இது குறித்து எச்சரித்திருந்தார் , எனவே   அதிர்ச்சிகள் எதிர்பாராததாக இல்லை.சமாளிப்பதும் சாத்தியமாயிற்று . எது எப்படி இருப்பினும் இப்பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதி பூண்டுள்ளேன் . வலியில்லாமல் வாழ்க்கை ஏது ? தயங்கிநின்றால் ஆகுமா ? காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டே காலடியை உறுதியாக முன்வைக்கிறேன் .  

சொந்த வாழ்வில் என்  மனைவியும் மகளும் மகனும் என் இலட்சியத்தை மதிப்பவர்களே .பின் தொடர்பவர்களே !  மகளும் சரி - மகனும் சரி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதும் - அதுவும் காதல் திருமணமாக அமைந்ததும் பெருமகிழ்ச்சி.சாதி மறுப்புத் திருமணம் - காதல் திருமணம் என்கிற உயர் நோக்கத்தைவரதட்சணை இன்றி இருவீட்டாரும் மனமுவந்து ஏற்று முன்நின்று நடத்த சில சடங்குகளோடு சமரசம் செய்துகொள்ளவேண்டி இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான திருமணமே.

சொந்த வாழ்வில் பணம் பண்ணும் வித்தையை இன்றுவரை கற்றேனில்லை. இதனால் ஏற்பட்ட உரசல்களும் மன உழைச்சலும் இந்த நொடிவரைத் தொடரத்தான் செய்கிறது . சொத்தாக எதையும் சேர்த்துவைக்கவில்லை கடனைத் தவிர... இன்னும் இரண்டு மாதங்களில் தொல்லை தரும் பெரும் கடன்களிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிடுவேன்..பெங்களூரில் மகன் வீட்டிலும்  - சென்னையில் மகள் வீட்டிலும் எஞ்சிய காலம் இனிதே கழியும் என நம்புகிறேன்.
மனைவியின் உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் - ஆயூர்வேத சிகிட்சை தொடர்ந்து மூன்று வருடங்கள் செய்யவேண்டும் என்பதால் விரைவில் மீண்டும் மனைவி சிகிட்சைக்காகத் திருவனந்தபுரம் செல்வோம். எனது உடல் நிலை மருத்துவர் வழிகாட்டுதல்படி சீராக உள்ளது.

இதுவரை என் எழுத்துப்பணியில் மலர்ந்தவை :

1]சிந்திக்கும் வேளையில் குறள்
2]என் கேள்விக்கு என்ன பதில் ? [ அறிவியல் விழிப்புணர்வு சிறார்  சித்திரக்கதை ]
3]பாசிசம் பழசும் புதுசும் [ மொழி பெயர்ப்பு ]
4] விடுதலைத் தழும்புகள் [ தமிழக அரசு விருது பெற்றது ]
5] மனித உரிமை வரலாறும் அரசியலும் [ திருப்பூர் தமிழ் சங்க விருது ]
6]காதலும் வாழ்வும் : பழந்தமிழ் இலக்கியத்தில்
7]ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்
8]சமுத்திரத்தின் படைப்புலகம் [ தொகுப்பாசிரியர் ]
9]கீதை தரும் மயக்கம்
10]சிங்காரவேலரைப் பயில்வோம்
11]சாதியம் : வேர்கள் - விளைவுகள் - சவால்கள்
12]பார்வை புதிது பயணம் நெடிது [ ஆர். உமாநாத் வாழ்க்கை ]
13] பொதுவுடைமை வளர்த்த தமிழ்
14]பூக்களோடும் போர்முரசுகளோடும் [ வாலிபர் சங்க ஆரம்பகால வரலாறு ]
15]கோடிக்கால் பூதமடா : ஜீவாவின் கவிதைப் பயணம்
16]குடும்பத்தில் கூட்டாட்சி

 [இவற்றுடன் இயக்கம் சார்ந்து எழுதிய பிரசுரங்கள் பலவும் உண்டு. மேலும் நூலாகாத எழுத்துகளும் உண்டு. பாதியிலே நின்று போயுள்ள - முடிக்க வேண்டிய நூல்களும் உண்டு]

புதிய நூல்கள் சில விரைவில் எழுதி முடிக்கும் எண்ணம் உள்ளது. பெங்களூரில் வசிக்கும் நாட்களை அதற்குப் பயன் படுத்த திட்டமும் உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில்  [ டி.ஒய்.எப் . ]பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட துடிப்பான காலமாகட்டும் - அனுபங்களையும் பக்குவத்தையும் கற்றுத்தந்த இருபதாண்டுக்கு மேலாகத் தொடரும் தீக்கதிர் பணியாகட்டும் - பொதுவாக 35 ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட எழுத்துப்பணி , கருத்துப்பரப்பும் பணி , கட்சி இயக்கப் பணியாகட்டும் அனைத்தும் என்னுள் மறக்க முடியாத ஆழமான முத்திரைகளைப் பதித்துள்ள..

நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த ஏமாற்றங்கள் , தோல்விகள் , பெற்ற காயங்கள் அநேகம். அவை எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
நான் சமூகமாற்றம் விழைகிற போராளி ; ஆனால் பதவி மோகமும் சுயநலமும் மிகுந்த அரசியல் களத்தில் ஏமாளி ; என் மனைவி மக்களின் இந்த விமர்சனத்தை நான் வழிமொழியவும் முடியாதுமறுதலிக்கவும் முடியாது. கையறு நிலை எனக்கு…..
 
நண்பர் வீரமணி டெல்லியிலிருந்து என் பிறந்த நாள் வாழ்த்தாக வீரம் விளைந்தது நாவலில் இருந்து ஒரு மேற்கோளை - அதுவும் நான் வாலிபர் சங்க மேடைகளில் அடிக்கடி பயன்படுத்திய மேற்கோளை அனுப்பி இருந்தார் . அதனையே நிறைவாக இங்கு பதிவு செய்கிறேன்.

“Man's dearest possession is life. It is given to him but once, and he must live it so as to feel no torturing regrets for wasted years, never know the burning shame of a mean and petty past; so live that, dying, he might say: all my life, all my strength were given to the finest cause in all the world──the fight for the Liberation of Mankind”

மனிதனது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடி வைக்கக் கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

― Nikolai Ostrovsky in the How the Steal was tempered.
(
வீரம் விளைந்தது)

ஆம், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்ஒவ்வொரு அடிவைப்பையும் அந்த திசைவழியில் செலுத்தவே முயல்கிறேன்; எனது பலத்தோடும் பலவீனத்தோடும்..

நன்றி
சு.பொ.அகத்தியலிங்கம்

சிலையை ரசித்தோம்... ஆனால்... ?

Posted by அகத்தீ Labels:





சிலையை ரசித்தோம்... ஆனால்... ?
சு. பொ. அகத்தியலிங்கம்
கோயிலுக்கு ஆத்திகர்களும் போவார்கள். நாத்திகர்களும் போவார்கள். ஆத்திகர்கள் அங்குள்ள சாமி சிலைகளை பக்தி சிரத்தையோடு கும்பிடுவார்கள். ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். நாத்திகர்கள் புராணங்களைக் கிண்டல் அடிப்பார்கள், வேறு சிலர் அங்குள்ள சிற்பங்களை கலைக்கண்ணோடு பார்த்து ரசிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து கூட சுற்றுலாப் பயணிகள் வந்து கோயில் சிற்பங்களில் அழகில் சொக்கி நிற்பதை நாம் கண்டிருக்கிறோம்.  ஆனால் எப்போதாவது ஒவ்வொரு சிற்பத்திற்கும் பின்னால் ஒரு பெரிய சமூக கண்ணோட்டம் ஒளிந்து கொண்டிருப்பதை யோசித்து பார்த்திருக்கிறோமா ? அதிலும், பொதுவாக பெண் சிற்பங்கள் எப்படி செதுக்கப்படுகிறது? ஆணின் எந்த பக்கம் வைக்கப்படுகிறது? எவ்வளவு உயரத்தில் வைக்கப்படுகிறது? என்பதை எல்லாம் நாம் கூர்ந்து பார்த்ததில்லை. முனைவர் பெ. நிர்மலா ஒவ்வொரு சிற்பத்தையும் கூர்ந்து பார்த்திருக்கிறார். ஆழ்ந்து பயின்றிருக்கிறார்.  பெண் சிற்பங்களுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனை வலுவாக இருப்பதை; புராணக்கட்டுக்கதைகள் மூலம் பெண் அடிமைத்தனம் வலுவாக வேருன்றப்பட்டிருப்பதை; மூடநம்பிக்கைகள் விரவப்பட்டிருப்பதை ஆசிரியர் அலசி நமக்கு எடுத்து காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
  "மநு கூறும் ஆதிக்க மரபினரின் குறியீடுகளே  கோயில்கள். இக்கோயில்களை உருவாக்கிய ஆதிக்க சக்திகள் இயற்கை மரபு மற்றும் உலோகாயத மரபுகளை அழித்து , அந்த இடத்தில் வைதீக மரபை, கட்டமைத்தார்கள். இதற்கான காட்சி வழித்தரவுகளே கோயில்கள். இக்கோயில்கள் சார்ந்த கலை ஆய்வுள் முன்னேடுக்கப்படும் அளவுக்கு அவற்றிலிருக்கும் கருத்துநிலை சார் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதில்லை. சிற்பங்களின் கலை நுணுக்கம் குறித்து பேசும், வல்லுநர்கள், அவற்றிலிருக்கும் பெண் அடிமை கருத்துநிலை குறித்து அக்கறை கொள்வதில்லை; ஏனெனில் இவ்வகையான கலை வல்லுநர்கள் அடிப்படையில் ஆணாதிக்க மன நிலையினராகவே உள்ளனர். சிற்பக்கலையின் அழகியல் என்பது பெண்களை கட்மைப்பதில் செய்திருக்கும் தில்லு முல்லுகளை வக்கரங்களை அதிகாரங்களை இனங்காண்பதில்லை. சிற்பங்களின் கோணங்களில் சொக்கிப்போகும் வல்லுநர்பெருமக்கள் பெண் தொடர்பான கேவலங்களை அவை காட்சிப்படுத்தப்படுவதைக் கவனத்தில் எடுத்தார்களா என்பது சந்தேகம். நிர்மலாவின் இந்நூல் மேல் குறித்த அவலங்களை மிகவும் நுணுக்கமாக அம்பலப்படுத்தும் பணியை செய்கிறது. ஆணாதிக்க மரபில் உறுவான இன்னொரு காமசூத்திரங்களாகவே கோயில் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது"என்று முன்னுரையில் அரசு கூறுவது மிகையல்ல.
பொதுவாக பெண் சிற்பங்கள் எல்லாம் இடது பக்கமாகவே அமைக்கப்படுவது ஏன்? சில சிற்பங்களில் வலது பக்கமாகவும் அமைந்தது எதனால்? வெளிப்பார்வைக்கு மிக எளிதாக தோன்றும் இக்கேள்வி இந்து மதத்தில் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கிற அடிமை நிலையின் வெளிப்பாடே என்பதை தக்க சான்றாதாரங்களுடன் நிர்மலா நிறுவுகிறார்.
 பெண் ஆணுக்கு அடங்கிய மனைவியாக - மதம் பாராட்டும் பத்தினியாக பெண்ணை காட்டுகிற போது இடது பக்கம்  பெண்ணை நிறுத்துவதும், ஆணுக்கு அடங்காமல் திமிறுகிற பெண்ணை அல்லது எதிர்த்து போராடுகிற பெண்ணை அல்லது காமநுகர்ச்சியை சித்தரிக்கும் வேளையில் பெண்களை வலது பக்கம் சித்தரிக்கிறார்கள் என்பது இந்நூலில் வலுவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல மேல் கீழ் என சிற்பங்களை செதுக்குவதும், இவ்வாறு உயர்வு தாழ்வு அடிப்படையில் தான் என்பதையும்; துய்மை புனிதம் என்பன போன்ற எதிர் நிலை கருத்தாக்கங்களும் ஆணாதிக்க மனோநிலையின் அடிப்படையில் சிற்பங்களை செதுக்குவதிலும் எப்படி எல்லாம் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்நூல் நெத்தியடியாக உரைக்கிறது. 
சிற்பங்களைப் பற்றி கூறுகிற போது  அதனோடு இணைந்த பல்வேறு புராணகதைகளின் வக்கிரமான ஆதிக்க மனோபாவத்தை மிக நுட்பமாக நிர்மலா நூல் நெடுக அம்பலப்படுத்தி கொண்டே செல்கிறார்.  சிலை செய்கிற கல்லைத் தெர்ந்தெடுக்கிற போது கூட மணியோசை போன்ற நாதம் என்றால் அக்கல்லில் ஆண்சிலை வடிப்பதையும் தாளம் போன்ற ஓசையிருந்தால் அதில் பெண் சிலை வடிப்பதையும்; இவர் சுட்டிக்காட்டுகிற போது அதிர்ச்சி ஏற்படுகிறது . சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கிற ஆதிக்க கருத்தோட்டத்தின் குரூரம் பளிச் என புலப்படுகிறது.  அதேபோல ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் தொன்மங்களையும் , பெண் கடவுள்களையும் அது தொடர்பான சிற்பங்களையும் எடுத்துக் காட்டி சமூகத்திற்குள் பெண் விடுதலை சாம்பல் பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பதை தக்க உதாரணங்களோடும் புராண கதைககளோடும் சொல்லி சென்றிருப்பது பாராட்டுக்குரியது. சூரிய சந்திர பற்றி கருத்தோட்டம் கூட எப்படி ஆண் பெண்ணாக கையாலப்பட்டிருப்பது என்பதை -  ராசிகள் வர்னாசரம அடிப்படையில்  பிரிக்கப்பட்டிருப்பது என்பதை அந்த கருத்துக்கேற்பவே செதுக்குகிற சிற்பங்களும் அதற்குரிய இடம் வழங்கப்படகிறது என்பதை, பெண்களை வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் அடக்கியே வைத்திருக்கிற சமூக இழிவு சிற்பக்கலையிலும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை  இந்நூலில் பரவலாக எடுத்துக் காட்டுகிறார். 
வரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், முத்தேஸ்வரர் கோயில், மதங்கேஸ்வரர் கோயில், கைலாச நாதர்கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என பத்து கோயில் சிற்பங்களை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அதே சமயம் இந்த சிற்பங்களுக்குள் மட்டும் நின்று விடாமல் பொதுவாக பெண் பற்றிய பார்வை இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து வர்ணாஸ்சரம அமைப்பில் எவ்வளவு கீழானதாக இருந்தது என்பதை சிற்பங்கள் மூலம் ஆணித்தரமாக நிறுவுகிறார்.

இந்நூலினுடைய மொழி நடை மிகவும் நுட்பமானது.   மொழி பிறந்தது பெண் கடவுளர்களிடமிருந்து  என்று பொதுவாக கதைகள் புனையப்பட்டதை ; வாழ்க்கை அனுபவத்தில் தாய்வழியாகவே குழந்தை பேசக்கற்று கொள்கிறது என்பதை; சொல்லுவதோடு நின்றுவிடாமல்; தற்போது சொல்லாடல் (மொழி) பெண்ணின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் சிக்குண்டு கிடக்கிறது என்பதை நிர்மலா உதாரணங்களோடு எடுத்து காட்டுகிறார்.  ஆணுக்கும் , பெண்ணுக்கும் இறுதியான பண்புகளை ஏற்றிச் சித்தரிக்கும போக்கு அறிவியல் சார்ந்ததாக இல்லை என்பதை ஏங்கெல்ஸ் மேற்கோளோடு எடுத்து காட்டுகிறார்.   இந்த நூல் ஒருவகையில், சிற்பக்கலையில் ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துகிறது. இன்னொரு வகையில் நமது புராண மரபில் வேரோடி இருக்கிற ஆணாதிக்கம் மற்றும் சாதி ஆதிக்கம் இவற்றின் கோர முகத்தை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. நூலை படித்து முடித்த பிறகு சிற்பம் ஓவியம் எதைப் பார்த்தாலும் அதற்குள் பொதிந்து கிடக்கும் கருத்தாதிக்கத்தைப் பற்றி  கொஞ்சநேரமாவது மனதிற்குள் ஒரு உறுத்தல் ஏற்படத்தான்  செய்யும். 
தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்
முனைவர். பெ. நிர்மலா
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
97/55, என்.எஸ். கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம் , சென்னை - 600 024
பக்: 408 விலை ரூ. 280/-