ஒவ்வொரு நொடியையும்…

Posted by அகத்தீ Labels:

ஒவ்வொரு நொடியையும்
[ அகவை அறுபதில் ஒரிரு வார்த்தைகள் ]


இன்று[ 15 ஜூன் 2013 ] எனக்கு அகவை அறுபது . பிறந்த நாளன்று தமிழ் நாட்டுக்கு வெளியேபெங்களூரில் வசிக்க நேர்வது இதுவே முதல் முறை . வாழ்வில் இன்று இன்னொரு நாளே . ஆயினும் முதுமையின் தலைவாசலில் நுழைவது வளர்ச்சியின் அடுத்தகட்டமல்லவா ?அந்த பூரிப்பு என்னுள் சில்லென்று வருடுகிறது.

 2011 தொடங்கி பிறந்த நாளன்று சில செய்திகளை தெரிவிப்பதை வாடிக்கையாக்கி உள்ளேன் .அகவை 58 ல் ஓய்வெனப்படுவது யாதெனக்கேட்டு என் கருத்துகளை பதிவிட்டிருந்தேன். அகவை 59 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவருவது குறித்து திருப்தி தெரிவித்திருந்தேன் .


http://akatheee.blogspot.in/2012/06/2.html

 ஆம், இப்போது நான் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினராகவோ - தீக்கதிர் இணை ஆசிரியராகவோ - வேறு எந்த முக்கிய பொறுப்பிலும் இல்லை . என் சுயவிருப்பத்தினை ஏற்று என்னை இவற்றிலிருந்து விடுவித்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் - கட்சியின் முழுநேர ஊழியராகவும் - தீக்கதிர் ஆசிரியர் குழுவிலும் தொடர்கிறேன். என்னால் இயன்ற அளவு கட்சிப் பணிகளில் கட்சி வழிகாட்டுதல்படி தொடர்வேன் .என் எழுத்துப் பணிக்கும் கருத்துப்பரப்பல் பணிக்கும் இறுதி மூச்சுவரை ஒய்வு இல்லை. மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தை பின்பற்றி நடந்ததற்காக வாழ்வில் பெருமிதம் கொள்கிறேன் . தொடர்ந்து அதே பாதையில் பயணிப்பதையே பெரும்பேறாகக் கருதுகிறேன்

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொறுப்புகளிலிருந்து விலகி - அதே சமயம் அனுபவத்தை வீணாக்காமல்  அமைதியாகப் பணியாற்றும் பக்குவம் பெறவேண்டும் என்பது எனது நெடுநாள் வாதம் . அந்த சோதனை முயற்சியில் என்னை நான் ஈடுபடுத்தியுள்ளேன். அதன் சிரமங்களும் வலியும் இருக்கத்தான் செய்கிறது .சில சமயங்களில் தர்மசங்கடமான சூழலில்  சிராய்ப்புகளோடு தப்புவது அவ்வளவு எளிதல்ல. ஏற்கெனவே வரலாற்று எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் இது குறித்து எச்சரித்திருந்தார் , எனவே   அதிர்ச்சிகள் எதிர்பாராததாக இல்லை.சமாளிப்பதும் சாத்தியமாயிற்று . எது எப்படி இருப்பினும் இப்பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதி பூண்டுள்ளேன் . வலியில்லாமல் வாழ்க்கை ஏது ? தயங்கிநின்றால் ஆகுமா ? காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டே காலடியை உறுதியாக முன்வைக்கிறேன் .  

சொந்த வாழ்வில் என்  மனைவியும் மகளும் மகனும் என் இலட்சியத்தை மதிப்பவர்களே .பின் தொடர்பவர்களே !  மகளும் சரி - மகனும் சரி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதும் - அதுவும் காதல் திருமணமாக அமைந்ததும் பெருமகிழ்ச்சி.சாதி மறுப்புத் திருமணம் - காதல் திருமணம் என்கிற உயர் நோக்கத்தைவரதட்சணை இன்றி இருவீட்டாரும் மனமுவந்து ஏற்று முன்நின்று நடத்த சில சடங்குகளோடு சமரசம் செய்துகொள்ளவேண்டி இருந்தது. மொத்தத்தில் மனநிறைவான திருமணமே.

சொந்த வாழ்வில் பணம் பண்ணும் வித்தையை இன்றுவரை கற்றேனில்லை. இதனால் ஏற்பட்ட உரசல்களும் மன உழைச்சலும் இந்த நொடிவரைத் தொடரத்தான் செய்கிறது . சொத்தாக எதையும் சேர்த்துவைக்கவில்லை கடனைத் தவிர... இன்னும் இரண்டு மாதங்களில் தொல்லை தரும் பெரும் கடன்களிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டுவிடுவேன்..பெங்களூரில் மகன் வீட்டிலும்  - சென்னையில் மகள் வீட்டிலும் எஞ்சிய காலம் இனிதே கழியும் என நம்புகிறேன்.
மனைவியின் உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் - ஆயூர்வேத சிகிட்சை தொடர்ந்து மூன்று வருடங்கள் செய்யவேண்டும் என்பதால் விரைவில் மீண்டும் மனைவி சிகிட்சைக்காகத் திருவனந்தபுரம் செல்வோம். எனது உடல் நிலை மருத்துவர் வழிகாட்டுதல்படி சீராக உள்ளது.

இதுவரை என் எழுத்துப்பணியில் மலர்ந்தவை :

1]சிந்திக்கும் வேளையில் குறள்
2]என் கேள்விக்கு என்ன பதில் ? [ அறிவியல் விழிப்புணர்வு சிறார்  சித்திரக்கதை ]
3]பாசிசம் பழசும் புதுசும் [ மொழி பெயர்ப்பு ]
4] விடுதலைத் தழும்புகள் [ தமிழக அரசு விருது பெற்றது ]
5] மனித உரிமை வரலாறும் அரசியலும் [ திருப்பூர் தமிழ் சங்க விருது ]
6]காதலும் வாழ்வும் : பழந்தமிழ் இலக்கியத்தில்
7]ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்
8]சமுத்திரத்தின் படைப்புலகம் [ தொகுப்பாசிரியர் ]
9]கீதை தரும் மயக்கம்
10]சிங்காரவேலரைப் பயில்வோம்
11]சாதியம் : வேர்கள் - விளைவுகள் - சவால்கள்
12]பார்வை புதிது பயணம் நெடிது [ ஆர். உமாநாத் வாழ்க்கை ]
13] பொதுவுடைமை வளர்த்த தமிழ்
14]பூக்களோடும் போர்முரசுகளோடும் [ வாலிபர் சங்க ஆரம்பகால வரலாறு ]
15]கோடிக்கால் பூதமடா : ஜீவாவின் கவிதைப் பயணம்
16]குடும்பத்தில் கூட்டாட்சி

 [இவற்றுடன் இயக்கம் சார்ந்து எழுதிய பிரசுரங்கள் பலவும் உண்டு. மேலும் நூலாகாத எழுத்துகளும் உண்டு. பாதியிலே நின்று போயுள்ள - முடிக்க வேண்டிய நூல்களும் உண்டு]

புதிய நூல்கள் சில விரைவில் எழுதி முடிக்கும் எண்ணம் உள்ளது. பெங்களூரில் வசிக்கும் நாட்களை அதற்குப் பயன் படுத்த திட்டமும் உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில்  [ டி.ஒய்.எப் . ]பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட துடிப்பான காலமாகட்டும் - அனுபங்களையும் பக்குவத்தையும் கற்றுத்தந்த இருபதாண்டுக்கு மேலாகத் தொடரும் தீக்கதிர் பணியாகட்டும் - பொதுவாக 35 ஆண்டுகாலத்திற்கும் மேற்பட்ட எழுத்துப்பணி , கருத்துப்பரப்பும் பணி , கட்சி இயக்கப் பணியாகட்டும் அனைத்தும் என்னுள் மறக்க முடியாத ஆழமான முத்திரைகளைப் பதித்துள்ள..

நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த ஏமாற்றங்கள் , தோல்விகள் , பெற்ற காயங்கள் அநேகம். அவை எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
நான் சமூகமாற்றம் விழைகிற போராளி ; ஆனால் பதவி மோகமும் சுயநலமும் மிகுந்த அரசியல் களத்தில் ஏமாளி ; என் மனைவி மக்களின் இந்த விமர்சனத்தை நான் வழிமொழியவும் முடியாதுமறுதலிக்கவும் முடியாது. கையறு நிலை எனக்கு…..
 
நண்பர் வீரமணி டெல்லியிலிருந்து என் பிறந்த நாள் வாழ்த்தாக வீரம் விளைந்தது நாவலில் இருந்து ஒரு மேற்கோளை - அதுவும் நான் வாலிபர் சங்க மேடைகளில் அடிக்கடி பயன்படுத்திய மேற்கோளை அனுப்பி இருந்தார் . அதனையே நிறைவாக இங்கு பதிவு செய்கிறேன்.

“Man's dearest possession is life. It is given to him but once, and he must live it so as to feel no torturing regrets for wasted years, never know the burning shame of a mean and petty past; so live that, dying, he might say: all my life, all my strength were given to the finest cause in all the world──the fight for the Liberation of Mankind”

மனிதனது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனித குலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக நான் என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடி வைக்கக் கூடுமாதலால் மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

― Nikolai Ostrovsky in the How the Steal was tempered.
(
வீரம் விளைந்தது)

ஆம், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்ஒவ்வொரு அடிவைப்பையும் அந்த திசைவழியில் செலுத்தவே முயல்கிறேன்; எனது பலத்தோடும் பலவீனத்தோடும்..

நன்றி
சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment