மார்க்சை பயில்வது என்பதன் பொருள்...
சு.பொ. அகத்தியலிங்கம்
" நாம் ஒரு புதிய கொள்கையுடன் ; இதுதான் உண்மை - இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வறட்டுக்கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை . உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்" இப்படிச் சொன்னவர் கார்ல் மார்க்ஸ்.
அந்த மார்க்ஸையும் அவர் தந்த சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தையும் ஐயம்திரிபற கற்பது பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன்நிபந்தனை ஆகிறது. அதிலும் மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூப்பாடுபோடுகிறவர்களுக்கு மத்தியில் - மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக்கி மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகக் கூர்தீட்டுகிறவர்களுக்கு மத்தியில் செயல்படுகிற முன்னணிப் படைவீரர்கள் மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தின் இயங்கியல் சாரத்தை உட்கிரகிப்பது இன்றைக்கு மிகமிக அவசியம்.அதற்காக மார்க்ஸைப் பயில வேண்டும் . இதன் பொருள் மார்க்ஸை தேவதூதனின் வருகையைப் போல் தரிசிக்க முயல்வது அல்ல. மார்க்ஸ் என்னும் மாமேதை எப்படி உருவானார் என்பதை வரலாற்று இயங்கியல் கண்ணோட்ட்த்தில் பயில்வது தேவைகிறது . அதற்கு டேவிட் ரியாஜெனோவ் எழுதிய மார்க்ஸ் எங்கெல்ஸ் ;வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம் என்ற நூல் பெரிதும் உதவும். அதுபோல மார்க்சியத்தை ஒரு சமூக அறிவியலாகப் பயின்றிட விக்டர் ஆஃபேன் ஸீவ் எழுதிய மார்க்சிய லெனினிய தத்துவம் நிச்சயம் கைகொடுக்கும்.
சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கைவரலாறு ஆரம்ப நிலையில் மார்க்ஸ் குறித்த எழுச்சியூட்டும் சிந்தனையை நெஞ்சில் விதைக்கும் ஐயமில்லை. ஆனால் களப்போராளிகளுக்கு அதுமட்டுமே போதுமானதல்ல மேலும் ஆழமான புரிதல் தேவை. அதற்கு கருவியாக பல நூல்கள் வந்துள்ளன . ஹென்ரி வோல்கவ் எழுதிய கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாற்றைக் கூறும் மார்க்ஸ் பிறந்தார் எனும் நூல் , ஒண்பது ஆசிரியர்கள் கூட்டாகத் தொகுத்த கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு உள்ளிட நூல்களை நுட்பமாக வாசிப்பதும் அதன் தொடர்ச்சியாக இந்நூலை வாசிப்பதும் புரிதலில் தெளிவையும் விசாலப்பார்வையையும் உருவாக்கும்.
மார்க்ஸும் எங்கெல்ஸும் எவ்வாறான நிலைமைகளிலும் சுற்றுச்சூழல்களிலும் வளர்ந்து சிந்தனை பெற்றனர் என்பதை கூர்மையாகப் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்வோம் . "ஒவ்வொரு தனிமனிதனும் , குறிப்பிட்ட சமூகச்சூழலின் படைப்பே ஆவான் சாதனை ஒன்றை உருவாக்கும் எந்த ஒரு மேதையும் அதை தனக்கு முன்னால் அடையப்பெற்ற சாதனைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்குகிறான் . சூன்யத்திலிருந்து அவன் உதிக்கவில்லை" இவ்வாறு கூறும் ரியாக்ஜெனோவ் 9 அத்தியாயங்களில் வரலாறு எப்படி மார்க்ஸை செதுக்கியது ? ; வரலாற்றை பாட்டாளிவர்க்கத்துக்கு சாதகமாக மடைமாற்ற சிந்தனைக் களத்திலும் செயல் களத்திலும் எவ்வாறு மார்க்ஸ் இயங்கினார் இதில் எங்கெல்ஸின் பாத்திரம் யாது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைகண்டிருக்கிறார்.
மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துகள் அனைத்தையும் சேகரித்து தொகுத்து ஆவணப்படுத்தும் பணியில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என்ற முறையில் மார்க்சின் சிந்தனையின் பரிணாமத்தை நன்கு உட்கிரகித்தவர் ரியாஜெனோவ் ; எனவே அவரால் மார்க்ஸை மிகச்சரியான கோணத்தில் இந்நூலில் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது .
முதல் அத்தியாயத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கம் மேலோங்கி வளந்த காலகட்ட்த்தில் மார்க்ஸ் , எங்கெல்ஸ் 20,25 வயதுப் பருவத்தினராய் அதை எதிர்கொண்டனர் , அது அவர்கள் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியதென வாதிடுகிறார்.
ஜெர்மனியில் புரட்சிகர இயக்கத்தின் தொடக்க நாட்கள் குறித்த அலசலோடு எனக்கு கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது என்று மார்கஸ் கூறிய காலகட்டத்தினையும் டாய்ட்ஷ் பிரான் ஷென் ஜார்புச்சேர் என்கிற ஏட்டில் எழுதத்துவங்கிய காலதிலேயே 1843 புரட்சிகர ஜனநாயகவாதி என்பதிலிருந்து கம்யூனிஸ் சிந்தனைக்கு மார்க்ஸ் மாறத்துவங்கினார் இரண்டாவது அத்தியாயத்தில் நூலாசிரியர் விவரிக்கிறார்.என்பதையும்
இளம் ஹெகலியாராக கல்லுரி நாட்களில் விளங்கிய மார்க்ஸ் கருத்துமோதலில் விமர்சனங்களூடே ஹெகலையும் பியர்பாக்கையும் மறுத்தும் உட்கொண்டும் புரட்சிகர தத்துவத்தை நோக்கி படிமலர்ச்சி அடைந்த வரலாற்றை மூன்றாம் அத்தியாயம் பேசுகிறது.
கம்யூனிஸ்ட் லீக்கின் உருவாக்கம் அதில் மார்க்சின் செயலூக்கமிக்க பாத்திரம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் தோற்றம் இவை குறித்து பேசும் நாலாவது அத்தியாயம் சுவைமிக்கது மட்டுமல்ல நிறைய தகவல்களையும் பரிசீலனைகளையும் உள்ளடக்கியது . மார்க்சின் அமைப்பு சார்ந்த பணிகள் ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் நூலாசிரியர் அக்குறையை இந்நூலில் நிறைவு செய்துள்ளார்.
1848 ன் ஜெர்மன் புரட்சி குறித்து அலசும் 5 வது அத்தியாயம் புரட்சியின் தோல்வி கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்பட்டது என புதிய சூழலை சரியாகப் படம் பிடிக்கிறது . அதில் மார்க்ஸின் பாத்திரம் ஒரு கட்டத்தில் அவரது தவறான அனுமானம், அதிலிருந்து மீண்டது என மார்க்சின் சிந்தனை வளர்ச்சி நன்கு பதியப்பட்டுள்ளது.
1850 களில் பிற்போக்குவாதம் தலைதூக்கிய பின்னணியில் மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்த்திய தத்துவப்போர் மிகமுக்கியமானதாகும் . முதல் அகிலத்தின் தோன்றிய சூழல் அதில் மார்க்சின் பாத்திரம் 1867-68 நெருக்கடி தத்துவத்தின் வறுமை , தூரிங்கிற்கு மறுப்பு போன்ற நூல்கள் எப்படி தத்துவ மோதலில் மலர்ந்தன அவை எப்படி சரியான கண்ணோட்ட்த்தை வளர்தெடுக்க உதவின மூலதனம் நூல் எவ்வாறு கருக்கொண்டு வளர்ந்தது எங்கெல்ஸ் மார்க்ஸ் உறவின் ஆழம் எத்தகையது சிந்தனைக்களத்தில் இருவரும் எப்படி இணைஇசையமைப்பாளர்கள் போல் செயல்பட்டனர் என விரிந்த சித்திரத்தை அடுத்தடுத்து வந்த அத்தியாயங்களில் நூலாசிரியர் திறம்பட விளக்கி உள்ளார்.
இறுதி அத்தியாயம் இருவரும் நமக்கு விட்டுச் சென்றுள்ள கருத்துப் பொக்கிஷத்தை அடையாளம் காட்டுகிறது . கருத்துகளோடு மோதி மோதித்தான் மார்க்சியம் எனும் சமூக அறிவியல் படிநிலை வளர்ச்சி பெற்றது என்பதையும் ; ஆகவே அந்த அறிவு ஊற்று மேலும் மேலும் சுரக்கும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த மார்க்சிய அறிவியலை வெறுமே தத்துவவியாக்கியானமாகப் பயிலாமல் அறிவியலாகப் பயில்வது இன்றையத் தேவை. அதற்கு இந்நூலைத் தொடர்ந்து விக்டர் ஆல்பேன் ஸீவ் எழுதிய மார்க்சிய லெனினிய தத்துவம் என்ற நூலை வாசிப்பது அவசியம். இந்நூல் வழக்கமான பாணியில் நெடுங்கட்டுரைகளாக அமையாமல் பாடக்குறிப்புபோல் வரைபடங்கள் , அட்டவணைகள் , விளக்கப்படங்கள் என அமைந்துள்ளதால் வாசகர்கள் எளிதில் உள்வாங்க இயலும்.
மேலும், "மார்க்சியத் தத்துவத்தை முழுமையடைந்த மீறக்கூடாத ஒன்றாக நாம் கருதவில்லை; மாறாக அது அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே இட்டுள்ளது என்று தெளிவாகவே உள்ளோம் ; சோஷலிஸ்டுகள் , வாழ்க்கையின் வேகத்துடன் இணைந்து செல்ல விரும்பினால் , அவர்கள் அந்த அறிவியலை அனைத்து திசைகளிலிருந்தும் வளர்க்க வேண்டும் . இந்த தத்துவம் பொதுவான வழிகாட்டும் கொள்கையை மட்டும் அளிக்கிறது ; அக்கொள்கைகள் இங்கிலாந்தில் பிரான்ஸிலிருந்து வேறுவிதமாகாவும், பிரான்சில் ஜெர்மனியிலிருந்து வேறுவிதமாகவும் , ஜெர்மனியில் ரஷ்யாவிலிருந்து வேறுவிதமாகவும் பொருத்திப் பார்க்கப்பட்டன" என்கிறார் லெனின்.
தமிழக மற்றும் இந்திய தத்துவ மரபை உள்வாங்கி இதுபோல் பொருத்திப் பார்த்து ஓர் நூலாக்கித் தருவோன் இந்திய தமிழக பாட்டாளி வர்க்கத்திற்கு பெரும் தொண்டாற்றியவனாவான் . அத்துடன் விஞ்ஞானி ஜெயராமன் எழுதி ஆங்கில மார்க்ஸிஸ்ட் காலாண்டிதழில் வெளிவந்த - மார்க்சிய தத்துவத்தின் இன்றைய பொருத்தப்பாடு குறித்த இன்றைய காலகட்டம் வரையிலான அறிவியல் வளர்ச்சியோடு இணைந்த அந்தக் கட்டுரையும் உடனே தமிழாக்கம் செய்யபட்டு வெளியிடப்படவேண்டும். ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய மார்க்சிய தத்துவம் : ஓர் தொடக்க பாடம் , எமிலி பார்ன்ஸ் எழுதிய மார்க்சிய தத்துவம் உள்ளிட்ட நூல்களையும் தேடித்தேடி படிப்பதும் பதிப்பிப்பதும் மிகமிக அவசியம்.
மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல செயலுக்கான வழிகாட்டி என்று திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி ஆனந்தப் படுவது மட்டும் போதாது ; மாறாக அந்த அறிவியலை இப்போதையத் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப படிப்பதும் உள்வாங்குவதும் பிரயோகிப்பதும் அவசியம். ஆம் அந்தப் பயணத்தின் ஒரு கூறாக இவ்விரு நூல்களைப் பழுதறக் கற்போம் முதலில்.
1 மார்க்ஸ் எங்கெல்ஸ் : வாழ்வும் எழுத்தும்
ஆசிரியர் : டேவிட் ரியாஜெனோவ்,
தமிழில் : அபராஜிதன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ தெரு , தேனாம்பேடை,,
சென்னை 600 018.
பக் :256 , விலை : ரூ.160.
2 மார்க்சிய லெனினிய தத்துவம்
ஆசிரியர் : விக்டர் ஆஃபேன் ஸீவ்,
தமிழில் : ஆர்.பெரியசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ தெரு , தேனாம்பேடை,, சென்னை 600 018.
பக் : 168 , விலை : ரூ.200.
1 comments :
மார்க்ஸ் எங்கல்சின் சித்தாந்த வளர்ச்சிப் போக்கினை விளக்கும் அரியநூல் ..மார்சியத்தை கற்பதற்கான மிகச்சிறந்த எளிய நூல் ... தோழரின் பதிவு பாராட்டுக்குரியது....
Post a Comment