மீண்டும் மீண்டும் பாட வைக்கும் வணக்கப்பாடல்

Posted by அகத்தீ Labels:



‘‘தென்னகத்துக் கலைவானின் ராஜாவாம்
பண்ணைபுரப் பாவலர் வாய் திறந்தால்
ஏர்பிடிக்கும் உழவனுக்கோர் பாடல் வரும்
எந்திரத்தில் உழைப்பவர்க்கோ கவிதைவரும்
கதை சொல்லும் பாவலரின் தனிச்சிறப்பு;
கண்கலங்கும் ஏழைக்கும் சிரிப்புவரும்
கோழைக்கும் வீரம்வரும்போர்முழக்கும்
ஏழைக்கே உழைத்து அணைந்த அகல்விளக்கு"

இவ்வாறு பாவலர் தாசன் பாடகர் சந்தானம் புகழ்வது மிகை யாகாது.இளையராஜாவும், கங் கை அமரனும் இந்த அகல்விளக் கில் பாடிவளர்ந் தவர்கள்தாம். மாட்டுவண்டி போகாத ஊருக் கும் பாவலரின் பாட்டுவண்டி போனது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் இவர் பாட்டின் இடத்தை இன்னும் வேறொன்று நிரப்ப முடியவில்லை. காரணம் அவர் உண்மையைப் பாடினார். உரக்கப் பாடினார்.உணர்ச்சி ததும் பப் பாடினார்.சின்ன வார்த்தை களைக் கோர்த்து நெஞ்சை வரு டும் ராகத்தில் பிசைந்து தந்த தால் அவர் மக்கள் பாடகரானார். அவர் துட்டுக்கும் மெட்டுக்கும் கைதட்டுக்கும் அலையவில்லை. மக்கள் வாழ்க்கையை கண்டு மனம் நொந்து பாடினார்.மக்கள் வாழப் பாடினார்.

கச்சேரியின் ஆரம்பத்தில் வணக்கம் பாடுகிறபோதே கூட் டம் நிமிர்ந்து உட்கார்ந்துவிடும். இத்தனைக்கும் அந்த வணக்கப் பாடல் அவர் எல்லாக் கச்சேரி களிலும் இடம் பெறும். ஆனாலும் ஒருபோதும் திகட்டியதில்லை. இப்போது பாடினாலும் அதே துடிப்பும் உற்சாகமும் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.பாட்டுக் கச்சேரிகளில் பாடும் கடவுள் வாழ்த் துப் பாடல்கள் வெறும் சடங்காக எந்தச் சலனத்தையும் பெரும் பான்மையோருக்கு ஏற்படுத்துவ தில்லை. காரணம், அது சடங்கு முக்கிய கச்சேரி இனிதான் ஆரம் பிக்கும் என அனைவரும் கருது வதால் இருக்கலாம்.கூத்துகளில் வரும் கட்டியங்காரனின் பாட் டுக்கு இதைவிட கொஞ்சம் முக் கியத்துவம் உண்டு.ஏனெனில் அது கதையோடு ரசிகனைப் பிணைக்கும் பணியை நுட்பமா கச் செய்யும்.பாவலரின் வணக்கப் பாடல் இது எல்லாவற்றையும் விட ஒருபடி மேலே சென்று, கலக விதை தூவி புதிய சமுதாயத் துக்கு நல்வரவு கூறும். அத னைச் சற்று பார்ப்போம்.

 “தாய்நாட்டுக்காகத் தன் உடல்பொருள் ஆவியைத் தந்த தியாகிகட்கும் வணக்கம்” இது தான் ஆரம்பவரி.முதல் வணக்கம். அடுத்து பலருக்கு வணக்கம் சொல்லிவிட்டு இவர் கச்சேரியை தொடர்வார்.தம்பி குறுக்கிடுவார், “மொத அடியிலே தியாகிகளுக்கு வணக்கம்னு சொல்லி காங் கிரஸ் கட்சியைப் பாராட்டுறீங்க கடைசி அடியிலே காங்கிரஸுக்கு ஓட் டுப்போடாதவங்களுக்கு வணக் கம்னு சொல்றீங்க இது வித்தி யாசம் இல்லையா?” இக்கேள் விக்கு விடை சொல்லுகிறசாக் கில் சுதந்திரம் என்பது காங்கிரஸ் மட்டுமே போராடி பெற்றதல்ல என்கிற வரலாற்றை நறுக்கென்று எடுத்துவைப்பார். தியாகி பென்சன் வாங்காத கம்யூனிஸ்ட் தியா கத்தை எடுத்துச் சொல்வார். விடு தலைக்குப் பிறகும் தொடரும் அடக்குமுறையை எதிர்கொண்டு அடி வாங்கி,மிதிவாங்கி, சிறை பட்டு, பொருளை இழந்து, உயி ரையே பலிகொடுத்து மக்களுக் காக தியாக வேள்வில் தினம் குளிக்கும் கம்யூனிஸ்ட்களைப் பற்றி பாவலர் சொல்லும் போது உடல் சிலிர்க்கும்.மனம் கொதிக்கும்.

பாவலர் நுட்பமானவர். ஊழல் செய்து-தப்புத்தண்டா செய்து சிறைக்குப் போனவரை தியாகி ஆக்கிவிடக்கூடாதல்லவா அத னாலே அவர் பாடுவார், “சரியான முறையிலே அரசியல் கிளர்ச்சி யில் சிறைசென்ற வீரருக்கும் வணக்கம்”.ஆமாம் ஏதோதப்பு செய்து சிறைக்குப் போன கட்சிக் காரன் வீரன் அல்ல.அரசியல் கிளர்ச்சியில் சிறை சென்றால் தான் வீரன்.காசுக்கு வாயை வாட கைக்குவிடும் பேச்சாளர்கள் நாட் டில் உண்டு. அவருக்கெல்லாம் மாறாக “முற்போக்குக் கொள் கையை நாட்டில் பரப்பிவரும் சொற் பொழிவாளருக்கு வணக் கம்” என பொருள்பொதிந்த வணக்கம் சொல்வார். முழுநேர மும் கட்சிக்கு உழைக்கிறேன் எனப்பேர்பண் ணிக் கொண்டு பணம், பதவி, பந்தா எனத் திரி வோரை அல்ல, “முற்றும் துறந்து விட்டு மக்களுக்காய் உழைக் கும் முழு நேர ஊழியர்களுக்கும் வணக்கம்” என இலக்கணம் வரைந்து வணக்கம் சொன்னார்.

பகுத்தறிவைப் பரப்புவது பல வகையில் அமையலாம்.இது இது மூடநம்பிக்கை எனச் சாடலாம். இதைஇதைச் செய்யக்கூடாது எனக்கூறலாம், பாவலரோ சரி யான செயல்களைச் செய்பவர் களை தனித்தனியாகக் குறிப் பிட்டு அவர்களுக்கெல்லாம் வணக் கம் சொல்லுவதன் மூலம் தியாகி கள் வரிசையில் அவர்களையும் சேர்த்து வணங்கி அவர்களை ரோல் மாடல்களாக முன்னத்தி ஏர்களாக அடையாளங் காட்டு வார். “சாதிவிட்டுச் சாதி மகளைக் கட்டிக் கொடுத்த தாய்தந்தை யர்க்கெல்லாம் வணக்கம்.” கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் சாதிமாறி கல்யாணம் செய்தால் வெட்டுங்கள் என தமிழகத்தில் ஒரு சாதிமாநாட்டில் ஒருவர் கொக் கரிக்கிறார்.இன்றும் கவுரவக் கொலைகள் நடக்கின்றன, போலீஸ் அதிகாரியே கவுரவக் கொலையை நியாயப்படுத்து கிறார்.இத்தகையச் சூழலில் ஒரு இளைஞன் வாலிபவயது காரண மாக காதல் வயப்பட்டு கலப்புத் திருமணம் செய்யக்கூடும். அது பெரிதல்ல,பெற்றோரே முன் நின்று சாதிவிட்டு சாதி திரும ணம் செய்து கொடுப்பது என்பது மிகக் கடினமானது. உற்றார், உறவினர்,சொந்த சாதிக்காரர்கள், ஊர்க்காரர்கள் அனைவர் எதிர்ப் பையும் மீறி சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொடுக்க மிகப் பெரிய உள்ள உறுதி வேண்டும். இலட்சிய வேட்கை வேண்டும். அத்தகைய ரோல்மாடல்களை கோடிட்டுக் காட்டி பாவலர் வணங் கியது சமூக உளவியல் பாங்கில் உன்னதமானது.

அடுத்து பாடுவார், “தாலி அறுத்த பெண்ணை மறுமணம் செய்திட்ட வாலிபர்க் கெல்லாம் வணக்கம்” இதற்கு விளக்கமும் வேண்டுமோ? “பாலைக் குடங் குடமாய் சாமிதலையில் கொட்டி பாழ்படுத்தாதவர்க்கும் வணக் கம்”ஆமாம் கல்லில் கொட்டி னால் பாழ்தானே,ஏழை வயிற் றுக்கு ஈந்தாலாவது பயனுண்டு. இப்போது இந்த வரிகளைப் பாடவே தைரியம் வேண்டும்.மத உணர் வைப் புண்படுத்துவதாக கூப் பாடுபோடும் சிறுகூட்டத்திற்கு இப்போது குளிர்விட்டுப்போயுள் ளது அல்லவா?.

இதோடு மட்டுமல்ல அடுத்து வரிசையாய் அடுக்குவார், “பழைய பஞ்சாங்கம் சோதி டம் தலைவிதியை நம்பாத படிப்பாளிகட் கெல்லாம் வணக் கம்.” படிப்பாளின்னு பெயருக்குப் பின்னால் படித்துப்பெற்ற பட் டத்தை ஒட்டுப்போட்டுக்கொண் டால் போதுமா?கம்ப்யூட்டரில் ஜாத கம் சோதிடம் பார்க்கும் காலம் இது.அவர்கள் தொழில் தெரிந்த வர்களே தவிர, படிப்பாளி ஆவார் களா?மூடநம்பிக்கைகளுக்கு முழுக்குப் போடாமல் எவ்வளவு படித்தும் என்ன பயன்? ஆகவே தான் வணக்கம் சொல்லும் போதே ஒரு புதிய மனிதனை சித்தரித்து வணக்கம் சொன்னார் பாவலர். கடவுள் வாழ்த்தைவிட, கட்டியங் காரனின் பாடலைவிட பாவலரின் வணக்கப்பாட்டு பலமடங்கு உயர்ந்து நிற்பதின் ரகசியம் இது தான்.மீண்டும் மீண்டும் எங்கும் எப்போதும் பாவலர் வணக்கப் பாட்டுடன் நிகழ்ச்சிகளைத் தொடங்குவோம். அதுவே இன் றையத் தேவை.

சு.பொ.அகத்தியலிங்கம்
இலக்கியச்சோலை,தீக்கதிர்[28 மே 2012]

தமிழகம் எங்கே போகிறது?

Posted by அகத்தீ

ந்தியாவில் பல மாநிலங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகள் இன்னும் முளை விட வில்லை. அங்கெல்லாம் சாதிய ஆதிக்கக் கருத்துகளும் பிற்போக்குச் சடங்குகளும் கோலோச்சுகின்றன. தமிழகம் விதிவிலக்கா னது. அயோத்திதாச பண்டிதர், பெரியார், சிங் காரவேலர் என மாபெரும் சமூக சீர்திருத்த முன் னோடிகள் இந்த மண்ணில் செயல்பட்டு முற் போக்கு கருத்துகளுக்கும் நடவடிக்கைக்கும் உகந்ததாக பக்குவப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறதோ? அந்தப் பெருமையை தமிழகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறதோ?

 காலமெல்லாம் விதவைத் திருமணத்திற் காக இந்தப் பெரியோர்கள் குரல் கொடுத்த மண்ணில் கோவைத்தம்பி ஒரு திரைப்படத் தின் மூலம் நீண்ட நாட்களுக்கு முன் கொள்ளி வைத்தார். ஆம். அந்தப் படத்தின் கதா நாயகி விதவை. அவளை விரும்புகிற ஒரு இளைஞன் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவான். உடனே, அவள் கொள்ளிக் கட்டையால் தன் நெற்றியைக் கருக்கிக் கொள்வாள்.இது விதவைத் திருமணத்துக்கு கோவைத்தம்பி வைத்த கொள்ளி. இப்படிப் பட்ட படங்கள் விதிவிலக்காக வந்தன.

இப் போது போகிறபோக்கு கவலை அளிக்கிறது. பெரியாரின் கைவிரலைப் பிடித்து நடந்த வர் என தன்னை எப்போதும் வியந்து கொள் கிற கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டா லின் நடித்த படம் ஒன்று வெளியாகி யிருக்கிறது. அதில், முதல் பாடலே காத லுக்கு எதிராகக் கொச்சையாகப் பேசுகிறது. சமூக சீர்திருத்தச் சிந்தனை மங்கிவரும் சூழ லில் அதற்கொப்ப தங்களுடைய விற்பனைச் சரக்கையும் அந்தக் குடும்பம் மாற்றிக் கொண்டதோ என்னவோ? இதை ஏன் சொல்லுகிறோம் என்றால் சமீ பத்தில் காதலுக்கு எதிராக சாதி ஆதிக்க வெறி யர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

உதாரண மாக, வன்னியர் சங்க மாநாட்டில் குரு, கலப்பு திருமணத்தை எதிர்த்து வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசினார். கொங்கு வேளாளர் சங்கம், பிராமணர் சங்கம் உட்பட பல சாதி சங்கங்கள் கலப்புத் திருமணம், காதல் திருமணத்திற்கு எதிராக கடும் பிரச்சார நட வடிக்கைகளையும் சாதிரீதியான ஒடுக்கு முறை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. சாதி உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சாதியை இன்றைக்கும் தத்து வார்த்த ரீதியில் நிலை நிறுத்துவது மநு தர் மமே. சாதிக் கலப்பை மநு தர்மம் ஆதரிக்க வில்லை, கடுமையாக எதிர்த்திருக்கிறது. பல் வேறு தண்டனைகளை வழங்கியிருக்கிறது. இந்த சூழலில் சாதியை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றுவது “அகமண முறை”யே. எனவே, இந்த அகமண முறை நொறுக்கப்படா மல் சாதியத்தின் முதுகெலும்பை நொறுக்க முடியாது. அதற்கு காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களுமே மிகப் பெரிய ஆயுதம். சாதியத்தை பாதுகாக்க நினைக்கிற ஆதிக்க சக்திகள் மநுவின் வழியில் காதல் திருமணத்திற்கு எதிராக, கலப்புத் திருமணத் திற்கு எதிராக கொலை வாளைக் கையிலெ டுக்கின்றனர். இந்தச் சூழலில் “காதல் செய் வீர்” என முற்போக்காளர்கள் முன்னிலும் முனைப்பாய் களத்தில் நின்று போராட வேண்டியுள்ளது.

இது மட்டுமல்ல, சொந்தத்துக்குள்ளே திரு மணம் செய்வதால் பிறக்கிற குழந்தைகள் ஊனமாகவோ, வேறு குறைபாடுகளுடனோ பிறக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட மருத் துவ உண்மை. எதிர்கால சமுதாயம் ஆரோக் கியமாக பிறந்திட, வளர்ந்திட கலப்புத் திரு மணங்கள் பெருக வேண்டும். அதற்கு காதல் திருமணங்கள் பெருக வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்திய சமூகத்தின் ஆரோக் கியத்தையும், முன்னேற்றத்தையும் கெடுப்ப வர்கள் என்பதை மறுக்க முடியாது.

காதல் மட்டுமல்ல, நம் சமூகத்தை பிற் போக்கு நுகத்தடியில் பூட்ட பெரும் முயற்சி நடக்கிறது. பெண்கள் பூப்படைவது இயல்பா னது, இயற்கையானது, தேவையானது. அதை யொட்டி அந்தப் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக விழிப்புணர்வு ஊட்டுவது அவசியம். பெற்றோர்கள் அவர்கள் வீட்டளவில் ஏதே னும் சடங்கு செய்துகொண்டால் அது பிரச் சனையல்ல. அது அவர்கள் சொந்த விருப்பம்.ஆனால், சமீபத்தில் பூப்படையும் சடங்கை பெரிய அளவில் விழாவாகக் கொண்டாடும் போக்கு வளர்ந்து வருகிறது. இதை உளவியல் நிபுணர்கள் ஏற்பதில்லை. சமூகவியலாளர் கள் ஏற்பதில்லை. முற்போக்காளர்கள் ஏற்ப தில்லை. பெண்ணியலாளர்கள் ஏற்பதில்லை. ஆனால் என்ன நடக்கிறது?சமீபத்தில் சென்னை புளியந்தோப்பில் ஒரு தனியார் கல்வி வியாபாரி மகள் பூப்ப டைந்ததையொட்டி வித்தியாசமாகக் கொண் டாடியிருக்கிறார். தன் மகளை ஹெலிகாப் டரில் அழைத்துவந்து இறங்க வைத்திருக் கிறார். இந்த விழா நடத்த ஒருபுறம் பெரும் பணச்செலவு. மறுபுறம் அரசாங்கத்திடம் இதற்கு அனுமதியும் பெற்றிருக்கிறார். இதைப் பற்றி சாகச பாணியில் வியந்து ஒரு வார ஏட்டின் இணைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், ஒற்றை வரி இப்பிற்போக்குச் சடங்கு குறித்து விமர்சன மில்லை. அரசு எப்படி இவர்களுக்கு அனுமதி கொடுத்தது என்பது குறித்து ஒரு ஐயவினா கூட இல்லை. தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இன்னொரு வார ஏட்டில் வெளிநாட் டினர் இந்தியப் பெண்களைத்தான் மனைவி களாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள் என பெருமை பொங்க செய்தி வெளியிட்டி ருக்கிறது. பெண்களைப் பாராட்டுவது போலவே மொத்த செய்தியும் அமைந்திருக் கிறது. ஆனால் உள்ளடக்கம் என்ன? இந் தியப் பெண்கள் எதிர்த்துப் பேச மாட்டார் களாம். அடங்கிப் போவார்களாம். மொத்தத் தில் கணவனுக்கு அடிமையாய் இருப்பாள் என்பதை நாசூக்கான நாகரீகமான வார்த் தைகளில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது யோசிக்க வேண்டிய நேரம். காதலுக்கு எதிராகவும், கலப்பு திருமணத் திற்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு எதிராகவும் பழைய பிற்போக்குத்தனங்களை புதிய வண்ணத்தில் விற்பனை செய்கிற மநு வின் பேரப்பிள்ளைகள் எங்கும் அலைகிறார்கள்.

தமிழக இளைஞர்களே! இவர்களிடம் எச் சரிக்கையாக இருங்கள். காதலைப் போற்று வோம்! பெண்மையைப் போற்றுவோம்! சாதி ஆதிக்கத்தைக் காறி உமிழ்வோம்! முற் போக்கு திசை வழியில் அயோத்திதாசப் பண் டிதரும், பெரியாரும், சிங்காரவேலரும் வகுத் தெடுத்த பாதையில் நடைபோடுவோம்! இச் செய்தியை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

குறிப்பு: தமிழகத்தில் சமூக சீர்திருத் தத்துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டதே, அது என்ன ஆனது? கோமாவில் இருக்கிறதா? குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதா? 

சு.பொ.அகத்தியலிங்கம்.
நன்றி:தீக்கதிர் 26-05-2012



ரயிலோடு என் சிநேகம்

Posted by அகத்தீ Labels:


னக்கும் ரயிலுக்கும் இடையேயான சிநேகம் 45 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். முதன் முதலாக நான் ரயிலைச் சந்தித்த அனுபவத்தை இன்றைக்கும் அசைபோட்டுப் பார்க்கிறேன். நான் படிக்கிற காலத்தில் எங்கள் பள்ளி சுற்றுலாவில் ரயிலைப் பார்ப்பது நிச்சயம் இடம் பெறும். அப்போதெல்லாம் திருநெல்வேலியைத் தாண்டி குமரிமாவட்டத்துக்குள் ரயில் வராது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்வரை ரயில்பாதை இல்லா மாவட்டமாகவே குமரிமாவட்டம் இருந்தது. இன்றைக்கும் ரயில் பாதை இல்லாமல் திரிபுரா உட்பட பலவடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகள் உள்ளன.
நான் பத்தாவது முடித்து 11வதுக்கு சென்னைக்கு மேமாத முதல் வாரத்தில் புறப்பட்டேன். ஐயப்பன் மாமா மாம்பலத்தில் இருந்தார். அவர்தான் அழைத்து வந்தார். அப்பா, அம்மா, அண்ணன் முன்கூட்டியே பிழைப்பு நாடி சென்னை வந்துவிட்டனர். அக்காவீட்டில் தங்கியே பத்தாவது படித்தேன். ஐயப்பன் மாமா என்னை பஸ்ஸில்தான் அழைத்துக் கொண்டு வந்தார். தாழையூத்து அருகே ரயில்வே கிராஸ்சிங்கில் கேட் மூடியிருந்ததால் பஸ் நின்றது.கீழே இறங்கி நின்று கண்களை அகலத் திறந்து ரயில் போவதைப் பார்த்தேன். சென்னையில் காலையில் இறங்கியதும் அப்பா காத்திருந்து என்னை மின்சார ரயிலில் கிண்டியிலிருந்து குரோம்பேட்டைக்கு அழைத்துப்போனார். எனது முதல் ரயில் பயணம் அதுதான். ஆனால் எனக்கு ஒரு பெரிய சங்கடம். சுசீந்திரத்தில் இருந்தபோது டூர் போய் வந்த மாணவர்கள் ரயில் பயணம் குறித்து கதைகதையாகச் சொல்வார்கள். ஆனால் நான் சென்னையில் யாரிடம் சொல்வது? ரயில் இங்கு கை, கால் போல் அவர்களின் உறுப்பாக அல்லவா இருந்தது!
இரண்டொரு நாள் ரயிலில் அப்பா அங்கும் இங்கும் அழைத்துச் சென்றதோடு சரி. குரோம்பேட்டை நேரு போர்டு ஹைஸ்கூலில் சேர்த்துவிட்டதால் ரயில்பயண அனுபவம் தொடரவில்லை. முதலமைச்சர் அண்ணா இறந்த போது ரயிலின் மேல்கூரையில் பயணம் செய்தவர்கள் பாலத்தில் மோதி இறந்த செய்தி அப்போதைய முக்கியமான செய்தி. அண்ணா இறந்த செய்தி கேட்டு அழுததும் பள்ளி மாணவர் மலரில் பெரியகட்டுரை எழுதியதும் நினைவில் உள்ளது.
 அப்பாவும் அண்ணனும் வைத்திருந்த மஞ்சள் வண்ண சீசன் டிக்கெட்டை பலமுறை வாங்கி தொட்டுப்பார்த்ததுண்டு. இனி கிட்டத்தட்ட வாழ்நாளில் கணிசமான பகுதியை ரயில் பயணத்தில் கழிக்கப்போகிறேன் என்பதை அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.
1969ல் கிண்டி மத்திய தொழிற் பயிற்சிப் பள்ளியில் டூல் அன்ட் டை மேக்கராய் சேர்ந்து பள்ளி மாணவர்க்கான சலுகை சீசன் டிக்கெட் வாங்கிய பின் குரோம்பேட்டை-கிண்டி அன்றாடப் பயணம் என்னை ரயிலோடு நெருக்கமானவனாக்கியது. ரயிலில் பல சிநேகிதர்கள் உருவானார்கள். ரயிலே என் சிநேகிதனாகியது. பல வாழ்க்கை உண்மைகளைக் கற்றுத் தந்தது. நண்பன், ஃபிரண்ட் என்கிற வார்த்தைகள் அன்றைக்கு புழக்கத்திலதிகமில்லை. சிநேகிதன் என்றே அன்று அழைத்தோம் இன்றுவரை ரயில் சிநேகம் தொடர்கிறது.
ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது என்பதுபோல ஓடுகிற வண்டியில் ஏறுகிற வயசு என நாங்களாக ஏற்படுத்திக் கொண்ட புது மொழிக்கு விசுவாசமாய் இருந்தோம். படிக்கட்டுப் பயணம் ஆபத்தானது என்கிற எச்சரிக்கை இப்போது உறைக்கிறது. உபதேசமும் செய்கிறேன். ஆனால் அப்போது அச்சமும் இல்லை. அலுக்கவும் இல்லை. படிக்கட்டில் பயணித்து பெரியவர்கள் பலரின் அர்ச்சனைக்கு ஆளாகியிருக்கிறோம்.
அன்றைய ரயில் பயண அனுபவங்களை நினைத்துப்பார்த்தால் பல உண்மைகள் முள்ளம்பன்றியாய் சிலிர்த்து நிற்கிறது. அன்றைக்கு 10 காசுக்கு வேர்க்கடலை கைநிறைய வாங்கி மூன்று நான்குபேர் தின்றோம். இன்று  வேர்க்கடலை விலை ஐந்து ரூபாய் ஆகிவிட்டது. அளவும் குறைந்து விட்டது. ஒரு ஆள் வாய்நிறைய அள்ளிப்போட வழியில்லை. விலை எங்கள் ஆட்சியில் குறைந்திருக்கிறது என சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பொய்பேசும் மந்திரிக்கு இது புரியாதோ!
ஆனாலும் வயிற்றுப் பிழைப்புக்கு வேர்க்கடலை விற்பவனை விரட்டி விரட்டிக் காசு பிடுங்கும் ரயில்வே போலீஸாரின் வழக்கம் மட்டும் மாறாமலே தொடர்கிறது.
ரயில் அரட்டையில் அலசப்படாத விஷயமே இருக்காது. சிவாஜி-எம்ஜிஆர் மோதல், திமுக அதிமுக சண்டை, இடையே புகுந்து கம்யூனிசம் பேசும் ஏ.கே.வீரராகவன் என்ற  டெலிகிராப் ஊழியர் என மறக்க முடியாத அந்த நாட்கள் நினைவிலாடுகிறது (அந்த ஏ.கே.வீ. தமது பணி ஓய்வுக்குப் பிறகு தீக்கதிரிலேயே பணியாற்ற வந்தது தனியொரு கதை). எங்கே சுற்றினாலும் இறுதியில் செக்ஸ் விவகாரம் பேசாமல் அரட்டை முடியாது. காந்தியை விமர்சிக்கலாம், கடவுள் மறுப்பை உரக்கப் பேசலாம் - அன்றைக்கு எதிர்ப்பு இருக்காது. ஆனாலும் எம்ஜிஆர் பற்றி சற்று அடக்கித்தான் பேசவேண்டும்.
பொதுவாக சீர்திருத்த மனோபாவம் கொண்டவர்கள் நிறைய இருப்பார்கள். எனவே சனாதனவாதிகள் குரல் சன்னமாகவே எதிரொலிக்கும். பலநேரங்களில் அவர்கள் வாய்பேசவே தயங்குவார்கள். எனது சி.டி.ஐ. படிப்பு முடிந்து, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியும் முடிந்தது. நண்பர்கள் நாலாபக்கமும் வேலைதேடி பறந்து விட்டனர். பல இடங்களில் மாறிமாறி தண்டையார்பேட்டை பெஸ்ட் அண்ட் கிராம்டன் வந்து சேர்ந்தேன். இடையே திராவிட இய்க்கத்திலிருந்து விடுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பக்கம் வரத்துவங்கிவிட்டேன்.
வீடும் பழவந்தாங்கல் எம்ஜிஆர் நகருக்கு இடம் பெயர்ந்துவிட்டது. தாம்பரம் முதல் கடற்கரை வரை சீசன் டிக்கெட் எடுக்கலானேன். படிக்கட்டுப் பயணம் அலுக்க-புத்த வாசிப்புக்கு பயணம் பயன்படலானது. நண்பர் வட்டமும் அதற்கொப்ப விரியலாயிற்று.
நெருக்கடி நிலை ஆட்சி அமலுக்கு வந்தது. ரயிலில் அரசியல் பேச எல்லோரும்  தயங்கினர். ரயிலில் அவசர காலத்தை விமர்சிக்கும் கையெழுத்துப் போஸ்டர்கள் திடீர் திடீரென ஒட்டப்பட்டிருக்கும் அதனை மக்கள் விரும்பி வாசிக்கத் துவங்கினர். ஊதிய முடக்கத்தை அறிவித்த அரசு-போணஸையும் இல்லை என்றது. கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்பன போன்ற அவசர நிலை ஆட்சி முழக்கத்தைக் கிண்டலடித்து அந்த வாசகத்தின் கீழே  ஆம், ஈடான ஊதியம் இல்லை; இணையான போனஸ்  இல்லை என்று நாங்கள் எழுதும் வாசகங்கள் பயணிகளைக் கவர்ந்தது. போலீஸார் மோப்பம் பிடிக்க அலைந்தனர். டிமிக்கி கொடுத்து நாங்கள் எழுதிய சுவரெழுத்துகளை அழிப்பதே போலீஸின் வேலையாக, மீண்டும் மீண்டும் நாங்கள் எழுத ஒருகட்டத்தில் போலிஸார் எங்களை அடையாளங் கண்டுவிட்டனர். நாங்கள் யுத்தியை மாற்றினோம். இங்கு அது தேவையில்லை என்பதால் எழுதவில்லை இதற்கிடையில் மக்களிட்மும் சலனம் உண்டானது. மௌனம் முணுமுணுப்பானது.
புறநகர் ரயில் எப்போதுமே அரசியல் தர்மாமீட்டராக இருக்கும். அவசரநிலையை எதிர்த்தவர்களும் திமுக ஊழலால் முகம் சுழித்தனர். எம் ஜி ஆர் மீதான ஈர்ப்பு காந்தமாய் வெளிப்பட்டது.
தினத்தந்தியும் குமுதமும் ரயில் பயணத்தில் ஓசியில் படித்துவிடலாம். இப்போது மேலோட்டமாய் கயிறு திரிக்கும் புலனாய்வு ஏடுகள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. அரசியல் விமர்சனம் பொதுவாகக் குறைந்துள்ளது. நாத்திகம் பேசுவது குறைந்துள்ளது. அப்போது சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் பெரும்பாலும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருப்பர். இப்போது இளைஞர்கள் கணிசமாக உள்ளனர். திராவிட  இயக்கம் கொள்கை ரீதியாக மெலிய தமிழ் தீவிர தேசியவாதம், வலதுசாரி சனாதனம் போன்ற இடது வலது திரிபுகள் ரயிலிலும் வெளிப்படுகிறது.
 பெரியாரைக் கொச்சைப் படுத்துவதும் சாதிய ஆதிக்க நெடியும் வீசுகிறது. ராணி முத்து, பாக்கெட் நாவல்களின் இடத்தை ஐ பாட், எஃப்எம் பிடித்துக்கொண்டுள்ளன. உரையாடல்கள் மெலிந்து  செல்போன்களில் தனித் தனித் தீவுகளாகிக் கொண்டிருக்கிறோம். எண்பதுகள் வரை தாம்பரம்-கடற்கரை மீட்டர் கேஜ்தான். வேகமும் குறைவு, கொள்ளளவும் குறைவு. இன்று எங்கும் மீட்டர்கேஜ் கிடையாது, பிராட்கேஜ் வந்துவிட்டது. சாபக்கேடாக தமிழகம் புறக்கணிக்கபட்டிருந்தது.
நான் செயலாளராக செயல்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கவலைப்பட்டது. அப்போதைய ரயில்வே டிஆர்இயு தொழிற்சங்கத் தலைவர்கள் இளங்கோவன், அய்யலு ஆகியோர் சில விபரங்கள் தந்தனர். அப்போது பெண்களுக்கு தனிபெட்டி கிடையாது. இப்போது முதல் வகுப்புப் பயண்களுக்கு ஒதுக்குவதுபோல் கொஞ்ச இடமே இதுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் உடனே அகல ரயில் பாதையாக மாற்று, இரண்டு பெட்டிகளை பெண்களுக்கென ஒதுக்கு என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் காலை, மாலை ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாகப் போராடினோம். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் எங்களோடு சேர்ந்து போராட முன்வந்தது. கையெழுத்துகள் குவிந்தன.
அப்போது ஒரு நெகிழ்வான அனுபவம். முண்டன் என்கிற ரிசர்வ் வங்கி ஊழியர் தினசரி ஆர்ப்பாட்டத்திற்கு வருவார். அவர் அப்போது புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார், மூத்திரப் பையை சுமந்து கொண்டு அவர் வந்து நிற்கிறகாட்சி இன்னும் மனத்திரையில் அப்படியே உள்ளது. அவரிடம் மிக உருக்கமாக வரவேண்டாம் என்று கூறினேன். அவர் சொன்னார், என் நாட்கள் எண்ணப்படுகின்றன. எத்தனைநாள்  இப்படி வருவேன் எனக் கூற முடியாது. முடிந்தவரை வருகிறேன். எனக்கு அது மகிழ்ச்சியாய் இருக்கிறது, என்றார். அப்புறமும் அவர் தொடர்ந்து வந்தார் (சில நாட்களில் காலமானார்).
 கையெழுத்துகளைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி தென்னக ரயில்வே பொது மேலாளர் கோவில்பிள்ளையைச் சந்தித்தோம். அவர் உங்கள் கோரிக்கை மிகச் சரி, என்று கூறியதுடன், இது நீண்ட நாள் திட்டம். ஆனால் சில அதிகார நந்திகள் இதற்கு இடையூறாக இருக்கின்றன. உங்கள் போராட்டம் அந்த நந்திகளை அகற்றி திட்டத்தைக் கொண்டுவர உதவும், என்றார்.
பெண்களுக்கு அடுத்த சில தினங்களிலேயே ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டது. இந்த வெற்றி எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. வாலிபர் சங்கம் சார்பில் க. சின்னையா, உழைக்கும் பெண்கள் சார்பில் சரஸ்வதி இருவரும் தந்த பேட்டி ஆனந்தவிகடனில் வெளிவந்தது. எல்லாக்கட்சிகளிலும் தீர்மானங்களிலும் எங்கள் கோரிக்கை இடம்பிடித்தது. அதேபோல் ரயில்வே மேம்பாலம் கோரி சைதாப்பேட்டை உட்பட பல இடத்தில் போராட்டம் நடத்தினோம். இவையெல்லாம் பின்னர் வெற்றி பெற்றன. அது எங்களுகு-வாலிபர் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியன்றோ! இப்போது பயணிக்கும் எத்தனை பேருக்கு இது தெரியும்?
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக திருவள்ளூர்-சைதாப்பேட்டை சீசன் டிக்கெட் வைத்துள்ளேன். தினசரி சுமார் நான்கு மணிநேரம் போகவும் வரவுமாய் பயணிக்கிறேன். கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் ஒருநாள் ரயில் லேட்டானால் அது பரபரப்பான செய்தி, ஆனால் கும்மிடிபூண்டி மார்க்கத்திலோ, அரக்கோணம் மார்க்கத்திலோ தினசரி லேட்தான். ரயில் பயணிகள் என்றேனும் பொறுமை இழந்து தண்டவாளத்தில் அமர்ந்து போராடினால் சட்டம் கடுமையாகப் பாய்கிறது. பிரச்சனையும் தீர்ந்த பாடில்லை. தாம்பரம் மார்க்கத்தில் 12 பெட்டிகள் ஆனால் கும்மிடிப்பூண்டி அரக்கோணம் மார்க்கங்களில் இன்னும் 9 பெட்டிகளே. போன செப்டம்பர் மாதத்திலே 12 ஆகிவிடுமென ரயில்வே அறிவித்தது வெறும் பேச்சாகநிற்கிறது. தாம்பரம் மார்க்கம் போல் இரு பாதைகள் புறநகர் ரயிலுக்கென அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்தில் வருவதும் வெறும் கனவாகவே உள்ளன, ரயில் பயணிகளை கவனித்துப் பார்த்தால் மத்தியதரவர்க்கம் தாம்பரம் மார்க்கத்தில் அதிகம் பயணிப்பதும் அதனால் அங்கே தும்மினால் கூட ஆங்கிலப்பத்திரிகைகளில் மறுநாள் செய்தியாவதையும் பார்க்கலாம். தீர்வும் சற்றேனும் கிடைக்கும். ஆனால் அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கங்களிலோ ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களே, அன்றாடக் கூலிகளே அதிகம். ஆகவே ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் பார்வையும் மிக அதிகம், அதிகார நந்திகளுக்கு அங்குள்ளவர்கள் மக்களாகவே தெரிவதில்லை.
வேளச்சேரி பறக்கும் ரயில் புதிய வரவு . ஆனால் ஸ்டேஷன்கள் பராமரிப்பு மிகமிகமோசம். தனியாரிடம் விட்டால் எவ்வளவு அழகாக பராமரிப்பார்கள் என மக்களை பேசவைத்து தனியார்மயபோதைக்கு தள்ளிவிடுகிறது.
இன்று மெட்ரோ ரயில் வேலைகள் சுறுசுறுப்பாக நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது ஆனால் வேளச்சேரி ஸ்டேஷன்களை இரவில் பார்க்கும் போதும், குமட்டும் துர்நாற்றம் தாங்காமல் மூக்கைப் பொத்தும்போதும் சுரங்கரயிலைப் பற்றி நினைக்கும் போதே வயிற்றில் புளியைக் கரைக்கிறது. திமுக-அதிமுக போட்டி அரசியல் இங்கும் நாறுகிறது. ஐயா மெட்ரோ என்றால் அம்மா மோனோ என்கிறார். மோனோ உலகெங்கும் தோற்றுப்போன திட்டம். மும்பையிலும் பாதியில் கைவிடப்பட்ட திட்டம். அம்மாவின் அரசியல் வீம்பினால் அது சென்னைக்கு வரப்போகிறது.
எத்தனை ரயில் வந்தும் போதவில்லை, பஸ் கட்டண உயர்வு மேலும் அதிகப் பயணிகளை ரயிலைநோக்கித் துரத்தியுள்ளது. மக்கள் எந்திரமாய் பயணிக்கிறார்கள். உரையாடல் குறைந்து விட்டது. காதுகளில் மாட்டிய செல்போன்களின் உலகத்தில் நடக்கிறார்கள். காதல் அரும்பி வளரும் இடமாகவும், முறியும் இடமாகவும் ரயில் மாறிப்போனது. ரயில் இருக்கைகளும் படிக்கட்டுகளும் உயிர்பெற்றுப் பேசினால் ஓராயிரம் திரைக்கதைகள் கிடைக்கும். பண்பாட்டு முகத்திரை கிழிந்து தொங்கும்.
மக்கள் போராடும்போது அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து ரயில்வே சேவையை மேம்படுத்தாத அரசு;மெட்ரோ,மோனோ என் போட்டிபோட்டு புதிய ரயில் வழிகளை நீட்டிப்பது ஏனோ!சென்னையில் இப்போதே நடுத்தர மக்கள்கூட வீட்டுமணையோ,அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடோ வாங்க முடியாது.வீட்டுவாடகைகூட எக்குத்தப்பா எகிறுகிறது.சென்னை மேல்தட்டு பணக்காரர்களின் சென்னை ஆக்கப்படுகிறது.உழைப்பாளிகளை சென்னைக்கு வெளியே துரத்தத்தான் இந்த ஏற்பாடுகளெல்லாம் என எண்ணுவதில் என்ன பிழை?ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தந்தவாறே ரயில் தொடர்கிறது. நானும் அதன் சிநேகிதனாய் தொடர்கிறேன்..   
                                                           
சு.பொ.அகத்தியலிங்கம்
வண்ணக்கதிர் [தீக்கதிர் இணைப்பு] 20 மே 2012

















பிழை?
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தந்தவாறே ரயில் தொடர்கிறது. நானும் அதன் சிநேகிதனாய் தொடர்கிறேன்..

மெய்யான பகுத்தறிவைத் தேடி...

Posted by அகத்தீ Labels:

புரட்சியில் பகுத்தறிவு:மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்,ஆசிரியர்:ப.கு.ராஜன்,
வெளியீடு:பாரதிபுத்தகாலயம்,
421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600 015.
பக்கங்கள்;876 விலை:ரூ.565.

வ்வொரு சொல்லுக்கும் நமக்கு தெரிந்த ஒரு பொருள் உண்டு. வெவ்வேறு இடங் களில் பயன்படுத்தப்படும்போது அதன் பொருள் மாறுபடும். சொற்களை அக ராதியில் சொல்லப்படும் அர்த்தங்களைக் கொண்டு எடை போட முடியாது. இதனை இந்நூலில் சில இடங்களில் ஆசிரியர் சுட்டிச் செல்கிறார். பகுத்தறிவு என்ற சொல்லும் அப்படித்தான்.

கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே பொருள்கொண்டு பழகி விட்ட தமிழக வாசகர்களுக்குப் பகுத்தறிவு குறித்த புதிய சாளரங்களை இந்நூல் திறக்கிறது. மெய்யான பகுத்தறிவு எது என்பதை இந்நூல் விவரிக்கிறது. இந்நூல் 25 அத்தியாயங்களையும், 872 பக்கங்களையும் கொண்டது என்பது மட்டு மல்ல, பூமிப்பந்தில் இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் கண்ட வெற்றி வரலாற்றை நன்கு விவரிக்கிறது. தமிழ் வாசகனை விரிந்த அறிவியல் உலகுக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது.“துல்லியமான அறிவியல் (நஒயஉவ ளஉநைnஉநள) எனப்படும் இயற்பியலில் நியூட்டன் - ஐன்ஸ்டீன் போன்ற சகலரும் ஒத்துக்கொண்ட மாமேதைகள் கருத்துகளையே பொது மைப்படுத்த இயலவில்லை. அப்படியென்றால் தத்துவக் கூற்றுக்களை மட்டும் எப்படி பொதுமைப்படுத்த இயலும்? தத்துவமும் ஏனைய அறிவுப் புலங்களைப்போல மாற்றங் கள் தேவைப்படும் இயலே; ஏனைய அறிவுப் புலங்களைப்போல வரம்புகளைக் கொண்டதே” இப்படி ஒரு தெளிவான புரிதலோடுதான் இந்நூலில் தன் தேடலை ஆசிரியர் தொடங்குகிறார். “மார்க்சியத் தத்துவமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்ற தெளிவானத் தன்னுணர்வு இல்லாதவர்கள் மார்க்சியர்களாக இருக்க முடியாது” என உறுதியாக நம்புகிற நூலாசிரியர், நவீன அறிவியல் வளர்ச்சியோடு மார்க்சியத் தத்துவம் முரண்படுகிறதா? உடன்படுகிறதா? என உரசிப்பார்க்க முயன்றிருக்கிறார். அதற் காக, அவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் ஒரு நெடும்பயணம் நடத்தியுள்ளார்.

ஆர்க்கிமிடிஸ், கோபர்நிக்கஸ், கெப்ளர், கலீலியோ, ஃபாரடே, மேக்ஸ்வெல் என அறிவிய லாளர்கள் தொடங்கி, சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டெஸ்கார்ட்ஸ், வால்ட்டர் ரூசோ, காண்ட், ஹேகல், ஃபாயர்பேக் என தத்துவ ஞானிகள் வழி மார்க்ஸை அடை கிறார். மார்க்சிய தத்துவம் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தையும் செய்கிறார். “மார்க்சியம் கூறும் பொருள் முதல்வாதம் மார்க்சும் ஏங்கெல்சும் அருளிச் சென்ற தல்ல. மார்க்சும் ஏங்கெல்சும் துவக்கி வைத்ததுதான். அது முழுமையும் நிறைவும் அடைந்துவிட்ட அறுதிப்பொருள் (குiniளாநன ஞசடினரஉவ) அல்ல. இதில் ஏங்கெல்ஸ் மிகத் தெளிவாகவே இருந்தார். ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கொப்ப முரணியக்க பொருளியமும் புதுப்பிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். இந்த திசை வழியில் முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. ஆனால், இந்தப் புலத்தின் முக்கியத்து வத்திற்கும் தேவைக்கும் ஈடுகொடுக்கும் அளவில் இது நடைபெறவில்லை என்று தான் கூறவேண்டும்” என்று நூலாசிரியர் 6வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் நவீன அறிவியல் வரலாற்றினை விரிவாகப் பதிவு செய்து அதில் மார்க்சியம் வென்று வருவதை சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

“எல்லா அறிவியல் முன்னேற்றங்களும் மானுடத்தின் இயற்கை குறித்த புரிதலை ஆழப்படுத்துபவைதான்.அறிவியலில் ஏற்படும் காத்திரமான புரட்சிகள் மானுடம் தான் வாழும் உலகு குறித்து வைத்திருக்கும் தவறான புரிதல்களை, மீபொருண்ம (ஆநவயயீhலளiஉள) நோக்குகளை, பிரம்மைகளை, மயக்கங்களை தெளிவுபடுத்து பவையே. நியூட்டனின் இயங்கியலும், கோபர்நிக்கஸின் சூரிய மையக் கோட்பாடும், டார்வினின் இயற்கை தெரிவு, பரிணாம விளக்கமும், ஐன்ஸ்டீனின் சார்பியலும் இந்தப் பணியைச் செய்த புரட்சிகரமான நிகழ்வுகளே. இவையெல்லாவற்றையும் விடக் கடு மையாக பிரம்மைக் குலைப்பை நிகழ்த்தியது குவாண்டம் இயங்கியல் புரட்சியாகும்” என்கிற நூலாசிரியர், இந்த குவாண்டம் இயங்கியலில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குழப்பங்களையும், இந்த அறிவியலையே கருத்துமுதல் வாதிகள் தங்களுக்கு சாதக மாக ஹைஜாக் செய்ய முயன்றதையும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அடுத்து, துகள்கள் இயற்பியல், இழைக் கோட்பாடு என அறிவியலின் வியத்தகு முன்னேற்றங்களை ஆழமாகவே விவரிக்கிறார். நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவீடுகளுக்கு மேல் காலம் உட்பட புதிய அளவீடுகள் சேர்க்கப்படுவதின் அவசி யத்தை அதன் விளைவுகளை விளக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. பொதுவாக, அடிப்படை அறிவியல் கல்வி பெறாத ஒருவர் இந்தப் பகுதியை படித்து எளிதில் கடப் பது அவ்வளவு சுலபமல்ல.

இன்னும் கொஞ்சம் எளிமையாய் எழுதியிருக்கக் கூடாதா என எண்ணத் தோன்றுகிறது.இக்கேள்வி நூலாசிரியருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கமும் சொல்கிறார். “அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ; அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால், அதற்கு மேல் எளிமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்பார் ஐன்ஸ்டீன். எளிமை கருதி சொல்ல வேண்டிய அறிவியல் கருத்தின் பன்முக அம்சங்களை சொல்லாது விடுவதோ, சிக் கல் நிறைந்த விளக்கங்களை தவிர்ப்பதோ அறிவியலுக்கு நியாயம் செய்வதாகாது`` அண்டவியலில் பெருவெடிப்புக் கோட்பாடு தொடங்கி கோள்கள் பற்றிய கருத் தோட்டங்கள் வரை சொல்லியிருக்கிற செய்திகள் இந்த பூமியை யாரோ ஒருவர் படைத் தார் என்கிற நம்பிக்கையை நிச்சயம் சிதறடிக்கும். நிலவியல் பற்றிய ஒரு அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது. ஆசிரியர் கூறுகிறார், ‘புவியில் இருந்து பல கோடி ஒளி ஆண்டு கள் தொலைவில் உள்ள விண்மீன்களின் மையத்தில் நிகழும் வினைகளைப் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு, நமது காலிற்கு கீழேயுள்ள புவியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள வில்லை. ஆனால், அறிந்த மட்டும் புவியின் நிகழ்வுகளும் மாற்றங்களும் அணுவிற்கு உள்ளே இருந்து அண்டங்கள் வரை நிகழும் மாற்றங்கள் போல அடிப்படை விதிகளின் படிதான் நடக்கின்றன” என்கிற ஆசிரியர், மார்க்சிய அடிப்படை விதிகளை அடுத்து சுட்டுகிறார். “முரண்பாடும் எதிர்மறைகளின் ஒத்திசைவும், அளவு மாறுபாடு, பண்பு மாறு பாட்டுக்கு இட்டுச் செல்வதும் விதிவிலக்கின்றி இங்கு நடைபெறுகின்றன” இதன் மூலம் மார்க்சிய விதிகள் மேலும் மேலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படுவதை நிறுவுகிறார்.உயிரின் தோற்றம், பரிணாமம் எனத் தொடரும் அத்தியாயங்களில் மனிதன் பிறந்த கதையை அறிவியல்பூர்வமாக மிகவும் துல்லியமாக படம் பிடிக்கிறார்.

“இருப்பிற்கான போராட்டமும் தப்பிப் பிழைக்கும் தகுதி படைத்தவையும்” (ளுவசரபபடந கடிச நஒளைவயnஉந யனே ளரசஎiஎயட டிக கவைநேளள) குறித்து நன்கு விளக்கமளித்துள்ளார். மரபணுவியல் பகுதியிலும் அதை அடுத்து வரும் பகுதிகளிலும் மனிதன் உரு வான கதையை மட்டுமல்ல, ஆண் பெண் உருவாவதின் கதை, மானுட மூளையின் உருவாக்கம், பாசம், கரணீய அறிவு, காத்திர உணர்வு ஆகியவற்றுக்கும் மூளை செயல் பாடுகளுக்கும் உள்ள உறவு, மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கான விடை, பண்பாட்டு உருவாக்கம், அறிவியல் வரலாறு என ஒரு பெரிய வட்டத்துக்குள் நம்மை சுற்றி வரவைத்து எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறார். கடைசி அத்தியாயங்களில் ஆன்மீக குருக்கள் குறித்தும், தத்துவங்கள் குறித்தும் சில குறிப்புகளைத் தந்து இறுதியாக மார்க்சியமே செயல்பாட்டுக்கான தத்துவம் என முடித்திருக்கிறார். சில மாதங்கள் முன்பு, மார்க்சிஸ்ட் தத்துவ காலாண்டு ஏட்டில் (ஆங்கிலம்) விஞ் ஞானி டி. ஜெயராமன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் தலைப்பு “இயக்கயியல் பொருள்முதல்வாதமும் சமகால அறிவியல் வளர்ச்சியும்” (னுயைடநவiஉயட ஆயவநசயைடளைஅ யனே னுநஎநடடிஅநவேள in உடிவேநஅயீசடியசல ளஉநைnஉந) என்பதாகும். அக்கட்டுரையை இங்கு சுட்டுவது அவசியமாக இருக்கிறது. எல்லா அறிவியலும் வளர்ந்து கொண்டிருக்கும் போது; முந்தைய கருதுகோள்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போது; பல வருடங் களுக்கு முன் எழுதப்பட்ட மார்க்சிய தத்துவ பாடத்தை அப்படியே கிளிப்பிள்ளை சொல்வதுபோல் இப்போது திருப்பிச் சொல்வது நம்பிக்கை அளிக்காது, நியாயமும் ஆகாது. மாறாக, நவீன மாற்றங்களோடு மார்க்சியம் எவ்வாறு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது, மாற்றமடைந்துள்ளது என்பதையும் சேர்த்து சொல்லியாக வேண்டும். அந்தத் தேவையிலிருந்துதான் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இந்த நூலும் கிட்டத் தட்ட அதே பாதையில்தான் பயணிக்கிறது. ஆனால், விரிவான விஞ்ஞான விளக்கங் களுக்குள் நூலாசிரியர் புகுந்துவிட்டதால்; மார்க்சியத்தை அதோடு இணைத்துப் பார்ப்பது ஜெயராமன் கட்டுரையில் வெளிப்பட்ட அளவு கூர்மையாக வெளிப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. நூலின் கடைசியில் நிறைவுரையாக வாதங்களின் தொகுப்பை வழங்கி மார்க்சி யத்தை, அதன் மெய்யான இருப்பை வலுவாகச் சொல்லியிருக்கலாம்.அடுத்து வரும் பதிப்பில் இப்படியொரு அத்தியாயம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.

நல்ல தமிழில் அறிவியலை விளக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆயினும், இந் நூலில் கையாளப்பட்டுள்ள அறிவியல் கலைச்சொற்களின் பட்டியலை ஆங்கில மூலத்தோடு பின் இணைப்பாகத் தந்து அந்த சொற்களுக்கான சிறு விளக்கமும் தந் திருந்தால், என் போன்ற சாதாரண வாசகர்கள் நூலுக்குள் செல்லும்போது எதிர் கொள்கிற சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்திருக்கும். புரிதல் இலகுவாகியிருக்கும். தமிழக வரலாற்றில் அறிவியல் முன்னேற்றங்களை தத்துவ நோக்கோடும், வாழ் வியல் நோக்கோடும் தொடர்ந்து கட்டுரையாக தந்தவர் சிந்தனைச்சிற்பி ம. சிங்கார வேலர். அவருக்குப்பின் அந்தப் பணி முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. இந்த வெற்றிடத்தில்தான் பகுத்தறிவு என்ற போர்வையில் ஒரு குறுகிய சிமிழுக்குள் நின்று கொண்டு வாதாடுகிற திராவிட பகுத்தறிவு மரபு உருவாகிவிட்டது.அறிவியல்பூர்வமாக பிரச்சனைகளை அணுக கற்றுக்கொடுக்காததால், அந்த பகுத்தறிவு மரபு இன்று நீர்த்துப்போய் இந்துத்துவ தாக்குதலுக்கு ஈடுகொடுக்கத் திணறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிங்காரவேலரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உரிய நேரமிது. அதற்கு அறிவியல்பூர்வமாக பகுத்தறிவை அலசியிருக்கிற இந்நூல் ஒரு நல்ல முயற்சி.

சு.பொ.அகத்தியலிங்கம்   
    

கொலைகளுக்குள்ளும்.

Posted by அகத்தீ Labels:

.


கொலையொண்ணு விழுந்திருக்கே....
சர்வசாதாரணமாய் கேட்டுத்தொலைக்க
சீறிப்பாய்ந்தன கேள்விகள்.,

ஆதாயக் கொலையா?
ஆத்திரக் கொலையா?
ஆன்மீகக் கொலையா?
அரசியல் கொலையா?

காதல் கொலையா?
கவுரவக் கொலையா?
காமக் கொலையா?
களவுக் கொலையா?

வரதட்சணைக் கொலையா?
வாய்த்தகராறுக் கொலையா?
வேலிதாண்டியதால் கொலையா?
விளையாட்டில் கொலையா?

சொத்துச் சண்டையில் சோதரக் கொலையா?
பங்குபிரிப்பதில் பங்காளிக் கொலையா?
குடும்பச் சண்டையில் எரிந்த கொலையா?
கோஷ்டி மோதலில் வெடித்த கொலையா?

கந்துவட்டி தூண்டிய கொலையா?
ரியல் எஸ்டேட் வாங்கிய கொலையா?
வியாபாரப் போட்டியில் முட்டிய கொலையா?
மோசடி துரோகம் முற்றிய கொலையா?

சாதிச் சண்டையில் தொடங்கிய கொலையா?
தேர்தல் மோதலில் கருக்கொண்ட கொலையா?
மதவெறி போதையில் கூட்டுக்கொலையா?
சேரியை எரித்த தீண்டாமைக் கொலையா?

கடன்வலை சிக்கிய விவசாயி [தற்]கொலையா?
போலீஸ்ராஜ்ய மோதல் கொலையா?
கற்பழித்து கொன்ற ஆதிக்கக் கொலையா?
சோற்றுக்கில்லா பட்டினிக் கொலையா?

போதை,கடத்தல் போட்டிக் கொலையா?
பெண்ணுக்காக மண்ணுக்காக ஏவியகொலையா?
பதவி,பணம்,பவிசுக்காக மோதல் கொலையா?
நீயா நானா அகங்காரக் கொலையா?

மூடநம்பிக்கை நரபலி கொலையா?
மூலதனத்தின் மூர்க்கக் கொலையா?
வர்க்கப் பகைமையில் விளைந்த கொலையா?
வாழ்வுரிமை காக்க வெடித்த கொலையா?

கொலைகளுக்குள்ளும்
சமூகச் சிக்கலின் சித்திரம் உண்டு.
கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தால்
நோகும் அம்பை எய்தவன் புரியும்.

பெருமிதம

Posted by அகத்தீ Labels:


மீள எத்தணித்து எம்பும்
ஒவ்வொரு அடியும்
இன்னும ஆழப்புதைய..

மீட்பனுக்காக
ஏங்கவும் செய்யலாம்
புதைகுழியின்
தன்மையுணர்ந்து
மாற்றுவழி
தேடவும் செய்யலாம்..

கைபிடி கயிறோ
ஊன்றும் கோலோ
அகப்பட்ட எதுவோ
பயத்தை உதறி
பற்றி மேலேறலாம்

முக்கி முயன்று
மூச்சை அடக்கி
சகதி முழுவதையும்
குவிமையப்படுத்தி
உந்தி ஏறி
சாணேனும் நகரலாம்

வெற்றி கை நழுவலாம்
மரணம் வந்து தழுவலாம்
போராடிய பெருமிதம்
சந்ததியை தலை நிமிர்த்துமே
போர்க்குணமே
தலைமுறைக்கும் வழிநடத்துமே.

நாளும் தரும் பாடம்..

Posted by அகத்தீ


 
படித்துக்கொண்டே இருக்கவேண்டும்.அதுதான் வாழ்க்கையின் ஒரே மாறா விதி.படிப்பது எனில் பள்ளிக்கூடத்திலோ,கல்லூரியிலோ படிப்பது என்பது மட்டும் அல்ல;புத்தங்களைத் தேடித்தேடிப் படிப்பது என்பதுமட்டுமல்ல;நாளும் அனுபவம் தரும் பாடத்தை படிப்பதும்தான். “நாளும் காலம் தரும் பாடம்”என்று பட்டுக்கோட்டை சொல்வானே-அந்தப் பாடத்தை வாழ்வின் கடைசித்துளிவரை படித்தாக வேண்டும்.

    எனக்கு நேற்றும்[5மே] கிடைத்தது புதியபாடம்.வாய்க்கு ஒரு ஜிப் தேவை.வேண்டிய போது மட்டும் திறக்கவும் மூடவும் பயிற்சியும் தேவை.எத்தனை தடவைதான் இந்த பாடத்தைக் கற்பது; தேர்வு நேரத்தில் நினைவு இடுக்கில் சிக்கிக்கொண்டு வெளிவராமல்,தேர்வு முடிந்ததும் நினைவுக்கு வரும் பாடம் போல நம்மை அந்த வாழ்க்கைப் பாடம் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.

    ஒருவர் திருமணம் செய்துகொள்வதும்,செய்து கொள்ளாமல் இருப்பதும்;காதல் செய்வதும்,காதலை நிராகரிப்பதும்;குழந்தை பெற்றுக் கொள்வதும்,பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும்;வேலைக்குப் போவதும்,போகாமல் இருப்பதும்;படிப்பதும்,படிக்காமல் இருப்பதும்;சிக்கனமாக வாழ்வதும்,ஊதாரியாக இருப்பதும்..இன்னபிறவும் அவரது விருப்பம்-அவரது சூழல்;அதை கேள்வி கேடகவோ,கேலி செய்யவோ.உபதேசம் செய்யவோ நீ யார்?சமவயதினர் ஒருவருக்கொருவர் இவ்விஷயத்தில் பகடிசெய்துகொள்வது அவர்களின் நட்பின் வலிமையையும் நெருக்கத்தையும் சார்ந்தது.

    அறுபது வயதில்[ஜூன் 15,2012]காலெடுத்து வைக்கவுள்ள நானும் அப்படிச் செய்யலாமா?வயதுக்கு ஏற்ற பக்குவம் வேண்டாமா?இன்னும் இளைஞனாக என்னைக் கருதிக்கொண்டு கேலி,கிண்டலில் ஈடுபடலாமா?கூடாது.உன் சுதந்திரம் அடுத்தவர் மூக்குவரை என்பது எல்லாவற்றிற்கும் பொருந்துமே.நண்பர் முகத்தில் காறித்துப்பியதை துடைத்துக்கொண்டேதான் இதைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.ஆனாலும் வருத்தம் இல்லை இப்போதாவது கற்றுக்கொண்டேனே.

    யாராவது எதையாவது கேட்காதவரை நீயாக அவர்கள் விஷயத்தில் எதையும் கேட்காதே-கூறாதே;கேட்கிறபோதும் எதையும் திணிக்காமல்-மழுப்பாமல் உன்கருத்தை சலித்தெடுத்த வார்த்தைகளால் பதிவுசெய்வதோடு நின்றுகொள்.[இது சொந்த விஷயம் சம்பந்தமானது மட்டுமே,கருத்துப் பிரச்சாரத்துக்குப் பொருந்தாது].-இது நண்பன் நாவினால் சுட்ட வடுவை இரவு தடவிப்பார்த்தபோது கிடைத்த அனுபவபாடம்.