நாளும் தரும் பாடம்..

Posted by அகத்தீ


 
படித்துக்கொண்டே இருக்கவேண்டும்.அதுதான் வாழ்க்கையின் ஒரே மாறா விதி.படிப்பது எனில் பள்ளிக்கூடத்திலோ,கல்லூரியிலோ படிப்பது என்பது மட்டும் அல்ல;புத்தங்களைத் தேடித்தேடிப் படிப்பது என்பதுமட்டுமல்ல;நாளும் அனுபவம் தரும் பாடத்தை படிப்பதும்தான். “நாளும் காலம் தரும் பாடம்”என்று பட்டுக்கோட்டை சொல்வானே-அந்தப் பாடத்தை வாழ்வின் கடைசித்துளிவரை படித்தாக வேண்டும்.

    எனக்கு நேற்றும்[5மே] கிடைத்தது புதியபாடம்.வாய்க்கு ஒரு ஜிப் தேவை.வேண்டிய போது மட்டும் திறக்கவும் மூடவும் பயிற்சியும் தேவை.எத்தனை தடவைதான் இந்த பாடத்தைக் கற்பது; தேர்வு நேரத்தில் நினைவு இடுக்கில் சிக்கிக்கொண்டு வெளிவராமல்,தேர்வு முடிந்ததும் நினைவுக்கு வரும் பாடம் போல நம்மை அந்த வாழ்க்கைப் பாடம் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.

    ஒருவர் திருமணம் செய்துகொள்வதும்,செய்து கொள்ளாமல் இருப்பதும்;காதல் செய்வதும்,காதலை நிராகரிப்பதும்;குழந்தை பெற்றுக் கொள்வதும்,பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும்;வேலைக்குப் போவதும்,போகாமல் இருப்பதும்;படிப்பதும்,படிக்காமல் இருப்பதும்;சிக்கனமாக வாழ்வதும்,ஊதாரியாக இருப்பதும்..இன்னபிறவும் அவரது விருப்பம்-அவரது சூழல்;அதை கேள்வி கேடகவோ,கேலி செய்யவோ.உபதேசம் செய்யவோ நீ யார்?சமவயதினர் ஒருவருக்கொருவர் இவ்விஷயத்தில் பகடிசெய்துகொள்வது அவர்களின் நட்பின் வலிமையையும் நெருக்கத்தையும் சார்ந்தது.

    அறுபது வயதில்[ஜூன் 15,2012]காலெடுத்து வைக்கவுள்ள நானும் அப்படிச் செய்யலாமா?வயதுக்கு ஏற்ற பக்குவம் வேண்டாமா?இன்னும் இளைஞனாக என்னைக் கருதிக்கொண்டு கேலி,கிண்டலில் ஈடுபடலாமா?கூடாது.உன் சுதந்திரம் அடுத்தவர் மூக்குவரை என்பது எல்லாவற்றிற்கும் பொருந்துமே.நண்பர் முகத்தில் காறித்துப்பியதை துடைத்துக்கொண்டேதான் இதைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.ஆனாலும் வருத்தம் இல்லை இப்போதாவது கற்றுக்கொண்டேனே.

    யாராவது எதையாவது கேட்காதவரை நீயாக அவர்கள் விஷயத்தில் எதையும் கேட்காதே-கூறாதே;கேட்கிறபோதும் எதையும் திணிக்காமல்-மழுப்பாமல் உன்கருத்தை சலித்தெடுத்த வார்த்தைகளால் பதிவுசெய்வதோடு நின்றுகொள்.[இது சொந்த விஷயம் சம்பந்தமானது மட்டுமே,கருத்துப் பிரச்சாரத்துக்குப் பொருந்தாது].-இது நண்பன் நாவினால் சுட்ட வடுவை இரவு தடவிப்பார்த்தபோது கிடைத்த அனுபவபாடம்.

0 comments :

Post a Comment